Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | அமெரிக்க அனுபவம் | பொது | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar
Tamil Unicode / English Search
சிறுகதை
புது சோஃபா
யாருக்கு அம்மா புரியும்?
பிளாஸ்டிக் பணம்
- பேரா. ஆர்.எச்.எஸ். மணி|செப்டம்பர் 2013|
Share:
எனக்கு அமெரிக்கா செல்வதற்கு விசா கிடைத்து விட்டது. அளவற்ற மகிழ்ச்சி. சந்தோஷக் கடலில் குளிக்கிறேன். மனைவி, மகள், பேரக் குழந்தைகளுடன் சேர்ந்து விடலாம். குடும்பச் சூழ்நிலையால் ஏழு ஆண்டுகளாகப் பிரிந்திருந்த நான் இப்பொழுது அவர்களுடன் ஒன்று சேரப் போகிறேன். எனக்கு வயது எழுபத்திரண்டு. ஏழு ஆண்டுகளாகத் தனிமையில் சமையல் செய்து, வீட்டை சுத்தம் செய்து வாழ்ந்த வாழ்க்கையை நினைத்தால் உடம்பெல்லாம் வலிக்கின்றது.

எனக்கு சமையல் தெரியாது. ஒரு கப் காபி கூட போடத் தெரியாது. வயதான காலத்தில் தனிமையில் சீரழிய வேண்டி வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை. அம்மா என்னை வளர்த்த விதம் அப்படி. அடுக்களையில் அவளுக்கு உதவி செய்யப் போனால் அதற்குச் சம்மதிக்க மாட்டாள். சமைப்பது, துணி துவைப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது, பாத்திரம் தேய்ப்பது போன்ற வேலைகள் எல்லாம் பெண்கள் செய்ய வேண்டியது. ஆண்கள் படித்து ஆபிஸ் போய் வேலை பார்த்து சம்பளம் கொண்டு வர வேண்டும். வீட்டு நிர்வாகம் பெண்களால் நடத்த முடியும். சம்பாதிக்கிறவனை சமுதாயம் மதிக்கும். அதுவும் சர்க்கார் வேலை என்றால் அதன் மதிப்பு சொல்லவே வேண்டாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த, ஆனால் சமையல் செய்து ஒரு சாண் வயிற்றை நிரப்பணும் என்பது இயலாத காரியம். ஆனால் சூழ்நிலை என்னை அந்த நிலைக்குத் தள்ளிவிட்டது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது என் வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு உண்மை.

எங்க ரெண்டு பேர் ஜாதகத்துக்கும் ஒரு பொருத்தமும் கிடையாது. சஷ்டா அஷ்டக ஜாதகம். வாழ்நாள் முழுவதும் சண்டைதான். அவள் வழிக்கு நான் செல்ல வேண்டும். ஏதோ பெண் உரிமை இயக்கத்தில் போக வேண்டியவள், எனக்கு மனைவியாக வந்து உயிரை வாங்குகிறாள் என்றால் அது என் தலைவிதி தானே. இத்தனை ஆண்டு வாழ்க்கையில் நான் அவளைப் புரிந்து கொள்ளவில்லை. அவள் கையில் ஒரு வளையல் கூடக் கிடையாது. அத்தனையும் தங்க வளையல். ஒருநாள் அனைத்தையும் கழற்றி விட்டாள். "சச்சு நீ ஏது வளையலைக் கழற்றி விட்டாய்" என்று கேட்டேன்.

"எனக்கு வேண்டாமென்று தோணித்து. அதனால கழட்டிட்டேன்"

"அம்மா தாயே, வளையல் ஐஸ்வரியத்தின் அடையாளம். நான் உயிரோடு இருக்கிறவரை போட்டுக்கறதுதான் சிறப்பு. ப்ளீஸ். போட்டுக்கோ"

"வளையல் போட்டுக்கணுமா, காலில் கொலுசு போட்டுக்கணுமா என்பதை நான் தீர்மானிச்சுக்கறேன். இதிலெல்லாம் நீங்க தலையிட்டு சண்டையை ஆரம்பிக்காதீங்கோ"

"ஊரோடு ஒத்துவாழ். இந்தத் தெருவில் இருந்துண்டு தகாத பழக்க வழக்கங்களைச் செய்யாதே"

"இது தனிமனித சுதந்திரம். உங்களை நான் வளை போட்டுக்கச் சொல்லலை. ஒண்ணாம் தேதி சம்பளம் வாங்கின உடனே உங்களிடம் கொண்டு தரேன்னில்லையா. நீங்க ரூபாயை எண்ணி எண்ணித்தானே வாங்கிக்கறேள்"


"அடுத்த மாசத்திலேர்ந்து நீ உன் சம்பளத்தைத் தர வேண்டாம். இஷ்டமிருந்தா ஆத்துக்கு செலவு செய். உன்கிட்ட உள்ள குறைகளைச் சொன்னா உனக்குக் கோபம் வறது"

"என்கிட்ட என்ன குறையக் கண்டுட்டேள்"

"தினமும் பூ வாங்கறாய்"

"அதுவும் வேண்டாமா"

"அவசரப்படாதே. வாங்கற பூவை என்ன செய்யறே"

"முல்லைப் பூதான் வாங்கறேன். வாங்கினத மாலையாத் தொடுக்கறேன். கிராமத்துப் பிள்ளையார் கோயிலுக்குக் கொடுக்கறேன். இதில என்ன தப்பு?"

"கோவிலுக்குக் கொடுக்கறது நல்ல காரியம்தான். கட்டற மாலையில ஒரு சின்னத் துண்டை தலையில வச்சிண்டா குறைஞ்சா போயிடும்? அதுவும் முல்லைப் பூ. தமிழ்நாட்டில பட்டி தொட்டி எல்லாம் பெண்கள் முல்லை, மல்லிப் பூ தலையில் சூட்டிக் கொள்வது வழக்கம். அதுவும் உனக்கு நல்ல கறுத்த நீண்ட கூந்தல். வெள்ளைப் பூவைச் சூடிண்டா அழகாத்தான் இருக்கும். முல்லையின் மணம் தலை முழுசும் இருக்கும். பேன், பொடுகு வராது. இது நல்ல காரியம் இல்லையா?

"எனக்கு நல்லது கெட்டது ஒண்ணும் நீங்க சொல்லித் தர வேண்டாம். இவ்வளவு பேசறேளே. குடும்பத்துக்காக வேண்டி என்னவாவது செய்திருக்கேளா?"

"என்ன செய்யலை. சொல்லு"

"நீங்க நல்லா படிச்ச ஆள். உங்களுக்கு டியூஷன் எடுக்க
எனக்கு படிப்புப் போறாது. நான் குறச்சலாதான் படிச்சிருக்கேன். ஆனா குடும்பத்திலே பாசம் உண்டு. எல்லோராலும் ஒத்துப் போற குணம் உண்டு. உங்களைப் போல ஆள் தீண்டாப் பாளை இல்லை. ஓணத்திற்கு சிடி முழுதும் லைட் அலங்காரம் போட்டிருந்தா. இரண்டு குழந்தைகளையும் அழைச்சுண்டு லைட் காட்டக் கூடவரச் சொன்னேன். ஒரு துணைக்குத்தான் கூப்பிட்டேன். குழந்தைகள் லைட்டைப் பார்த்தா சந்தோஷப்படும். பணம், காசு செலவில்லை. ஆத்திலேர்ந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரும். கூட வந்தேளா? வரலை. வராதது மட்டுமில்லை. பெரிய தத்துவம் வேற சொன்னேள். கூட வராததுக்கு ஒரு நொண்டிச் சாக்கு. அவ்ளோதான்."
"என்ன சொன்னேங்கறது ஞாபகம் இல்லை."

"எப்படி ஞாபகம் இருக்கும். ஞாபகப்படுத்தறேன்."

"சொல்லு."

"கிராமத்திலே தெருவிளக்கு நெறைய போட்டிருக்கா. அம்பது விளக்காவது வரும். அதை லட்சம் விளக்கா கற்பனை பண்ணிப் பார்த்தா அதுதான் இல்லுமினேஷன். இதுக்குப் போய் அரசாங்கமும் லட்சக் கணக்கில் பணத்தைச் செலவு செய்யறது. எவ்வளவு எலக்ட்ரிசிடி செலவு. உன்ன மாதிரி ஜனங்களும் ஓடி ஓடிப் போய்ப் பார்க்கிறாங்க. இதை நான் சொன்னா கிறுக்கன்னு பட்டம் சூட்டறேள்னுதான் ஒரு மேதாவி போலப் பேசினேள்."

"எதானாலும் லட்ச தீபம் பார்த்தாச்சில்லையா அப்புறம் எதுக்கு அதைப் பற்றிப் பேசறாய்?"

"உங்களுக்கு பொறுப்பு கிடையாது. மனைவி, குழந்தைகளிடம் பாசம் கிடையாது. உங்களோட கடமையிலிருந்து தப்பிக்கப் பாக்கறேள்"

"இதைத்தான் சூரியன் உதிக்கறதிலேர்ந்து மறையறதுவரை சொல்லிண்டு இருக்காய். என் காது இதைக் கேட்டு புளிச்சுப் போச்சு. புதிசா ஏதேனும் இருந்தாச் சொல்லு."

"அன்னிக்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளை அழைச்சுண்டு பீச்சுக்குப் போகலாம்னு சொன்னேன்."

"அதெல்லாம் எனக்கு ஞாபகம் இல்லை. நான் எதையும் சீக்கிரம் மறந்துருவேன்."

"கடற்கரைக்கு கூட்டிண்டு போகச் சொன்னா தத்துவம் பேசினேள். பீச்சுன்னா என்ன, உப்புத்தண்ணி நிறைய இருக்கிற எடம், கொஞ்சம் அலை இருக்கும். வீட்டுப் பக்கத்துல இருக்குற குளத்தை லட்சம் மடங்கு பெரிசு பண்ணிப் பார்த்தா அதுதான் பீச்சுன்னு உங்க பெண் மானஸாட்டச் சொன்னேள்."

"மானஸா என்ன சொன்னாள்?"

"அப்பா உங்களுக்கு பீச்சுக்கும் குளத்துக்கும் வித்தியாசம் தெரியலை. பீச்சில திமிங்கலம் எல்லாம் இருக்குமாம்னு எங்க டீச்சர் சொன்னா. நீங்க குழம்பியிருக்கேள். நான் உங்களை என் டீச்சர்கிட்ட கூட்டிண்டு போறேன்னு சொன்னாள்."

"இப்படி எதுலயும் எஸ்கேப் ஆகற ஆள் கல்யாணம் பண்ணிண்டு பிள்ளை குட்டிகளைப் பெத்துக்கக் கூடாது. நீங்க ரோமில இருந்தா ரோமானியனா இருக்கணும். என்னைக் கல்யாணம் பண்ணிண்டா நல்லபடி பாத்துக்கணும். மனைவிய மனைவியா பாத்துக்கணும். என்னுடைய குழந்தைகள் பாதுகாப்பு உங்க கையிலதான் இருக்கு. அதுக்குத்தான் சுளையா வரதட்சணை, நகை நட்டெல்லாம் தந்திருக்கா. அதெ ஒரு நாளும் மறக்கக்கூடாது."

"நல்லா பேசப் படிச்சிருக்காய். எந்த காலேஜில சொல்லித் தந்தாளோ!"

"எல்லாம் நீங்க கத்துத் தந்ததுதான். இன்னம் கேளுங்கோ"

"சரி சொல்லித் தொலை!"

"கோபம் வந்தா போறாது. நான் உங்க பொண்டாட்டி."

"அதனாலதான் நீ சொல்றதே கேட்டிண்டு இருக்கேன்."

"உங்க மனைவி ஒரு கழுதையில்லை. ரிஷி பத்தினிகள் தொண்டு செய்யற மாதிரி என்னெ எதிர்பார்க்கிறேள். உங்களுடைய தேவைகள் அனைத்தையும் நான் பூர்த்தி செய்யணும். முதல் தேதி வந்தா சம்பளம் முழுசையும் கொண்டு தந்து கணக்கு சொல்லணும். அடுத்த நாள் பஸ்ஸுக்கு சில்லறை உங்களிடம் கேட்டு வாங்கிக்கணும். தப்பித் தவறி அம்மாவுக்கோ தம்பிக்கோ தீபாவளிக்குப் பணம் அனுப்பணும்னு சொன்னா மூக்குக்கு மேல கோபம் வந்துடும்."

"எதுக்கு வெறுப்பேத்தறே. சின்னக் காரியத்தை ஊதிப் பெருக்கி பலூனாக்கறே. நீ என்ன மென்டலா?"

"உண்மையச் சொன்னா மென்டலாத் தான் தோணும். உங்களுக்கு ஒரு பழமொழி தெரியுமா?"

"என்ன பழமொழி?"

"மாமியார் ஒடச்சா மண்கலம். மருமகள் ஒடச்சா பொன்கலம்."

"இங்கே ஒரு கணவனும் அவனுடைய தேனினும் இனிய மனைவியும் அவர்களுடைய அருமையான இரண்டு குழந்தைகளும் மட்டுமே இருக்கிறார்கள்" என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.

"சைபீரியாவிலிருந்து ஐஸ் கொண்டு வந்து தலையிலே வெச்சு என்னை சமாதானப்படுத்த வேண்டாம்" என்றாள் அவள்.

"எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியலையே."

"எத்தனை வருஷமா இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தறேள். குழந்தைக உங்ககிட்ட அன்பா இல்லைன்னு குத்தம் சொல்றேள். உங்க அண்ணாவைப் பாருங்கோ. அவர் மன்னிக்கும் குழந்தைகளுக்கும் வேண்டி ராத்திரி பகலா உழைக்கிறார். லைட் பார்க்க அவாளும் குழந்தைகளை கூட்டிண்டு வந்திருந்தா. பேராசிரியர் எங்கே போனான்னு அண்ணா கேட்டார். உங்களை விட்டுக்கொடுக்க முடியுமா? ’ஏதோ பேப்பர் திருத்தற வேலை இருக்காம்’னு சொல்லி சமாளிச்சேன். ’இல்ல பெரியப்பா. அப்பா டிவி பார்த்துண்டு இருக்கார்’னு உங்க பையன் சொன்னான். எல்லோரும் சிரிச்சோம். அண்ணாவும் மன்னியும் என்னையும் குழந்தைகளையும் அவர்களோடு அழைத்துச் சென்றார்கள். உங்க குழந்தை உங்களிடம் அன்பா இருக்கணுமானா நீங்களும் அப்படியே இருக்கணும். அன்பு என்பது ஒன்வே ட்ராஃபிக் இல்லை. சின்னக் குழந்தைலே சினேகத்தைக் கூட்டலைன்னா பெரியவர்களா வளர்ந்தப்புறம் உங்க குழந்தைகள் உங்களை வெறுத்து ஒதுக்கிடும்"

"தயவு செய்து கோபப்படாதே. கூல் டௌன். ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாத காரியங்களுக்காக உன் பிரஷரை கூட்டிக் கொள்ளாதே. உனக்கு என்னை நன்றாகத் தெரியும். நான் கள்ளு குடிக்க பாருக்குப் போறதில்லை. சீட்டாட கிளப்புக்குப் போறதில்லை. உன் சாப்பாடு சகிக்க முடியலைன்னாலும் சிரிச்சுக்கிட்டே சாப்பிடறேன். நீ அறியாமல் ஒரு பைசாகூடச் செலவழிப்பதில்லை. நீ எந்த டிரெஸ் வாங்கித் தர்றியோ அதைத்தான் போட்டுக்கறேன். ஆனால் அதுக்கெல்லாம் இங்க மதிப்புக் கிடையாது."

"அதுபத்தி ஒரு புகாரும் எனக்குக் கிடையாது. நான் ஜட்டி வாங்கிண்டு வரலைன்னா ஜட்டியில்லாமலேயே நீங்க காலேஜ் போயிருவேள்."

"நான் ஒரு நல்ல அப்பா. குழந்தைகள் எங்கிட்ட பேசறதுக்கு பயப்படறதுன்னா அதுக்குக் காரணம் நீதான். குழந்தைகளிடம் நான் ஒரு ராட்சஸன்னு சொல்லிக் கொடுத்திருக்காய். குழந்தைகளை உன் பக்கம் சேர்த்துண்டு யூனியன் உண்டாக்கியிருக்காய். இது ஒரு அம்மாவின் கடமையா?"

"நாம ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஒருத்தரை ஒருத்தர் குத்தம் சொல்லிக் கொண்டிருக்கறதுல அர்த்தமே இல்லை. நம்ம ரெண்டு பேருக்கும் குடும்பத்தில் நல்லது கெட்டதில் சம பங்கு உரிமை உண்டு."

"இது நான் சொல்ல வேண்டிய வார்த்தை"

"சும்மா வேடிக்கை பண்ணாதீங்கோ. நான் சமையல் செய்யலைன்னா நீங்கள் சமைக்கணூம். நான் டி.வி. பார்த்துண்டு இருந்தா, நீங்க குழந்தைகளை அடுத்த ரூமுக்குக் கூட்டிண்டு போய் பாடம் நடத்தணும். என்னோட துணிகளைச் சேர்ந்து தோய்ச்சா ஒண்ணும் குறைஞ்சு போயிர மாட்டேள்"

"ஒரு அடிமையா இருக்கச் சொல்றே"

"உங்களுக்கு உச்சநீதிமன்ற விதி தெரியுமா?"

"நான் கோர்ட்டுக்குப் போற வழக்கம் இல்லே."

"ஆணுக்கு பெண்ணுக்கும் பரம்பரை சொத்திலகூட சமபங்கு உரிமை கொடுக்கணும்னு சொல்லியிருக்கா."

நான் இதைக் கேட்டவுடனே அடுக்களைக்குப் போய் ஒரு கப்பில் ஐஸ் வாட்டர் எடுத்துக் கொண்டு வந்தேன். நாய் வேஷம் போட்டா குரைச்சுத்தானே ஆகணும்.

அவள் கடுகு வெடிப்பதுபோல் வெடிக்க ஆரம்பித்து விட்டாள். வீட்டை விட்டு வெளியில் சென்றால் பிரச்சினை தீரும் என்று நினைத்து மாடிக்குச் சென்று ஷர்ட்டை எடுக்க மாடிப்படி ஏறினேன். மாடியில் ஷர்ட் இல்லை. நேற்று வைத்த ஷர்ட்டைக் காணவில்லை. ஷர்ட் பாக்கெட்டில் மொபைலும் போன மாசத்துச் சம்பளப் பணமும் இருந்தது. மின்னல் வேகத்தில் கீழே சென்றேன். அருமை மனைவி டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள். டி.வி.யை அணைத்தேன். அவள் என்னை முறைத்தாள். ஷர்ட், பணம் பற்றிக் கேட்டேன்.

"வீட்டிற்குள் நுழைந்தவுடன் மொபைல், பணம் இவற்றை எடுத்து வைக்கலியா?" என்று அவள் எதிர்க்கேள்வி எழுப்பினாள். "உங்களுக்கு கொஞ்சம்கூட பொறுப்பு கிடையாது" என்று ஒரு குற்றச்சாட்டை எடுத்து வீசினாள்.

"பணம், மொபைல் எங்கே சொல்லு?"

"உங்கள் ஷர்ட், பாண்ட்டை வாஷரில் போட்டு அது ஓடிக் கொண்டிருக்கிறது"

உடனே வாஷரை நிறுத்தினேன். திறந்து பார்த்தால் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் மிதந்து கொண்டிருந்தது. எல்லாம் புதுப்புது நோட்டுக்கள். அவளும் அதைப் பார்த்தாள். வாஷரில் கையைப் போட்டுத் துழாவி மொபைலையும் எடுத்தாள். மொபைலுக்கு ஒரு நல்ல குளி கிடைத்தது. நான் போன வாரம் வாங்கிய மொபைல் இந்த வாரம் தன் ஆயுளை முடித்துக் கொண்டது. ரூபாய் நோட்டுக்களை ஒன்று திரட்டினாள். இப்படி ஒரு அசட்டுக் காரியம் செய்தோம் என்ற குற்ற உணர்ச்சி இல்லை. "சிங்கப்பூரைப் போல நோட்டுக்களை பிளாஸ்டிக்கில் அச்சடித்தால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. ரிசர்வ் வங்கி இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நான் சொன்னா யாரு கேட்கிறா?" என்றாள். அவள் செய்த தவறை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டாள். துவைக்கப் போடுவதற்கு முன் பாக்கெட்டுக்களை செக் பண்ண வேண்டியது அவள் கடமையில்லையா?

பணம் தண்ணீரில் போய்விட்டது. இந்த மாதச் செலவிற்குப் பணம் வேண்டும். நண்பர்களிடம் கடன் கேட்பது சரியாக இருக்காது. இவள் செய்த காரியத்தைச் சொல்ல வேண்டும். அது குடும்பத்திற்கே கௌரவக் குறைச்சல். என் கழுத்தில் இருக்கும் தங்கச் செயினைப் பார்த்தேன். இதை அடகுக் கடையில் அடகு வைத்தால் ஒரு நல்ல தொகை கிடைக்கும். சாதாரண மனிதனிடமிருந்து எட்டாத உயரத்தில் தங்கத்தின் விலை இருப்பது சௌகரியமாகத்தான் இருக்கிறது. நகை அடகு பிடிக்கும் கடையைத் தேடிப் புறப்பட்டேன். இதுவரை நான் என் வாழ்க்கையில் அடகுக் கடைக்குப் போனதே இல்லை. எல்லாம் என் தலையெழுத்து.

எண்ண அலைகளிலிருந்து விடுபட்டு அமெரிக்கா போகத் தயாரானேன். என் குடும்பத்துடன் சேரப் போகிறேன். என் பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழப் போகிறேன். அங்கே நான் காலையில் எழுந்து கவர் பால் வாங்க வேண்டாம். சமையல் செய்ய வேண்டாம். அது சரி, அங்கே டாலர் நோட்டுக்கள் பிளாஸ்டிக்கில் அச்சடித்திருப்பார்களா?

R.H.S. மணி,
ஆஸ்டின், டெக்ஸாஸ்
More

புது சோஃபா
யாருக்கு அம்மா புரியும்?
Share: 




© Copyright 2020 Tamilonline