Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
யோசிப்பதைக்கூட ஆங்கிலத்தில் செய்கிறோம்! - டாக்டர் ஆ. ராஜாராமன்
இந்தியாவுக்கு வெளியே இருக்கும் வசதி குறைந்த தமிழருக்குக் கலாசாரம் காக்க உதவுங்கள் - டாக்டர் வா.செ. க
- ஹரி கிருஷ்ணன், அரவிந்த் சுவாமிநாதன், கோம்ஸ் கணபதி|மார்ச் 2008|
Share:
Click Here Enlargeநேர்காணல், புகைப்படங்கள்: ஹரி கிருஷ்ணன், அரவிந்த் சுவாமிநாதன்
உதவி: கோம்ஸ் கணபதி

(சென்ற இதழ் தொடர்ச்சி)

குலோத்துங்கன்' என்ற பெயரில் கவிதைகள் எழுதிவரும் பன்முக அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்களோ டான நேர்காணலின் முதல் பகுதி சென்ற இதழில் வெளியானது. அதன் இறுதிப் பகுதி இன்னும் பல சுவையான கருத்துக்களோடு இதோ...

கேள்வி: தற்போது தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலேயே ஒருவர் பட்டப்படிப்பு முடித்து விடலாம் என்ற நிலை நிலவுகிறது. இந்தப் போக்கு சரியானது தானா?

பதில்: நான் மிகுந்த தமிழ்ப் பற்று உடையவன் என்பதை ஒப்புக் கொள்வீர்கள். இருந்த போதிலும் தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காமலேயே பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடிக்க முடியும் என்ற நிலை இருப்பதை ஒரு பிரச்சினையாக நான் கருதவில்லை.

கே: தமிழ் ஒரு செவ்வியல் மொழி என்று அறிவிக்கப்படுவதற்கான பின்னணியில் நீங்களும் இருந்திருக்கிறீர்கள். அது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!

ப: தமிழைச் 'செவ்வியல் மொழி' என்று சொல்வதுதான் பொருத்தமானது. Classical என்று ஆங்கிலத்தில் சொல்வதற்குச் செவ்வியல் என்பதுதான் இணையான கலைச்சொல். செவ்வியல் இசை, செவ்வியல் ஓவியம், செவ்வியல் சிற்பம் என்று துறைவாரியாக வகைப்படுத்துகிறோம். அதேபோல மொழியைக் குறிக்கவும் 'செவ்வியல்' என்ற அடைமொழியை நான் பயன்படுத்துகிறேன்.

ஒரு மொழி செவ்வியல் மொழி என்ற தகுதியைப் பெறவேண்டுமானால், அந்த மொழியின் தொல்லிலக்கியங்களின் சிறப்பின் அடிப்படையிலேயே அதைப் பெறமுடியும். இந்திய அளவில் பார்க்கும் போது, குடியரசுத் தலைவர் மாளிகையில் வடமொழி, பாலி, அரேபியம், பிராகிருதம், பாரசீகம் ஆகிய ஐந்து மொழிகளிலும் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கும் நடைமுறை ஒன்று இருந்து வருகிறது. இந்த விழாவைச் செவ்வியல் மொழி விழா என்று அதிகாரபூர்வமாக அரசு ஆணைகளில் குறிப்பிடவில்லை. எனினும், பத்திரிகைகளிலும் இதர ஊடகங்களிலும் 'செவ்வியல் மொழியறிஞர்களுக்கு விருதளிக் கும் விழா' என்றே தொடர்ந்து இது குறிக்கப்பட்டு வந்தது. 'தமிழும் இந்த மொழி களுக்கு இணையான சிறப்புகளைக் கொண்ட ஒரு மொழிதானே, தமிழுக்கும் இத்தகைய சிறப்பிடம் வழங்கப்பட வேண்டியதுதானே' என்ற கோரிக்கை எழுந்தது. அவ்வாறு கேட்கும்போது, பத்திரிகைகளும் ஊடகங்களும் பயன் படுத்திய அதே பெயரைப் பயன்படுத்தி, 'தமிழ் ஒரு செவ்வியல் மொழி என்பதை உலகம் எப்போதோ ஏற்றுக் கொண்டு விட்டது. மைய அரசு இதை ஏற்றுச் செயல்பட வேண்டும்' என்ற கோரிக்கையைக் கலைஞர் அவர்களின் தமிழக அரசு வலியுறுத்தி அதில் வெற்றியும் கண்டது.

கே: நீங்கள் நல்ல கவிஞரும் கூட. உங்கள் கவிதை ஆர்வம் பற்றி..

கருத்துகளை வெளியிட வடிவம் ஒரு தடையாகவே இருந்ததில்லை. சொல்லப் போனால், புதுக்கவிதை முயற்சிகளில் தொடப்படாத எத்தனையோ தலைப்புகளை நான் மரபுக் கவிதையாக இயற்றியிருக்கிறேன்.
ப: எனக்குக் கவிதை இயற்றுவதில் இளமையிலிருந்தே ஆர்வம் உண்டு. 17 வயதிலேயே என் கவிதை பிரசுரமாகி இருக்கிறது. நான் முறையாக யாப்பிலக்கணம் பயிலவில்லை. இருந்தபோதிலும் மரபு வடிவம்தான் என்னுடைய வழிமுறை. மரபுக் கவிதைக்குத் தமிழ்க்கவிதை இலக்கியத்தில் ஈடுபாடும் காதும்தான் வழிகாட்டிகள். என்னுடைய சில உணர்ச்சிகள் வலிமை பெற்று, வெளிப்பாடு தேவைப்பட்ட சமயங்களில் அவை கவிதைகளாக வடிவம் பெற்றன. ஈடுபாடு, இழப்பு, ஏழைமையின் கொடுமை, சமூக அவலங்கள், மானிட வெற்றிகள் அதன் தாக்கம் என்று பலவித மான உணர்வு நிலைகள் என் கவிதைகள் உருப்பெறக் காரணமாக இருந்திருக் கின்றனவே தவிர, எழுதவேண்டும் என்பதற்காகப் பேனா, காகித்தை எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்து எழுதப்பட்டவை அல்ல.

'குலோத்துங்கன் கவிதைகள்' என்ற தொகுப்புத் தவிர மற்றொரு தொகுப்பும் வெளிவந்துள்ளது. நான் கையாளும் வடிவம்தான் மரபு சார்ந்ததே தவிர, உள்ளடக்கம் எப்போதும் சமகாலத்ததாகவே இருந்து வந்திருக்கிறது. கருத்துகளை வெளியிட வடிவம் ஒரு தடையாகவே இருந்ததில்லை. சொல்லப் போனால், புதுக்கவிதை முயற்சிகளில் தொடப்படாத எத்தனையோ தலைப்புகளை நான் மரபுக் கவிதையாக இயற்றியிருக்கிறேன். மரபு வடிவங்களின் பெரும்பாலான கூறுகள் இயல்பாக மக்களிடத்தில் விரவிக் கிடப்பனதாம். எளிய மக்களுடைய உரையாடல்களில்கூட காடு-கழனி, சீரும் சிறப்பும், தோப்பு துரவு போன்ற மோனை அமைப்பும் பல சமயங்களில் எதுகை அமைப்பும் இயல்பாகக் கையாளப்படுவதைக் காணலாம். தமிழ்மொழி கவிதைக்காக என்றே அமைந்த மொழி. இந்த மொழியின் ஒலிநயத்தை ஒதுக்கிவைத்துவிட்டு எழுதுவது எனக்குத் திருப்தி அளித்ததில்லை.

தற்போது 'மானுட யாத்திரை' என்ற குறுங்காவியம் ஒன்றை எழுதிக் கொண்டிருக் கிறேன். பண்டைக் காலத்திலிருந்து இன்று வரையில் மனிதகுலம் சமூகவியல், அரசியல், அறிவியல், ஆன்மீகம், சமயம் இன்னபிற துறைகளில் அடைந்துள்ள வளர்ச்சி, எழுச்சி, மாற்றங்கள் ஆகியவற்றை இதில் ஆவணப்படுத்துகிறேன். இதுவரையில் இரண்டு தொகுதிகள் வெளியாகி உள்ளன. ஆன்மீகம் குறித்த மூன்றாவது தொகுதியை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

கே: பல தலைவர்களுடன் பழகியிருக்கிறீர்கள். அந்த அனுபவங்களைப் பற்றி...

ப: யாரிடமும் நான் நெருங்கிப் பழகியதில்லை. ஆயினும் கலைஞருக்கு அவ்வப்போது கடிதங்கள் எழுதுவேன். குறிப்பிட்ட சில பிரச்சினைகளில் என்னுடைய கருத்து என்ன என்பது குறித்து அவருக்குக் கடிதம் எழுதித் தெரிவிப்வேன். சிலசமயங்களில் அவர் அவற்றை முரசொலியில் பிரசுரிப்பதும் உண்டு. அண்மையில் உ.வே. சாமிநாத ஐயர் அவர்களுடைய 150வது ஆண்டு நடந்த சமயத்தில் நான் கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதினேன். 'தமிழுக்குச் செவ்வியல் மொழி என்ற அங்கீகராம் கிடைப்பதற்குக் காரண மாக இருப்பவை நம் சங்க இலக்கியங்கள் தாம். இப்படிப்பட்ட 18 சங்க இலக்கிய நூல்களில் 14 ஐயர் தேடித்தேடிப் பதிப்பித்தவைதாம். பல பெரியவர்களுக்குத் தபால்தலை வெளியிட்டுள்ள மைய அரசு ஐயரவர்களுக்கு வெளியிடவேண்டும். அவர் தமிழுக்கு ஆற்றியிருக்கும் தொண்டு மிகப் பெரிது' என்று எழுதியிருந்தேன். அதைக் கலைஞர் ஒரு கூட்டத்தில் படித்துக் காண்பித்திருக்கிறார். அக்கூட்டத்தில் பங்கேற்ற தயாநிதி மாறன் அவர்களிடம், 'குழந்தைசாமி இவ்வாறு எழுதியிருக்கிறார்' என்று வெளிப்படையாகச் சொல்லி, உவேசா அவர்களுக்குத் தபால்தலை வெளியிட ஆவன செய்தார்.
கே: தற்போது செய்து வரும் பணிகள் குறித்து...

தமிழ் செவ்வியல் மொழியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, மைசூரில் உள்ள இந்திய மொழிகள் நிறுவனத்தில் செவ்வியல் தமிழுக்காக மத்திய அரசு 'தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம்' என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வாரியத்தின் தலைவராக இருக்கிறேன். தமிழ்மொழி மேம்பாட்டு வாரியத்தின் தலைவராக இருக்கிறேன். மொழிவளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பதை இதன் உறுப்பினர் களும், செயல்வழி உறுப்பினர்களும் ஆலோசித்துப் பத்துத் திட்டங்களை வகுத்துள்ளோம். சங்க காலம், சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த 41 நூல்களுக்குச் செம்பதிப்பு ஒன்று கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். இதுவரையில் உள்ள பதிப்புகளில் காணப்படும் குறைகளை ஆய்வின் அடிப்படையில் களைந்து நல்ல பதிப்பாக இவை வெளிவரும்.

வடமொழிக்குச் செவ்வியல் மொழி என்ற தகுதி மிகப்பல ஆண்டுகளுக்கு முன்னா லேயே வந்துவிட்டது எப்படியென்றால், 17ம் நூற்றாண்டில் ஒரு முகலாய அரசர் ஐம்பதுக்கு மேற்பட்ட உபநிஷதங்களைப் பாரசீகத்தில் மொழிபெயர்க்கச் செய்திருக் கிறார். பிறகு அங்கிருந்து லத்தீனிலும் பிற மேலைநாட்டு மொழிகளிலும் இவை பெயர்க்கப்பட்டன. 18ம் நூற்றாண்டிலும் பல வடநூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. எனவே வடமொழி நூல்கள் உலக அளவில் அதிகமாகப் பரவியிருந்தன. தமிழுக்கோ, 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில்தான் சங்க இலக்கியமே கிடைத்தது. எனவே, வடநூல் களுக்குக் கிடைத்த கவனம் தமிழ்நூல்களுக்கு மேலைநாடுகளில் கிடைக்கவில்லை. தமிழ் உலக அளவில் கவனம் பெற, நம்முடைய இலக்கியங்களை இதுவரை செய்திருப்பதை விடப் பெரிய அளவில் ஆங்கிலத்திலும், இந்திய மொழிகளிலும் மொழிபெயர்ப்பது அவசியம்.

முன்னரே மொழிபெயர்க்கப்பட்டுவிட்ட திருக்குறள் போன்ற சில நூல்களின் மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டு, தரப் படுத்துவது ஒரு பணி. இன்றைய கண் ணோட்டத்துக்கு ஏற்பப் பொருள் ஏதும் தென்படுமானால் அதனை அடிக்குறிப்பாகத் தருவதும் அவசியமாகிறது. இந்தப் பணிகள் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன.

இப்போதைய தமிழ் அகராதியில் இடம்பெறாத ஏராளமான சொற்கள் புழக்கத்தில் உள்ளன. எடுத்துக் காட்டாக, எங்கள் பகுதிகளில் home என்பதற்கு இணைச் சொல்லாக 'வளவு' என்று வழங்கி வருகிறது. இது அகராதிகளில் இந்தப் பொருளில் இல்லை. உழவு, தச்சு, நெசவு, மீன்பிடித்தல் போன்ற பல தொழில்களில் புழக்கத்தில் உள்ள சொற்களும் இடம் பெறவில்லை. இவற்றையும் சேர்த்தால், அகராதியில் புதிதாக சுமார் 1 லட்சம் சொற்கள் சேர்க்கப்படலாம். இதற்குத் தமிழகம் முழுமையும் சுற்றியலைந்து சேகரிக்க 500 நபர்களாவது தேவைப்படும். இது ஒரு அவசரப் பணி. உடனடியாகச் செய்யாவிட்டால் பலசொற்கள் வழக்கொழிந்தே போய்விடும்; பிறகு அவற்றைச் சேர்ப்பது இயலாத ஒன்றாகிவிடும். இதையும் செய்து வருகிறோம்.

இதைத் தவிர தமிழ்வளர்ச்சிக் கழகம் என்ற ஒரு நிறுவனத்துக்கு நான் தலைவராக இருக்கிறேன். சித்த மருத்துவம் குறித்த களஞ்சியம் ஒன்று 8 தொகுதிகளாக வெளிவந்திருக்கிறது. மருத்துவக் களஞ்சியம் 12 தொகுதிகளாக வந்துள்ளது. சித்த மருத்துவ நூல்களை ஆங்கிலத்தில் வெளியிடும் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ 2.5 லட்சம் கலைச்சொற்களை நான் தலைவராக இருக்கும் தமிழ் இணையப் பல்கலைக் கழத்தின் இணையதளத்தில், தமிழகப் பல்கலைக்கழகங்களின் உதவிகொண்டு தொகுத்திருக்கிறோம். அவற்றை இணையத் தில் உள்ள அகராதிகளாகத் தொகுத்து ஒழுங்குபடுத்துவது, மருத்துவ, அறிவியல், தொழில்நுட்ப, இதர கலைச்சொற்களைத் தொகுத்து நெறிப்படுத்தி வழங்குவது போன்ற பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றுக்குப் பலர் உதவுகிறார்கள்.

கே: இளையதலைமுறையினருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப: தகுதியைக் காட்டிலும் சிபாரிசு போன்ற மற்ற துணைகளும் தேவைப்படுகின்றன என்றொரு எண்ணம் ஏற்பட இன்றைய சூழல் காரணமாக இருக்கிறது. இருந்த போதிலும், தகுதியுடையவருக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தே தீரும். சிலருக்குத் தாமதமாகக் கிடைக்கலாம். அப்படித் தாமதமாகக் கிடைப்பதற்கு ஓர் எடுத்துக் காட்டாக நீல. பத்மநாபன் அவர்களைச் சொல்லலாம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே அவருக்குக் கிடைத்திருக்க வேண்டிய சாஹித்ய அகாதமி விருது இது. சோர்வடையாமல் தகுதியை உயர்த்திக் கொள்ள முயலுங்கள். குறிக்கோளை நோக்கி நகர்வதாக உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள். எது கிடைக்கவேண்டுமோ அது கட்டாயம் கிடைத்தே தீரும், முன்னரோ பின்னரோ. அதைத் தடுக்கவோ தவிர்க் கவோ முடியாது என்பதை உறுதியாக நம்புங்கள்.

கே: தென்றல் வாசகர்களுக்கும், உலகளாவிய தமிழர்களுக்கும் நீங்கள் சொல்லும் செய்தி என்ன?

தமிழ் ஒரு செவ்வியல் மொழி மட்டுமல்ல. அது வடமொழி போன்று இந்தியாவின் கலாசார மொழியும்கூட. உலகு தழுவிய பெரிய மொழிக்குடும்பத்தின் தாய்மொழியும் கூட. வங்கம், உருது தவிர, இரண்டே இந்திய மொழிகளில்தான் பிபிசி ஒலிபரப்புகிறது, அதில் தமிழ் ஒன்று.
ப: பொதுவாக, இந்தியாவிலுள்ள பள்ளிகளுக்கு உதவுவதற்காக அமெரிக்கா வில் உள்ளவர்கள் நிதி திரட்டி கணிப் பொறிகள், இதர தளவாடங்கள் போன்ற வற்றை வாங்கி அனுப்புவது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இது நல்ல பணிதான். இருந்தாலும் ஒன்று சொல்வேன். இந்தியா ஒரு மாபெரும் நாடு. இதன் பிரச்சினைகளை உங்களால் தீர்த்து வைக்க முடியாது. அதற்கு பதிலாக வசதிமிக்க நாடுகளில் வாழும் தமிழர்கள், மொரீஷியஸ், ·பிஜி, ரெயூனியன், தென் ஆப்ரிக்கா போன்ற பல நாடுகளில் வாழும் தமிழர்கள் தமது அடையாளத்தை இழக்காமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ, அவற்றைப் பற்றி எண்ணி, ஏற்றது செய்ய உதவுவதே சாலச் சிறந்தது.

தமிழ் ஒரு செவ்வியல் மொழி மட்டுமல்ல. அது வடமொழி போன்று இந்தியாவின் கலாசார மொழியும்கூட. உலகு தழுவிய பெரிய மொழிக்குடும்பத்தின் தாய்மொழியும் கூட. வங்கம், உருது தவிர, இரண்டே இந்திய மொழிகளில்தான் பிபிசி ஒலிபரப்புகிறது; அதில் தமிழ் ஒன்று. சீன வானொலி ஒலிபரப்பும் 40 மேற்பட்ட மொழிகளுள் தமிழும் ஒன்று. அதற்கு என்ன பொருள்? தமிழ்பேசும் மக்கள் மற்றவர் களைக் காட்டிலும் உலகெங்கும் அதிக அளவில் பரவியிருகிறார்கள் என்பதும்; அந்த மக்களின் தேவையை நிறைவு செய்யவே இப்படிப்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன என்பதும் தெளிவு.

தமிழர்கள் தாங்கள் உலகுதழுவிய ஒரே குடும்பம் என்பதை உணர்ந்து அதற்கேற்ற அணுகுமுறை, மற்ற சமுதாயத்தினரோடு ஊடாடும் முறை போன்றவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும். நாம் ஒரே மொழியினர்; ஆயினும் பல நாட்டினர். எங்காகிலும் ஓரிடத்தில் ஒரு தமிழனுக்கு ஏற்படும் தாக்கம், அல்லது அவனால் ஏற்படும் பிரச்சினை உலகெங்கிலும் உள்ள தமிழர்களின்மேல் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதை உணரவேண்டும். ஆகவே நாம் உலகுதழுவிய ஒரே குடும்பம் என்ற அடையாளத்தைக் காப்பாற்றிக் கொண்டு, அதற்கு எந்த வகையிலும் ஊறு நேராமல் பாதுகாக்க முயலவேண்டும். இந்த அடையாளம்தான் நம் வலிமை. எந்த விதத்திலும் நம் மொழி, பண்பாடு ஆகியவற்றை அயலகத் தமிழர்கள் சிதையாமல் காப்பது கடமையாகும். குறிப்பாக, குழந்தைகள் பள்ளியில் தமிழில் படிக்கிறார்களோ இல்லையோ, வீட்டில் தமிழில் பேசவும், தமிழைப் படிக்கவும் ஆவன செய்துதர வேண்டும். உலகளாவிய தமிழர்கள் மட்டுமல்லாது உள்நாட்டுத் தமிழரும் செய்ய வேண்டியது இது.

*****


தமிழ் படிக்காதவர் எத்தனை பேர்?

பள்ளியில் தமிழைப் படிக்காமல், பிற மொழிகளைப் படித்துத் தேர்ச்சி அடைபவர்கள் எத்தனை பேர்? ஏறத்தாழ இரண்டு சதம் மட்டுமே. எடுத்துக்காட்டாக, 1995ல் பள்ளி இறுதியாண்டுத் தேர்வை (SSLC) முடித்தவர்கள் 588,059. இவர்களில் தமிழை முதன்மை மொழியாகக் கொண்டு படித்து முடித்தவர்கள் 576,000. மற்ற மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள்12,059. எந்த ஆண்டும் சதவீத அடிப்படையில் இது இரண்டைத் தாண்டாது. இந்தச் சிலர் தமிழ் படிக்காததால் மொழிக்கு என்ன பெரிய தீங்கு நேரிட்டுவிடும்? இதுவே சற்று அதிகம் என்றால் நாம் அதைக் குறித்துச் சிந்திக்க வேண்டியது அவசியம்தான். பெரும்பாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இதர மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மிகச் சில குழந்தைகள் பள்ளிகளில் தமது தாய்மொழியைப் பயில்கிறார்கள். உருது கற்கும் இஸ்லாமியர் சிலர் தவிர்த்து எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்த சிலரே தத்தம் தாய்மொழிகளைப் பயில்கிறார்கள். படித்துவிட்டுப் போகட்டும். உண்மையான ஆபத்து வேறுபல இடங்களில், வேறுபல வடிவங்களில் வந்துகொண்டு இருக்கிறது. அதைக் குறித்து ஏனோ யாரும் சிந்திப்பதுகூட இல்லை.

நேர்காணல், புகைப்படங்கள்: ஹரி கிருஷ்ணன், அரவிந்த் சுவாமிநாதன்
உதவி: கோம்ஸ் கணபதி
More

யோசிப்பதைக்கூட ஆங்கிலத்தில் செய்கிறோம்! - டாக்டர் ஆ. ராஜாராமன்
Share: 




© Copyright 2020 Tamilonline