Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
போகிற போக்கில்
Tamil Unicode / English Search
நேர்காணல் - போகிற போக்கில்
"தரமான படங்களை தயாரிப்பேன்" - தயாரிப்பாளர் கணேஷ் ரகு
கலாச்சாரத்தைக் கற்றுத்தரும் 'அந்தக்கால' விளையாட்டுகள்
- காந்திமதி|ஏப்ரல் 2003|
Share:
Click Here Enlargeஒரு நாட்டின் கலாசாரத்திற்குப் பெருமை சேர்க்கும் பல விஷயங்களில், அந்த நாட்டில் விளையாடப்படும் விளையாட்டுகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. இப்போதைய தலைமுறைக் குழந்தைகளுக்கு, அதிலும் குறிப்பாக நகரத்துக் குழந்தைகளுக்குத் தெரிந்த விளையாட்டு கிரிக்கெட்டும் கம்ப்யூட்டர் கேம்ஸம்தான். டி.வி.யும், கம்ப்யூட்டரும் கண்டுபிடிக்கப்படாத காலத்துக் குழந்தைகள் என்ன விளையாடி பொழுதைப் போக்கியிருப்பார்கள் என்ற சிந்தனை கூட குழந்தைகளுக்கு வராத அளவுக்கு கம்ப்யூட்டர் கேம்ஸ் குழந்தைகளின் மனதை இழுத்துப் பிடித்துள்ளது. இந்த நிலைக்குக் குழந்தைகளைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. வீட்டின் அமைவிடம், குடும்ப அமைப்பு, நவீனமாகிவிட்ட வாழ்க்கை முறை, குழந்தைகளின் கல்வி... என்று பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அப்பா, அம்மா இருவருமே வேலைக்குச் செல்வதால், சின்ன வயதில் தாங்கள் விளையாடிய விளையாட்டுகளைக் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க அவர்களுக்கு நேரமில்லை. மேலும், இப்போது தனிக்குடும்ப வாழ்க்கை முறை அதிகரித்துவருவதால் வீட்டில் பாட்டி-தாத்தா போன்ற பெரியவர்கள் இருந்து சொல்லிக் கொடுக்கவும் வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. அப்படியே ஒரு சில வீடுகளில் பாட்டி-தாத்தா இருந்தாலும், வயதின் காரணமாக பழைய விளையாட்டுகளைப் பெரும்பாலும் அவர்கள் மறந்துபோயிருப்பார்கள். மூத்த தலைமுறையினர் விளையாடி மகிழ்ந்து மறந்துபோன பாரம்பரியமிக்க நமது விளையாட்டுகள் இளைய தலைமுறையினருக்கு அறிமுகமாகாமலேயே அழிந்து போய்விடக்கூடாது என்பதற்காக ''க்ரீடா'' என்னும் அமைப்பு சென்னையில் இயங்கி வருகிறது.

நமது பாரம்பரியமிக்க விளையாட்டுகளான பரமபதம், ஆடுபுலி ஆட்டம், தாயம், பல்லாங்குழி, கோலி,பம்பரம், கில்லித்தாண்டு, கழச்சிக் கல், புளியமுத்து ஆட்டம், குன்னிமுத்து ஆட்டம்... என்ற வரிசையில் கிட்டத்தட்ட 14 வகையான ஆட்டங்களை இந்த அமைப்பு இளைய தலைமுறையினருக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறது. குழந்தைகளை ஈர்க்கும் வகையிலும், அதே நேரம் பழமை விதிகளின் அடிப்படையிலும் இது போன்ற விளையாட்டுகளை வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள். இந்த அமைப்பின் நிறுவனர் திருமதி வினிதா சித்தார்த்தை சென்னை பெசன்ட்நகரில் உள்ள அவர் வீட்டில் சந்தித்தோம்.

''அடிப்படையில நான் ஒரு ஜர்னலிஸ்ட்(Journalist). டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்துல ஜர்னலிசம் படிச்சுட்டு இந்தியா வந்ததுக்கப்புறம், இங்கே 'மாஸ்டர் பேஜ்' (Master Page) ஏஜென்சி நடத்திக்கிட்டிருந்தேன். இந்த ஏஜென்சி மூலமா கற்பனை மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வீட்டிலிருந்தே எழுதி பல பத்திரிகைகளுக்குக் கொடுத்தேன். 1999-2000 ஆம் வருஷத்துல ஒரு பிரபல இந்தியப் பத்திரிகையிலிருந்து பழைய பாரம்பரியமிக்க விளையாட்டுகளைப் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதித் தரச் சொல்லி என்னைக் கேட்டாங்க. ஆராய்ச்சியை ஆரம்பிச்சதுக்கப் புறம்தான் இது எவ்வளவு பெரிய, ஆழமான விஷயம்னு எனக்குப் புரிஞ்சது. என் ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொடர்ச்சியாக 'ஹிண்டு' பத்திரிகையோட 'யங் வேல்டு' பகுதியில பிரசுரமாச்சு. இந்தத் தொடர்களைப் பார்த்துட்டு, நம் பாரம்பரிய விளையாட்டுகளைச் சின்னக் குழந்தைகளுக்குச் சொல்லித் தரச் சொல்லி நிறைய பள்ளிகளிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆழ்வார்பேட்டையிலுள்ள எம்.சி.டி.எம்.சிதம்பரம் செட்டியார் மெட்ரிகுலேஷன் பள்ளி இதில் ரொம்ப முக்கியமானது. அதற்குப் பிறகுதான் நாங்க இந்த விளையாட்டுகளை சின்னக் குழந்தைகளிடத்துல, அதாவது வருங்கால சந்ததியினரிடத்துல வேகமா எடுத்துக்கிட்டுப்போக முயற்சிகள் எடுத்தோம்.'' என்கிறார் வினிதா.

''இந்தக் காலத்தில் அம்மாவும் பிள்ளையும் சந்தித்துக்கொள்வதே இரவு ஒன்பது மணிக்குத்தான் என்று ஆகிவிட்டது. அம்மா விளையாடிய விளையாட்டுதான் என்றாலும் அதை உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க அவர்களுக்கு நேரம் கிடையாது. அதனால, இந்த ஒவ்வொரு விளையாட்டும் எப்படி விளையாடணும்?; இந்த விளையாட்டோட விதிமுறைகள் என்னென்ன? என்று சின்னச் சின்ன புக்லெட் போட்டிருக்கோம். அதைப் படிச்சுப்பார்த்து விளையாட்டைப் புரிஞ்சு அவங்களே ஆளைச் சேர்த்துகிட்டு விளையாட வேண்டியதுதான்.

விளையாட்டு தெரிந்தால் போதுமா? அதை விளையாட அதற்குரிய சாதனங்கள் வேண்டாமா? அந்தக் காலத்தில் மணல்தரையில் குச்சியால் கோடுகிழித்து கட்டமிட்டு விளையாடுவார்கள். அல்லது வீட்டுத்தரையில் மாக்கல்லால் கட்டம் கட்டி விளையாடுவார்கள். இப்போதோ மணல்தரையைப் பார்ப்பதும் கஷ்டம்; மொசைக் பூசப்பட்ட வீட்டுத்தரையில் மாக்கல்லால் வரைவதும் கஷ்டம்; அதனால் கனத்தஅட்டைகளில் கட்டம் வரைந்து அறிமுகப்படுத்தினோம். கைக்கு அடக்கமாகவும் குழந்தைகளுக்கு விளையாடும் ஆர்வத்தைத் தூண்டும் படியும் அந்த அட்டையை வடிவமைத்திருக்கிறோம். நான்காக மடித்து கைப்பைக்குள் வைத்துப் போகுமிடமெல்லாம் எடுத்துச் செல்லும் அளவுக்குக் கூட இவைகளைக் கொண்டுவந்திருக்கிறோம். பெரும்பாலும் அந்தக் கால விளையாட்டுகள் எல்லாமே இயற்கையா கிடைக்கக் கூடிய கூழாங்கல், புளியமுத்து, இவைகளைக் கொண்டு விளையாடுவதாகத் தானிருக்கும். இப்போது இவைகளையெல்லாம் எங்கே போய் வாங்கி விளையாடுவது என்று யோசிப்பார்களே என்பதற்காக அந்தந்த விளையாட்டு விளையாடுவதற்குத் தேவையான காய்களையும் புக்லெட் மற்றும் வடிவ அட்டையோடு இணைத்தோம். எங்கள் உருவாக்கங்களின் சிறப்பம்சம்என்று நான் பெருமையாக சொல்ல விரும்புவது இதைத்தான். இந்தப் பொருட்கள் எல்லாமே 'ஈக்கோ ·ப்ரெண்ட்லி' என்று சொல்லும் அளவுக்கு பிளாஸ்டிக் இல்லாத கூடுமானவரை இயற்கைப் பொருட்கள்தான். உதாரணமாக மரப்பாசிகள், கடல் சிப்பிகள், சங்குகள், கூழாங்கற்கள், புளியமுத்து, குன்னிமுத்து, போன்றவைகளைத்தான் வைத்திருக்கிறோம். இவை மூன்றையும் (புக்லெட், வடிவ அட்டை, மற்றும் விளையாடப் பயன்படுத்தும் காய்கள்) காகித அல்லது சணல் பையில் போட்டு கவர்ச்சிகரமான வடிவில் 'பேக்கிங்' செய்து கொடுக்கிறோம். இதில் கூட பிளாஸ்டிக் பைகளைத் தவித்துவிட்டோம்.'' என்கிறார்.

ஒவ்வொரு குழந்தைக்கும் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க இயலாது என்பதற்காக புக்லெட் போட்டிருந்தாலும், இந்த அமைப்பின் சார்பில் சில பள்ளிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு 'ஒர்க்ஷாப்' நடத்தி இந்த விளையாட்டுகளைத் தனித்தனியாக ஒவ்வொரு வருக்கும் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். செஸ், கேரம்போர்டு,...போன்ற விளையாட்டுகளுக்குத்தான் 'இன்டர் ஸ்கூல்' போட்டிகள் நடத்தவேண்டுமா? பல்லாங்குழி, கோலி, பம்பரம், கிட்டிப்புல் விளையாட்டுகளுக்குக் கூட 'இன்டர் ஸ்கூல்' போட்டிகள் நடத்தலாம் என்று புதுமையைப் புகுத்தியிருக்கிறார் வினிதா.

இதுபோன்ற விளையாட்டுகள் சின்னக் குழந்தைகளிடத்தில் மட்டுமின்றி, சின்னவயதில் விளையாடி இப்போது மறந்துபோன பெரியவர் களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதை கண்கூடாகக் காணமுடிகிறது என்கிறார்.
அந்தக் காலத்தில் இதுபோன்ற விளையாட்டுகளை நம் முன்னோர்கள் எதற்காக ஏற்படுத்தினார்கள் தெரியுமா? இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடிப் பழக்கப்படும் மனம் வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரே மாதிரியாகப் பார்க்கும் நிலைக்குப் பக்குவப்படும். (வெற்றிபெற்றதும் தலைகால் புரியாமல் ஆடுவதோ, தோல்வியடைந்ததும் சுருண்டு மூலையில் அடைந்து கிடப்பதோ இல்லாமல் போகும்). எந்த விஷயத்தையும் சிந்தித்து செயல்படுத்துவதற்கு இந்த விளையாட்டுகளைப் பயிற்சியாக எடுத்துக் கொள்ளலாம். நமக்குள் இருக்கும் திறமைகளை மெருகேற்றிக் கொள்ளமுடியும். நம் உணர்திறனை மேலும் வளர்த்துக் கொள்ளமுடியும். கையும் கண்ணும் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து வேலை செய்யும் பழக்கத்தைக் கொண்டுவரமுடியும். பொழுது போக்காக மனஅமைதியும் சந்தோஷமும் பெற முடியும். இதுபோன்ற தத்துவங்களின்-பிரதி பலன்களின் அடிப்படையில்தான் ஒவ்வொரு விளையாட்டுகளையுமே அந்தக் காலத்தில் வடிவமைத்திருக்கிறார்கள்.

இந்தப் பயன்கள் எல்லாமே இப்போது குழந்தைகள் விளையாடும் செஸ், கேரம், கம்ப்யூட்டர் கேம்ஸ் போன்றவைகளில் கூட இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். இருந்தாலும் நம் பாரம்பரிய விளையாட்டுகளுக்கென்று சில சிறப்பம்சங்கள் இருக்கின்றன. இது போன்ற விளையாட்டுகளின் மூலம் நம் கலாச்சாரத்தையும், வரலாற்றையும் தெரிந்து கொள்ளமுடிகிறது. உதாரண மாக, பரமபதம் விளையாட்டிலுள்ள ஒவ்வொரு பாம்புக்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது.

பழைய விளையாட்டுகளில் ஒன்று கூட சுற்றுப்புறத்திற்கோ, அடுத்தவர்களுக்கோ தீங்கு விளைவிக்கும் வகையில் இல்லை. இந்த விளையாட்டுகளை ஒத்த வயதினர் கூடத்தான் என்றில்லாமல் எவர் வேண்டுமானாலும் எந்த வயதினருடனும் விளையாடலாம். அதனால் தலைமுறை இடை வெளியை இந்த விளையாட்டுகள் இல்லாமல் செய்கின்றன. இப்போதுள்ள நிறைய நவீன விளையாட்டுகளின் ‘மூலம்’ இந்த பழைய விளையாட்டுகளிலிருந்துதான் எடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கில்லித்தாண்டு விளையாட்டின் வளர்ந்த வடிவம் தான் இன்றைய கிரிக்கெட்.

இந்த விளையாட்டுகள் எல்லாமே நம் கலாச்சாரத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளன.

நம் பழைய விளையாட்டுகளில் எந்த விளையாட்டையுமே தனி ஒரு ஆளாக விளையாட முடியாது. குறைந்தது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வேண்டும். அதனால் மேலே சொன்ன பயன்களோடு இன்றைய காலத்திற்கு ஏற்றார்போல் நாமும் ஒன்று சேர்த்துக் கொள்ளலாம். இந்த விளையாட்டுகளை விளையாடும்போதாவது வீட்டிலுள்ள அனைவரும் அல்லது அம்மா-அப்பாவில் ஒருவராவது குழந்தையோடு சேர்ந்து இருப்பதற்கான வாய்ப்பும், ஒற்றுமை,பாசம், இவற்றின் அர்த்தம் குழந்தைகளுக்குப் புரிய வாய்ப்பும் கிடைக்கும் என்பதுதான்.'' என்கிறார்.

இந்த நிறுவனம் வடிவமைத்திருக்கும் விளையாட்டுப் பொருட்கள் சென்னையில், ஒடிசி, க்ரா·ப்ட்ஸ்&வேவ்ஸ், டிசைன் ஸ்டோர், தக்ஷன் சேத்திரா, தோ·பா, அமிதிஸ்ட், தி புக் பாயிண்ட், போன்ற கடைகளில் கிடைக்கின்றன. சென்னை தவிர பெங்களூர், ஹைதராபாத், மற்றும் திருச்சியிலும் கிடைக்கின்றன.

''இன்னும் நம்ம பாரம்பரிய விளையாட்டுகள் நிறைய இருக்கு. நாங்க அதையெல்லாம் தேடிக்கிட்டுத்தான் இருக்கோம். நம்மோட பழைய விளையாட்டுகளில் சில விளையாட்டுகளைப் பாட்டுப் பாடிகிட்டே விளையாடுவாங்க. அந்தப் பாடல்களைத்தேடிக் கண்டுபிடிக்கிற முயற்சியில்தான் இப்போ இருக்கோம். கூடிய சீக்கிரமே அந்தந்த விளையாட்டுகளுக்குரிய பாடல்களையும் வெளியிடப் போறோம்'' என்று நம்பிக்கையோடு சொல்கிறார் வினிதா.

காந்திமதி
More

"தரமான படங்களை தயாரிப்பேன்" - தயாரிப்பாளர் கணேஷ் ரகு
Share: 




© Copyright 2020 Tamilonline