Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிறுகதை
மானுடம் வாழுதிங்கே
திக்குத் தெரியாத நாட்டில்
அன்பைத் தேடி
- உமா விஸ்வநாதன்|டிசம்பர் 2007|
Share:
Click Here Enlargeபோன் மணியடித்தது. விரைந்து வந்து எடுத்தாள் மாலதி. எதிர்பார்த்திருந்த கால்தான். தம்பி குமார் பேசினான்.

'அக்கா, இன்று சாயங்காலத்துக்கு மேல் தாக்குப் பிடிக்காது என்று டாக்டர் சொல்லிவிட்டார். வாசுவும், மன்னியும் கார்த்தால கிளம்பி வந்து சேர்ந்தாச்சு' என்றான்.

'நான் உடனே புறப்படுகிறேன் குமார். மனசு தைரியமாக இருங்கோ.. இதோ அரைமணியில் வந்து சேர்ந்துருவேன்' என்றாள்.

அவசரமாக கணவர் கிருஷ்ணனுக்கு போன் செய்தாள். அரைமணி முன்தான் கிளம்பியவர் ஆபீஸ் சேர்ந்திருப்பாரா என்று தெரியவில்லை.

ஹைதராபாத்தில் இந்த ஒன்பது மணி நெரிசலில் மாட்டினால் அவ்வளவுதான்.

தொலைபேசி மணியடித்ததே தவிர யாரும் எடுக்கவில்லை. பதில்பேசும் கருவி இயங்கி செய்தி கேட்க விவரம் சொல்லி கிருஷ்ணனை ஆஸ்பத்திரிக்கே வரச் சொன்னாள். கதவைப் பூட்டிக் கொண்டு இறங்கி, எதிர்ப்பட்ட ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்த ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள்.

சித்தியின் அறைக்குள் நுழைகையில் குமார்தான் எதிர்கொண்டான். உள்ளே பெரிய தம்பி வாசு, அவன் மனைவி உஷா, குமார் மனைவி அனைவரும் மெளனமாக அமர்ந்திருந்தார்கள். மூக்கிலும், கையிலும் ட்யூப்களுடன் படுத்திருந்த சித்தியைப் பார்த்தமட்டில் துக்கம் நெஞ்சை அழுத்தியது. கண்ணீரைத் துடைக்கக்கூட தோன்றாமல் கட்டிலில், சித்தியின் பக்கத்தில் அமர்ந்தாள். சித்திக்கு வயதொன்றும் அப்படி அதிகம் ஆகிவிடவில்லை. அறுபத்தியொன்று தான். ஆனால் இரண்டு வருஷம் முன்பு அப்பா போனது முதல் சித்தி ரொம்பவும் ஆடித்தான் போய்விட்டாள். சின்ன வயதில் சித்தியை அவ்வப்போது படுத்திய ஆஸ்துமா, இரண்டு வருஷமாக நிரந்தர விருந்தாளியாகத் தங்கிவிட்டது. இந்த இரண்டு வருஷத்தில் இது நான்காவது மு¨றாக ஆஸ்பத்திரி வாசம். டாக்டர் இது கடைசிமுறை என்கிறார்.

மாலதி சித்தியை அகிலா முதன்முறையாக சந்தித்தது தனது பத்தாவது வயதில். அம்மா இறந்து இரண்டு வருஷம் ஆகியிருந்தது. மனதில் அம்மா இன்னும் பசுமையாக நினைவிருந்தாள். வாசலில் காய்கறி வண்டிக்காரனிடம் தெலுங்கில் பேரம் பேசும் அம்மா, காலை நேரத்தில் அவசரமும், பரபரப்புமாக சமையலறைக்கும், சாப்பாட்டு அறைக்கும் விரையும் அம்மா, சாயங்கால நேரத்தில் விளக்கேற்றி இனிமையாகப் பாடும் அம்மா, காலையில் புதிதாகக் குளித்துவிட்டு, நெற்றியில் குங்குமமும், ஈரத்தலையில் துண்டுமாக மூக்கில் சிறிய மூக்குத்தி மினுக்கத் துயிலெழுப்பும் அம்மா...

அம்மா திடீரென்று ஒருநாள் ஜுரத்தில் படுத்தாள். இரண்டே நாளில் அது மூளைக்காய்ச்சலாக விஸ்வரூபம் எடுக்க நாலாவது நாளே அம்மாவின் கதை முடிந்துவிட்டது.

தன்னை அணைத்துக் கொண்டு கதறிய பாட்டியிடம் கேட்ட கேள்வி இப்போதும் மாலதிக்கு நினைவிருந்தது.

காலை நேரத்தில் அவசரமும், பரபரப்புமாக சமையலறைக்கும், சாப்பாட்டு அறைக்கும் விரையும் அம்மா, சாயங்கால நேரத்தில் விளக்கேற்றி இனிமையாகப் பாடும் அம்மா, காலையில் புதிதாகக் குளித்துவிட்டு, நெற்றியில் குங்குமமும், ஈரத்தலையில் துண்டுமாக மூக்கில் சிறிய மூக்குத்தி மினுக்கத் துயிலெழுப்பும் அம்மா...
'ஏன் பாட்டி, மனுசா ரொம்ப வயசானால் செத்துப் போய் சுவாமிகிட்டே போவாள் என்றுதானே சொன்னேள். இப்போ நீங்க, தாத்தா எல்லாரும் இருக்கேள். ஏன் கொள்ளுத் தாத்தாகூட இருக்கார். எங்கம்மா சின்னவாதானே. ஏன் இப்பவே சாமிகிட்டப் போகணும்?' என்று கேட்க, பாட்டி இன்னும் அழுதாள்.

அம்மா போனபின் அடுத்த இரண்டு வருஷங்கள் ஏதோ ஓடின. அப்பா வெறுமையை மறக்க ஆபீஸ் வேலையிலே தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். மாலதி பாதிநாள் இரண்டு தெரு தள்ளியிருந்த தாத்தா-பாட்டி வீட்டிலேயே கழித்தாள். தாத்தாவுக்குப் பேத்தி அதீத செல்லம். பாட்டிதான் அவசியம் நேரும் போது கண்டிப்பாள். அந்தச் சமயங்களில் தாயில்லாததால்தான் தன்னை எல்லோரும் திட்டுகிறார்கள் என்று கற்பனை செய்து கொண்டு சுயபச்சாதாபத்தில் மூழ்கிப் போவாள் மாலதி.

அப்பா எப்போதுமே அதிகம் பேசுபவர் அல்லர். அம்மாதான் இருவருக்கும் சேர்த்து வாய் மூடாமல் பேசுவாள். இப்போது அப்பாவின் இந்த குணம் மிகவும் வருத்தியது. அப்பாவுக்குத் தன்னைப் பிடிக்காமல் போய்விட்டதாகக் கற்பனை செய்து கொண்டாள்.

இந்த சமயத்தில்தான் தாத்தாவும், பாட்டியும் அப்பாவை மறுமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்த ஆரம்பித்தனர். அப்பாவுக்குப் பெற்றோர் கிடையாது. அக்கா எங்கேயோ அசாமில் இருந்தாள். அண்ணா அமெரிக் காவில். ஆக எடுத்துப் போட்டுக் கொண்டு செய்ய அவர் பக்கத்தில் யாரும் இருக்க வில்லை.

மாமனாரான தாத்தாதான் பேச்சை ஆரம்பித்தார்.

'என்ன மாப்பிள்ளை. எங்களுக்கும் வயசாயிட்டு வரது. உங்களுக்கு இன்னிக் கெல்லாம் முப்பத்தைஞ்சு வயசாறது. சொச்ச வாழ்க்கை முழுக்க இப்படித் தனிமையில் இருக்க முடியுமா? உங்களுக்கு என்று ஒரு மனைவி, குடும்பம் வேணும். மாலதிக்கு ஒரு நார்மல் குடும்பச் சூழல் வேண்டும். எங்களுக்கும் அவளுக்கும் ஜெனரேஷன் கேப் ரொம்ப ஜாஸ்தி. இல்லையா?' எனத் தொடங்கி வைத்தார்.

அப்பா லேசில் ஒப்புக் கொள்ளவில்லை. தாத்தாவும் பாட்டியும் ஏகப்பட்ட வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு அவரைச் சம்மதிக்க வைத்தார்கள். பிறகு பெண்தேடும் படலம் ஆரம்பித்து, எல்லாரும் சேர்ந்து தேர்ந்தெடுத்த பெண்தான் சித்தி அகிலா.

கோயிலில் வைத்து எளிமையாகக் கல்யாணம் நடந்து வீட்டுக்கு வருகையில் சித்திக்கு வயது இருபத்தி மூன்றுதான். அந்த வயதிலேயே பத்து வயதுப் பெண்ணுக்குத் தாயாக இருக்க வேண்டிய பொறுப்பேற்று வீட்டில் நுழைந்த சித்தியின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று இப்போது நினைக்கையில் மாலதிக்குப் பாவமாக இருந்தது. அதுமட்டுமா... இன்னொரு பெண்ணுடன் கணவன் சந்தோஷமாக தாம்பத்தியம் நடத்திய வீட்டில் கணவன் மனதில் தனக்கொரு நிச்சயமான இடம் இருக்கிறதா என்பதே தெரியாமல் மனது நிறைய பயத்தையும், கவலையையும் நிரப்பிக் கொண்டு வந்து சேர்ந்தாள் அகிலா.

தாத்தாவும், பாட்டியும் அவளைச் சந்தோஷ மாகவே வரவேற்றார்கள்.

'மாலும்மா. அகிலாதான் இனிமேல் உனக்கு அம்மா. சமர்த்தாக, படுத்தாமல் சொன்னதை கேட்டு நடக்கணும்' பாட்டி பேசி முடிக்கும் முன் மாலதி மூர்க்கத்தனமாகக் கத்தினாள், 'இது ஒண்ணும் எங்க அம்மா இல்லை. அப்பாவோட பொண்டாட்டி மட்டும்தான். எங்கம்மா எப்பவோ செத்துப் போயிட்டாள். நான் பதிலுக்கு வேறே அம்மா கேட்டேனா உங்களை!'

இதைக் கேட்ட அகிலாவின் முகத்தில் ஏக கலவரம். தாத்தா, பாட்டி ஓரளவு எதிர்ப்பை எதிர்பார்த்திருந்தார்கள் என்றாலும் மாலதியின் முகத்தில் அறைந்தாற் போன்ற பேச்சு அவர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அப்பா சங்கடத்துடன் கையைப் பிசைந்தார்.

தாத்தா அவளை அடிக்கடி பார்க்குக்கு அழைத்துப் போவது வழக்கம். அந்த நேரங்களில் அவளுடன் நிறையப் பேசினார். குடும்பத்தில் ஒற்றுமை பற்றி, அவளுக்கு ஒரு தாயின் அவசியம் பற்றி. அப்பாவுக்கு ஒரு வாழ்க்கைத்துணையின் அவசியம் பற்றி. ஆனால் மாலதியிடம் எதுவுமே எடுபடவில்லை. அகிலாவை அம்மாவாக ஏற்கவோ அம்மா என்று அழைக்கவோ அவள் ஒப்பவில்லை.

கடைசியாக அகிலாவை 'சித்தி' என்றே அழைப்பதாக ஒத்துக்கொண்டாள் மாலதி. அகிலா என்னவோ அன்பாகத்தான் இருந்தாள். பெற்றோரின் ஒரே பெண்ணான அவள் அவர்கள் இறந்தபின் மாமா, மாமியின் நிழலில் வளர்ந்தவள். மாமிக்கு நாலு குழந்தைகள். ஐந்தாவதாக ஒண்ட வந்த அகிலா பாரமாகத்தான் தோன்றினாள். மாமாவின் அவசியத் தேவைகளுக்கே பற்றாத சம்பளத்தில் பங்குபோட வந்த அகிலாவுக்கு யாரும் பெரியதாக அன்பை வாரி வழங்கி விடவில்லை.

கல்யாணம் நிச்சயமாக, அகிலாவின் மனதில் புதிய கனவுகள் உருவாயின. தான் அன்புக்கு ஏங்கியது போன்றதொரு நிலை மாலதிக்கு ஏற்படக்கூடாது என்ற வைராக்கியத்துடன் புகுந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள் அவள். ஆனால் அவளுடன் ஒருவிதத்திலும் ஒத்துழைக்காத மாலதியும், மகளைச் சந்தோஷப்படுத்த வழிதெரியாத இளம் மனைவியிடம் கோபப்படும் கணவனுமாக, அகிலாவுக்கு அவள் தேடிய ஆதரவு புக்ககத்திலும் கிடைக்கவில்லை. தாத்தா, பாட்டிக்குத்தான் அவளைப் பார்க்க பாவமாக இருந்தது. அவளிடம் பிரியமாகவே இருந்தார்கள். அடிக்கடி வீட்டுக்கு வந்து அங்கே நிலவிய இறுக்கமான சூழ்நிலையைத் தளர்த்த முயற்சி செய்தார்கள். ஆனால் ஒன்றிரண்டு வருடங்களுக்குள் தாத்தாவுக்கு உடல்நிலை படுத்த ஆரம்பிக்க, தனியே இருக்க முடியாமல் இருவரும் கிளம்பி லக்னௌவில் இருக்கும் மகனிடம் சென்றுவிட்டார்கள்.

சித்தி அன்பாக காலைவேளையில் அழைப் பாள். 'மாலு கண்ணா, தலை ஒரே சிக்காகி விட்டது பார். நன்றாக வாரிப் பின்னி விடுகிறேன்' என்பாள்.

'ஒண்ணும் வேண்டாம். எனக்கு பண்ணிக்கத் தெரியும். நான் ஒண்ணும் குழந்தையில்லை' என்பாள் மாலதி.
'மாலு ஒனக்குப் பிடிக்குமே பூரி சாஸ் பண்ணியிருக்கேன். வா, சூடாகச் சாப்பிடு' என்றால் 'எனக்கொண்ணும் இன்னிக்குப் பசியே இல்லை. வெறும் தயிர் சாதம்தான் வேணும்' என்பாள்.

அகிலாவுக்குக் கல்யாணமான வருஷம் அப்பா அவளுக்கு தீபாவளிக்காக அழகிய நீலநிறப் பட்டுப்புடவை வாங்கி வந்தார். கூடவே மாலதிக்கு மஸ்டர்ட் பட்டுப் புடவை. 'உனக்கு அழகாக இருக்கும் என்று சித்திதான் செலக்ட் பண்ணினாள்' என்று அப்பா சொல்லிவிட அவ்வளவுதான். தீபாவளியன்று மாலதி அதைக் கட்டிக் கொள்ளவே இல்லை. பழைய பாவாடையில் வளைய வந்த மாலதியைப் பார்த்தபின் சித்திக்கும் அப்பாவுக்கும் தாங்கள் மட்டும் புதியது அணிய விருப்பமில்லாது போக அவர்களது முதல் தீபாவளி மனஸ்தாபத்திலேயே கழிந்தது.

நடுவில் விட்டுப் போய்விட்ட அம்மாவிடம் கோபம். மறுபடி மணந்த அப்பாவின் மீது கோபம். அம்மாவின் இடத்தைப் பிடுங்கிக் கொண்டதாகக் கற்பனை செய்து அகிலா வின் மீது கோபம். தன்னுடன் இருக்க முடியாத தாத்தா, பாட்டியிடம் கோபம். ஏன் தன்னிடமே கோபம்.
அகிலாவின் மனது, அவளது அன்பு மாலதிக்குப் புரியாமல் இல்லை. ஆனால் அவளது ஆழ்மனத்தில் எங்கோ புதைந்திருந்த தாபம் அவளை ஆட்டிப் படைத்தது. நடுவில் விட்டுப் போய்விட்ட அம்மாவிடம் கோபம். மறுபடி மணந்த அப்பாவின் மீது கோபம். அம்மாவின் இடத்தைப் பிடுங்கிக் கொண்டதாகக் கற்பனை செய்து அகிலா வின் மீது கோபம். தன்னுடன் இருக்க முடியாத தாத்தா, பாட்டியிடம் கோபம். ஏன் தன்னிடமே கோபம். அவள் மனதில் தேங்கிக் கிடந்த அன்பை வெளிப்படுத்த முடியாமல் தடுத்தது.

இந்தச் சூழ்நிலையில் அகிலா கர்ப்பமாகி விட, அப்பா ரொம்பவே கவலைப்பட்டார். அகிலாவையே ஏற்காத பெண் வரப்போகும் குழந்தையை வெறுக்கக்கூடுமென்று அகிலாவும் பயந்தாள்.

அவர்கள் கவலைப்பட்டிருக்கத் தேவையே இருக்கவில்லை. வீட்டிலே பிறந்த அந்தப் பிஞ்சுக் குழந்தையைப் பார்த்த கணமே மாலதியின் முகத்தில் சந்தோஷம் நிறைய, தன்னைவிடப் பன்னிரெண்டு வயது சிறியவனான தம்பி வாசுவை வாரி எடுத்து அணைத்துக் கொண்டாள். பள்ளி நேரம் போக மிகுந்த நேரமெல்லாம் குழந்தையுடனே கழித்தாள். இரண்டு வருஷத்தில் குமாரும் பிறக்க வீட்டில் நிலவிய இறுக்கமான சூழ்நிலை ஓரளவு தளர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்போதும் அகிலாவை மாலதி முழுமையாக ஏற்கவில்லை என்றாலும் வாசு, குமாரின் தாயாக அவளது மதிப்பு கொஞ்சம் கூடித்தான் போயிற்று. நேருக்கு நேர் சித்தியுடன் மோதுவதைக் குறைத்துக் கொண்டாள் மாலதி. அதன் பிறகு குடும்பம் சற்று அமைதியாகவே ஓடியது. வாசுவும், குமாரும் மாலதியிடம் மிகவும் ஒட்டிக் கொண்டார்கள். அவளைப் போலவே அவர்களும் அகிலாவை 'சித்தி' என்றே அழைத்தார்கள்.

வருடங்கள் ஓட, மாலதி யுவதி ஆனாள். படிப்பு முடிந்தகையுடன் அவள் அப்பா வரன் வேட்டையில் இறங்கினார். சீக்கிரத்திலேயே அவளுக்கும் கிருஷ்ணனுக்கும் திருமணமாக அவள் புக்ககம் கிளம்பும்போது குழந்தைகளான வாசுவும், குமாரும் அவள் கையை இறுகப் பிடித்துக் கொண்டு விட மறுத்தார்கள். மாலதி பிழியப் பிழிய அழுது கொண்டேதான் வண்டியில் ஏறினாள்.

ஹைதராபாத்தில் பிறந்தகமும், செகந்தராபாத்தில் புக்ககமும் அமைந்தது மாலதிக்கு செளகரியமாகப் போயிற்று. நினைத்தால் தம்பிகளைப் பார்க்க முடிந்தது.

வருடங்கள் பறக்க மாலதிக்குக் குழந்தைகள் பிறந்து வளர்ந்து படித்து உத்தியோகத்தில் சேர்ந்தார்கள். குமார், வாசு பெரியவர்களாகி, மணமாகி மனைவி, குழந்தைகளுடன் செளகரியமாக இருக்கிறார்கள். தாத்தா, பாட்டி காலம் முடிந்து பல வருடங்கள் கழிந்துவிட்டன. இரண்டு வருஷம் முன்பு அப்பா மறைந்த போது சித்தி ரொம்பவே ஆடிப்போனாள். இப்போது அவளது அந்திம நேரம்.

கண்ணில் நீர் வழிய பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்த மாலுவின் மனதில் இப்போது தன் குழந்தைப் பருவம் முதல் சித்தி காட்டிய அன்பும் பரிவும்தான் மிகுந்து நின்றது. அம்மாவின் இடத்தை முழுமையாக நிரப்பச் சித்தி எடுத்துக் கொண்ட அக்கறை, சிரமம், பிரயத்தனம் எல்லாம் அவளுக்குப் புரிந்தது. மகளின் அன்புக்கு ஏங்கிய சித்தியின் உணர்வுகளை மாலதி மிகவும் காலந் தாழ்ந்தபின்தான் புரிந்து கொண்டாள்.

அகிலா திடீரென்று கண்விழித்துப் பார்த்தாள். தன் கையைப் பிடித்தவாறு கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்த மகளைப் பார்த்து புன்னகைக்க முயற்சித்தாள். அடுத்த கணம் அந்தச் சிறு புன்னகையுடனே அவளது கடைசி மூச்சு பிரிந்தது.

சித்தியின் கையைப் பிடித்தவாறு 'அம்மா, அம்மா...' என்று அரற்றும் அக்காவை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் வாசுவும் குமாரும்.

உமா விஸ்வநாதன், சைப்ரஸ், கலிபோர்னியா
More

மானுடம் வாழுதிங்கே
திக்குத் தெரியாத நாட்டில்
Share: 




© Copyright 2020 Tamilonline