Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
பொது
இந்திய பத்திரிகைத் துறையில் அந்நிய முதலீடு
தாகத்தின் ஏக்கம்
ராக லக்ஷணங்கள்
அட்லாண்டாவில் கேட்டவை
மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்
விருது ஜுரம்
- ஸ்ரீராம் V.|டிசம்பர் 2002|
Share:
அது வெகுளியாகத்தான் தொடங்கியது. இந்த வைரஸ் பல வருடங்களாக, இல்லை இல்லை பல நூற்றாண்டுகளாக இருக்கிறது, ஆனாலும் யாரும் அதனைக் கவனித்தது கிடையாது. சாதாரண ஜலதோஷத்தைப் போல. அதுவாக வரும் அதுவாகச் செல்லும். "குதிரை" வைத்யநாத ஐயருக்கு குதிரை விருது, முத்துசாமி தீட்சதருக்கு "கனகாபிஷேகம்", வையச்சேரி வைத்யநாத ஐயருக்கு "மகா" என்ற பட்டம் என்றெல்லாம் அவ்வப்போது தெரியவரும். இதன் முழு தாக்கம் எப்போதேனும் ஒரு முறை பொப்பிலி கேசவய்யா நிகழ்ச்சியைப் போல (இவருக்கு பூலோக சப்ப சுற்றி - உலகை ஒரு பாயாகச் சுருட்டியவர் என்ற பட்டம்!) மற்றும் குன்றக்குடி கிருஷ்ண ஐயர் விஷயத்தைப் போல (இவருக்கு முறுக்கு மீசை ஜிகி பிகி கான நய தேச்ய ரெட்டை பல்லவி கிருஷ்ண ஐயர் என்ற பட்டம்) தொற்றுநோயாக உருபெறும். ஆனாலும் கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

நமது முன்னோர்கள் இதனை குணப்படுத்த சரியான வழிகள் தெரிந்திருந்தனர். அவர்கள் நாட்டு வைத்தியம் மீது நம்பிக்கை கொண்டவர்கள், ஆங்கில மருத்துவம் மீது அல்ல. வீணை தனம்மாள் இதில் கைதேர்ந்தவர் என்று கேள்வி. ஒரு முறை அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் இவரிடம் சென்று தனக்கு சங்கீத ரத்னாகரா பட்டம் கொடுத்திருப்பதைத் தெரிவித்தார். அதற்கு தனம்மாள் "ஓ. அப்படியா. எப்பொழுதிலிருந்து மனிதர்களுக்குப் புத்தகத்தின் பெயரை விருதாக வழங்கத் தொடங்கினார்கள்?" என்றாராம் (ஏனெனில் பண்டைய இசைப் புத்தகம் (பொக்கிஷம்) ஒன்றின் தலைப்பு சங்கீத ரத்னாகரா!). அரியக்குடி அப்படியே அடங்கிப் போனார்; அவரது விருது ஜுரமும் நீங்கியது.

1942ம் ஆண்டின் பொழுதுதான் இந்த நோயின் தாக்கம், இசைப் பிரியர்களை நிமிர்ந்து உட்காரச் செய்து இதனைக் கருத்தில் கொள்ளச் செய்தது. அந்த வருடம் வரை மியூசிக் அகாதெமி ஒரு கான்·பிரன்ஸ், ஒரு சில கச்சேரிகள் மற்றும் தலைவர் தேர்வு (பிரபல இசைக் கலைஞர்கள் தேர்ந்தெடுப்பார்கள்) என்று அடக்கி வாசித்து வந்தது. அகாதெமியின் தலைவராக இருக்கும் இந்த சிறு பொறுப்பும் கூட தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பெரிய பாரமாக இருந்தது. மாங்குடி சிதம்பர பாகவதர், கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர் மற்றும் பழமனேரி சுவாமிநாத ஐயர் ஆகிய மூன்று தலைவர்கள், இந்த நோயின் தாக்குதல் ஏற்பட்ட சில நாட்களிலேயே... மன்னிக்கவும் பட்டம் ஏற்ற சில நாட்களிலேயே மறைந்தனர். 1942ல் நிலமை கட்டுக்கடங்காமல் போனது. இது நாள் வரை இந்தக் கிருமியை உள்ளுக்குள்ளேயே சுமந்து வந்த மியூசிக் அகாதெமியின் நிர்வாகத் தலைவர் K.V. கிருஷ்ணசாமி ஐயர் திடீரென்று இக்கிருமியை அகாதெமி மீது தொற்றச் செய்தார். வருடாவருடம் சிறப்பிக்கப்படும் இசைக் கலைஞருக்கு சங்கீத கலாநிதி என்ற விருது வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த வருட விருது பெற்ற மழவரயனேந்தல் சுப்பராம பாகவதர் மீது இக்கிருமியைத் தொற்றச் செய்த இவர், அதனோடு நின்றுவிடாமல், இது நாள் வரை இருந்த முன்னாள் தலைவர்கள் அனைவரும் இந்நோயால் தாக்கப்படவேண்டும் என்று அடம் பிடித்தார். T.S. சபேஷ ஐயர் போன்றவர்களால் இதனைத் தாங்க முடியவில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு பக்கவாதத்தால் தாக்கப்பட்ட அவர், அதிலிருந்து மீளவே இல்லை.

ஒரு சில வருடங்களுக்கு இக்கிருமியின் தாக்கம் ஒரே ஒரு சபாவில் மட்டும் தான் இருந்தது. அப்படி ஒரே ஒரு சபாவில் மட்டும் அடக்கியிருந்தால் அதனால் இனப்பெருக்கம் செய்யமுடியாதே. சில காலங்களுக்குப் பிறகு இந்தக் கிருமியின் வேறு வடிவங்கள் அதே அறிகுறிகளுடன் தென்படத்தொடங்கின. இரணடாவது பெரிய தாக்குதல் ஸ்டிர்ங்கர்ஸ் தெரு, ஜார்ஜ் டவுனில் ஏற்பட்டது. இங்கு இயங்கிய இந்தியன் ·பைன் ஆர்ட்ஸ் சபா 1940களில் இக்கிருமி இனவிறுத்தி செய்ய புதிய இடத்தினை அளித்தது. சங்கீத கலா சிகாமணி என்ற விருதினை அவர்கள் வழங்கப்போவதாக அறிவித்தார்கள். இவை நடந்துகொண்டிருக்கையில், மூன்றாவது வகையான கிருமி தமிழ் இசைச் சங்கத்தில் தென்பட்டது. 1957ல் இசை பேரறிஞர் என்ற விருதினை அறிவித்தபோது இது வெளியுலகுக்குத் தெரிந்தது. M M தண்டபாணி தேசிகர் தான் முதல் நோயாளி (ஐயையோ... விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட முதல் கலைஞர்). அகாதெமிக்கும் இசைச் சங்கத்துக்கும் உள்ள வேறுபாட்டினால் லேசாக ஒரு நம்பிக்கை பிறந்தது. கலாநிதி வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள், பேரறிஞர் வைரஸின் பாதிப்புக்கு உள்ளாவதில்லை. ஆனால் இந்த நம்பிக்கை நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. 1948ல் கலாநிதி வைரஸால் தாக்கப்பட்ட கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை 1957லேயே பேரறிஞர் வைரஸ் நோயால் தாக்கப்பட்டார். ஒரு சில வருடங்களுக்குள்ளாக இந்த வைரஸ் வெவ்வேறு பரிணாமங்களில் சென்னையின் மூலை முடுக்குகளிலும் மற்றும் இந்தியாவின் மற்ற இசை மையங்களிலும் வெளிப்படத் தொடங்கின.
1980களில் நிலமை கட்டுக்கடங்காமல் போய்விட்டது என்று பொதுவாக ஒத்துக்கொள்ளப்பட்டது. நாத பிரம்மம், சங்கீத கலா நிபுணா, சங்கீத சூடாமணி, இசை வேந்தர், இசை பேரொளி, சங்கீத கலா சிரோமணி மற்றும் பல நோய்க் கிருமிகளை எதிர்த்து போராட வேண்டிய கட்டாயத்திற்கு இசைக் கலைஞர்கள் தள்ளப்பட்டனர். இந்த குழப்பங்களின் நடுவே இரு முதியவர்கள் தாக்கப்படாமல் இருந்தனர். ஒன்று 1929ல் ஆரம்பிக்கப்பட்ட ரசிக ரஞ்சனி சபா, மற்றொன்று 1901ல் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா. கலப்படமில்லாத பாலும் உணவும் எப்படி நல்ல போஷாக்கினை தருமோ அப்படி நல்ல ஆரோக்கியத்திற்கு (போஷாக்கிற்கு) எடுத்துக்காட்டாக, இந்த இரண்டு அமைப்புகளையும் ரசிகர்கள் மேற்கோள் காட்டினர். ஆனால் விதியை யாரால் தான் வெல்ல முடியும். விதி யாரை விட்டது? 90களில் RR சபா சங்கீத கலா ரத்னா என்ற கிருமியின் தாக்குதலைக் காட்டத் தொடங்கியது. 2000ம் ஆண்டு சங்கீத கலா சாரதி என்ற நோயினால் தாக்கப்பட்டது ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா. மியூசிக் அகாதெமியிலும் அதனைத் தொடர்ந்து தாக்குதலுக்குண்டான சபாக்களிலும் இரண்டாம் நிலைக் கிருமிகள் தலை காட்டத் துவங்கின. சங்கீத கலா ஆச்சார்யர்கள், நினைவுப் பரிசுகள் மற்றும் இதை போன்ற எண்ணற்ற ஒற்றுமைகள்.

நிலைமை அதோகதி தான். இன்னும் சொல்லப்போனால், CMANA, the Cleaveland Tyagaraja Aradhana போன்ற வட அமெரிக்க நிறுவனங்களிலும் நோய்க் கிருமிகளின் தாக்குதல்கள் ஏற்பட்டன. அமெரிக்காவில் இரண்டாவது சங்கீத கலாநிதியும் உண்டு. ஆனால் இது இந்தியக் கிருமியால் தாக்கப்படாதவர்களைத் தான் தாக்குகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக மிகக் கொடிய டாக்டரேட். இது ஒரு ஒட்டுமொத்த ஆட்கொல்லி. இதற்கு திறமை தெரியாது, தராதரம் தெரியாது. கேட்டால் கிடைக்கும் அளவில் இருக்கிறது. ஐ. நா. சபை கூட இதற்கு எதிராக தீர்மானங்களைக் கொண்டுவர விவாதித்துக் கொண்டிருப்பதாக கேள்வி. அமெரிக்காவோ இந்தக் கொடிய Dr. வைரஸை biological warfareல் பயன்படுத்த சோதனைகள் செய்துவருகின்றது.

இது தான் தற்போதைய நிலை. திருவையாறு சென்று தியாகராயர் சமாதியை தரிசிப்பது ஒன்று தான் இதற்கு குணமளிக்கக் கூடிய ஒரே வழி. அங்கே அவர்கள் ஒரு வித்தியாசமான (இன்னும் சொல்லப்போனால் சூழ்நிலைக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத) பாடலாகிய "நிதி சால சுகமா?" (இதன் அர்த்தம் பணமும் பட்டமும் தான் முக்கியம்) என்ற பாடலைப் பாடுகிறார்கள். ஒரு சிலர் இத்தலத்திற்கு ஒரு முறை சென்று, சுத்த சாந்தி செய்த பிறகு குணமடைந்திருப்பதாகக் கேள்வி. இருப்பினும் இந்த சிகிச்சை ஜனவரி மாதம் தவிர ஏனைய மாதங்களில் வேலை செய்கிறது. ஏனெனில் ஜனவரி மாதம் தாக்குதலுக்குண்டான ஒரு கூட்டமே இங்கு சென்று நிவாரணத்தைத் தேடுகிறது.

V. ஸ்ரீராம்
More

இந்திய பத்திரிகைத் துறையில் அந்நிய முதலீடு
தாகத்தின் ஏக்கம்
ராக லக்ஷணங்கள்
அட்லாண்டாவில் கேட்டவை
மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline