Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2024 Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | குறுநாவல் | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
ச.மு. கந்தசாமிப் பிள்ளை
- பா.சு. ரமணன்|நவம்பர் 2024|
Share:
தோற்றம்
திருவருட்பிரகாச வள்ளலாரை குருவாக ஏற்று, அவர் அறிவுறுத்திய தவ வாழ்க்கை வாழ்ந்து உயர்வடைந்தவர் ச.மு. கந்தசாமிப் பிள்ளை என்னும் காரணப்பட்டு சமரச பஜனை ச.மு. கந்தசாமிப் பிள்ளை. இவர் செப்டம்பர் 07, 1838-ல் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள காரணப்பட்டு என்ற ஊரில், கருணீகர் குலத்தில், முத்துசாமிப்பிள்ளை – தயிளம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

கல்வி, திருமணம்
உயர்கல்வி கற்ற இவர், புதுவை மாநிலத்தில் 'பாகூர்' என்னும் ஊரில் கணக்கராகப் பணியாற்றினார். மேற்கல்வியையும் தொடர்ந்து பயின்றார். புதுச்சேரியில் உள்ள சாரத்தில் வட்டாட்சியர் பணி கிடைத்தது. அதனை ஏற்றுத் திறம்படப் பணியாற்றினார். தங்கம் என்பவருடம் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு ஒரே மகள் ஜானகி.

ஆன்மீகத் தேடல்
கந்தசாமிப் பிள்ளை இளவயது முதலே அதிக ஆன்மீக நாட்டம் கொண்டவராக இருந்தார். தினந்தோறும் சிவபூஜை செய்து வந்தார். தனக்கான நல்லதொரு குருவைத் தேடிக் கொண்டிருந்தார். அதற்காக அனுதினமும் இறைவனைப் பிரார்த்தித்து வந்தார்.

இக்காலக்கட்டத்தில் இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. தலைசுற்றல் மற்றும் உடல் நடுக்கம் ஏற்பட்டது. நரம்பியல் சிக்கலாகக் கருதப்பட்ட அந்நோய் குணமாகப் பல மருத்துவர்களைச் சந்தித்தார். நோய் குணமாகவில்லை.

அந்நிலையில் வீட்டிற்கு வந்த ஒரு பெரியவர் மூலம் வள்ளலார் இராமலிங்கர் பற்றியும், அவர் ஆற்றிவரும் தெய்வீக சித்துக்கள், புனிதப் பணிகள் பற்றியும் அறிந்துகொண்டார். உடனே அவரைக் காணப் புறப்பட்டார்.

குரு தரிசனம்
கந்தசாமிப் பிள்ளை, 1859-ல், கருங்குழியில், திருவருட்பிரகாச வள்ளலாரின் தரிசனம் கிடைக்கப் பெற்றார். வள்ளலைக் கண்டவுடன் கால்களில் வீழ்ந்து வணங்கினார். தனது உடல்நலச் சிக்கல்களைப் பற்றித் தெரிவித்தார். ஆசியும் ஆறுதலும் கூறிய வள்ளலார், கந்தசாமிப் பிள்ளையிடம் திருநீற்றைத் தந்து உடல் முழுவதும் பூசிக் கொள்ளச் சொன்னார். பிள்ளையும் அவ்வாறே செய்தார். உடன் தலைசுற்றலும் உடல் நடுக்கமும் நீங்கப்பெற்றார். அந்த மகிழ்ச்சியில் வள்ளலாரை வாழ்த்திப் பாடினார்.

உடன் வள்ளலார் கந்தசாமிப் பிள்ளையை நோக்கி, "உமக்குத் தக்க உத்தியோகம் தருவோம்" என்றுரைத்தார். உடன் ஊர் திரும்பிச் செல்லப் பணித்தார்.

இவ்வாறு 1859-ம் ஆண்டு கருங்குழியில் திருவிழி தீட்சை பெற்றார் கந்தசாமிப் பிள்ளை. பின் முருகப்பெருமானின் அருளால் 'சாமிமலை சாமிநாதக் கடவுள் தோத்திரம்' என்ற நூலைப் பாடினார். அதன்பிறகு தனது சற்குருநாதரின் ஆணைப்படி தொடர்ந்து தமிழில் பல பிரபந்தங்களை இயற்றினார்.



வள்ளலாரின் ஆசி
ஒரு சமயம், கந்தசாமிப் பிள்ளை வள்ளலாருக்கு பாதரட்சை செய்து கொண்டுபோய் அவற்றை அணியுமாறு வேண்டிக் கொண்டார். வள்ளலாரும் அதனைச் சில வருடங்கள் அணிந்திருந்தார். பின் ஒருநாள் கந்தசாமிப் பிள்ளை, வள்ளலாரது ஞானதேகத்தைத் தாங்கிய அப்பாதுகைகளைத் தனக்குத் தந்தருளுமாறு கேட்டுக் கொண்டார். வள்ளலார் உடன்பட்டார். வள்ளலாரின் ஆசியுடன் அந்த பாதக்குறட்டினைக் காரணப்பட்டில் உள்ள தமது வீட்டிற்கு எடுத்துவந்து அனுதினமும் அதற்குப் பூஜை செய்து வழிபட்டுவந்தார் கந்தசாமிப் பிள்ளை. (அந்த இரு பாதுகைகளும் தற்போது 'காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையத்'தில் பாதுகாக்கப்பட்டு, பூஜிக்கப்பட்டு வருகின்றன.) திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களால் ஆசிர்வதித்துக் கொடுக்கப்பட்ட நான்கு திருமுறைகள் அடங்கிய 'திருவருட்பா' நூலை அனுதினமும் பூஜித்துப் பாராயணம் செய்துவந்தார்.

துறவற நாட்டம்
நாளடைவில் கந்தசாமிப் பிள்ளைக்கு துறவற நாட்டம் ஏற்பட்டது. குடும்பத்தைத் துறந்து வள்ளலார் இருக்கும் இடத்திற்கே சென்று, அவருடன் அவரது அணுக்கத் தொண்டராக வாழ்வது என்று முடிவெடுத்தார். இதை அறிந்த குடும்பத்தினர் கவலையுற்றனர். வள்ளாலாரைச் சந்தித்து முறையிட்டனர்.

கந்தசாமிப் பிள்ளையிடம் துறவறம் வேண்டியதில்லை என்று கூறிய வள்ளலார், 'இல்லறத்தில் இருந்தவாறே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அடையலாம்' என்றும் அறிவுறுத்தினார். குரு வார்த்தையைத் திரு வார்த்தையாக ஏற்ற கந்தசாமிப் பிள்ளை, துறவற எண்ணத்தைக் கைவிட்டார். இல்லறத்தில் இருந்தவாறே இல்லறத்துறவியாய் வாழத் தலைப்பட்டார். என்றாலும் அவரது உள்ளம் வள்ளலாரையே நாடியது.

அறப்பணிகளும் சமரச பஜனையும்
நாளடைவில் மனைவி தங்கம் உயிர் துறந்தார். கந்தசாமிப் பிள்ளை அதன்பின் தனது ஒரே மகள் ஜானகியை அழைத்துக்கொண்டு வடலூர் சென்றார். அங்குக் குடில் ஒன்றை அமைத்துத் தங்கினார். சமரச சன்மார்க்க சங்கப்பணியிலும், சத்திய தருமசாலைப் பணியிலும் ஈடுபட்டார். அவ்வப்போது மேட்டுக்குப்பத்திற்குச் சென்று அங்கு தங்கியிருந்த வள்ளலாரைக் கண்டு வழிபட்டு வந்தார். வள்ளலார் முன், வள்ளலாரின் திருவடிப் புகழ்ச்சியைப் பக்தியுடன் பாடி மகிழ்ந்தார். வள்ளலாரும் எந்தெந்தப் பாடலை எப்படி எப்படிப் பாடவேண்டும் என்று விளக்கியதுடன், "மனங்கசிந்து உருகவே பாடல்கள் பாடப்படவேண்டும். இசைக்கருவிகள் கொண்டு பாடுவதால் மனம் உருகாது; உணர்ச்சி பெருகாது; சன்மார்க்கத்திற்கு இசைக்கருவிகள் தேவையில்லை. இசைக்கருவிகள் இல்லாமலே மனம் உருகப் பாடி வழிபடுங்கள்" என்று ஆலோசனை கூறினார்.

கந்தசாமிப் பிள்ளையும் அதனை ஏற்றுக் கொண்டார். 'சமரச பஜனை' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அன்பர்கள் பலரையும் அவ்வமைப்பில் சேர்த்தார். உள்ளத்தை உருக்கும் வகையில் சமரச சன்மார்க்க கீதங்களை அக்குழுவினர் பாடினர்.

காரணப்பட்டு ச.மு. கந்தசாமிப் பிள்ளை நூல்கள்
இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகள், இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனைகள், பாதார்ச்சனைக் கீர்த்தனைகள், சற்குரு வெண்பா அந்தாதி, அருட்பிரகாசர் அற்புத அந்தாதி, கிளிக்கண்ணிகள், சற்குரு புலம்பற் கண்ணி, இயற்கையுண்மை ஆனந்தக்கண்ணி, உத்தரஞான சிதம்பர நாமாவளி, திருவருட்பிரகாச வள்ளலார் நாமாவளி, வடற்சிற்சபை மாலை, அருட்பிரகாசர் அற்புதமாலை, குருநேச வெண்பா, நன்னிமித்தம் பராவல், கொலை மறுத்தல், சன்மத சமரசாதீத சித்விலாச நாமாவளி, சுந்தரவிநாயகர் பாமாலை, சாமிமலை சுப்பிரமணியக் கடவுள் சோடச வெண்பா, சாமிமலை சாமிநாதக் கடவுள் வெண்பா, ஆளுடைய பிள்ளையார் நாமாவளி, சடகோபர் நாமாவளி, விபூதிபிரசாத மகிமை, வெறிவிலக்கு, கற்பிலாப் பெண்டிர், கற்புடைய பெண்டிர், பதிப்பித்த நூல்கள், நடந்தவண்ணம் உரைத்தல் - 1893, திருவருட்பா (ஆறு திருமுறைகள்) – 1924

தகவல் உதவி: vallalarspace.com


பொறுப்பு
வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்டு மறைவதற்குச் சில காலம் முன்னால் சத்தியதரும சாலைப் பொறுப்பை கல்பட்டு ஐயாவும், சங்கப் பொறுப்புகளைத் தொழுவூர் வேலாயுத முதலியாரும் ஞானசபை, தருமச்சாலைகளில் நடைபெறும் வழிபாட்டுப் பொறுப்பைக் கந்தசாமிப் பிள்ளையும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும், சித்திவளாகத்தில் விளக்கேற்றும் பொறுப்பைச் சேலத்து ஞானாம்பாள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படியே அனைத்தும் நடந்தன.

ஜனவரி 30, 1874-ல் வள்ளலார் சித்திவளாகத் திருமாளிகையில் திருக்காப்பிட்டுக் கொண்டு மறைந்தார். அதன்பின் கந்தசாமிப் பிள்ளை தமிழகம் முழுவதும் சென்று சமரச சன்மார்க்க சங்கங்களை நிறுவினார். ஒவ்வோர் ஊரிலும் சமரச பஜனை செய்தார். தன் மகள் ஜானகியையும் அதில் ஈடுபடுத்தினார்.

நூல் பணிகள்
ச.மு. கந்தசாமிப் பிள்ளை குருநாதர் வள்ளலார் மீது நூல்கள் பலவற்றை எழுதினார். சில நூல்களைப் பதிப்பித்தார். வள்ளலாரின் வாழ்க்கைக் குறிப்புகளைச் சேகரித்தார். அதனை 'ஸ்ரீமத் திருவருட்பிரகாச வள்ளலார் திவ்ய சரித்திரக் கீர்த்தனை' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். 'இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் குறிப்புகள்' என்ற நூலை எழுதி வெளியிட்டார். கந்தசாமிப் பிள்ளை எழுதிய அந்த நூல் குறிப்புகளே பின்னர் வள்ளலார் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல்கள் பல உருவாவதற்குத் துணையாக இருந்தன. ச.மு. கந்தசாமிப் பிள்ளை எழுதிய நூல்களின் தொகுப்பை தீ.நா. முத்தையாச் செட்டியார் 1923ல், 'ச.மு. கந்தசாமிபிள்ளையவர்கள் இயற்றிய பிரபந்தத் திரட்டு' என்ற தலைப்பில் நூலாக அச்சிட்டு வெளியிட்டார். கந்தசாமிப் பிள்ளையின் சேகரிப்பில் இருந்த ஆறு திருமுறைகளையும், உரைநடைகளையும், ஒரே நூலாக்கி முத்தையாச் செட்டியார் 1924ல் நூலாக வெளியிட்டார்.

மறைவு
காரணப்பட்டு ச.மு. கந்தசாமிப் பிள்ளை, டிசம்பர் 02, 1924 அன்று இறையில் கலந்தார். அவரது உடல் காரணப்பட்டில் சமாதி செய்விக்கப்பட்டது. அவரது சமாதி ஆலயம் அணையா தீபத்துடன் 'காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம்' என்ற பெயரில் காரணப்பட்டில் அமைந்துள்ளது.
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline