Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
ஜாண் வயிறு
பாப்பாக்கு ஸ்கூல்!
உயர்ந்த உள்ளம்
ஜெட்லாக்
- சந்திரசேகரன்|நவம்பர் 2012||(1 Comment)
Share:
விமானம் முப்பதாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. வெளியே கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பஞ்சுப் பொதிபோல மேகக் கூட்டம். நான் ஜன்னலை மெல்லச் சாத்திவிட்டு இருக்கையில் சாய்ந்தேன். பக்கத்தில் மனைவி மீனாட்சி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். ஆறு மாத உழைப்பின் அசதி அவள் முகத்தில் தெரிந்தது. பாவம்! என்னால் அவளுக்காக அனுதாபப் படத்தான் முடியும். ஏனென்றால் வருடா வருடம் சலிக்காமல் அமெரிக்கா வரவில்லை என்றால் அவளுக்குத் தாங்காது. வந்து தன் பேரக் குழந்தைகளுடன் கொஞ்சிக் குலாவி, பிள்ளைக்கும் மருமகளுக்கும் தொண்டு செய்வதென்றால் அவளுக்கு அலாதிப் பிரியம். அவள் போனால் நானும் போய்த்தான் ஆகவேண்டும்.

விமானப் பணிப்பெண் ஏதோ குளிர்பானம் எடுத்து வந்து நீட்டினாள். வேண்டாம் என்று தலையசைத்தேன். விமானம் சான் ஃபிரான்சிஸ்கோவுக்கு டாட்டா காட்டி சுமார் இரண்டு மணி நேரம் ஆகிறது. இன்னும் பன்னிரண்டு மணி நேரம் தாக்குப் பிடிக்க வேண்டும். அப்புறம் மூன்று மணி நேர ஓய்வுக்குப் பின் மீண்டும் ஆறு மணி நேரப் பயணம். அப்புறம்தான் தாய் மண்ணை மிதிக்க முடியும். அந்த எண்ணமே நெஞ்சில் ஒரு தெம்பைக் கொடுத்தது.

"என்னங்க" மீனாட்சி விழித்துக் கொண்டாள்.

"சொல்லு மீனாட்சி" ஒரு ஆதங்கத்துடன் அவளை பார்த்தேன்.

"சிங்கப்பூர் போக எவ்வளவு நேரம் இருக்கு?"

"பன்னிரண்டு மணி நேரம். நீ இன்னும் கொஞ்சம் தூங்கு. அப்போதான் சென்னை போனப்புறம் ஜெட்லாக் இருக்காது."

"அந்தக் கொழந்தைங்க ரெண்டு பெரும் ஏர்போர்ட்ல அழுதுண்டே டாட்டா காட்டினது கண் முன்னாலேயே இருக்குதுங்க. பாவம்! அதுங்களுக்கு வேளா வேளைக்கி யார் பாத்து பாத்து சாதம் ஊட்டப் போறா சொல்லுங்க!"

எனக்கும் அந்த ரெண்டு குழந்தைகளை நினைத்தால் மனது மிகவும் சங்கடப்பட்டது. என் பையனும் மருமகளும் காலையிலேயே வேலைக்குக் கிளம்பி விடுவார்கள். போகும்போதே பையனையும் பெண்ணையும் பள்ளியில் விட்டுவிட்டுப் போய் விடுவார்கள். காலையில் அந்த ஊர்ப் பழக்கம் ஓட்ஸ்தான். மத்தியானம் பள்ளியில் என்ன கொடுக்கிறார்களோ அது. பாதி நாள் எதுவும் உண்ணாமலேயே பட்டினியுடன் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். மாலையில் கணவனும் மனைவியும் களைத்து வீடு திரும்பியவுடன் என்ன செய்கிறார்களோ அதுதான் இரவு உணவு. மீனாட்சி அங்கு இருந்தவரை அவர்கள் எல்லோருக்கும் உணவு விஷயத்தில் எந்தக் குறையும் வைக்கவில்லை. பம்பரம் போலச் சுழன்று நாள் பூராவும் வேலை செய்வாள். நான் பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வருவேன். அவர்களும் தாத்தா பாட்டி என்று எங்களிடம் உயிரையே விடுவார்கள். ஒவ்வொரு முறையும் நாங்கள் அங்கே போகும்போது ஆசையும் பாசமுமாய் வரவேற்கும் குழந்தைகள் நாங்கள் திரும்பிப் போகும்போது வாடிய முகத்துடன் வழி அனுப்புவது சங்கடமான ஒரு விஷயம்.

"நம்ம கோபியும் மாலுவும் கூட கண் கலங்கிட்டா பாத்தீங்களா?" 'ஆம்' என்று தலையசைத்தேன்.

கோபி எனது முதல் மகன். பெரிய கம்பெனி ஒன்றில் சேல்ஸ் மேனேஜர். நல்ல சம்பளம். கொஞ்சம் முன்கோபக்காரன். ஆனால் மருமகள் மாலதி அதற்கு நேர் மாறானவள். எப்பொழுதும் சிரித்த முகம். முகத்தில் நல்ல களை. இத்தனை வருடம் அமெரிக்காவில் இருந்தாலும் நடை, உடை, பாவனைகளில் நம் இந்தியக் கலாசாரத்தைக் கடைப் பிடிப்பவள். ஆஃபீசுக்கு நேரமானாலும் தலை முடிந்து சாமிக்குப் பூ வைத்துக் கும்பிடாமல் கிளம்ப மாட்டாள். மாமனார் மாமியார் என்று பேதம் பார்க்கமாட்டாள். 'அம்மா அம்மா' என்று அவள் வீட்டில் இருக்கும் போது மீனாட்சியை எந்த வேலையும் செய்ய விடமாட்டாள். மீனாட்சிக்கும் அவளை ரொம்பப் பிடிக்கும். சனி ஞாயிறு நாட்களில் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு சமையலறையில் வேலை செய்வது கண்கொள்ளாக் காட்சி. எப்போதாவது ஒருவருக்கு ஒருவர் கொஞ்சம் காரசாரமாகப் பேசிக்கொண்டாலும் பத்து நிமிடத்தில் இருவரும் ஒன்றாக உட்கார்ந்து டிவி பார்ப்பது வேடிக்கையான ஒரு காட்சி.

எனக்கு அமெரிக்காவை அறவே பிடிக்காது. அதன் பிரம்மாண்டத்தைக் கண்ட பிரமிப்பெல்லாம் என்னுடைய முதல் பயணத்தின் போதே விடை பெற்று விட்டது. அப்புறம் திரும்பத் திரும்ப வரும் போதெல்லாம் அதே பார்த்த இடங்கள்; பழகிய முகங்கள்; மயான அமைதியில் தெருக்கள். மனித வாடையே இல்லாத வீடுகள். மேலுக்கு நம்மைப் பார்த்து சிரிக்கும் அமெரிக்கர்கள். அமெரிக்காவிடம் ஒரு எரிச்சலே வந்துவிட்டது. ஆனால் லண்டன் மக்களுக்கு இவர்கள் எவ்வளவோ மேல். அங்கு எதிரே பார்த்தால்கூட முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு போகும் வெள்ளையர்கள். பஸ்ஸிலோ ட்ரெய்னிலோ கூட ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பேசிக் கொள்வதில்லை.
மீனாட்சி மீண்டும் தூங்கி விட்டாள். நான் மீண்டும் என் அமெரிக்க வாழ்க்கையை அசை போட்டேன். கலிஃபோர்னியாவை வடக்கு முதல் தெற்குவரை ஒரு இண்டு இடுக்கு விடாமல் பார்த்துவிட்டோம். கோல்டன் கேட்டின் குளிரில் நடுங்கி நாபா பள்ளத்தாக்கின் மதுவை ருசித்து, சான்டா குரூஸ் கடற்கரையில் நடை பழகி, மான்டிரோ மீனகத்தில் மணிக்கணக்கில் குழந்தைகளுடன் மனமகிழ்ந்து, அப்பப்பா, என்ன இனிய அனுபவங்கள்! ஒவ்வொரு முறை இவைகளைப் பார்க்கும் போதும் என் மனைவி பரவசத்துடன் அவைகளை மீண்டும் மீண்டும் ரசிப்பாள். லாஸ் ஏஞ்சலஸில் டிஸ்னி லாண்டை மூன்று முறை பார்த்த போதும் குழந்தைகளுடன் இவளும் குழந்தையாகி விடுவாள். யுனிவர்சல் ஸ்டுடியோவில் எல்லா கேளிக்கைகளிலும் என் மகனுடன் சமமாகக் கலந்து கொள்வாள். வேகாஸில் சூதாட்டம் கூடக் கொஞ்சம் ஆடுவாள். எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து விட்டால் பம்பரமாய் வேலை செய்வாள். அவள் ஓர் அபூர்வப் பிறவி.

நான்கு சுவர்களுக்குள் அடங்கிக் கிடக்கும் எங்கள் அமெரிக்க வாழ்க்கைக்கு மாலைகளில் சிறிது சுதந்திரம் கிடைக்கும். வாக்கிங் என்ற பெயரில் ஒன்றரை மணி நேரம் பக்கத்திலுள்ள பூங்காவுக்குச் சென்று வருவோம். அங்கு நமது ஊர்க்காரர்கள் பலரும் ஒன்று கூடி அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். ஆண்கள் பிரியும் போது ஒருவரை ஒருவர் கேட்கும் கேள்வி: "ஒங்களுக்கு இன்னும் எத்தனை நாள்?" நானும் அதே ராகம் தான்!

திரும்பி வரும்போது நான் என் மனைவியைக் கேட்பேன், "மீனாட்சி! நம்ம மாலுவப் பாத்தியா? நேத்து ஆபீஸ்லேருந்து வரப்ப நம்ம யார் கிட்டயும் மூஞ்சி குடுத்து பேசாமே உள்ள போனா பாத்தியா?" சட்டென்று மீனாட்சியிடமிருந்து பதில் வரும், "ஏங்க! தினமும் அந்தப் பொண்ணு நாப்பது மைல் இந்த அமெரிக்க டிராபிக்ல கார் ஒட்டிண்டு போயிட்டு வராளே! எவ்வளவு டயர்டா இருப்பா. ஆபீஸ்ல அவளுக்கு எவ்வளவு டென்ஷனோ. நாமதாங்க அட்ஜஸ்ட் பண்ணிண்டு போகணும்."

விமான ஓட்டி சீட் பெல்ட்டுக்குக் குரல் கொடுத்தார். மனைவியை எழுப்பி சீட் பெல்ட் போட்டுக் கொள்ளச் சொன்னேன். மீனாட்சிக்கு விழிப்பு வந்துவிட்டது. சீட் பெல்ட்டை அணிந்து கொண்டே, "ஒரு காபி கிடைக்குமா பாருங்களேன்!" என்றாள். மணியை அழுத்தி பணிப்பெண்ணிடம் இரண்டு காபிக்குச் சொன்னேன்.

"பெரியவ ஸ்கூலுக்குப் போய் இருப்பாளா? சின்னவன் கார்த்தால என்ன சாப்பிட்டிருப்பான்? என்னவோ எனக்கு அந்தப் பசங்க ஞாபகமே மனசுல இருக்குங்க!"

காபி வந்தது. இருவரும் குடித்துக்கொண்டே பேசினோம்.

"நம்ம சீனுவுக்கும் சாமி சீக்கிரம் கண்ணத் தொரக்கணும்!" மீனாட்சியின் ஆதங்கம் அவளது குரலில் தெரிந்தது.

சீனிவாசன் எங்களது இரண்டாவது மகன். லண்டனில் இருக்கிறான். கல்யாணமாகி மூன்று வருடம் ஆகிறது. அங்கேயே ஒரு மருந்து கம்பனியில் அக்கவுன்டன்ட். வீடு வெம்பிலியில். ஆபீஸ் டவர் பிரிட்ஜ் தாண்டி தேம்ஸ் கரையில். பஸ்ஸில்தான் போய் வருகிறான். போய் வர தினமும் இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிடும். மருமகள் சாருலதா அதிகம் படிக்காதவள். வீட்டில்தான் இருக்கிறாள். போன வருடம் இரண்டு மாதம் அவன் வீட்டில் தங்கிவிட்டு வந்தோம்.

"நீ சொல்றது சரி மீனாட்சி! ஆனா அவனுக்கு என்ன வேலையோ தெரியவில்ல. ஒரு போன்கூட பண்ணலையே!"

பேசிக்கொண்டே இருவரும் உறங்கி விட்டோம். ரொம்ப நேரம் தூங்கிவிட்டோம் போல. ஒரு தடதட சத்தத்துடன் விமானம் தரையிறங்கிய போதுதான் கண் விழித்தோம். சிங்கப்பூர் வந்துவிட்டது. இரண்டு மணி நேரம் அங்கே உள்ள கடைகளை எல்லாம் பார்த்துக்கொண்டே கால்கடுக்கச் சுற்றிவிட்டு மீண்டும் அடுத்த ஆறு மணி நேரப் பயணத்துக்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அப்புறம் நம் தாயகம். நம் மக்கள். நம் நண்பர்கள்! நம் அரட்டைகள்! எது எப்படியோ, மீனாட்சிக்குக் கொஞ்சம் ஒய்வு கிடைக்கும்.

சென்னையின் சுதந்திரக் காற்றை இதமாக சுவாசித்துக்கொண்டே பெட்டிகளுடன் வெளியே வந்தோம். எங்களை வரவேற்க யாரும் வரவில்லை. எங்களைப் பொருத்தவரை எனக்கு அவள்; அவளுக்கு நான்! ஒரு வழியாக வாடகைக் கார் ஒன்றைப் பிடித்து மந்தைவெளி சென்றடைந்த போது விடியற்காலம் மூன்று மணி ஆகிவிட்டது.

"பெட்டி எல்லாம் அப்படியே ஹால்ல வெச்சிடுங்க. நாளைக்கி காலம்பர பாத்துக்கலாம். மூணு மணி நேரமான தூங்கலாம்," மீனாட்சி சொன்னது எனக்கும் சரி என்று பட்டது. இருவரும் உறங்கிவிட்டோம். காலை நான் எழுந்த போது மணி எட்டைத் தாண்டிவிட்டது. மீனாட்சி இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள். ‘பாவம்! தூங்கட்டும். இன்னும் ஆறு மாதத்துக்கு அவளுக்கு ஓய்வுதான்!' நினைத்துக்கொண்டே ஹாலுக்கு வந்தேன்.

டெலிஃபோன் ஒலித்தது. எடுத்தேன்.

"அப்பா! நான்தாம்பா. எப்போ வந்தீங்க? பயணமெல்லாம் சௌக்கியமாயிருந்ததா?" இரண்டாவது மகன் சீனுவின் குரல்.

"நல்லபடியா வந்து சேர்ந்துட்டோம்ப்பா! நீங்க ரெண்டு பெரும் எப்படி இருக்கீங்க?" பேசிக்கொண்டிருக்கும் போதே மீனாட்சி வந்துவிட்டாள். "யாரு? சீனுவா?" கேட்டுக்கொண்டே தொலைபேசியை என்னிடமிருந்து பறித்துக் கொண்டாள்.

"எப்படிடா இருக்க? வேலையெல்லாம் எப்படி போய்ண்டிருக்கு? சாரு என்ன பண்றா? இப்போ அங்க மணி என்ன ஆறது?" மீனாட்சி அடுக்கிக்கொண்டே போனாள்.

"அம்மா! மொதல்ல நீங்க எப்படி இருக்கீங்கன்னு சொல்லுங்கோ. ஒங்களுக்கு ஜெட்லாக் இருக்கும். நாளைக்கி பொறுமையா பேசலாம். அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லத்தான் போன் பண்ணினேன்!"

"சொல்லுப்பா!"

"டாக்டர் கன்ஃபார்ம் பண்ணிட்டாரும்மா, சாருவுக்கு மூணு மாசம்னுட்டு."

"அம்பாளே! என் வயித்துல பால வாத்த தாயே! ஏண்டா சீனு, இத ஏன் முன்னாடியே போன் பண்ணி சொல்லலே?"

"இல்லம்மா, நேத்துதான் டாக்டர் சொன்னாரு. அதான் மொதல்ல ஒங்ககிட்ட சொல்றேன்."

"ரொம்ப சந்தோஷம்டா! சரி சாருவ கூப்புடு."

"சொல்லுங்கம்மா!" அவள் குரலில் ஒரு வெட்கம் தெரிந்தது. "எப்டிடா இருக்க? ரொம்ப சந்தோஷமா இருக்குடா கண்ணா கேக்கவே!"

"அம்மா! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு! அதே சமயத்துல கொஞ்சம் பயமாவும் இருக்கும்மா!"

"சாரும்மா! நீ ஒண்ணும் கவலைப்படாத. ஒங்கம்மா இருந்தா எப்படி கவனிச்சிப்பாளோ அந்த மாதிரி நான் கவனிச்சிக்கறேன். அடுத்த மாசமே நான் அங்க வந்துடறேண்டா கண்ணா!!"

பிள்ளையும் மருமகளும் ரொம்ப நேரம் பேசிவிட்டு ஃபோனை வைத்தனர். மீனாட்சிக்கு உற்சாகம் பிடிபடவில்லை. போன் போட்டு எல்லோருக்கும் விஷயத்தைச் சொல்லி முடித்தாள்.

"என்னங்க! யுகே விசாவ ரின்யூவலுக்கு அப்ளை பண்ணிடுங்க. அடுத்த மாசமே போகணும். பாவம்! அந்தத் தாயில்லாத பொண்ணு தனியா கஷ்டப்படும்!"

உழைப்பதற்கே பிறந்த அந்த ஜீவனை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

சந்திரசேகரன்,
லண்டன், இங்கிலாந்து
More

ஜாண் வயிறு
பாப்பாக்கு ஸ்கூல்!
உயர்ந்த உள்ளம்
Share: 
© Copyright 2020 Tamilonline