Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சாதனையாளர் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | ஜோக்ஸ் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
பொது
என் அம்மாவுக்காக......
இதயத்திற்கும் ஒரு சாக்சு
நாவலும் தமிழ் சினிமாவும்
வாசகர் கடிதங்களும், தென்றல் தமிழ் நடையும்
உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் தெரியுமா?
மனமுருக்கும் தெய்வீகப் பாடல்கள்
புறமனிதன்
கீதா பென்னட் பக்கம்
கண்ணகிக் கோட்டம்
- காந்திமதி செந்தமிழன்|மே 2003|
Share:
தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரையில் வரும் பெளர்ணமிக்கு எத்த னையோ சிறப்பம்சங்கள் உண்டு. மதுரையில் நடக்கும் கள்ளழகர் திருவிழாவில் தொடங்கி நிறைய கோயில்களில் அன்று திருவிழாக்கள் நடைபெறும். தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் நாயகி, கற்புக்கரசி கண்ணகிக்கும் சித்திரை முழுநிலவு நாளன்றுதான் திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் மேற்கே உள்ள மலைத்தொடரின் உச்சியில் இருக்கும் கண்ணகிக் கோட்டத்தில் தான் இந்தத் திருவிழா ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

மதுரையை எரித்த பிறகு, கால்போன போக்கில் 14 நாட்கள் நடந்து குன்றம் ஏறி வேங்கை மர நிழலில் நின்று, கண்ணகி இறுதிநிலை அடைந்ததாகச் சிலப்பதிகாரம் சொல்லும் இடம் இதுதான். தரைமட்டத்தி லிருந்து 9கி.மீ. உயரத்தில் குமுளி என்றொரு இடம் இருக்கிறது. இந்த இடம் வரைக்கும்தான் நமது சொந்த வாகனத்தில் செல்லமுடியும். இந்த இடத்திற்கும் மேலே சுமார் 12கி.மீ. உயரத்தில் கண்ணகிக் கோட்டம் இருக்கிறது. பயணத்திற்கே தகுதியில்லாத செங்குத்தான மலைப்பாதை இது என்பதால், திறமையான ஓட்டுநர்களால் மட்டுமே குமுளிக்கு மேலே வண்டியை ஓட்டிச் செல்ல முடியும். அதனால் குமுளியில் நிறைய ஜீப் வண்டிகளை நிறுத்தியிருக்கிறார்கள். முப்பத்தைந்து ரூபாயைப் பெற்றுக்கொண்டு குறைந்தது 15பேரை புளிமூட்டை மாதிரி அடைத்துக் கொண்டு ஜீப் மலையேறுகிறது. வனப் பகுதியின் இயற்கையை ரசிக்க விரும்புபவர்களும், மலையேற வலிமை இருப்பவர்களும் தாராள மாகக் கோட்டத்திற்கு நடந்தே செல்லலாம். ஜீப்பில் சென்றாலும், நடந்து சென்றாலும், வழிநெடுகிலும் நிற்கும் கேரள வனத்துறை காவலர்களின் சோதனைக்கு உள்ளாகியே தீர வேண்டும். சித்திரை முழு நிலவுநாளில் மட்டும்தான் இங்கு மக்கள் கூடுகிறார்கள். மற்ற நாட்களில் யாரும் எளிதாக இங்கு வந்து செல்ல முடியாது. கேரள வனத் துறையினர் அனுமதித்தால்தான் வரமுடியும். கண்ணகிக் கோட்டத்திற்குப் பக்கத்திலேயே வனத்துறைக் கட்டிடம் ஒன்றையும், காவல் கோபுரம் ஒன்றையும் கேரள அரசு எழுப்பியுள்ளது.

இந்தக் கோட்டம் தமிழ்நாட்டு எல்லைக்குள் தான் இருக்கிறது என்றாலும், அங்கு செல்வதற்கான பாதை, கேரள மாநிலத்தின் எல்லைக்குட்பட்ட காட்டு வழியே கரடுமுரடான மலைப்பாதையாக இருக்கிறது. அதனால் அந்த இடத்தில் ஏராளமான காவலர்களைக் கேரள அரசு குவித்துள்ளது. (தமிழக எல்லைக்குள், கூடலூருக்கு மேற்கேயுள்ள மேலக் கூடலூரில் இருந்து கண்ணகிக் கோட்டத்திற்கு 7கி.மீ. தொலைவில் செங்குத்தான மலையில் ஒற்றையடிப்பாதை இருக்கிறது. அந்தப் பாதை தமிழக அரசால் சீரமைக்கப்பட்டால் இங்கிருந்தபடியே கோட்டத்திற்குச் செல்ல முடியும்.) இந்தக் கோயிலுக்கு நிறைய மலையாளிகளும் வந்து செல்கிறார்கள்.

கற்கள், சிறுபாறைகள் நிறைந்த செங்குத்தான, வளைவுகள் மிகுந்த மலைப்பாதையில் குமுளிக்கு மேலே ஜீப்பில் செல்வது கொஞ்சம் ஆபத்தான பயணம்தான். என்றாலும் ஓட்டுநர் மீது நம்பிக்கை வைத்து சுற்றும் முற்றும் ரசிக்கத் தொடங்கி விட்டால் சுவாரசியமான பயணமாக இருக்கும். மலைஉச்சியை அடைந்து ஜீப்பில் இருந்து இறங்கும்போது எல்லாருமே செம்மண் குளியல் எடுத்துக்கொண்டவர்கள் போல்தான் இருப்போம்.

ஜீப்பில் இருந்து இறங்கிய இடத்திலிருந்து சுமார் அரைகிலோமீட்டர் தூரம் நடந்தால் கண்ணகிக்கோட்டத்தை அடைந்து விடலாம். மதில் சுவர்கள் இடிந்து கிடந்தாலும் அதனுள்ளேயுள்ள கற்கோயில்கள் ஓரளவு நல்ல நிலையில்தான் இருக்கின்றன.

இடதுகை பக்கம் இருந்த சின்ன கல்மண்டபத்தின் வாசலில் தமிழிலும், மலையாளத்திலும் சிவன் கோயில் என்று எழுதப்பட்டிருந்தது. கோயிலுக்குள் இருந்த கும்மிருட்டில் உள்ளிருக்கும் கற்சிலையைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. கூட்டம் வேறு அதிகமாக இருந்ததால், திருப்பதி கோயிலில் செய்வதுபோல் தரிசித்துக் கொண்டிருக்கும்போதே மலையாளம் கலந்த தமிழில் 'சீக்கிரம்,சீக்கிரம்' என்று சொல்லி விரட்டுகிறார் அர்ச்சகர். ஒரு மல்லிகைப் பூவும் கொஞ்சம் சந்தனமும் பிரசாதமாகக் கையில் போட்டார்கள். இந்தக் கோயிலுக்குப் பின்புறத்தில் திறந்த வெளியில் ஒரு பிள்ளையார் சிலை வைக்கப்பட்டள்ளது.

அங்கிருந்து கொஞ்சம் மேடான இடத்தில் இன்னொரு கற்கோயில். அதன் வாசலில்தான் கண்ணகி கோயில் என்று இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தது. (இந்தக் கோயிலுக் குச் செல்ல வரிசையில் நிற்கும்போது எங்களுக்கு முன்னாலிருந்த மலையாளி ஒருவரிடம் பேச்சுவாக்கில், 'நாங்கள் சென்னையிலிருந்து வருகிறோம்' என்றோம். உடனே அவர், 'உங்கள் ஊரில் இருந்த கண்ணகியைக் காணாமல் செய்துவிட்டு, இங்கே வந்து கண்ணகியைப் பார்க்கறீங்களா?' என்று கிண்டலாகக் கேட்டார். என்னஇருந்தாலும், தமிழ்நாட்டை விட்டுக் கொடுக்கக் கூடாதே என்று, 'காணாமல் செய்யவில்லை. பத்திரமாக அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக் கிறோம்' என்று சொல்லிவிட்டுப் பேச்சைத் திசை திருப்பினோம்) இந்தக் கோயிலுக்குள்ளும் ஒரே இருட்டு மயம்தான் என்றாலும், மஞ்சள் மற்றும் சந்தனத்தால் உருவம் கொடுக்கப்பட்ட மார்பளவு கண்ணகியைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. பூக்களாலும் அலங்கரித்திருந்தார்கள்.

உண்மையில் அந்த இடத்தில் கீழ்பாதி சிலைமட்டும்தான் இருந்திருக்கிறது. மேல் பாதியைக் காணவில்லை. அதனால் இவர்களாகவே உருவம் கொடுத்திருக்கிறார்கள்.

மற்ற தெய்வங்களுக்கான கோயில்களைப் போலவே இந்தக் கோயிலிலும் தேங்காய் உடைத்து பூ, பழம், வெற்றிலை, மஞ்சள் போன்றவற்றை வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காணிக்கையாகக் கொடுத்தார்கள். திருநீரும், துளசி போட்ட தேங்காய் தண்ணீரும் பிரசாதமாகக் கொடுத்தார்கள்.

இந்தக் கோயிலைவிடவும் சற்று மேடான இடத்தில் இன்னுமொரு கற்கோயில் உள்ளது. இதற்குள் கண்ணகியின் பாதம் மட்டும் தான் சிறிய வட்ட வடிவக் கல்லில் இருக்கிறது. இங்கிருந்து மதுரை மாநகருக்கு சுரங்கப்பாதை இருப்பதாக அங்கிருந்தவர் சொன்னார். இந்தக் கோயிலுக்கு வடக்கே ஒரு தோரண வாயில் இருக்கிறது. இதுவும் சிதிலம¨டைந்துதான் காணப்படுகிறது. இந்தக் கோட்டம் இருக்கும் எல்லைக்குள் அங்கங்கே நிறையபேர் அடுப்பு மூட்டி பொங்கல் வைத்து கண்ணகியை வழிபட்டார்கள். இந்த இடத்தில் கண்ணகியை 'மங்களா தேவி' என்றும் பெயரிட்டு அழைக்கிறார்கள். வருடத்தில் ஒரு நாள் கேரளாவிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் கூட்டம் கூட்டமாக மக்கள் இந்த இடத்தில் கூடுகிறார்கள்.

'கண்ணகி கற்புக்கரசி மட்டுமல்ல, தமிழ் இலக்கியங்களின் அடையாளமான சிலப்பதி காரத்தின் நாயகியென்பதால் ஒட்டுமொத்த தமிழர்களின் அடையாளச் சின்னம். அப்படிப்பட்டவர் இறுதிநிலை அடைந்த இடத்தின் வரலாற்றுச் சின்னங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. கூடவே தமிழக எல்லைக்குள்ளிருந்து கண்ணகிக்கோட்டம் செல்வதற்கான பாதையையும் அரசாங்கம் சீரமைத்துக் கொடுத்தால் இன்னும் நிறையபேர் இந்தக் கோட்டத்திற்கு வந்துசெல்ல வசதியாக இருக்கும்' என்பது அங்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலானவர்களின் பொதுவான கருத்து.

******
மேல்பாதி சிலையை, சிலைபற்றி ஆராய்ச்சி செய்ய, தான் எடுத்துச் சென்றதாகக் கரந்தைப் புலவர் சி.கோவிந்தராஜன் அவர்கள் 1971ல் ஆனந்த விகடனில் ஒரு கட்டுரையில் கூறியிருக்கிறார். ('தமிழ்த் தேசியம் இனி' நூலிலிருந்து)

******


தோரண வாயிலைக் கடந்து சென்றால் வடக்கு வாசல் பக்கத்தில் ஒரு சுனை இருக்கிறது. இது சிலப்பதிகாரம் குறிப்பிடும் சுனை போலவே இருக்கிறது. அங்கிருந்து கீழ்நோக்கி மலையில் இறங்கினால் ஒரு குளம் இருக்கிறது. அதற்குக் கல்லால் கரை கட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அது முற்றிலும் மண் மூடிக் கிடக்கிறது. கண்ணகி இறுதி நிலையை அடைந்த மலை முகடு யானையின் தலைப்பகுதி போன்று இருப்பதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இப்பொழுது பார்த்தாலும் அதே யானை முகம்தெரிகிறது.

'மங்கல மடந்தைக் கோட்டத்து ஆங்கண்
செங்கோட்டு உயர் வரைச் சேணுயர் சிலம்பில்
பிணிமுக நெடுங்கற் பிடர்தலை நிரம்பிய
அணியகம் பலவுல ஆங்கவை இடையது
கடிப்பகை நுண்கலும் கவரிதழ்க் குறுங்கலும்
இடிகலப்பு அன்னா இழைந்துகு நீரும்
உண்டோர் சுனை'

(சிலம்பு: வரந்தரு காதை)

பேரியாற்றங்கரை அருகில் உள்ள குன்றில் வேங்கை மரத்தின் கீழ் கண்ணகி நின்றதாக இளங்கோவடிகள் கூறுகிறார். பேரியாறு என்பது தான் இப்போது பெரியாறு என்று அழைக்கப்படுகிறது. கண்ணகிக் கோட்டத்தில் நின்று பார்த்தால் பெரியாறு ஏரி அழகாகக் காட்சி தருகிறது. கண்ணகிக் கோட்டத்தைச் சுற்றிலும் இன்றும் வேங்கை மரங்கள் நிற்கின்றன.

பெ. மணியரசன் எழுதிய 'தமிழ்த் தேசியம் இனி' என்ற நூலில் ''கண்ணகிக் கோட்டம் கண்டதும், கேட்டதும்'' கட்டுரையிலிருந்து.

கட்டுரை, படங்கள்: காந்திமதி செந்தமிழன்
More

என் அம்மாவுக்காக......
இதயத்திற்கும் ஒரு சாக்சு
நாவலும் தமிழ் சினிமாவும்
வாசகர் கடிதங்களும், தென்றல் தமிழ் நடையும்
உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் தெரியுமா?
மனமுருக்கும் தெய்வீகப் பாடல்கள்
புறமனிதன்
கீதா பென்னட் பக்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline