Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar
Tamil Unicode / English Search
சிறுகதை
தேங்காய்
எது நியாயம்?
- விசாலா சுப்ரமணியன்|மே 2012|
Share:
"சாச்சி மாமி! எனக்கு பசிக்கிறது. ஆபீசுக்கு டயமாச்சு. சாதம் போடறேளா?" ஆபீஸ் கிளம்பும் ரமேஷின் குரல். "இதோ வந்துட்டேம்பா. கறியை இன்னும் ஒரு செகண்டிலே கீழே இறக்கிடுவேன். உடனே தட்டுப் போட்டுடறேன்" என்றாள் மாமி.

"கறியில்லாட்டா வேண்டாம் மாமி. மணி எட்டாயிடுத்து. என் மானேஜர் நாய் மாதிரி வள்ளுன்னு விழுவான். 'ஏண்டா! ஐந்து நிமிஷம் லேட்டா வந்தேன்னு' " என்று பரபரத்தான் ரமேஷ்.

"ஐயோ! பாவண்டா குழந்தே நீ! ஆபீஸ்ல போய் நாயா உழைக்கிறே. ஒரு காய்கறிகூட இல்லாத சாதம் போட எனக்கு மனசு வரலைடா" என்றாள் மாமி. அது அவளுக்கே உரிய குணம். யாருக்கும் ஏதேனும் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்னும் குணம். தன் அன்பை எல்லோரிடமும் முழுமையாக அபிஷேகித்துவிட வேண்டும் என்னும் அற்புதமான குணம். கண்ணன் சொன்ன கீதையின் சாரம் மாமி. "கடமையைச் செய். அன்பைப் பொழி. பலனை யாரிடமும் எதிர்பார்க்காதே" என்று கண்ணபிரான் கீதையில் சொல்லியிருக்கிறானல்லவா?

பார்வதி, ரமேஷின் அம்மா, கான்சர் வந்து படுத்ததிலிருந்து, அந்த வீட்டிற்குச் சமையற்காரியாக, மாதம் மூவாயிரம் சம்பளத்திற்கு வேலைசெய்ய வந்தவள்தான் மாமி. ஆனால் வெறும் சமையற்காரியாக அல்லாமல், பெற்ற தாய்போல, தாய்க்கும் மேலாக ரமேஷிடமும், கலாவிடமும் அன்பு காட்டுவதும், பரிந்து, பரிந்து வேலை செய்வதும், பார்வதிக்குக் குளிக்க உதவுவதிலிருந்து, சாதம் போட்டு, புடவை உடுத்திக்கொள்ள உதவுவதுவரை, எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதும் மாமிதான். ராமநாதன், பார்வதியின் கணவர், ஹால் சேரில் உட்கார்ந்தவாறே நினைத்துப் பார்த்தார். "வெறும் மூவாயிரம் ரூபாய்க்கா இவள் இந்த உழைப்பு உழைக்கிறாள்? இவள் உழைப்புக்கு எத்தனை லட்சம் கொடுத்தாலும் போதாதே. இத்தனை அன்பைக் குழந்தைகளிடம் பார்வதிகூடக் காட்டியிருப்பாளா?" என வியந்தார்.

என்னவோ! சாச்சியின் போறாத காலம் இந்தச் சமையல் வேலைக்கு வந்திருக்கிறாள். நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்து, ஒரு காலேஜ் ப்ரொஃபசருக்கு வாழ்க்கைப் பட்டவள்தான் 'சாச்சி' என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட விசாலாக்ஷி. ஆரம்பத்தில் இரண்டு குழந்தைகள் பிறக்கும்வரை வாழ்க்கை நன்றாகத்தான் போயிற்று. குழந்தைகள் இருவரும் அப்பா, அம்மா என்று பிராணனையே விட்டார்கள், பட்டாபியின் மீதும், சாச்சியின் மீதும்.

முப்பத்தெட்டு வயதுக்குமேல் "எனக்கு இன்னொரு பிஎச்டி பண்ண அமெரிக்காவில அட்மிஷன் கிடைச்சிருக்கு. எங்க கிட்டாசாமி மாமாவின் பெண் சாந்தியிடமிருந்து போன் வந்தது. பேப்பர்ஸ் எல்லாம் இன்னும் ஒரு வாரத்துக்குள்ள வந்துடும். இன்னம் ஒரு மாசத்துல அமெரிக்கா போகப் போகிறேன்" என்று ஒருநாள் சொன்னான் பட்டாபி. அப்போது சுரேஷ் ஒன்பதாவது வகுப்பு, ரமா ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள் சென்னையில்.

"குழந்தைகள் இருவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இரண்டு வருஷத்தில் பிஎச்டியை முடித்து விடுவேன். அங்கேயே ப்ரொஃபஸர் வேலை கிடைத்து விடும். உன்னையும், குழந்தைகளையும் அழைத்துக் கொள்வேன். அதுவரை சாந்தி தனியாகத்தானே ஒரு அபார்ட்மெண்ட்டில் இருக்கிறாள். அவளுடன் தங்கிக் கொள்வேன்" என்றான்.

எல்லாம் சரியாகத்தான் பட்டது சாச்சிக்கு. கணவன் ஏற்கனவே டாக்டரேட் வாங்கியவன். இன்னொரு பிஎச்டி பண்ணி அமெரிக்காவில் புகழோடும், பேரோடும் நிறையச் சம்பாதிக்கிறான் என்றால் எவ்வளவு பெருமை. தானும், குழந்தைகளும் செளக்கியமாகவும், சந்தோஷமாகவும் வாழலாம். கற்பனையில் மிதந்தாள் சாச்சி. கிட்டாசாமி மாமாவின் பெண் சாந்தி பிஎச்டி பண்ணிவிட்டு ஜார்ஜியா டெக்கில் வேலையாக இருக்கிறாள். கல்யாணமே வேண்டாம் என்று முப்பத்தைந்து வயதுவரை தள்ளிவிட்டாள். கிட்டாசாமி மாமாவின் காலமும் முடிந்துவிட்டது. திடீரென்று ஒரு நாள் மாரை வலிக்கிறது என்று சொன்னவர், பெண் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதற்குள் கண்ணை மூடிவிட்டார். சாந்தி தனியாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறாள்.

பட்டாபிக்கு அவளுடன் தங்குவதில் எந்த சிரமமும் இல்லை. ஆயிற்று, விளையாட்டுப் போல் ஒரு வருடம் ஓடிவிட்டது பட்டாபி அமெரிக்கா போய். பட்டாபியிடமிருந்து ஒழுங்காகப் பணம் வர ஆரம்பித்தது. பட்டாபி யுனிவெர்சிடி லைப்ரரியில் பார்ட் டைம் வேலை செய்கிறான் என்று போனில் சொன்னான். சாச்சிக்கு எந்தவிதக் கஷ்டமும் இல்லாமல் குடும்பம் நடந்தது. சுரேஷ் 12ம் கிளாஸில் ஸ்டேட் ஃபர்ஸ்ட்டாக வந்தான். அப்பாவைப் போலவே பிள்ளையும் கெட்டிக்காரன். மேலே B.S. படிப்பதற்கு சுரேஷை அமெரிக்கா வரச் சொன்னான் பட்டாபி. அதற்குள் பட்டாபிக்கு ஜார்ஜியா டெக்கிலேயே வேலை கிடைத்துவிட்டது. சாச்சியும், குழந்தைகளும் அமெரிக்கா வந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. சுரேஷ் M.S. மைக்ரோபயாலஜி முடித்துவிட்டு நல்ல வேலையில் அமர்ந்து விட்டான். ரமாவும் B.S. முடித்துவிட்டு M.S. மைக்ரோபயாலஜி, அண்ணாவைப் போல.

வாழ்க்கையே வெறுத்தது சாச்சிக்கு. குழந்தைகள் இருவரும் எங்கேயோ மூலைக்கு ஒருவராக அபார்ட்மெண்டில் இருந்துகொண்டு படிப்பதும், வேலை செய்வதும். என்ன வாழ்க்கை இது! பணம் ஒன்றுதான் வாழ்க்கையா? போதாத குறைக்கு பட்டாபி வேறு சாந்தியுடன் பழகுவது கொஞ்சம்கூட நன்றாக இல்லை. காலை ஏழு மணி அடித்தால் சாந்தி 'ஹாய் பாட்ஸ்' என்று செல்ஃபோனில் கூப்பிடுவதும், உடனே பட்டாபி 'ஹாய் சாந்து' என்று வழிவதும், வேலையிலிருந்து வந்தவுடன் "சீக்கிரம் சாதம் போடு. லைப்ரரிக்கு போகணும்" என்று ஏதோ சொல்லிக்கொண்டு ராத்திரி எட்டு மணிக்கு மேல் சாந்தியுடன் போவதும், வருவதும் ஒன்றும் சரியாகப் படவில்லை சாச்சிக்கு. இதெல்லாம் போதாதென்று போன தாங்க்ஸ் கிவிங் வீக் எண்டுக்கு பிட்ஸ்பெர்க் வெங்கடாசலபதி கோவிலுக்குச் சென்றபோது, பட்டாபியின் நண்பன் வெங்கட் குடும்பத்துடன் அறிமுகமானாள் சாச்சி. வெங்கட்டின் மனைவி மல்லிகா சாச்சியிடம் "ஓ! நீங்கள்தான் பாட்ஸின் மனைவியா? நான் சாந்தி என்றல்லவா நினைத்தேன். அவளுடன்தானே பாட்ஸ் எப்போதும் இருப்பார்" என்றாள்.

எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தாற் போலாயிற்று சாச்சிக்கு. நேரே வீட்டுக்கு வந்ததும் பட்டாபியிடம் இதுபற்றி உடைத்துக் கேட்டுவிட நினைத்தாள். கேட்டுமாயிற்று. வந்த பதிலில் உறைந்து போனாள் சாச்சி. "ஆமாம்! என்ன செய்யச் சொல்லுகிறாய்? எனக்கு அவள் எவ்வளவோ செய்திருக்கிறாள், பண உதவியிலிருந்து எல்லாமே. நிறையப் படித்தவள். ரொம்ப கெட்டிக்காரி. என்மேல் உயிரையே வைத்திருக்கிறாள். உன்னை போல் எட்டு க்ளாஸ் படித்துவிட்டு ஒன்றும் தெரியாத ஜடம் இல்லை. உனக்கு சமையலைத் தவிர வேறென்ன தெரியும்? நாலு வார்த்தை சரளமாக ஆங்கிலத்தில் பேச வருமா? நான் இப்படித்தான் இருப்பேன். இஷ்டம் இருந்தால் இங்கே இரு. இல்லாவிட்டால் இந்தியாவைப் பார்த்துப் போய்ச் சேர். இந்தியாவில் வீடோ மாளிகை போல் இருக்கிறது. மாதா மாதம் பணம் அனுப்புகிறேன். கோவில் கோவிலாகப் போ. நன்றாக சமைத்துச் சாப்பிடு" என்றான் கோபமாக. அவனுக்கு அவ்வளவு தைரியம்.

சாச்சிக்கு உதவி செய்ய இந்தியாவில் யாரும் கிடையாது. மேலும் அவள் கேஸ் போட்டு கோர்ட் அது இது என்று அலைவதற்கு தகுந்த ஆதாரமும் வேண்டு்ம். கோர்ட்டில் அவர்கள் கேட்கும் கேள்வியிலேயே இவள் உயிரை விட்டுவிடுவாள். 'நடு வீதியில் நின்று துகிலுரிப்பதைப்' போன்ற அவர்கள் வார்த்தைகளுக்கு அவளால் சரியான பதில்தான் சொல்ல முடியுமா? அல்லது அவ்வளவு சாமர்த்தியம்தான் அவளுக்கு உண்டா? குழந்தைகள் உதவியை நாடலாம் என்றாலோ அவர்கள் அப்பாவினால் முன்னுக்கு வந்தவர்கள். அமெரிக்க முறைப்படி தங்கள் காரியத்தைப் பார்ப்பதற்கே தங்களை பழக்கப் படுத்திக்கொண்டு விட்டவர்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. "கொண்டவன் தூற்றினால் கூரையும் தூற்றும்".
இதற்கு நடுவில் சுரேஷ்தான் மனிஷா என்ற குஜராத்திப் பெண்ணுடன் பழகுவதாகவும், அவளைத்தான் மணந்து கொள்ளப் போவதாகவும் சொல்லி விட்டான். பட்டாபியோ, "கோ அஹெட், மை ஸன். வீ வில் அடெண்ட் யுவர் வெடிங்" என்று சொல்லிவிட்டான். 'நம்ம முறைப்படி நல்ல பெண்ணாக பார்த்துப் பண்ண வேண்டாமா?' என்று புலம்பிய சாச்சியிடம், 'சுத்த நாட்டுபுறமாக இருக்கிறாயே. இதெல்லாம் இங்கே சகஜம். அவரவர் துணையை அவரவர்களே தேடிக் கொள்வார்கள்' என்று அவள் புலம்பலுக்கு முற்றுப்புள்ளியையும் வைத்து விட்டான். கல்யாணமும் நடந்தேறி விட்டது. மனிஷாவின் அப்பா நியூ யார்க்கில் பெரிய பிஸினஸ்மேன். தன் அமெரிக்க மனைவி ஆன்ட்ரியாவுடன் வந்து கல்யாணத்தை ஆடம்பரமாக ஹோட்டலில் நடத்திவிட்டுப் போய்விட்டார். பிள்ளையின் உறவும் 'மதர்ஸ் டே' அன்று வாழ்த்து சொல்வது, எப்பொழுதாவது ஒருநாள் வந்து பார்ப்பது என்பதுடன் முடிந்துவிட்டது.

பெண்ணோ "இதோ பார் அம்மா, என் வாழ்க்கையை, துணையை நானே பார்த்துக்கொள்வேன். நானும் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறேன், நிறையச் சம்பாதிக்கிறேன். நான் உன்னைப்போல தன் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ளத் தெரியாத அசடு இல்லை. உனக்குத்தான் உன் கணவனை உன்னுடன் தக்க வைத்துக்கொள்ளத் தெரியவில்லை. நன்றாகச் சமைத்துப் போட்டால் மட்டும் போதுமா? சாமர்த்தியமாக நடந்து கொள்ளவும் தெரிய வேண்டும்," என்று கேலி செய்து பேசினாள். "இங்கு வாழப் பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இந்தியாவுக்குப் போ. நான் டைம் கிடைக்கும்போது வந்து பார்க்கிறேன். ஏதாவது பணம் வேண்டுமானாலும் அவ்வப்போது அனுப்புகிறேன்" என்று பிச்சை போடுவதுபோல் பேசினாள்.

சீ! பணம் ஒன்றுதான் வாழ்க்கையா? பந்த பாசத்தையெல்லாம் இந்த மண் கரைத்துவிட்டதா? என்ன அமெரிக்க மண்ணோ! என அழுதாள் சாச்சி. ஆயிற்று. எல்லோரும் அவரவர் வாழ்க்கையை பார்த்துக்கொண்டு விட்டார்கள். அவள் யாருக்கும் தேவையில்லை. வெறுத்துப்போய் இந்தியா திரும்பினாள் சாச்சி. கொஞ்ச மாதங்களில் பட்டாபியிடமிருந்து பணம் வருவது நின்றுவிட்டது. பெண் ஒரு அமெரிக்கனைக் கல்யாணம் செய்துகொண்டு விட்டதாகவும், முடிந்தால் அவனுடன் அம்மாவைப் பார்ப்பதற்கு வருவதாகவும் போன் செய்தாள்.

அப்போதுதான் பேப்பரில் அந்த விளம்பரத்தைப் பார்த்தாள். பங்களூரில் ஒரு வீட்டில் முழுநேரச் சமையல் செய்வதற்கும், வீட்டைப் பார்த்துக் கொள்வதற்கும் ஒரு நல்ல நடுத்தர வயதுப் பெண்மணி தேவையென்றும், வீட்டின் தலைவி கான்சர் வந்து படுக்கையில் இருப்பதாகவும், மூவாயிரம் ரூபாய் மாதச் சம்பளம் கொடுத்து, சாப்பாடு, இருக்க இடம் எல்லாம் தருவதாகவும் அறிவித்திருந்தார்கள். சரி, அவர்களை நேரில் பார்த்துப் பேசிவிட்டு, நல்ல மனிதர்களாகத் தெரிந்தால், வேலை செய்து காலத்தைப் போக்கலாம் என்று வந்த சாச்சிக்கு இடமும், மனிதர்களும் பிடித்துப் போயிற்று. மெட்ராஸ் திரும்பிப்போய் உடமைகளை எடுத்துவரச் சென்ற சாச்சிக்கு ஒரு திடுக்கிடும் தகவல்.மெட்ராஸ் வீட்டை பட்டாபி சாந்தியின் பெயருக்கு மாற்றி எழுதிவிட்டதாக லெட்டர் வந்திருந்தது. இருந்த ஒரு வீடும் போய்விட்டது. "நல்லவேளை! இந்த ஒரு வேலையாவது கிடைத்ததே" என்று மனதைத் தேற்றிக்கொண்டாள். பகவான் நல்லவர்களைத்தான் ரொம்பச் சோதிப்பான் போலிருக்கிறது.

சாச்சி பங்களூர் வந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டன. பாகீரதியின் பிள்ளை ரமேஷும், பெண் கலாவும் சாச்சியிடம் மிக அன்பாக இருந்தார்கள். "மாமி சமையல் என்றாலே தனி மணம்தான்" என்றான் ரமேஷ். கலாவோ "மாமி! எங்களுக்கு அம்மா படுத்திருக்கிறாளே என்ற குறையைத் தவிர வேறெந்தக் குறையும் இல்லை" என்றாள்

ராமநாதனுக்கோ வேளாவேளைக்கு வாய்க்கு ருசியாகச் சாப்பாடு, டிபன் என்று காலம் கழிந்தது. அந்த சமயத்தில்தான் ஒரு நாள் எய்ட்த் க்ராஸ் மார்கெட்டுக்கு காய்கறி வாங்கச்சென்ற மாமி ஒரு புது மனிதருடன் திரும்பி வந்தாள். கலா "யார் மாமி அது?" என்று கேட்டதற்கு, யாரோ தனக்கு தூரத்து உறவுக்காரர் என்றும், ஆர்மியிலிருந்து ரிடையர் ஆனவர் என்றும் சொன்னாள். அதன் பிறகு மாமி அடிக்கடி மார்கெட்டிலிருந்து திரும்பி வரும்போது அந்த மனிதருடன் வருவதும், சற்று நேரம் தெருவிலேயே நின்று பேசிக் கொண்டிருப்பதையும் கவனித்தாள் கலா. இதைப் பற்றி நேரடியாகவே மாமியிடம் கேட்டுவிட்டாள். மாமியோ, "பாவம் கலா, அவர். மனைவி இறந்து பத்து வருடம் ஆகிவிட்டது. குழந்தைகள் யாரும் இல்லை. ஒரு கால் ஆக்ஸிடெண்டில் போய்விட்டதால் ஆர்மியிலிருந்து ரிடையர் ஆகிவிட்டார். மனிதருக்கு ஐம்பத்தாறு வயதாகிறது. ஒரு கையும் பார்ஷியல் பராலிஸிஸ் வந்து விளங்கவில்லை. கஷ்டப்படுகிறார். நிறையப் பணம் இருந்து என்ன பிரயோஜனம்? என் அப்பாவின் தூரத்து உறவு. என்னை "ஏன் இந்தியா வந்தாய்?" என்று கேட்டார். என் பாழாய்ப் போன கதையைச் சொன்னேன்" என்றாள்.

அதன்பிறகு அடிக்கடி மாமியை அந்த மனிதருடன் பார்ப்பது சகஜமாகிவிட்டிருந்தது கலாவிற்கு. ஓரிரு மாதங்கள் கழிந்திருக்கும். ஒருநாள் மார்கெட்டுக்கு சென்ற மாமி திரும்பவேயில்லை. எல்லோரும் திடுக்கிட்டுப் போய்த் தேடிய போது மாமி ரூமில் ஒரு லெட்டர் கிடைத்தது. அதில் "அன்புடைய ரமேஷ், கலாவிற்கு மாமியின் ஆசீர்வாதங்கள். நான் மிஸ்டர் சுந்தரத்திற்கு துணையாக இருப்பது என்று முடிவு செய்துவிட்டேன். அவருக்கு அன்பு காட்டி ஆதரிக்க யாரும் இல்லை. ஒரு கால் இல்லாமல், ஒரு கையும் விளங்காமல் உள்ளவருக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்துகொண்டு, சமைத்துப் போட்டு, உங்கள் பாஷையில் சொல்வதென்றால் 'கம்பேனியன்ஷிப்' கொடுக்கப் போகிறேன். அவரும் என் வயது காலத்தில் என்னைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில்தான் இந்த முடிவெடுத்தேன் இதோ, இந்த பாலஸ் ஆர்சர்டில்தான் இருக்கிறேன். முடிந்தால் என் வீட்டிற்கு வாருங்கள். இவ்வளவு நாள் எனக்கு ஆதரவு தந்ததற்கு நன்றி" என்று முடித்திருந்தாள்.

ஒரு பக்கம் வருத்தம், ஒரு பக்கம் கோபம் ரமேஷுக்கும், கலாவிற்கும். "சீ! மாமியை என்னவோ என்று நினைத்திருந்தேன். எப்போது பார்த்தாலும் 'கிருஷ்ணா', 'ராமா' என்று சொல்லிக் கொண்டிருந்தவள் ஐம்பது வயதுக்குமேல் இப்படி ஒருவருடன் ஓடி விட்டாளே" என்று அங்கலாய்த்தான். "என்ன அநியாயம் இது! ஐம்பது வயதில் மாமிக்கு இப்படி ஒரு ஆசையா?" என்று கலா வெறுத்துப் பேசினாள். பாகீரதியோ "என்னவோடி, இனி அவள் பேச்சையே பேசாதீர்கள். கூறுகெட்டவள். இந்த வயதிலும் அவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கை கேட்கிறதா?" என்று கோபப்பட்டாள். எல்லோருக்குமே தங்களுக்கு இந்தமாதிரி வேலை செய்வதற்கு யாருமில்லையே என்ற அடிமன தாபம்தான்.

அதுவரை பேசாமலிருந்த ராமநாதன் சொன்னார், "வாயை மூடிக்கோங்கோ எல்லோரும். ஏன்? கட்டின புருஷன் எவளோ ஒருத்தியோட தன் வாழ்க்கையை இணைச்சுண்டானே! அப்ப நியாயம் பேசினேளா எல்லாரும்? குழந்தைகள் ரெண்டு பேரும் தங்கள் வழியைப் பார்த்துக்கொண்டு, அம்மா! நீதான் அசடு, உனக்கு வாழத் தெரியலைன்னு இளக்காரம் செய்து, தப்பு செய்யற அப்பாவைத் தட்டிக் கேட்காமல் இருப்பது தெரிந்தபோது நியாயம் பேசினேளா எல்லோரும்? இப்ப பாவம்! வயசான, ஆதரவற்ற ஒருவன், ஆதரவு காட்ட யாருமி்ல்லாத சாச்சிக்கு ஆதரவு காட்டி, வாழ்க்கை தர அழைத்துப் போனால் அது அநியாயமா இருக்கோ? என்னைப் பொறுத்தவரை சாச்சி செய்தது நியாயம்தான்," என்று சொல்லி முடித்தார்.

வாயை மூடி மௌனியானார்கள் எல்லோரும்.

விசாலா சுப்ரமணியன்,
கூபர்டினோ, கலிஃபோர்னியா
More

தேங்காய்
Share: 




© Copyright 2020 Tamilonline