Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | Events Calendar | நூல் அறிமுகம் | கவிதைபந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
குறையொன்றுமில்லை
கல்யாண ஆல்பம்
ஓரு கடிதத்தின் விலை!
இரு கோடுகள்
- மீரா ராமநாதன்|ஜூன் 2012|
Share:
"அம்மா நான் இந்தியனா, இல்லை அமெரிக்கனா?" என்று கேட்டபடி மூச்சிரைக்க ஓடிவந்த தனது எட்டு வயது மகள் காவ்யாவை ஆச்சரியத்துடன் பார்த்தாள் வித்யா. கீழே விளையாடச் சென்ற மகளிடமிருந்து இந்த கனமான கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை. தன் மகளின் மனதில் இந்தக் குழப்பம் எற்படக்கூடாது என்று எண்ணியேதான் அவர்கள் அமெரிக்காவை விட்டு இந்தியாவில் செட்டில் ஆனார்கள். அங்கே அமெரிக்கக் குழந்தைகள் இதே கேள்வியைக் கேட்டு காவ்யாவை ஒதுக்கி விடுவார்களோ என்று எண்ணி பயந்தனர். ஆனால் இந்தியாவில் இந்தக் கேள்வியை அவள் எதிர்பார்க்கவில்லை. "ஏன் கண்ணா திடீரென இந்த கேள்வி கேக்கிற?" என்று வித்யா கேட்க, அதற்குக் காவ்யா "கார்த்திக் சொல்றான் நான் அமெரிக்காவில் பிறந்ததால் நான் அமெரிக்கனாம். அவங்களப் போல இந்தியன் இல்லையாம்." பக்கத்து வீட்டு கார்த்திக் நல்ல சுட்டிப் பையன் என்றாலும் கொஞ்சம் அதிகமாகப் பேசுவான். மகளின் தலையை வருடியபடி சூடான டீயை மறந்து நினைவுகளில் ஆழ்ந்தாள் வித்யா.

மூன்று வருடம் முன்பு ஒருநாள். வித்யாவால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. எப்பொழுதும் காவ்யா பற்றிய கவலைதான். அவள் தம்பி கௌதமோ பத்து மாதக் குழந்தை, அதனால் அவனது உணவைப் பற்றித்தான் கவலை. ஆனால் காவ்யாவோ ஆறு வயதுச் சிறுமி, நாளுக்கு நாள் புதுப்புதுப் பிரச்சனைகளுடன் வளரும் சிறுமி. இரண்டு குழந்தைகளுடன் கஷ்டப்படுவாள் என்று யோசித்து வித்யாவின் பெற்றோர்கள் அவர்களுடன் நான்கு மாதங்கள் தங்கி இருந்தனர். அவர்கள் சென்றவுடன் எல்லோரையும்விட வருத்தப்பட்டவள் காவ்யாதான். பாட்டி சொல்லிய புராணக் கதைகளை தினந்தோறும் வியப்புடன் கேட்பாள். பள்ளியிருந்து திரும்பியதும் தாத்தாவுடன் சைக்கிள் ஓட்டிக்கொண்டு பார்க்குக்குப் போய் வருவாள். வித்யாவும் கௌதமை கவனிக்க வேண்டியிருந்ததால், நேரம் கிடைத்தால் போதும் என்று அதை ஊக்குவித்தாள். அவர்கள் ஊருக்குத் திரும்பியபின் தினமும் ஃபோன் செய்து எப்பொழுது திரும்பி வருவீர்கள் என்று நச்சரித்தாள் காவ்யா. நாள் போகப்போக மாறிவிடுவாள் என்று அவர்களும் அதைப் பொருட்படுத்தவில்லை.

கௌதமின் முதலாவது பிறந்த நாளுக்குச் சென்ற காவ்யா இந்தியாவை விட்டுத் திரும்பி வரப் பெரிய போராட்டமே செய்தாள். கண்ணீரும் கம்பலையுமாகத்தான் அவளை விமானத்தில் எற்றினார்கள். வித்யாவுக்கு ஒரளவு இந்திய நண்பர்கள் இருந்தாலும் வார நாட்களில் அவர்களுக்கு நேரமே கிடைப்பதில்லை. வாரக் கடைசியில் மட்டும்தான் சந்தித்தனர். அதிலும் சமையல், வீட்டு வேலை இருந்தால் வெளியில் போவதில்லை. ஒருவேளை காவ்யா தனிமையில் மனம் கலங்குகிறாளோ என்று எண்ணி பல்வேறு வகுப்புகளில் அவளைச் சேர்த்தார்கள். அழுகை குறைந்தது, ஆனால் மௌனம் நீடித்தது. பின்பு வித்யாவும் அவளது கணவர் கிருஷ்ணனும் விவாதத்தில் இறங்கினர். வித்யாவுக்கோ சில நாட்களாகவே இந்தியா திரும்பிவிடலாம் என்ற எண்ணம் தோன்றத் தொடங்கிவிட்டது. பெற்றோர் இல்லாத இந்த இயந்திர வாழ்க்கை சலித்தது. ஏற்கனவே இந்தியாவில் ஃப்ளாட் வாங்கி இருந்தனர். அமெரிக்காவில் சம்பாதித்ததில் ஓரளவு நன்றாகவே செட்டில் ஆகலாம் என்று கணக்கிட்டாள். கிருஷ்ணனுக்கு வேலைவாய்ப்பும் முன்னேற்றமும் பிடித்திருந்தாலும் பெற்றோர்களை எண்ணிக் கலங்கினான். இப்பொழுது காவ்யாவின் குழப்பம் வேறு. எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று முடிவெடுத்தனர். இரண்டு வாழ்க்கையிலும் இருக்கும் வேறுபாடுகளை மனதில் கொண்டு, சிறிது கலக்கத்துடனும், சிறிது குதூகலத்துடனும் இந்தியாவில் தரையிறங்கினார்கள். இரண்டு வருடம் மின்னல்போல் மறைந்தது. வாழ்க்கை எதிர்பார்த்ததைவிட சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் நதிபோலச் சென்றது. இப்போது காவ்யாவின் கேள்வி பாறைபோல் இடறியது.
சட்டென்று பதில் சொல்லாமல் எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த அம்மாவைக் கிள்ளினாள் காவ்யா. மனதில் குழப்பத்துடன் இருக்கும் காவ்யாவை வாரி அணைத்துக் கொண்டு மடியில் அமர்த்தினாள். அமெரிக்க அதிபரையே எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று கேட்டுக் கலங்கடித்த உலகம் இது. எவ்வளவு நவீன சாதனங்களைத் தயாரித்தாலும், மனிதன் கடல் தாண்டி மலை தாண்டி விண்வெளிக்கே சென்றாலும் வேறுபடுத்தலையும் மாறுபடுத்தலையும் மறப்பதேயில்லை. விளையாட்டாய்க் கேட்ட கேள்வி விபரீதமாவதற்குள் அதைக் களைந்து எறிவதுபோல் காவ்யாவிடம் உறுதியாகக் கூறினாள், “உலகின் எந்த மூலையில் நீ பிறந்திருந்தாலும், நீ நூறு பெர்சன்ட் அக்மார்க் இந்தியன். அமெரிக்காவில் பிறந்து, இந்தியனாக வளர்ந்து, உலகத்தையே நேசிக்கத் தெரிந்த அழகுப் பொட்டலம்!"

குழப்பம் நீங்கிக் காவ்யாவின் முகம் மலர்ந்தது. பிறப்பில் இல்லாமல் வளர்ப்பில்தான் மனிதனின் தனித்துவமும் மகத்துவமும் இருக்கிறது என்று புரிந்துகொள்ள இது ஒரு அடிக்கல் என்று காவ்யாவுக்குப் புரிந்ததுபோல வித்யாவின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள். இருகோடுகளும் இணைந்தன.

மீரா ராமநாதன், டேன்பரி, கனெக்டிகட்
More

குறையொன்றுமில்லை
கல்யாண ஆல்பம்
ஓரு கடிதத்தின் விலை!
Share: 
© Copyright 2020 Tamilonline