Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | யார் இவர்? | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
அமெரிக்க முதல் தமிழ் நாடக விழா
ஹாலிவுட் கோலிவுட்!
- காந்தி சுந்தர்|மே 2008||(1 Comment)
Share:
Click Here Enlargeபடமெடுப்பதற்குப் பெயர் என்ன?' என்றார் கடிஜோக் கந்தசாமி. 'பாம்பு' என்றேன் யதார்த்தமாக. 'திரைப்படத் தயாரிப்பாளர்' என்றார் நமுட்டுச் சிரிப்புடன் கந்தசாமி. இந்தியா பாம்புகளுக்கு மட்டும் பிரசித்தி பெற்றதல்ல, உலகிலேயே மிக அதிகமாகப் படமெடுக்கும் நாடுகளில் ஒன்று என்கிறது புள்ளிவிவரம். அதிலும் கோலிவுட் மிகப் பிரபலம்.

திரைப்படக் காய்ச்சல் எடுத்துவிட்டால் ஆட்டிவைத்துவிடும். என்ன செய்தாவது படமெடுக்க வேண்டும், இயக்க வேண்டும், நடிக்க வேண்டும் என்கிற வேகம் ஒரு படைப்பாளிக்கு ஏற்பட்டால் உலகில் எங்கிருந்தாலும் அதை அவன் செய்தே தீருவான்.

அமெரிக்காவுக்கு வந்துவிட்ட சில தமிழர்களுக்கு ஆனதும் அதுவே. தனி யாகவோ நண்பர்களுடன் சேர்ந்தோ இவர்கள் திரைப்படங்களைத் தயாரிக்கிறார்கள். புனைகதைப் படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் என்று எதையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை. ஆங்கிலம் (ஆமாம், திருநெல்வேலிக்கே அல்வா!), தமிழ் என்ற மொழிகளில், சில சமயம் பல மொழிகளில் ஒலிமாற்றம் செய்யப்பட்டவை - எடுத்துத் தள்ளுகிறார்கள்.

ஹாலிவுட்டை அசைத்துப் பார்க்கிறார்கள். ஆஸ்காரைக் குறிவைக்கிறார்கள். கானைக் (Cannes) கலக்கப் பார்க்கிறார்கள். முழுத் திறனோடு, ஊக்கத்தோடு, ஈடுபாட்டோடு புதிய கருத்துக்களங்களைத் தொட்டுப் பார்க்கிறார் கள். தொழில்நுட்பப் புதுமைகளைப் புகுத்துகிறார்கள். கிழக்கையும் மேற்கையும் சந்திக்கச் செய்கிறார்கள்.

படைப்பாற்றலும் துணிச்சலும் கொண்ட புதிய சூறாவளியாகப் புறப்பட்டிருக்கும் சிலரை இங்கே வழங்குவதில் 'தென்றல்' பெருமை கொள்கிறது...

'வெண்ணிலா பிலிம்ஸ்' பார்த்திபன் ஷண்முகம்

இளம் வயதிலேயே நியூயார்க்கிலுள்ள இந்திய தூதுரகத்தில் வணிக மற்றும் பொருளாதாரத் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றியவர் பார்த்திபன் ஷண்முகம். சினிமாவின் மேல் கொண்ட அதீத ஈர்ப்பினால் அரசாங்கப் பணியை உதறிவிட்டு முழுநேரத் தயாரிப்பாளர்-இயக்குனராக மறுஜன்மம் எடுத்தார்.

ஸ்டீவன் ஸ்பீல்பர்க் ஒரு நேர்காணலில் கூறினாராம்: 'பிலிம் ஸ்கூலுக்குப் போகவே வேண்டாம். காமிராவை வாங்கு. படம் எடு. அதை உலகம் அங்கீகரித்தால் நீ பெரிய இயக்குநர்'. பார்த்திபன் இதையே வேத வாக்காகக் கொண்டு களத்தில் இறங்கி விட்டார்.

'மிமிக்ரி' எனப்படும் பலகுரல் கலையில் வல்லுனர் பார்த்திபன். 23 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் 'டூ கிரேசி' என்ற மிமிக்ரி குழுவை நடத்தி வந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் Defence and Strategic Studies துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு சட்டம் படித்தார். பிறகு மேற்படிப்புக்கு அமெரிக்கா வந்தார்.

ஜார்ஜியாவில் (அட்லாண்டா) வசிக்கும் இவர் 'வெண்ணிலா பிலிம்ஸ்' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். குறும்படம் மற்றும் ஆவணப்படங்களைத் தயாரிப்பதோடு பல நவீன யுக்திகளையும் தன் படங்களில் கையாளுகிறார்.

பார்த்திபன் இயக்கிய 'Pizza Story' 2008 ஏப்ரல் மாதம் ஜெய்ப்பூரில் நடந்த அனைத்துலகத் திரைப்பட மாநாட்டில் 'தங்கப் பதுமை' பரிசைத் தட்டிச் சென்றது. இவ்விழாவில் 8 நாடுகளிலிருந்து 129 படங்கள் திரையிடப்பட்டன. கலாசார ரீதியிலான குறும்படங்கள் வரிசையில் இப்படம் தேர்வானது. ராணுவ வீரர்கள் போருக்குச் செல்லும்போது அவர்களது குழந்தைகள் எவ்விதம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே படத்தின் கரு. பிரான்சில் நடக்கும் கான் திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்படும்.

'நான் படித்த நாட்களில் மிக விரும்பிப் படித்த பாடம் போர்வீரர் மனநலம்' என்கிறார் பார்த்திபன். இவர் இயக்கும் படங்கள் இம்மன நலத் தத்துவக் கருத்துகளைப் பிரதிபலிக்கத் தவறுவதில்லை.

பார்த்திபன் இயக்கிய மற்றொரு படம் 'You are rejected'. பிரெஞ்சுத் தொழில்நுட்பமான 'சினிமா வெரீடே' (யதார்த்த சினிமா) பாணியை இதில் கையாண்டுள்ளார். இதில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு அதனைச் சுற்றியே கதை ஓடும். காமிராவும் கூட. அட்லாண்டாவில் கார் மெக்கானிக்காகப் பணியாற்றும் ஜார்ஜ் லீ கிளார்க் என்பவரே இந்தப் படத்தின் மையம். இவர் ஓரினச் சேர்க்கையைத் தீவிரமாக எதிர்ப்பவர். தம் கருத்துகளை அஞ்சாமல் பேசுபவர். இரண்டு வருடங்களில் 140 மணி நேரம் அவருடன் செலவிட்டதில் தாம் பார்த்ததை - இடங்கள், மக்கள், சம்பவங்கள் - இதுபோன்ற அனுபவங்களைக் குறும்படமாக வழங்கியுள்ளார்.

பார்த்திபனின் வரப்போகும் இரண்டு வெளியீடுகள் சற்று வித்தியாசமானவை. இவரது 'Blood Mountain' ஜார்ஜியாவில் ஒரு மலைமேல் நடந்த கொலைச் சம்பவத்தை மையமாகக் கொண்டது. ஆனால், படத்தில் கொலைக் காட்சி கிடையாதாம். மாறாக, கொலையாளி ஏன் அப்படி நடந்து கொண்டார் என்ற கேள்வியைப் பின் தொடர்கிறது படம்.

டென்னஸியில் ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை மையமாகக் கொண்டது 'அந்த 47 நாட்கள்'. இதுவும் விரைவில் திரையிடப்படும். பார்த்திபனின் படங்கள் பன்மொழிப் படங்கள். 'மாதம்மா' - தமிழ், தெலுங்கு; 'Pizza Story' ஆங்கிலம். இதை இராக்கிய மொழியில் மொழியாக்கம் செய்யவிருக்கிறார். 'அந்த 47 நாட்கள்' தமிழ்ப் படம். இவரது 'You are rejected' 50 முறையாவது 'யூடியூபில்' தடை செய்யப் பட்டதாம். மை ·பேஸ்புக்கில் கணக்கற்ற பார்வையாளர்களைக் கொண்ட பெருமை இவருக்கு உண்டு.

தன்னை ஒரு சமூக சீர்திருத்தவாதி என்று வர்ணிக்கும் பார்த்திபன், தன் படங்களின் மூலம் சீர்திருத்தங்களைச் சாதித்துள்ளார். திருப்பதி அருகே ஒரு கிராமத்தில் நடக்கும் குழந்தை விபசாரத்தை வெளிப்படுத்திக் கண்டித்த இவரது படம் 'மாதம்மா' (2006). 'மாதம்மா'வைப் பார்த்ததும், அமெரிக்காவில் இயங்கும் ஆஷா பவுண்டேஷன் ஆந்திராவில் ஆயிரம் குழந்தைகள் படிக்கும் ஒரு பெண்கள் பள்ளிக்கூடத்தை துவக்கியுள்ளனர்.

திருநங்கைகள் எனப்படும் அரவாணிகள் பற்றி இவர் இயக்கிய 'Celestial Brides' படத்தைப் பார்த்ததும், அப்போதைய முதல்வரான ஜெயலலிதா அரங்சாங்கப் பணியில் அரவாணிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்தி அரசாங்கச் செலவில் இவர்களுக்குக் கல்வி மையங்களை நிறுவினார். 'மாய யதார்த்தம்' (Magical Realism) என்பது சினிமாத்துறையில் ஒரு பாடத்திட்டம். இங்கிலாந்தில் மாய யதார்த்த வகுப்புகளில் 'மாதம்மா' ஓர் உதாரணமாகக் காண்பிக்கப்படுகிறது என்பதைப் பெருமையுடன் கூறுகிறார் பார்த்திபன். இவரது கனவு இந்தியாவுக்கு ஆஸ்கர் விருதை வாங்கித் தர வேண்டும் என்பது.

அமெரிக்கத் தொழில் கலைஞர்கள் மட்டுமல்லாமல் வளர்ந்து வரும் இளம் தமிழ் கலைஞர்களுக்கும் தம் படங்களில் பணிபுரியும் வாய்ப்பை அளிக்கிறார் பார்த்திபன். இவரது மனைவி டாக்டர். கலைசெல்வம் அளிக்கும் ஊக்கமே தனது வெற்றிக்கு முதல் காரணமாகக் கூறுகிறார் பார்த்திபன். இவர் வியந்து பார்க்கும் தமிழ் சினிமா இயக்குனர்கள் மிஷ்கின் (அஞ்சாதே), ராம் (கற்றது தமிழ்), அமீர் (பருத்தி வீரன்).

பார்த்திபன் 'தென்றல்' இதழின் விசிறி. ('தென்றல் இருந்தால் விசிறி வேண்டாமே' என்கிறார் கடிஜோக் கந்தசாமி.) இவர் விரும்பிப் படிக்கும் பகுதிகள் நேர்காணல் மற்றும் அலர்மேலு ரிஷியின் கட்டுரைகளாம். பார்த்திபனின் ஆஸ்கர் கனவு நனவாகத் தென்றலின் வாழ்த்துக்கள்.

இவரது படங்கள் பற்றிய விவரங்களைக் காண: www.vennnilafilms.com
Click Here Enlarge'டிரீம்ஸ் ஆன் ·ப்ரேம்ஸ்' வழங்கும் 'மெய்ப்பொருள்'

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் பணிசெய்யும் நான்கு தமிழ் நாட்டு இளைஞர்களின் கூட்டணியே 'டிரீம்ஸ் ஆன் ·பிரேம்ஸ்'. இவர்களது முதல் படைப்பு 'மெய்ப்பொருள்' என்ற இரண்டரை மணி நேர முழுநீளத் திரைப்படம்.

'தமிழில் ஆங்கிலப் படம் ஒன்றை எடுக்க வேண்டுமென்பதே' எங்கள் ஆவல் என்கிறார் 'மெய்ப்பொருள்' இரட்டை இயக்குனர்களின் ஒருவரான நேட்டி என்றழைக்கப்படும் நடராஜ் குமார். ('அதென்ன தமிழில் ஆங்கிலம்?' என்று குறுக்கிட்டார் கடிஜோக் கந்தசாமி. அவரை அசட்டை செய்துவிட்டு மேலே போகலாம்.) இவர் தமிழ்ப் படத் தயாரிப்பாளர் டி.என். ஜானகிராமனின் (மோகமுள்) மகன். தந்தை கொடுத்த பயிற்சி மற்றும் ஊக்கத்தின் காரணமாக அமெரிக்கா வந்த பிறகு பிரத்யேகமாக பிலிம் டெக்னாலஜி படித்தபின் தற்போது களத்தில் இறங்கியிருக்கிறார். 'மெய்ப்பொருள்' முழுக்க முழுக்க சான்பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் தவிர அமெரிக்கர், லத்தீனர், ஐரோப்பியர் எனப் பலதரப்பட்ட கலைஞர்களும் குழுவில் இருக்கின்றனர். படத்தின் இரட்டைத் தயாரிப்பாளர்களில் மற்றொருவர் கிருஷ் பாலா.

நடராஜ் இயக்கிய 'ட்ரூ ஹாலிவுட் ஸ்டோரி' என்ற குறும்படம் பே ஏரியாவில் நடக்கும் சினிக்வெஸ்ட் திரைவிழாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஜனரஞ்சகமான, கலாபூர்வமான (class and mass) என்று இருவகைப் படங்களும் தயாரிப்பதில் இவருக்கு ஆர்வமாம்.

பாலா, கணினிப் பொறியியலாளர். பெர்க்கலியில் படத்தொகுப்புக் கலை பயின்றவர். மெய்ப்பொருளின் இயக்குநர் மட்டுமல்ல, அரிதாரமும் பூசியிருக்கிறார். படத்தின் கதாநாயகரே இவர்தான். கலைப் படங்களைத் தயாரிப்பதே இவருக்கு விருப்பம்.

ஒரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் படத்தைத் தொகுப்பதற்காக பாலா இந்தியாவுக்குச் சென்றபோது பிரபல தமிழ்ப்பட எடிட்டர் லெனினை அணுகியிருக்கிறார். லெனின் எடிட் செய்து தருவதாக ஒப்புக் கொண்டார். ஆனால் தன் பெயரைப் போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். படத்தின் ரஷ்ஷைப் பார்க்கப் பார்க்க அதில் ஈர்க்கப்பட்டு, தன் பெயரைக் கண்டிப்பாக எடிட்டர் என்று போடவேண்டும் என்று கூறிவிட்டாராம்.

'டிரீம்ஸ் ஆன் ·பிரேம்'ஸின் நால்வர் குழுவின் அடுத்த இருவர் தம்பதி. டாக்டர் நாராயணன் மெய்ப்பொருளின் திரைக்கதையைக் கையாண்டிருக்கிறார். நடிகரும்கூட. அதே விரிகுடாப் பகுதியில் தயாரிக்கப்படும் 'ஒன் வே டிக்கட்' படத்தில் ஒரு வேடம் செய்கிறார். இன்டெல் நிறுவனத்தில் பதவியில் வகிக்கிறார் நாராயணன். மனைவி ராணி நாராயணனுக்கு மெய்ப்பொருளின் திரைக்கதையில் பெரும்பங்கு உண்டு.

இணையதளத்தில் மிகவும் பிரபலமான 'கர்நாடிக்.காம்' என்ற தளத்தை இயக்கி வருபவர் ராணிதான். பிராமிஸ் ராணி என அழைக்கப்படும் இவர் நல்ல கர்நாடக சங்கீதக் கலைஞர். படத்தின் கால்ஷீட், செட், இயக்கம், இசையமைப்பாளர் தொடர்பு போன்ற பொறுப்புகள் இவரிடமே.

'எங்கள் முயற்சியில் குறிப்பிட வேண்டிய இரண்டு நபர்கள் சங்கீதா, ஜெயகுமார். இந்த இருவரின் உதவிகள் ஏராளம்' என்கிறார் நடராஜ்.தயாரிப்புக்குப் பிற்பட்ட வேலைகளுக்கு மேற்பார்வை சங்கீதா. திரைக்கதையிலும் பங்களித்தார். முதலில் பாடல்களே இல்லாத படமாகத்தான் எடுக்க நினைத்தாராம். கதையின் போக்கைப் பார்த்து மூன்று பாடல்களை இணைக்க முடிவு செய்துள்ளனர். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் இருவரிடமும் உதவியாளராக இருந்த ராகுல் இப்படத்தின் இசையமைப்பாளர். இந்தியாவிலுள்ள புதிய பாடகர்களுக்கே வாய்ப்பளிப்பது என முடிவு செய்துள்ளார். 'மெய்ப்பொருள்' ஒரு திகில் படம். 'சண்டையோ ஆபாசமோ இல்லாத குடும்பத்தில் அனைவருடனும் சேர்ந்து பார்க்கக் கூடிய படம்' என்கின்றனர் குழுவினர். ('அப்படீன்னா எனக்குப் பிடிக்காது' என்று காதைக் கடித்தார் கடிஜோக் கந்தசாமி).

கதாநாயகி அனுஷா மாடலிங் துறையில் அனுபவமுள்ளவர். அமெரிக்காவில் பணி செய்கிறார். 'மெய்ப்பொருள்' ஆங்கிலத்தில் சப்-டைட்டில்களுடன் வெளியாகும். தெலுங்கிலும், ஹிந்தியிலும் டப் செய்யப்படும். மே மாத இறுதியில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் திரையிடப்படும்.

இதில் முத்தாய்ப்பு என்னவென்றால் படத்தின் பல காட்சிகளில் 'தென்றல்' நடிக்கிறது. தென்றல் பெயராகவும் புத்தகமாகவும் பல காட்சிகளில் வருவது மட்டுமல்ல, கதாநாயகியே 'தென்றல்' நிருபர். (இதை நிஜமென்று நம்பி எங்கே தென்றல் அலுவலகத்தில் கடிஜோக் ஆசாமி பழிகிடக்கப்போகிறாரோ என்று அச்சத்தோடு அவரைத் திரும்பிப் பார்த்தேன். அசட்டுச் சிரிப்பு சிரித்தார் கந்தசாமி.)

மெய்ப்பொருளில் தென்றல் வீசட்டும், தென்றலில் எப்போதும் போல் மெய்ப்பொருளைக் காண்போமாக.

'சீஜே மீடியா'வின் 'ஒன் வே டிக்கட்'

அரிசோனாவில் பொழுதுபோக்காகத் தமிழ்ச் சங்கம் மற்றும் இதர மேடைகளில் நாடகங்களும் நிகழ்ச்சிகளும் நடத்தி வந்த இரண்டு நண்பர்களின் தயாரிப்பு 'One Way Ticket'. இதுவும் ஒரு பே ஏரியா வெளியீடு.

சென்னையைச் சேர்ந்த சீனு கிருஷ்ணன், ஜெய்சங்கர் இருவரின் கூட்டணியில் ஏற்பட்டது 'சீஜே மீடியா'. இவர்களது தயாரிப்பான 'ஒன் வே டிக்கட்' ஒரு 93 நிமிடத் திரைப்படம். இதில் 3 நிமிடம் தமிழ் வசனங்கள் உண்டு. ('அப்பாடா, மூணு நிமிஷமாவது எனக்கு வசனம் புரியும்' என்று நிம்மதிப் புன்னகை பூத்தார் கடிஜோக் கந்தசாமி). இவர்கள் திரைப்படப் பள்ளியில் பயின்றவர்கள் அல்லர். ஆனால் மேடை அனுபவம் உள்ளவர்கள். நரிக்குறவர்களின் வாழ்வைப் பற்றிய இவர்களது 'Lost Gypsies' என்ற ஆவணப் படம் 2002ம் ஆண்டில் சான்பிரான்சிஸ்கோவில் 'கோல்டன் கேட்' விருதை வென்றது.

'எங்கள் அனுபவத்தையே மூதலீடாக வைத்துத் தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கினோம்' என்கிறார் இயக்குநர் மற்றும் இணைத்தயாரிப்பாளர் சீனு கிருஷ்ணன். மூலக்கதை¨யை எழுதியவர் சீனுவின் தாயார் ஸ்ரீதேவி கிருஷ்ணன். சென்னை ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஸ்ரீதேவி ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட. பெமினா, உமன்ஸ் ஈரா போன்ற பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுபவர். சிறுகதைப் படைப்பாளி. மகன் சீனுவைப் பார்க்க அமெரிக்கா வந்த போது இவர் சந்தித்த மனிதர்கள், இவ்வூரின் நிகழ்வுகள் ஆகியவற்றை ஒரு கதையாக்கிப் புத்தகமாக வெளியிட்டார். பெயர் 'சிலிகான் கேஸில்ஸ்'. புத்தகமாக வெளிவந்த அதேநேரம் சினிமாவாகவும் உருவாகத் தொடங்கியது. ('நானும் இங்கயேதான் இருக்கேன், எனக்கு ஒண்ணும் எழுதத் தோணலியே' என்று முணுமுணுத்தார் கடிஜோக்).

மற்றோர் இணைத் தயாரிப்பாளர் ஜெய்சங்கர் தமிழ் ஆர்வலர், பாடகர். நடிகை ரேவதி சங்கரனின் மகன். இளம் வயதிலிருந்தே தாயாரின் படங்களில் நடித்ததோடு அவரைப் போலவே சங்கீத ஆர்வமும் ஞானமும் உள்ளவர். படத்தில் இவர்தான் ஹீரோ. இந்தப் படத்தின் தொகுப்பாளர், இசையமைப்பாளரும் இவரேதான். தான் ஏற்ற பல பொறுப்புகளில் எது மிகவும் கடினமாக இருந்தது என்று நாம் கேட்டதற்க அவர் சொன்னார், 'படத்தில் ஹீரோவின் கேரக்டருக்குள் என்னைப் புகுத்துவதே கடினமாக இருந்தது. அதைச் சரிவர செய்ய ஒரு வாரம் ஆயிற்று. அந்த ஹீரோவின் குணாதிசயங்கள் என் சொந்த குணதிசயங்களுக்கு மாறுபட்டவை. என்னை அவனாகப் பாவித்து நடிக்க என்னைத் தயார் செய்துகொள்ளச் சற்று நேரம் தேவைப்பட்டது.'

இசையமைப்பது எளிதாக இருந்ததாம். எடிட்டிங்கும்கூட. அரிசோனாவில் இருந்த நாட்களில் 'காஸ்மிக் மந்த்ரா' என்ற இசைக் குழுவை நடத்தி வந்திருக்கிறார் ஜெய். அதில் உடனிருந்த நண்பர் ராஜேஷ் ராமமூர்த்திதான் படத்தில் வரும் ஒரே தமிழ்ப் பாடலின் பாடலாசிரியர் மற்றும் பின்னணிப் பாடகர். 'அகிலமும் ஆசையும்' எனத் தொடங்கும் இப்பாடல் அமிர்தவர்ஷிணி ராகத்தில் அமைந்தது.

முழுக்க முழுக்கச் சனி ஞாயிறுகளில் மட்டுமே படமாக்கியிருக்கின்றனர். இருவருமே கணினித் துறையில் நல்ல பொறுப்பில் இருப்பதால் ஓய்வு நேரத்தில் மட்டுமே படப்பிடிப்பு. ஓராண்டுக் காலத்தில் கிட்டத்தட்ட 100 நாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது, சென்னை, அரிசோனா, லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

படத்தின் கதாநாயகி ஷீல் குப்தா. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்தியர்.

இந்தியாவிலிருந்து வரும் இளைஞர்கள் அமெரிக்க வாழ்க்கை முறைக்குத் தம்மை எப்படி மாற்றிக் கொள்கின்றனர். அதில் ஒருவர் அமெரிக்காவில் பிறந்த வளர்ந்த பெண்ணை மணந்துகொண்டு எப்படி மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கின்றார் என்பதுதான் கதையின் கரு. மார்ச் மாதத்தில் மூன்று வாரங்கள் மட்டும் விரிகுடாப் பகுதித் தமிழருக்காகத் திரையிடப்பட்ட இந்தப்படம் உலகெங்கும் பிரத்யேகமாக டிவிடி மூலமே வெளியாகப் போகிறது. சில டீவி சேனல்கள் வழியே சிறப்பு ஒளிப்பரப்புச் செய்யவும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது.

சீனு, ஜெய்சங்கர், ராஜேஷ் ஆகிய மூவரும் ஒரே குரலில் 'பல இளைஞர்கள் சினிமாவுக்கு வரவேண்டும். இதில் புகழ் மட்டுமல்ல, பணமும் இருக்கிறது' என்று கூறுகிறார்கள். இந்த இரண்டுக்கும் ஆசைப்படாதவர்கள் இருக்கிறார்களா என்ன!

படத்தைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு: www.onewayticketthemovie.com

அட்டையில்: மெய்ப்பொருள் படத்தில் ஒரு காட்சி

காந்தி சுந்தர்
மேலும் படங்களுக்கு
More

அமெரிக்க முதல் தமிழ் நாடக விழா
Share: 
© Copyright 2020 Tamilonline