Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
மண் பானை
- வி. பாலம்மாள்|ஜூன் 2022|
Share:
"என்ன நான் சொல்வதை கவனிக்கிறீர்களா? ஏதோ சுவாமி கிருபையால் நமது குழந்தை இந்தமட்டும் தலையெடுத்து நல்ல ஸ்திதிக்கு வந்திருக்கிறான். அவன் சமர்த்தும் படிப்பும் உத்தியோகமும் அடக்கமும் யாருக்குண்டு. எல்லாம் அந்த உலகநாயகி அம்பாளின் கிருபைதான். அருமைப் பிள்ளையை சீமைக்கனுப்பிவிட்டு அவன் செளக்யமாய் வீடு வந்து சேரவேண்டுமே என்று நான் பட்ட விசாரம் பிறருக்குத் தெரியுமோ! குழந்தைக்கு நல்ல உத்தியோகம் கிடைத்தால் அம்மனுக்கு நிலைமாலை வாங்கிச் சாத்தி குடம் பால் அபிஷேகம் செய்வதாக வேண்டிக் கொண்டேன். மாமியாருக்குச் சுமங்கலிப் பிரார்த்தனை முடித்து ஏழைச் சுமங்கலிக்குச் சிகப்புப் புடவை வாங்கிக் கொடுப்பதாயும் பணம் முடிந்து வைத்திருக்கிறேன்" என்று பொன்னம்மாள் தன் கணவனிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

"சரி, இதெல்லா மெனக்குத் தெரியுமே. பிள்ளைக்குப் பரிக்ஷை தேறுமாவென்று பூசாரியை உடுக்கடிக்கச் சொன்னாய்! அவன் உன் கழுத்திலிருந்த கடியாரச் சங்கிலியைக் காளியம்மன் கேட்பதாகச் சொல்லி உன்னை யேமாற்றி அதைப் பறித்துக்கொண்டான். இதெல்லா மெனக்குந் தெரியுமே!" என்றார் கைலாசம்.

"அடியம்மா, நான் என்ன பச்சைக் குழந்தையா! பைத்தியக்காரியா!. பிள்ளையின் பெருமை பெற்ற தாய்க்கன்றோ தெரியும். உங்களுக்கென்ன, ஒரு கவுளி வெற்றிலையை ஒரு முறையில் போட்டுக்கொண்டு காலங்கழித்தீர்கள். நானல்லவா அவனுடைய க்ஷேமமே எண்ணமாக இருப்பவள். கோவில்களையெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டேன். இதுவும் பிசகா! எத்தனை நாளானாலும் இந்த வேடிக்கைப் பேச்சுதானா உங்களுக்கு! என்னமோ சொல்ல வாயெடுத்தேன். அதற்குள் குறுக்கே பேசி நான் சொல்ல வந்ததைத் தடுத்து விட்டீர்களே! வேறொன்றுமில்லை, நமது குழந்தை நல்ல ஸ்திதிக்கு வந்துவிட்டான். நமக்கும் வயதாய்விட்டது இனி அவனை விட்டுப் பிரிந்திருக்கக்கூடாது. நான் சொல்வது சரிதானே."

"ஆம். சரிதான். குழந்தை நல்ல ஸ்திதிக்கு வந்துவிட்டான். உனக்கு ஏராளமாக நகை செய்து போட்டிருக்கிறான். மோட்டாரில் ஊர் சுற்றவும் பெருமை பேசிக்கொள்ளவும் பொழுது சரியாயிருக்கிறது. இவைதானே நீ சொல்லப்போவது. மேலே சொல்" என்றார் கைலாசம்.

"வீட்டில் பெரியவர்கள் இருந்தால் சிறுவர்களுக்கும் தைரியமாகத்தானிருக்கும். தெருவில் விற்கும் பண்டம் வேண்டுமென்றால் நாட்டுப்பெண் என்ன செய்வாள்? பாவம்! அவளோ சிறுசு. வேலைக்காரர்கள் பொறுப்பாகக் குடும்பத்தை கவனிப்பார்களா? நானொருத்தி இதற்கெல்லாம் வேண்டித்தானிருக்கிறது. நேற்று வண்டியோடு சேலம் கத்தரிக்காய் வற்றல் கொண்டுவந்து தெருவில் விற்றான். அவனோடு ஒரு ஜாமம் போராடி விலை தீர்த்து நாலு மரக்கால் வற்றல் வாங்கி வைத்தேன்."

"சரிதான், அதற்குத் தான் 'ஆச்சி வேண்டுமோ ஆயிரம் பொன் வேண்டுமோ' என்பது. உனக்குச் சுக்காங்காய் வற்றலும், மூளிச் சாமான்களும் தான் வாங்கத் தெரியும்! மேலே சொல்" என்றார் பொன்னம்மாளின் புருஷன்.

"இதெல்லாம் எனக்குப் பெருமைக்காக நான் சொல்லிக்கொள்ள வரவில்லை. இனி நாம் இவ்விடமே இருந்து விட்டால்தான் சௌகரியம் என்பதற்காகச் சொல்லுகிறேன். எனக்கு ஒரு நாளும் பெருமை பேசிக்கொள்ளப் பிடிக்காது. இன்னொருத்தியானால் பிள்ளை ஆயிரம் ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகத்திலிருந்தால் என்னைப்போல் அடக்கமாயிருப்பாளா?"

"நீ இப்பொழுது வீண் பெருமை பேசிக்கொள்ளவில்லை என்ற எண்ணமா? எனக்கு உன் சமாசாரம் தெரியாதா? நீ வெளியே செல்வதே தற்புகழ்ச்சிக்குத்தானே. தெருத்தெருவாய் சுற்றியடித்து மோட்டார் பெருமையையும் நகைப் பெருமையும் பேசத்தானே பொழுது சரியாயிருக்கிறது."

"என் பெருமையை நானா சொல்லிக்கொள்ளுகிறது, ஊராரல்லவோ சொல்லவேண்டும். நேற்று பார்த்தசாரதி கோவிலில் நம்ம ஊர் குப்பிப்பாட்டியைக் கண்டிருந்தேன். அவள், 'என்னடீ பொன்னம்மா! நீயன்றோ பாக்கியசாலி. உன் பிள்ளைக்கு ஆயிரம் ரூபாய் சம்பளமாமே! பில்லைபோட்ட. சேவகன் உன் வீட்டு வாயலில் நிற்கின்றானாமே. நீ பெற்றதல்லவா பிள்ளை. மற்றதெல்லாம் அணிப்பிள்ளை, தென்னம்பிள்ளைகள் தான்' என்று நாலு நாழி வர்ணித்தாள். குழந்தை மோட்டார் வாங்கியிருப்பதாயும் மற்ற வண்டியிற் போனால் பிள்ளை கோபிப்பானென்றும் இப்போதுகூட மோட்டாரில் தான் வந்திருக்கிறேனென்றும் நான் சொன்னதைக் கேட்டு பாட்டி என்னைக் கொண்டாடினாள். ஊராரெல்லாம் என் பெருமையைக் கொண்டாடுகிறார்கள். அதற்கு நான் என்ன செய்கிறது! அதுவும், நம்ம சேவகன் நாகப்பன் இருக்கிறானே, அவன்தான் கெட்டிக்காரன். கோவிலில் இருந்த பெண்டுகள் கூட்டத்தை ஒரு விநாடியில் தூரப் பிடித்துத் தள்ளிவிட்டு எனக்கு சுவாமி தரிசனம் செய்வித்தான். பில்லைபோட்ட சேவகனைக் கண்டால் குருக்களுக்கு எவ்வளவு பயம் தெரியுமா?"

"சரி, பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்யவரும் பெண்டுகளை விரட்டியடிக்கத்தான் நீ கோவில் செல்கிறாய் போலும்!"

"இல்லை இல்லை, நானா அப்படிச் செய்யச் சொன்னேன். என்மேல் பழி போடவேண்டாம்.. நான் சொல்வானேன். 'இதென்ன கஷ்டம்! கண்ட தரித்திரங்களெல்லாம் மேலே படுகின்றனவே' என்றேன். அவனாகத்தான் வழி விலக்கினான். இதையெல்லாம் குப்பிப்பாட்டி பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள்."

"சரி, நீங்கள் சொல்லவந்த விஷயம் இதுதானே! மெத்த சந்தோஷம்" என்றார் கைலாசம்.

"நான் சொல்லவருவதை முழுதுங் கேட்கக்கூடாதா? நமது ஊரிலுள்ள வீட்டை யாருக்காவது வாடகைக்கு விட்டால் மாதம் ஏழு ரூபாய் கிடைக்குமே! நாமோ இவ்விடமே இருக்கப்போகிறோம். ரூபாயிருந்தால் எவ்வளவோ காரியம் நடக்கும்" என்று பொன்னம்மாள் சொல்லி முடித்தாள்.

கைலாசம் செங்கற்பட்டுக்கடுத்திருக்கும் நெம்மேலி என்ற கிராமத்திற் பிறந்தவர். இவர் தந்தைக்கு இரண்டொரு ஏக்கர் நிலமும் சிறிய வீடுமிருந்தன. மகனைப் படிப்பித்தால் மாதா மாதம் ஆயிரக்கணக்காகச் சம்பளம் பெற்று உயர்ந்த உத்தியோகத்தில் இருப்பான் என்றும் அவ்வருமானத்திலிருந்து பல ஏக்கர் நிலங்களை வாங்கி வீட்டைப் பெரிதாய்க் கட்டிக்கொண்டு சுகமாய் வாழ்ந்து கொண்டிருக்கலாமென்றும் கைலாசத்தின் தந்தை மனப்பால் குடித்துவந்தார். முடிவில் மெட்ரிகுலேஷன் பரிக்ஷை தேறும்போது கைலாசத்திற்கு வயது இருபதுக்குமேல் ஆய்விட்டது. தெய்வானுகூலமாய் இவர் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்தமையால் போலீஸ் கான்ஸ்டேபிள் வேலையில் அமர்ந்தார். கடவுள் கிருபையாலும் இவருக்கிருந்த நன்னெறியினாலும் அவ்வேலையில் படிப்படியாக உயர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவியை யடைந்தார். கைலாசம் தனது ஏகபுத்திரன் தண்டபாணியை மெத்த அருமையுடன் வளர்த்து உயர்தரக் கல்வியும் பயிலச் செய்தார். தண்டபாணி இருபது வயதில் பி.ஏ. பாஸ் பண்ணி விட்டதுடன் அரசாங்கத்தில் உபகாரச் சம்பளம் பெற்றுச் சீமைக்குச் சென்று ஐ.ஸி.எஸ். பரீக்ஷையில் முதன்மையாய்த் தேறியதால் ஆரம்பத்திலேயே இவன் முன்னூறு ரூபாய்ச் சம்பளமுள்ள உத்தியோகத்திலமர்ந்தான். பொன்னம்மாள் வயிறு செய்த புண்ணியத்தாலும் மனைவி பாக்கியலஷ்மியின் அதிருஷ்டத்தினாலும் தண்டபாணி தற்சமயம் ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுவருகிறான். இவ்வேலை கிடைத்ததும் தந்தையைப் பென்ஷன் எடுக்கச்செய்து தாய், தந்தை இருவரையும் தன்னுடன் வசிக்கச் செய்தான். ஏழைக்குடும்பத்தில் கஷ்டப்பட்டுத் தன்னை முன்னுக்குக் கொண்டுவந்த தாய் தந்தையரைப் பயபக்தியுடனும் பரிபூரண விசுவாசத்துடனும் தண்டபாணி நடத்திவந்ததற்கு அவன் மனைவி பாக்கியலக்ஷ்மியின் உயர்குணமே காரணமாயிருந்தது.

பாக்கியலஷ்மி ஹைகோர்ட் ஜட்ஜின் ஏகபுத்திரியாயிருந்தும் மாமன் மாமியிடம் மெத்த விசுவாசத்துடனும் வணக்கத்துடனும் நடந்து கொள்வாள். மாதச் சம்பளத்தைத் தாய் தந்தையரிடமளித்து நமஸ்கரிக்கும்படி கணவனுக்குச் சொல்வாள். பொன்னம்மாளின் காரியங்களும் பேச்சும் முழுக் கர்நாடகமாயிருந்தாலும் இவள் மாமியிடம் மதிப்புவைத்து நடப்பாள். 'பெற்றோர் மனங்குளிர்ந்தால் மற்றோர் தெய்வமெதற்கு?' என்பதையே அடிக்கடி கணவனுக்கு உபதேசிப்பாள். தனக்குக் கிடைக்கும் படிப்பணத்தையும் தான் இருக்கும் அந்தஸ்தையு முத்தேசித்துத் தண்டபாணி ஆறாயிரம் ரூபாயில் மோட்டார் கார் ஒன்றை வாங்கியிருந்தான். ஆனால் அதைத் தனக்கும் தன் மனைவியின் உபயோகத்திற்கும் மட்டுமென்று இவன் எண்ணுவதில்லை. தனது தாய், தந்தையரின் உபயோகத்திற்கென்றே மோட்டாரை விட்டுவைத்திருந்தான். நாள் ஒன்றுக்கு நான்கு முறையாவது மோட்டாரில் வெளியே சென்றுவிட்டு வந்தால்தான் பொன்னம்மாளுக்குத் திருப்தி யேற்படும். இறைக்கும் வெய்யிலையும் பறக்கும் தூசியையும் சிறிதும் லக்ஷியம் செய்யாது வெளியிற் செல்வாள். பொன்னம்மாள் தனியே செல்லும்போது டிரைவரின் பாடு திண்டாட்டமாய் விடும். தனக்கு முன் பழக்கமுள்ள பெண்டுகள் யாரையேனும் கண்டுவிட்டால் பொன்னம்மாள் நடுத்தெருவில் உடனே மோட்டாரை நிறுத்தச் செய்வாள். தன் சிநேகிதியை யருகிலழைத்துப் பிள்ளை சம்பாதிக்கும் பெருமையையும் மோட்டார் வாங்கியிருப்பதையும் வர்ணிப்பாளன்றி அவளையும் வண்டியிலேற்றிக் கொள்ளவே மாட்டாள். தான் மோட்டாரில் செல்வதைப் பிறர் காணும்படி வண்டிக்கு வெளியே தலையை நீட்டிக்கொண்டே செல்வாள்.

இவ்வாறு கண்டவிடத்தில் இவ்வண்டி பலமுறை நிறுத்தப்படும். அருகிலிருக்கும் போலீஸ்காரன் அதட்டுவான். 'வண்டி யாருடையது தெரியுமா?' என்று டிரைவர் மிரட்டுவான். சிற்சில சமயம் தன்னை யொருவரும் பார்க்காமலிருந்து விடுவார்களோவென்று உற்சவ காலங்களில் பெருங் கூட்டத்திற்கிடையே மோட்டாரை விடச்சொல்லுவாள்.

கடைவீதி செல்லும்போதுதான் டிரைவருக்கு சிரமமதிகம். ஜனக்கூட்டமுள்ள சிறு சந்துகளில் மோட்டார் விடுவதென்றால் கஷ்டமன்றோ. கற்சட்டிக் கடையில் வியாபாரம் செய்வதில் ஏற்படும் சண்டையை வளரவிடாமல் இவன்தான் கடைக்காரனைச் சமாதானப்படுத்த வேண்டும். பெரிய வீட்டு மனிதரென்று கடைக்காரனை அடக்குவதா, இவ்வேடிக்கை கண்டு கூடும் கூட்டத்தை விலக்குவதா என்று தெரியாமல் டிரைவர் அவதிப்படுவான். பழக்கடை வந்துவிட்டால் அனர்த்தந்தான்! 'டஜன் ஐந்து ரூபாய் கொடுத்து மாம்பழம் வாங்குவார்களா?' என்பாள். 'உன்னுடையதாக விருக்கட்டும், ஒரு பழம் அதிகமாகக் கொடு' என்பாள்.

பெரிய வீட்டு அம்மாளாயிற்றே என்று பழக்காரன் நினைப்பான். அடுக்கியிருந்தவற்றை யெல்லாம் கலைத்துவிட்டு முடிவில் ஒன்றும் வேண்டாமென்று விடுவாள். மூளியாய்விட்ட ஜாடிகள், உடைந்த சீனிச்சட்டி, விரிந்துபோன இரும்புக் கும்மட்டி அடுப்பு இவைகளைக் கண்டால் பொன்னம்மாள் வாங்காமலிறாள். ஏனெனில் இவை சற்று மலிவாய்க் கிடைக்கும். 'ஜாடி சற்று மூளியாயிருந்தா லென்ன? உடைந்த சீனிச்சட்டியை ஒரு புறமாய்ச் சாய்த்து அடுப்பில் வைத்தாலாயிற்று. உடைந்த கும்மட்டியை அசையாது ஒரு புறத்தில் வைத்திருந்தால் பத்து வருஷத்திற்கிராதோ!' என்று பொன்னம்மாள் நினைப்பாள். இவ்வாறு கடைவீதியில் வாங்கப்படும் சாமான்கள் எல்லாம் டிரைவர் காலின் கீழ்தான் வைக்கப்படுவது வழக்கம். பொன்னம்மாள் வீட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது அனேகமாய்க் கடலோரத்தில் உலாவிக் கொண்டிருக்கும் மகனையோ கணவனையோ கூட அழைத்துச் செல்லவேண்டியிருக்கும். இச்சாமான்களை அவர்கள் கண்ணுக்குப் புலப்படாமல் வீடு சேர்ப்பிக்கும் பொருட்டு டிரைவர் கால் நீட்டி முடக்க முடியாமல் கஷ்டப்படுவான். இவைகளை யொரு புறமாக நகர்த்த முடியாமல் ஆத்திக் கட்டு ஐந்தாறு அடுக்கிக்கிடக்கும். வீட்டிலிருக்கும் பசுமாட்டிற்கு ஆத்தி வாங்குதல் ஒளிவு மறைவில்லாவிடினும் அதுவும் முன்புறமே வைக்கப்படும்!

கரிமூட்டைமுதல் விறகுக்கட்டுவரை எதை வாங்கினாலும் அதை மோட்டாரிலேயே எடுத்துச் செல்லவேண்டும்! - இவ்வளவு வைபவத்தில் பொன்னம்மாள் மோட்டாரிலேயே கிராமத்திற்குப் போய் வரவும் தீர்மானித்தாள். 'நெம்மேலியார் மோட்டாரைப் பார்த்ததே கிடையாது. இம்முறை நமது காரில் போய் வரத்தான் வேண்டும்' என்று கட்டாயப்படுத்தினாள். கரடு முரடான பாதையில் கார் கெட்டுவிடுமென்று கைலாசம் வாதாடினார். கிழவன் கிழவி யுத்தங் கண்டு மருமகள் கேலி செய்யாமல் 'அதற்கென்ன? அம்மாள் இஷ்டப்படியே ஆகட்டும்' என்று கூறினாள். நகர வாசத்திலேயே மூளி அகப்பையும் உடைந்த சாமான்களும் தானே பெரியம்மாளுக்குக் கிடைப்பது வழக்கம். சொந்த கிராமம் சென்றால் வண்டியில் என்னென்ன சாமான்கள் அடுக்கப்படுமோவென்று டிரைவர் சின்னசாமி வெகுவாய் அஞ்சினான்.

★★★★★


மறுநாள் அதிகாலையில் கைலாசமும், பொன்னம்மாளுமாக மோட்டாரில் நெம்மேலி கிராமம் சென்றார்கள். பொன்னம்மாள் அங்கு சென்றதுதான் தாமதம்! அவ்வூரில் ஒருவீடு பாக்கியின்றிச் சென்று தன் பெருமையைப் பேசி வருவதென்றால் அது சாமானியமா? பிள்ளையின் உத்தியோகம், மருமகளின் சீர்வரிசை, மகன் தனக்குச் செய்திருக்கும் நகைகளின் அட்டவணை, பில்லைபோட்ட சேவகன் பின்தொடர கோவிலுக்குச் செல்லல். இதற்கே ஒருநாள் முழுதும் போதாது. அதிலும் குக்கிராமமாகிற நெம்மேலிக்கு மோட்டாரில் வந்திருக்கிறாள். உண்மையிலேயே அவ்வூராரெல்லாம், மோட்டாரையும், பொன்னம்மாள் காது வயிர ஓலையையும், சரிகைக் கொட்டடிச் சேலையையும், கல்லிழைத்த அட்டிகையையும் கண்டு அனைவரும் அதிசயித்து நின்றனர். "வாடகை மோட்டாரில் போனால் நமது அந்தஸ்துக்குக் குறைவு, நீங்கள் சொந்தக்காரில் தான் செல்ல வேண்டுமென்று என் பிள்ளை சொன்னான்" என்று வீடு வீடாகப் போய்ச் சொல்லிவருவதற்குள் நேரங்கடந்து பகற் சாப்பாட்டிற்கே ஒரு மணியாய் விட்டது. வீட்டின் பல பாகங்களிலுமுள்ள சாமான்களை ஓர் அறையில் அடுக்கிவிட்டு சீக்கிரம் புறப்படும்படி மனைவியைக் கைலாசம் துரிதப்படுத்தினார். மோட்டார், பிரயாணத்திற்குச் சித்தமாய் 'பம்! பம்!' என்று ஊதிய வண்ணம் தெருவாயிலில் வந்து நின்றது. பொன்னம்மாள் ஒவ்வொரு சாமான்களையும் எடுத்து வரும்போதெல்லாம் அவைகளை வழி நடையிலுள்ள அறையில் வைப்பதாய்க் கைலாசம் எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் அவை எல்லாம் சிறுகச் சிறுக மோட்டாரில் அடுக்கப் பட்டுவந்தன. முன்புறம் முழுதும் அடைத்தாயிற்று. டிரைவர் இனி வண்டியிலுட்காருவதற்குத் கதவை திறக்க முடியாது. தாண்டிக் குதித்தே உட்காரவேண்டும். இதற்கு மேல் புது விளக்குமாற்றுக் கட்டொன்றும் வைக்க வேண்டியதாயிற்று! 'அம்மா, அதிலுள்ள ஊகா முள்ளெல்லாம் என் உடையிற் பற்றிக்கொள்ளுமே' என்று சின்னசாமி மறுத்தான்.

'நீ இதை உனக்கருகில் வைத்துக் கொள்ளாவிட்டால் நான் என்ன செய்வேன் தெரியுமா? நீ ஒருநாள் மோட்டாரில் உன் சிநேகிதனை ஏற்றிக்கொண்டதையும் நீ வண்டியிலுட்கார்ந்து பீடி பிடிப்பதையும் சின்ன எஜமானரிடம் சொல்லிவிடுவேன்' என்று பொன்னம்மாள் அவனை அதட்டியதால் விளக்குமாற்றுக் கட்டும் மோட்டார் ஏறிற்று. இனியுள்ளவற்றைத் தாங்கள் உட்காருமிடத்தில் தான் வைக்க வேண்டுமென்பதைப் பொன்னம்மாள் அறிந்தாள். "என்ன, உங்களைத்தானே! இந்தப் பெட்டியை நாம் உட்காருமிடத்தில் வைத்துக்கொண்டால் என்ன?" என்று கணவனைக் கேட்டாள். "இதெல்லாமெதற்கு? ஊரில் வேண்டிய டிரங்குப் பெட்டிகள் அடுக்கிக் கிடக்கின்றன. பூட்ட முடியாத மரப்பெட்டி எதற்கு?" என்றார் கைலாசம்.

"இதென்ன நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்களே? இது ஆகி வந்த பெட்டியாயிற்றே. இது வாங்கின மறுநாள் தான் உங்களுக்கு ஏட்டு வேலை கிடைத்தது. அந்த மாதத்தில் கிடைத்த சம்பளம் இருபத்தைந்து ரூபாயையும் இதில் தான் வைத்துப் பூட்டினேன். இந்தப் பெட்டியாலேதானே நமக்கு இவ்வளவு அதிருஷ்டமுண்டாயிற்று!" என்று பொன்னம்மாள் எடுத்துக் கூறி அதை வண்டியிலேற்றினாள். அதற்கடுத்தபடியாக மூடியில்லாத ஐந்தரைப்பெட்டி யொன்று வந்தது.

"சென்னைப்பட்டணத்தில் தகர ஐந்தரைப்பெட்டி கிடைக்குமே" என்றார் கைலாசம்.

"நன்றாய்ச் சொன்னீர்கள் ! அந்தப் பாழுந் தகரப்பெட்டியில் கடுகு, மிளகு வைப்பதினால்தான் இக்காலத்தில் உடம்பு கெட்டுப்போகின்றது. இதில் சாமான் வைத்தால் சீக்கிரத்தில் செலவாகாமல் எனக்கு வளர்ந்து கிடப்பது வழக்கம்" என்று பொன்னம்மாள் கூறினாள்.

"ஐயோ! இந்த மர உரலும் உலக்கையு மெதற்கு?" என்று கைலாசம் கூவினார்.

"உங்களுக்கென்ன தெரியும். அந்தப் பாழும் மிஷின் அரிசி தின்பதால் ஜீரணமாவதில்லை. இதில் அரிசி குத்திச் சாப்பிடும்வரை ஒரு குறைவுமில்லாமலிருந்தது. இனி வீட்டிலேயே அரிசி தீட்டிக்கொள்ளவேண்டும்" என்றாள்.

"அடடா.. இந்த எந்திரமும் வேண்டுமா" என்று கைலாசம் திகைத்தார்.

"குடியானச்சி சரியாய் மாவரைப்பதில்லை. இதுவானால் தங்கம்போல் மெல்லிசாய் இருக்கும். நானே அரைத்துக் கொள்வேன்" என்று பொன்னம்மாள் சமாதானம் கூறினாள்.

"இந்த அம்மி எதற்கு?"

"வீட்டிலுள்ள அம்மி ஆமையோடு போல முதுகு தூக்கியிருக்கு. இதில் பருப்புத் துகையலரைத்தால் நிமிஷத்தில் மசிந்துவிடும்!"

"பழம் பாய்கள் வேண்டாமே!"

"உங்களுக்கென்ன தெரியும். குழந்தை எல்லாரையும் தன்னைப்போல் ஆயிரம் ரூபா சம்பளக்காரர் என்றே நினைத்து மரியாதை செய்கிறான். கண்ட தரித்திரங்களுக்கெல்லாம் உயர்ந்த ரத்ன கம்பளத்தைக் கொடுத்துவிடுகிறானே. வீட்டில் வரும் விருந்தாளிகளுக்கெல்லாம் படுக்க இந்தப் பாயை அங்கே கொண்டு போனால் சௌகரியம்."

இவ்விதமாகமே மண் அடுப்பு முதல் எல்லாச் சாமான்களும் வண்டிக்குள் வந்துவிட்டன. இனி வண்டியில் கால் வைக்கவும் இடமில்லை என்று கைலாசம் சத்தமிட்டார்.

"சரி, போனால் போகட்டும்! சற்று நெருக்கி உட்கார்ந்து எனக்கு இடங்கொடுங்கள். இந்த மாங்காய்ப் பானையைக் கீழே வைத்தால் உடைந்துபோகும். என் மடியில் வைத்துக் கொள்கிறேன். இந்த ஊஞ்சல் பலகையை மட்டும் வண்டிக்குள் மேலாக வைத்துவிட்டால் போதும்" என்றாள் பொன்னம்மாள்.

"இப்போதுள்ள சாமான்களே தலைக்குமேலு யரமாயடுக்கப் பட்டிருக்கிறதே" என்றார் கைலாசம்.

"தந்தம்போலக் கருங்காலி மரத்தில் இதைச் செய்தார் மாமனார். வெய்யில் தறுவாயில் இதில் உட்கார்ந்து ஆடிக்கொண்டிருப்பார். இதை எடுத்துப்போனால் கோடைகாலத்தில் காற்றோட்டமாக இதில் உட்கார்ந்துகொண்டிருப்பேன் " என்று பொன்னம்மாள் பிடிவாதம் செய்தாள். ஊஞ்சற் பலகையை எங்கே வைப்பது என்ற யோசனையுண்டாயிற்று.

"நாம் வண்டியில் உட்கார்ந்துக்கொண்டு கதவை மூடி விடுவோம். கதவுக்கு வெளியில் ஊஞ்சல் பலகையைச் சாய்த்து வைத்து விட்டால் நான் பிடித்துக்கொண்டு வருகிறேன்" என்று பொன்னம்மாள் உபாயம் கூறினாள். எப்படியாவது புறப்பட்டாற் போதுமென்று கைலாசம் வண்டியிற் புகுந்து உட்கார்ந்துகொண்டார். உரலும், அண்டாவும் முழங்காலி லிடிப்பதையும் பொறுத்துக்கொண்டார். பொன்னம்மாளும் வண்டியிலுட்கார்ந்து விட்டாளாயினும் கதவுக்கு வெளியிலுள்ள காலை உள்ளே இழுத்துக்கொள்ள மெத்த சிரமப்பட்டாள். கதவை மூட முடியாதலால் டிரைவர் கதவைக் கயிறு கொண்டு கட்டிவைத்தான். கால் வைத்து ஏறும் படிக்கட்டில் ஊஞ்சலைச் சார்த்தினான். பொன்னம்மாள் வண்டியிலிருந்தவாறு தன் மடியிலிருந்த மாங்காய்ப் பானையையும் வெளியிலிருந்த ஊஞ்சற் பலகையையும் இரு கைகளால் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டாள். நடுவழியில் விழுந்து விட்டால் என்ன செய்கிறதென்று கைலாசம் சொல்லிப் பார்த்தார். "நன்றாயிருக்கு! இதென்ன கட்ட வண்டியா. மோட்டார் விமானம் போல் பறக்காதோ" என்று பொன்னம்மாள் பெருமை பேசிக்கொண்டாள்.

வண்டி சற்று நகரவாரம்பித்ததும் "ஐயோ! மறந்து போய்விட்டேனே! வாசல் குறட்டில் சங்கிலிகளை வைத்திருக்கிறேன். சங்கிலியில்லாமல் ஊஞ்சலென்ன பிரயோஜனம்" என்று பொன்னம்மாள் ஞாபகப்படுத்தினாள்.

கைலாசம் இறங்க முடியாத நிலையில் உட்கார்ந்திருப்பதால் வந்த கோபத்தை யடக்கிக்கொண்டு பேசாது இருந்தார். இதை கவனித்துக்கொண்டிருந்த மேலாத்து முத்துவய்யர் அச்சங்கிலிகளை இழுத்துவந்து வண்டிக்குள் போட்டார், வண்டி செல்லச்செல்ல ஒவ்வொரு சாமானும் அசைந்து சரியத் தொடங்கிற்று. இனி காலைத் தொங்கவிடமுடியா தென்ற நிலைமையில் காலை மடக்கிக் கொண்டு கைலாசம் உட்கார வேண்டியதாயிற்று.

என்ன செய்வார் பாபம்! எப்படியாவது ஊர் சேர்ந்தால் போதுமென்று பொறுமையுடன் இருந்தார். கூடுவாஞ்சேரிக்கருகில் வரும்போது மாலை மணி ஐந்தடித்து விட்டது. டிரைவர் பொழுதுடன் திரும்பி விடலாமென்றதால் விளக்கை யெடுத்து வராமலிருந்துவிட்டான். எதிரில் வரிசை வரிசையாக வைக்கோல் வண்டிகள் வந்த வண்ணமிருந்தன. கட்டியிருந்த கயிறு அறுந்து கதவு திறந்து கொண்டது. அதில் சாத்தியிருந்த ஊஞ்சல் கீழேவிழுந்து விட்டதுடன் உள்ளிருந்த செப்புக்குடமும் பொன்னம்மாள் மடிமீதிருந்த, குங்கிலியம் கட்டிப் பழகிய மாங்காய்ப்பானையும் உருண்டு விழுந்தன. பொன்னம்மாளிட்ட கூச்சலினால் டிரைவர் வண்டியை நிறுத்தினான். கைலாசம் இருந்தவிடம் விட்டசைய முடியாது டிரைவரை நோக்கினார். அவனும் இருக்கை விட்டெழுந்திராமல் உட்கார்ந்திருந்தான்.

"என்னடா முட்டாளாயிருக்கிறாய்! கீழிறங்கி விழுந்த சாமானை யெடுக்காமல் வேடிக்கை பார்க்கிறயா" என்று அதட்டினார்.

"சுவாமி, - அசையவும் இடமில்லை" என்று சின்னசாமி பதிலளித்தான். கைலாசம் மெத்த சிரமத்துடன் முற்பக்கத்தை எட்டிப் பார்த்தார். இரண்டுகூடை நிறைய கற்சட்டிகள், எண்ணெய்க்குடம் இரண்டு, பழையசாக்கு மூட்டை, கூடைகள், சல்லடை, முறம், கன்றுக்குட்டிச் சங்கிலி, விபூதிமுட்டான் நிரப்பிய கூடை, செம்மண் கட்டிகள், தயிர் கடையும் மத்து, தென்னங் கயிறு, பழைய உறிகள், பெரிய சந்தனக்கல், விளக்கு மாற்றுக் கட்டு, வைக்கோல் பிறிமணைகள், அகப்பைக் கூடு, சரகுக் கட்டுகள், தென்னோலைச் சுருள்கள், கற்சட்டிகள், தேங்காய் நார், உறுமட்டை நிரப்பிய சாக்குகள் முதலிய சாமான்கள் அடுக்கப்பட்டு அவைகள் நடுவில் டிரைவர் விளங்கினான். இந்தப்பரிதாபக் காட்சியைக் கண்டு கைலாசத்திற்குப் பிரமாதமாய்க் கோபம் மூண்டுவிட்டது.

"உன் அற்பபுத்தி போகவில்லையே? காசு பெறாத சாமான்களை எல்லாம் அடுக்கிவைத்திருக்கிறாயே, கஷ்டப்பட்ட நாளெல்லாம் போறாதா? உன்னைப் பிடித்த தரித்திரம் மட்டும் விடமாட்டேனென்கிறதே? பிள்ளை சம்பாதித்தும் பெரும் புத்தியைக் காணோமே? இன்னமும் சாணி தட்டிய புத்தியை விடமாட்டேனென்கிறாயே! மோட்டாரில் இதைத்தான் வைக்கலாமென்ற விவஸ்தை கிடையாதா? என் முழங்கால் முகத்திலிடிக்கும்படி இங்கே வைத்த சாமான் போதாதா? டிரைவர் நகரவும் இடமில்லையே? கீழே விழுந்ததை யார் எடுப்பது? தரித்திரப் பிணமே, மூதேவி, கழுதை, முட்டாள், பீடை, சனியன், அற்பம்" என்று சரமாரியாய்த் திட்டத் தொடங்கினார்.

அச்சமயம் எதிர்ப் புறத்திலிருந்து மோட்டாரில் வந்து கொண்டிருந்த இரண்டொரு சுதேசி கனவான்கள் இவர்களைச் சற்றும் கவனியாமற் சென்று விட்டார்கள். இந்த மட்டும் அவர்கள் வண்டியிலுள்ளதைப் பாராமல் சென்றார்களே என்று கைலாசமும் சற்று மனம் தேறினார். அடுத்தாற்போல் மோட்டாரில் வந்த ஆங்கில கனவான் மட்டும் இக்கோலாகலத்தைக் கண்டு தமது வண்டியை நிறுத்தி 'என்ன விசேஷம்?' என்று வலுவில் விசாரித்தார். வெட்கத்தை மனதிலடக்கிக் கொண்டு கைலாசம் தான் கிராமம் சென்றதையும் மனைவி எல்லாச் சாமான்களையும் அள்ளி வந்திருப்பதையும் தெரிவித்தார். இதைக்கேட்டதும் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு துரை விழுந்து விழுந்து சிரித்தார். ஒருவாறாகச் சிரிப்பை யடக்கிக்கொண்டு "பெண் பிள்ளைகள் என்றால் எங்கும் இப்படித்தான். வீட்டுச் சாமான்களில் அவர்களுக்குப் பிரியம் அதிகம். ஒன்றையும் விடமாட்டார்கள். இதிலென்ன குற்றம்" என்று பதிலளித்துத் தன் ஆட்களைக் கொண்டு விழுந்த சாமான்களை எடுத்து மீண்டும் அடுக்கி ஊஞ்சலைப் பின்புறத்தில் வைத்துக் கட்டச்செய்து 'குட்பை' சொல்லிச் சென்றார். இருட்டும் முன் வீடுசேர வேண்டுமே என்ற பயத்தால் சின்னசாமி வெகுவேகமாக மோட்டாரை ஓட்டிச் சென்றான். சென்னைக்கு இன்னம் நான்கு மைல்கள்தான் பாக்கி.

"அடடா! இங்கே இருந்த முக்காலியைக் காணோமே. ஐயோ! அது ஆகிவந்த பொருளாயிற்றே! வழியில் விழுந்து விட்டிருக்கிறதே"' என்று பொன்னம்மாள் கூச்சலிட்டு வண்டியை நிறுத்தச் சொன்னாள்.

"முக்காலி போனால் நாற்காலி வருகிறது. இதற்கென்ன பிரமாதம். இனி நீ விழுந்துவிட்டால் கூட நான் எடுக்கப் போவதில்லை! உனக்கு ஆகிவராத பொருள் உண்டா!? விளக்கில்லாத வண்டியை வெளிச்சத்துடன் வீடு சேர்க்க வேண்டும்" என்று கைலாசம் கர்ஜித்தார். இந்தக்ஷணம் வண்டியைத் திருப்பத்தான் வேண்டுமென்று பொன்னம்மாள் போராடினாள். கிழவனும் கிழவியும் போர் புரிவது கண்டு சகிக்காமல் டிரைவர் சின்னசாமி வண்டியைத் திருப்பினான். சாமான்கள் விழுந்த விடத்தில் எவ்வளவு தேடியும் முக்காலி அகப்படவில்லை. சுதேசிக்கடையில் நல்ல முக்காலிகள் கிடைக்குமென்று கூறி சின்னசாமி வண்டியைச் சென்னைப் பக்கம் திருப்பினான். "குழந்தை பிறந்தபோது எங்கம்மாள் அதைச் சீர்கொடுத்தாள். நான் அதில் உட்கார்ந்து தான் குழந்தையைக் குளிப்பாட்டுவது. அதில்லாமல் தயிர் கடையவே மாட்டேன், ஆகி வந்த பண்டத்தை எடுத்துவந்தேனே, இது வந்தவேளை மாட்டுப் பெண்ணுக்குக் குழந்தை பிறக்க வேண்டுமென்றல்லவோ வேண்டிக்கொண்டு வந்தேன். அடியம்மா, கிராமதேவதை கோவிலில் இறங்கி நமஸ்காரம் செய்வது வழக்கமென்று சொன்னால் கேட்டீர்களா? அதனாலே தான் அச்சானியம்போல முக்காலி கெட்டுப்போயிற்று. புருஷர்களாயிருந்தால் என்ன. பெண்டாட்டி சொல்வதைக் கேட்காவிட்டால் அந்த வீடு விளங்கவே மாட்டாது. 'ஏட்டிக்குப் போட்டி ராமனுக்குப் பாட்டி.' இப்படியே உங்களுடன் நான் காலங்கழித்து வருகிறேன்! என்னை அடக்கிய நாளெல்லாம் போதாதா? ஏதோ அவளுக்கும் வயதாகிவிட்டது என்று நீங்கள் எண்ணுவதில்லையே. கிராமத்திற்குச் சென்றால் இஷ்டமித்திர பந்துக்களிடம் பேச வேண்டாமா? அங்கும் 'புறப்படு, புறப்படு' என்று அதட்டினீர்கள். சாமானை ஏற்றும்போது வேண்டாம் வேண்டாம் என்றால் அது அபசகுனமில்லையா? அருமையான பொருள் தொலைந்தது! போதும்! போதும். இனிமேல் என் ஜன்மாயுசுக்கும் உங்களுடன் கூட வெளியே வரப்போவதில்லை. மேலாத்து முத்து எதிரில் வந்தபோதே ஒற்றைப் பிராமணன் எதிரில் வருகிறானே என்று எண்ணினேன். அதற்கேற்றது போல கிளிபோலிருந்த முக்காலி தொலைந்துபோயிற்று" என்று பொன்னம்மாள் கோபித்தாள்.

"வேண்டவே வேண்டாம். இன்று பட்ட அவதி ஆயுள் முடிய எனக்கு நினைவிருக்குமே. ராமேசுவரம் சென்றும் சனீச்வரன் வேண்டுமா? இந்தத் தடவை எனக்கு புத்தி வந்துவிட்டது! இனி எங்கள் அப்பன் ஆணை! உன்னை யழைத்துக்கொண்டு எங்கும் செல்லவே மாட்டேன்" என்று கைலாசம் சொல்லி முடிப்பதற்குள் மோட்டார் வீட்டு வாயிலில் நின்றது. ஊர் சென்றவர்கள் இன்னம் வரவில்லையே என்று தண்டபாணி தெருவிலும் பாக்கியலஷ்மி வழிநடையிலும் நின்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

வண்டி வந்து நின்றும் உள்ளிருந்தவர்கள் இறங்கி வரக்காணோம்! காரணத்தை வண்டியினருகில் வந்த பின்பே தண்டபாணி அறிந்து கொண்டார். அதில் அடைத்து வைத்திருந்த சாமான்களைக் கண்டதும் தன்னையறியாமல் உண்டான சிரிப்பை வாய்க்குள் அடக்கிக்கொண்டு வேலையாட்களை கொண்டு சாமான்களை ஒவ்வொன்றாய்க் கீழிறக்கினார்.

"ஏன் அம்மா, சாமான் கொண்டு வருவதாகச் சொல்லியிருந்தால் ஒரு ஆளை கூட அனுப்பியிருக்க மாட்டேனோ" என்று தாயைக் கேட்டார்.

"உன் அப்பா வண்டியில் பாதி அடைத்து உட்கார்ந்துகொண்டு அடித்த கூத்துப் போறாதா? ஆள் ஒருவனும் வந்திருந்தால் இன்னம் இடமடைத்துக் கொண்டு விடாதா!" என்று பொன்னம்மாள் பதிலளித்தாள்.

இந்த மட்டும் தப்பிப் பிழைத்தேனென்று கைலாசம் வண்டி விட்டிறங்கினார். பொன்னம்மாள் மருமகளைக் கண்டதும் "அடியம்மா! இந்தக் கிழவரை யழைத்துப் போய் போதும் போதுமென்றாய்விட்டது. ஒரு சாமானையும் எடுக்க விடாமல் அவதிப்படுத்தினார். அழகான ஆகி வந்த முக்காலியைத் தொலைத்தாயிற்று. 'அடே! வண்டியை நிறுத்தடா! வழியில் முக்காலி விழுந்து விட்டதே!' என்று கூவினேன். வண்டிக்காரன் மீது என்ன குற்றம். உன் மாமனார் வண்டியை நிறுத்தமாட்டேனென்று பிடிவாதப்படுத்தினார். உடனே சென்று பார்த்தாலல்லவா கிடைக்கும். ஆகி வந்த முக்காலி! அழகான முக்காலி! ஆசைப்பட்டு எடுத்துவந்தேன். சகுனத்தடைபோல ஒவ்வொரு சாமானையும் வேண்டாம் வேண்டாமென்றே தடுத்தார். முக்காலி கெட்டுப்போயிற்று" என்று கூறினாள்.

வழியில் விழுந்து விட்டதாகப் பொன்னம்மாள் சாதித்த முக்காலி வண்டி வந்த வேகத்தில் உருண்டு அண்டாவிற்குள் கிடந்தது. அதுகண்டு பொன்னம்மாள் சந்தோஷித்தாளாயினும் குங்கிலியம் கட்டிப் பழக்கின மாங்காய்ப் பானை உடைந்து போன வருத்தத்தை மட்டும் மறக்கவே இல்லை! ஒவ்வொரு வருஷத்திலும் மாவடு ஊறுகாய் போடும்பொழுதெல்லாம் அந்த மண் பானையின் வடிவைப்பற்றியும் அழகைப் பற்றியும் வர்ணித்துக்கொண்டே இருந்தாள்.

மண் பானையை மறப்பதெங்ஙனம்?

(நன்றி: விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - பாகம்-1, யாவரும் பதிப்பக வெளியீடு)
வி. பாலம்மாள்
Share: 




© Copyright 2020 Tamilonline