Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சமயம் | ஜோக்ஸ் | Events Calendar | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா
Tamil Unicode / English Search
நேர்காணல்
இசைக்கவி ரமணன்
அருண் அழகப்பன்
- காந்தி சுந்தர், வெங்கட்ராமன் சி.கே., மதுரபாரதி|பிப்ரவரி 2012|
Share:
அருண் அழகப்பன் ஒரு மாறுபட்ட கல்வியாளர். அமெரிக்காவில் பல இந்து ஆலயங்கள் உருவாகக் காரணமாக இருந்த அழகப்பா அழகப்பன் அவர்களின் மகன். கல்லூரியில் சேருவதற்கு முக்கியமானவையாக அமையும் தகுதரத் தேர்வுகளில் (Standardized Testing) மாணவர்களுக்குப் பயிற்சி தரும் மையங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். Advantage Testing என்னும் இந்த நிறுவனம் (www.advantagetesting.com) சமீபத்தில் தனது 25ம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. அமெரிக்காவில் மட்டும் இதற்கு 16 கிளைகள் உள்ளன. இது தவிர ஃபிரான்ஸின் பாரிஸ் மாநகரில் ஒரு கிளை உள்ளது. SAT, ACT, LSAT, SSATபோன்ற நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பது, கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் போன்ற பாடங்களில் டியூஷன் அளிப்பது, போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்வது என்று பலதரப்பட்ட பயிற்சிகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது. தென்றலுக்காக திரு. அருண் அவர்களோடு உரையாடியதிலிருந்து...

கே: ஹார்வார்டு, பிரின்ஸ்டன் என்று ஐவி லீக் (Ivy League) கல்லூரிகளில் படித்த நீங்கள 'அட்வான்டேஜ் டெஸ்டிங்' (www.advantagetesting.com) என்ற தனிநபர் கற்பிக்கும் (1 on 1 Coaching) நிறுவனத்தைத் தொடங்கியது எப்படி?
ப: அப்போது நான் யுனைடெட் நேஷன்ஸ் பன்னாட்டுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். எனக்குக் கணிதத்தில் மிகுந்த ஆர்வம். கணிதத் துறைத் தலைவர் ஒரு நாள் என்னிடம் ஒரு கிரேக்கப் பெண்ணுக்குக் கணிதம் சொல்லிக் கொடுக்க முடியுமா என்று கேட்டார். முன் அனுபவம் இல்லாவிட்டாலும் நான் சொல்லிக் கொடுக்க ஒப்புக் கொண்டேன். அந்தப் பெண்ணுக்குக் கணிதம் என்றால் கசப்பு. "எனக்குக் கணக்கு வராது" என்று தீர்மானமாகச் சொன்னார். நான் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினேன். முதல் நாள் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, அவர் முகத்தில் மகிழ்ச்சியை என்னால் பார்க்க முடிந்தது. அவருக்குக் கணிதத்தில் ஏற்பட்ட ஆர்வம் எனக்கு ஒரு பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. பதினேழு வயதுச் சிறுவனான எனக்குக் கற்பிப்பது இயல்பான, மிக விருப்பமான விஷயம் என்பது புரிந்தது. அன்று நிலத்தடி கார் பார்க்கிங் பகுதிக்குச் சென்று சந்தோஷத்தில் உரத்துக் கூவினேன்.

இன்று எனக்கு 52 வயதாகிறது. நான் சில காலம் வழக்கறிஞராகப் பணியாற்றியதுண்டு. ஆனால், டியூட்டரிங்கில் கிடைக்கும் இன்பத்தை வேறெதிலும் நான் தொழில் ரீதியாகப் பெறவில்லை. உணர்வோடு ஒன்றிய செயலாக அதை உணர்கிறேன்.

கே: கல்லூரி நாட்களில்?
ப: பிரின்ஸ்டனில் நான் 'ரெசிடென்ட் அட்வைசர்'. அப்போதும் மற்ற மாணவர்களோடு சேர்ந்து கேளிக்கையாகப் பொழுது போக்கவில்லை. வெவ்வேறு பாடங்களில் அவர்களைக் கோச் செய்தேன். இலவசமாகத்தான், அதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி கிடைத்தது.

பிரின்ஸ்டனில் பட்டம் வாங்கியபின் ஒரு வருடம் நான் நியூ யார்க்கின் ஐந்து நகராட்சிப் பிரிவுகளிலும் (Burroughs) பலருக்குக் கோச்சிங் செய்தேன். என்னுடைய ஓட்டை டாட்ஜ் ஆஸ்பென் காரில் நாள்முழுவதும் போய் சொல்லிக் கொடுத்ததில் எனக்குப் புரிந்த விஷயம் என்னவென்றால், இதுதான் எனக்கும் மிகமிகப் பிடித்த தொழில் என்பதுதான். பிறகு ஹார்வார்டில் சட்டம் படிக்கப் போனபோதும் கூட அதன் கணிதத் துறையில் உதவியாளனாக (Teaching Fellow) இருந்தேன். அந்தக் கல்லூரியின் டீன் (Dean) எனக்கு மிகச் சிறப்பாகக் கற்பித்ததற்காக ஒரு விருது கொடுத்தார். அப்போதுதான் பாடம் சொல்லிக் கொடுப்பதையே தொழிலாக நான் கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. நான் மிக உயர்வாக நினைக்கும் ஒரு கல்லூரி எனக்கு அந்த கௌரவத்தைத் தந்த அந்தக் கணம் எனக்கு மிக முக்கியமானது.

கே: சட்டத் துறையில் என்ன செய்தீர்கள்?
ப: ஹார்வார்டில் சட்டம் படித்த பின்னால் ஒரு வருடத்துக்குச் சற்று அதிகமாக ஒரு நீதிபதியிடமும், சில மாதங்கள் ஒரு வால் ஸ்ட்ரீட் சட்ட நிறுவனத்திலும் வேலை செய்தேன். அப்போதுகூட வார இறுதி நாட்களில் போய் ஜாலியாகப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். இப்படி ரசிக்க ஒரு தொழில் சம்பாதிக்க ஒரு தொழில் என்று செய்வது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாகப் பட்டது.

இப்போது உங்கள் முதல் கேள்விக்கு விடை சொல்கிறேன். ஃப்ரெடரிக் நீட்ஷே (Friedrich Nietzsche)கூறினார், "ஒரு குழந்தை விளையாடும்போது காட்டும் தீவிரத்தை மீண்டும் அடைவதுதான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை லட்சியம்" என்று. நான் கற்பிப்பதில் அந்த ஜாலியான தீவிரத்தை உணர்கிறேன். அதனால்தான் பிரின்ஸ்டனிலும் ஹார்வார்டிலும் படித்துவிட்டு அட்வான்டேஜ் டெஸ்டிங்கைத் தொடங்கினேன்.

கே: இத்தனை பெரிய வெற்றியை உங்கள் நிறுவனம் பெற நீங்கள் வகுத்த திட்டம் என்ன?
ப: எந்த ப்ளூபிரிண்டும் கிடையாது. மாணவர்கள் பெருமளவில் தேடி வந்தார்கள், மேலும் அதிக ட்யூட்டர்களை வேலைக்கு எடுத்துக் கொண்டோம். ஆக, இத்தனை நகரங்களில் மையங்கள் திறக்க வேண்டும் என்றெல்லாம் திட்டம்போட்டு எதுவும் செய்யவில்லை. எங்கள் ஆசிரியர்கள் நன்றாகக் கற்றுக் கொடுக்கும் விஷயம் மற்றவர்கள் காதுகளை எட்டி, அதனால் அங்கங்கே நாங்கள் வளர்ச்சி அடைந்தோம். மிகச் சிறந்தவர்களை மட்டுமே நாங்கள் பணிக்குத் தேர்ந்தெடுக்கிறோம்.

கடின உழைப்புக்கும் மிகத் தீவிர ஆய்வுக்கும் நாங்கள் சளைப்பதில்லை. எந்தப் பரிட்சைகளுக்கு நாங்கள் மாணவர்களைத் தயார் செய்கிறோமோ, அவற்றை நுணுகி ஆராய்கிறோம். அகந்தை இல்லாத, அதே நேரத்தில் தமது தேர்வில் முழுதாக 800 மதிப்பெண் வாங்கியவர்களையே (நூறு சதம்) நாங்கள் பணியில் அமர்த்துகிறோம். இன்னொரு வகையில் சொன்னால், வேறெதுவும் செய்யத் தகுதியில்லாமல் வருபவர்களை அல்ல, வேறு பணிக்குச் செல்ல முழுத் தகுதி இருந்தபோதும், கற்பிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் வருபவர்களே எங்களுக்கு வேண்டும்.

கே: இந்தத் தொழிலை நீங்கள் எப்படி அணுகுகிறீர்கள்?
ப: நம்மிடம் படிக்க வருபவர்கள் நம்மீது ஒரு புனிதமான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து நடக்கிறேன். அவர்களது உயர்வுக்கு நாம் உதவ வேண்டும். நம்மை அவர்கள் அணுகத் தக்க எளிமையோடு, கனிவாக, புரிதலோடு இருக்க வேண்டும். அதே நேரத்தில் அவர்களுடைய அறிவுக்குச் சவால் விட வேண்டும். ஏதோ கைக்குழந்தைகளைப் போலக் கொஞ்சக் கூடாது. இளம்பருவத்தினராக மதித்து, அவர்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.

கே: உங்கள் நிறுவனம் இப்படி வளரும் என்று நீங்கள் நினைத்ததுண்டா?
ப: நிச்சயமாக இல்லை. மிக அமைதியாகத்தான் நாங்கள் செயல்பட்டோம். ஆனால் மன்ஹாட்டன் எங்களை விரைந்து வரவேற்றது. "மற்ற ட்யூட்டரிங் அமைப்புகளை விட இவர்கள் மிக நன்றாகச் செய்கிறார்கள்" என்ற செய்தி வேகமாகப் பரவியது. எங்களால் சமாளிக்க முடியாத எண்ணிக்கையில் மாணவர்கள் வரத் தொடங்கினார்கள். நாங்கள் பல ஆண்டுகள் வரை மாணவர்களை வேண்டாம் என்று திருப்பி அனுப்பியதுண்டு. இந்த விஷயத்தைச் சில பத்திரிகைகள் மோப்பம் பிடித்துவிட்டன (சிரிக்கிறார்).

"சில ஹார்வார்டு சட்டப் பள்ளிப் பட்டதாரிகள் சேர்ந்து ஒரு வித்தியாசமான நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். அது என்னவென்றால் ஹைஸ்கூல் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவது!" என்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூ யார்க் டைம்ஸ் போன்ற சில பத்திரிகைகள் எங்களைப்பற்றிக் கட்டுரைகள் எழுதின. இது தேசத்தின் பார்வையை எங்கள்மீது திருப்பியது. மேலும் நிறைய மாணவர்கள் வரத் தொடங்கினார்கள்.

இதில் இன்னொரு விளைவு என்னவென்றால், உண்மையாகவே கற்பிக்கும் ஆர்வமும், ஞானமும் கொண்டவர்கள், எங்களுடன் சேர்ந்தால் ஆறு இலக்கச் சம்பளம் பெற முடியும் என்பதை இந்தக் கட்டுரைகள் மூலம் அறிந்து கொண்டனர். இன்றைக்கு எங்கள் நிறுவனத்தில் 250 ட்யூட்டர்கள் இருக்கின்றனர். 175 பேர் முழுநேரப் பணியாளர்கள். அவர்களில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். கற்பிக்கும் ஒரே ஆவலில் எங்களோடு இருக்கிறார்கள்.

கே: ஆறிலக்கச் சம்பளம் என்பதை மீடியா பேசியதைப் பற்றிக் கூறினீர்கள். அதைச் சற்று விளக்கலாமா?
ப: வால் ஸ்ட்ரீட் சட்ட நிறுவனத்தின் பங்குதாரர்கள் (Wall Street Law Firm Partners) தமது நேரத்துக்கு எவ்வளவு கேட்பார்களோ, அந்தச் சம்பள விகிதத்தை நாங்கள் கேட்கிறோம் என்பதை இந்தப் பத்திரிகைகள் வியப்போடு பேசின. அப்படி நாங்கள் கட்டணம் வாங்கியதால்தான் எங்களால் நல்ல சம்பளம் தர முடிந்தது.

அதே நேரத்தில், ஆரம்ப காலத்திலிருந்தே குறைந்தபட்சம் 20 சதவிகித மாணவர்களுக்கு இலவசமாகச் சொல்லிக் கொடுப்பதென்று வைத்திருக்கிறோம். 25 ஆண்டுகளாக அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வளர்ந்து வந்திருக்கிறது. என் தனிப்பட்ட நேரத்திலும் 20 சதவிகிதத்தை பணம் கட்டமுடியாத நிலையிலுள்ள மாணவர்களுக்கென்று ஒதுக்குகிறேன்.

இதுவே இப்போது 'ஏடி அறக்கட்டளை' (AT Foundation) என்னும் அமைப்பாக மாறியுள்ளது. "இத்தனை மாணவர்களுக்கு தர்மத்துக்குச் சொல்லிக் கொடுக்கிறார்களே! இவர்கள் எப்படிப் பிழைக்கிறார்கள்" என்று எழுதிய பத்திரிகைகளும் உண்டு. (சிரிக்கிறார்).
கே: உங்கள் தனிப்பட்ட நேரத்தில் 20 சதவிகிதம் இலவசம் என்று கூறினீர்கள். இன்னும் விரிவாகச் சொல்லுங்களேன்.
ப: நான் சொல்லித் தரும் நேரம் முன்கூட்டியே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதாவது, இலவசமோ, முழுக் கட்டணமோ - எதுவானாலும் ஒரு குடும்பத்தினர் அழைத்து நிர்ணயித்துக் கொள்கிறார்கள். நிதி உதவித் திட்டம் கூட உண்டு. சில நடுத்தர வகுப்பு மாணவர்களுக்கு, போதிய ஊக்கம் இருக்கும் பட்சத்தில், அவர்களின் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்து, தேவைக்கேற்ப நிதி உதவி தரப்படுகிறது.

நான் சொல்லிக் கொடுக்க வேண்டுமென்றால் 2 வருட காலம் முன்னரே பதிவு செய்ய வேண்டும். அதுதான் வெய்ட்டிங் டைம். "8ம் வகுப்பில் படிப்பவர் என் வீட்டில் இருக்கிறார், அவர் 10ம் வகுப்புக்கு வரும்போது உங்களால் சொல்லித் தர முடியுமா?" என்று பெற்றோர் என்னிடம் கேட்கும்போது, இருவருக்கும் நேரம் மற்றும் கட்டணம் ஒத்து வந்தால், நான் ஒப்புக்கொள்வேன்.

கே: நீங்கள் வசூலிக்கும் கட்டணத்தைப் பற்றிய சில விமரிசனங்களை நான் படித்தேன்....
ப: ஒரு தொழில்முறை ட்யூட்டரை ஒரு மிக நல்ல வழக்கறிஞருக்கு இணையாக நான் கருதுகிறேன். கட்டணம் எவ்வளவானாலும் ஒரு பொருட்டல்ல என்று நினைக்கும் இருநூறு குடும்பங்கள் மன்ஹாட்டனில் இருக்கும். நான் அதைத் தவறாகப் பயன்படுத்துவதில்லை. ஆனால் ஒரு சிறந்த சட்ட நிறுவனத்தின் பங்குதாரர் என்ன கட்டணம் வசூலிப்பாரோ அந்த அளவே நானும் என்னோடு இருக்கும் சிலரும் பெறுகிறோம். ஆனால் தொடக்க நிலையில் இருக்கும் ஒருவர் அதில் நாலில் ஒரு பங்குதான் பெறுவார். மதிப்பீடுகள், அனுபவம், மாணவர் பெறும் மதிப்பெண் அதிகரித்தல் என்று பலவற்றை ஆதாரமாகக் கொண்டே ஒரு ட்யூட்டரின் கட்டண விகிதம் காலப்போக்கில் அதிகரிக்கிறது.

சில சமயம் உயர்ந்த கட்டணத்தோடு என்னைத் தொடர்புபடுத்திப் பேசுவது எனக்கு நெருடலாக இருந்தது. ஆனால், மேலான அறிவுத்திறன் கொண்டவர்கள் தம் குடும்பத்தைப் பராமரிப்பதற்காகக் கல்வித் துறையை விட்டு வேறு துறைக்குப் போகாமல் தக்க வைப்பது முக்கியம் என்று எண்ணுகிறேன். ஜோஸஃப், ரவி பொப்பண்ணா (பார்க்க: பெட்டிச் செய்திகள்) போன்ற அபாரத் திறமை கொண்டவர்களை எங்கள் முயற்சியில் பங்கேற்கச் செய்ய வேண்டுமென்றால் அதற்கான சம்பளம் கொடுத்தாக வேண்டும். அவர்கள் பேராசை கொண்டவர்கள் அல்ல. ஆனால் அவர்களும் நல்லபடியாகக் குடும்பத்தை நடத்த வேண்டுமே.

கே: கல்வியைப் 'பொதுவில் வைத்தல்' என்று பேசுகிறார்களே, அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ப: பாடநூல் கையேடுகளைத் தயாரிக்க வருடத்துக்கு இரண்டு மில்லியன் டாலர் செலவழிக்கிறது எங்கள் நிறுவனம். தேசத்திலேயே சிறந்த வல்லுனர்கள் அவற்றைத் தயாரித்திருக்கின்றனர். அதைக் கொண்டுபோய் இன்டர்நெட்டில் போட்டால், அது உடனடியாகக் களவாடப்படும். போட்டி நிறுவனங்கள் எங்கள் பெயரைக் கூடச் சொல்லாமல் பயன்படுத்திக் கொள்வார்கள். மற்றொன்று, நாங்கள் நல்ல சம்பளம் கொடுக்கிறோம், நல்ல வாழ்க்கை வாழ்கிறோம் என்பது மட்டுமல்லாமல், லாபத்தில் ஒரு பகுதியை அறக்கட்டளை வழியே பொதுச்சேவைக்குப் பயன்படுத்துகிறோம்.

கே: பெரிய மேதைகள் உங்கள் நிறுவனத்தில் சேருகிறார்கள். அவர்கள் மாணவர்களின் தரத்துக்கு இறங்கிப் படிப்பிப்பது எப்படி?
ப: 'இறங்கி' என்ற வார்த்தையை கவனிக்க வேண்டும். ஒரு மாணவருக்குச் சொல்லிக் கொடுக்கும்போது நான் கீழே இறங்குவதாக நினைப்பதில்லை. அவரும் நானும் ஒரே முயற்சியில் பங்காளிகள். மாணவர் தனது அறிவு வளர்ச்சியின் திருப்புமுனைக் கட்டத்தில் இருக்கலாம், ஆனால் அவரும் புத்திசாலிதான். அவரை மதித்து, அவரது அறிவைத் தூண்டி, ஊக்குவித்து மேலேற்ற விரும்புகிறேன் நான். அவரைப் பதட்டமில்லாமல், ஜாலியாகப் படிக்க வைக்க விரும்புகிறேன். நானும் மகிழ்ச்சியானவன். முகத்தில் சிரிப்பு இருந்தால் அவன் நன்றாகப் படிப்பான் என்பது எனக்குத் தெரியும். எனவே அவனிடம் ஜோக்காகப் பேசுகிறேன்.

கே: உங்கள் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்கள் என்று யாரைச் சொல்வீர்கள்?
ப: இது ஒரு அமைப்பு ரீதியான வெற்றி. உதாரணமாக, எங்களுடைய 25வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் நியூ யார்க்கில் நடந்தபோது அட்வான்டேஜ் டெஸ்டிங்கில் முக்கியமானவர்களுக்கு நான் நன்றி சொல்லத் தொடங்கி, பட்டியல் 50 பேரைத் தாண்டிவிட்டது. (சிரிக்கிறார்).

எனக்கு ஒரு திறமை இருக்கிறதென்றால் அது திறமையானவர்களைச் சரியாகப் பார்த்துப் பிடிப்பதுதான். என்னைவிட மிகத் திறமை வாய்ந்தவர்கள் என் நிறுவனத்தில் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, ரவி (பொப்பண்ணா). நம் நாட்டவர் என்பதால் எனக்கு அவரைப்பற்றி மிகப் பெருமை. அவரளவு கெட்டிக்காரர்கள் இரண்டு மூன்று பேர்தான் இருக்க முடியும். ஆனால், அவர் மிக அடக்கமானவர். அது ஒரு அபூர்வமான கலவை. வெற்றி பெற்றவர்கள் பலரும் அகந்தையை வளர்த்துக் கொண்டு விடுகிறார்கள். நான் அப்படி இருப்பதாக என் மகள்கள் சொல்கிறார்கள். (சிரிக்கிறார்).

கே: பல நாட்டவர்கள்/இனத்தவர்கள் தலைமை இடங்களை அடைவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ப: அது மிகவும் முக்கியம். நான் நியூ யார்க்கின் குவீன்ஸ் பகுதியில் வளர்ந்தேன். அங்கே பல இனத்தவர்களும் நாட்டவர்களும் கலந்த கதம்பமான சமுதாயம், லாஸ் ஏஞ்சலஸ் போலவே. நான் படித்த ஐக்கிய நாடுகள் பள்ளியும் அப்படித்தான். பல பார்வைக் கோணங்களை இங்கெல்லாம் காண்கிறோம். தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று கருதுபவை அப்படித் தோன்றக் காரணம் அவற்றைத் தீர்க்க முயலும் எல்லோரும் ஒரே கோணத்தில் பார்ப்பதுதான். வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள் ஒரே மேஜையில் அமரும்போது புதிய பரிமாணங்கள் தெரிய வருகின்றன; பிரச்சனைகளைத் தீர்க்க வாய்ப்பு ஏற்படுகிறது.

என் நிறுவனத்தை எடுத்துக் கொள்ளுங்களேன். இரண்டு மில்லியன் பிரதிகள் விற்கும் 'லண்டன் ஈவினிங் ஸ்டாண்டர்டு' பத்திரிகை சமீபத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டது. லண்டனில் மிகப்பெரிய ட்யூட்டரிங் நிறுவனம் நடத்தும் ஒருவர் நியூ யார்க் வந்து இங்குள்ள பல தனிக்கல்வி நிறுவனங்களின் தலைவர்களைப் பார்த்துப் பேசியிருக்கிறார். அவர்கள் எல்லோருமே 'அட்வான்டேஜ் டெஸ்டிங்'தான் முன்னணி நிறுவனம் என்று கூறியுள்ளனர். சீனர், கொரியர், வெள்ளை ஆண்கள், இந்தியப் பெண்கள் என்று இத்தனை வேறுபட்ட பின்னணியினர் பணியாற்றுவது எம் நிறுவனத்தில்தான். எங்களது கலாசாரப் பார்வைகள் மாறுபட்டாலும் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றுபடுகிறோம். இந்த அபூர்வமான சேர்க்கையால் தேசம் பலனடையும்.

கே: அட்வான்டேஜ் டெஸ்டிங்கின் மையப் பண்பு (Core Culture) என்று எதைச் சொல்வீர்கள்?
ப: மரியாதை. மாணவருக்கு, பெற்றோருக்கு, சக பணியாளருக்கு, கல்விக்கு, நூல்களுக்கு, செய்யும் தொழிலுக்கு மரியாதை தருவது. இதை என் பெற்றோரிடம் கற்றேன். அச்சடித்த தாள்மீது கால் பட்டால் இந்தியர்கள் என்ன செய்கிறோம்? உடனே அதைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டு கடவுளிடம் மன்னிப்புக் கோருகிறோம். அதுபோன்ற என் இளமைக்கால நினைவுகள் நமது இந்தியக் கலாசாரத்தின் அங்கமாகும். மரியாதை தருவது என் நிறுவனத்தின் மையப் பண்பு.

இரண்டாவதாகச் சொல்ல வேண்டுமானால், 'செய்வதைச் செம்மையாகச் செய்தல்'. நாங்கள் யாருடனும் போட்டி போடுவதில்லை. எங்கள் தரத்தை மேலும் மேலும் உயர்த்தவே நினைக்கிறோம். யாரையும் விட மிக உயரத்தில் எங்கள் செயல்திறன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். மன்ஹாட்டன் தலைமையகம் நம்பர் ஒன் இடத்தை வகிக்கிறது. லாஸ் ஏஞ்சலஸ் செஞ்சுரி சிடியில் அதிவேகமாக வளர்கிறது. இப்படிப் பல இடங்களைக் குறிப்பிடலாம். ஆனால், நாங்கள் விளம்பரம் செய்வதில்லை.

மூன்றாவதாகச் சொல்வதானால், ஆணவமில்லாமை. ஆனால் தன்னம்பிக்கை உண்டு. ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் வேலைக்காக ஒருவரைப் பேட்டி கண்டேன். யேல் பல்கலையில் முதலாவதாக வந்தவர்! என்னைவிடவும் கெட்டிக்காரர். பேசிக்கொண்டிருக்கும்போது அவர் கேட்டார், "சேர்ந்த பிறகு எப்படி?" என்று. "நாங்கள் உங்களுக்கு டிரெய்னிங் தருவோம். உதாரணமாக நீங்கள் SAT பயிற்றப் போகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு டிரெய்னிங் உள்ளது. பல மாதம் கழித்துத்தான் நீங்கள் களத்தில் இறங்குவீர்கள்" என்று கூறினேன். "SATல் முழு ஸ்கோர் வாங்கினவன் நான். எனக்கு டிரெய்னிங்கா?" என்று கேட்டுவிட்டுச் சிரித்தார் அந்த இளைஞர். மிகுந்த மரியாதையோடு நான் "இந்தப் பேட்டி முடிந்தது" என்று கூறினேன். நாம் மார்க் வாங்குவது வேறு, மற்றவருக்கு எப்படி மார்க் வாங்குவது என்று சொல்லிக் கொடுப்பது வேறு. இதில் ஆணவம் உதவாது.

கே: நீங்கள் வேலைக்கு எடுக்கும் படிகளைச் சொல்லுங்கள்....
ப: அவர்கள் எழுதிய எல்லா டெஸ்ட்களிலும் 800க்கு 780க்கு மேல் வாங்கியிருக்க வேண்டும். அவர்களுடைய ரெஸ்யூமே மற்றும் கவரிங் லெட்டர் பிழையற்றவையாக இருக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தில் முதல் நிலைப் பேட்டிகள் இரண்டிலும் உயர்ந்த கிரேடு வாங்கியிருக்க வேண்டும். பிறகுதான் நான் அவர்களைச் சந்திப்பேன். ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தால், என்னிடம் 50-60 பேர் வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவருடனும் நான் ஒருமணி நேரம் செலவிடுவேன். அந்த நேரத்தில் அவர்களைச் சரியாகப் புரிந்துகொண்டுவிட முடியும். இதில் 5-6 பேரைத்தான் நாங்கள் சேர்த்துக்கொள்ளுகிறோம்.

கே: உங்கள் அறக்கட்டளையின் செயல்பாடுகள் என்னென்ன?
ப: அட்வான்டேஜ் டெஸ்டிங் ஃபவுண்டேஷன் 501(c)(3) வரிவிலக்குப் பெற்ற பொதுச்சேவை அமைப்பு. அதிகம் வெளிவராத சிறுபான்மையினரை (Minorities) தலைமையிடத்துக்குக் கொண்டுவருவதில் எங்கள் அறக்கட்டளைக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், ஹிஸ்பானிய அமெரிக்கர்கள், ஆதிகுடி அமெரிக்கர்கள் என்று இப்படிப் பின்னடைந்த சமூகத்தினருக்கு நாங்கள் உதவுகிறோம். ஏன், சமூகப் பொருளாதார நிலையில் பின் தங்கியிருந்தால் நாங்கள் ஆசிய அமெரிக்கருக்கும் வெள்ளை அமெரிக்கருக்கும் கூட உதவுகிறோம்.

எங்கள் அறக்கட்டளை பல்கலைக் கழகங்களுடன் சேர்ந்து சில செயல்பாடுகளை மேற்கொள்கிறது. உதாரணமாக MITயுடன் சேர்ந்து நடத்தும் 'Math Prize for Girls'. இதைத் தொடங்கக் காரணம் என்னவென்றால், அமெரிக்காவில், கணிதத்தைப் பொறுத்தவரையில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கு இடையே பெருத்த வேறுபாடு இருந்தது. ஆசியாவில் அப்படி இல்லை. அறிவுத் திறன் கொண்ட மாணவிகளின் கணித அறிவை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது எங்களுக்கு உணர்த்தியது. MITயின் தலைவர் வந்து மாணவிகளிடம் இதில் பங்கேற்கச் சொல்லிப் பேசுகிறார், கடைசியில் MIT அரங்கத்தில் நாங்கள் பரிசு வழங்கும் விழாவை நடத்துகிறோம். இது ஒரு உதாரணம். இதுபோல ஹார்வார்டு சட்டக் கல்லூரி, NYU சட்டக் கல்லூரி, யேல் மருத்துவக் கல்லூரி, பிரின்ஸ்டன் பல்கலை இவற்றோடும் இணைந்து நிகழ்வுகளை நடத்துகிறோம். இவற்றை நடத்த ஒரு காரணம் உண்டு. டெஸ்ட்களில் உயர்ந்த மதிப்பெண் பெறுவது ஒரு தந்திரமல்ல, அதற்கு நெடுங்காலக் கல்விமுறைத் தயாரிப்பு வேண்டும் என்பதுதான் அது.

கே: இந்தக் கல்லூரிகளுடன் பார்ட்னர் ப்ரொகிராம் எப்படிச் சாத்தியமாயிற்று?
ப: நாங்கள் அவர்களிடம் போய், "உங்களைப் போன்ற நுழையக் கடினமான கல்லூரிகளில் பின்தங்கிய சமூகத்தினர் சேருவதற்கு உதவ விரும்புகிறோம். நீங்கள் அந்தத் திட்டத்தில் பங்கேற்க வேண்டும்" என்று கூறுவோம். நாங்கள் ஏதோ இந்தியர்களுக்கு உதவ நினக்கவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்னரே ஹார்வார்டிலும் பிரின்ஸ்டனிலும் இந்தியப் பின்னணி உடையவர்கள் இருந்தார்கள். அதில் நான் ஒருவன். இன்றைக்குப் பிரின்ஸ்டன் நுழைவு வகுப்பில் பார்த்தால் இந்தியப் பின்னணி கொண்டவர்கள் 50 பேர் இருப்பார்கள்.

கருப்பர், வெள்ளையர், பழுப்பு நிறத்தவர், மஞ்சள் நிறத்தவர், ஹிஸ்பானியர், ஏழைகள், எவருக்கு இந்தக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு இல்லையோ அவருக்கெல்லாம் நாங்கள் உதவ நினைக்கிறோம். அதற்காகவே இந்தப் பார்ட்னர்ஷிப் திட்டங்கள். இவற்றால் நாங்கள் வருமானம் பெற நினைக்கவில்லை. செலவுதான். ஆண்டுக்குச் சுமார் 2 மில்லியன் டாலர் வரை இவற்றுக்குச் செலவு செய்கிறோம்.

கே: இந்தியக் குழந்தைகள் படிப்பில் வெகு சுட்டி. தலைமைப் பண்புகளில் அவர்களுக்கான சவால்கள் என்னென்ன?
ப: ஒரு இந்தியன் என்ற முறையில் எனது அனுபவத்திலிருந்தே சொல்கிறேன். கடினமாக உழைக்கும் ஓர் இந்தியச் சிறுவனைவிட கெட்டிக்காரர் உலகிலேயே யாரும் கிடையாது. மிகத் திறமையும் அறிவும் கொண்டவர்கள். அவர்களுக்குச் சில அடிப்படை விஷயங்கள் சொல்லித் தர வேண்டும் - 'பெரியவர்கள் பேசும்போது கூச்சத்துடன் வேறு பக்கம் பார்க்கதே, கண்ணைப் பார்த்துப் பேசு' என்பது போல. தன்னம்பிக்கை, மேடைப்பேச்சு, தலைமைப் பண்பு என்று இவற்றைச் சொல்ல வேண்டும். கணினி கிளப், செஸ் கிளப், கணிதக் கிளப் தவிரப் பிறவற்றிலும் ஈடுபாடு கொள் என்று சொல்ல வேண்டும். அமெரிக்காவில் தெளிவாக எழுதுவதும் பேசுவதும் விவாதிப்பதும் மிக அவசியம். நம் குழந்தைகள் நிறைய எழுத வேண்டும். இவற்றில் நல்ல பயிற்சி பெற்றால் நமது சமூகம் இன்னும் உயரும். இந்தியர்கள் வெறும் கணிதப் புலிகள் என்ற நிலை மாறி நம்மில் பலர் CEOக்களாக வருவதைப் பார்க்க முடிகிறது. இந்த மாற்றம் நல்லது.

கே: உங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்டானவர், இல்லையா?
ப: ஆமாம். நான் வளரும் பருவத்தில் என் அப்பா என்னை எதிலுமே சிறந்தவன் என்று நினைத்துக் கொள்ள விடவில்லை. (சிரிக்கிறார்.) அந்த நாளில் நான் SAT தேர்வில் கணிதத்தில் 800 மார்க்கும், ஆங்கிலத்தில் 760 மார்க்கும் வாங்கினேன். "வெர்பலில் ஏன் மார்க் கொறஞ்சு போச்சு?" என்று மட்டுமே என் அப்பா கேட்டார், வேறெதுவும் பேசவில்லை. ஆனால் இப்போதுள்ள பெற்றோர்கள் கொஞ்சம் அதிகமாகவே பெருமைப்படப் போக, குழந்தைகள் தம்மை அந்தப் பள்ளிக்கூடத்துக்குக் கிடைத்த பாக்கியம் என்று எண்ணிவிடுகிறார்கள். அதையும் தவிர்க்க வேண்டும்.

கண்டிப்பு நல்லது என்றுதான் நினைக்கிறேன். நாங்கள் கடினமாக உழைக்க வேண்டும், சுயமாகப் போவதற்கு முன்னர் பொறுப்புகளை ஏற்கப் பழக வேண்டும் என்று என் அப்பா நினைத்தார். அவருடைய பாணியில் மிக அதிகம் நானும் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

என் மனைவி அமெரிக்கப் பின்னணி கொண்டவர். ஆனாலும் எங்கள் மகள்களை நாங்கள் கண்டிப்புடன் வளர்க்கிறோம். அதே நேரத்தில் அவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம். கண்டிப்பு என்றால், வார நாட்களில் அவர்கள் இஷ்டத்துக்கு தோழி வீட்டில் ஸ்லீப்-ஓவர் என்று போக முடியாது. கட்டுப்பாடான வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறது. 18 வயதுவரை அந்த வரம்புக்குள் அவர்கள் நிற்கவேண்டும். சில காலத்தில் குழந்தைகள் பெற்றோர்களின் விதிகளை ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள். அது நல்லதுதான். அதற்குப் பிறகு நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதே நேரத்தில் பெற்றோர்கள் சர்வாதிகாரிகளாக நடக்கக் கூடாது. கண்டிப்பு என்பது இம்சை செய்வதில்லை.

(அடுத்த இதழில் முடியும்)

ஆங்கில உரையாடல்: காந்தி சுந்தர், சி.கே. வெங்கட்ராமன்
தமிழ் வடிவம்: மதுரபாரதி

*****


ஹார்வார்டில் படித்துவிட்டு.....!
25 ஆண்டுகளுக்கு முன்னால், நான் ட்யூட்டரிங் கம்பெனி தொடங்கிய காலம் அது. என்னோடு படித்தவர் ஒருவரை ரெஸ்ட்ரான்ட்டில் சந்தித்தேன். "என்ன செய்கிறாய்?" என்று கேட்டார். இந்தக் கம்பெனி தொடங்கியிருப்பதாகச் சொன்னேன். அவர் சிரித்தார், "என்ன? ஹார்வார்டில் சட்டம் படித்துவிட்டு, என்ன ட்யூட்டரிங் சொல்லிக் கொடுக்கிறாய்?" என்று கேட்டுச் சிரித்தார். அப்போது என்னுடைய எதிர்வினை என்ன தெரியுமா? முதலில் சிறிதே வெட்கமாக உணர்ந்தேன். ஆனால், அடுத்த நிலைக்கு உயரச் செல்வதற்கான உந்து சக்தியாக அதுவே ஆனது.

அருண் அழகப்பன்

*****


பெர்க்கலி பிஎச்.டி.
பெர்க்கலி பல்கலையில் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் என்னிடம் வந்தார். கணிதப் பாடம் எழுதித் தருகிறேன் என்றார். பெர்க்கலியின் கணிதத் துறை மிகப் பெயர் பெற்றது. "ஜோஸஃப், பாடம் எழுதித் தருகிறேன் என்கிறீர்களே, ஏன்?" என்றேன். "எனக்குக் கணிதம் அவ்வளவாக வராது" என்று சொல்லிச் சிரித்தார் அவர். நானும் சிரித்துவிட்டு, "என்ன, பெர்க்கலியில் பிஎச்.டி. வாங்கிய உங்களுக்குக் கணிதம் வராதா?" என்றேன் நான். "பாடங்களை விளக்கி எழுதுவதில் நான் மிகவும் கெட்டிக்காரன்" என்றார். அவர் எழுதிய சிலவற்றை என்னிடம் கொடுத்தார். ஒருவாரம் அவற்றைப் பரிசீலித்தேன். உண்மையிலேயே அவர் எக்ஸ்பர்ட். ரொம்பத் தரமானவை. அவரை உடனடியாகச் சேர்த்துக் கொண்டேன்.

அருண் அழகப்பன்

*****


ரவி பொப்பண்ணா
ரவி ஏ.டி. அறக்கட்டளையின் 'Math Prize for Girls' நிகழ்வுக்குப் பொறுப்பாக இருக்கிறார். அவரைப் போன்ற நுணுக்கமான சிந்திப்பவரை, எழுதுபவரைப் பார்ப்பது அரிது. 22 வயதிலேயே MITயிலிருந்து கணினி அறிவியலில் பிஎச்.டி. வாங்கியவர். சிறந்த ஆசிரியர் விருதெல்லாம் வாங்கியிருக்கிறார். பிரில்லியண்ட் ஆசாமி. NYU கூரண்ட் இன்ஸ்டிட்யூட்டில் கற்பித்தவர். புளூம்பெர்கின் தலைமை மென்பொருள் பயிற்சியாளர். ஒருநாள் என்னிடம் வந்து பாடநூல் துறையில் சேர விரும்புகிறேன் என்றார். நான் அசந்து போய்விட்டேன். எழுதுவதில் அவருக்கிருந்த அலாதித் திறமையைப் பார்த்தேன். அவர் எங்களோடு சேர்ந்தார்.

அருண் அழகப்பன்

*****


இது ஒரு யுத்தம்!
ஒரு சிரிப்பான சம்பவம் சொல்கிறேன். 'பிரின்ஸ்டன் ரெவ்யூ' தெரியுமல்லவா? அதைத் தொடங்கியது என் வகுப்புத் தோழரான (1981) ஜான் காட்ஸ்மன். ஒருநாள் எனது பொதுக்கூட்டம் ஒன்றில் ஒரு 25 வயதுள்ள ஒருவர் வந்து, தான் ஒரு தந்தை போலக் கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்தார். 'பிரின்ஸ்டன் ரெவ்யூ'வின் தனி ட்யூட்டரிங் பிரிவின் தலைவர் என்று தெரிய வந்தது. உடனே நான் ஜான் காட்ஸ்மனை போனில் அழைத்து இதைப் பற்றிக் கேட்டேன். "ஆமாம் நான்தான் அனுப்பி வைத்தேன், விவரமாகக் கேட்டுக்கொண்டு வரச் சொன்னேன்" என்றார். "ஜான், நீ என்னைக் கூப்பிட்டுச் சொன்னால் நான் அழைப்பு அனுப்பியிருப்பேனே! இப்படிச் செய்ய வேண்டிய அவசியம் என்ன?" என்று கேட்டேன். "இல்லையப்பா, இது ஒரு யுத்தம்!" என்றார். (சிரிக்கிறார்). இது அமெரிக்க மனப்பான்மை. இது எனக்குப் பழகவில்லை. அமைதிப் பிரியரான, ஐக்கிய நாடுகளில் பணி புரிந்த தந்தையிடம் வளர்ந்தவன் நான். யூ.என். பள்ளியில் 13 ஆண்டுகள் படித்தேன். எனக்கு 'யுத்தம்' என்ற சொல் விருப்பமானதல்ல.

அருண் அழகப்பன்
மேலும் படங்களுக்கு
More

இசைக்கவி ரமணன்
Share: 
© Copyright 2020 Tamilonline