Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | ஜோக்ஸ் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனைப் பாதையில் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சாதனைப் பாதையில்
அமெரிக்காவில் தடம் பதிக்கும் தமிழ் இயக்குனர் - அருண் வைத்யநாதன்
- ச. திருமலைராஜன்|செப்டம்பர் 2007|
Share:
Click Here Enlargeசீர்காழியில் பள்ளிச் சிறுவனாக வளர்ந்த அருணுக்கு சினிமாவின் மீது தீராக் காதல். பின்னாளில் தானும் உலகம் முழுக்கப் பார்த்து வியக்கும் வண்ணம் சினிமா எடுக்க வேண்டும் என்ற கனவு அந்தச் சிறுவனின் மனதில் ஆழப் பதிந்து விட்டது. அந்தக் கனவு இலட்சியமாக உருமாறியது. படிப்பு, மென்பொருள் தொழில், அமெரிக்காவில் வேலை என்று தொடர்ந்தாலும், ஆழ்கடலின் அடியில் நீரோட்டம் போல சினிமா மனதின் ஆழத்தில் ஓடிக் கொண்டே இருந்திருக்கிறது. இன்று நியுஜெர்ஸியில் பணிபுரிந்து வரும் அருண் வைத்யநாதனின் கனவுகள் ஈடேறி வருகின்றன.

அந்தக் கனவின் தொடர்ச்சியாக ஒரு முழு நீளத் தமிழ்ப் படத்தை இயக்கும் வாய்ப்பு அவரது திறமைக்கும் உழைப்புக்கும் பரிசாக வந்தடைந்துள்ளது. 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற பெயரில் இது ஒரு திகில் படமாக இது நியூஜெர்சியில் படமாக்கப்பட இருக்கிறது. அதன் விவரங்களைப் பார்ப்பதற்கு முன்னால் அருண் வைத்யநாதன் பற்றி மேலும் சில விவரங்கள்.

அருண் வைத்யநாதன் பன்முக ஆளுமை கொண்ட திறமையான படைப்பாளி. சிறு வயதில் இருந்தே உள்ளூர் இதழ்களில் கவிதை, சிறுகதை, கட்டுரையாக முகிழ்த்த படைப்பார்வம் கல்லூரிக் காலத்தில் தமிழ் நாட்டின் ராஜ் டி.வி.யில் சினிமா சம்பந்தமான தொடர்களாக மலர்ந்தது. ராஜ் டி.வி.யில் வந்த 'ஹாலிவுட் ஸ்பெஷல்', 'ஸ்டார் டைம்' போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இவர் எழுதிய 'பிம்ப உயிர்கள்' என்னும் விஞ்ஞானச் சிறுகதை, 'திண்ணை' இணையப் பத்திரிகை நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் சிறந்த கதைகளில் ஒன்றாகப் பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டது. பின்னர் எனி இந்தியன் பதிப்பகத்தார் (www.any indian.com) வெளியிட்ட சிறந்த அறிவியல் புனைகதைகள் தொகுப்பில் இடம்பெற்றது. இவர் நடத்தி வந்த சில தமிழ் இணைய வலைக்குறிப்புகள் (ப்ளாகுகள்) உலக அளவில் மிகப் பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருந்தன. அருண் சிறந்த பலகுரல் மன்னனும் ஆவார். நியுஜெர்சி பகுதிகளில் பல மிமிக்ரி நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார்.

வேலை நிமித்தமாக நியூயார்க் வந்த அருண் அங்கு நியூயார்க் ·பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் மாணவராகச் சேர்ந்து திரைப்படத் தயாரிப்புக் கலையைக் கற்றிருக்கிறார். அங்கு அவர் எடுத்த The Noose என்ற பேசாக் குறும்படம், ஆசிரியர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து இவர் இயக்கிய அனைத்துக் குறும்படங்களும் உலகெங்கிலும் நடந்த அனைத்து முக்கியத் திரைப்பட விழாக் களிலும் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்றுத் தந்தன. அமெரிக்காவின் மேனியா டி.வி. என்னும் இணையத் தொலைக்காட்சி இவரைச் சிறந்த இயக்குனராகவும், இவரது படங்களைச் சிறந்த படங்களாகவும் அறிவிக்கப்பட்டன. இவரது 'ஸ்டிங்கிங் சிகார்' என்னும் திரைப்படம் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு அந்த டி.வி. சானலில் திரையிடப் பட்டது. இது போன்ற தேர்வுகளும், அங்கீ காரங்களும் உலக அளவில் குறும்பட இயக்குனர்கள், திரைப்படத் தயாரிப்பாளர் கள் மத்தியில் அருண் வைத்தியநாதனைக் குறிப்பிடத் தக்க ஓர் இளம் இயக்குனராக அறிய வைத்தன. இவரது 'பவர் கட்' என்னும் திரைப்படம் இணைய சினிமா இதழ்களால் சிறப்பான படமாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

தமிழில் முதன்முறையாக இவர் இயக்கிய 'தனியொரு மனிதனுக்கு' என்ற படம் மிக மதிக்கப்படும் நியூயார்க் IAAC திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேசி நடத்தி வரும் 'டிரிக்கர் ஸ்ட்ரீட்' என்ற திரை ஆர்வலர்கள் பங்குபெறும் திரைப்பட விழாவில், அருணின் 'தி சியான்ஸ்' (The Seance) என்ற குறும்படம் அதிகாரபூர்வத் தேர்வுகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. சன்டான்ஸ் சானலும், சை·பை சேனலும் 'இன்றைய தலைமுறையின் சிறந்த இயக்குனர்கள்' என்ற தலைப்பில் நடத்திய போட்டிகளில் அருணின் மேற்கூறிய திரைப்படம் தேர்வு பெற்று, ஐ.எ·ப்.சி (IFC) சேனலில் அமெரிக்கா முழுதும் ஒருமாத காலம் ஒளிபரப்பப்பட்டு, IFC Media Lab Winner ஆக அறிவிக்கப்பட்டது.

அருண் வைத்தியநாதனின் லட்சியம் உலகத் தரமான சினிமாவை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பது. ஆனாலும் அதற்காக அவர் தேர்ந்தெடுத்த பாதை குறும்படங்களே. தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் அறிமுக மில்லாதது குறும்படம். ஆனால் ஹாலிவுட்டின் உலகப் புகழ்பெற்ற பல இயக்குனர்கள் தங்கள் புகழின் சிகரத்தை தங்களது ஆரம்பகாலக் குறும்பட முயற்சிகளின் மூலமாகவே எட்டியுள்ளனர். பாண்டிச்சேரியில் பிறந்து உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குனராக இன்று அறியப்படும் மனோஜ் நைட் ஷ்யாமளனின் திறமையை உலகுக்கு அறிவித்தது அவரது ஆரம்ப காலக் குறும்படங்களே.
குறும்படம் என்பது பிரச்சாரப் படம் அல்ல. மர்மம், நகைச்சுவை, துக்கம், பரபரப்பான ஒரு சம்பவம் அல்லது இன்னும் பிற கருக்களை மிகக் குறைந்த நேரத்தில் சக்தி வாய்ந்த முறையில் சித்திரித்து ரசிகர்களின் கற்பனையைத் தூண்டும் படங்கள். ஒரு முழுநேரத் திரைப்படத்தை எடுப்பதை விட, மக்களின் கவனைத்தை உடனடியாக ஈர்க்கும் குறும்படத்தை இயக்குவது மிகவும் சவாலானதாகும். ஒரு சிறந்த குறும்பட இயக்குனர் நிச்சயமாக முழு நீளத் திரைப்பட இயக்குனராகப் பரிமளிக்க முடியும். குறைந்த காலத்துக்குள் ஒரு சிறுகதையில் வரும் பாத்திரங்களின் நுட்பமான உணர்வுகள், திருப்பம் அல்லது திகில் போன்ற பல வற்றையும் உள்ளடக்கித் தருவது குறும்படம். ஹாலிவுட்டில் பல குறும்படங்கள், பின்னர் முழுநீளத் திரைப்படங்களாக மாற்றப்பட்டு வெற்றி பெற்றுள்ளன (The Saw, Sling Blade). முழுத் திரைப்படங்களைப் படைப்பதிலும் மிளிர அருண் விரும்புகிறார்.

அருண் வைத்தியநாதன் இதுவரை எழுதி இயக்கிய குறும்படங்களான As you wish, Br(a)illiant, The Noose, The Powercut, Forgiven, The Seance, Stinking Cigar, தனியொரு மனிதனுக்கு ஆகிய படங்கள் தொடர்ந்து உலகத் திரைப்பட விழாக்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, திரையிடப்பட்டு, பாராட்டப்பட்டு விருதுகளைக் குவித்து வருகின்றன. இவரது திரைப் படங்களை http://arunhere.com/myfilms.html என்ற இணைய தளத்தில் காணலாம்.

அருண் வைத்தியநாதன் எழுதி இயக்கப் போகும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற திரைப்படம் அமெரிக்காவில் நியுஜெர்சியில் முழுக்க முழுக்க உருவாக உள்ளது. எஸ்.பி. பாலசுப்ரமணியன் அவர்களின் புதல்வர் சரண் நடத்தி வரும் சரண் காபிடல் ·பிலிம் வொர்க்ஸ் நிறுவனமும், அமெரிக்காவில் உள்ள ஓம் சினிமாஸ் யு.எஸ்.ஏ. நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளன. தயாரிப்பு வேலைகள் துவங்கி விட்டன. தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகர்களில் ஒருவரான பிரசன்னாவும், கதாநாயகியாக ஸ்நேகாவும் நடிக்கவுள்ளனர். 'முழுப் படப்பிடிப்பையுமே 18, 20 நாட்களுக் குள்ளாக முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்' என்கிறார் அருண். பெரும்பாலான இந்தியர்களும், வெளிநாட்டினரும் இந்தியத் திரைப்படம் என்றால் முதலில் பாலிவுட் இந்தித் திரைப்படங்களை மட்டுமே நினைக்கின்றனர். அதை இந்தத் திரைப்படம் மாற்றும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

லட்சியப் பாதையில் விடா முயற்சியுடன் தொடரும் அருண் வைத்தியநாதன் உலகத் திரைப்பட இயக்கத்தின் கவனத்தைத் தன்பால் திருப்பியுள்ளார். இனி 'தமிழ்த் திரைப் படங்களுக்கு உலக அளவில் அங்கீகாரத்தையும் விருதுகளையும் நிச்சயம் பெற்றுத் தருவேன்' என்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் அருண் கூறும்பொழுது அவரது நம்பிக்கை அவரது திறமையின் அடிப்படையிலானது என்பதை உணர முடிகிறது. அவரது 'அச்சமுண்டு அச்சமுண்டு' திரைப்படம் வெற்றி உண்டு, வெற்றி உண்டு என்று புகழ் பெற வாழ்த்துகிறோம்.

ச. திருமலைராஜன்
Share: 


© Copyright 2020 Tamilonline