Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | பொது | அமெரிக்க அனுபவம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | Events Calendar | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
வயசு காலத்தில்
ஒரு மணி நேரம்
தேனக்காவின் கல்யாணம்
- தேவி அண்ணாமலை|ஜூலை 2013||(2 Comments)
Share:
அன்றொரு நாள் தினசரி ரயில் பயணத்தின்போது தேனக்கா நினைப்பு வந்தது. பின்வந்த நாட்களில் மறுபடியும் அவள் நினைப்பு மீண்டும் வர, கொஞ்சம் அவளைப்பற்றி அசைபோட்டேன்.

இன்னமும் அந்தப் பொறியியற் கல்லூரி விடுதியில்தான் வேலையாய் இருப்பாளோ. விரல்விட்டு எண்ணிப் பார்த்தேன். ஏயெப்பா....பன்னிரண்டு வருஷம் ஆயிற்றா?

தேனக்கா எங்கள் கல்லூரியின் விடுதியில் வேலைபார்த்துக் கொண்டிருந்த சின்னவயதுப் பெண்களை மேய்க்கும் பெரிய வயது வேலைக்காரி. ரொம்பவும் ஒடிசலாக உயரமாய், கொஞ்சமாய்க் கூன் போட்டு, சீராக மடிப்பு

வைத்துப் பின் குத்தி சேலை உடுத்தி, டீச்சர்போல பன் கொண்டையுடன், காதோரத்தில் சும்மா நாலு கனாகம்பரமோ, மஞ்சள் டிசமபர்ப் பூக்களோ, வெள்ளை நந்தியாவட்டையோ, விடுதி சமையலறைப் பின்கட்டில்

பூத்திருக்கும் ஏதாவது ஒரு பூவைச் சூடியிருப்பாள். எப்போதும் முகம் கொள்ளாச் சிரிப்போடு "மேடம்ம்ம்ம்" என்றுஅவளுக்கே உரித்தான க்க்கீச்சுக் குரலில் பதினேழு,பதினெட்டு வயதுடைய எங்களை அழைக்கும்போது

கூச்சமாகவும், சிரிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

நான்காவது செமஸ்டர் தேர்வுக்கு முந்தைய விடுமுறையில் நான் விடுதியில் தங்கியிருந்த போதுதான் அக்காவுடன் கொஞ்சம் நெருங்கிப் பழக வாய்த்தது. நான் அறையில் இருப்பது தெரியாமல் ஏதோ ஒரு பாடலை

சத்தமாகப் பாடிக்கொண்டே (க்கீச்சுக் குரலில் அது என்ன பாட்டு என்றே புரியவில்லை) என் அறையைப் பெருக்கியவள் ஒரு மூலையில் கட்டிலில் கட்டி வைக்கப்பட்ட தலையணை படுக்கையோடு அமர்ந்திருந்த என்னைப்

பார்த்தவள் ஒருகணம் அதிர்ந்து நான் இருப்பது அறியாமல் பாடிவிட்டோமே என்று எண்ணினாளோ என்னமோ, பின் மெல்ல வெட்கப்பட்டுக் கொண்டாள்.

"என்ன மேடம் படிக்கிறீங்களா? ஊருக்கு போலீங்களா மேடம்" என்னைப் பார்த்துக் கேட்டவளை நான் கேட்கத் துவங்கினேன். ம்ம்ம் சொல்ல மறந்தேனே நான் ஒரு கேள்வியின் நாயகி என்ன, ஏது என்று கேட்டுத்

தெரிந்து கொள்வதில் எனக்கு அப்படி ஒரு அலாதிப் பிரியம்.

"தேனக்கா, நீங்க எந்த ஊரு?" ஏதோ ஒரு கிராமம் சொன்னாள். பத்துப் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில்தான் இருந்து.

"நீங்க எப்ப ஊருக்கு போவீங்க?" என்றேன்.

"அடுத்து தீவாளிக்குத்தேன் மேடம்ம்"

"வீட்ல யார் இருங்காங்க?" என்னமோ ரேசன் கார்டு கொடுக்க வந்த மாதிரி கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தேன்

"அப்பா, அம்மா இருக்காங்க. அப்பா மேலுக்கு சொகமில்லாத ஆளு. அம்மாவுக்கு கொஞ்சம் கண்ணு தெரியாது."

"அச்சச்சோ, அப்போ யாரு பாத்துப்பாங்க. உங்ககூடப் பிறந்தவங்க யாரும் இல்லையா?"

"அண்ணன், அக்காவெல்லாம் இருக்காங்க. கல்யாணம் பண்ணி சொத்தெல்லாம் பிரிச்சிட்டு போய்ட்டாங்க. நாந்தேன் கடசீ. அப்பா அம்மாவ கவனிக்கணுமில்ல அதேன் வேல பாக்கிறேன்" என்றாள் முகத்தில்

கொஞ்சமும் மாறாத அவளுக்கே உரித்தான சிரிப்புடன். கஷ்டமாய் இருந்தது.

அவளே நினைத்தவளாய் இதைச் சொன்னாள் "இன்னமும் கல்யாணம்கூட பண்ணிக்கில்ல."

அடக்க முடியாதவளாய் கேட்டேவிட்டேன் "ஏன்க்கா?"

"துட்டில்ல, மாப்பிள்ளை வீட்ல ரொம்ப பணம் கேக்கிறாங்க."

"எவ்வளவுக்கா கேக்கிறாங்க. அண்ணன் உதவி பண்ண மாட்டங்களா?"

"இல்ல, எங்கண்ணன் எங்ககூட பேசறதில்ல. அண்ணன் மவளுக்கெல்லாம்கூட கல்யாணம் ஆகிருச்சு. இப்பதேன் ஒரு குழந்தை பிறந்திருச்சு. பையன்"

"அண்ணன் பொண்ணுக்கு கல்யாணம் ஆயிருச்சா!" அதிர்ச்சியுடன் சற்றே குரலை உயர்த்திக் கேட்ட என்னை இன்னும் முகமலரப் பார்த்தாள். அது இவளை ஆச்சரியப்படுத்தி விட்டோமே என்ற குதூகலமோ என்னவோ.

விளக்கமாரை ஒரு ஒரமாய்ப் போட்டுவிட்டுத் தரையில் உட்கார்ந்து கொண்டாள். எத்தனை சொல்லியும் கட்டிலில் உட்காரவில்லை.

இன்னமும் சொன்னாள் "ஒருக்கா கல்யாணம்கூட முடிவாகிருச்சு. 5000 ரூபாய் கேட்டாங்க. 2800 ரூபாய் சொன்னோம். தாலி நாங்கதான் போடணும்னு சொன்னாங்க. அதுக்கும் சரி சொன்னோம்."

"அப்பறம்..."

"ஆனா, கல்யாணம் நடக்கல."

"ஏன்க்கா"

"கொலுசு ஒண்ணு போடச் சொன்னாங்க மேடம். பணம் இல்ல. அது 500 ரூவாய் ஆகும்."

கொலுசினால் திருமணம் நடக்காமல் போகும் என்று அன்றுதான் தெரியும். தேனக்கா சந்தோஷமாய்த்தான் சொன்னாள். எனக்குத்தான் என்னவோவாகிப் போயிருந்தது.

அடுத்த சில வருடங்கள் நேசமாய் சிரிப்பது, நலம் விசாரிப்பது எனக் கழிந்தது. அவள் சிரிப்பு எனக்கு இன்னமும் பிடித்திருந்து.
என் பி.இ. கடைசி வருடப் படிப்பின்போது. தேனக்கா என்னைத் தேடி வந்தாள். அப்படி ஒரு சிரிப்பு. "எனக்கு கல்யாணம் மேடம்ம்" என்றபோது எனக்குச்சந்தோஷம் பிடிபடவில்லை. மாப்பிள்ளை ஏதோ எஸ்டேட்டில்

வேலை பார்த்தார். தேனக்காவும் மாப்பிள்ளையுடன் போய்விடுவாளாம். இங்கு வேலை பார்த்தாலும் பார்ப்பாளாம். போய்விடத்தான் அவளுக்கு ஆசையாம். மாப்பிள்ளைக்கு இது இரண்டாவது கல்யாணம் என்றது

மட்டும் உறுத்தியது. ஏதோ முதல் மனைவிக்கும் அவருக்கும் ஒத்துவரவில்லையாம். பெரியவர்கள் பேசி அத்துவிட்டு விட்டார்களாம். ஒரே வரியில் ஏதோ மாப்பிள்ளையின் ஊர் விவரம் சொல்வது போலச் சொன்னாள்.
கேள்வியின் நாயகி எனக்கு கொலுசினால் நடக்க முடியாத கல்யாணம் நாலு பெரிசு பேசினால் ரத்தாகி விடுமா என ஏகப்பட்ட கேள்விகள் என்முன் டான்ஸ் ஆடின. ஆனாலும் அதையெல்லாம் அவளிடம் கேட்கவில்லை.

அதையெல்லாம் கேட்காமலா கல்யாணம் பேசிருப்பார்கள் என் எண்ணிக் கொண்டேன். தேனக்காவிற்காகச் சந்தோஷப்பட்டேன். ரொம்ப ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. கொஞ்சம் பணம் கொடுத்தேன்.எவ்வளவு என்று

ஞாபகம் இல்லை. கொஞ்சம் நெயில் பாலிஷ் பாட்டில்கள், எனக்கு கவரிங் ஒத்துக்காது என்பதால் ஆசைக்கு வாங்கி சும்மாவே கிடந்த கவரிங் கம்மல்கள் எல்லாம் கொடுத்தேன். பின்பு சில வாரங்களில் அவள் மீண்டும்

விடுதிக்கு வந்திருந்தாள். பன் கொண்டை ஒற்றைப் பின்னலாய் மாறி இருந்தது, புதுச்சேலை, பிச்சிப்பூ சரம் வைத்து, நல்ல மஞ்சள் பூசி அமர்க்களமாய் இருந்தாள் தேனக்கா.

"என்ன தேனக்கா? செமையா இருக்கீங்க?" என்று ஓட்டினேன்.

"ஆமாங்க மேடம்ம்ம்" என்றாள் வெட்கத்துடன்.

வேலையை எழுதிக் கொடுக்க வந்தாளாம். அவளை இனி பார்க்க மாட்டோம் என்பது சின்னதாய் வருத்தமாயிருந்தாலும், நானும் கல்லூரி முடிந்து போய் விடுவேன் என்பதால் அத்தனை வலிக்கவில்லை.

"கல்யாணத்திற்கு நெயில் பாலிஷெல்லாம் போட்டீங்களா?" என்று கேட்டேன் ஆர்வமாய்.

"ஆங், போட்டேன். அப்பறம் உங்க கம்மல பார்த்து ‘காதோரம் லோலாக்குன்னு’ பாட்டுகூட பாடினாரு."

கொஞ்சம் புரியாமல் விழித்த எனக்கு விளக்கினாள். "கல்யாணத்தன்னிக்கு ராத்திரி நீங்க கொடுத்த கம்மலத்தான் போட்டிருந்தேன். அதப் பாத்து என் ஹஸ்பெண்டு பாடினார் மேடம்ம்ம்" என்றாள்.

"அப்படியா" என்று வழிந்து வைத்தேன்.

மறுபடியும் விடுதியின் வரவேற்பறையில் வைத்து அவர்களை ஜோடியாய்ப் பார்த்தேன். வெள்ளையும் சொள்ளயுமாய் சுமாரான உயரத்துடன், நல்ல கன்னங்கரேலென, ஒல்லியாய், ஒட்ட சவரம் செய்தவன் கால்மேல்

கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான். தண்ணி, சிகரெட் குடிப்பவன் போலத் தோன்றினான். என் வகுப்பு தீபலெட்சுமி எனக்கு முன்னமே சொல்லி இருக்கிறாள். மொசப் பிடிக்கிற நாய மூஞ்சப் பார்த்தாலே

தெரியுமென்று. அவள் பார்த்துச் சொன்னதெல்லாம் சரியாகத்தான் வேறு இருந்தது.

நான்தான் சரியாய் தப்பாய் கண்டுப்பிடிப்பதில் வல்லவளாய் இருந்தேன். அது ஏன்?

நான் இப்போது வரைக்கும்கூட அப்படித்தான். ஆனால் என்னால கூட அன்று கண்டுபிடிக்க முடிந்தது. அதுகூட முடியவில்லை என்றால் "இதுகூடத் தெரியல, அட பரதேசி!" என்றிருப்பாள் என் பிரிய ஸ்னேகிதி.

(பரதேசி அவளுடைய சிக்நேசர் திட்டு). தேனக்கா என்னை அவள் கணவனிடம் அறிமுகப் படுத்தினாள். அவன் அசெளகரியமாய் சிரித்து வைத்தான். நான் ஏதோ பத்து பேத்தி எடுத்த பாட்டி மாதிரி தேனக்காவ நல்ல

பார்த்துக்கோங்க அப்படி இப்படியென்று சொன்னேன். அதற்கும் ஏதோ மாதிரி சிரித்து வைத்தான். பிடிக்காத பி.இ. படிப்பை பிடிப்பே இல்லாமல் படித்து முடித்த பின்தான் உறைத்தது நான் இனி எப்போதும் பி.இ.தான்

என்று. சரி என்ன பண்ணலாமென்று யோசித்து நானும் ஒய்2கே ஜோதியில் கலக்கலாம் எனத் தீர்மானித்து மெயின் ஃப்ரேம் படிக்கத் திருவனந்தபுரம் போய்விட்டேன்.

வேலைக்குப் போகும்முன் எதனாலோ கல்லூரி போயிருந்தேன்.

கல்லூரி விரியவுரையாளர்களெல்லாம் ரொம்ப சினேகமாய்ப் பேசினார்கள். எப்போதும்போல என் எச்.ஓ.டி. என்னை தேவயானி என்று தப்பாய் அழைத்தார். என் பெயரைத் தப்பாய் சொல்வதில் அவருக்கு ஏதோ ஒரு

சந்தோஷம் போல. அப்புறம் விடுதிக்குப் போனேன். மதியம் மணி 2.30 இருக்கும். சாப்பிட்டு கதை பேசிவிட்டு வரும் வழியில் அது யார்...தேனக்காவா?

வேலைக்கு வந்துவிட்டாளா? எஸ்டேட் வாழ்க்கை பிடிக்கவில்லையோ...அப்பா, அம்மா எப்படி இருக்கிறார்கள். அவள் இங்கேயே வேலைக்கு வந்துவிட்டாளோ?
ஏதோ ஒரு யோசனையில் போய்க் கொண்டிருந்தாள் தேனக்கா. நான் "தேனக்கா.." என்று ஆசையாய் விளித்தேன்.

என்னைப் பார்த்தவள் கொஞ்சமும் அசங்காமல் ஒரு அயர்ச்சியான புன்னகையுடன் கேட்டாள் "என்ன மேடம், எப்படி இருக்கீங்க?"

அப்போதுதான் கவனித்தேன் தூங்கியெழுந்ததுபோல் அவள் தலை கலைந்திருந்தது. அவளுக்குரிய அந்த கீச்சுக் குரல்கூட மாறி இருந்தது, முகத்தில் களையே இல்லை. ரொம்ப வயசானவள் போலத் தோன்றினாள்.

உடம்புக்கு முடியவில்லையோ...

சாயம்போன சேலையை மடிப்பு எதுவும் வைக்காமல் உடுத்தியிருந்தாள். அவளுக்கே உரித்தான சிரிப்பு சுத்தமாய் காணாமல் போயிருந்தது. என்னுடன் பேச அவள் அத்தனை விருப்பம் காட்டவில்லை. நான்தான்

ஆவலை அடக்கமுடியாமலும், அவளைக் கண்ட சந்தோஷத்திலும் கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருந்தேன். அந்தச் சுருக்கமான சம்பாஷணை இதுதான்.

அவள் கணவன் மூன்று மாதத்திலயே அவளைப் பிரிந்து அவள் மூத்த மனைவியிடம் சேர்ந்து விட்டானாம். அந்தப் பெண் கர்ப்பமாய் இருந்த போதுதான் அவன் அவளைப் பிரிந்தானாம். (அடப்பாவி!) அவளுக்கு ஆண்

குழந்தை பிறந்தவுடன் அக்காவைப் பிரிந்து விட்டானாம். அக்கா வேலைக்கு வந்துவிட்டாளாம். அவளிடம் அதற்குமேல் எதுவும் கேட்கவில்லை. கேள்வி கேட்க வேண்டிய நேரத்தில் அவளோ அவள் சார்ந்தவர்களோ

கேட்கவில்லை, கேட்டிருந்தாலும் என்ன வேறு மாதிரி நடந்திருக்கும் தெரியவில்லை. அவர்கள் கிடைக்க விரும்பிய பதில்கள்தாம் உத்தரவாதமாய் கிடைத்திருக்கும்.

என் கல்லூரியின் புதிய பேருந்தில் ஏறி வீடு சேரும்வரை மனம் மரத்துப்போய்க் கிடந்தது. பேருந்தின் புதுப்பெயிண்ட் வாசனையும், ஜன்னலோரச் சீட்டில் சிலுசிலுகாற்றும், என் முடிக்கற்றைகளோடு அது பண்ணும்

சேட்டைகளையும் ரசிக்க அன்று மட்டும் என்னால் முடியவில்லை. இன்னதென்று சொல்ல முடியாத துக்கம். அன்று மாலை வீட்டின் பின்புறத்தில் குருவிகள் கூட்டில் அடைய ஊர்ப்பட்ட சத்தம் போட்டுக் கொண்டிருந்த

பொழுதில், துணி துவைக்கும் மேடையில் உட்கார்ந்தபடி யோசித்துக் கொண்டிருந்தேன்.

வெகுநேரம். "சே...இந்தக்கா கல்யாணம் பண்ணிக்காமலே இருந்திருக்கலாம். சிரிச்சிக்கிட்டாவது இருந்திருப்பாங்க..."

இருட்டி விட்டிருந்தது. இன்னமும்கூட நான் அப்படித்தான் யோசிக்கிறேன். சினிமாபோல.... அக்கா இன்னொரு திருமணம் செய்து கொண்டாள் நல்ல கணவன், இரண்டு குழந்தைகள் அல்லது இன்னும் மேலே படித்து

நல்ல வேலைக்குப் போய் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொண்டாள், செல்ஃபோன் வைத்திருக்கிறாள்; அதுகூட வேண்டாம், நடந்தவைகளைக் கெட்ட கனவாய் மறந்து தலைமை வேலைக்காரியாய் விடுதியில்

என்போன்று படிக்கும் பெண்களுடன் நட்புப் பாராட்டி சிரித்துச் சிரித்து மேடம்ம்ம் சொல்லிக் கொண்டிருக்கிறாள், இப்படியெல்லாம் எனக்கு எண்ண ஆசைதான். இருந்தாலும் இதெல்லாம் இல்லாமல் இன்னமும் அவள்

சிரிப்பை மறந்து துயரத்தில் உழன்று கொண்டிருக்கிறாளோ என எண்ணாமல் இருக்க முடியவில்லை.... அவள் அறியாமல் போன கல்யாண சந்தோஷங்கள் அவளுக்குத் தெரியாமலே போய் இருக்கலாம்.

அதனால்தான் இன்னமுங்கூட நான் இப்படித்தான் யோசிக்கிறேன் "சே,..இந்தக்கா கல்யாணம் பண்ணிக்காமலே இருந்திருக்கலாம். சிரிச்சிக்கிட்டாவது இருந்திருப்பாங்க..."

தேவி அண்ணாமலை,
சிகாகோ
More

வயசு காலத்தில்
ஒரு மணி நேரம்
Share: 




© Copyright 2020 Tamilonline