Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | ஜோக்ஸ் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனைப் பாதையில் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
சுத்த சக்தியின் சங்கடம் - பாகம் 2
- கதிரவன் எழில்மன்னன்|செப்டம்பர் 2007|
Share:
Click Here Enlargeஇதுவரை : முழுநேரத் துப்பறிவாளராகி விட்ட சூர்யா முன்னாள் சிலிக்கான் வேலி தொழில்நுட்ப நிபுணர். அவரது நண்பர் முரளியின் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு உதவி புரிகின்றனர். முரளியின் நண்பர் ஒருவர் தன் சுத்த சக்தித் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி தாக்கப்பட்டு, நிறுவனமே பெரும் ஆபத்திலிருப்பதாகக் கூறவே முரளி அவருக்குச் சூர்யாவை அறிமுகம் செய்ய அழைத்து வந்துள்ளார்.

சுத்த சக்தி நிறுவனத்தின் சங்கடத்தை சூர்யா எப்படி சுத்திகரிக்கிறார் என்பதை இனி பார்ப்போம்!

முரளி, தன் நண்பரின் சுத்த சக்தி நிறுவனமான வெர்டியான் (Verdeon) நிறுவனத்தில் வண்டியை நிறுத்தினார். மூவரும் வண்டியிலிருந்து இறங்கினார்கள். கிரண் கட்டிடத்தை ஒரு நோட்டம் விட்டான். ஒரு பளபளப்பு, அடாவடியுமில்லாமல் சாதாரணமாகத் தோற்றமளித்த பழைய கட்டிடத்தைப் பார்த்து முகம் சுளித்தான். 'ஐயே! சுத்த சக்தி கம்பனின்னதும் எதோ நவநாகரீகமா ராக்கெட் மாதிரி ஜிங்பேங்னு ஒரு கட்டிடம் இருக்கும்னு கற்பனை பண்ணி வச்சிருந்தேன். இது எதோ COBOL ப்ரோக்ராம் பண்ற மாதிரி பாட்டி காலத்துப் பழசா இருக்கு!' என்றான்.

சூர்யா சிரித்தார். 'கிரண், தொழில்நுட்பம் கட்டிடத்துல தெரியணுங்கற அவசியமில்லை. அதுவும் நிறுவனத்தோட ஆரம்ப நிலையில எதுக்கு? கட்டிடத்துக்குள்ள வேலை எவ்வளவு தீவிரமா நடக்குதுங்கறதுதானே முக்கியம்? எதோ 1999 வருஷ டாட்காம்மர்கள் மாதிரி மூலதனப் பணத்தை புஸ்வாணமா விடாம சிக்கனமா செலவழிக்கறாங்களேன்னு எனக்குத் திருப்திதான்' என்றார்.

முரளி ஆமோதித்தார். 'இந்த நிறுவனத்தை ஆரம்பிச்ச என் நண்பன் மார்க் ஷெல்ட்டன் ரொம்ப சிக்கனமான, சீரியஸான டைப். தாம்தூம்னு குதிக்க மாட்டான்.'

கிரண் அலுத்துக் கொண்டான். 'சீரியஸ் டைப்பா? போச்சுடா. முசுடு போலிருக்கு. நான் ஜோக்கடிச்சா நெற்றிக் கண்ணைத் திறந்துடுவாரோ!'

முரளி தலையசைத்து மறுத்தார். 'சேசே! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை கிரண். சீரியஸ்னு தானே சொன்னேன். துர்வாசர்னு சொல்லலியே? எப்ப சிரிக்கணும் எப்ப சீரியஸா இருக்கணும்னு தெரிஞ்சு நடந்துக்கறவர், அவ்வளவுதான். அவருக்கும் நல்ல ஸென்ஸ் ஆ·ப் ஹ்யூமர் இருக்கு. ஆனா வாழைப்பழத்துல ஊசி ஏத்தினா மாதிரி நுணுக்கமா இருக்கும் அவர் சொல்றது. நீயே பாறேன்' என்றார்.

மார்க் ஷெல்ட்டன் ஆஜானுபாகுவாக ஆறடி உயரத்துக்கு மேல் நல்ல கனமாகவே இருந்தார். அவருடைய பிள்ளையார் தொந்தி அவர் நடக்கையில் அதற்குச் சரியாக குலுங்கியது. நேர்த்தியாக வெட்டப்படாத கடமுட தாடி மீசை வேறு. 'அழிச்சா ரெண்டு கிரண் பண்ணலாம் போலிருக்கே. இவர் என்ன கர்ப்பமா இருக்காரா? இல்லைன்னா ஸாண்டா க்ளாஸ் அவதாரமோ?' என்று கிரண் முரளியிடம் கிசுகிசுத்தான்.

முரளி அவனை முறைத்து அடக்கினார். 'ஸூஷ்! எதாவது அவர் காதில விழுந்துடப் போகுது!' என்றார்.

கிரண் பதிலுக்கு 'காதுல விழுந்தாதான் என்ன கேடு? நான் தமிழ்லதானே உங்க கிட்ட சொன்னேன்?' என்றான். முரளிக்கும் சிரிப்பு வந்துவிட்டது. இருந்தாலும் அடக்கினார். 'சரி சரி, எசகு பிசகா இங்லிஷ்ல உளறிக் கொட்டிடப் போறே, கவனமா இரு.'

அதற்குள் மார்க் படு வேகமாக நடந்து அவர்கள் அருகில் வந்து, 'ஹலோ முர்லி! ஹவ் ஆர்யூ!' என்று அவர் கையைப் பிடித்துக் குலுக்கினார். வலியுடன் தவித்த முரளி கையை விடுவித்து நீவி விட்டுக் கொண்டே, 'ஹை மார்க்! இவர்தான் நான் சொன்ன சூர்யா. இவன் என் பையன் கிரண், ஸ்டாக் ·பண்ட் மேனேஜர், ஆனா சூர்யாவுக்கு அப்பப்போ உதவுறான்' என்று அறிமுகம் செய்தார். மார்க் சூர்யாவின் கையையும் தன் பெரும் கையில் அடக்கி ஒரு கை பார்த்து விட்டார். சூர்யா வலியில் தவிப்பதைக் கண்ட கிரண், 'அஹ்ஹா, விட்டா என் கையையும் ஜூஸ் பிழிஞ்சுடுவார் போலிருக்கே' என்று எண்ணிக் கொண்டு தான் முந்திக்கொண்டு மார்க்கின் கையை முடிந்தவரை முதலில் அழுத்திவிட்டுப் படக்கென்று இழுத்துக் கொண்டு விட்டான்.

மார்க் அவர்களை உற்சாகமாக வரவேற்றார். 'ஓ! நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். முர்லி என்கிட்டே உங்களைப் பத்தி ரொம்ப சொல்லியிருக்கார். நானும் என் நிறுவனமும் பெரும் ஆபத்துல இருக்கோம். வெளியாருக்கு தெரியக் கூடிய பெரிய ஸ்கேண்டலோ அதைவிடப் பெரிய விபரீதமோ நடக்காம இருக்க நீங்க உதவுவீங்கன்னு எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்திருக்கு. ப்ளீஸ் ஹெல்ப்' என்றார்.

சூர்யா அவரது நம்பிக்கையை வளர்க்க முடிவு செய்து தனக்கே உரிய யூக வெடியொன்றை எடுத்து வீசினார். 'மார்க், உங்களைச் சந்திச்சதுல ரொம்ப மகிழ்ச்சி. உங்க 25-ஆவது கல்யாண நாளன்னிக்கு டின்னருக்கும் ஷோவுக்கும் போகற அவசரத்துலயும் எங்களை வந்து சந்திச்சிருக் கீங்கன்னா உங்க பிரச்சனை பெரிசுன்னு விளங்குது. ஷெ-லூயி ரெஸ்டாரண்ட்டுல டின்னர் ரிஸர்வேஷனும், போதாததுக்கு ஒரிஜினல் ப்ராட்வே காஸ்ட் நடிக்கர ப்ரொட்யூஸர்ஸ் ஷோவுக்கு இரவு 9 மணி ஷோவுக்கு டிக்கட் கிடைக்கறதும் குதிரைக் கொம்புன்னு கேள்விப் பட்டிருக்கேன். அதெல்லாம் வாங்கியிருக்கீங்க. கவலைப் படாதீங்க, இன்னிக்கு உங்க மனைவி ரோஸியோட ஜாலியா போயிட்டு வாங்க. நீங்க தரப்போற வைரமோதிரம் அவங்களுக்கு நிச்சயம் பிடிச்சிருக்கும். பிரச்னைகளை நாளையிலிருந்து கவனிச்சுக்கலாம். நிச்சயமா நிவர்த்திக்க என்னால முடிஞ்சவரை முயற்சி செய்யறேன்.'

சூர்யா விட்ட சரவெடிகளினால் மார்க்கின் முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளும் அதிர்ச்சியால் பிளந்து நின்றுவிட்ட வாயும் கிரணுக்கு அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்தன. மார்க் பிறகு எதோ தோன்றி, சுதாரித்துக் கொண்டு சிரித்து விட்டு, முரளியைப் பார்த்து விளையாட்டுக் கோபத்தோடு சுட்டு விரலை ஆட்டினார். 'ஹே, முர்லி மேன், உங்க கிட்ட இனிமே நான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். நான் இன்னிக்கு ரோஸியோட அந்த ரெஸ்டாரண்ட்டுக்கும் இரவு 9 மணி ஷோவுக்குந்தான் போகப் போறேன்னு எப்படியோ தெரிஞ்சுக்கிட்டீங்களே. ரோஸிகிட்ட கூட நான் இன்னும் சொல்ல யில்லை. உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது, சூர்யாவுக்கும் சொல்லிட்டீங்க போலிருக்கு?' என்றார்.

சூர்யாவின் யூகத் திறமையை அறிந்திருந்த முரளி புன்னகையுடன் தலையசைத்து மறுத்தார். 'ஸாரி மார்க். எனக்கே இந்த விநாடி வரைக்கும் தெரியாது. அந்த ரெஸ்டாரண்ட், ஷோ ரெண்டும் என்னன்னு கூட தெரியாது. இப்போ சூர்யா சொல்லித் தான் தெரியும்' என்றார்.

மார்க் 'ஆங்...? உங்களுக்கே தெரியாதா? அப்ப எப்படி?' என்று வியப்பு முகத்தில் விளையாட வினாவினார்.
சூர்யா புன்னகைத்தார். 'எனக்கும் நூறு சதவிகிதம் தெரியாது மார்க், ஆனா உங்ககிட்ட கவனிச்ச சில தடயங்களை வச்சு யூகிச்சேன் அவ்வளவுதான்' என்றார். சூர்யா மேலும் விளக்கலானார். 'முதலாவதா, இது இளமாலை நேரம். நீங்க நல்ல ஈவ்னிங் ஸூட் போட்டிருக்கறதுனால வெளியில ஒரு நல்ல டின்னர் பார்ட்டி இல்லைன்னா தனி டின்னருக்குப் போறீங்கன்னு யூகிச்சேன். ஆனா நீங்க டக்ஸீடோ ஸூட் போட்டில்லை, நல்ல ஈவ்னிங் ஸூட் தான். அதுனால, இது ரொம்ப ·பார்மல் ப்ளாக்-டை டின்னர் இல்லை, தனிப்பட்டதா இருக்கலாம்னு தோணிச்சு.

'அப்புறம், உங்க கையில ஒரு சின்ன வலைப் பையைத் தொங்க விட்டிருக்கீங்க. அதுக்குள்ள ஒரு சின்ன நகைப் பெட்டி இருக்கறது தெரியுது. உங்க கையில கல்யாண மோதிரம் இருக்கறதால மனைவிக்குப் பரிசா வாங்கிருப்பீங்கன்னு யூகிச்சேன்.'

மார்க் குனிந்து தன் கையில் ஜிமிக்கி போல் ஆடிக் கொண்டிருந்த வலைப்பையைப் பார்த்து விட்டு, ஏதோ கேட்க வாய் திறந்தார். கிரண் அவசரமாக 'அ..அ... ஒரு நிமிஷம். அது நகைப் பெட்டின்னு சூர்யாவுக்கு எப்படித் தெரியும்னு கேட்கப் போறீங்க, அப்படித் தானே? நானே சொல்றேன்...' என்று விளக்க ஆரம்பித்தவுடன், மார்க் ஆச்சர்யத்துடன் தலையாட்டி ஆமோதிக்கவும், முரளியும் தன் பங்குக்கு உற்சாகத்தோடு களத்துக்குள் குதித்தார். 'கொஞ்சம் இரு கிரண். நானே சொல்லிடறேன். சூர்யா சொன்னப்புறந்தான் பார்த்தேன். எனக்கே தெரிஞ்சு போச்சு. மார்க், அந்த வலைப்பை வழியாவே தெரியுது பாருங்க, அந்த சின்னப் பெட்டி மேல அந்த ரொம்ப உயர்தர நகைக்கடை பேர் பெரிசா போட்டிருக்கு.'

கிரண் தந்தையின் முதுகில் பளார் என்று ஒரு ஷொட்டு விட்டான். 'சபாஷ் அப்பா! பின்னிட்டீங்க. சூர்யா, ஜாக்கிரதை. உங்களுக்குப் போட்டியா எங்கப்பாவும் கிளம்பிட்டார்.'

முரளி வாய்விட்டுச் சிரித்தார். 'சூர்யா ரெண்டு ஸெகண்டுக்குள்ள எல்லாத்தையும் கவனிச்சு யூகிச்சுட்டாரே. அவரோட என்னைச் சேர்த்து பேசாதே. ஆனா சூர்யா, ரெஸ்டாரண்ட், ஷோ பத்தி எல்லாம் சொன்னீங்களே, அது எப்படி?'

சூர்யா மேலும் விளக்கினார். 'ஓ, அதுவா. மார்க் நம்மகிட்ட வரும்போது வலக்கையில ரெண்டு பேப்பர் அட்டைகள் வச்சிருந்ததைப் பார்த்தேன். நீங்க எங்க ரெண்டு பேரைப் பத்தி சொன்னப்புறம், அந்த அட்டைகளை சட்டைப் பாக்கெட்ல வச்சிட்டு கை குலுக்கினார். ஒரு காகிதத்து மேல அந்த ரெஸ்டாரண்ட் பேரும், 7 மணி ரிஸர்வேஷன் அப்படின்னும் எழுதியிருந்தது. மத்த அட்டைகள் ஷோ டிக்கட்டுகள். ஷோ பேரும் அதுல 9 மணி ஷோன்னும் போட்டிருந்தது.'

மார்க் ஆவலுடன் 'பிரமாதம்! சரி, என் மனைவி பேர் ரோஸி, இது எங்க 25-ஆவது கல்யாண நாளுங்கறதெல்லாம் எப்படித் தெரிஞ்சுது?'

'ரொம்ப சுலபம். பாருங்க உங்க நகைக்கடை பையோட முடிச்சுல ஒரு சின்ன வாழ்த்து அட்டை தொங்கிக் கிட்டிருக்கு. அது திறந்துதான் இருக்கு. அப்படி இப்படி நீங்க அசைக்கும்போது அதோட உள்பக்கம் நல்லாவே தெரியுது. அதுல நீங்க 'என் ஆருயிர்த் துணைவி ரோஸிக்கு, 25 வருட சொர்க்க வாழ்வுக்கு நன்றி' அப்படின்னு குறிப்பிட்டிருக்கறதும் தெரியுது. மீதி ரொம்ப சுலபமான யூகந்தான். உங்க தனிப்பட்ட வாழ்வின் சிந்தனைகளைப் பார்த்ததுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன். ஆனா எல்லாமே தானே என் கண்களில பட்டதுதான், நான் குடைஞ்சு பார்க்கலை' என்றார் சூர்யா.

மார்க் வாய் விட்டுச் சிரித்துக் கொண்டு கைகொட்டி ஆரவாரித்தார். 'பிரமாதம். உங்களை எப்படிப் பாராட்டறதுன்னே தெரியலை சூர்யா! முர்லி என்கிட்டே உங்களைப் பத்தி சொன்னப்போ என்னால நம்பவே முடியலை. எங்க துறையைப் பத்தித் தெரியாத ஒருத்தர் எனக்கு எப்படி உதவ முடியும்னு அலட்சியமாத்தான் நினைச்சேன். அப்புறம் நான் இருக்கற நிலைமையில எதுவானாலும் சரி, முயற்சி செஞ்சுதான் பாத்துடலாமேன்னு முர்லி கிட்டே உங்களைக் கூப்பிடச் சொன்னேன்.

ஆனா, சில நொடிகளுக்குள்ளேயே என்னுடைய சந்தேகத்தையெல்லாம் சுக்கு நூறாக்கித் தகர்த்தெறிஞ்சுட்டீங்க சூர்யா. இப்ப என்னுடைய பிரச்சனை தீரவும் ஒரு வழி பிறக்கும்கற நம்பிக்கை துளிர் விட ஆரம்பிச்சிருக்கு. இங்க வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்!'

சூர்யா புன்னகையுடன் தலை வணங்கி அவர் பாராட்டை ஏற்றுக் கொண்டார். குளிர் காற்று வீசியது. எல்லோரும் அலுவலகத்துக்குள் நுழைய எண்ணினார்கள்...

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 


© Copyright 2020 Tamilonline