Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிறுகதை
கொன்றன்ன இன்னா செய்யினும்...
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
- எல்லே சுவாமிநாதன்|அக்டோபர் 2008||(1 Comment)
Share:
Click Here Enlarge'மாத்தாடு, மாத்தாடு மல்லிகே' என்னும் ரஜினி பட பாட்டைக் கேட்கும் போதெல்லாம் நான் மல்லிகைச்செடி வளர்த்த கதைதான் நினைவுக்கு வரும். சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த மாதிரி, எல்லாம் வேணுவால் வந்த வினை.

அருகிலுள்ள ஸான் டியோகோ நகரத்தில் வசிக்கும் என் நண்பன் வேணு, போன வருஷம் வருடப்பிறப்பு வாழ்த்து சொன்ன கையோடு, "உனக்குன்னு ஒரு மல்லிகைச் செடி வெச்சிருக்கேன். வந்து எடுத்திட்டு போ" என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.

விஷயம் தெரிந்ததும் வீட்டில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. "சாமிக்கு மாலை தொடுத்துப் போடலாம். நம்ம வீட்டு பெண்களுக்கு தலையிலே ஏது முடி? ஊருக்கு வந்தவுடனேயே முதல் வேலையா வெட்டிடறாங்களே. ஆசைப்பட்டா தலையிலே ஒரு ஆணி அடிச்சு மாட்ட வேண்டியதுதான்" என்று என் அம்மா, அமெரிக்க நாகரீகம் தமிழ்ப் பெண்களின் கூந்தலைக் காவு கொள்வதைக் கண்டிக்க, "ஊருக்குத் தகுந்தமாரி மாற வேண்டியிருக்கே! காலையிலே எழுந்து பேண்டும் சட்டையும் போட்டு ஆணுக்கு சரியா வேலைக்குப் போக வேண்டியிருக்கு. சீவிச் சிங்காரிச்சு தாழையாம் பூமுடிச்சுத் தடம் பார்த்துத் தளுக்கா நடக்கறதுக்கு ஆருக்கு நேரமிருக்கு" என்று மனைவி பதிலளிக்க, மகள் "பாட்டி, நீயும் தலையச் சின்னதா வெட்டிக்கறயா, அழகாயிருக்கும்" என்று சொல்ல, நான் அவளை அடக்கி அமைதியை நிலை நாட்டினேன்.

எனக்குத் தெரிந்த ஸ்பானிஷில் மல்லிகைச் செடிக்காக வந்தேன், எங்கே இருக்கிறது காட்டு என்று சொல்ல, அவள் விழித்து, அருகிலுள்ள நாற்காலியில் தன் காலை வைத்து, உடையைச் சற்றுநீக்கி தொடையிலிருந்த சில சிவப்புப் புள்ளிளைக் காட்டினாள்.
சனிக்கிழமை வந்தது. சரி, புதுக்காரில் ஸான் டியோகோ வரை சவாரி செய்வோம் என்று எண்ணிக் கிளம்புகிற சமயம், மனைவி "புதுக்காரில் நானும் வந்தால் என்ன" என்று ஏறிக்கொண்டாள். "கார் போறச்சே நான் மட்டும் ஏன் வீட்ல அடஞ்சு கிடக்கணும்" என்று தாயும் வர, "அப்பா,என் ஃபிரண்டு கிளாராவை வழியிலே அவ மாமா வீட்ல எறக்கிவிடுவயா" என்று கேட்டு மகளும் தன் சினேகிதியுடன் ஏறிக்கொள்ள, காரை எடுத்தேன்.

இரண்டு மணி நேரத்தில் கார் இறகு போல 120 மைல்களை எளிதில் கடந்தது. ஒரு வழியாக நண்பன் வீட்டை அடைந்த போது, வீட்டில் யாருமில்லை.

வாசல் மணியை அழுத்தி, கதவைத் தட்டியதே மிச்சம். "ஒரு பிள்ளை அழகா போன் பண்ணிட்டு இத்தனை மணிக்கு வரேன்னு சொல்லிட்டு வந்தா இது மாதிரி ஆகுமா, இத்தனைக்கும் இவ்வளவு வருஷமா அமெரிக்காலே இருக்கான்னு பேரு" என்றாள் தாய்.

"நான் வரேன்னவுடனே தடை சொல்லாம கார்ல ஏத்திண்டப்பவே நினைச்சேன், இது மாதிரி ஆகும்னு" என்றாள் மனைவி.

"அப்பா, சான் டியோகவோ, இல்ல சான் பிரன்சிஸ்கோவா, சரியாக் கேட்டியா?" என்றாள் மகள்.

எரிச்சல் தாங்காமல் சூடாக ஏதோ சொல்ல வாயெடுத்தபோது, வீட்டுக்கதவு திறந்தது.

வாளிப்பான ஒரு மெக்சிகப் பெண் வெளியே வந்தாள். வீட்டு வேலைக்காரியாக இருக்கலாம். நான் என்னை அறிமுகம் செய்துகொண்டு வேணு எங்கே என்று கேட்டபொழுதுதான், அவளுக்கு ஆங்கிலம் புரியாதென்பது தெரிந்தது. அவள் பேசிய ஸ்பானிஷ் மொழியில் எல்லோரும் வெளியே போயிருக்கிறார்கள், திங்களன்று திரும்புவார்கள் என்பதாகப் பொருள் விளங்கியது.

எனக்குத் தெரிந்த ஸ்பானிஷில் மல்லிகைச் செடிக்காக வந்தேன், எங்கே இருக்கிறது காட்டு என்று சொல்ல, அவள் விழித்து, அருகிலுள்ள நாற்காலியில் தன் காலை வைத்து, உடையைச் சற்றுநீக்கி தொடையிலிருந்த சில சிவப்புப் புள்ளிளைக் காட்டினாள். நான் சற்று கவலைப்பட்டு "மஞ்சள் அரைத்துத் தடவ சரியாகும்" என்று ஸ்பானிஷில் எப்படிச் சொல்வது என்று மனதுக்குள் மொழிபெயர்க்கும்போது, காரில் சிரிப்பொலி எழுந்தது. "அப்பா, தப்பா ஸ்பானிஷ் பேசிட்டா. செடியெக்காட்டுன்னு சொல்றதுக்கு பதிலா, தொடையக் காட்டுன்னுட்டா" என்று என் மகள் சொல்வது எனக்குக் காதில் விழுந்தது...

விபரீத விளைவுகள் மனதுக்கு வர, "ஏய், இங்க வா, நீயே சொல்லு, நாம இங்க செடி எடுத்திண்டு போக வந்திருக்கம்னு" என்று மகளிடம் கத்த, அவள் இறங்கிவந்து பேச, ஒரு வழியாக, அந்தப்பெண் காட்டிய இடத்தில் இருந்த தொட்டிகளில் ஒன்றை எடுத்துக்கொண்டேன். காரில் இதை எங்கே வைப்பது என்ற பிரச்னை எழுந்தது. "புதுக்காரில் சீட்டில் வைத்தால் அழுக்காகும், கீழே வெச்சிக்கலாம்" என்று மனைவி சொன்னாள்.

"பூச்செடி, தெய்வம் மாதிரி, காலடியில் வைப்பது தப்பு" என்று தாய் வாதிட, செடி கடைசியில் பின்புற டிரங்கில் வைக்கப்பட்டது.

கார் கிளம்பியவுடன், மனைவி, "யாருக்கு எங்க உபாதை இருந்தா உங்களுக்கு என்ன, நீங்கள் மெடிகல் டாக்டர் இல்லன்னு உடனே ஏன் சொல்லாமே ஆன்னு அவ தொடயப் பாத்துண்டு நிக்கணும்" என்று கத்த, "இந்தப்பொண்ணு மாதிரி செகப்பா ஒரு வரன் இவனுக்கு வந்தது. வாய்க்கறது தானே வாய்க்கும்?" என்று ஏடாகூடமாக தாய் முணுமுணுக்க நான் பேச்சை மாற்றினேன் "எங்க வைக்லாம் வீட்ல இந்தச் செடியை" என்று. இன்னொரு சிறு போர் தோன்றியது. அதைக் கேட்க விரும்பாமல் வானொலி இசையை அதிகப்படுத்தினேன். அவ்வப்போது, காரின் கண்ணாடி வழியே பின்னால் அமர்ந்து கையையும் முகத்தையும் அசைத்து அவர்கள் பேசுவது கண்ணில்பட்டது. ஏனோ காட்ஸில்லா vs. கிங்காங் படம் நினைவுக்கு வந்தது.

காருக்கு பெட்ரோல், வயிற்றுக்கு பிட்சா என்று, விளக்கு வைக்குமுன் வீட்டுக்கு வரமுடியாமல் இரவில் வீடு சேர்ந்தோம்.

மறுநாள் மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியபின், அவர்கள் ஏகமனதாகச் செடி வைக்கத் தேர்ந்தெடுத்த இடம், தோட்டத்தில் நான் சாய்வு நாற்காலி போட்டுக்கொண்டு நிம்மதியாகப் படிக்கும் இடம் என்று தெரிந்தது. இதுதான் தினசரி சமயலறையிலிருந்து செடி வளர்ச்சியைக் கண்காணிக்க நல்ல இடம் என்ற காரணம் காட்டப்பட்டது.

பஞ்சாங்கம் குறித்த நல்வேளையில் என்னை ஒரு குழி தோண்டச் சொன்னார்கள். அந்தப் பாறை மணலில் அரை அடிதான் என்னால் தோண்ட முடிந்தது. பக்கத்துவீட்டு தோட்டக்காரரை அழைத்து (எங்கள் தோட்டக்காரர் வெள்ளிக்கிழமை யாருமில்லாதபோது வந்து மறைவது வழக்கம்) பத்து டாலர் கையூட்டு கொடுத்துத் தோண்டச் சொன்னேன். அவர் இன்னும் ஒரு அரை அடி தோண்டிவிட்டு, இதற்கு மேல ஆழத்தில் வைத்தால் செடி பிழைக்காது என்று சொல்லிவிட்டு, சந்தேகமாகச் செடியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, எதற்கும் இன்னம் ஒரடி வளரும் வரை தொட்டியிலேயே இருக்கட்டும். அப்புறமா நட்டுக்கலாம்" என்று சொல்லிப் போனார்.
ஒரு மாதம் தொட்டியிலேயே இருந்தும் செடி சில அங்குலங்களே வளர்ந்தது. என் மனைவி தன் தோழிகளிடம் பேசி செடி வளர ஆலோசனை கேட்டு, "டாக்டர் விமலா, ஏதோ போடணும்னு சொன்னாங்கனு, மாலா சொன்னா. பெயர் சரியா ஞாபகமில்லையாம், நீங்க நாளைக்கி ஆபீஸ் போற வழியில அவங்களைக் கேளுங்க" என்றாள். மறுநாள் காலை நான் டாக்டர் விமலாவைச் சந்தித்துக் கேட்டேன். ஆபரேசனுக்குப் போகும் அவசரத்தில் அவர் வாய் பேசாமல் பையிலிருந்து மருந்து எழுதும் தாளில் ஒரு பெயரைக் கிறுக்கி என்னிடம் கொடுக்க, அதை என்னால் முழுவதும் படிக்க முடியவில்லை. வாரம் ஒரு தடவை மட்டுமே என்பது மட்டும் புரிந்தது. என்ன மருந்து என்று தெளிவாக இல்லை. என்னிக்கு நமக்கு டாக்டர் கையெழுத்து புரிந்தது? பீஸ் கேட்கும்போது மட்டும் தெளிவாக எண்ணால், எழுத்தால் எழுதி நம்மைத் தாளித்து விடுகிறார்கள்.

இணையத்தில் நடிகை மடிப்பு அம்ஸாவின் பெயர்க்காரணம் பற்றிய சுவையான பெரும் விவாதம் ஒன்று எழுந்தது. நான் இதில் திவீரமாக ஈடுபட மூன்று வாரங்கள் செடி நினைவின்றியே கழிந்தன.
வெளியே வந்தவுடன் அங்கிருந்த ஒரு மருந்துக்கடையில் காட்ட, அவர்கள் என்னை ஏளனமாகப் பார்த்துச் சிரிக்கலானார்கள். ஒருவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு என்னருகில் வந்து, "தவறாக நினைக்காதீர்கள். உங்களுக்கு என்ன வியாதி? எதற்கு இதைச் சாப்பிடவேண்டும்?" என்று கேட்க நான் கோபத்துடன், "எனக்கு ஒன்றும் இல்லை. மல்லிகைச் செடிக்குத் தான் இந்த மருந்து" என்று கத்த, "சார், நீங்க நர்சரிக்குப் போய்க் கேளுங்கள்" என்று அனுப்பினார்கள்.

நர்சரியில் அதைப் படித்துவிட்டு ஒரு பெரிய நூறு பவுண்டு வெள்ளை பிளாஸ்டிக் மூட்டையைக்கொண்டு கொடுத்து ஐந்து டாலர் வாங்கிக்கொண்டார்கள்.

"என்ன மருந்து இது, இவ்வளவு மலிவா இருக்கிறதே" என்று வியப்புடன் கேட்க, "பொடிசெய்த மாட்டுச் சாணம்" என்று பதில் கிடைத்தது. அட்டைமேல் ஸ்டியர் மேன்யூர் பவுடர் என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்கள்.

மூக்கைப் பிடித்துக்கொண்டு வாரம் ஒருமுறை இந்தப் பொடியைச் செடிக்கு இட்டோம். மங்கையர்மலரில், 'குப்பையை வீணாக்காதீர்கள்' என்ற தலைப்பில் காப்பிப்பொடி சக்கையைக் குப்பையில் போட்டு வீணாக்காமல் மல்லிகைக்குப் போடலாம் என்று எழுதியிருந்த குறிப்பை என் மனைவி சிரமேற்கொண்டு அமுல் செய்யலானாள். அதைப்பார்த்து என் மகளும் குடித்தது போக மிஞ்சிப்போன கோக்ககோலாவை செடிக்கு ஊற்றுவதைக் கண்டு அவளைக் கண்டித்தேன்.

டிசம்பரில் குளிர்காலம் வந்தது. லாஸ் ஏஞ்சலஸில் விறைக்கும் குளிர் இல்லாவிட்டாலும், ஒரு செடியைக் கொல்லும் அளவு குளிருண்டு. எனவே பகலில் தொட்டியை வெய்யிலில் கொல்லையிலும், இரவில் வீட்டுக்குள்ளும் வைத்தோம். இரவில் தொட்டி வீட்டுக்குள் வரும்போது சில பூச்சிகளும் உடன் வருவதுடன், அதைக்கண்டு என் மகள் பயந்து சோபாவில் ஏறி நின்று பயத்தில் கத்துவதும், மனைவி ஒரு துடைப்பத்துடன் பூச்சியை அடிக்க வருவதும், "எதுக்கு ஜீவஹிம்ஸை, அதைக் கொல்லாதே, பண்ணின பாவம் போறாதா, அதை வெளியே கொண்டு போடு" என்று தாய் கத்துவதும், நான் பூச்சிகளை ஒரு தபால் கார்டில் சர்க்கஸ்காரன் மாதிரி ஏற்றி வெளியே கொண்டு போய் விடுவதும் வாடிக்கையாயின.

பார்ட்டிகளில் நண்பர்களின், "மல்லிகை வளர்க்கிறதா கேள்விப்பட்டேன், என் பொண்ணு கல்யாண மாலைக்கு இப்பவே சொல்லி வச்சுட்டேன்", "உங்கள் மாலைக்குன்னுதான் கோயில்ல பெருமாள் காத்திருக்கிறாராம்" போன்ற நக்கல்கள் பழகிவிட்டன.

ஒருநாள் ஸ்டாக் மார்க்கெட் சரிவு மாதிரி காரணமில்லாமல் செடி ஒன்பது இலைகளில் ஐந்து இலைகளை தடதடவென உதிர்த்தது. சோகத்துடன் அதை அருகில் சென்று ஆய்ந்த என் மனைவி "பாருங்க, இருக்கிற இலையிலும் ஏதோ புள்ளி மாதிரி இருக்கு" என்றுசொல்ல, "அந்த மெக்சிகப் பொண்ணுக்கும் இப்படித்தான்..." என்று சொல்ல வந்தவன், அவள் கண் குறிப்பறிந்து கட்டுப்படுத்திக் கொண்டேன்.

மனைவி பல நர்சரிகள், நண்பர்கள் எல்லோரையும் விசாரித்து, செடிக்கு ஃபங்கஸ் இன்ஃபக்சன் வந்திருக்கலாம் என்று சந்தேகித்து, உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளையும் ஒருமிக்கக் கொல்லவல்ல ஒரு தெளிதிரவத்தை வாங்கிவந்தாள். வீட்டில் அதைத் தெளித்தவுடன், துர்நாற்றம் தாங்காமல் நான் சிலமணி நேரம் வெளியே இருக்க நேர்ந்தது.

கொல்லைப்புறம் கொண்டுபோய் தெளித்தால், "என்ன பேரழிவு ஆயுதம் மாதிரி ஏதாவது தயாரிக்கிறீரா, பக்கத்தில் மனிதர்கள் உயிர்வாழ வேண்டாமா, போலீசில் புகார் பண்ணவா" என்று பக்கத்து வீட்டிலிருந்து குரல் எழும். பத்து நாள் தீவிர சிகிச்சைக்குப்பின், செடியின் எல்லா இலைகளும் பழுப்பு நிறமடைந்தன.

'ஊர்க்கூடி உரக்க ஒலித்து அழுதிட்டு பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு...' என்ற பாடல் நினைவுக்கு வந்தது. செடிக்குப் பேரை நீக்கும் நேரம் வந்துவிட்டதோ என்று அஞ்சினேன்.

இடையில் பள்ளி விடுமுறையில் மனைவி, தாய், மகள் மூவரும் இந்தியா போய்வரத் தீர்மானித்தார்கள். எனக்கும் போக ஆசை என்றாலும் திரும்பி வரும்போது வேலை இருக்குமோ இருக்காதோ என்ற பயத்தில் போகவில்லை. என் கடமைகள் வரையறுக்கப்பட்டு, அச்சிடப்பட்டு, ஒரு பிரதி குளிர்பதனப் பெட்டியிலும், வாசற்கதவின் உட்பக்கத்திலும் ஒட்டப்பட்டன. என் மனைவியின் ஆலோசனைப்படி "மல்லிகைச் செடிக்குத் தண்ணீர் விட்டாயா" என்று ஒரு சீட்டில் எழுதி என் மகள் காரின் ஸ்டியரிங்கில் ஒட்டி வைத்தாள். "மறந்து போய் கம்ப்யூட்டர்ல முழுகிட வேண்டாம்" என்ற எச்சரிக்கை வேறு.

அவர்கள் இந்தியாவுக்கு விமானம் ஏறிய மறுநாளே, இணையத்தில் நடிகை மடிப்பு அம்ஸாவின் பெயர்க்காரணம் பற்றிய சுவையான பெரும் விவாதம் ஒன்று எழுந்தது. நான் இதில் திவீரமாக ஈடுபட மூன்று வாரங்கள் செடி நினைவின்றியே கழிந்தன.

நான்காவது வாரம் இந்தியாவிலிருந்து மனைவி என்னைத் தொலைபேசியில் அழைத்து விமான நிலையத்துக்கு வரச் சொல்லி நினைவுறுத்தும்போது, "மல்லிகைச் செடி நன்னா வளருதா?" என்று கேட்டாள். "ஆமாம், நீயே வந்து பாரு" என்று அமர்த்தலாகச் சொல்லிச் சமாளித்தேனே தவிர, உடனே கொல்லைப்புறம் போய்ப் பார்த்த போது செடியே இல்லை. வெறும் மட்பாண்டமே இருந்தது.

மண்ணுலகில் எவ்வுயிரும் மண்ணாகும் என்பதை உணர்த்திவிட்டுப் போயே போய்விட்டது. செடி போனதைவிடக் குடும்பத்தினர் திரும்பியவுடன் வரவிருக்கும் மும்முனை இடி நினைவுக்கு வந்தது. அன்று இரவு நண்பர் டாக்டர் கோபாலுடன் பேசும்போது, இதற்கு ஒரு யோசனை சொன்னார். "கவலை வேண்டாம். டெல்டா நர்சரின்னு ஒண்ணு உட்லண்ட் ஹில்ஸ் கிட்ட இருக்கு. அங்க பல சைஸ்ல மல்லிகை வந்து இறங்கிருக்கு. போய் வாங்கிக்க" என்றார்.

உடனே ஒரு யுத்தகால நடவடிக்கை போல நர்ஸரிக்குப் போய், இருக்கிறதிலேயே பெரிய மல்லிகைச் செடி பூக்களுடன் கூடியதாகத் தேர்ந்து ஆர்டர் கொடுத்தேன். மறுநாளே டிரக்கில் எடுத்துவந்து தோட்டத்தில் நட்டுவிட்டார்கள். செடிக்கு ஐம்பது டாலர், கொண்டுவர பத்து டாலர், நட இருபது டாலர் என்று எண்பது டாலர் கரைந்தது.

இரண்டுநாள் பொறுத்து ஊரில் இருந்து எல்லோரும் வந்தவுடன் முதல் வேலையாகச் செடியைக் காண்பித்தேன். காசு கொடுத்துச் செடி வாங்கி நட்டதைச் சொல்லவில்லை.

"நான் பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கிறேன்னு வேண்டிண்டது பலிச்சிடுத்து" என்று அம்மா சொல்ல, "மறக்காம தண்ணி ஊத்தி காப்பாத்திட்டார் உங்க பிள்ளை. கரெக்டா இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தது நல்லதாப் போச்சு" என்று மனைவி மெச்ச, "அப்பா, ஊருல பூக்காரி மல்லிப்பூ ரெண்டு ரூபா ஒரு மொழம்னு வித்தா. அம்மா அவகிட்ட சண்டைபோட்டு ரெண்டு ருபாய்க்கு ரெண்டு மொழம் வாங்கிட்டா" என்று மகள் சொல்ல ஒரு குற்ற உணர்வுடன் 80 x 45 என்று மனதில் கணக்கிட்டேன்.

மறுநாள் மாலை அலுவலத்திலிருந்து வந்தபோது, செடி சுத்தமாக மொட்டையாக இருந்தது! "அய்யோ, என்ன ஆச்சு செடிக்கு?" என்று பதறினேன். என் மனைவி "பிரண்ட்ஸ் எல்லாருக்கும் நீங்க செடி வளர்த்தது பற்றி சொன்னேன். வந்து பாத்திட்டு, ஆளுக்கு ஒரு கிளை ஒடிச்சிட்டு போயிட்டாங்க அவங்க வீட்ல வைக்க. உங்களுக்குதான் பழகிடுச்சே இன்னொண்ணு சுலபமா புதிசா வளர்த்துடலாமே" என்று சொல்லும்போது, நண்பன் வேணுவிடமிருந்து டெலிபோன் வந்தது. "எப்படி வளருது மல்லிகைச்செடி? உனக்கு ஒரு பவழமல்லிகைச் செடி எடுத்து வெச்சிருக்கேன். வாங்கிக்க வரியா" என்றான்.

"சட்டி சுட்டதடா கை விட்டதடா" என்று சொல்லி நான் ஏன் டெலிபோனைக் கீழே வைத்தேன் என்பது அவனுக்கு லேசில் புலப்பட்டிருக்காது.

எல்லே சுவாமிநாதன்
More

கொன்றன்ன இன்னா செய்யினும்...
Share: 
© Copyright 2020 Tamilonline