Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
பொது
தாலாட்டு பாடாத பாரதி
உண்மைச்சம்பவம் - நட்பு
கீதாபென்னெட் பக்கம்
கல்லாப்பெட்டி
இந்தியப் பங்குமார்க்கட்டில் சுறுசுறுப்பு - ஏராளமான வெளிநாட்டு முதலீடு
ரகுராம் ராஜன் - இந்தியாவுக்குப் பெருமை!
அபரிமிதமான டாலர்
வரலாறு ஒரு போதும் மன்னிக்காது
சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளித்திரை கண்ட வெட்டுக்கள்
"இந்தியா அழைக்கிறது!"
- மணி மு.மணிவண்ணன்|ஆகஸ்டு 2003|
Share:
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டாட் காம் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த போது சிலிக்கன் வேல்லி வேலைச் சந்தைகளில் தேர்த்திருவிழா போல் நெரிசலிருக்கும். கல்யாணச் சந்தையில் மாப்பிள்ளை, பெண் வீட்டாருடன் தரகர்களும், ஜோசியர்களும் சேர்ந்து பொருத்தம் பார்த்து ஜோடி சேர்ப்பது கூடச் சுலபம். ஆனால், நல்ல பொறியாளர்களைத் தேடி நிறுவனங்களும், நல்ல பங்குகள் வழங்கும் நிறுவனங்களைத் தேடிப் பொறியாளர்களும் வேலைச் சந்தைகளில் பொருத்தம் பார்த்து நேர்முகத் தேர்வு செய்வதற் குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆனால், சிலிக்கன் வேல்லி பொருளாதாரச் சரிவில் சறுக்கிக்கொண்டு பாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கும் போது, வேலைச் சந்தைகள் எல்லாம் பொய்யாய்ப் பழங்கனவாய் மறைந்து விட்டனவோ என்று தோன்றுகிறது.

அமெரிக்காவின் ஏனைய இடங்களில் பொருளாதார மந்தநிலை முடிந்திருக்கலாம். ஆனால், சிலிக்கன் வேல்லியில் வேலையில்லாதோர் குறியீடு 8.6%. பொறியாளர்களோ, வேலைதேடிச் சலித்து தேடுவதை நிறுத்தி விட்டவர்களையும் கணக்கில் கொண்டால், வேலையில்லாதவர் குறியீடு 25% ஐயும் தாண்டிவிடும் என்கிறார்கள். நிறுவனங்களின் வலைத்தளத்தில் அறிவிக்கப்படும் ஒவ்வொரு வேலைக்கும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வருகின்றனவாம். இந்த நிலையில், வேலைச் சந்தையில் போய் நல்ல பொறியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் தேவை நிறுவனங்களுக்கு இல்லை. அது மட்டுமல்லாமல், மைக்ரோசா·ப்ட், ஓரக்கிள், சன் மைக்ரோ சிஸ்டம்ஸ், ஐ.பி.எம். போன்ற பெரு நிறுவனங்களும் புதிய வேலைகளைத் தங்கள் இந்திய மையத்தில் உருவாக்குவதையே விரும்புகின்றன. இந்த நிலையில் "சிலிக்கன் இந்தியா" இதழ், சிலிக்கன் வேல்லியின் இதயமான சாண்டா கிளாராவில் வேலைச் சந்தை நடத்துகிறது என்ற செய்தி, விளம்பரங்கள் அவ்வளவு இல்லாமலேயே வேகமாகப் பரவியது. ஆனால், இது ஒரு வித்தியாசமான வேலைச் சந்தை. வழக்கமாக, இந்தச் சந்தைகளில் அமெரிக்க வேலைகளைத் தேடி இந்தியாவிலிருந்து H1-B விசாவில் வந்திருக்கும் பொறியாளர்களைத் தான் பார்க்க முடியும். ஆனால், இந்தச் சந்தையிலோ, சத்தியம், விப்ரோ, எச்.சி.எல். போன்ற இந்திய நிறுவனங்களும், இண்டெல், ஓரக்கிள், மைக்ரோசா·ப்ட், அடோபி, நெட்வொர்க் அசோசியேட்ஸ் போன்ற பெரும் அமெரிக்க நிறுவனங்களும் இந்திய வேலைகளுக்கு அமெரிக்காவில் ஆள் தேடிக் கொண்டிருந்தார்கள்.

முன்பதிவு அனுமதிச்சீட்டு ($17) விற்றுப் போகவே, ஜூலை 17, சந்தை நாளன்று சாண்டா கிளாரா ஹில்டனில் $50 கொடுத்துப் பலர் அனுமதிச் சீட்டு வாங்கினார்கள். 1000 பேருக்கு மேல் கூடிய இந்தச் சந்தை பி.பி.சி. போன்ற செய்தி நிறுவனங்களின் கவனத்தையும் ஈர்த்தது. சந்தைக்கு வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்றாலும், ஒரு சில இந்தியரல்லாதவர்களும் இந்திய வேலைகளை நாடி வந்திருந்தனர். சந்தைக்கு வந்த ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கரை, ஒரு நிறுவனத் தேர்வாளர் இந்தியாவின் மொழிகள், பண்பாடு, உணவுப் பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டி, இந்தியச் சம்பளம் அமெரிக்க வாழ்க்கைத் தரத்துக்கு ஒவ்வாது என்றும் எடுத்துக் கூறி மறுத்துப் பார்த்தார். ஆனால், வந்தவரோ விடுவதாயில்லை. இந்தியாவில் வாழ வேண்டும் என்ற நெடுநாள் கனவு தனக்கு உண்டு என்று வாதாடி, வேலைக்கு விண்ணப்பித்தார்.

இப்படி ஒரு சில பிற நாட்டவர்கள் இருந்தாலும், வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் இந்தியக் குடிமக்கள். பச்சை அட்டை (நிரந்தரத் தங்கல் நுழைமதி - permanent resident visa) வைத்திருந்தாலும், பல மாதங்களாக வேலை தேடிச் சலித்துப் போனவர்கள், H1-B விசா வைத்திருந்தாலும், பச்சை அட்டை கிடைப்பது சந்தேகம் என்ற நிலையில் இருப்பவர்கள், அமெரிக்க அனுபவத்தை வைத்து இந்தியாவில் உயர் பதவியைத் தேடி வந்தவர்கள், குடும்ப விருப்பங்களுக்காகத் தற்காலிகமாக இந்தியா செல்ல விரும்புபவர்கள் என்று வெவ்வேறு காரணங்களுக்காக இந்தச் சந்தைக்கு வந்திருந்தார்கள். நிறுவனங்களும் பொதுவாகத் தற்போது வேலையில்லாமல் இருப்பவர்களே வேடிக்கை பார்க்க வராமல், உண்மையிலேயே இந்திய வேலையைத் தேடி வந்தவர்கள் என்று கருதினார்கள்.
பெரும்பாலான வேலைகள் தொழில் நுட்பக் குழுத்தலைவர், மேலாளர் நிலைகளில் இருந்தாலும் ஒரு சில நிறுவன இயக்குநர், துணைத்தலைவர் வேலைகளும் இருந்தன. பல வேலைகளுக்கு அடிக்கடி உலகச் சுற்றுப்பயணம் செய்யத் தேவை இருக்கும். பல வேலைகள் பெங்களூர், சென்னை நகரங்களில் இருந்தாலும், புனேயும், ஹைதராபாதும் தங்கள் நகரங்களில் வேலை செய்வதன் ஆதாயங்களைப் பற்றி எடுத்துச் சொன்னார்கள்.

புதிதாகத் தொடங்கிய பல சிறு நிறுவனங்களும் அமெரிக்க அனுபவமுள்ள பொறியாளர்களைத் தேடி வந்திருந்தனர். சம்பளம் குறைவாயிருந்தாலும், பங்குகள் கூடுதலாகக் கொடுக்கத் தயாராய் இருந்தார்கள். இப்போது டாட் காம் எதிரொலி இந்தியாவிலிருந்து வருகிறதோ!

(செய்தி உதவி: மோகன், சுரேஷ்)

மணி மு. மணிவண்ணன்
More

தாலாட்டு பாடாத பாரதி
உண்மைச்சம்பவம் - நட்பு
கீதாபென்னெட் பக்கம்
கல்லாப்பெட்டி
இந்தியப் பங்குமார்க்கட்டில் சுறுசுறுப்பு - ஏராளமான வெளிநாட்டு முதலீடு
ரகுராம் ராஜன் - இந்தியாவுக்குப் பெருமை!
அபரிமிதமான டாலர்
வரலாறு ஒரு போதும் மன்னிக்காது
சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளித்திரை கண்ட வெட்டுக்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline