Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2000 Issue
ஆசிரியர் பக்கம் | அமெரிக்க அனுபவம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | சமயம் | சினிமா சினிமா | சிறுகதை | பொது | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
பொது
காலந்தோறும் மாமியார்கள்!
நூற்றாண்டின் மாபெரும் அநீதி
மர்ம தேசம்
எந்தக் குழந்தைகளுக்கு குழந்தைகள் தினம்
500 ஆண்டுகளாக வேத முழக்கம் ...!
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு
'பவளக்கொடி' வழங்கிய கோணங்கியின் 'பாழி' மீதான விமர்சனச் சூழல்
மன அமைதி தியானம் - ஜக்கி வாசுதேவை முன் வைத்து...
தமிழகம் பெற்றெடுத்த தவப்புதல்வர்
டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினம்
- த.சந்திரா|டிசம்பர் 2000|
Share:
Click Here Enlargeஎல்லோரையும் போல சாந்தியும் ஆயிரத்தெட்டு கனவுகளோடும், கற்பனைகளோடும் தன்னுடைய திருமண வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார். கணவருக்கு ஒரு கம்பெனியில் லாரி ஓட்டுனர் வேலை. சின்னச் சின்ன ஊடல்களுடனும், சிணுங்கல்களுடனும் சென்னையில் தனிக்குடித்தனம். இரண்டு குழந்தைகள். அவ்வப்போது உறவினர்களின் சந்தோஷ வருகை, ‘நீ சரியில்லை; நான் சரியில்லை’ என்று ஒருவருக்கொருவர் குற்றம் சொல்லிச் சண்டையிட்டுக் கொள்ளாத இனிமை நிறைந்த நாள்கள் அவை . வாழ்க்கை அவர்களை அப்படியே மகிழ்ச்சியாக வாழ அனுமதித்திருக்கலாம்.

திடிரென்று சாந்தியின் கணவருக்கு உடம்பு சரியில்லாமல் போனது. நிறைய தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. முன்னை விட உடம்பு மோசமாகிக் கொண்டே சென்றது. சுத்தமாகப் பசியே எடுக்காது. உடம்பு துரும்பாக மெலிந்துகொண்டேபோனது. 1994 ம் ஆண்டு முதல் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக சாந்தியின் கணவருக்கு சளி, இருமல், காய்ச்சல் என்று உடல் கோளாறுகள் தொடர்ந்து கொண்டே இருந்தன. ஆனால் அவருக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்பது மட்டும் தெரியவில்லை. கடைசியாக சென்னையின் புகழ் பெற்ற அந்தத் தனியார் மருத்துவமனையில் குறிப்பிட்ட ஒரு சோதனையைச் செய்து பார்க்கும் படி ஒரு மருத்துவர் ஆலோசனை கூறியிருக்கிறார். அதன்படி சாந்தி தன் கணவரைப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல சோதனை முடிந்து முடிவு வந்துவிட்டது. நோய்கள் பற்றிய அறிவும், விழிப்புணர்வும் இல்லாத நிலையில் சாந்திக்கு சோதனையின் முடிவு பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆனால் அவர் கணவருக்கு அந்த நோயைப் பற்றி நிச்சயம் மருத்துவர் கூறியிருப்பார். ஆனால், அவரோ தன் நோய் சம்பந்தமாக ஒரு வார்த்தை கூட தன் மனைவி சாந்தியிடம் சொல்லவில்லை. உடல் சோர்வுற்று வலுவிழந்து போகையில் வீட்டில் பொருளாதாரமும் தளர்ந்து போயிருந்தது. அதற்கு மேல் கணவருக்குத் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்க வசதியில்லாமல் போனவுடன் அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.

கணவரின் உடல்நலம் பற்றி விசாரிக்க வந்த உறவினரிடம் சாந்தி எதேச்சையாகத் தனியார் மருத்துவமனையின் பரிசோதனை முடிவை எடுத்துக் காண்பிக்க சாந்தியின் தலையில் பெரிய இடியாக விழுந்தது அவர் சொன்ன அந்த செய்தி. அது தன் கணவருக்கு எச்.ஐ.வி பாஸிட்டிவ் என்பதில் கூட இல்லை, அவர் அதிக நாள் உயிரோடு இருக்க மாட்டார் என்ற செய்தி மிக அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு எப்படி இந்த நோய் வந்திருக்கும் என்ற ஆராய்ச்சியில் இறங்காமல், எந்தக் கோபமும் இல்லாமல் இரண்டு குழந்தைகளோடு சேர்த்து அவரையும் மூன்றாவது குழந்தையாய் நினைத்துத் தாங்கியிருக்கிறார். பின்பு உறவினர்களின் ஆலோசனைப்படி அவரும் எச்.ஐ.வி சோதனை செய்துகொள்ள இந்த முறை பூமியே பிளந்து கொண்டது போன்ற அதிர்ச்சிக்கு ஆளானார். சாந்திக்கும் அவரது கணவரின் மூலம் எச்.ஐ.வி பாஸிட்டிவ் தொற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. சாந்திக்குத் தொடர்ந்த மன உளைச்சல்களால் மனம் பித்துப் பிடித்தது போலிருந்தாலும், கணவருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்து கொண்டிருந்தார். உடல்ரீதியாக அவர் ஆரோக்கியமாகவும் -ருந்தார்.

தன் கணவர் மேல் கொண்ட அதிக நம்பிக்கையால் அவருக்கு கெட்ட சகவாசத்தால் எய்ட்ஸ் வந்திருக்காது என்று சாந்தி பிடிவாதமாக நம்பிக் கொண்டிருந்தாலும் உண்மை என்னவோ அது தான். சாந்தியின் கணவருக்கு மாதத்தில் ஒன்றிரண்டு தினங்கள் மட்டும் வெளியூர்ப்பயணம். அப்போது சாந்திக்கு இரண்டாவது குழந்தை பிறந்து விட்டது. சாந்தியின் கணவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பாலியல் தொழிலாளரிடம் பாதுகாப்பின்றி உடலுறவு வைத்துக் கொள்ள எச்.ஐ.வி தாக்கியிருக்கிறது என்ற உண்மை தன் கணவரே இறக்கும் தருவாயில் சொன்னபோது சாந்தியால் நம்பாமல் இருக்க முடியவில்லை. ஆனாலும் கடைசி வரையில் கணவரை அன்பு குறையாமல் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். சோதனை முடிவு வந்து மூன்று மாதங்களில் 1996-ஆம் ஆண்டு இறந்து போனார் சாந்தியின் கணவர்.

இது ஏதோ கதைக்காக அல்லது புலனாய்வுப் பத்திரிக்கைகளில் சொல்வது மாதிரி சுவாரசியத்திற்கானது இல்லை. மன வடுக்களுடன் கூடிய உண்மையாக நடந்த சம்பவம் இது. 27.11.2000 அன்று சாந்தி வேலை பார்க்கும் இடத்தில் அவருடன் மனம் விட்டு பேசிய போது அவர் சொன்ன அவருடைய வாழக்கையைத் தான் பெயரை மாற்றி மட்டும் கொடுத்திருக்கிறோம். அதன் பின் சாந்தியின் வாழ்க்கை எப்படியிருக்கிறது என்பதை அவருடைய மொழியிலேயே நீங்கள் படித்துக் கொள்ளுங்கள்

நாங்கள் வாழ்க்கையின் உண்மையை அப்படியே ஏற்றுக் கொண்டவர்கள் ‘’என் கணவர் இறந்த பின் கொஞ்ச நாள் பித்துப் பிடித்த மாதிரி இருந்தேன். இப்பவும் அவர் மேல எனக்கு எந்தக் கோபமும் வரலை. அவர் குழந்தைகள் பிறந்த பின்தான் தவறான சகவாசத்தால் தாக்கப்பட்டிருந்தார் என்பதே எனக்கு நிம்மதிப் பெருமூச்சு அடையச் செய்கிறது. இல்லையென்றால் என் அப்பாவிக் குழந்தைகளின் கதி என்னவாகியிருக்கும்ன்னு நினைச்சுப் பார்த்தாலே நெஞ்செரியுது. மனிதர்கள் எல்லோருமே ஒரு சமயமாவது தப்பு செய்யுறவங்களாகவே இருக்காங்க. எங்க குடும்பத்தில் உள்ள எல்லாரும் எனக்கு தருகின்ற ஆதரவு என்னைத் தெம்பாக வாழ வைக்குது. இப்ப நான் வேலை செய்கின்ற தன்னார்வத் தொண்டு அமைப்பைச் சந்தித்து என்னுடைய நோயைப் பற்றிய விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் நிறையப் பெற்றேன். நான் பத்தாவது வரையும் படிச்சிருக்கேன் என்று தெரிந்ததும் 2500/- ரூபாய் சம்பளத்தில் வேலையும் கொடுத்தாங்க. வேலைக்குச் சேர்ந்து மூன்று வருஷமாச்சு. நம்பிக்கை துளிர்க்கப் பயணப்பட்டுக் கொண்டிருக்கேன். பையனும்,பொண்ணும் ஸ்கூலில் படிச்சிட்ருக்காங்க. நான் வீட்டில் எல்லா வேலையும் முடிச்சிட்டு வேலைக்கு வர்றேன். எந்த உடல் நலக்குறையும் இல்லை. வாழ்க்கை அது பாட்டுக்குப் போய்க்கிட்டிருக்கு’’.

உங்கள் நிறுவனத்தில் நீங்க என்ன மாதிரியான வேலை செய்றீங்க?

நான் தன்னார்வக் குழுவில் வேலை செய்வதால் என்னை மாதிரி பாதிக்கப்பட்ட ஆண்,பெண் இருபாலாருக்குமே எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தறேன். எச்.ஐ.வி பாஸிட்டிவ் உள்ளவங்களோட வீட்டிற்குச் சென்று, பாதிக்கப்பட்டவர் விரும்பும் பட்சத்தில் அவர்களுக்கு, பாதிப்புக்குள்ளானவரை எப்படிக் கவனித்து கொள்ள வேண்டும், தயவு செய்து அவர்களை ஒதுக்காமல் அன்பு செலுத்தி நம்பிக்கை கொடுங்கள் என்று சொல்கிறேன். என்னுடைய இந்த வேலையில் நான் சந்தித்தவர்களில் 90 சதவீதம் பேர் பாலியல் தொடர்பினால் எய்ட்ஸினைப் பெற்றவர்கள் என்பது தான் வருத்தத்துக்குரியது.

(கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு என்று வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே தவறிழைக்கும் வேடிக்கையான சமுதாயம்)

உங்கள் வேலையில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா?

நாங்கள் மருத்துவ மனைகளிலிருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்கள், தகவலோடு போவதால் பிரச்சனை என்று சொல்ல முடியாது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சமாளிப்பது மட்டும் கொஞ்சம் சிரமம். குறிப்பிட்ட அந்த நபர் எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரியவில்லை என்றால் நேரடியாக அவர்களிடம் விஷயத்தைச் சொல்ல முடியாது. பொதுவாக உடல் நலம் பற்றியதாக -ருக்கும் எங்கள் அணுகுமுறை.

வீட்டில் குழந்தைகளுக்கு நீங்கள் எச்.ஐ.வி பாஸிட்டிவ் நோயால் தாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பது தெரியுமா?

பையனுக்கு எட்டு வயசு தான் அவனுக்குத் தெரியாது.பொண்ணுக்கு பத்து வயசு முடிஞ்சிருச்சு. அவள் டி.வியில் விளம்பரங்களில் பார்த்துத் தெரிந்து கொண்டிருக்கிறாள். ஒரு முறை எய்ட்ஸ் நோயாளிகள் பற்றிய டாக்குமெண்டரியைப் பார்த்து விட்டு அப்பாவும் இந்த நோய் வந்துதானேம்மா செத்துப் போனார் என்றாள். நானும் மெளனமாக ஒத்துக் கொண்டேன். என்னுடைய வேலை நடவடிக்கைகளைப் பார்த்து எனக்கும் எச்.ஐ.வி பாஸிட்டிவ் உள்ளது என்று தெரிந்து கொண்டாள். வாழ்க்கையின் உண்மையை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

இறுதியாக அவரிடம் பேசி முடித்த பின், ‘உங்களுக்குத் திருமணம் ஆகவில்லை என்றால் திருமணத்திற்கு முன் எச்.ஐ.வி சோதனை செய்து கொள்ளுங்கள்’ என்றாரே பாருங்கள், பேச்சற்றுத் திரும்பினோம் உண்மை உரைக்க.

எனக்கு எச்.ஐ.வி பாஸிட்டிவ் எப்படி வந்தென்று தெரியவில்லை? - குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
Click Here Enlargeஎன்னோட ஒன்றரை வயசுப் பெண்குழந்தைக்கு வாயைச் சுற்றி உதடுகளெல்லாம் புண்ணாக இருந்தது. சென்னை குழந்தைகள் மருத்துவமனையில் அவளைக் காட்டினோம். வைத்தியம் பார்த்தும் பலனின்றி அவள் இறந்து விட்டாள். அப்பல்லாம் எய்ட்ஸ் பத்தி எங்களுக்கு ஒன்னும் தெரியாது. டாக்டர்கள் அவளை டெஸ்ட் செய்து பார்த்தப்ப எய்ட்ஸ் இருப்பது தெரிந்திருக்கிறது. அப்புறம் எங்களையும் அரசு மருத்துவமனையில் டெஸ்ட் பண்ணச் சொன்னாங்க. எனக்கும் என் மனைவிக்கும் எய்ட்ஸ் இருக்குன்னு தெரிஞ்சிச்சு. அதுக்குள்ள எங்க குடும்பம் எங்க ஏரியாவில் இருக்கிறவர்கள் எல்லோருக்கும் எங்களுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிஞ்சு ஒதுக்க ஆரம்பிச்சாங்க. சத்தியமாகச் சொல்கிறேன் எனக்கு சிகரெட், மது தவிர்த்து வேறு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. ஆனால், என்னைச் சேர்ந்தவர்கள் அப்படியொரு கெட்ட சகவாசத்தால் தான் எனக்கு எய்ட்ஸ் வந்திருக்கும் என்று நினைக்கிறார்கள். ஒரு மாதிரி தீண்டத்தாகாதவர்கள் மாதிரி அங்க இருக்கறது எங்களுக்குக் கஷ்டமா இருந்துச்சு. சொந்த வீடு, உறவெல்லாம் விட்டுட்டு சென்னையிலே வேற இடத்துக்குக் குடி போயிட்டோம்.கொஞ்ச நாளில் எங்க வீட்டு ஓனருக்கு எங்களுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிய வந்தது. உடனே அந்த இடத்தை விட்டு ஓட வேண்டியதாயிடுச்சு. ஆனால் இப்ப இருக்கின்ற வீட்டின் ஓனர் தங்கமானவர்கள். எங்கள் நிலைமையைப் பற்றித் தெரிந்தும் எங்களை ஆதரிக்கிறார்கள். என் நிலைமையைப் புரிந்து என்னை மரியாதையுடன் அரவணைக்கும் ஒரு நிறுவனத்தில் 1500 ரூபாய்க்கு வேலைக்குப் போயிட்டிருக்கேன். என் மனைவி என்னைப் பற்றி எந்தக் குற்றமும் சொல்வதில்லை.

எங்களுக்கு எய்ட்ஸ் இருக்குன்னு தெரிஞ்சப்ப என் மனைவி கர்ப்பமா இருந்தாங்க. எய்ட்ஸ் என்ற முத்திரை எங்களை ரொம்ப அலைக்கழிச்சிருச்சு. என் மனைவிக்கு எய்ட்ஸ் இருக்குன்னு தெரிஞ்சவுடனே ஒரு சில டாக்டர்களே எங்களை ஒதுக்கினாங்க. சரியாக என் மனைவிக்கு மருத்துவமும் பார்க்கலை. அப்போ G.H ல் ஒரு தன்னார்வக் குழுவை சேர்ந்தவங்களைப் பார்த்தேன். அப்புறம் அவர்கள் மூலமாக மருத்துமனைக்குப் போனவுடன் சரியாகக் கவனித்தார்கள். ஆண் குழந்தை பிறந்தது. கடவுள் புண்ணியத்தில் எங்க குழந்தைக்கு எய்ட்ஸ் இல்லை. நானும் என் மனைவியும் ஆரோக்கியமாக உள்ளோம். எனக்கு சேர வேண்டிய வீட்டு மனையைக் கூட எனக்குத் தராமல் எங்க அண்ணன், தம்பிங்க வச்சுக்கிட்டாங்க. இருந்தாலும் எனக்கு சொந்தக்காரங்களின் அன்பு தேவையாயிருக்கு. மாதத்திற்கு ஒரு முறையாவது நான் மட்டும் எங்க அம்மா,அப்பாவைப் போய்ப் பார்த்திட்டு வர்றேன். அவங்களும் கொஞ்சம், கொஞ்சம் இப்போது எங்களைப் பற்றிப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிச் சொன்ன குமார் எப்படி தனக்கு எய்ட்ஸ் வந்திருக்கும் என்பதைத் தன்னால் யூகிக்க முடியவில்லை என்கிறார். சமீபத்தில் தான் செய்த ,செய்ய இருந்த தவற்றை தான் சார்ந்திருந்த தன்னார்வக் குழுவின் அறிவுறுத்தலின் மூலம் திருத்திக் கொண்டதாகக் கூறினார்.

குடும்பக் கட்டுப்பாடு பாதுகாப்பின்றி மூன்றாவது முறையாக அவர் மனைவி கர்ப்பம் தரித்திருக்கிறார். பின்பு தன்னார்வக் குழுவைச் சேர்ந்தவர்கள் குமாரின் மனைவிக்குக் கருக்கலைப்பு செய்து குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து விட்டார்களாம்.

பல்வேறு புள்ளிவிவரங்களின்படி மிக அதிகமாக எய்ட்ஸ் பரவுவதற்குப் பாதுகாப்பற்ற, முறையற்ற பாலியல் உறவுகள்தான் காரணம் என்று தெரிய வருகிறது. தமிழ்ச் சமுதாயத்தில் உடல் சார்ந்த பாலியல் சார்ந்த விஷயங்களை மூடி மறைத்து அந்தரங்கமாக வைத்துக் கொண்டு வருகின்றனர். பாலியல் பற்றிப் பேசுவதற்கும் பரஸ்பர பகிர்தலுக்கும் நம் சமூகம் காலம்காலமாக ஒரு கலாச்சாரத் தடையை உண்டாக்கி வைத்திருக்கிறது. பாலியல் கல்வியை அறிவுப்பூர்வமாக வழங்கவும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அவை இன்றைய காலகட்டத்தில் எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்களைப் பற்றிய அறிவுறுத்தலும், விழிப்புணர்வு இல்லாமலும் எச்.ஐ.வி பாதிப்புக்குள்ளாதல் போன்ற எதிர்விளைவை ஏற்படுத்துகிறது.

எய்ட்ஸ் வந்திருச்சா? உடனே மரணம் தான். இது போன்ற பிரச்சார விளம்பரங்களைத் தவிர்த்து, தடுத்து எச்.ஐ.வி நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆரோக்கியமாக உள்ளவர்களின் நம்பிக்கையளிக்கும் வாழ்க்கையை அவர்களுக்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். எய்ட்ஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கும் நாள் தூரத்தில் -ல்லை நாளையோ, நாளை மறுநாளோ அது நிகழலாம்.

எச்.ஐ.வி. வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்போரை ஓட ஓட ஒதுக்காமல் அவர்களை அரவணைத்து, மனிதாபிமான நோக்கோடு பாதுகாக்கும் பக்குவம் எல்லோருக்கும் வர வேண்டும்.

எய்ட்ஸ் தினம் என்பது ஏதோ சம்பிரதாயமாக எய்ட்ஸ் பற்றி, எச்.ஐ.வி பற்றி பேசுவதற்கான தினமாக மட்டும் -ல்லாமல் அதைப் பற்றிய முழு அறிவையும், அக்கறையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதை முழு நோக்கமாகக் கொண்டு செயல்படும் தினமாக அமைய வேண்டும்.

த.சந்திரா
More

காலந்தோறும் மாமியார்கள்!
நூற்றாண்டின் மாபெரும் அநீதி
மர்ம தேசம்
எந்தக் குழந்தைகளுக்கு குழந்தைகள் தினம்
500 ஆண்டுகளாக வேத முழக்கம் ...!
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு
'பவளக்கொடி' வழங்கிய கோணங்கியின் 'பாழி' மீதான விமர்சனச் சூழல்
மன அமைதி தியானம் - ஜக்கி வாசுதேவை முன் வைத்து...
தமிழகம் பெற்றெடுத்த தவப்புதல்வர்
Share: 




© Copyright 2020 Tamilonline