Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | பொது | விளையாட்டு விசயம் | தகவல்.காம் | குறுக்கெழுத்துப்புதிர் | சமயம் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
சினிமா சினிமா | மாயாபஜார் | சிறுகதை | நேர்காணல்
போகிற போக்கில்
Tamil Unicode / English Search
நேர்காணல்
எல்லோருக்கும் அம்மா தான் ஆன்மா
- |பிப்ரவரி 2001|
Share:
Click Here Enlargeபங்காரு அடிகளாருடன் ஒரு சந்திப்பு

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பஸ்ஸிலிருந்து இறங்கி அரை கிலோ மீட்டர் நடந்தபின்பு மட்டுமே அடையக்கூடிய மேல்மருவத்தூர் என்ற குக்கிராமத்தில் இப்போது ஆதிபராசக்தியின் பெயரால் மெட்ரிக்குலேஷன் பள்ளி, பாலிடெக்னிக், எஞ்ஜீனியரிங் கல்லூரி, பார்மசி கல்லூரி, பெரிய மருத்துவமனை, ஒரே சமயத்தில் ஆயிரம் பேர் இலவசமாக உணவு உண்ணக்கூடிய ஹால் என்று இவையெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று என்ற கேள்விக்கு ஒரே பதில் : 'பங்காரு அடிகளார்'. இவருடைய பக்தர்கள் இவரை பக்தியுடனும், அன்புடனும் 'அம்மா' என்றழைக்கிறார்கள். மருத்துவமனையில் தூய்மை! காலையில் ஒன்பது மணி முதல் மதியம் மூன்று மணி வரை இலவசமாக மருத்துவ வசதி வழங்கப்படும் இம்மருத்துவ மனையில் மதியம் ஒரு மணிக்கு இருநூறு நோயாளிகள் வரிசையாக பொறுமையாக அமர்ந்திருந்தனர். மருத்துவமனையின் நடுப்புறத்தில் தாமரைப் பூவைத் தலைகீழாகக் கவிழ்க்கப்பட்டது போன்ற வடிவத்தில் வானளாவ கட்டப்பட்டிருக்கும் கோபுரம். மிகவும் சிரத்தையுடன் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களைக் கொண்டு அமைதியாக இயங்கும் பாலிடெக்னிக், பொறியியற் கல்லூரி, பார்மசி கல்லூரி இவையெல்லாம் நடைமுறை நிஜங்கள்!

கோயில் என்றழைக்கப்படாமல் 'சித்தர் பீடம்' என்றழைக்கப்படும் ஆதிபராசக்தியின் ஆலயத்தின் உள்ளே ஒரு சிறு குப்பையைக்கூட பார்க்கமுடியவில்லை. அவ்வளவு தூய்மை! அம்மாவின் பக்தர்களே துடைப்பம் கொண்டு பெருக்கி, தண்ணீர் ஊற்றிக் கழுவிவிடுகிறார்கள். பொதுவாக தென்னிந்தியாவில் எந்தக் கோயிலிலும் நியமிக்கப்பட்டிருக்கும் அர்ச்சகர்கள் தவிர வேறு யாருக்கும் கர்ப்பக் கிருகத்தினுள் நுழைய அனுமதி கிடையாது. முக்கியமாகப் பெண்கள் மூலஸ்தானத்துக்குள் செல்லவே முடியாது. ஆனால் இங்குக் கர்ப்பக் கிருகத்தில் பூஜை செய்து கற்பூர ஆரத்தி எடுப்பது அம்மாவின் பெண் பக்தர்கள்தாம்! அதுமட்டுமல்ல, பெண்கள் வீட்டு விலக்காக இருக்கும் நேரங்களிலும் எவ்விதத் தடையுமின்றி ஆலயத்துக்கு வரலாம். அடிகளார் ஆலயத்தைப் பிரதட்சணம் வருகிறார். பக்தர்கள் ஒரு சிறு சலனமுமின்றி அமைதி காக்கிறார்கள். இவருடைய தரிசனத்துக்காக தவம் இருக்கிறார்கள். இவருடைய பக்தர்கள் சேவகம் செய்யக் காத்திருக்கிறார்கள். இவரது கண்ணசைவுக்கும், ஒரு சொல்லுக்கும் கட்டுப்பட்டு நிற்கும் பக்தர்கள் ஆயிரமாயிரம் பேர்!

சரி, கண்முன்னே நிதர்சனமாகக் காணும் இத்தனை சாதனைகளுக்குப் பின்னால் இருந்து எல்லோரையும் இயக்கி வைக்கும் பங்காரு அடிகளாரிடம் பேசியபோது ஆச்சரியமாக இருந்தது. இவரது வாக்கியங்கள் கோர்வையாக இல்லாமல் பெரும்பாலும் வார்த்தைகளாக மட்டுமே வெளிவருகின்றன. நான்கைந்து வாக்கியங்கள் கொண்ட கேள்விக்கு நான்கைந்து வார்த்தைகளையே பதிலாகச் சொல்கிறார். இனி அவருடன் ஒரு நேர்காணல்:

ஆதிபராசக்தி பீடம் அமைப்பதற்காக தங்களது பக்தர்களின் அழைப்பின் பேரில் அமெரிக்காவிற்குச் சென்று வந்தீர்கள். தங்களது பயணம் வெற்றிப் பயணமாக அமைந்ததா?

வெற்றிகரமாகத்தான் அமைந்தது. ஆனாலும் கலிபோர்னியா, சான்பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களிலெல்லாம் பக்தர்கள் அழைத்தார்கள். ஆனால் எனக்குத்தான் இங்கு தீபாவளி, நவராத்திரி பூஜைகளுக்கு இருக்கவேண்டுமே. அதனால் திரும்பிவிட்டேன். அங்கு கம்ப்யூட்டர் துறையில் நம்மவர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தினசரி நிம்மதி என்பது இருக்கிறதா என்றுதான் தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் நேரமில்லாமல் பறக்கிறார்கள். என்ன சாப்பிடுகிறார்கள்? ஒரு நாள் சமையல் செய்து குளிர்பெட்டியில் வைத்து எடுத்து சாப்பிடுகிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் அதே வேலையை இந்தியாவில் செய்வதற்கு வாய்ப்பளித்தால், வசதி செய்து தந்தால் அங்கு சம்பாதிக்கும் கோடியை இந்தியாவில் சம்பாதிப்பார்கள். இந்தியா பணக்கார நாடாகும். அங்கு சாதி வித்தியாசமே இல்லை. இங்கேதான் ஆயிரம் சாதி! சாதிக்கு ஒரு கட்சி, கட்சிக்கு ஒரு சாதி. இந்து கோயிலுக்கு வெள்ளைக்காரர்களும் வருகிறார்கள். என்னை சர்ச்சுகளுக்குக்கூட அழைத்துப் போனார்கள். கல்லால் அங்கே கோயில் கட்டுகிறார்கள். சாமி செய்கிறார்கள். இங்கே கல்லை வைத்துக்கொண்டு சண்டை செய்கிறார்கள். மண்டையை உடைக்கிறார்கள். ஆனாலும் ஒன்று பாருங்கள். நம் நாட்டில் துவக்கத்தில் கல்வெட்டில் எழுதினோம், ஓலையில், பேப்பரில், கார்பன் பேப்பரில், டைப்ரைட்டரில் அப்புறம் கம்ப்யூட்டரில் எழுதினோம். அமெரிக்க ஜனாதிபதி எலக்ஷனில் கம்ப்யூட்டர் சரியில்லை என்று கையால் எண்ணுகிறார்கள். கடைசியில் கல்வெட்டுதான் வரும் போலிருக்கு! மின்சாரத்தை விடவும் முடியவில்லை. தொடவும் முடியவில்லை. விஞ்ஞானத்தை விடவும் முடியவில்லை. தொடவும் முடியவில்லை. நாகரிகம்னு சொல்லி செய்யறது கடைசியில் அநாகரிகமாக முடியுது. அது சரியில்லை. அங்கு ரோடு சுத்தமாயிருக்கு. ஆனால் வீடு சுத்தமாயில்லை. வாழ்க்கையைத்தான் சொல்லுறேன். புரியுதில்லை!

ஆஸ்திரேலியா, மலேசியா, தாய்லாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இந்துக்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அங்கெல்லாம் 'ஆதிபராசக்தி பீடம்' அமைப்பது தொடர்பாக தாங்கள் செல்லும் திட்டம் உண்டா?

அப்புறம் போய்க்கொண்டே இருக்கவேண்டியதுதான். எல்லாரும் இங்கு வரவேண்டும். அதற்கு வசதி செய்து தரவேண்டும். நம்ம நாடு எந்த விதத்தில் குறைந்தது?
தற்கால இந்தியா எப்படி இருக்கிறது? ஆன்மீகம் தழைத்திருக்கிறதா?

நம்ம இந்தியா மகத்தானது! நம்மால ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். 1947-ல் நமக்கு சுதந்திரம் கிடைத்தது. இப்ப எல்லார் கையிலயும் ஏ.கே. 47 வைச்சுக்கற அளவுக்கு முன்னேறியிருக்கோம் (சிரிக்கிறார்). திருப்பணியைவிட திருட்டுப் பணிதான் அதிகம் நடக்கிறது. காந்தி, பாரதியார் போன்ற உண்மையான தலைவர்களைப் பற்றி குழந்தைகளுக்கெல்லாம் தெரிவதில்லை. அதைப்பற்றி பெரியவங்களுக்கு கவலையும் இல்லை. மரம் துளிர் விடுகிறது. இலை விடுகிறது. பூ பூக்கிறது. காய்க்கிறது. பழுக்கிறது. ஆனால் ஆணிவேரைப் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. எல்லாத்துக்கும் கை தட்டுகிறோம். பாராட்டவும் கைதட்டல்! கீழே உட்கார வைக்கவும் கைதட்டல். போற்றவும் கைதட்டுகிறோம். தூற்றுவதற்கும் கைதட்டுகிறோம்!

ஜனத்தொகை அதிகரிக்கும்போது தர்மமும் அதிகரிக்கவேண்டும். மனதாரச் சிரிப்பு வரணும். போலிச் சிரிப்பு வரக்கூடாது. எல்லாத்தையும் இரண்டாகப் பிரிக்கிறோம், அது கூடாது. உரம் போட்ட அரிசி, உரம் போடாத அரிசி. அப்புறம் எப்படி? ஆன்மீகம்னா என்ன? நல்ல பண்புகளை நல்ல குணங்களை மனதில் நினைத்து அதன்படி நடப்பது, வழிகாட்டுவது. அதுதான் ஆன்மீகம். ஆனா அது இங்க வளரவில்லை. ஆன்மீகம்னு சொல்லிகிட்டு அடிதடி வளருது. மனசாட்சிகூட பணசாட்சியா மாறிப் போச்சு. உலகம் அழிஞ்சுடும்னு சொல்றாங்க. இயற்கையோடு வாழாம அதை எதிர்த்து செய்யறோம். நாமதான் அதை அழிக்கிறோம். உலகம் நம்மாலதான் அழியப் போகுது. பொதுவா இப்ப இந்தியா எப்படி இருக்குன்னா 'மின்சாரம் வெட்டு இல்லாம கிடைக்கும்னு அமைச்சர் அறிவித்தார்னு' ரேடியோவில் சொல்லிகிட்டு இருக்கும்போது டப்புனு நின்னு போகுது. அடுத்ததா 'மின்தடை காரணமா ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்தறோம்'னு சொல்றாங்க. அப்படித்தான் இருக்கு.

இப்படியே போனால் இந்துமதம் அழிந்து விடுமா?

இப்படியேல்லாம் போகாது. இந்துமதம் அழியவும் அழியாது. வெட்ட வெட்ட துளிர்க்கும். இலை விட்டு கிளை விட்டு பரவும். இலைகள் விழுந்ததுன்னாகூட அதுவே உரமாகும். ஒரு பெரிய ரவுண்டு வருவோம். இப்போ பழைய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறோம். அதுக்கு நாம நம்ம வீட்டை மட்டும் சுத்தமா வெச்சுகிட்டா போதாது. பக்கத்து வீட்டையும் சுத்தமா வெச்சுக்க உதவணும். அப்பதான் அங்க இருக்கற நாற்றம் நமக்கு காற்று வழியா வீசாம இருக்கும். தன்னம்பிக்கையோடு நாம வைக்கற கல்லுதான் சிலை! அதுதான் கடவுள்! எல்லோருக்கும் அம்மாதான் ஆன்மா! அதைத்தான் இந்துமதம் சொல்லுது! இதைப் புரிஞ்சுக்கணும். இதைத்தான் கிறிஸ்துவமதத்துலேயும் 'ஆமென்' அப்படின்னு சொல்றாங்க! அகல் விளக்குலதான் ஆரம்பிச்சோம். ஆனா இப்ப மின்சாரம் வந்துட்டது. ஆனாலும் அது போறப்ப பழையபடி அகல்விளக்குதான் ஏற்றுகிறோம். அதனால இந்து மதம் அழிஞ்சுடும்ற கவலையே வேணாம்.

இந்தியாவில் எந்த ஆலயத்திலும் பெண்கள் கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. மாதவிலக்கு நாட்களிலும்கூட சித்தர் பீடத்துக்கு வரலாம் என்று தாங்கள் அனுமதித்திருக்கிறீர்கள். அதைப் பற்றி?

இதை எத்தனையோ பேர் எத்தனையோ விதமாகக் கேட்டுட்டாங்க. பதிலும் சொல்லிட்டோம். இயற்கையா நடக்கற ஒரு விசயத்தை ஏன் ஒத்துக்காம ஒதுக்கி வைக்கறீங்க? பெண்கள் ஏன் பூஜை செய்யக் கூடாது? ஏன் கருவறைக்குள் வரக்கூடாது? என்ன காரணம்? எனக்குத் தெரியவில்லை. அப்புறம் விதவைகள் என்ற பாகுபாடு வேறு! ஆண்களில் விதவைகள் இல்லையா? அவர்கள் கோயிலுக்கு வரலாமா? அதெல்லாம் தவறு. எல்லாரும் வராங்க. நல்லா பிரார்த்தனை செய்யறாங்க. நல்லாத்தான் இருக்காங்க.

இங்கு வரும் பக்தர்கள் செவ்வாடை அணிகிறார்களே? அதன் அர்த்தம் என்ன?

இந்த உலகத்துல படைக்கப்பட்ட ஜீவராசிகள் எல்லாத்துக்குமே ரத்தம் சிகப்பு நிறம்தான். அதுல மேல், கீழ்னெல்லாம் கிடையாது. அதைக் குறிப்பதற்காகத்தான் இந்த சிகப்பு நிற ஆடை!

இங்கு செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கெல்லாம் சென்றபோது கட்டுப்பாடு, அமைதி, உண்மையுடன் கூடிய உழைப்பு எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. தாங்கள் ஆரம்பகாலத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியராக இருந்தீர்கள் என்று கேள்விப்பட்டோம். அப்போதே தாங்கள் கட்டுப்பாட்டுடன் கூடிய 'வாத்யாராக' இருந்திருப்பீர்கள் போலிருக்கிறதே?

சரியான நேரத்துக்கு பள்ளிக்குச் சென்று பாடங்களை ஒழுங்காக நடத்தும் ஆசிரியராகத்தான் நான் இருந்தேன். நிறைய குழந்தைகளுக்கு சட்டை இருக்காது. வாங்கிக் கொடுத்திருக்கிறேன். மூக்கில் வற்றாத அருவி போல கொட்டிக் கொண்டிருக்கும். அதைக்கூட துடைத்துவிட்டிருக்கிறேன். இப்பகூட அன்னதானம் இங்க செய்யறோம். அதுதான் சிறந்த தானம்! பசிக்கிறவன் கிட்ட போய் தத்துவமெல்லாம் பேசினா அவனுக்குப் புரியுமா? அர்ச்சனை செய்யும்போது கூட அர்ச்சனையை ஆண்டவன் பேருக்கே செய்யணும்னு சொல்றேன். அது இங்க இருக்கு. அவ்வளவுதான். இந்த உலகத்துக்கு வரும்போதே 'ரிடர்ன் டிக்கெட்டு' குடுத்துதான் அனுப்பிச்சிருக்கு. திரும்பிப் போகணுமே. அதுக்குள்ள ஏதாவது நல்லதை செய்யணும். வாயால் எதையும் சொல்லிப் பயனில்லை. செய்! அப்புறம் வேறென்ன. நீங்களெல்லாம் நிறைய படிச்சவங்க. நான் எதையெதையோ சொல்லுறேன். எப்படி எழுதிக்கறிங்களோ தெரியலை. உம்... செய்யுங்க.

*****


பெரிய தத்துவங்களிலிருந்தோ, வேதாந்தங்களிலிருந்தோ, புராணங்களிலிருந்தோ, உபநிஷத்திலிருந்தோ இப்படி எதிலிருந்தும் மேற்கோள்கள் இல்லாது இவர் பேசும் பேச்சுக்கள் மிகச் சாதாரணமாக இருக்கின்றன. ஒரு சமயம் நினைத்தால் அர்த்தமே புரியாமல் உதிரி வார்த்தைகளாக வடிவம் காட்டும் அதே வாக்கியங்கள் வேறொரு சமயம் பொருள் பொதிந்ததாகவும் தோற்றம் கொள்கிறது. இதற்குக் காரணம் அவரா? இல்லை நமது மனமா? சூட்சுமமாக அவர் சொல்வதைப் புரிந்து கொள்ளத் தவறிவிடுகிறோமா? ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது. இதுவரை பேசிப் பேசி அலங்கார வார்த்தைகளை அடுக்கடுக்காக அள்ளித் தெளித்த நூற்றுக்கணக்கான தலைவர்களை நாம் இதுவரை பார்த்துவிட்டோம். அவர்கள் பேசிப் பேசியே காலத்தை விரயமாக்கியிருக்கிறார்களே (நமது காலத்தை மட்டுமே) தவிர செயலில் அதிகம் செய்ததாகத் தெரியவில்லை. இங்கு நடந்திருக்கும் நல்ல செயல்களைப் பார்க்கும்போது 'இவருக்கு அழகாகப் பேசத் தெரியவில்லையே!' என்பது ஒரு குறையாகத் தெரியவில்லை.
Share: 
© Copyright 2020 Tamilonline