Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2003 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
பொது
எனக்குப் பிடிச்ச ஊரு
இந்திய இலக்கிய மாநாட்டுக் குறிப்புகள்
- காஞ்சனா தாமோதரன்|நவம்பர் 2003|
Share:
மன்ஹாட்டன், நியூயார்க். செப்டெம்பர் 25, 26, 27. "இந்திய இலக்கியம்: மரபும் நவீனத்துவமும் அப்பாலும்." ஜெயப்பிரகாஷ் நாராயணின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக, அமெரிக்க பாரதீய வித்யா பவனும் இந்திய சாகித்திய அகாதெமியும் இலக்கிய மாநாடு ஒன்றை இணைந்து நடத்தின.

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்துக்காக நியூயார்க் வந்திருந்த இந்தியப் பிரதமர் வாஜ்பாய் இலக்கிய மாநாட்டைத் துவக்கி வைத்தார். இந்தியப் பிரதமர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, முன்னாள் அமெரிக்கத் தூதரும் அமெரிக்கப் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத் தலைவருமான கோஹன், ஹெச்.எஸ்.பி.சி. வங்கித் தலைவரான யூசு·ப் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

சாகித்திய அகாதெமித் தலைவரும் உருதுப் பண்டிதருமான கோபிசந்த் நாரங்கின் தலைமையில் கவியரங்கம் தொடர்ந்தது. கே.சச்சிதானந்தன் (மலையாளம்), வைதேகி (கன்னடம்), குல்ஸார் (ஹிந்தி-உருது), ஜெயப்ரபா (தெலுங்கு), பஷீர் பாதர் (உருது), பத்மா சச்தேவ் (டோக்ரி), வாஜ்பாய் (ஹிந்தி), வைரமுத்து (தமிழ்) முதலானோர் கவிதைகள் வாசித்தனர்; ஆங்கில மொழியாக்கத்தை நான் வாசித்தேன். தனது கவிதைகளின் ஆங்கில மொழியாக்கப் புத்தகத்தைப் பிரதமருக்கு வழங்கினார் வைரமுத்து. முன்னாள் இந்தியப் பிரதமரும் எழுத்தாளருமான பி.வி.நரசிம்ம ராவ் பார்வையாளராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பார்வையாளர்களில் பெரும்பகுதியினர் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், அல்லது ஹிந்தி அறிந்தவர்கள். தென்னிந்தியர்கள் மிக மிகக் குறைவு. என் ஆங்கிலக் கவிதை வாசிப்பை ரசித்ததாய்ச் சொன்ன வட இந்தியப் பெண்கள் கூட்டம் இதையும் சொல்லிப் போயிற்று: "சமஸ்கிருதம் கலந்த பிற மொழிகளைக் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் தாய்மொழியைப் புரிந்து கொள்ள இயலவில்லை. உங்கள் மொழிக் கவிஞரின் வாசிப்புத் தீவிரம் புரிந்தது."

தமிழக ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பின்னான பாடத்திட்டத்துடன் வளர்ந்த எனக்குத் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே நன்றாகத் தெரியும். ஆனாலும், அறியாத பிற மொழிக் கவிதைகளின் உணர்வுச் சாரம் ஓரளவு என்னை வந்து சேர்ந்தது உண்மை. ஆழ்ந்து அனுபவித்து வாசிக்கப்படும் கவிதையின் இயல்பான வலிமை இதுதான் போலும்.

இரண்டாம் நாள், 'இந்திய இலக்கியம்: ஒற்றுமை, வேறுபாடு, சரித்திரம்' என்ற பொது அமர்வுடன் துவங்கியது. நிர்மல் வர்மா (ஹிந்தி), கம்லேஷ்வர் (ஹிந்தி), நிர்மல் பட்டாச்சார்ஜி (பெங்காலி), சுத்திந்தர் சிங் நூர் (பஞ்சாபி), பிரத்தீபா ரே (ஒரியா), மனோஹர் ஷ்யாம் ஜோஷி (ஹிந்தி), குன்வந்த் ஷா (குஜராத்தி), ஆர்.பாலச்சந்திரன் (தமிழ்), கே.சச்சிதானந்தன் (மலையாளம்) முதலியோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து தமிழ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் தனி அமர்வுகள் நடந்தன. அன்றிரவு, குஜராத்தி-மராத்திக் கவியரங்கங்கள் நடைபெற்றன.

மூன்றாம் நாளும், 'இந்திய இலக்கியம்: ஒற்றுமை, வேறுபாடு, சரித்திரம்' என்ற பொது அமர்வு தொடர்ந்தது. ஷஷி தரூர் (அமெரிக்கவாழ் மலையாள ஆங்கில எழுத்தாளர்), சந்திரசேகர் கம்பார் (கன்னடம்), இந்திரா கோஸ்வாமி (அஸ்ஸாமிய மொழி), எம்.டி.வாசுதேவன் நாயர் (மலையாளம்) முதலியோர் கலந்து கொண்டனர். ஹிந்தி, ஒரியா, அஸ்ஸாமிய மொழி, சிந்தி, தெலுங்கு, மராத்தி, மலையாளம், உருது முதலிய மொழிகளுக்கான தனி அமர்வுகள் தொடர்ந்தன.

கே.சச்சிதானந்தனின் நன்றியுரைக்குப் பின்னான கவியரங்கத்துடன் மாநாடு நிறைவுற்றது.
ஆங்கிலத்தில் நடந்த ஒரு பொது அமர்வில், ஒன்றிரண்டு எழுத்தாளர்கள் ஹிந்தியே 'ராஷ்ட்ர பாஷா' என்று பிரகடனம் செய்து, ஆங்கிலம் அறிந்தும் ஹிந்தியிலேயே முழுக்கப் பேசவும், அமர்வின் மட்டுறுத்துனர் முதிர்ந்த அவை நாகரீகத்துடன் அவர்களது பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டியிருந்தது. இந்தியாவின் பன்மை, பன்மொழி, பன்முகக் கலாச்சாரம், பன்மொழி இலக்கியம் ஆகியவற்றைக் கொண்டாடிய மாநாட்டில், இந்த மொழி அடிப்படைவாத நடப்பு சிறிது நெருடிற்று.

இரண்டாம் நாள் நடந்த தமிழ் அமர்வில் பாலாவும் வைரமுத்துவும் சிறப்புப் பேச்சாளர்கள். மிச்சிகன் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ராம் மகாலிங்கம், கணிஞர்கள் பி.கே.சிவகுமார், சாமினாதன், கற்பகம், ஷரத் கார்த்திக் பாலச்சந்திரன், தொழிலதிபர் பரசுராம், மருத்துவர் பஞ்சாட்சரம் (நியூயார்க் தமிழ் மையத் திட்டக்காரர்), கலி·போர்னியா இந்தியா வெஸ்ட் இதழாளர் குளோரியா, நியூயார்க் திராவிடன் தொலைக்காட்சியின் லக்ஷ்மி சுபா முதலானோர் பார்வையாளர் குழுவில் அடக்கம்.

தற்காலத் தமிழிலக்கியம் வளமான திசையில் பயணிப்பதாய்ச் சொன்னார் வைரமுத்து. காவியகாலம் போல் அல்லாமல், 'எதிர்நாயகனை' (anti-hero) மையமாக்கும் நவீன இலக்கியப் போக்கு பற்றிக் குறிப்பிட்டார். உலகமயமாதல் என்பது மொழி, கலாச்சாரம் இரண்டையும் விழுங்க ஆரம்பித்திருப்பதாய்க் கவலை தெரிவித்தார். தமிழின் எழுத்துரு/லிபி மாறக்கூடுமோ என்ற கேள்வியை எழுப்பி, இப்போதே சென்னையில் தமிழை ஆங்கிலத்தில் எழுதும் போக்கு வந்திருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

நிகழ்கால இலக்கியத்தை அக்காலத்தியத் தொழில்நுட்பம் உள்படப் பல சக்திகள் தீர்மானிக்கின்றன என்றார் ஆர்.பாலச்சந்திரன்; திரைக்கவிதைகளை அந்த ஊடகத்தின் தன்மை தீர்மானிப்பதை உதாரணமாகக் காட்டினார். தன் காலத்துக்கான இலக்கியத்தையும் எழுத்தாளர்களையும் சமூகம் தானாகவே தேர்ந்தெடுக்கிறது என்றார்.

நேரமின்மையால், விவாதங்களை மிகச் சுருக்கமாக முடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. கேட்கப்பட வேண்டிய பல கேள்விகளும் கேட்கப்படாமல் போயின.

மலையாளக் கவிஞரும் இந்திய சாகித்திய அகாதமிச் செயலருமான பேரா. கே.சச்சிதானந்தன், தமிழ்க் கவிஞரும் தமிழகச் சாகித்திய அகாதமி ஒருங்கிணைப்பாளருமான பேரா. ஆர்.பாலச்சந்திரன் ஆகியோருடன் உரையாடிப் பதிவு செய்யக் கொஞ்சம் நேரம் கிடைத்தது. தன் தம்பியைச் சில நாட்களுக்கு முன்புதான் இழந்து, "இவ்வுலகில் நான் கண்ட யாரும் இனி என் முன்னால் போக வேண்டாம்" என்று வேதனைப்பட்ட கவிஞர் வைரமுத்துவுக்கு மூச்சு விட இடமளிப்பதே மரியாதையெனத் தோன்றியதால், அவருடன் அதிகம் பேசவில்லை.

பல முக்கிய இந்திய எழுத்தாளர்கள் கவிஞர்கள் பலரையும் ஒரே இடத்தில் இப்படிச் சந்திப்பது-அதுவும் இந்த அயல்மண்ணில் சந்திப்பது-ஒரு கற்றல் அனுபவமாய்த் தெரிந்தது உண்மை. பிறமொழி எழுத்தைத் தமிழ் அல்லது ஆங்கில மொழிபெயர்ப்பில் வாசித்திருந்ததால், அல்லது திரைப்படம் போன்ற வெகுஜன ஊடகங்கள் மூலம் பரிச்சயமானதால், எம்.டி.வாசுதேவன் நாயர், கே.சச்சிதானந்தன், குல்ஸார், கமலேஷ்வர் போன்றோருடன் (ஓரளவேனும்) அர்த்தமுள்ள உரையாடல்கள் சாத்தியமாயின. முறையான அமர்வுகளுக்கு வெளியே, உணவு வேளைகளிலும் பிற இடங்களிலும் பல எழுத்தாளர்களையும் சந்தித்து, மொழி வித்தியாசங்களைக் கடந்த சமூக-இலக்கியப் பார்வைகளைப் பகிர்ந்து கொண்டது உற்சாகமாயிருந்தது.

எங்களையும் சேர்த்து இரண்டே இரண்டு தமிழ்க்குடும்பங்கள், மற்றும் சில இந்தியக் குடும்பங்கள் என்றிருக்கும் சூழலில் நீண்ட காலமாய் வாழும் எனக்கு, இத்தகைய இலக்கியச் சந்திப்புகளின் முக்கியத்துவமும் உற்சாகமும் பன்மடங்கு கூடித் தெரிவதில் ஆச்சரியமே இல்லை.

கட்டுரை, புகைப்படங்கள்: காஞ்சனா தாமோதரன்
More

எனக்குப் பிடிச்ச ஊரு
Share: 




© Copyright 2020 Tamilonline