Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சிறப்புப் பார்வை | தமிழக அரசியல் | பயணம் | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது | சமயம் | Events Calendar
Tamil Unicode / English Search
சிறுகதை
பழக்கம்
ஒரு நாளாவது
- |மார்ச் 2002|
Share:
''எல்லா வீட்லயும் இப்படியா நடக்கும்? நானும் பொறுமையா இருக்கணும்னுதான் பாக்கறேன். ஆனாமுடியல. ஆபிஸ் விஷயமா டூர் போக வேணாம்னு சொல்லல. ஆனா ஞாயிற்றுக்கிழமையாவது வீட்ல குடும்பத்தோட இருங்கனுதானே சொல்றேன்'' சுதா அடுப்பில் பாத்திரத்தில் எதையோ கிளறியபடியே புலம்பவது காதில் விழுந்தது.

ரமணிக்கு சகல வார்த்தையும் நன்கு கேட்டும் பேப்பர் படிப்பதில் மும்முரமாய் இருந்தான். கம்பெனியின் மார்க்கெட்டிங் மானேஜராக தென்னிந் தியாவுக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டதிலிருந்தே இப்படித்தான். ஹைதராபாத், பெங்களூர் என்று ஒவ்வொரு ஊராய் போய் நிறைய பேரைப் பார்த்துப் பேச வேண்டியிருந்தது. ''நான் போய் பேசி முடியற மாதிரி வேற யார் போனாலும் வேலை நடக்காது'' னு சொன்னாலும் சுதா புரிந்து கொண்டாற்போல் தெரியவில்லை. இப்பவும் அப்படித்தான் இந்த புதன்கிழமை கிளம்பி பெங்களூர் போய் அடுத்த செவ்வாய்தான் சென்னை திரும்புவதாய் ப்ளான்.

'மத்த நாள்னா பரவாயில்ல, ஞாயிற்றுக்கிழமை கூட நீங்க வெளியூர்ல இருந்தா நாங்க என்ன பண்றது. அதுக்கப்புறம் உங்க இஷ்டம்.' சுதா முனகுவதற்கு முற்றுப்புள்ளி வைத்தாற்போல் இருந்தது.

கல்யாணமாகி பத்து வருஷ தாம்பத்தியத்தில் நிகில்னு ஏழு வயசில் ஒரு பையனும் சுமானு மூணு வயசில் ஒரு பொண்ணும் பிறந்தது ஏதோ இப்பதான் நடந்தா மாதிரி இருந்தது ரமணிக்கு. 'இவ ஏன்தான் இப்ப கல்யாணமான ஜோடி மாதிரி வீட்ல ஞாயிற்றுக் கிழமையானா கட்டாயமா இருங்கங்கறாளோ'. ரமணி பேப்பர் படித்துவிட்டு ஆபிஸ் போக எழுந்தான்.

சென்ட்ரலின் கூட்டத்தில் ரமணி நீந்தி ஒரு வழி யாய் பிருந்தாவனில் ஏறி உட்கார்ந்தவுடனே சுதா சொன்னது ஞாபகம் வந்தது. 'மேலாக ஸ்வெட்டர் வச்சிருக்கேன். ட்ரெயின்ல குளிரினா போட்டுக் கோங்க'. பேப்பர் பையனும் பிஸ்கட் ட்ரேயும் ஜன்னல் வழியேத் தெரிந்தனர். 'என்னதான் ப்ளேன்ல பறந்து சீக்கிரமா போலாம்னாலும் ரயில் பயணம்கறது ஒரு ரம்யமான சுகம் தான்'. ரமணி மனதில் நினைத்துக் கொண்டான்.

ரயில் மெதுவாக வேகமெடுக்கத் தொடங்கியது. 'அடக்கடவுளே. ஸ்வெட்டர் மறந்துட்டேன் போலி ருக்கே' அருகிலிருந்தவர் குரல் கேட்டுத் திரும்பி பார்த்தான் ரமணி. அவருக்கு ஒரு நாப்பது வயதி ருந்தால் ஜாஸ்தி. மெல்லியதாய் கண்ணாடி அணிந் திருந்தவரைப் பார்த்தால் மிக நல்ல சுபாவமாய் தோன்றியது. வளவளவென்று 'இப்பல்லாம் எக்ஸ்பிரஸ் ட்ரெயின் கூடுவாஞ்சேரியில கூட நிக்கறதாம்' என்று கதை அளக்கும் ரகமாய் தெரியவில்லை.

'என்னோட சால்வை போத்திக்கோங்க சார். சுதா எடுத்து வச்சிருப்பானு நினைக்கிறேன்'. ரமணி உடன டியாகப் பெட்டியை திறந்து எடுத்துக் கொடுத்தான்.

'இல்ல. பரவாயில்ல. கொஞ்ச நேரம்தானே'. அவர் தடுத்தார். 'அதனால என்ன. குளிர் ஜாஸ்தியா இருக்கு. உங்களுக்கு கஷ்டமாயிருந்தா நான் வேணா ஒரு ரெண்டு ரூபா சார்ஜ் பண்றேன். இறங்கும்போது

கொ டுத்தா போதும்.' ரமணி சிரித்துவிட்டு அவரிடம் சால்வையைக் கொடுத்தான்.

'தேங்க்ஸ், சார். அவசரமா கிளம்பினதுல மறந்துட் டேன். இந்து இருந்திருந்தா...' சொல்ல வந்ததை பாதியில் நிறுத்தினார்.

'பாருங்க. இன்னும் நம்ம சார்லயே இருக்கோம். என் பேர் ரமணி.' அவர் நிறுத்தியதைக் கவனிக்காதது போல் கை கொடுத்தான் ரமணி.

'நான் வெங்கடேஷ். நீங்க பெங்களூரா?'

'இல்ல சென்னைதான். கம்பெனி விஷயமா ஒரு வாரம் பெங்களூர் போறேன். நீங்க'?

'நானும் சென்னைதான். ஆபிஸ் வேலையா பெங்களூர் போய்ட்டு ரெண்டு நாள் திரும்பிடுவேன்'.

'நீங்க பரவாயில்ல வெங்கடேஷ். வீகென்ட் குடும்பத் தோட இருக்கலாம். என் பொண்டாட்டிக்கு அதுதான் கஷ்டமாருக்கு. வாரத்தில கிடைக்கிறதே ஒரு நாள். அதுலயும் நீங்க ஒரு ஊர்ல நானும் குழந்தைகளும் ஒரு ஊர்லயானு புலம்பறா' ரமணி சொன்னான்.

'அவங்க சொல்றதும் சரிதான் ரமணி. எங்க வெளில போனாலும் ஒரு நாளாவது குடும்பத்தோட சேர்ந்து சிரிச்சி பேசி ஒண்ணா சாப்பிடற சுகமே தனி'.

'என்ன வெங்கடேஷ் பண்றது. பிஸினஸ் விஷயமா யாரையாவது பாத்தா சனி, ஞாயிறுலதான் லஞ்ச், டின்னர்னு ஒண்ணா வெளில போக வேண்டியிருக்கு. அப்பதான் வேல முடியுது'.

'இல்ல ரமணி. நான் அதுக்காக எல்லா சனி, ஞாயி றும் வீட்ல இருங்கனு சொல்லல. ஆனா இந்த மாதிரி டூரிங் பண்ற எல்லாரும் ஒரு நிமிஷம் 'நம்ம குடும்பத் தோடு க்வாலிட்டி டைம்னு செலவு பண்ணி எவ்ளோ நாளாகுதுனு அப்பப்ப யோசிக்கறது நல்லது. ஏன்னா சம்பாதிக்கறதே மனைவி குழந்தைகள்னு சந்தோ ஷமா இருக்கதான்.'

'தெளிவா பேசறீங்க நீங்க. உங்க ·பாமிலி மெம்பர்ஸ் கொடுத்து வச்சவங்கதான்.'

'இல்ல ரமணி. என் குடும்பத்தில உள்ளவங்க

கொடுத்து வச்சவங்க இல்ல.'

'ஏன் அப்படி சொல்றீங்க நீங்க.' ரமணி திகைத்தான்.

ஒரு பெருமூச்சுடன் தொடங்கினார் வெங்கடேஷ்.
'என்னோடது ரொம்ப அழகான குடும்பம் ரமணி. என் மனைவி இந்துமதி, குழந்தைகள் வருண், சுலக்ஷனா. ரொம்ப சந்தோஷமாயிருந்தோம். அப்பா அம்மா பாத்து வச்ச கல்யாணம் தான்னாலும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டு வாழ்ந்தோம் ரமணி. நானும் இந்த மாதிரி டூரெல்லாம் போய்ட்டு வருவேன். எத்தனையோ ஞாயிற்றுக்கிழமைகள்ல நான் வெளியூர்ல இருந்திருக்கேன். ஒரு வருஷம் முன்னாடி செகந்திராபாத் ஒரு மீட்டிங்னு நாலு நாள் தங்க வேண்டியதாய் போச்சு' வெங்கடேஷ் தொடர்ந்தார்.

'இந்துக்கு இதுவரைக்கும் ஒண்ணு ரெண்டு தடவை காய்ச்சல்னு தான் நான் டாக்டர்கிட்ட கூட்டிக் கிட்டுப் போயிருக்கேன். எங்க ரெண்டு குழந்தைகள் கூட நார்மல் டெலிவரிதான்.

ரமணி மனதிற்குள் கவலைப்படத் தொடங்கினான்.

'அவ ரொம்ப ஆக்டிவா இருப்பா. அந்த சன்டே குழந்தைகள் ரெண்டு பேரும் வீட்டுக்கு வெளில விளையாடிட்டு இருந்திருக்காங்க. சாயங்காலம் நாலு மணிக்கு அவங்களுக்கு டிபன் பண்ணி கொடுத்திருக்கா.'

'அஞ்சு மணிக்கு வருண் தண்ணி குடிக்க வந்து பாத்தப்போ, இந்து படுக்கையில படுத்துட்டு இருந்த தைப் பார்த்திருக்கான். அம்மானு கூப்பிட்டு பதிலில் லாம போனதினால கிட்டக்க வந்து பாத்து உடம்பு சில்லுனு இருக்கறதைப் பாத்து கத்தி யிருக்கான். பக்கத்து வீட்ல இருக்கவங்க டாக்டரைக் கூப்பிட்டு பாக்க சொல்லும்போது எதுவுமே மிச்சமில்ல, ரமணி.'

ரமணிக்கு இதயம் கனக்கத் தொடங்கியது.

'நான் விஷயம் தெரிஞ்சு வீட்டுக்குப் போனப்போ அவள தரையில் படுக்க வச்சிருந்தும் குழந்தைங்க ரெண்டும் ஓரோரு பக்கம் அழுதுட்டு நின்னதும் என்னால மறக்கவே முடியாது.'

'எப்படி வெங்கடேஷ் நடந்தது இது.'

'உடம்புல உள்ள ரத்தமெல்லாம் மூளை பக்கமா திசை திரும்பி ஓடும்போது, அந்த ப்ரெஷர் தாங்க முடியாம ரத்த நாளங்கள் வெடிச்சிருக்கு. டாக்டர் இத ஒன் இன் அ மில்லியன் கேஸ்னு சொன்னார். எல்லாமே ஒரு அஞ்சு நிமிஷத்துல முடிஞ்சிருக்கு.'

'ஒரு வேள நான் அவ பக்கத்துல இருந்து தண்ணி கொடுத்து உடனே டாக்டரைக் கூப்பிட்டிருந்தா அவளக் காப்பாத்தியிருக்கலாமோ என்னவோ. இன்னிக்கு என் பொண்ணு அம்மா இல்லாம தானா தலைய வாரி பின்னிக்கிட்டு ஸ்கூல் போகறத பாத்தா, இப்படி ஊர் ஊரா போய் சம்பாதிச்சு என்னத்த சேத்தோம்னு தோணுது ரமணி.'

வீடு, குழந்தைகள்னு இருந்த என் பொண்டாட் டியோட சாவுக்கு நான்தான் காரணமாயிட்டே னோன்னு மனசுல ஏதோ ஒண்ணு அரிச்சுக்கிட் டேயிருக்கு. 'என் குழந்தைகளையாவது ஒரு குறையும் இல்லாம பாத்துக்கணுமேன்னுதான் என்ன ஆனாலும் வீகென்ட்ஸ்ல வீட்டுக்கு போயிடறேன்.'

ரமணிக்கு யாரோ தன் மேல் ஒரு சுமையை இறக்கி வைத்தாற் போலிருந்தது.

'கண்டிப்பாக சென்னையில் வீட்டுக்கு பசங்களக் கூட்டிட்டு வாங்க வெங்கடேஷ்'. பெங்களூரில் இறங்கும்போது முகவரிகள் கைமாறின.

பெங்களூரில் கம்பெனியை பாதிக்காத வகையில் தன் திட்டத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது ரமணிக்கு. 'நான் சனிக்கிழமை ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்துடுவேன். சன்டே எல்லாரும் கிஷ்கிந்தா போலாம். சந்தோஷந்தானே. குழந்தைகள் கிட்டயும் சொல்லு' போனை வைத்ததும் நிம்மதியாக இருந்தது ரமணிக்கு.

அனு ஸ்ரீராம்
More

பழக்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline