Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எனக்கு பிடிச்சது | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
வரலாறு படைக்க வாருங்கள் ஃபிலடெல்பியா
சுபாஷினி ட்ரெம்மல்
பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா!
- ஸ்ரீவித்யா ரமணன்|மார்ச் 2010|
Share:
திமிர்ந்த ஞானச் செருக்கோடு பல துறைகளிலும் சாதிக்கும் பெண்களுக்குப் பஞ்சமில்லை. நம்மைச் சுற்றிப் பார்வையை ஓடவிட்டதில் பார்த்த சிலர்:

விசாகா ஹரி (ஹரிகதை)

இசைப்பேருரை எனப்படும் ஹரிகதா உபன்யாசம் செய்து வருபவர் விசாகா ஹரி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் இன்னும் பல மொழிகளில் புலமை, இசைத் தேர்ச்சி, புராணங்களில் ஆழ்ந்த பயிற்சி, நாவன்மை என்று பல அம்சங்களும் இருந்தால் மட்டுமே பரிமளிக்கும் இந்தக் கலையில் முன்னணியில் நிற்கிறார் விசாகா ஹரி.

இவர் லால்குடியிடம் சங்கீதம் பயின்றவர். உலகப் புகழ்பெற்ற ஹரிகதா வித்வானும், ரசிகர்களால் "அண்ணா" என்று அழைக்கப்படுபவருமான கிருஷ்ண ப்ரேமியின் மருகமள். பாரம்பரிய முறை பிறழாமல், விறுவிறுப்பாக உபன்யாசம் செய்யும் விசாகா ஹரி, ஒரு சார்ட்டட் அக்கவுண்டண்ட். அந்தக் கடினமான தேர்வில் இந்தியாவின் முதல் மூவருள் ஒருவராகத் தேர்ச்சி பெற்றவர். இந்தியாவின் பிரபல நிறுவனங்களிடமிருந்து வந்த வேலைகளை உதறித் தள்ளிவிட்டு இறைவன் புகழ் பேசுவதையே லட்சியமாகக் கொண்டு, அந்தப் பாதையில் இன்று வெற்றிகரமாகப் பயணம் செய்து வருகிறார்.

கணவர் ஹரியும் ஹரிகதா வித்வான்தான். இருவரும் உலகநாடுகள் பலவற்றுக்கும் சென்று கதா காலட்சேபம் செய்து வருகின்றனர். விசாகாவின் உபன்யாசங்களை மோசர் பேர் நிறுவனம் விசிடிக்களாகவும், டிவிடிக்களாகவும் வெளியிட்டிருக்கிறது. இசைப்பேருரைத் துறையின் வரப்பிரசாதம் விசாகா ஹரி.

*****


ஸ்ரீகலா பரத் (நாட்டியம்)

Click Here Enlargeஸ்ரீகலா பரத் குரு சரஸம்மாவிடம் நடனம் பயிலத் தொடங்கி, ஏழு வயதில் அரங்கேற்றம். தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் என்று பரபரப்பாக இருந்த காலத்தில் பரத்துடன் திருமணம். பிறகும் கலாவின் கலைவாழ்க்கை தொடர்ந்தது. இனிமையாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த போதுதான் அந்த அதிர்ச்சி வந்தது. ஸ்ரீகலா பரத்திற்கு மூளையில் கட்டி (பிரெய்ன் ட்யூமர்). உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். தொடர்ந்து நடனம் ஆடவோ, நடமாடவோ முடியாது என்றெல்லாம் சிலர் கூறினர். அதைப் புறந்தள்ளி தனக்கு குணமாகும், தன்னால் நடனமாட முடியும் என்று நம்பினார்.

நரம்பியல் நிபுணர் பி. ராமமூர்த்தி அறுவை சிகிச்சை செய்தார். கணவர் பரத், சகோதரர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் என்று அனைவரது அன்பான வார்த்தைகளும், குடும்பத்தினரின் அனுசரணையும் ஸ்ரீகலாவுக்கு மிகுந்த உத்வேகத்தைத் தந்தன. நாட்டியமாட முடியும் என்ற தன்னம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. அறுவை சிகிச்சை நடந்த நான்கே மாதங்களில் மீண்டும் பயிற்சிகளைத் தொடங்கினார் ஒரு வருடத்தில் பழையநிலைக்கு வந்தவர், வழக்கம் போல் சபாக்களில் நாட்டிய நிகழ்ச்சிகளை அளிக்க ஆரம்பித்தார். தனியாகவும், குழுவினருடன் இணைந்தும் அவர் நிகழ்த்திய நடனங்கள் அவருக்கு மிகுந்த புகழைத் தேடிக் கொடுத்தன.

விசாகா ஹரி, ஒரு சார்ட்டட் அக்கவுண்டண்ட். அத்தேர்வில் இந்தியாவின் முதல் மூவருள் ஒருவராகத் தேர்ச்சி பெற்றவர். பிரபல நிறுவனங்களிடமிருந்து வந்த வேலைகளை உதறித் தள்ளிவிட்டு இறைவன் புகழ் பேசுவதையே தனது லட்சியமாகக் கொண்டுள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி, இலங்கை அரசின் பரத ரத்னா, சண்முகானந்த சபாவின் நாட்டிய இளவரசி, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் நடன மாமணி, யுவகலா பாரதி, நாட்டியச் செல்வம் உட்பட பல விருதுகள் அவரைத் தேடி வந்தன. தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் ஏ-கிரேடு இசைக் கலைஞரான ஸ்ரீகலா, இன்று தொலைக்காட்சி, பரதநாட்டியம், வெளிநாட்டு நிகழ்ச்சிகள் என்று மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.

"இருபத்து மூன்று வயதில் எனக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இன்று நாற்பது வயதைக் கடந்து விட்டேன். ஆனால் அந்த வயதில் இருந்த சுறுசுறுப்பும் வேகமும் இப்பவும் எனக்கு இருக்கிறது" என்கிறார் ஸ்ரீகலா பரத். நமக்கும் அந்த ரகசியம் இப்போது தெரிந்துவிட்டதே! தன்னம்பிக்கைதான் அது.

*****


காம்கேர் புவனேஸ்வரி (கணினித் தொழில்நுட்பம்)

Click Here Enlargeகாம்கேர் (Compcare) என்னும் மென்பொருள் பயிற்று நிலையத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியாக இருக்கும் புவனேஸ்வரி, கணினித் தொழில்நுட்பம் குறித்துத் தமிழில் மிக அதிக நூல்களை எழுதியுள்ள ஒரே பெண். 45க்கும் மேற்பட்ட இவரது நூல்கள் பிரபல பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டிருப்பதுடன், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கணினித் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் இவர், தனக்கு வந்த உயர் பதவிகளை ஒதுக்கிவிட்டுச் சொந்தத் தொழில் தொடங்கினார். இன்று பலருக்கு வேலை வாய்ப்பளித்து வருகிறார்.

இணையதள வடிவமைப்புச் செய்வதோடு, பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான கார்ட்டூன், அனிமேஷன் கதைப்பாடல் குறுந்தகடுகள் வெளியிட்டு வருகிறார். அத்துடன் மாணவ, மாணவியருக்கு வேலை வாய்ப்புப் பயிற்சிக் கருத்தரங்குகளை நடத்துகிறார். மென்பொருள் உருவாக்கம், தொழில்நுட்பப் பயிற்சி, பதிப்பகம், மல்டிமீடியா எனப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இவர், குறும்படங்கள் எடுப்பதிலும் ஆர்வம் மிக்கவர். தனது பத்மாகிரீஷ் அறக்கட்டளை மூலம் பல்வேறு அறப்பணிகளையும் செய்து வருகிறார்.

*****
அமுத சாந்தி (சமூக சேவை)

அமுதசாந்தி பிறவியிலேயே ஒரு கை இல்லாதவர். இளவயதில் சமூக ஏளனத்துக்கு ஆளானாலும் அவற்றை மதியாது, வெறியுடன் உழைத்து முன்னுக்கு வந்தவர்.

"உடற்குறையுள்ளோர் அதுவே தங்கள் வாழ்க்கை, விதி என்று உள்ளம் சோர்ந்து விடாமல், தங்களிடம் இருக்கும் திறமை என்ன, அதை எப்படி வெளிக் கொணவர்வது, அதன்மூலம் வாழ்வில் எவ்வாறு முன்னேறுவது என்று சிந்திக்க வேண்டும்" என்கிறார் தன்னம்பிக்கையுடன் அமுதசாந்தி. உடற்குறை உள்ள பெண்களின் நல்வாழ்விற்காக ‘தியாகம்' என்ற சேவை அமைப்பைத் தொடங்கி நடத்தி வருவதோடு, பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் செய்கிறார்.

"ஏழாம் வகுப்பு படிக்கும் போது மாநில அளவில் நடந்த கட்டுரைப் போட்டியில் தமிழக முதல்வர் எம்.ஜிஆரிடம் பரிசு பெற்றேன். அது எனக்குத் தன்னம்பிக்கையை அளித்தது" என்று கூறும் அமுத சாந்தி, பாதிக்கப்பட்ட பெண்களை ஒன்றிணைத்து தியாகம் பெண்கள் இல்லம், தியாகம் மகளிர் சுயஉதவிக் குழு, தியாகம் நட்பு வட்டம், தியாகம் கலைக்குழு என்று பல்வேறு அமைப்புகளைத் தொடங்கி நடத்தி வருகிறார். தேசிய வேலைவாய்ப்பு மையத்தின் ஹெலன் கெல்லர் விருது, பிற அமைப்புகளின் தன்னம்பிக்கை சிகரம், சிறந்த சமூகப்பணியாளர் விருது உட்பட பல விருதுகள் இவர் கைவசம்.

ஐம்பத்தேழு தங்கம், எட்டு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளார் ஆர்த்தி. சாதனைச் சிறுமி, இளம் சாதனையாளர், ஸ்கேட்டிங் இளவரசி உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
கிராமங்கள்தோறும் வாழ்வியல் பண்பு வளர்ச்சி மையங்களை ஏற்படுத்துதல், பல்வேறு நிலைகளிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு அளித்தல், கிராமங்களில் நூலகம் ஏற்படுத்துதல், ஊனமுற்றோருக்கான தகவல், சட்ட உதவி மையத்தை ஏற்படுத்துதல் போன்றவையே இவரது எதிர்காலக் கனவுகளாக உள்ளன. "என்னைச் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்தவேண்டும் என்பதே எனது லட்சியம்" என்கிறார் அமுத சாந்தி, சொல்வதோடு நிறுத்தவில்லை, அதைச் செய்தும் காட்டி வருகிறார்.

*****


ஆர்த்தி கஸ்தூரிராஜ் (விளையாட்டு)

Click Here Enlarge"ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே என் லட்சியம்" என்று கடுமையாகப் பயிற்சிகள் செய்து வரும் ஆர்த்தி, ஏழு வயதில் ஸ்கேட்டிங்கில் ஆர்வம் கொண்டார். வீட்டருகில் உள்ள பூங்காவில் தன்னையொத்த சிறுமிகள் ஸ்கேட்டிங் செய்வதைப் பார்த்த ஆர்வத்தில் அப்பயிற்சியில் ஈடுபட, இன்று ஆர்த்தி இந்திய அளவில் ஸ்கேட்டிங்கில் ஜூனியர் பிரிவு சாம்பியன்.

இதுவரை ஐம்பத்தேழு தங்கம், எட்டு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளார் ஆர்த்தி. உன்னிகிருஷ்ணன், ஸ்ரீகாந்த் ராவ் என்ற இந்தியர்களிடமும் W.G. பார்க் என்ற கொரியக் கோச்சிடமும் பயிற்சி பெற்றிருக்கும் ஆர்த்தி, சாதனைச் சிறுமி, இளம் சாதனையாளர், ஸ்கேட்டிங் இளவரசி, (Ice princess) தேசிய விருது உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

ஸ்கேட்டிங் தவிர ஹேண்ட்பாலும் ஆர்த்திக்குப் பிடித்தமான விளையாட்டு. அதிலும் தேசிய அளவில் சாம்பியன் பட்டத்தைப் பெற்றிருக்கிறார். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?

*****


மீனாட்சி நாச்சியப்பன் (ஓவியம்)

Click Here Enlargeதஞ்சாவூர் பெயிண்டிங், கண்ணாடி வேலைப்பாடு,​ மைசூர் வரை​கலை,​​ கேரள மாநி​லக் கலை,​​ சணல் பின்னல் ஓவியம் என்று கலையின் பல பரிமாணங்களிலும் தேர்ச்சி பெற்றவர் மீனாட்சி நாச்​சி​யப்​பன். பொழுதுபோக்காக இவற்றைத் தொடங்கியவர் இன்று பிரமிப்பூட்டும் சாதனையாளராக விளங்குகிறார். தனது ஓய்வு நேரத்தில் ஆந்திர மஹிளா சபாவைச் சேர்ந்த ஆண்டாள் என்பவரிடம் இக்கலையின் அடிப்படைகளை மீனாட்சி கற்றறிந்தார். பின்னர் சுயமுயற்சியாலும், வல்லுநர்களிடம் பயின்றும் உட்பிரிவுகள் பலவற்றைக் கற்றுத் தேர்ந்தார். இன்று இவருக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளனர்.

வீட்டில் மட்டுமல்லாமல் கல்லூரிகளுக்கும் சென்று இப்போது வகுப்புகள் எடுத்து வருகிறார். பல்வேறு நகரங்களில் பல கண்காட்சிகளையும் நடத்தியிருக்கும் இவர் அதற்காக பிரபலங்களிடமிருந்து பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார். கேம்லின் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ஆசிரியை இவர்.

மகளும் கணவரும் தனக்கு உறுதுணையாக இருப்பதாகக் கூறும் மீனாட்சி நாச்சியப்பன், "எந்தக் கலைக்குமே அவசரமாச் செய்வது உதவாது. அது கலைத்தன்மையைக் குலைத்து விடும். பணவரவை மட்டுமே நோக்கிச் செயல்பட்டாலும் நம் கலைத்தன்மை தேய்ந்துவிடும்" என்கிறார். படைப்புத் தரும் சுகானுபவம் பணக் கணக்கில் அகப்படாதது அல்லவோ!

*****


பூரணி (கவிதை)

Click Here Enlargeஇயற்பெயர் சம்பூரணி. பழனியில் பிறந்து, தாராபுரத்தில் வாழ்ந்து சென்னையில் வசித்து வரும் பூரணிக்கு வயது 90. இன்னமும் கதை, கவிதை, கட்டுரை என்று தீவிரமாக எழுதுகிறார். ‘பூரணி கவிதைகள்' தொகுப்பு வெளியாகியுள்ளது.

பூரணி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். 15 வயதில் திருமணம். புகுந்த வீட்டின் சூழல் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டியது. "புகுந்த வீடு ஒரு வியாபாரக் குடும்பம். ஆண்கள் காலையில் கடைக்குச் சென்றால் இரவுதான் வீடு திரும்புவார்கள். என் ஓர்ப்படிகள் வீட்டு வேலை, பகல் தூக்கம், அக்கம் பக்கத்தாரோடு அரட்டை என்று பொழுதைக் கழித்தார்கள். நான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அறைக்குள் சென்று நான்கு சுவர்களையும் பார்த்துக் கொண்டு ஜடம்போல உட்கார்ந்திருக்கத் துயரமாக இருந்தது. அப்போதுதான் பாட்டெழுதிப் பார்க்கலாமே என்ற எண்ணம் உதித்தது. நான் பாட்டின்மூலம் என் மன உளைச்சலையும், வேதனையையும் வெளிப்படுத்த விரும்பவில்லை. என் மனதை ஈர்த்த நல்ல விஷயங்களைப் பாட்டாக்கினேன். தடங்கலின்றி வார்த்தைகள் வெளிப்பட்டு, பிசிர் இல்லாத மரபுக் கவிதைகளாக எழுத ஆரம்பித்தேன்'' என்கிறார் பூரணி.

ஆர்வத்தைப் பார்த்த கணவர் நூலகத்திலிருந்து புத்தகங்களைக் கொண்டு வந்து தந்தார். இவருடைய அண்ணன், தனது நாடகங்களுக்குப் பூரணியைப் பாட்டெழுத வைத்தார். விரைவிலேயே பிரபலமானார் பூரணி. அக்காலச் சமூகத்தின் நிலைமையையும், படிப்படியான மாற்றங்களையும் சித்திரிப்பதாக இவரது படைப்புகள் அமைந்துள்ளன. பிரபல கவிஞர் க்ருஷாங்கினி இவரது மகள். ஓவியர் அரவக்கோன் மருமகன்.

*****


ஸ்ரீவித்யா ரமணன்
மேலும் படங்களுக்கு
More

வரலாறு படைக்க வாருங்கள் ஃபிலடெல்பியா
சுபாஷினி ட்ரெம்மல்
Share: 
© Copyright 2020 Tamilonline