Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர்கடிதம் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
பாலைவனச் சோலை (அத்தியாயம் 4)
- ராஜேஷ்|ஏப்ரல் 2023|
Share:
வீட்டில் ஒரு சூறாவளி வந்துவிட்டுப் போனதுபோல இருந்தது. கீதா தன்பக்கம் நியாயம் இருப்பதாகத்தான் நினைத்தார் அப்பொழுதும். அருணின் அதிகப் பிரசங்கித்தனம் அவருக்கு எரிச்சலைக் கொடுத்தது. அது எரிமலையைப் போல வெடித்து விட்டது. இதனால் யாருக்கு லாபம்? கீதா அருணிடம் கேட்டது எதுவும் நடக்கவில்லை.

கீதா சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தார். தான் செய்ததில் என்ன தப்பு, தான் விடாப்பிடியாக இருந்ததில் என்ன தவறு என்று தனக்குத் தானே பேசிக்கொண்டு கொஞ்சம் சிந்தித்தார். இன்னொரு பக்கம் பார்த்ததில், ஒரு சின்னப் பையனோடு இப்படி மோத வேண்டுமா என்றும் தோன்றியது.

அருமையான அருணோடு நடந்திருக்க வேண்டிய அருமையான விவாதம் ஒன்று வீணாகிப் போய்விட்டது. தேவை இல்லாத சண்டை. நேரம் வீணானதுதான் மிச்சம்.

'தேவையானால் பசங்ககிட்ட கொஞ்சம் கடுமையாதான் இருக்கணும் கீதா' தனக்குத் தானே சொல்லிக்கொண்டார். 'அப்படியே விட்டா அப்புறம் கேப்பாரே இல்லாமல் போயிரும்.'

அருணிடம் போய்ப் பேசலாமா என்று நினைத்தார். அவன் அறையில் இன்னும் விளக்கு எரிந்துகொண்டு இருந்தது. மணியைப் பார்த்தார். 8.30 ஆகி இருந்தது. பொதுவாக 9 மணிக்குப் பிறகுதான் தூங்குவான். அதுவும் பள்ளி நாட்களில் மட்டும்தான். சனி ஞாயிறுகளில் அவன் ஒரு ராப்பிசாசு போலத்தான் இருப்பான். சொல்லிப் பிரயோஜனம் இல்லை என்று விட்டு விட்டார்.

மாடிப்படி ஏறினார். படி ஏறும் சத்தம் கேட்டதும் படக்கென்று அருணின் அறை விளக்கு அணைந்தது. கீதா மீண்டும் ஏதாவது சொல்லப் போகிறார் என்று அவனே விளக்கை அணைத்துவிட்டான். கீதா அவனது அறைப்பக்கம் போனார். அவர் படியில் ஏறி அவனது அறையை நெருங்க நெருங்க லேசாகத் திறந்திருந்த அறைக்கதவு பட்டென்று மூடப்பட்டது.

அருணின் செய்கை அவருக்கு ஒரு அறிகுறியாகத் தோன்றியது. அவன், 'என்ன விட்டுரு. எங்கிட்ட வராதே!' என்று சொல்வதுபோல நினைத்தார்.

அறைக்குள்ளே போய்ப் பார்க்க நினைத்தார். என்னதான் செய்வான்? சத்தம் போடுவானா? மூஞ்சியில் அடித்த மாதிரி ஏதாவது சொல்வானா? அவன் செய்தது தப்பு, அவன் தன்னிடம் நடந்துகொண்ட விதம் சரியில்லை என்று வலியுறுத்துவதில் தப்பில்லையே? இதுதான் கீதாவின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மேல்படியில் நின்றபடி கீழே பார்த்தார். ரமேஷ் அப்போதுதான் அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்தார். அவர் களைப்பாக வரும் நேரத்தில், அருணோடு சண்டை போடவேண்டாம் என்று நினைத்து, கீதா தன் அறைப்பக்கம் போனார். கீதாவுக்கும் களைப்பாக இருந்தது. சரி, தூங்கப் போகலாம் என்று நினைத்தார்.

போய்ப் படுத்தவர்தான், அப்படியே தூங்கிப் போனார். இரவில் ஏதோ சத்தம் கேட்க, விழித்துப் பார்த்தார். ரமேஷ் பக்கத்து அறையில் அலுவலக வேலை செய்து கொண்டிருந்தார். அவர் கணினி கீபோர்டைத் தட்டும் சத்தம் இரவின் நிசப்தத்தில் நன்றாகக் கேட்டது. கீதா மெதுவாக எழுந்து ரமேஷ் வேலை செய்து கொண்டிருந்த அறைப்பக்கம் போனார். மெதுவாக, சத்தம் போடாமல் வெளியிலிருந்து அறைக்கதவை அடைத்தார்.

ரமேஷ் வேலையில் மும்முரமாக இருந்ததால் கீதாவைக் கவனிக்கவில்லை. கீதா திரும்பிப் போகும்போது, எதேச்சையாக அருணின் அறைப் பக்கம் திரும்பிப் பார்த்தார். அவன் அறைக்கதவு மூடப்பட்டு இருந்தாலும், உள்ளே விளக்கு எரிந்தது. கீதா ரமேஷின் அறை, அருணின் அறை, ரமேஷின் அலுவலக அறை, இவை எல்லாமே மாடியில் அடுத்து அடுத்து இருந்தன.

இரவு மணி 1. மறுநாள் அவன் பள்ளிக்குப் போகவேண்டும். காலையில் எழுந்திருக்கத் தாமதமானால் அவன் எல்லாக் காரியங்களையும் அவசரமாகச் செய்யவேண்டி ஆகிவிடும். அவனுக்கு அவரும் எல்லாவற்றிலும் உதவும்படி ஆகிவிடும். ரமேஷோ ஒன்றுமே தெரியாதவர் போலக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பார். அது மட்டுமல்ல, கீதாவின் காலை நேர யோகப் பயிற்சி, குறுக்கெழுத்து போடுவது, நிம்மதியாகக் காஃபி குடிப்பது எல்லாம் பாதிக்கப்படும்.

அதை நினைத்தால் கீதாவுக்குச் சற்று எரிச்சல் வந்தது அந்த நடு ராத்திரியிலும். எரிச்சலில் ஓர் அடி எடுத்து வைத்தார். பிறகு என்ன தோன்றியதோ தெரியவில்லை, தனது ஜென் முறை தியானத்தை நினைவு கொண்டு, சில முறை ஆழ்ந்த மூச்சு இழுத்துக் கொண்டார். என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று அறையின் உள்ளே போய்க் கதவை மூடிக்கொண்டார். நிம்மதியாகப் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிப் போனார்.

காலையில் 5 மணி அலாரம் அடித்ததும் கீதா எழுந்து கொண்டார். ரமேஷ் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். கீதா சில நிமிடங்கள் கழித்து கீழே சமயலறைப் பக்கமாகப் போனார். கீழே போனவருக்கு ஒரே அதிர்ச்சி! அங்கே அருண் உட்கார்ந்து கொண்டு முந்தைய நாள் செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தான். பரப்பிப் போடப்பட்டிருந்த நோட்டுப் புத்தகங்கள் அங்கே இல்லை. மிகவும் சுத்தமாக இருந்தது. ராத்திரி நேரத்தில் ஏதோ ஒரு தேவதை வந்து சுத்தம் செய்துவிட்டுப் போனது போல இருந்தது.

கீதா அருணிடம் ஒன்றும் பேசாமல் காஃபியைப் போட்டுக்கொண்டு, அன்றைய மதிய உணவைச் சமைப்பதில் மும்முரமானார்.

'குட் மார்னிங் அம்மா.'

அருணின் அழைப்பு கீதாவின் கவனத்தைத் திருப்பியது. இருந்தாலும் காதில் விழாதவர் போல வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். முந்தைய நாள் கூத்தை அவர் மறந்தபாடில்லை. என்ன ஒரு திமிர் அவனுக்கு! அவனுக்கு 2 கொம்புன்னா, எனக்கு 8 கொம்பு என்று நினைத்துக் கொண்டார்.

'அம்மா...'

அருணின் குரல் இன்னும் கொஞ்சம் அருகில் கேட்டது கீதாவிற்கு. ஏதோ நிழல்போலத் தெரிய, திடுக்கிட்டுத் திரும்பினார். அருகில் அருண் நின்றிருந்தான்.

கீதா எதுவும் சொல்லுமுன், அப்படியே அவரை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான்.

'ரொம்ப சாரி அம்மா. நான் நேத்திக்கு ரொம்பத் திமிரா நடந்துகிட்டேன். நான் அப்படிப் புத்தகத்தைத் தூக்கிப் போட்டது ரொம்பத் தப்பு.'

கீதாவுக்கு அப்போதும் கோபம் தணியவில்லை. இது முதல் முறையல்ல. பலமுறை இப்படி நடந்து இருக்கிறது. எல்லா முறையும் பாவம் குழந்தை என்று விட்டிருக்கிறார். அருணுக்கும் வயசு அதிகமாகிறது. அப்பா ரமேஷோ அருணோடு எப்போதும் சிறுபிள்ளை போலத்தான் நடந்து கொள்கிறார். அவனுக்கு புத்தி புகட்ட நினைத்தார் கீதா.

'அருண், எனக்கு நிறைய வேலை இருக்கு. சாப்பாடு ரெடி பண்ணணும். அப்புறம், எனக்கு கொஞ்சம் யோகா பண்ணணும். இது லேட் ஆச்சுன்னா என்னால சரியான நேரத்துல ஆஃபீசுக்குப் போகமுடியாது.'

கீதா நிதானமாக எந்த விதமான உணர்ச்சியும் காட்டாமல் பேசினார். அருணின் பிடி இன்னும் இறுகியது.

'அருண்...எனக்கு வேலை இருக்கப்பா. உங்க இருண்டு பேர் மாதிரியும் வேளைக்கு எனக்கு சாப்பாடு நெனச்சா வராது. நானேதான் பண்ணிக்கனும் எனக்கும்.'

'நான் உங்களை விடமாட்டேன். மறந்துட்டேன்னு சொல்லுங்க'

கீதா ஒன்றுமே பேசாமல் சில நொடிகள் நின்றார். பின்னர், அருணின் பிடியை வலுக் கட்டாயமாக விடுவித்தார். கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. அருண் கத்தி ரகளை செய்வான் என்று எதிர்பார்த்தார். எதற்கும் தயாராக இருந்தார் கீதா. அருண் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு சாப்பாட்டு மேஜை பக்கம் திரும்பிப் போனான்.

'அம்மா, இது ஒரு நில ஆக்கிரமிப்பு அம்மா. இந்த விளம்பரம் ஒரு பயங்கரமான நில ஆக்கிரமிப்பு. அதைத்தான் உங்ககிட்ட பேசலாம்னு இருந்தேன். என்னோட உள்ளுணர்வு என்னிக்கும் தப்பா இருக்காதம்மா.'

முந்தைய நாள் தினசரியைத் தூக்கிக் காட்டிவிட்டு அங்கிருந்து அவன் மாடிப்படி ஏறிப் போனான். கீதா அவன் போவதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

(தொடரும்)
ராஜேஷ்
Share: 




© Copyright 2020 Tamilonline