Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | ஜோக்ஸ் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனைப் பாதையில் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிறுகதை
திருடர்கள்
புழக்கடையில் கீதை
- அம்புஜவல்லி தேசிகாச்சாரி|செப்டம்பர் 2007|
Share:
Click Here Enlargeபாலாகப் பொழிந்து கொண்டிருந்த நிலவொளியில் ஏழெட்டு வாண்டுகள் விளையாடிக் கொண்டிருந்தனர். கூச்சல் செவிப்பறையைக் கிழித்தது. ஆனாலும் அந்தக் கூப்பாடும் வெகு சுகமாக இருந்தது மஞ்சுவுக்கு. குழந்தைகள் இருவரும் இந்தச் சூழ்நிலையை மனங்கொண்ட மட்டும் அனுபவித்துத் தீர்ப்பது எனக் கங்கணம் கட்டிக்கொண்டு உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டும், அயல் வீட்டுக் குழந்தைகளுக்குச் சரியாக 'மல்லிப் பூவே மல்லிப் பூவே மெல்ல வந்து கிள்ளிப் போ' என்று விளையாடிக் கொண்டுமிருந்தனர். அவர்களுக்கு கிராமத்தில் எதைக் கண்டாலும் ஒரே ஆச்சரியமாக இருக்கிறது. பள்ளி, வீடு, பள்ளி சாராத வகுப்புகள் என்னும் வட்டத்தில் சுற்றி வந்த அவர்கள் இந்த ஆனந்த சுதந்திரத்தில் நன்றாக ஆழ்ந்து மகிழ்ந்தனர்.

ஆண்டுதோறும் பள்ளி விடுமுறை என்றால் எகிற ஆரம்பிக்கும் டெக்ஸஸ் மாநில வெயில், வாரம் பூராவும் மாறிமாறி பள்ளி, வகுப்புகள், அலுவலகம் என்று ஓயாத வாகனப் பயணம், அது எதிர்நோக்கும் பயங்கரப் போக்குவரத்து நெரிசல் எல்லாவற்றினின்றும் தாற்காலிக விடுதலை பெற்று இந்தியாவுக்கு வந்துவிடுவது மஞ்சுவின் வழக்கமாகிவிட்டது. கணவன் பத்ரி இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை விடுமுறையின் 'வால் முனை'யில் பத்துப் பதினைந்து நாட்கள் வந்துவிட்டு எல்லோரும் ஊர் திரும்புவது என்னும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. மதுரையிலுள்ள பிறந்தகம், சென்னையிலுள்ள புக்ககம், ஏதாவது கோடைவாசஸ்தலம், குல தெய்வம் கோயில் என்னுமளவிலேயே அவளது பயணத் திட்டம் இருக்கும். இம்முறை தஞ்சையை அடுத்துள்ள கிராமத்திலிருக்கும் பாட்டி வீட்டுக்குச் சென்று சில நாட்கள் தங்க ஏற்பாடாகி இருந்தது. அவள் சிறுமியாக இருந்தபொழுது சில முறை வந்திருக்கிறாள். குழந்தைகள் கிராமத்துச் சூழ்நிலையை விரும்புவரோ மாட்டாரோ என்று எண்ணிய வளுக்கு அவர்களின் இந்த உற்சாகம் நிம்மதியளித்தது.

அடுத்த வீட்டுத் திண்ணையில் மகாதேவ மாமா கீதை உரை நிகழ்த்திக் காண்டிருந்தார். ஐந்தாறு பேர் கவனமாகக் கேட்டவண்ண மிருந்தனர். அவருக்கு இந்த வயதிலும் வெண்கலக் குரல். பாட்டி பார்வதி 'பசங்களா, மணி ஒன்பதுக்கு மேலாகிறது. அவரவர் வீடு போய்ச் சேருங்கள். அம்மா, மஞ்சு நீயும் பசங்களும் சாப்பிட வாங்க; விளையாட்டில் மும்முரமா இருந்துட்டு சாப்பிடும் நேரத்துக்குத் தூங்க ஆரம்பிச்சுடுங்கள்' என்று அழைத்தாள். 'கொள்ளுப் பாட்டி, கையில் உருட்டிப் போடுங்க' என்று மனுக் கொடுத்தனர் பிள்ளைகள். பாட்டி கற்சட்டியில் பிசைந்து போடும் அடிக்குழம்பு சாதமும், கருவடாமும் குழந்தைகளை மிகவும் ஈர்த்துவிட்டன. அவளும் தன் பங்குக்குப் பாட்டியிடம் கையேந்தி இரவு உணவை முடித்துக் கொண்டாள். மகாதேவ மாமா உபந்யாஸத்தை முடித்துக்கொண்டு உள்ளே சென்றுவிடவும் தெருவில் அமைதி சூழ்ந்தது.

தாத்தா வாசற்குறட்டிலேயே கட்டிலைப் போட்டுக்கொண்டு படுத்து விட்டார். பாட்டியிடம் மஞ்சு 'பாட்டி, மகாதேவ மாமாவுக்கு இத்தனை வயசிலும் குரலில்தான் எத்தனை கம்பீரம்; எவ்வளவு ஞானம்?' என வியந்தாள். 'ஆஹா, மகாதேவனுக்கு அதெல் லாம் அபாரமாத்தான் இருக்கு; மனுஷத்தனம் தான் மருந்துக்குக்கூட இல்லை' என்று நொடித்துவிட்டுப் புரண்டு படுத்து விட்டாள். மாமா பாட்டிக்குப் பிறந்த வீட்டு வழியில் உறவு; வயதிலும் சிறியவர் எனவே ஒருமையில் பேச்சு. மஞ்சுவுக்கு ஏதும் புரியாமல் மண்டையைப் பிறாண்டியது பாட்டி வைத்த சஸ்பென்ஸ்.

காலை வேலைக்காரி மங்காவுக்குப் பாத்திரங்களை ஒழித்துப் போட்டுவிட்டு நிமிர்ந்தவளின் கண்களில் பட்டது அந்த விசித்திரக் காட்சி. அடுத்த வீட்டுப் புழக்கடையில் நின்று கரம் குவித்து வணங்கியவாறு நின்றிருந்தாள் ஒரு பெண்மணி. எதிரில் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. மங்காவிடம் அதைப்பற்றி விசாரித்தவளுக்கு 'நான் இந்த ஊருக்கு வந்து ஒரு வருசந்தான் ஆகுதும்மா. இந்தப் பொம்பளை தினம் இப்படித்தான் கும்புட்டுப் போகுது. எனக்கும் ஒண்ணும் புரியலை' என்று பதில் வந்தது. இன்னொரு பிறாண்டலா? மண்டை வெடித்துவிடும் போலிருந்தது.

'பாட்டீ, உன் கிளறல், கிண்டல் வேலையெல்லாம் அப்புறம் ஆகட்டும். முதலில் எனக்கு இதற்குப் பதில் சொல்லு. பக்கத்து வீட்டுப் புழக் கடையில் யாரோ நமஸ்காரம் பண்ணிக்கொண்டு நிற்கிறாளே, அவள் யார்?' என்று கேட்டாள். பாட்டி, 'வா, சுடச்சுட தோசையும் கொத்ஸ¤ம் இருக்கு. சாப்பிட்டுக் கொண்டே அந்தக் கதையைக் கேட்பியாம்' என்று அவளுக்குப் பரிமாறிவிட்டுப் பேச ஆரம்பித்தாள்.

'இது கிட்டத்தட்ட இரண்டு வருஷத்துக்கு முந்தி நடந்த விஷயம். மாதம் மும்மாரி பொழிய வேண்டிய வானம், மூன்று வருஷத்து மழையையும் ஒரே வாரத்தில் கொட்டித் தீர்த்தது. சம்பந்தியின் அறுபதாண்டு விழா வுக்குப் போன நானும் தாத்தாவும் ரயில் பஸ் ஏதும் ஓடாததால் அங்கேயே தங்க நேரிட்டது. மகாதேவன் திருவாரூருக்கு உபன்யாசத்துக் குப் போனவனும் வர முடியவில்லையாம். இவ்வூரிலும் பெருமழைக்குத் தப்பி ஆற்றங் கரைக் குடிசை ஜனங்களெல்லாம் தறிகெட்டு ஓடி, கிடைத்த இடங்களில் புகலடைந்தனர். அக்கரையில் கூலி வேலைக்காகப் போயிருந்த பவளாயியும் மற்றவர்களோடு அடித்துப் புரண்டு கொண்டு ஓடிவந்து தன் குடிசையில் விட்டுப் போயிருந்த இரண்டு வயது மகனையும், கண் தெரியாத தாயாரையும் இழுத்துக் கொண்டு மேடான இடத்தை நோக்கிச் சென்றாள். கால் நிலை கொள்ளாது தத்தளிக்க, இடுப்பளவு நீரில் குழந்தையைத் தலைக்குமேல் தூக்கிப் பிடித்தபடி வருவதை மகாதேவனின் மனைவி தர்மு பார்த்திருக்கிறாள். தட்டுத் தடுமாறிப் போய் அவளுக்கு உதவி, மேட்டுப் பாங்கான தன் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டாள். அன்றிரவே குழந்தைக்கு அனலாகக் கொதித்தபடி கடுங்காய்ச்சல் வந்துவிட்டது. கதறும் பவளாயியைச் சமாதானப் படுத்துவதும், பகவான் மேல் பாரத்தைப் போட்டுத் தன்னால் முடிந்த அளவு கைவைத்தியம் செய்வதுமாக அரும்பாடு பட்டாள் தர்மு.
'அவள் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை. குழந்தை நல்லபடியாகக் குணமானது. மறுநாளே வெள்ளம் வடியவும் பவளாயியும் அவள் தாயும் வாய் ஓயாது நன்றி கூறியபடி தங்கள் குடிசைக்குச் சென்றனர்.

ஊர் திரும்பிய மகாதேவன் நடந்ததையறிந்து ஆத்திரத்தின் எல்லைக்கே போய்விட்டான். 'ஊரில் மற்றவருக்கில்லாத கரிசனமாக என்ன ஒரு அதிகப் பிரசங்கித்தனம்?' எனக் கண்ட படி அவளை ஏசியதுடன், அவள் பூஜைக்கோ தினப்படி சமையலுக்கோ வீட்டினுள் நுழையக் கூடாதென்று திட்டவட்டமாகக் கூறிவிட்டான். ஏறக்குறையத் தன் வீட்டிலேயே வாழாவெட்டி யாக ஒடுங்கிக் கிடந்தாள் தர்மு. புழக்கடைத் தாழ்வாரத்தில் ஏதோ பொங்கித் தின்று கொண்டு இருந்தாள்.

மூன்று மாதத்துக்கு முன் ஈரோடில் வாழ்க்கைப் பட்டிருக்கும் அவள் மகள் வந்து, அம்மாவின் நிலையைப் பார்த்ததும் மனம் பொறுக்காமல் 'அம்மா செய்த நல்ல காரியத்தை மெச்சாவிட்டாலும் பரவாயில்லை; இப்படி ஒரு தண்டனை கொடுப்பது கொடுமை' என்று வாதாடிப் பார்த்தாள். ஆனால் மகாதேவன் எதற்கும் செவி கொடுக்கவில்லை. பெண்ணும் மனம் விட்டுப்போய் அம்மாவைத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டாள். பவளாயி மட்டும் 'எனக்கு சாமி, கோயில் எல்லாம் அந்த அம்மாவும், அவங்க இருந்த இடமும் தான்' என்று தினம் வந்து வணங்கிவிட்டுப் போகிறாள்' என்று முடித்தாள்.

அன்றும் அடுத்த வீட்டுத் திண்ணையில் மகாதேவ மாமாவின் குரல், 'பகவான் ஐந்தாம் அத்யாயத்தில் சொல்றார், எவனொருவன் பண்டிதன், பாமரன் என்னும் பேதமின்றி மனிதர்களிடமும், நாயினிடத்திலும், அந்த நாயைச் சமைத்துண்ணுபவனிடமும் கூட ஒரே ஆத்மாவைக் காண்கிறானோ, அவனே சமதர்சி எனப்படுகிறான்' என்று கணீரென்று ஒலித்தது.

மஞ்சுவுக்கு என்னவோ கீதை வாயிலில் வாக்காகவும், புழக்கடைத் தாழ்வாரத்தில் பொருளாகவும் இருப்பதாகத் தோன்றியது.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி
More

திருடர்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline