Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | வாசகர்கடிதம் | முன்னோடி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
பன்றி மாடன்
- சுந்தர பாண்டியன்|ஏப்ரல் 2021|
Share:
அன்றைக்கு கொட்டைகைக் கால் நட்டார்கள் சுடலைமாடன் கோவிலில். அடுத்த வியாழக்கிழமை கொடை. கொடை என்றால் ஊரே குதூகலப்படும். அது ஒரு பெருங்கொண்டாட்டம். குழந்தை முதல் வயசானவர்கள் வரை கொடை, அதுவும் சுடலைமாடன் கோவில் கொடை என்றால் அப்படியொரு கொண்டாட்டம்.

ஆனால் சாமி பன்றியைக் காணவில்லை என்பதுதான் பெரும்பேச்சாக இருந்தது. நாகர்கோவில் ஒழுகினசேரி பக்கமிருந்து இரண்டு லாரி நிறையத் தென்னை ஓலை மூங்கில் கலை அலங்காரப் பொருட்களோடு வந்து ஆட்கள் சேர்ந்தனர். லாரிகளைக் கண்டதும் ஊரில் பலர் வந்து அங்கே கூடினார்கள். லாரியில் இருந்தது கட்டுக்கட்டாக இறங்குவதை அவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். காலாங்கரையில் எப்போதும் அப்படித்தான். எதற்குத்தான் கூடவேண்டும் என்ற விவஸ்தையே இல்லை. எல்லாத்துக்கும் கூடுவார்கள். கூட்டம் பாக்கவும் ஒரு கூட்டம் வரும்.

சுடலைக்கு ஆடும் சாமி கொண்டாடி ஆறுமுகத் தேவர் இப்போதே ஆடுவதற்குத் தயாராவதுபோல் வந்து நின்றார். வேலுத் தேவரும் இப்போதே ஆடுவெட்டத் தயார். ஆறுமுகத் தேவரின் மைத்துனர் ஆறுமுகத் தேவர்தான் பெரிய சாமி. அவர் சுடலைமாடனுக்கு ஆடுவது மிகப் பயங்கரமாக இருக்கும் அவர் சல்லடம் மாட்டி தலையில் குல்லா வைத்து மார்பிலும் தோளிலும் சந்தனம் பூசி கையிலே வல்லயத்தை எடுத்துவிட்டால் போதும், சுடலைமாடனே துள்ளிக் குதிப்பதுபோல இருக்கும். அவர் நாற்பது நாள் விரதம் இருந்து ஆடுவார். விரதம் என்றால் சாதாரண விரதம் இல்லை. ரொம்பவும் சுத்த பத்தமான விரதம். திருச்செந்தூருக்குப் போய் சமுத்திரத்தில் தீர்த்தமாடி திருநீறு எடுத்துக் கொண்டு வருவார். எத்தனையோ பேர் கள்ளச்சாமி ஆடிக் கொண்டிருக்கும் போது இவர் ஒருவர்தாம் இருபத்தோரு வயதில் ஆட ஆரம்பித்து, இன்று வரை நல்லபடியாக ஆடிக் கொண்டிருக்கிறார், நாற்பது வருடங்களாக.

அவரது தாத்தா பேரும் ஆறுமுகத்தேவர்தான். அவரும் பெரிய சாமி கொண்டாடிதான். தாத்தாவின் அம்சமாகப் பேரன் இப்போதும் ஆடி வருகிறார். அவரது சாடையில் மட்டுமல்லாமல் ஆடும்போது செய்யும் சேஷ்டை மற்றும் பாவனைகளிலும் தாத்தாவைப் போலவேதான் இருந்தார்.

வெள்ளிக்கிழமை ராத்திரி கொடைக்குப் பன்றியின் இரத்தத்தைச் சாம வேளையில் குடிப்பதும் அவர்தான். அதற்கென்றே ஒரு பன்றி எப்போதும் அவரது மச்சினன் வேலுத் தேவர் வீட்டில் வளர்ந்து கொண்டு இருக்கும். அந்தச் சாமிப் பன்றியை யாரும் எதுவும் செய்யமாட்டார்கள். பெரும்பாலான நேரங்களில் கட்டித்தான் போடுவார்கள். அதற்கு வேண்டிய கஞ்சி, சோறு போன்றவற்றை அதற்கே உரிய தொட்டியில் போடுவார்கள். நன்றாகத் தின்றுவிட்டு கொழுத்து வளரும். பீ திங்க மட்டும் அனுமதிக்க மாட்டார்கள். அதனை அவிழ்த்து விட்டால் காடு மேடெல்லாம் சுத்துமே ஒழிய, கண்ட இடத்தில் வாயை வைக்காது. எங்க சுத்தினாலும் பொழுதடைய வீட்டுக்கு வந்துவிடும்.

இப்படி வளர்த்த பன்றியை வெள்ளிக்கிழமை சாயங்காலம் கொட்டு முழக்கோடு போய்ப் பிடித்துக் கொண்டுவருவார்கள். இதுக்குப் பேரு 'வேட்டைக்குப் போறது' என்பார்கள். ஆனால் அவர்கள் ஒன்றும் வேட்டையாடுவது இல்லை. அது கெடக்குற எடத்தில்தான் கெடக்கும். ஆனா வழக்கத்துக்கு மாறாகக் கொட்டுச் சத்தமும் சனக் கூட்டமும் அதுக்குப் பயத்தையும் கலசலையும் உண்டு பண்ணும். அதனால் கயத்த இழுத்துக்கிட்டு அது அங்கன இங்கன ஒளியப் பார்க்கும். நாலு அஞ்சு பேரு ஓடிப்போயி ஒரே அமுக்காக அமுக்குவார்கள். அது ஏதோ என்னமோன்னு பயந்து 'வீர் வீர்' என்று கத்தும். நல்ல நொகத்தடியைச் சொருவி முன்னத்தி காலு ரெண்டையும் பின்னத்தி காலு ரெண்டையும் தனித்தனியே கட்டித் தொங்கப் போட்டு தூக்குவாங்க. எல்லாம் ஆறுமுகத் தேவர் மேற்பார்வையில்தான் நடக்கும்.

பிறகு அந்தப் பன்றியை ஆசாரிமார்த் தெரு கிணத்தடிக்குக் கொண்டு போயி வாளி வாளியா தண்ணியை எறைச்சி ஊத்தி நல்லா குளுப்பாட்டுவாங்க. அப்பவும் அது 'வீர் வீர்' எனச் சத்தம் போடும். ஆறுமுகத் தேவர் பக்கத்துல வந்து தேங்காய் பழம் வச்சி சூடம் கொளுத்தி கும்பிடுவாரு. சுத்தி இருக்குற எல்லா சனங்களும் கும்பிடும். ஆறுமுகத் தேவர் அங்க நிக்கற எல்லாருக்கும் நெற்றியில் திருநீற்றைப் பூசி உச்சந்தலையிலயும் கொஞ்சம் அள்ளிப் போடுவாரு. எல்லாரும் வலது கையால வாயைப் பொத்திக்கிட்டு தலையைக் குனிஞ்சு ஏத்துக்கிடுவாங்க. எப்பேர்பட்ட கொம்பனா இருந்தாலும் சரிதான். வால சுருட்டி கவுட்டுக்கு இடையில வச்சுக்கிட்டு கமுக்கமா நிப்பாங்க.

அந்த பன்றி ராத்திரி பனிரெண்டு மணிவரைக்கும் சொள்ளமாடன் பக்கத்துலயே கெடக்கும். இருட்டுற நேரத்திலேயே ஏற்கனவே நட்டு வச்சிருக்கும் நாலு கல்தூண்கள் மேல பரண் கட்ட ஆரம்பிப்பாங்க. பன்றி எப்படியும் ஆள் உயரத்துக்கு நூறு கிலோவுக்கு மேல இருக்கும். அஞ்சு வருச வளர்ப்பு பன்றிய ஆனைக்குட்டி மாதிரி ஆக்கியிருக்கும். அத தாங்கற மாதிரி நல்ல வலுவான கம்புனால பரணக் கட்டுவாங்க. சாமக் கொடைக்கு அதன்மேல பன்றிய மலத்திப்போட்டு நாலு காலையும் இழுத்து நாலா பக்கமும் கட்டிவிட வேலுத் தேவர் அதுக்க நெஞ்சை அதுக்குன்னே வச்சிருக்கிற கத்தியால கீறுவாரு. ஒரு சத்தம் இருக்காது. சனங்க மூச்சு விட மாட்டாங்க. உரித்த கதலிவாழைப் பழத்த பன்றியின் நெஞ்சாங்குழயில போடுவாங்க. ஆறுமுகத்தேவர் ஓங்காரக் கூச்சல் போட்டுக்கொண்டே பன்றியின் நெஞ்சில் முகத்தை வைப்பார். உடனே ஒருத்தர் பட்டுத்துணியால் அவரை மூடுவார். ரெண்டே நிமிஷம்தான். ஆ.. என்று சப்தமிட்டவாறு எழுந்து ஆதாளி போட்டு ஆடுவார். வாயெல்லாம் இரத்தம் வடியும். அதுவரை மௌனமாக இருந்த கொட்டு மேளமும் கொம்பு தப்பும் 'டண்டணக்கு டண்டணக்கு' என்று கொட்டிக் குமுறிவிடும். அவர் ஆடுகிற ஆட்டத்தில் அவர் குடித்த இரத்தமெல்லாம் அப்போதே ஜீரணம் ஆகிவிடும் போலத் தோன்றும். இதுவரை அவர் எட்டு கொடைக்காவது ரத்தம் குடித்திருப்பார்.

ஆனால் இந்தக் கொடைக்குப் பன்றியைக் காணவில்லை. ஊரெல்லாம் இதே பேச்சுதான். எல்லோருடைய முகத்திலும் ஏதோ இனம்புரியாத பீதி. என்ன ஆகுமோ ஏது ஆகுமோ எனக் கலவரம். கொடைக்கு இன்னும் எட்டே நாள்தான். பன்றி எங்கே போனதோ தெரியவில்லை.

"என் ஆயுசுக்கும் இது போல நடந்ததில்லை" என்றார் எண்பது வயதைக் கடக்கும் சொக்கலிங்கத் தேவர்.

"ஆமா உண்மைதான்" என்று ஒத்துக்கொண்டார் அவருக்கு சேக்காளியான பலவேசக் கோனார்.

"ஏதோ சாமிகுத்தம்தான்" என்றார் பிச்சையா ஆசாரி.

ஆசாரிமாரு கோவில்ல அவருதான் சாமி கொண்டாடி.

"குத்தமென்ன குத்தம். எல்லாம் வாய்க் கொளுப்புதான்" என்றார் தேவர்.

"என்ன சொல்றீங்க?" என்று கேட்டான் பாண்டி. அவன் ஒரு மாதமாக ஊரில் இல்லை. திருநெல்வேலி பக்கம் ரைஸ்மில் வேலைக்குப் போயிருந்தான். கொடைன்னு பத்து நாள் லீவு கேட்டுட்டு இன்னைக்கு வெள்ளனதான் வந்தான்.

"ஒனக்குத் தெரியாதாடா?"

"தெரியாது மாமா."

"பன்னிய யாரு வளக்குறவன்னு உனக்குத் தெரியுமில்லியா?"

"இது தெரியாதாக்கும். வேலுத் தேவர்தான்."

"அவரு பொஞ்சாதிதான் அதுக்கு கஞ்சு ஊத்துறது மாசத்துக்க ஒரு தடவ குளுப்பாட்டுறது எல்லாம்."

"ஆமா...அதான் தெரியுமே."

"ஒரு நா போன மாசம் என்ன செஞ்சா தெரியுமோ?"

"அதுதான தெரியாது."

"ஏடே நல்லா கேட்டுக்கா. மத்தியான கஞ்சிய ஊத்தி வச்சிக்கிட்டு பன்னிய தேடியிருக்கா. காணல. வரும் வரும்னு பாத்தா வரவேயில்ல. சாயங்காலம் போல எங்கருந்தோ வந்துச்சி. வேலுத் தேவர் பொஞ்சாதிக்கு கோபம்னா கோபம் அப்பேர்ப்பட்ட கோபம். 'கஞ்சி ஊத்தி வச்சு எவ்வளவு நேரம் ஆச்சு. எங்கன போயி பீ தின்னுட்டு வாற'ன்னு திட்டினாளாம். பன்னி கொஞ்ச நேரம் நின்று அவளையே பாத்துச்சு. 'என்னா பாக்குற. இனி கஞ்சும் இல்ல காடியும் இல்ல. எங்கனயாவது பீ திங்கப் போ'ன்னு பெறவாசல் இரும்புக் கதவ சாத்தி தாப்பா போட்டுட்டா. ராத்திரி பன்னிய கட்டி போடுறதுக்கு வேலுத் தேவர் பின்வாசலுல போய்ப் பாத்தா பன்னிய காணோம். அவரு ஊர் முழுக்கத் தேடுனாரு. காணோம்."

"ஆச்சரியமா இருக்கே."

"அன்னைக்குப் போன பன்னி. கோயிலுக்கு வரி எழுதுன மறுவாரம். ஒரு மாசம் எங்க போச்சுன்னே தெரியலை. ஆனால், அந்த வார வெள்ளிக்கிழமை ராத்திரி சுடலைமாடனுக்கு எண்ணை சாத்தி பூமாலை போட்டு தேங்கா உடைச்சு வச்சு தீபாராதன காட்டி ஆடி சொன்னாரு: எப்படியும் பன்னி வந்துரும்னு."
"வரும். வராம எங்க போகும்" என்றார் பாலையா நாடார்.

இவர்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போதே ரெண்டு லாரி லோடும் எறங்கிடிச்சி. பத்து பேரு லாரி கிட்டயே வந்திருந்தாங்க. டிரைவரோட முன்சீட்டுல இருந்த கணபதியா பிள்ளை லாரிகளை அனுப்பி வச்சிட்டு வந்து சாமியைக் கும்பிட்டாரு.

தேங்கா ஒடச்சு வச்சு ஊதுவத்தி கொளுத்தி கும்பிட்டுவிட்டு மளமளன்னு வேலய ஆரம்பிச்சாரு. தென்மேற்கு மூலையில முதல் குழி தோண்டினாங்க. அதுல பெரிய உயரமான நூல கட்டினதும் மற்ற மூலைகளிலும் குழிகள் சரசரவென பறிக்கப்பட்டன. ஏதோ சர்க்கஸ் போல மூன்று நாளைக்குள் பந்தல் கட்டும் வேலை முடிந்தது. எண்பது அடி அகலமும் நூற்று இருபது அடி நீளமும் கொண்ட கோவிலுக்குள் இருபத்தொரு பூடமும் புத்தம் புதுசாக இருந்தன. பந்தல் எல்லாவற்றையும் மூடிக் கொண்டது. ஓடைக்கு கிழக்கே சுடலையின் கல் பூடம். அதற்கு தனிப் பந்தல்.

பன்றி வந்து சேரவில்லையே என்ற கவலை மக்களிடம் சுரம்போல ஏறியது. வேலுத்தேவர் மனைவியோ ஒரு மாதம் ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை. மண்டையிலும் மாரிலும் அடித்துக்கொண்டு அழுகிறாள். அவள் புருசனோ அவளை அடிக்கவில்லை, புடிக்கவுமில்லை. அன்றைக்கு அவளை முறைத்துப் பார்த்துவிட்டு மௌனம் ஆனவர்தான். அதற்கு பிறகு அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அவள் கையால் பச்சைத் தண்ணிகூட வாங்கிக் குடிக்கவில்லை. எல்லாம் அவருடைய மகள் வடிவுதான்.

பந்தல்காரர்கள் நாலாவது நாளிலிருந்து அலங்காரம் செய்ய ஆரம்பித்தனர். வெள்ளைத் துணியை உட்பந்தல் கூரை முழுவதும் கட்டி அதில் வண்ண வண்ணத் துணிகளைக் கட்டினர். அலங்காரக் கண்ணாடி விளக்குகள் தொங்கவிடப்பட்டன. இரண்டு நாளில் தேவலோகம் போல் காட்சி அளித்தது.

புதன்கிழமை காலையிலேயே வடக்கன்குளத்திலிருந்த அன்னத்தாய் சவுண்ட் சிஸ்டம் ஒரு வேனில் வந்து இறங்கியது. ஊர் முழுக்க டியூப் லைட்டுகள். பந்தல் மேலே சீரியல் லைட்டுகள். முத்துராமலிங்கத்தேவர் ஒரு பக்கமும் முருகன் மறுபக்கமும் நடுவில் கோபுரமுமாக கட்அவுட். அதில் அணைந்து எரியும் வண்ண விளக்குகள்.

பல ஊர்களில் இருந்தும் வரிக்காரர்கள் வந்து வீடுகளின் தொழுவிலும் திண்ணையிலும் புறவாசலிலும் பொங்கித் தின்ன ஆரம்பித்தனர். சொந்த பந்தங்கள் எல்லாம் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். எல்லோரது வாயிலும் பன்றி வந்துவிடுமா என்ற கேள்விதான்.

"இந்தக் கொடைக்கு பன்னி இல்லியா?"

இருக்கந்துறை செல்லப்பாண்டித் தேவர், ஆறுமுகத் தேவரிடம் கேட்டார்.

"இல்லாம என்ன? பன்னி வரும். இல்லன்னா இனிம நான் ஆட மாட்டேன்" என்று சொன்னார்.

இருக்கந்துறைக்காரருக்கு நம்பிக்கை இல்லை.

"இந்தக் காலத்துல சாமியாவது பூதமாவது" என்றார் நக்கலாக.

வேப்பிலாங்குளத்து சுப்பயைாத் தேவர் விடவில்லை.

"அப்ப எதுக்கு இவ்வளவு தொகை செலவழிச்சு கொடை குடுக்கணும்?" என்று கேட்டார்.

"அதுவா எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான். சொந்த பந்தங்கள பாக்கத்தான்."

அவர் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று நினைப்பது போல் ஊருக்குள் இப்போதே கேன் கேனாக சாராயம் நடமாட ஆரம்பித்துவிட்டது.

வியாழக்கிழமை அதிகாலையிலே சவுண்ட் சிஸ்டம் அலற ஆரம்பித்து விட்டது. எல்லாம் பக்திப் பாடல்கள்.

ஆறுமுகத் தேவர் குளித்துவிட்டு காலையிலேயே கோயிலுக்கு வந்துவிட்டார். மத்தியானத்துக்குள் வில்லுப் பார்ட்டி, மூணு செட் நையாண்டி மேளம், இரண்டு செட் கரகாட்டம், ஒரு செட் காணியான். கொம்பு, தப்பு, மேளக்காரர்கள் எல்லாம் வந்து மேற்கே பள்ளிக்கூடத்துல வந்து தங்க ஆரம்பிச்சிட்டாங்க. மத்தியான சாப்பாடு தவுசு பிள்ளை பொறுப்பு.

கோவிலில் வந்து இறங்கும் தோவாளை பூக்களையும். வடசேரி தேங்காய் பழங்களையும் கண்காணித்துக் கொண்டிருந்தார் கொடை விழாக் கமிட்டித் தலைவர் பொறுப்புல இருந்த பரமசிவத் தேவர்.

பூக்காரன் வந்து இறங்கியதும் கேட்ட முதல் கேள்வி "என்ன தேவரே, பன்னி வந்துடிச்சா?"

பரமசிவத் தேவரோ 'இல்லை' என்பது போல உதட்டைப் பிதுக்கினார்.

சாயங்காலம் நாலு மணிக்கு வடக்கன்குளம் ஐயர் பூசையைத் தொடங்கி இருபத்தோரு பூடத்துக்கும் கலசங்கள் வைக்க ஆரம்பித்தார். மேளக்காரர்கள். ஆறு மணிக்குத் தயாரானார்கள். ஆறுமுகத் தேவர் கோயில் வெளிச்சுவர் விளிம்பில் சாய்ந்து மேற்கேயே பார்த்துக் கொண்டிருந்தார். சூரியன் மேற்கு மலையில் மறைந்து கொண்டிருந்தான். இருள் மெல்லக் கவிந்தது.

பளிச்சென்று எல்லா லைட்டுகளும் எரிய, கோவில் ஒரு சொர்க்க பூமியாகக் காட்சி அளித்தது.

கொடி அழைக்க வேண்டும். வழக்கமாக ஆறுமுகத் தேவர்தான் மேற்கே திரட்டில் முட்டை வெலி குடுப்பார். இன்னும் அவர் தயாராகவில்லை. அவர் இந்த வருசம் ஆடமாட்டாரோ என்று பலர் சந்தேகப்பட்டனர். சிலர் அவருக்குப் பதிலாக ஆட ரெடியாகிக் கொண்டிருந்தனர்.

பன்றி இந்த வருசம் இல்லாவிட்டால் என்ன? ஆட்டுக்கிடாய்கள்தான் ஐம்பதுக்கு மேல் இருக்கின்றனவே. ஆனால் ஆறுமுகத்தேவரின் நம்பிக்கை சரியவில்லை.

மேளம் 'கணகண' என்று ரெண்டு செட் முழங்க ஆரம்பித்ததும், ஆறுமுகத் தேவர் ஓங்காரக் கூச்சலோடு துள்ளிக் குதித்தார். எல்லோரும் ஆச்சரியமாக அவரைப் பார்த்தார்கள்.

அவர் மேற்கு திசையில் கையைத் தூண்டிக் காட்டிக்கொண்டு ஓடினார். லேசான இருளில் முள்ளுக் காட்டுக்குள்ளிருந்து பன்றி ஓடிவந்து கொண்டிருந்தது. அதை வரவேற்பதுபோல் ஆறுமுகத் தேவர் கையை விரித்துக்கொண்டு பாய்ந்தார். பன்றி நின்று அவரை ஏறிட்டுப் பார்த்தது.

சுந்தர பாண்டியன்
Share: 




© Copyright 2020 Tamilonline