Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அஞ்சலி | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
பேராசிரியர் நினைவுகள்: குயிலுக்குள் கவிக் கூட்டம்
- ஹரி கிருஷ்ணன்|அக்டோபர் 2011||(1 Comment)
Share:
தமிழ்க் கவிதையின் நீண்ட வரலாற்றில் எப்போதுமே மூன்று தனித்தனிக் குழுவினர் இயங்கிக் கொண்டிருந்தனர் என்பதைப் பார்க்க முடியும். ஒரு சாராருக்குச் சொல்ல நிறையச் செய்தி இருக்கும்; சொல்வதைச் செல்லும் விதமாக, அழகும் நேர்த்தியும் பொலிவும் மிளிரச் சொல்லும் கலையில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். கவிதை இயற்றுவது என்பது, உரையாடுவதைப் போல் அவர்களுடைய இரண்டாவது சுபாவமாக அமைந்திருக்கும். பாடுகின்ற பொருள், வெகு இயல்பாக அவர்களுடைய வாக்கிலிருந்து புறப்பட்டு, அதனினும் இயல்பாக யாப்பின் வரையறைகளுக்குள் பொருந்தி நின்றுவிடும். அடிப்படையில் அவர்கள் உள்ளத்தில் இசை ததும்பி நிற்கிறது. யாப்பென்னும் பாத்திக்குள் அவர்களுடைய சொற்கள் இசையால் குழைக்கப்பட்டுப் பாய்கின்றன. இப்படிப்பட்டவர்களின் கவிதைகளை எங்காகிலும் ஓரிரு அடிகள் படித்தாலே போதும். 'உள்ளத்தில் உண்மையொளி உண்டானால் வாக்கினிலே ஒளியுண்டாம்' என்ற பாடிய பாரதியைப்போல் சதா காலமும் சத்திய நாட்டமுடைய இந்த வகைக் கவிஞர்களுக்கு (மற்றவர் கண்களுக்கு எது காட்சியாகப் புலப்படுகிறதோ அது) தரிசனமாகத் தென்படுகிறது. தரிசனத்தின் ஆவேசம் அவர்களை ஆட்கொண்டு கவியாக வெளிப்படுகிறது.

பாரதிக்குச் சமகாலத்தில் நூற்றுக்கணக்கான, ஏன், ஆயிரக்கணக்கானோர் கவிதை இயற்றிக் கொண்டிருந்தார்கள். இந்த இடத்தில் 'கவிதை இயற்றிக் கொண்டிருந்தார்கள்' என்று சொல்ல நேர்ந்தது ஓர் இடக்கரடக்கல் அல்லது euphemism. அவர்கள் சொல் முடைந்து கொண்டிருந்தார்கள். கச்சிதமாகவும், காலபிரமாணம் தவறாமலும், யாப்பின் சட்டகத்துக்குள் சொற்களைத் திணித்துக் கொண்டும் கொட்டிக்கொண்டும் இருந்தார்கள். ஆனால், காலவெள்ளம் என்னும் புனல்சோதனை, போலிகளைக் கரையோரக் குப்பைகளாய் விட்டுவிட்டு, அலையோடு முத்துகளை வாரி எடுத்துக்கொண்டு பாய்ந்தவாறிருக்கும். சமகாலத்தில் எது அசல் எது போலி என்று வேறுபடுத்திச் சொல்வது கடினமாகவே இருந்தால்கூட (பொதுவாக, போலிகளைப் பார்த்த பார்வையில் இனம் கண்டுவிடலாம் எனினும், அதையும் தப்பி, சமகாலத்தில் அசலுக்குச் சமமாகவே மின்னிக்கொண்டு நின்றால்கூட) போலிகள், காலம் என்னும் அமிலச் சோதனையில் பொசுங்கிப் போகின்றன. பாரதி வாழ்ந்த காலத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பாரதி பட்டம் பெற்றிருந்தார்கள். உத்தண்ட வேலாயுத பாரதி, கிருஷ்ண பாரதி, ஈஸ்வர பாரதி, இராம பாரதி, முத்துச்சாமி பாரதி, புதுவை குமார பாரதி, குணங்குடி கோவிந்த பாரதி, மதுரகவி பாரதி என்று ஒரு பெரிய வரிசையிலே, எப்போதேனும் சில சமயங்களில் மட்டும் 'இப்படியும் பாரதிகள் இருந்தனர்' என்று நினைவில் மட்டும் நிற்கும் அளவுக்கேனும் எஞ்சியிருப்பவர்கள் கோபால கிருஷ்ண பாரதியும், நாவலர் சோமசுந்தர பாரதியும், கவியோகி சுத்தானந்த பாரதியும். பாரதி பணியாற்றிய அதே சுதேசமித்திரன் பத்திரிகையிலேயே வரகவி அ. சுப்பிரமணிய பாரதி என்றொருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்--பாரதியின் மேசைக்கு அடுத்த மேசையில்!

ஆனாலும். இன்றைக்கு பாரதி என்ற பெயர் உச்சரிக்கப்பட்டாலே உள்ளத்தில் தோன்றி நிற்கும் சித்திரம் தலைப்பாகை, முறுக்கு மீசை என்று தோற்றத்தால் அடையாளப்படுத்தப்பட்டு பொங்கிப் பிரவகிக்கின்ற உணர்ச்சிகளின் ஊற்றுக் கண்ணாகவும், நூறு வருடங்களுக்குப் பிறகு இன்றைக்குப் படித்தாலும், எழுதப்பட்ட சமயத்தில் எப்படி ஜ்வலித்ததோ அதே அளவு பிரகாசமுடையதாகவும், சொல்லப் போனால், காலம் செல்லச் செல்ல, பிரகாசம் கூடிக்கொண்டே போகின்ற தன்மை கொண்டதாகவும் தனித்து நிற்பது சீவலப்பேரி சின்னசாமி குமாரன் சுப்பிரமணியன் பெற்ற பாரதி பட்டம் மட்டுமே.

காலவெள்ளம் முத்துகளைச் சுமந்து வந்து தலைமுறைகளைக் கடந்து இன்னும் வெகுதொலைவு எடுத்துச் சென்றவாறிருக்கும். முத்தல்லாத மற்றவை, கரையோரம் ஒதுங்கிவிடும். (இந்தத் தருணத்தில் ஒன்றைக் குறிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். சுப்பிரமணிய பாரதி மட்டுமே அசல்; மற்ற பாரதிகள் எல்லாம் போலி என்று காலவெள்ளம் நிரூபித்துவிட்டதாக நான் சொல்ல வரவில்லை. அன்ட்ரமீடா கேலக்ஸியிலிருந்தும் ஒளி நம்மை வந்தடைகிறது. இதோ, பக்கத்து வீட்டில் இருக்கும் நிலவிலிருந்தும் ஒளி நம்மை வந்தடைகிறது. இரண்டரை மில்லியன் ஒளியாண்டுகளைக் கடந்து நம்மை வந்தடையும் ஒளி அன்ட்ரமீடா கேலக்ஸியிலிருந்து கிளம்புகிறது. ஒன்றரை ஒளிவிநாடிக்கும் குறைந்த போதில் நிலவின் ஒளி நம்மீது பொழிகிறது. மற்ற பாரதிகள் நிலவும், செவ்வாயும், வியாழனும் வெள்ளியும் போன்றவர்களென்றால், சுப்பிரமணிய பாரதி அன்ட்ரமீடா கேலக்ஸியிலிருந்து கிளம்பும் ஒளிபோன்றவன். எனவேதான், மற்ற எல்லா பாரதிகளின் பெயர்களும் நம்முடைய நினைவுத் தடத்திலிருந்தே அழிந்துகொண்டிருக்கும் நிலையில்கூட, அவர்களுடைய சமகாலத்தவனான இந்த ஒரு பாரதி மட்டுமே, 'பாரதி' என்ற பெயர் எப்போதெல்லாம் உச்சரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் நம் நினைவுத் தடங்களில் வந்து நிற்பதற்கு முன்னுரிமை பெற்றிருக்கிறான்; அவன் எழுத்தினால் தன் வசமிழந்த நாம் அந்த முன்னுரிமையை நம் உள்ளத்தில் அவனுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறோம்.

இப்படி அரிதிலும் அரிதாக, ஆயிரமாண்டுகளுக்கு ஒருமுறையே தோன்றும் அபூர்வக் கவிஞர்கள்--வள்ளுவன், கம்பன், பாரதி மூவருக்கும் இடையே தலா ஆயிரம் ஆண்டுகள் கால இடைவெளி இருப்பது வியப்புக்குரிய தற்செயல்--வரிசையைச் சேர்ந்த பாரதி, குயில் பாட்டுக்குள் தன்னையும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறான். குயில் பாட்டில் கதாநாயகனாக உலாவரும் 'இளைஞன்' பாரதியே என்ற தோற்றம்தான் நம்மில் பெரும்பாலோருக்கு உள்ளது. குயில் பாட்டுக்கு ஓவியம் தீட்டுபவர்கள் எல்லாரும் ஒன்றேபோல், அந்த இளைஞன் நிற்குமிடத்தில் பாரதியை நிற்கச் செய்து ஓவியம் தீட்டிவிடுவார்கள். ஆனால், பாரதி சொல்ல விழைந்தது, இலக்கிய வெளியில் குவிந்து கிடக்கும் இப்படிப்பட்ட அன்ட்ரமீடாவும் அதற்கப்பாலுமான உடுக்கூட்டப் பெருந்தொகையை ஒத்த கவிஞர்கள் வரிசையையும்; தான் அப்படிப்பட்ட கவிஞர்களை அடையாளப்படுத்தும் ஒரு சின்னமாக அங்கே நிற்கிறான் என்பதையுமே. தன்னை மட்டுமே சொல்லிக் கொள்ளவில்லை பாரதி. தான் வந்த வரிசையில், தனக்கு முற்பட்டவரும், தனக்குப் பின்னே தோன்றப் போகின்றவருமான அனைத்துக் கவிஞர் குழாத்தையும், குயில் பாட்டின் கதாநாயகனான இளைஞன் வடிவில் காட்டுகிறான்.
ஆகவேதான், அந்த இளைஞன் இடையில் உடைவாளைக் கட்டிக்கொண்டு திரிபவனாகச் சித்திரிக்கப்படுகிறான். (இளைஞனுக்கு முன்னால் நிகழும் குயில்-மாடு-குரங்கு காதல்மொழி பொய்த்தோற்றத்தின் போது ஒவ்வொரு முறையும் 'சிந்தக் கருதி உடைவாளில் கைசேர்த்தேன்' என்று தவறாமல் பாரதி குறிப்பிடுவதைக் காணலாம்.) எனவே, கதையின் களம் என்னவோ செந்தமிழ்த் தென்புதுவை என்னும் திருநகர்தான்; தமிழ்நாட்டின் எல்லைக்குள் நடைபெறுவதுதான் என்றாலும், காலக் குறிப்பைக் கவிஞன் வேண்டுமென்றே முன்னும் பின்னுமாக நகர்த்தி விளையாடியிருக்கிறான். ஆங்கிலத்தில் anachronism என்று சொல்வார்கள். காலத்துக்கு ஒவ்வாத சித்திரிப்பு. உதாரணத்துக்கு ராஜராஜசோழன் திரைப்படம் எடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இன்றைய சூழலில், தஞ்சைக் கோவிலில் அந்தப் படத்தின் படப்பிடிப்பை வைத்துக்கொண்டால், நூற்றுக்கணக்கான மின்சார விளக்குகள், ஏதேனும் ஒரு காட்சியில், ஓரிடத்தில் தவறிப்போய் இடம் பெற்றுவிடும். அல்லது, ராஜராஜ சோழன் கையில் வாட்ச் கட்டியிருப்பது போல் காட்சி வந்துவிட்டதாகவே வைத்துக் கொள்வோமே! அது எவ்வளவு பொருந்துமோ, அவ்வளவு பொருத்தம்தானே, வாளும் கையுமாக உலவும் இளைஞனை பாரதியாக அடையாளம் காண்பது!

எனவே, இலக்கிய விண்பரப்பில் தகதகத்துக் கொண்டிருக்கும் அரிய வகையைச் சேர்ந்த, ஆயிரம் கோடி ஒளியாண்டுகளைக் கடந்து ஒளியைப் பாய்ச்ச வல்ல கவிக்கூட்டத்தின் அடையாளமாக அந்த இளைஞன் குயில் பாட்டில் நடமாடுகிறான்; அந்த கவிக்கூட்டத்துக்குள் ஒருவனாக பாரதி தன்னையும் கண்டிருக்கிறான் என்பது மறுக்க முடியாத உண்மை.

'மத்தவங்க பேசறப்ப எல்லாம் ஆதாரம் எங்கே, அடிப்படை எங்கே' என்றெல்லாம் கேட்பாயே, அப்பா புத்தி சிகாமணி, நீ சொல்லும் இந்த அடையாளத்துக்கு, உங்கள் ஆசிரியர் இனம் கண்டிருப்பதாக நீ கொட்டிக் கவிழ்க்கும் இந்த நிலைப்பாட்டுக்கு என்ன அடிப்படை, என்ன ஆதாரம், குயில் பாட்டுக்குள் இதற்கான அகச்சான்று இருக்கிறதா என்றெல்லாம் கேட்கத்தான் கேட்பீர்கள். தெரியும்.

மூன்று வகையான கவிஞர்கள் இலக்கிய வரலாற்றில் எந்தக் காலகட்டத்திலும் இருந்திருக்கிறார்கள்; ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படிப்பட்ட மூன்று வகைப்பாடுகளை அடையாளம் காண முடிகிறது என்று தொடங்கினோம் அல்லவா? அந்த மூன்று வகைப்பாட்டில் முதல் வகைப்பாடாக, குயில் பாட்டில் சித்திரிக்கப்பட்டுள்ள இளைஞனை இனம் கண்டிருக்கிறோம். குயிலிடம் காதல் வசப்படும் இளைஞன். இளைஞனுடைய காதலுக்கு எந்த விதத்திலும் இளைத்துப் போகாத அதே அளவு ஆர்வமும், காதலும், ஆவலும், குயிலைத் தன்வசப்படுத்தியே தீரவேண்டும் என்ற தணியாத தாகம் உடையவர்களாகவும் திரியும் மாடும் குரங்கும் எந்த வகையினர் என்பதையும் இனம் கண்டால், இந்த மூன்று வகையையும் வரிசைப்படுத்திப் பார்த்தால், இளைஞன் யாருடைய குறியீடு என்பதற்கான வலுவான அகச்சான்று கிட்டுமல்லவா?

அடுத்ததாக மாடும் குரங்கும் அடையாளப்படுத்தும் கவிக்கோமான்கள்(!) வகைப்பாடுகளை இனம் காணப் புகலாம். புகலாமா?

(தொடரும்)

கட்டுரை, படம்: V. ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline