Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | தமிழக அரசியல் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது | கவிதைப்பந்தல் | சமயம்
Tamil Unicode / English Search
சமயம்
திருவிடைமருதூர்
- அலர்மேல் ரிஷி|மே 2002|
Share:
அருள்மிகு மஹாலிங்கசுவாமி கோயில் கொண்டுள்ள திருத்தலம் திருவிடைமருதூர். மருத மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே வடுக நாட்டிலே மல்லிகார்ச்சுனம் என்ற ஊர் ஒன்று இருக்கிறது. இன்றைக்கு அது ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படுகிறது.இங்கு அர்ச்சுனம் என்பது மருதமரத்தைக் குறிப்பதால் இது தான் வடக்கே உள்ள மருதூர். தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடை மருதூர் உள்ளது. எனவே இவ்விரண்டிற்கும் நடுவே கும்பகோணம் மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் உள்ளது திருவிடைமருதூர். இது மத்தியார்ச்சுனம் என்று வழங்கப்படுகிறது.

மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றின் சிறப்புக்களாலேயே ஒரு கோயில் பெருமை பெறுகின்றது. அந்த வகையில் இந்தத் திருவிடைமருதூர் இறைவன் அருள்மிகு மஹாலிங்க சுவாமியின் சிறப்புக்கள் கணக்கில் அடங்கா. தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது.

மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத் திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.

மனித உயிருக்குச் சேதம் விளைவிப்பவனுக்கு ஏற்படுவது பிரம்மஹத்தி தோஷம் என்பார்கள். திருவிடைமருதூர் இறைவனை வழிபடுவோர் இத்தோஷம் நீங்கப் பெறுவர் என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. காட்டில் வேட்டையாடச் சென்ற பாண்டிய மன்னன் வீரசேனன் என்ப வனின் அம்பு குறி தவறி ஒரு மனிதனைத் தாக்க அவன் இறந்து பட்டதால் பிரம்மஹத்தி தோஷம் மன்னனைப் பற்றிக்கொண்டது. அவன் திருவிடை மருதூரை அடைந்து இறைவனை வழிபடச் சென்றான். அவனைப் பிடித்திருந்த பிரம்ம ஹத்தியை சிவகணங்கள் உள்ளே நுழைய விடாமல் தடுத்துவிட்டன. இதனால் மன்னனும் பழியினின்றும் தப்பினான்.

திருவிளையாடற்புராணம் பாராட்டும் வரகுண பாண்டியனுக்கும் இது போன்ற அனுபவம் எற்பட்டது. வேட்டையாடித் திரும்புகையில் அவனது குதிரையின் கால் குளம்பால் நசுக்குண்ட ஒருவன் இறந்து பட்டதால் அரசன் மனம் வருந்தி மதுரை சோமசுந்தரக்கடவுளை வேண்ட இறைவனும் மன்னனைத் திருவிடை மருதூருக்கு வருமாறு பணித்தான். மன்னனும் சென்று கோயிலுக்குள் நுழைந்தபோது பிரம்ம ஹத்தி வெளியே தங்கி விட்டது. தரிசனம் முடிந்து வெளியெ வருகின்ற போது அசரீரி கேட்டது. "மன்னா! வெளியே வரும்போது கிழக்கு வாயில் வழியே வராதே. அங்கே பிரம்மஹத்தி உனக்காகக் காத்திருக்கிறது. அதனால் அம்பிகையைத் தரிசித்து விட்டுப் பின் மேற்கு வாயில் வழியாகச்செல்" என்றதாம். இதனால் தான் இன்றும் இக் கோயிலுக்குள் செல்பவர்கள் எல் லோருமே கிழக்கு வாயில் வழியே உள்ளே சென்று மேற்கு வாயில் வழியே வெளியே வரும் வழக்கம் நிலைத்துவிட்டது. இதனால் தோஷ நிவர்த்தித் தலம் என்று இதற்கு ஒரு பெயரும் உண்டு. கிழக்குக் கோபுர வாயிலின்மேல் பிரம்மஹத்தி உருவம் ஒன்றும் கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது.

பட்டினத்தார் எனப்படும் மருதவாணருக்கும் அவரது அடிமையாகித் துறவு பூண்ட பத்திரகிரியாருக்கும் திருவிடைமருதூருக்கும் தொடர்பு உண்டு. குபேரனுக்குத் திருவிடை மருதூரின்மேல் ஒரு மோஹம் பிறந்தது. இறைவனும் அவன் ஆசைப்படியே அவ்வூர் சிவனேசர் என்பவருக்கு மகனாகப் பிறக்கச் செய்தார். திருவெண்காடர் என்ற பெயருடன் வளர்ந்த குபேரன் மகப்பேறின்றி வருந்தினான். மருதீசனே அவ்வூர் கோயில் வில்வ மரத்தடியில் ஒரு குழந்தையாய்த் தோன்றி திருவெண் காடரிடம் சேர்ந்து மருதவாணர் என்ற பெயருடல் வளர்ந்து வந்தார். இந்த மருதவாணர் ஒருமுறை கடல் வாணிபம் செய்து திரும்பிய பின் "காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே" என்று எழுதி வைத்துவிட்டு துறவியாகிப் போனார். பின்னாளில் பட்டினத் தடிகள் என்று அழைக்கப்பட்ட இவர் ஊர் ஊராகச் சென்று பின் திருவொற்றியூரில் சமாதி ஆனார்.
ஒருமுறை பட்டினத்தடிகள் வடநாட்டுக்கு விஜயம் செய்தபோது திருடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த திருடர் கூட்டத்தார் செய்த ஒரு தவற்றினால் பட்டினத்தடிகளார் மீது அப்பழி விழுந்தது. உஜ்ஜயனி மன்னன் இவரைக் கழுவில் எற்றுமாறு ஆணையிட்டான். ஆனால் கழுமரமே தீப்பற்றி எறிந்து சாம்பலாகி விடவே மன்னன் வருந்தி அரசைத்துறந்து இவருக்கே அடிமை யானான். இன்றும் இக்கோயிலின் உள்ளே இவ்விருவருக்கும் கற்சிலைகள் வைக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.

தீர்த்தம்: கோயில்கள் பலவற்றுள்ளும் இந்தக் கோயிலில்தான் மிகப்பெரிய எண்ணிக்கையில் அதாவது 32தீர்த்தங்கள் உள்ளன என்பது வியக்கவைக்கும் செய்தி. இவைகளில் ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் என்பது மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் சக்தி வாய்ந்தது. தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம் என்பர். இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் வரலாறும் உண்டு. இப்புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும், சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. பூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவாபரணங் களைக் களவாட முயன்ற பாவத்துக்காக பக்கப்பிளவை நோய் வந்து இறந்து போனான். பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்த மாடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கினான்.

இவ்வாறு பலவற்றாலும் பெருமை பெற்றுள்ள இக்கோயில் தருமபுர ஆதீனத்தால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. தேவார, திருவாசகத் திருமுறைகளும், பட்டினத்தார் பாடியுள்ள திருவிடைமருதூர் மும்மணிக்கோவை மற்றும் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் பாடியுள்ள மருதவப் புராணம் ஆகிய இலக்கியங்களெல்லாம் இக்கோயிலின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கிறது எனலாம்.

டாக்டர். அலர்மேல்ரிஷி
Share: 




© Copyright 2020 Tamilonline