Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | பொது | விளையாட்டு விசயம் | தகவல்.காம் | குறுக்கெழுத்துப்புதிர் | சமயம் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
சினிமா சினிமா | மாயாபஜார் | சிறுகதை | நேர்காணல்
Tamil Unicode / English Search
பொது
தெய்வ மச்சான் பதில்கள்
மகா மலிவு விலை கார்: கோவையில் சாதனை
வாஸ்து ஒர் அறிமுகம்
புது யுகம் காண புதிய அரசியல் சாசனம்!
கடம் கார்திக்கின் தகதிமிதகஜூனு
இவர்களை அரசும் அதன் திட்டங்களும் புறக்கணிக்கிறதா?
- கிருஷ்ணப்ரியா|பிப்ரவரி 2001|
Share:
Click Here Enlargeடிசம்பர் 3 - உலக உடல் ஊனமுற்றோர் தினம்

போட்டியும் பொறாமையும் நிறைந்த உலகத்தில் அனைத்து உடல்நலனும் பெற்ற சாதாரண மனிதனே தனது இருப்புக்காகப் போராட வேண்டிய நிலை. தனது துன்பங்களுக்கும், வேதனைகளுக்குமிடையில், அவனது கவனம் தனது சக வாழ்க்கைப் பயணியான ஊனமுற்றோர்களின் வாழ்க்கைப் போராட்டங்களிலும் திரும்ப வேண்டும் என்பதற்காக சர்வ தேச அளவில் டிசம்பர் 3-ம் தேதியை உலக ஊனமுற்றோர்கள் தினமாகக் கொண்டாடுகிறோம். இயற்கையின் தவறுக்காக அவர்கள் எந்த விதத்திலும் வருத்தப்படவோ, தாழ்வு மனப்பான்மை கொள்ளவோ கூடாது என்பதற்காக எல்லா அரசாங்கங்களும் அவர்களுக்கு முன்னுரிமையும், சலுகைகளும் தருகின்றன. ஆனாலும், மக்கள் தொகை அதிகமுள்ள நமது நாட்டில் அரசாங்கத்தின் ஆணைகள், நிலுவையிலுள்ளதா? அவை சரியான முறையில் நிறைவேற்றப்படுகிறதா? என்ற கேள்விகளும் உள்ளன.

ஊனமுற்றோர்களை ஏழு பிரிவுகளாக, கண் பார்வையின்மை, குறைந்த பார்வை, தொழுநோயினால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், காது கேளாமை, இயக்க நரம்பு சம்பந்தப்பட்ட ஊனம், மனநோய், மன வளர்ச்சி குறைவு எனப் பார்க்கலாம். 40 சதவீதத்துக்கும் குறையாமல் ஊனமுற்றவர்களுக்குத்தான் மருத்துவர்கள் ஊனமுற்றவர்கள் என்ற சான்றிதழ் தருகின்றனர். உடல் ஊனமுற்றவர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு இவர்கள் அனைவருக்கும் சேர்த்துத்தான்.

ஊனமுற்றோருக்கான கல்வியைப் பொறுத்த வரை நமது தமிழ்நாடு அரசு மற்ற அரசுகளை விட அதிகமான சலுகைகளைக் கொடுக்கின்றது. கல்வி நிலையங்களில் அனுமதி, மற்றும் அதற்கான வயது வரம்பைத் தளர்த்தல், படிப்பதற்கான கட்டணங்களில் சலுகை, தேர்வு எழுதுகையில் அதிக நேரம் என்று நிறையச் சொல்லலாம்.ஆனால், இச் சலுகைகள் இருப்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. ஊனமுற்ற குழந்தை பிறந்த அதிச்சியே, சில வீடுகளை பத்து ஆண்டுகள் வரையிலும் வாயடைக்க வைத்து விடுகிறது. பிறகு தான் அவர்கள், தங்கள் குழந்தைகளை ஊனமுற்றவர்கள் பள்ளியில் சேர்ப்பதா?, அது எங்கு இருக்கிறது என்பது போன்ற தகவல்களை விசாரிக்க ஆரம்பிக்கின்றனர். இப்படி 10, 12 வயதில் தான் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க வருகின்றனர். இத்தனை காலதாமதத்தில் வரும் குழந்தைகளுக்குக் கல்வி கற்றுத் தருவது சற்று சிரமமான விஷயமாக இருக்கிறது. சரி. படித்தவுடன் அவர்கள் எதிர்பார்ப்பது வேலை. இவர்களுக்கு வேலை கிடைப்பதற்கான தடங்கல்களைப் பொதுவாக நிலவும் வேலைவாய்ப்பின்மையோடு சேர்த்துப் பார்க்க முடியாது.

வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை, ஊனமுற்றவர்களுக்கு மொத்தமாக வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு 3 விழுக்காடு. இதில் 1% பார்வைத் திறன் குறைந்தோர், 1% காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர், மீதம் 1% உடல் ஊனமுற்றோருக்கு என்று உள்ளது. ஆனால், இந்த ஒதுக்கீடு நேரடியானதல்ல. இங்கு சாதி அடிப்படையில் வரும் சுழற்சி (roster) முறை பின்பற்றப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சாதியில் உடல் ஊனமுற்றவர்கள் இருந்தால் தான் , அந்த வேலைக்குத் தகுதியுடையவராக முடியும். இந்த முறையை மாற்றி நேரடியாக இட ஒதுக்கீடு அளிக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சுய தொழில் செய்வதற்காக வங்கிகளில் கடன் கேட்பதற்கு உரிமைகள் இருந்தாலும், நடைமுறைச் சிக்கல்கள் அதிகம். சமூகத்தில் பெரிய மனிதர்களாக இருப்பவர்களின் ஜாமீன் கையெழுத்துக் கேட்பார்கள். இல்லையென்றால் அத்தாட்சிக்கு ஏதாவது உடைமைகளைக் காண்பிக்கச் சொல்வார்கள். பணம் இருப்பவர்களுக்குத் தான் பணம் கிடைக்கும் என்ற புதிய மொழிகு இவர்களும் விதிவிலக்கல்ல.

தனியார் நிறுவனங்களில், ஊனமுற்றவர்களின் வேலைத்திறன் குறித்து சரியான விழிப்புணர்வு இல்லை. அவர்களால் இந்த வேலைகளையெல்லாம் செய்ய முடியுமா? என்ற ஆச்சரியம் கலந்த நம்பிக்கையின்மை இன்றும் அதிகாரிகளிடம் தொடரத்தான் செய்கிறது. முதலில் சோதனை முறையில் அவர்களை வேலைக்கு வைத்துப் பாருங்கள். பின்பு அவர்கள் வேலை பிடித்திருந்தால் நிரந்திரமாக்குங்கள் என்று தொடர்ந்து கேட்பதன் பலனாக இன்று நிறைய ஊனமுற்றவர்கள், துளையிடல்(drilling), எண்ணுதல்(counting), கோப்புகளைப் பராமரித்தல்(file maintaining), மின்தூக்கிகளை இயக்குதல் (lift operating) போன்ற பல வேலைகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சில தனியார் நிறுவனங்களில் ஊனமுற்றோர்களின் சம்பள விகிதம் மாறுபடுகிறது. கேட்டால், மற்ற தொழிலாளிகளுக்கு நாங்கள் எப்போதும் இதே வேலைகளைக் கொடுப்பதில்லை. கடினமான மாற்று வேலைகளைக் கொடுப்போம். ஆனால், ஊனமுற்றோர்களுக்கு அது மாதிரி வேலைகளைச் செய்ய முடியாதல்லவா? அதனால் தான் சம்பளத்தைக் குறைத்துக் கொடுக்கிறோம் என்கிறார்கள். வேலை கிடைப்பதே பெரிய சிரமமாக இருக்கையில் இது போன்ற பிரச்சனைகளை ஊனமுற்றோர் கண்டும் காணாததுமாக இருந்து விடுகிறார்கள்.

பெரும்பாலான ஊனமுற்றோர்களுக்கு வேலை வாய்ப்புக் குறித்த விழிப்புணர்வே இல்லை. படித்து முடித்தவுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விடுகிறார்கள். அதைத் தவிர வேலைக்கான பயிற்சி வகுப்புகள் நடப்பதோ, பத்து, பன்னிரண்டு வகுப்புகளோடு படிப்பதை நிறுத்தி விடுபவர்களுக்குத் தனியார் நிறுவன வேலை வாய்ப்புகள், கூடை பின்னுதல் போன்ற சுய வேலை வாய்ப்புகள் இருப்பது பற்றியோ தெரிந்திருக்கவில்லை. ஆனால், மொத்தம் 100 சதவீதம் ஊனமுற்றவர்களில், மூன்று முதல் நான்கு விழுக்காடு வரை இளங்கலைப் பட்டம் வரையிலும் படிக்கத் தொடங்கி விட்டார்கள். பார்வையற்றவர்களுக்குக் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆசிரியர் வேலை கிடைக்கிறது. செவித்திறன் குறைந்தோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்குச் சோதனைச் சாலைகளில் உதவியாளராகவும் (lab technician), உடல் ஊனமுற்றோர்களுக்குக் கணிப்பொறி சம்பந்தப்பட்ட வேலைகளும் கிடைக்கின்றன.

தவிர மத்திய அரசில் உடல் ஊனமுற்றோரின் தலைமை ஆணையர் என்ற பதவியுள்ளது. தனிப்பட்டவர்களின் உரிமைகளை நாம் இங்கு கோரிப் பெற்றுக் கொள்ளலாம். சமீபத்தில் பதவி உயர்வுக்கான வங்கித் தேர்வு எழுத ஊனமுற்றோர்களுக்கு இருந்த தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பொதுச் சேவை மையத்தின் தேர்வுகளில் வகுப்பு 4 ல் உதவியாளர் பதவி தருமாறு ஊனமுற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். 1994 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலத்தில் இந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஊனமுற்றோருக்கான வேலைகள் குறிப்பிட்ட இடங்கள் (specified area) என்று சொல்லப்பட்டதே தவிர, குறிப்பிட்ட எண்ணிக்கை என்று சொல்லவில்லை. இதைப் போல நிறையத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், நடைமுறைக்கு வருவதில்லை.

1995-ல் மத்திய அரசின் ஊனமுற்றோருக்கான (சம வாய்ப்பு உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்கேற்பு) மசோதா வந்தாலும், அது மாநில அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தவிரவும் அரசு ஏற்கனவே அமுலில் உள்ள திட்டங்களை வளப்படுத்த முயல்கிறதே தவிர புதிய திட்டங்களை உருவாக்குவதில்லை. 80 களுக்குப் பிறகு ஊனமுற்றோருக்கான சிறப்புப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. சிறப்புப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் முன் அவர்களுக்கு ஒரு பயிற்சி கொடுத்து வேலையில் சேர்த்துக் கொள்கிறார்கள். மனதளவில் ஆசிரியர்கள் தயாராகி விட்டார்களா என்று பார்ப்பதே இல்லை. ஆணையர் என்ற பதவி, அரசின் ஆணைகள் சரியாக நிறைவேற்றப்படுகிறாதா என்று கண்காணிக்கவும், ஊனமுற்றோர்கள் தரும் புகார்களை விசாரிப்பதற்கும் தான். ஆனால் இப்போதைய ஆணையர், அவருக்கிருக்கும் நீதிமன்றத்துக்கு சமமான (civil court) அதிகாரத்தைப் பயன்படுத்தாமல், வெறும் இயக்குனரின் பணியைத் தான் செய்கிறார் என்ற புகார்களும் நடைமுறையில் உள்ளன.
Click Here Enlargeஅரசு ஒவ்வொரு ஆண்டும் இத்தனை ஊனமுற்றோருக்கு வேலைவாய்ப்பு தருகிறது என்று புள்ளி விவரங்கள் வெளியிடுகின்றன. ஆனால், அது நம்பகத்தன்மையைக் கொண்டதுதானா என்ற சந்தேகம் உள்ளது. அதனால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதைப் போலப் பொருளாதார சலுகைகளுக்கு, ஆண்டு வருவாய் 12,000 க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த உச்ச வரம்பைத் தளர்த்தி ஆண்டுக்கு 24,000 ரூபாயாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

இதைத் தவிர அரசு இரட்டை வேடம் போடுவதாகப் புகார்கள் உள்ளன. மேடையில் 100 பேருக்கு உதவி என்று அறிவித்து விடுவார்கள். முதலில் 2 பேருக்குச் செய்வார்கள். மீதி 98 பேருக்குப் படிப்படியாகத்தான் நடைமுறைப்படுத்த முடியும் என்பார்கள். தாங்கள் செய்யும் உதவி ஊனமுற்றவர்கள் பெற வேண்டிய உரிமை என்று நினைப்பதில்லை. ஏதோ அவர்களுக்கு இரக்கப்பட்டுச் செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

மத்திய அரசு 400 கோடி ரூபாய் ஊனமுற்றவர்களின் நலனுக்காக ஒதுக்கியுள்ளது. இதில் 30 கோடி வரை தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியுள்ளது. இதை ஒருவர்கூட பயன்படுத்த முடியாமல் திட்டம் படு தோல்வியடைந்துள்ளது. ஊனமுற்றவர்களுக்காக ஒதுக்கிய பணத்தை அரசு திரும்பப் பெற்றுக் கொள்ளுமோ என்ற பயத்தில் ஊனமுற்றவர்களின் சங்கங்கள் உள்ளன. ஒதுக்கிய பணம் , உரியவர்களைச் சென்றடையாத நடைமுறைச் சிக்கல்கள் இன்றளவிலும் கண்டறியப்படாமலே உள்ளன.

ஊனமுற்றவர்கள் ரயில் பயணங்களுக்கு 1/4 பங்கு கட்டணம் கொடுத்தால் போதும். அவர்களுடன் ஒருவர் இதேக் கட்டண சலுகையில் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். ஆனால், பேருந்துகளில் குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, அதுவும் 100 கிலோ மீட்டருக்குள்ளாக, மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்தச் சலுகையும் ஆண்டு வருமானம் 12,000 க்குக் குறைவாக இருப்பவர்களுக்கு மட்டுமே. ஆண்டு வருமானம் என்று பார்க்கும்போது கூட தனி நபரின் வருமானம் அல்லது குடும்ப வருமானத்தைத் தான் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். இலவசப் பயணச் சலுகை 12 வகுப்பு வரை படிக்கும் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் கொடுக்கும் அரசு, தங்களுக்குத் தமிழ்நாடு முழுவதும் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்புகிறார்கள் ஊனமுற்றவர்கள்.

வணிக வளாகம் கட்டினால் 3% ஊனமுற்றவர்களுக்குக் குறைந்த விலையில் ஒதுக்க வேண்டும் என்ற விதியுள்ளது. ஆனால், அரசியல் கட்சி ஆதரவாளர்களுடன் போட்டி போட ஊனமுற்றவர்களால் முடிவதில்லை. ஊனமுற்றவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா, போராட்டம் செய்ய அவர்களுக்கு எளிதில் அனுமதி வழங்கப்படுவதில்லை.

இது வரை ஊனமுற்றவர்களின் புள்ளியியல் சரியாகப் பதியப்படவில்லை. அதனாலேயே உத்தேசமாக இத்தனை ஊனமுற்றவர்கள் இருக்கிறார்கள், இத்தனை சதவிகிதம் அவர்களுக்காக ஒதுக்குகிறோம் என்று எல்லாமே உத்தேசத்தின் அடிப்படையிலேயே இயங்குவதாலேயே நிறையத் திட்டங்கள் சரி வர செயல்படுத்த முடியாமல் போவதோடு, நிறைய பிரச்சனைகளை, அதன் ஆழத்தோடு கண்டறிய முடியாமல் போகிறது. வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஊனமுற்றவர்களின் புள்ளி விவரங்களையும் கண்டறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு நிறைய நலத் திட்டங்களை வகுத்திருந்தாலும், இது வரை சரியான புள்ளிவிவரம் இல்லாததால், ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை இது வரை குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் உள்ளன. அரசு தரும் சலுகைகளும் நகர்ப்புறவாசிகளைத் தான் பெரிதும் சென்றடைகிறது. கிராமப்புறங்களில் - முக்கியமாக பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. திருமணம் சம்பந்தப்பட்ட ஏராளமான பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

பொதுவாக ஊனமுற்றவர்கள் வேலை வாய்ப்புகளுக்காக மற்ற ஆரோக்கியமான நபர்களோடு போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஊனமுற்றவர்களுக்கான சுய வேலை வாய்ப்பை அதிகரிக்கத் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். அவர்களால் செய்ய முடிந்த தொழில்களான, தொலைபேசி இயக்கம் போன்றவை முழுவதுமாக ஊனமுற்றவர்களுக்கே ஒதுக்கப் பட வேண்டும். மக்கள் மத்தியில் ஊனமுற்றவர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஊனமுற்றவர்களுக்கு வேலை வாய்ப்புத் தரும் தனியார் நிறுவனங்களுக்கு வருமான வரியில் சலுகைகள் தர வேண்டும். பெரிய நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் (loan) கொடுக்கும் போது, கண்டிப்பாக இத்தனை ஊனமுற்றவர்களுக்கு வேலை வாய்ப்புத் தர வேண்டும் என்று நிபந்தனை விதிக்க வேண்டும். ஊனமுற்றவர்களுக்கு இலவசமாக ஊன்றுகோல், சக்கர வண்டி, கண்ணாடி போன்றவை கொடுப்பதை விட, கல்வியும், வேலையும் கொடுப்பதால் அவர்கள் மற்றவர்களைச் சார்ந்து வாழாமல் ஓரளவு தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையுடன் போராட முடியும்.

எழுத்தும் படங்களும் :கிருஷ்ணப்ரியா
More

தெய்வ மச்சான் பதில்கள்
மகா மலிவு விலை கார்: கோவையில் சாதனை
வாஸ்து ஒர் அறிமுகம்
புது யுகம் காண புதிய அரசியல் சாசனம்!
கடம் கார்திக்கின் தகதிமிதகஜூனு
Share: 




© Copyright 2020 Tamilonline