Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நிதி அறிவோம் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | இதோ பார், இந்தியா!
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
வலி
- சோலை சுந்தரபெருமாள்|ஆகஸ்டு 2007|
Share:
Click Here Enlargeஉச்சி உருமம். ஒரே அனத்தல். வீட்டு வாசல்ல படர்ந்து நிக்கிற வேப்ப மரத்து அடியில புதுசா பலகை வச்சி தைச்ச கயித்துக்கட்டில்ல படுத்து கெடந்தான் பெத்தன்னா.

வேப்பமரம் கொள்ளாத பழங்க. காக்காவும் குருவியும் கொட்டம் அடிக்கிது. அதெல்லாம் அவனுக்கு இம்சையா இல்ல. மூத்தமவன் கிட்ட இருந்து வந்த கடுதாசியை எழுத்துக்கூட்டி படிச்சி முடிச்சான். அவன் மனசுக்குள்ள ரம்பம் போட்டு அறுக்குது.

பொரண்டு படுத்தா தேவலாம்போல இருக்கு. அப்படி தாங்க முடியாத ரணமா வலி.

இன்னிக்கி நேத்தி ஏற்பட்ட வலி இல்ல. ஒரு மண்டலமா இப்படித்தான். இந்த வலிய பொறுக்கங்காட்டியும் தூக்குமாட்டி தொங்கிட்டா ஒரேடியா போயிலடலாம்ங்கிற நெனப்பு அப்பைக்கு அப்ப தலைகாட்டுது.

பாக்காத வைத்தியமில்ல. வலியும் நின்ன பாடில்ல. இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே மல்லாந்து படுத்துக்கிட்டு எரவானத்தயோ மானத்தையோ பாத்துக்கிட்டு இருக்க முடியும்?

''பெத்தன்னா! ஒனக்கு மருந்து கொடுகிற தால சளுதியா சொற்பமாவாது. இது நரம்பு பிடிப்பு. இடுப்பு மூட்டுக்கு மேல தண்டு வடத்துல வெலகல் இருக்கு. மொறையா வர்மம் தெறிஞ்சவங்க இருந்தா வெரலவச்சே ஒரு சொடக்கில எடுத்தா போயிடும். இப்ப யாரும் இருக்கிறதா எனக்கு தெரியல. நானும் விசாரிக்கிறேன். அதுவரைக்கும் நீ தொய்வு இல்லாத படுக்கையிலேயே படு. ஓய்வு இருந்தா தானாவும் நரம்பு விடுபட வாய்ப்பு இருக்கு. இல்ல இந்த நரம்பு விலகலும் நரம்பு பிடிப்பும் எப்படி ஏற்பட்டச்சோ அப்படியே ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுப் போயிட்டா விலகிடும். எதுக்கும் ரெண்டு 'மல்லு சொல்லித்தாறேன் அந்தி சந்தி செஞ்சிட்டு வெந்நீருல குளிச்சிடு.'

இந்த சுத்துப்பட்ட ஊருக்குள்ளேயே பேருபெத்த வைத்தியன் ராசப்பா. அவன் நாடி புடுச்சி பாத்து சொல்லிட்டா பிசகாது. பரம்பரை வைத்தியக் குடும்பம். இவரோட பாட்டன் ராமு பண்டிதர். வர்மத்தில கைதேர்ந்தவர். நாடி பாக்கிறதுலயும் மகா கெட்டிக்காரன்.

'ஒனக்கு வர்மத்த படிச்சித்தர முடியாது. அதுக்குன்னு இருக்கிற மனப்பக்குவம் உனக்கு போதாது. அந்த யோகமுமில்ல. நீ நாடி பாத்து வைத்தியம் பண்ணு போதும்'ன்னு பேரனையே ஒதுக்கிப் புட்டாரு. அப்புறம் யாரு யாரோ வந்து வர்மம் படிச்சிக்க முயற்சி பண்ணி பாத்தாங்க. அவங்கக்கிட்ட எல்லாம் அதுக்குன்னு இருக்கிற மொகவெட்டு இல்லன்னு படிச்சி கொடுக்காமலேயே போய் சேர்ந்துட்டாரு ராமு பண்டிதர். இந்த பிர்காவிலேயே வர்மம் தெரிஞ்சவங்க இருந்தா இந்த நேரம் பெத்தன்னா இப்படி மல்லாக்க கெடக்க வேணாம்.

மம்புட்டியும் கையுமா நிக்கலாம். இந்த அறுவது வயசிலயும் பெத்தன்னா மம்புட்டி புடிச்சான்னா வாலிபப் பசங்ககூட அவனோட நெறைப்புடிச்சி கொத்திக்கிட்டு வர முடியாது. அப்படி ஒரு லாவகமும் கைநேர்த்தியும் தெரிஞ்சவன்.

இப்படி படுக்கையில விழுறதுக்கு முன்னாடி ஒரு கால்வலி தலைவலின்னு படுத்தவன் இல்ல.

பெத்தன்னா! நீ வைத்தியத்த இத்தோட நிப்பாட்டிபுடாம இங்கிலீஸ் வைத்தியமும் பாத்துக்கிட்டு வா. இப்பெல்லாம் லெங்குசா குணமாக்கிப்புடுறாங்க..' அவனுக்கு ரொம்ப வேண்டப்பட்ட கொத்தனாரு உசுப்பி விட்டாரு.

பெத்தன்னா பெரிய கொத்தனாரு மேல ரொம்ப நம்பிக்கை உடையவன். சொன்னதோடு இல்லாம 'என்னோட பையனுக்கு வேண்டியப்பட்ட வைத்தியார் ஒருத்தர் இருக்காரு அவனையும் உன்னோட வர சொல்லுறேன். காசப் பாக்காம போய் பாத்துட்டு வா'ன்னு எரனூறு ரூவாயையும் 'வச்சிக்க'ன்னு கொடுத்துட்டு வந்துட்டாரு அவனால தட்ட முடியல.

அந்த டாக்டரையும் சும்மா சொல்லக்கூடாது. பெரிய கொத்தனாரு மவன் கிட்டக்கவே நின்னதால ரொம்ப சோதிச்சி பாத்தாங்க.

'நீ யோகக்காரன்தாம்பா. வந்த ரெண்டு நாள்ல எல்லா படமும் புடிச்சிட்டாங்க. என்னோட மச்சான் பத்து நாளா சேத்திருக்கேன். இன்னும் இதெல்லாம் செய்யில'ன்னு பக்கத்து கட்டில்ல தங்கிருந் தவங்கல்ல ஒருத்தர் நோப்பாலப்பட்டுக் கிட்டாரு.

பத்து நாளு தங்கியிருந்து பாத்துக்கிட்டான். முழுசா குணமாகாட்டாலும் கொஞ்சம் சொற்பமாச்சி.

'..என்ன பெத்தன்னா! உனக்கு வயசா கிட்டதால ஆப்பிரேஷன் செஞ்சாலும் முழுசா குணமாகுமின்னு சொல்ல முடியாது. நம்ம டாக்டர் முடிஞ்சவரைக்கும் பாத்து அனுப்பி வைக்கிறேன்னு சொல்லியிருக்காங்க. இன்னும் பத்து நாளு தங்கியிருந்து பாத்துட்டு வா..'

பெத்தன்னவால அத மாத்தி பேச முடியல. சின்ன மவனத் தொணைக்கி வச்சிக்கிட்டு வைத்தியம் பண்ணிக்கிட்டு வந்து சேந்து முப்பது நாளாச்சி.

ஆஸ்பத்திரியில படுத்துக் கெடக்கும் போது சின்னமவன் அப்பார வுட்டு அந்தான்ட இந்தான்ட நவுருல. தான் பொண்டாட்டி இருந்தாக்கூட இப்படிப் பாத்திருப்பாளா? பெத்தன்னாவால நெனைச்சி கூட பாக்க முடியல.

இந்தச் சின்ன மவனும் ரெண்டாங்கட்டியா நிக்கிறான். படிப்பும் ஏறல. நாலு பேருக்கிட்ட நின்னு வெதரணையாப் பேசத் தெரியாதவன். இப்ப நம்ம கண்ணுக்கு முன்னாலேயே தம்பிக்காரன் பத்தி நெனைச்சிப் பாக்காத அண்ணன்காரன். நமக்கு பின்னால என்னாத்த தாளிக்கப் போறான்.

இப்பவே சின்னவனுக்கு ஒரு வாவு வழிப்பண்ணி கண்ணாலம் கட்டிட்டா அவன் காலம் பசி பட்டினியில்லாம போயிடும்னு தான் ரெண்டுவருஷமா திட்டம் போட்டான். பெத்தன்னா வீட்டுக்கு எதிர்த்தாப்போல உள்ள தெடல் ரெண்டு 'மா'வையும் அத ஒட்டி இருக்கிற ஒண்ணரை மா நஞ்சை நெலத் தையும் வாங்கிடனும்னு முடிவு பண்ணி வச்சிருந்தான்.

அதுக்குத் தோதா மணிப்புள்ள அந்த நெலத்த பெத்தன்னாவுக்கு கிரயம் பண்ண ஒத்துக்கிட்டார். ரொம்ப நியாயமான வெல. பெத்தன்னாவே பாத்து சொன்ன வெல. மணிப்புள்ளையும் வாழ்ந்து கெட்ட மனுசன்.

'பெத்தன்னா! என்னோட பொண்ணுக்கு மாப்புள்ள பாத்துக்கிட்டு இருக்கேன். அதக்குத் தோதா நீ பணத்த கொடுத்தா போதும். கையில இருக்கிற பணத்த வச்சி பேசி கைச்சாத்து எழுதிக்க..'

பெத்தன்னாவுக்கு சந்தோஷம். இதப் போல யாரு சொல்லுவா? எல்லாம் கைமேல நடக்கிற காலம். அதோட தெடல்ல இருக்கிற கருவ மரத்தையும் அறுத்து விட்ட பனைமரத்தோட மத்தளத்தையும் வெலை வைக்காம ஆண்டு அனுபவிச்சிக்க கொடுத்துட்டாரு.

இப்ப தெடல்ல இருக்கிற மத்தளத்த தோண்டி எடுத்துபுட்டாபோதும், ஒரு லாரி ஏத்திபுடலாம். காளாவாய்க்கு கொத்திக்கிட்டுப் போயிடுவாங்க. மணிப்புள்ளைக்குக் கொடுக்க வேண்டிய பணத்தில பாதிக்கு மேல தேறிடும். அந்த வேலை ஒண்ணும் லெங்குசு இல்ல. அந்த மத்தளங்கள தோண்டி எடுக்கிறதா இருந்த உயிர் போய் உயிர் வரும்.

பெத்தன்னாவும் மவனுமா சேந்து பேத்து எடுத்துப் புடனுங்கிற கங்கணத்தோடத்தான் கால நேரம் பாக்காம மத்தளமும் அப்புடியே குந்தாணிக்கணக்காத்தான் இருக்கு. மண்ணக்கெல்லி வல்லிசா வேர அறுக்கங் காட்டியும் தாவு தீர்ந்து போயிடுது.

அவனோடு ஆயிசுல இது போல மல்லுக்கு நின்னதில்ல. பாதிக்கு மேல பேத்தாச்சு. ஒடம்ப அப்புடியே சப்பி எடுத்துட்டு ஒரு மத்தளம் மட்டும் லேசுல பிரியல. பாரைய போட்டு நெம்புனா பாரையே வளஞ்சி போவுது. கன்றைபோட்டு சல்லி சல்லியா கழிச்சா சேதாரம் ஆவுது. இந்த மத்தளத்த ரெண்டாப் பொளந்தாதான் களவாயில் வைக்கலாம். அப்புடியே வைரம் பாஞ்ச மரம் வெடி வச்சிதான் பொளக்கனும். ரொம்ப வேலை வாங்கின அந்த மத்தளம் கொஞ்சம் அசைஞ்சி கொடுக்கவும், 'அப்பா! நீ பாரைய போடு'ன்னு சொல்லிக்கிட்டே நெம்புக் கட்டைய உதாராய் எடுத்துப் போட்டான்.

எப்புடி கொத்திவிட்டா விடுபடுங்கிற லாவகம் சட்டுன்னு மட்டுபடல. 'சரிடா, தம்பி நீ வேர கொத்தி வுடு.. நான்..'ன்னு சொல்லிக்கட்டே பெத்தன்னா ஒரே தம்மில் பாரையை இறுக்கவும், அதே நேரத்தில் அவனோட மவன் கன்றை எடுத்து சல்லிவேர் கொத்தினான், மத்தளம் நருக்குன்னு விட்டுடுச்சி.

'அம்மாடி'ன்னு பெத்தன்னா சரிஞ்சி விழுந்தான். அன்னிக்கு புடிச்ச அவஸ்தை இன்னும்...
கல்கத்தா பேங்கல வேலையில இருக்கிற மூத்த மவனுக்கு எல்லா சேதியையும் ஒண்ணுவிடாம எழுதி 'நீ வந்துட்டு போனா நிம்மதியா இருக்கும்'ன்னு எழுதிப் போட்ட கடுதாசிக்குத் தான் இன்னிக்கி பதில் வந்திருக்கு.

'....அப்பா! இன்னுமே அந்தப் பட்டிக்காட்டுல இருக்க வேணாம். நீங்க பேசாம இருக்கிற வீட்டையும் நெலத்தையும் வர்ற வேலைக்கு வித்துட்டு வந்திடுங்க. எனக்கு ஒரு மொதலாயிடும். நீங்க அந்த ஊருல ஒண்ணும் சொத்து சேக்க வேணாம். நீங்க கேட்டிருக்கிற பணத்த இப்ப நான் அனுப்ப முடியாது. மெட்ராஸ் வந்து ஒடம்ப பாத்துக்கிட்டு மாமா வீட்டுல தங்கிக்குங்க. எனக்காவ மாமா வீட்டுல இருந்துக்கிட்டு அம்பத்தூரில் கட்டுற வீட்ட பாத்துக்கிட்டா போதும். தம்பிக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுக்க சொல்லி மாமாவுக்கு லெட்டர் போட்டிருக்கேன்... உங்கள் கைசெலவுக்கும் கொடுக்கும் படியும் எழுதியிருக்கேன்..'

வந்து பாக்கிறதுக்கோ பணம் அனுப்பவோ செளகரியப்படலன்னு கடுதாசி எழுதியிருந் தாக்கூட மவன் மேல வெறுப்பு வந்திருக்காது. இத்தன வருசமா உழைச்சி பொழப்பு நடத்தின ஊரு இந்த ஊருதான் இவன படிக்கவச்சி வேலைக்கி அனுப்ப முடிஞ்சது. இப்பதான் மனுசனா தலை எடுத்திருக்கான். இப்ப அவன் பொறந்து வளந்த வீட்டையும் எடத்தையும் விட்டுட்டு மவனுக்கு பொண்ணு கொடுத்த கொண்டான் கொடுத்தான் கிட்ட அதுவும் பெத்த புள்ளை தங்கனுமா?

ஒண்ணுவிட்ட மச்சினனாவும், பொண்ணு கொடுத்த சம்மந்தியாகவும் இருக்கிற மனுசன். நல்லது கெட்டதுக்கெல்லாம் வரும் போது, நேராத் திருவாரூர்ல வந்து அறை எடுத்து தங்கிட்டு அந்த நேரத்துக்கு தலைய காட்டிட்டுப் போறவரு. அவரு வீட்டுல போயி தங்கிக்கன்னு எழுத எப்படித்தான் அவனுக்கு மனசு வந்துச்சின்னு பெத்தன்னா மனசு ஆத்து ஆத்து போச்சி.

இந்தக் கடைக்குட்டி மவன் மூணு வயசா இருக்கும்போது, மழையோட மழையா தாளடி நடவ நட்டுட்டு வந்து கழிசன்னு வந்து படுத்த பொண்டாட்டி நல்லது கெட்டது கூட பேசாம பொக்குன்னு போயி சேந்துட்டா.

அவளோட நெனப்புல இருந்த பெத்தன்னா, அக்கம் பக்கத்தில் உள்ளவங்க ரெண்டாங் கண்ணாலம் கட்டிக்கன்னு சொல்லி பொண்ணு பாத்தப்போ ஒரேயடியா 'இன்னுமே எனக்குக் கல்யாணம் காட்சி எதுக்கு? என்னோட உயிரு இருக்கிற வரைக்கும் இந்த ரெண்டு புள்ளைங்களையும் கரைசேத்திட்டா போதும்'ன்னு ராப்பகன்னு பாக்காம உழைச்சி மனுசனாக்க என்ன பாடு பட்டிருப்பான்?

பொண்டுவ இருந்து பங்கிடா ஆக்கி எறக்கிப் போடுறது போல ரெண்டு புள்ளைங்களையும் உள்ளங்கையிலேயே வச்சி பொத்தி பொத்தி தான் வளர்த்தான். இப்படி வளத்த புள்ள, படிச்சிட்டு நாலு எடத்துல பழகிறவன் இப்புடி எழுதிப்புட்டானேங்கிற வேகசாகம் கூடிக் கிட்டே இருக்கு. அடிக்கிற காங்கலுக்கும் அதுக்கும் நெஞ்சுக்குள்ளே படபடப்பு ரொம்பதான்.

'..இந்தாப்பாரு பெத்தன்னா! என்னோட பொண்ணுக்கு மாப்புள்ள அமைஞ்சி போச்சி! தேவைக்கி நாளும் குறிச்சாச்சி. உன்னோடா நெலமையும் எனக்கு தெரியுது. கேக்க மனசில்ல தான். இருந்தாலும் கேக்காம நா இருக்க முடியாது. முப்பத்தி ரெண்டு வயது பொண்ணுக்க மாப்புள்ள வந்திருக்கு விட முடியாதில்ல.

உன்னோட சம்மந்தியேட சகலை நேத்திக்கு வந்தாரு. பேச்சி வாக்கில உன்னோட பேச்சி வந்துச்சி. நீ ஆட்சேபம் செய்யாட்டா தெடவை அவரே ஐயாயிரம் ரூவா கூடவே கொடுத்திட்டு சாசனம் பண்ணிக்கறேன்னு சொல்லுறாரு. ஆனா நான் தான் பேச்சு கொடுக்கல..'

காலையில் மணிப்புள்ள வந்து சொன்னப்பவே சொரேல்ன்னு தான் இருந்துச்சி, கட்டாந்தரையில் அரிசி மொளைச்சாப்போல பணம் குமிஞ்சிக் கெடக்கிற திமிருல சகலைக்கு சப்போட்டா வந்துட்டானா? முன்னப்பின்ன இருந்த இருப்ப யாரு யோசிச்சிப் பாக்குறா? தாழைக்குடியானும் தலைகாலு புரியாமதான் நிக்கிறான். 'இருக்கட்டும்'ன்னு மனசில நெனைச்சிக்கிட்ட பெத்தன்னா 'அய்யா! என்னோட தலைய அடவு வச்சாவது பத்து நாள்ல உங்களுக்கு..'

கடிதாசியில எழுதியிருக்கிற சேதி என்ன சின்ன விஷயமா? இந்த நேரத்தில கை கொடுத்து உதவாத புள்ள இருந்தா என்ன? இல்லாட்டா என்ன?

'நான் செத்தாக்கூட அந்தப் பயலுக்கு சேதி சொல்லி அனுப்பக் கூடாதுன்னு சின்னப் புள்ளைக்கிட்ட சத்தியம் வாங்கிபுடனும். அவன் வந்து என் பொணத்தப் பாக்கக்கூட அவனுக்கு யோக்கியதை இல்ல...' பெத்தன்னா மனசில வைராக்கியம், வீராப்பு, பொருமல் கூடிக்கிட்டே போயிட்டு.

சட்டுன்னு சுய நெனவுக்கு வந்தவன் போல பொறண்டு படுத்தான். 'சுறு'க்குன்னு இடுப்பு மூட்டுக்கு மேல வலி.

கிரயம் பண்ண வேண்டிய தெடல்ல பெத்தன்னாவோட மவன் வேகாத வெயிலில் நின்னுக்கிட்டு மத்தளத்தோட அல்லாடுறான். அத பாத்த பெத்தன்னாவுக்கு 'சுரீர்ன்னு அடிவிழுறாப் போல இருக்கு. வாரி சுருட்டிக் கிட்டு 'நான் இன்னும் உயிரா இருக்கிறப்ப நீ மட்டும் ஏன்டா'ன்னு ஆவேசத்தோட எழுந்திருச்சவன் குடுகுடுன்னு...

'யப்பா.. யப்பா..'ன்னு பதறிப் போன சின்னமவன் எதிர்க்க ஓடியாரான்.

'நான் நல்ல சாதிக்காரனுக்கு தான் பொறந்தேன்.. போட நெம்பு கட்டைய வாகா எடுத்துப் போடு, கெண்டாடா அந்த பாரைய..' அந்த ஆள் உயரப் பாரையத் தூக்கி மத்தளத்தின் அடியில் வைத்துக் கெந்தினான். அதை அவன் மவனால் தடுக்க முடியல.

மூணு நாளா அவன் ஒண்டியா நின்னு கொத்தின அந்த மத்தளம் 'மறமற'ன்னு பேந் துட்டு 'அம்மாடியோ'ன்னு பெத்தன்னா விடமிருந்து பெரும்மூச்சி வெளிப்பட்டுச்சி. சமதரையில அப்பாடின்னு சாஞ்சான்.

'யப்பா.. யப்பா...'

'ஒண்ணுமில்லடா தம்பி பொறிதட்டுனாப் போல இருக்கு. கால நெட்டி முறிச்சிவிட்டாச் சரியாப் போயிடும்'ன்னு சொல்லிக்கிட்டே ராசப்பா சொல்லிதந்த அந்த 'மல்லு'வை கால நீட்டி மடக்கி செஞ்ச பின்னால முழங்கால மடக்கி நெஞ்சுக்கு நேரா கொண்டு வரும்போது வலி விடுபட்டிருந்ததை பெத்தன்னாவால் உணர முடிந்தது.

சோலை சுந்தரபெருமாள்
Share: 


© Copyright 2020 Tamilonline