Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா? புரியுமா? | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சின்சினாட்டி இந்து சங்க நடனப் போட்டிகள்
அபிநயாவின் நாட்டிய அரங்கேற்றம்
மஹீதா பரத்வாஜ் நடன அரங்கேற்றம்
குழந்தைகள் நலநிதிக்கு ஹரிப்ரசாத் சவுராசியா கச்சேரி
மிச்சிகனில் 'கஜமுகா'
மிச்சிகன் பராசக்தி கோவிலில் அஷ்டலக்ஷ்மி பிரதிஷ்டை
அட்லாண்டாவில் சுருதிலயாவின் இசைநிகழ்ச்சி
'பரம்பரா' - குருவுக்கு அஞ்சலி
இலக்கியச் செல்வருடன் ஒரு கலந்துரையாடல்
எழுத்தாளர் பயிற்சிப் பட்டறை
- ச. திருமலைராஜன்|நவம்பர் 2004|
Share:
Click Here Enlargeசான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம், கடந்த ஆகஸ்ட் 22 அன்று தமிழில் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான திரு பிரபஞ்சனுடன் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FETNA) மாநாட்டுக்காக அமெரிக்கா வந்திருந்த எழுத்தாளர் பிரபஞ்சன், சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரான அகில இந்திய வானொலி நிலையத்தை சேர்ந்த திரு. ஆவுடையப்பன் இருவரையும், வளைகுடாப்பகுதி மக்களின் இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவதற்காக தமிழ் மன்றம் அழைத்திருந்தது. சனிக்கிழமை காலை 10-2 மணி வரை, பிரபஞ்சன் ஓர் எழுத்தாளர் பயிற்சிப் பட்டறையை மன்றத்தலைவரும், தென்றல் ஆசிரியருமான மணி மு. மணிவண்ணன் இல்லத்தில் வைத்து நடத்தினார். மாலை 5.30-8.30 வரை ஒரு சிறப்புக் கூட்டத்திற்கும் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.

காலை 10 மணிக்கு எழுத்துப் பட்டறை துவங்கியது. அதைப் பட்டறை என்பதை விட, எழுத்தாளருடன் கலந்துரையாடல் என்ற வகையில் சேர்க்கலாம் அல்லது 'சிறுகதை - தோற்றமும் வளர்ச்சியும்' என்பது குறித்தான ஒரு விரிவான அலசல் என்று வைத்துக் கொள்ளலாம். எங்கும் புத்தகங்களால் சூழப்பட்ட மணிவண்ணன் வீட்டு வரவேற்பறையில் பத்து எழுத்தார்வமுள்ள விரிகுடாப் பகுதி தமிழ் ஆர்வலர்களும், வாசகர்களும் கூடியிருந்தனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழும் ஒரு பகுதியில், தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவருடன் கலந்துரையாடல் என்று தென்றல்.காம் வலை வானொலியிலும், தென்றல் பத்திரிகையிலும் அறிவிக்கப்பட்டபின்பு, ஆர்வத்துடன் கலந்து கொள்ள வந்தவர்கள் ஒரு 11 பேர். கலந்து கொண்டவர்கள் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டனர். பாண்டிச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளரின் இயற்பெயர் வைத்தியலிங்கம். கரந்தை தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப்புலவர் பட்டம் பெற்றவர். தமிழ் நாட்டின் பிரபல வணிகப் பத்திரிகைகளான குமுதம், விகடன், குங்குமம் போன்றவற்றில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர். தமிழில் குறிப்பிடத் தக்க பல நாவல்களை எழுதி, சாகித்ய அகடமி பரிசையும் வெண்றவர். தன்னைப் பற்றிய இந்த சிறு அறிமுகத்துக்குப் பின் தனது அனுபவங்களைக் கலந்து கொண்டோருடன் பகிர்ந்து கொள்ளத் துவங்கினார் பிரபஞ்சன்.

சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் என்பதில் ஆரம்பித்தார். பாட்டி சொன்ன 'ஒரு ஊரில் ஒரு நரி, அதோட கதை சரி' என்ற ஒரு வாக்கியக் கதையிலிருந்து தொடங்கினார். இங்கே நரி என்று சொல்லி விட்டுக் கதை முடிந்து விட்டாலும், அந்த நரி என்ற வார்த்தை, நம்முள் ஏற்படுத்தும் உணர்வுகள் என்ன? அதன் மூலம் எழும் கேள்விகள் என்ன? அது கிளறும் அனுபவங்கள் என்ன? அது போலவே, ஒரு சிறுகதையும் ஒரு குறீயீடாக ஆரம்பித்து, நமது உணர்வுகளையும், சிந்தனைகளையும் தூண்டுவனவாய் அமைய வேண்டும் என்ற சிறுகதைக் குறித்தான தெளிவான கண்ணோட்டத்துடன் தன் பேச்சைத் துவங்கினார். பின், மற்றுமொரு செக் நாட்டுக்கதையையும் கூறினார். தலையில்லாத சிறுவனுடன் விளையாட விரும்பாத இளவரசியில் ஆரம்பிக்கும் ஒரு கதை. இந்த அறிமுகங்களுக்குப் பிறகு, சிறுகதையின் தோற்றம் பற்றி கூறினார். எப்படி செவிவழிக் கதைகளான ஈசாப் கதைகளும், பஞ்சதந்திரக் கதைகளும் காலம் காலமாய் செவி வழியாகப் பரப்பப்பட்டு வந்தன என்று கூறினார்.

தொடர்ந்து மாப்பாசான், செக்காவ் எனும் சிறுகதை மூலப் பள்ளிகளைப் பற்றிக் கூறினார். மாப்பாசான் கதைகள் எவ்வாறு சூழ்நிலைகளையும், செயல்களையும் விவரித்து, புறவயக் கதைகளாக எழுதப்பட்டன என்பதை 'விபச்சாரி' எனும் சிறுகதையை விவரிப்பதன் மூலம் கூறினார். அந்தச் சிறுகதையைப் பற்றி சொல்லிக் கொண்டே வரும்பொழுதே, ஒரு சில பயனுள்ள குறிப்புகளையும் வழங்கத் தவறவில்லை. உதாரணமாக, அந்தக் கதையில் மாலை நேரத்தை, 'சீமான்கள் ஒயின் போத்தலை திறக்கும் நேரம்' என்று எழுதியிருக்கிறார், அதையே மாலை சரியாக 6 மணி அடித்தது என்று எழுதுவது எப்படி அமெச்சூர்தனமாக இருக்கும் என்று விளக்கினார். அது போல் எங்களை, காலை 8.30 மணி என்பதை எவ்வாறு ஒரு சிறுகதையில் கொணர்வீர்கள் என்றும் வினவி எங்களது கற்பனா சக்தியைத் தூண்டினார். அந்த சிறுகதை முடிவில் விபச்சாரி என்பவள் யார் எனும் கேள்வியை எழுப்புவதுடன் முடிகிறது. சிறுகதை என்பது எவ்வாறு நீதி போதனைக் கதைகளிலிருந்து, சமுதாயப் பிரச்சினைகளையும், மெல்லிய மன உணர்வுகளையும், அக உணர்வுப் போராட்டங்களையும் தொட ஆரம்பித்து பரிணாம வளர்ச்சி பெற்றது என்பதை விவரித்தார். சிறுகதை வரலாற்றை விளக்கிக் கொண்டே வரும் பொழுது, கலந்து கொண்டோர்களிடம் சில கேள்விகளை எழுப்பி, சிந்திக்கவும் தூண்டினார்.

பின்பு செக்காவின் கதைகள் எவ்வாறு மனத்தின் மென்மையான உணர்வுகளைத் தூண்டுவவையாய், அகவயக் கதைகளாக அமைந்தன என்பதை மற்றொரு சிறுகதையின் மூலம் விளக்கினார். இந்தக் கதையில் அளித்த குறிப்பு, சிறுகதையில் வரும் வர்ணணையைக் கதையில் ஏதாவதொரு இடத்தில் பயன்படுத்தி விட வேண்டும் என்பது. சிறுகதையின் ஆரம்பத்தில் துப்பாக்கி பற்றிய ஒரு வர்ணனை வந்தால், கதை முடிவதற்குள் அது வெடித்து விட வேண்டும் என்பது செக்காவின் கொள்கை என்றார். தும்மலுடன் தொடங்கும் ஒரு சிறுகதை புன்னகையை வரவழைப்பதாக இருந்தாலும், முடிவில் அதிர்ச்சியைத் தருகிறது, நகையுணர்வு சோகத்துடன் இழைந்து விடுகிறது. தன் உயர் அதிகாரி மேல் நாடகம் பார்க்கும் பொழுது தற்செயலாக தும்ம நேர்ந்து விட்ட ஒரு குமாஸ்தாவின் மனப் போராட்டம் எவ்வாறு அவன் மரணத்தில் முடிகிறது என்பதைச் சொல்லும் அந்தச் சிறுகதையின் தலைப்பு "ஒரு குமாஸ்தாவின் மரணம்". அது எழுப்பும் கேள்விகள் பல. அந்தக் கதை நடந்த காலத்தின் சமூக, அரசியல் சூழ்நிலையைச் சொல்லாமல் சொல்கிறது. எல்லாமே பூடகமாக உணர்த்தப்படுகிறது. அந்த சிறுகதை எவ்வாறு ரஷ்யா முழுவதும் பேசப்பட்டு, அக்டோபர் புரட்சிக்கு வித்திட்ட 18 கதைகளில் ஒன்றாக இருந்தது என்பதை, மெல்லிய நகைச்சுவையுடனும், அந்தக் கதை எழுப்பும் கேள்விகள், மன உணர்வுகள் என்ன என்பதையும் விளக்கி முடித்தார். ஒரு நல்ல சிறுகதை என்பது படித்து முடித்த பின் வாசகனிடம் பல்வேறு கேள்விகளை எழுப்ப வேண்டும், அவனது சிந்தனையைத் தூண்ட வேண்டும் என்பதை பல எடுத்துக் காட்டுக்களுடன் விளக்கினார்.

இவர்கள் இருவர் வழியிலும் வந்த பிற எழுத்தாளர்களான டால்ஸ்டாய், தாஸ்த் தாவ்ஸ்க்கி போன்றவர்களின் கதைகளைப் பற்றிப் பேசினார். ஒரு சிறிய இடைவேளைக்குப் பின், வரலாறு இந்தியாவுக்குத் திரும்பியது. எவ்வாறு வங்காள எழுத்தாளர்கள் தங்களது F.A படிப்பின்போது, ஆங்கில துணைப்பாடங்களில் ( N o n - D e t a i l ) ஐரோப்பிய சிறுகதைகளைப் படிக்க நேரிட்டதன் பயனாய், வங்காள மொழியில் சிறுகதை எழுத ஆரம்பித்தனர் என்பதில் தொடங்கி, இந்தியச் சிறுகதைகளின் வரலாற்றை சுவை பட விளக்கினார். ஆங்கிலச் சிறுகதைகள் ஏற்படுத்திய தாக்கத்தில், இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்ற வ வே சு ஐயருக்கும், பிறருக்கும் சிறுகதை எழுதும் ஆர்வம் தோன்றியிருக்கிறது, ஆரம்ப காலச் சிறுகதைகள் வெள்ளையனை எதிர்க்கும் குறிக்கோளுடனே இருந்திருக்கிறன. தமிழின் முதல் சிறுகதையாகக் கருதப்படும் 'குளத்தங்கரை அரசமரம்' பற்றியும், அது தோற்றுவித்த சமூக கலாச்சார அதிர்வலைகள் பற்றியும் அந்தக் கதையைக் கூறி விளக்கினார். வ வே சு ஐயருக்குப் பின் கு ப ராவின் கதையொன்றினை எடுத்து, அதன் நடை, அதன் கட்டுமானம், அது எழுப்பும் உணர்வுகள், அதன் முடிவு எழுப்பும் கேள்விகள் என்று ஒரு சிறுகதையின் அனாடமியைச் மிக
எளிமையாகப் புரியும் விதத்தில் ஒரு அனுபவம் வாய்ந்த கல்லூரிப் பேராசிரியரின் இலாவகத்துடன் விளக்கினார் பிரபஞ்சன். சிறுகதையின் நுட்பங்களை எங்களிடம் கேள்விகள் கேட்டே புரிய வைத்தார். கு ப ராவுக்குப் பிறகு மணிக்கொடி காலத்தைக் கோடிட்டு விட்டு,
புதுமைப்பித்தனுக்குள் நுழைந்தார்.

புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுதியிலிருந்து, மிஷின் யுகம் என்ற 1 1/2 பக்கச் சிறுகதையைப் முதலில் படிக்கச் சொன்னார். பின் ஏன் அந்தச் சிறுகதை அவருக்குப் பிடித்த சிறுகதை, ஏன் அது சிறப்பான ஒன்று என அலசினார். பரபரப்பான சூழ்நிலையில் ஒரு இயந்திரம் போல் இயங்கும் ஒரு ஹோட்டல் சர்வரிடம் தென்படும் நுட்பமான மனித உணர்வுகளை, ஒரு வரியில் விளக்கும் சிறுகதை அது. இயந்திரம் போல் இயங்கும் ஒரு மனிதனிடம் ஒரு நொடியில் தோன்றும் மனித நேயம், அதை அவதானிக்கும் கதாசிரியரின் பாங்கு, அதைச் சொல்லும் விதம் எல்லாவற்றையும், பிரபஞ்சன் ஆர்வம் குறையாத கண்களுடன் ஒன்றிப்போய் விவரித்த விதத்திலேயே, புதுமைப்பித்தன் அவரை எவ்வளவு தூரம் ஈர்த்திருக்கிறார் என்பதை விளக்கியது. புதுமைபித்தன் காலத்திலிருந்து கிளம்பி, ஜானகிராமனிடம் நீண்ட நேரம் நின்றார். ஜானகிராமனைப் பற்றி தொடர்ந்து பேச விட்டிருந்தால் இன்று முழுவதும் பேசிக்
கொண்டிருந்திருப்பார். ஜானகிராமனில் எங்களுக்கு விளக்குவதற்காக தேர்வு செய்திருந்த கதைகள் 'செண்பகப் பூவும்', தாசியிடம் அவமானப்படும் பாகவதரின் கதையும். ஜானகிராமன், கு ப ரா, MVV போன்றவர்களுடன் தனக்கு உள்ள நேரடி அனுபவங்களையும், மோகமுள் பாத்திரங்களின் நிஜமான மனிதர்கள் யாரென்பது பற்றியும் கூறும்பொழுது கும்பகோணத்துக்கே சென்று விட்டார் பிரபஞ்சன். ஜானகிராமன்தான் தனது குரு என்பதையும் அவரது கதையின் தாக்கம் தன்னுள் இருந்ததையும் குறிப்பிட்டார். தமிழ்ச் சிறுகதை உலகின் ஜாம்பவான்கள் பலரையும் குறிப்பிட்டு அவர்களின் எழுத்து நடை, கதை சொல்லும் பாங்கு போன்றவற்றை வேறுபடுத்தி, தமிழ்ச் சிறுகதை உலகில் அவர்களது இடங்களை காட்டினார்.
Click Here Enlargeஜானகிராமன் சற்று நீண்டு, மோகமுள் சினிமாவின் தரம் குறித்தும், பாரதி சினிமாவின் தரம் குறித்தும் நீண்டு, பின் பாரதியிலிருந்து பாப்லா நெருடாவின் லா போஸ்ட்மான் படத்திற்கும் சென்று, தென்னமெரிக்க எழுத்தாளர்களிடம் போய் நின்றது. ஜானகிராமனைத் தாண்டி தமிழ்
இலக்கிய உலகில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய எழுத்தாளர்களான ஜி. நாகராஜன், செல்லப்பா, ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, அழகிரிசாமி, மௌனி, ல ச ரா போன்றோரின் படைப்புகளைக் குறிப்பிட்டு அவை எந்த பாணி எழுத்துக்களில் வருகிறது என்பதையும் விளக்கினார். நவீன இலக்கிய உலகில் தங்கள் முத்திரைகளைப் பதித்து வரும் தற்கால எழுத்தாளர் களான எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், பூமணி போன்றோரின் படைப்பு
களையும் அறிமுகப் படுத்தினார். இவ்வாறு தொடர்ந்த பிரபஞ்சனின் உரையானது, தமிழ்த் திரைப் படங்களில் எழுத்தாளர் மற்றும் நாவல்களின் பங்குகள் குறித்தும், தமிழ் நாவல்கள் திரைப்படங்களாக மாற்றப்படும் பொழுது சிதைக்கப்படுவது குறித்தும், தமிழ் இலக்கிய உலகில் வணிகப் பத்திரிகை மற்றும் சிறு பத்திரிகைகளின் பங்கு, இலக்கியவாதிகளிடையே நிகழும் போட்டி, பொறாமைகள் போன்ற அனைத்துப் பகுதிகளையும் தொட்டு விட்டு நேர
மின்மையின் காரணமாக முடித்துக் கொண்டார். அதன் பின் கலந்து கொண்டவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இது ஒரு முழுமையான பட்டறையாக அமைந்து, ஆர்வமுள்ள வாசகர்களுக்கு எழுத்துப் பயிற்சி அளிக்க வேண்டுமானால் அதற்கு குறைந்தது ஒரு வார காலமாவது வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார். இருப்பினும், குறைந்த நேரத்திற்குள்ளேயே சிறுகதை உலகத்தைப் பற்றிய ஒரு விரிவான வரலாற்றை அளித்து அன்றைய காலைப் பொழுதைக் கலந்து கொண்டவர்களுக்கு ஒரு இனிய நினைவாக விட்டுச் சென்றார். இந்தக் கலந்துரையாடலின் மூலம் தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரது அனுபவங்களை நேரடியாக அறிந்து கொள்ள முடிந்த ஒரு பயனுள்ள நேருக்கு நேர் நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.

அன்றைய பொழுது மாலை 5.30 மணிக்கு மில்பிடாஸ் நூலகத்தில், தமிழ் மன்றத்தின் 25 ஆண்டு விழா சிறப்புக் கூட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் பிரபஞ்சன், ஆவுடையப்பன் இருவரும் உரை நிகழ்த்தினர். வளைகுடாப் பகுதி எழுத்தாளர் கோகுலக்கண்ணன் பிரபஞ்சனைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம் கொடுத்தார். அதன் பின் தமிழ் இலக்கியத்தில் புனைவுகள் குறித்து ஒரு சிறிய உரை நிகழ்த்தினார் பிரபஞ்சன். ஆவுடையப்பனைக் குறித்து மணிவண்ணனின் அறிமுகத்துக்குப் பிறகு சுமார் ஒரு மணி நேரம், கலந்து கொண்டவர்களை தங்கள் கவலைகள் யாவற்றையும் மறந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் ஆவுடையப்பன். 'வேடிக்கை மனிதர்கள்' என்னும் தலைப்பில் மணி, ஆவுடையப்பனைப் பேச அழைத்திருந்தாலும், அவர் தன் பேச்சில் ஒரு சங்கப் பாடலை எடுத்துக் கொண்டு, தன் மதுரைத்தமிழில் பார்வையாளர்களைத் தன் நகைச்சுவைப் பேச்சில் கட்டிப் போட்டு விட்டார். தன் தலை முடி ஏன் இன்னும் நரையாதிருக்கிறது என்ற கருத்துள்ள ஒரு பாடல் அது. எக்காலத்துக்கும் பொருந்தும் வண்ணம் அந்தச் சங்கப் பாடல் அமைந்திருந்தது. அவர் பேச்சில் விழுந்த ஒரு நகைச்சுவை முத்து ' இங்க அமெரிக்காவில் நீங்களெல்லாம் சீரியலைச் சாப்பிட்டு விட்டு தின வாழ்க்கையைத் தொடங்குகிறீர்கள், ஆனால் தமிழகத்திலோ சீரியலைப் பார்த்துக் கொண்டு தின வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள்'. அன்றைய மாலை நேரக் கூட்டத்திற்கு, தமிழின் நவீன இலக்கிய உலகின் போற்றுதலுக்குரிய மூத்த எழுத்தாளரும், சிந்தனைவாதியுமான திரு.சுந்தர ராமசாமி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இவரது 'ஒரு புளிய மரத்தின் கதை' எனும் நாவல் தமிழ் இலக்கிய உலகில் முக்கிய இடம் வகிக்கும், மிகவும் பேசப்படும் ஒரு நாவலாகும். நிகழ்ச்சி, பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் தன் மழலைத் தமிழில் பாராட்டுரை நவின்றபின் இனிதே முடிவடைந்தது.

ச. திருமலைராஜன்
More

சின்சினாட்டி இந்து சங்க நடனப் போட்டிகள்
அபிநயாவின் நாட்டிய அரங்கேற்றம்
மஹீதா பரத்வாஜ் நடன அரங்கேற்றம்
குழந்தைகள் நலநிதிக்கு ஹரிப்ரசாத் சவுராசியா கச்சேரி
மிச்சிகனில் 'கஜமுகா'
மிச்சிகன் பராசக்தி கோவிலில் அஷ்டலக்ஷ்மி பிரதிஷ்டை
அட்லாண்டாவில் சுருதிலயாவின் இசைநிகழ்ச்சி
'பரம்பரா' - குருவுக்கு அஞ்சலி
இலக்கியச் செல்வருடன் ஒரு கலந்துரையாடல்
Share: 




© Copyright 2020 Tamilonline