Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
- பா.சு. ரமணன்|செப்டம்பர் 2024|
Share:
முருகதாசன், திருப்புகழ்க்காரன், தண்டபாணிப் பரதேசி, தண்டபாணி அடிகளார், வண்ணச்சரபம், திருப்புகழ் அடிகளார், ஓயாமாரி, தண்டபாணி சுவாமிகள் எனப் பல்வேறு பெயர்களில் அறியப்பட்டவர் தமிழ்ப் புலவரும், முருகபக்தரும் ஆசுகவியுமான வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். ஆசுகவியாகப் பல்வேறு பாடல்களை உடனடியாக இயற்றும் ஆற்றல் கொண்டிருந்ததால் ‘ஓயாமாரி’ என்றும், அகப்பொருளின் துறைகளை அமைத்துச் சந்த யாப்பில் வண்ணம் என்னும் வகைமைப் பாடல்களைப் பாடியதால் ‘வண்ணச்சரபம்’ என்றும் அழைக்கப்பட்டார். இவரது இயற்பெயர் சங்கரலிங்கம்

தோற்றம்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், நவம்பர் 28, 1839-ம் நாளன்று திருநெல்வேலியில், செந்தினாயகம் - பேச்சிமுத்து அம்மைக்கு மகனாகப் பிறந்தார். இளவயது முதலே பாடல்கள் இயற்றும் திறனும், தெய்வ பக்தியும் கொண்டிருந்தார்.

கல்வி
சுவாமிகள் அடிப்படைக் கல்வியைத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்றார். ஆரம்பக் கல்வியைச் சுரண்டையில் உள்ள பள்ளியில் பயின்றார். 9 வயதோடு படிப்பு நின்றுபோனது. தமிழ் இலக்கண, இலக்கியங்களை ஆசிரியர் சீதாராம நாயுடுவிடம் கற்றார். இளவயதுமுதலே பல்வேறு விதமான பாடல்களை இயற்றிப் பாடும் ஆற்றல் இருந்ததால் ஆசிரியர் சீதாராம நாயுடு இவரை ‘ஓயாமாரி’ என்று அழைத்தார்.

திருமணம்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கு, இளவயதிலேயே மயிலம் முருகன் கோயிலில் திருமணம் நடந்தது. மனைவி: சுந்தரத்தம்மை. மகன்: செந்தினாயகம். மகள்: ஈசுவர வடிவம்மாள்.

குரு உபதேசம்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் தனது ஆசிரியரிடமிருந்து ஷடாக்ஷர மந்திரம், விநாயக மந்திரம், ஆறெழுத்து மந்திரம், இலக்குமி மந்திரம் ஆகிய மந்திர உபதேசங்களைப் பெற்றார்.

சமயப் பணிகள்
தண்டபாணி சுவாமிகள் தலந்தலமாகச் சென்று இறைவனைப் பாடினார். தனது பாடல்களை முருகன் கேட்கவேண்டும் என்றும் அதற்கு இசைவு கொடுக்க வேண்டும் என்றும் விரும்பினார். அவ்வாறு இசைவு கிடைக்காத பாடல்களாகத் தான் கருதியவற்றை நீரிலும், நெருப்பிலும் இட்டு அழித்தார். அவ்வாறு அவர் அழித்த நூல்களில் சிலவாக, புதுவை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ முருகன் பாராயணத் திரட்டு, செந்தூர் முருகன் பாடல்கள், கந்தமாலை, சத்தியக்கண்ணி, கழுகுமலைப் பாடல்கள் ஆகிய நூல்கள் குறிப்பிடப்படுகின்றன.

சுவாமிகள் தீவிர முருக பக்தராக இருந்தாலும் சைவ, வைணவ சமரசவாதியாக இருந்தார். கௌபீனம் மட்டுமே அணிந்த திருமேனி, அந்த மேனி முழுவதிலும் திருநீறு, நெற்றியில் குங்குமம், இடது தோளில் வடகலைத் திருநாமம், வலது தோளில் தென்கலைத் திருநாமம், விரிந்த சடை, கழுத்தில் துளசி, ருத்திராட்ச மாலை, பாதக்குறடு இவற்றுடன் தண்டம் ஒன்றைக் கையிலேந்தியவராக எப்போதும் காட்சி தருவார் சுவாமிகள். அதனாலேயே அவர் தண்டபாணி சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் பயணம் செய்து ஆன்மீகத் திருத்தலங்களைத் தரிசித்தவர். இலங்கைக்கும் பயணம் செய்து சமயச் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார். விழுப்புரத்தை அடுத்த திருவாமாத்தூரில் கௌமார மடத்தை நிறுவி முருக வழிபாட்டு நெறியை வளர்த்தார்.

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் நூல்கள்
முத்தமிழ் பாமாலை, தமிழ்த் துதிப் பதிகம், தமிழ் அலங்காரம் , திருவரங்கத் திருவாயிரம், சடகோபார் சதகத்தந்தாதி, அறுசமயக் கடவுள்கட்கு ஆறாயிரம் தோத்திரப்பாடல்கள், பழனித் திருவாயிரம், தில்லை திருவாயிரம், ஞாயிறு ஆயிரம், ஏழாயிரம் பிரபந்தம், திருவாமாத்தூர் பதிக சதகம், விகட பிள்ளைத் தமிழ், வருக்கக்குறள் , ஆங்கிலேய அந்தாதி, மறுநெறித் திருநூல், முகுந்த நாடகம், குருபர தத்துவம், புலவர் புராணம், வண்ணத்தியல்பு, அறுவகை இலக்கணம், அரசாட்சி, அருளாட்சி, திருமகள் அந்தாதி, திருமால் ஆயிரம், அருணகிரிநாதர் புராணம், புதுவை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ முருகன் பாராயணத் திரட்டு, செந்தூர் முருகன் பாடல்கள், கந்த மாலை, சத்தியக்கண்ணி, கழுகுமலைப் பாடல்கள், அபிராமேசுவரப் பெருமாள் நவரத்தினத் திருப்புகழ், அரிகர புத்திரர் பதிகம், அரியநகர் சதுர்வேத விநாயகப் பெருமான் பதிகம், அளகாபுரி குபேரன் பதிகம், திருச்செந்திற் பிரபந்தம், எழுபா எழுபஃது, ஏகன் எழுபது, ஏழாம் இலக்கணம், ஒளவையார் பதிகம், கணபதி ஆயிரம், மற்றும் பல.


இலக்கியப் பணிகள்
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், தம் ஆசிரியரைப் போலவே மாணவர்கள் பலருக்குப் பாடம் கற்பித்து வந்தார். வருவாய் தரும் பணிகளில் எதிலும் ஈடுபடாமல் சதா முருகனையே நினைந்து பாடல்களை இயற்றி வந்தார். தமிழ்ப் பணியும், இறை வழிபாடும் தவிர்த்துப் பொருளீட்டும் பணிகளில் ஈடுபடவில்லை. தமிழ், ஹிந்தியில் புலமைமிக்க சுவாமிகள், இசையிலும் மருத்துவத்திலும் தேர்ந்தவராக இருந்தார்.

வடலூர் ராமலிங்க வள்ளலார், ஞான சித்தர் சுவாமிகள் போன்றோர் மீது சுவாமிகள் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ஆறுமுக நாவலர், மாம்பழக் கவிச்சிங்க நாவலர், வேம்பத்தூர் பிச்சுவையர், அட்டாவதானம். பூவை. சுல்யாண சுந்தர முதலியார், காஞ்சிபுரம். மகாவித்வான் சபாபதி முதலியார், அட்டாவதானம் புரசை. சபாபதி முதலியார், தேவகோட்டை வன்றொண்டன் செட்டியார், நாடகப் பேராசான். சங்கரதாஸ சுவாமிகள், நெல்லை அழகிய சொக்கநாதப் பிள்ளை, நெல்லை போற்றிமுத்துப்பிள்ளை, சென்னை பண்டிதை. மனோன்மணியம்மாள் போன்றோருடன் நட்புக் கொண்டிருந்தார். இலக்கியம், இலக்கணம், நாடகம், தத்துவம், உரை விளக்கம், உரைநடை, இசைப்பாடல், மருத்துவம் சார்ந்த பல நூல்களை எழுதினார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாடல்களை இயற்றினார். அவற்றில் 50,000-த்திற்கும் மேற்பட்ட பாடல்களே கிடைத்துள்ளன. அவற்றில் சில மட்டுமே அச்சு வடிவில் வந்துள்ளன. பல நூற்றுக்கணக்கான நூல்கள் சுவடி வடிவில் கௌமார மடாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சுவாமிகள் எழுதிய நூல்களில் குருபர தத்துவம், புலவர் புராணம், பழனித் திருவாயிரம், திருவரங்கத் திருவாயிரம், வண்ணத்தியல்பு, அறுவகை இலக்கணம், அரசாட்சி, அருளாட்சி, திருமகள் அந்தாதி, திருமால் ஆயிரம், தில்லை ஆயிரம், சடகோபர் சதகத்தந்தாதி, அருணகிரிநாதர் புராணம் போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.

சுவாமிகள் மிகுந்தத் தமிழ்ப் பற்று உள்ளவர்.

"மதுரத் தமிழை இகழ் தீயோர்
மணி நா அறுத்துக் கனலில் இட..."


என்று பாடுமளவிற்குத் தமிழின்மீது பற்றுக் கொண்டிருந்தார்.

சுவாமிகள் பாடிய தில்லை பாதி நெல்லை பாதி அழகிய வெண்பாக்களில் ஒன்று:
கீர்த்தி அறம்பெருமை கேடில்முத்தி என்பவற்றைச் 
சேர்த்திகத்தில் நல்கவல்ல தில்லையே - மூர்த்தியிடம்
செந்திருவும் வெண்திருவும் சேர்ந்துவிளை யாடுகையால்
இந்திரனூர் ஒல்குநெல்லை யே


ஏழு பதிகம் என்ற நூலின் முதல் பதிகத்தில் காணப்படும் அறுசீர் விருத்தம் ஒன்று:
சத்திவேற்‌ படையாய்க்‌ கோடி
தனையர்தங்‌ காத்தின்‌ மேவி
எத்திறப்‌ பகைவர்‌ மார்பும்‌
இடந்துயிர்‌ குடிப்பாய்‌ அன்றோ?
முத்தியே நலமென்‌ றோதும்‌
முனிவரை மடிமேல்‌ நாளும்‌
வைத்தினி தளிக்கச்‌ சோம்பா
மரகத வாலைத்‌ தாயே!


தமிழின் சிறப்பைக் கூறும் முத்தமிழ்ப் பாமாலை, தமிழ்த்துதிப் பதிகம், தமிழ் அலங்காரம் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார். திருக்குறளை அடியொட்டி 1300 குறள் வெண்பாக்களில் மறுநெறித் திருநூல் என்ற நூலை இயற்றியுள்ளார். நூற்றுக்கணக்கில் கீர்த்தனைகளையும் தனிப்பாடல்களையும் பாடியுள்ளார். பெண் கல்வி, விதவை மறுமணம், உயிர்க்கொலை புரியாமை, புலால் உண்ணாமை, தமிழ் உணர்வு போன்றவற்றைத் தனது நூல்களில் வலியுறுத்தினார். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த சுவாமிகள், அவர்கள்மீது ‘ஆங்கிலேய அந்தாதி’ பாடினார். ‘முகுந்த நாடகம்’ என்ற நாடகநூலை இயற்றினார்.

சுவாமிகள் முருகனின் அருட்காட்சியைப் பலமுறை பெற்றவர். முருகனின் அருளால் பல நோய்களைக் குணமாக்கியவர். பலரது வாழ்வில் பல்வேறு அற்புதங்களை ஏற்படுத்தியவர். சமயவாதிகள் பலருடன் பல வாதங்களை நிகழ்த்தி வென்றார்.

மறைவு
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் ஜூலை 5, 1898ல், தனது 59ம் வயதில் சமாதி அடைந்தார்.
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline