Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
மணலில் எழுதிய எழுத்து
அனிதாவின் சிரிப்பு
அடுத்த பரிணாமம்...
- ராம வைரவன்|ஏப்ரல் 2008||(1 Comment)
Share:
Click Here Enlargeதெருவில் அவன் தன்னைத்தானே சாட்டையால் 'சுளீர், சுளீர்' என அடித்துக்கொண்டான். அவன் வெற்றுடம் பில் அடிபட்ட இடங்கள் இரத்தக் கோடுகளைப் போட்டிருந்தன. அவன் மனைவி 'உர்ம்ம், உர்ம்ம்' எனத் தேய்த்துக் கொண்டிருந்த உருமிமேளம் அந்த நிகழ்வை மேலும் உக்கிரமாக்கிக் கொண்டிருந்தது. கூட்டம் வேடிக்கை பார்த்து விட்டுப் போய்க்கொண்டே இருந்தது.

அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்களில் ஜெகனும் ஒருவன். ஜெகனுக்கு நமக்கென்ன என்று சும்மா பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவன் அடித்துக் கொள்கிற ஒவ்வொரு சாட்டையடியும் ஜெகனின் மனத்தில் அடிப்பதாக இருந்தது. யாராவது நிறுத்த மாட்டார்களா என்று வந்தது. 'ஏன் நானே போய் நிறுத்தக் கூடாது?' என்று நினைத்த மாத்திரத்தில் சரசரவென்று அவனை நெருங்கிச் சாட்டையை ஒருகையால் பிடித்துக்கொண்டு கேட்டான் 'ஏய்.. நில்லு. ஏன் ஒன்ன நீயே அடிச்சுக்கிறே? நீ என்ன பைத்தியமா?'

அதற்குச் சாட்டை பதில் சொன்னது 'நான் பைத்தியம்னா அப்ப அவங்க?'

'ஏய் என்ன சொன்னே? என்றான் ஜெகன். 'அங்க ஒரு கூட்டமே இப்பிடி இருக்குது தெரியுமா? வா.. காட்டுறேன்' என்று பரபரவென்று ஜெகனின் கையைப் பிடித்து இழுத்துச் சென்றான் சாட்டை.

அந்தப் பகுதி ஜெகன் அதுவரை பார்த்திராத பகுதியாக இருந்தது. அடர்காடு. சுற்றிலும் மரங்களே சுவராக. அதன் நுழைவாயில் கூட மரப்பொந்து போலத்தான் இருந்தது. அதுவரை கூட வந்த சாட்டை, 'உள்ள போய்ப் பாரு சாமி' என்று சொல்லிவிட்டு நழுவிவிட்டான்.

ஜெகன் 'இங்கு ஏன் வந்தோம்? யாரைப் பைத்தியங்கள் என்றான்?' என்று எண்ணிய படி முன்னெச்சரிக்கையோடு தப்படிகள் வைத்து உள்ளே போனான். அங்கே ஒரு மரப்பலகையில் 'மனிதனின் அடுத்த பரிணாமம்' என்று எழுதப்பட்டிருந்தது. காலில் ஏதோ தட்டுப்பட்டது. கீழே பார்த்தான். மனிதக்கை வெட்டுப்பட்டுக் கிடந்தது. அதிலிருந்து வடிந்த குருதி உறைந்திருந்தது. ஒரு கணம் திகைத்து நின்றான். ஆப்பிள் மரங்களிலிருந்து ஆப்பிள் பழங்களும் இலைகளும் உதிர்ந்து கிடந்தன. காய்ந்து போன சருகுகள் அவன் நடக்க நடக்கச் சத்தம் போட்டன. பறவைகள் வினோத 'கூ, குக்கூ' ஒலிகளை எழுப்பின. கால்களில் மீண்டும் எதோ தட்டுப்பட்டது. குனிந்து இலைகளை விலக்கிப் பார்த்தான். ஒரு மனிதக்கால். 'ஐயோ அம்மா! இதென்ன கொடுமை. திரும்பிப் போய் விடலாமா?' திரும்பிப்பார்த்தான். நுழைவாயில் எங்கே? வெகுதூரம் வந்துவிட்டோமோ? நெஞ்சில் பயம் அப்பிக் கொண்டது. வேகமாக நடந்தான் கால்போன போக்கில். கால்களில் சருகு களுக்குக் கீழே கொழ கொழ என்று மனித உறுப்புக்களின் மேல் நடப்பதாகப் பட்டது. 'ஹோ' என்று சூரைக்காற்று வீசியது. மரங்கள் ஆடின. மூச்சு வாங்கியது. குனிந்து கையால் துழாவி எதையோ எடுத்துப் பார்த்தான். அவனையே முறைத்துக் கொண்டு
ஒரு மனிதக் கண். அதிர்ந்து, அருவருப்பாகித் தூக்கிவீசி எறிந்தான். கையில் பிசுபிசுப்புப் போக சருகுகளில் கையைத் தேய்த்துக் கொண்டான். அப்போது அங்கே அவனுக்கு மிக அருகே அவன் கண்ட காட்சி அவனை அதிர்ச்சிக் குள்ளாக்கியது.

புராணங்களில் வரும் அரக்கர்களைப் போலப் பிரும்மாண்ட மனிதர்கள் நால்வர். என்ன செய்கிறார்கள்? உடற்பயிற்சியா? சத்தமில்லாமல் அங்கிருந்த மரத்திற்குப் பின்னே மறைந்து கொண்டு பார்வையைச் செலுத்தினான். அங்கே ஒரு மரப்பலகையில் பட்டுத்துணி விரித்து அதில் குத்தீட்டி, சூரிக்கத்தி, வீச்சறிவாள் என ஆயுதங்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. இன்னொரு பலகையில் பாட்டில் பாட்டிலாக மருந்துப் பொருட்கள், இரத்தம் ஒத்தி எடுக்கப் பஞ்சு, கட்டுப்போடத் துணி இருக்கின்றன. ஒருவன் சூரிக்கத்தியை எடுத்து அவன் கண்ணை அவனே நோண்டிக்கொள்கிறான். ஏதோ ஐஸ்கிரீம் ஸ்கூப்பரைக் கொண்டு ஸ்கூப் பண்ணுவது போல. இரத்தம் பீய்ச்சி அடிக்கிறது. இன்னொருவன் கத்தியினால் அவன் தொடையை அறுத்து எறிகிறான். இன்னொருவன் அவன் காதை அவனே துண்டித்துக் கொள்கிறான். நாலாவது ஆள் அவன் ஒடித்துக் கொண்ட காலுக்கு மருந்து போட்டுக் கட்டுப்போட்டுக் கொள்கிறான்
ஜெகனுக்கு சாட்டைக்காரன் சொன்னது புரிந்தாற்போல் இருக்கிறது. 'சந்தேகமே இல்லை. இவர்கள் பைத்தியங்கள் தான் என்ற முடிவுக்கு அவன் வந்து கொண்டிருக் கையில் அவன் தோள் மீது கை.

ஜெகன் பயந்து திடுக்கிட்டுத் திரும்ப, கைக்குரியவன்! ராட்சசன் உருவில் இல்லை நல்லவேளை. மூச்சு வந்தது ஜெகனுக்கு! வெள்ளைக் கோட்டு உடுத்தி இருக்கிறான். மருத்துவனோ? இல்லை, விஞ்ஞானியோ? அவனே சொல்கிறான் பயப்படாதே! நீ நினைப்பதுபோல் நான் விஞ்ஞானிதான். உன் கண்கள் என்னிடம் கேட்கிற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் என்னிடம் இருக்கிறது. கேள். இவர்கள் மனிதனின் அடுத்த பரிணாமம். இவர்களின் உடலைப் பார்! கைகளில், கால்களில் பார். தோலுக்கடியில் வண்டு புகுந்து ஊர்கிறது பார்.

'இவர்கள் ஓயாமல் உடற்பயிற்சி செய்து உடல் வளர்த்தார்கள். ஒரு கட்டத்தில் இவர்களின் செல்களுக்குத் தனித்தனியே மூளை உருவானது. அவை வளர்ந்தன. சிந்திக்கத் தொடங்கின. கூட்டம் சேர்த்தன. கைப்பகுதியில் இருந்த செல்கள் ஒன்று கூடின. ஒரு செல் பேசியது நாம்தான் மனித உடலிலேயே சிறந்த செல்கள். அந்தப் பேச்சைக் கேட்டதும் இரத்தம் சூடேறி, நரம்புகள் புடைத்து வெறி பிடித்து பக்கத்து உறுப்புக்களைத் தாக்க ஆரம்பித்தன. அதனால்தான் இவர்களின் உறுப்புகளுக்குள் உள்யுத்தம். மனிதனைப் போல் செல்களுக்கு இரக்க குணமும் இருக்கிறது. அதனால்தான் ஒருகணம் அடித்துப் போடவும், மறுகணம் மருந்து போடவும் செய்கிறது.'

எல்லாம் சொல்லி முடித்து 'நீ இன்னும் ஏதாவது கேட்க நினைத்தால் கேள்' என்றான் அந்த அடுத்த தலைமுறை விஞ்ஞானி.

'இவர்களின் மூளை என்னவாயிற்று?' என்ற ஜெகனின் கேள்விக்கு விஞ்ஞானி சொன்னான் 'செல்களின் மூளைச் செயல் பாட்டால், மூளைப்பகுதி மழுங்கி விட்டது!'

ராம வைரவன், சிங்கப்பூர்
More

மணலில் எழுதிய எழுத்து
அனிதாவின் சிரிப்பு
Share: 




© Copyright 2020 Tamilonline