Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் | பொது
Tamil Unicode / English Search
நேர்காணல்
சுபஸ்ரீ தணிகாசலம்
- அரவிந்த் சுவாமிநாதன்|ஜனவரி 2021||(3 Comments)
Share:
சுபஸ்ரீ தணிகாசலம் - இவருக்கு அறிமுகம் தேவையில்லை. க்ளீவ்லாண்ட் தியாகராஜ ஆராதனை தொடங்கி அமெரிக்காவின் பல இசை நிகழ்ச்சிகள் வழியே தென்றல் வாசகர்களுக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்தான். 'கர்நாடிக் மியூசிக் ஐடல்' போன்ற நிகழ்ச்சிகள் மூலம் உலக அளவில் அறியப்பட்டவர். உலகின் பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் சபாக்களிடமிருந்தும் விருதுகளையும் பாராட்டுக்களையும் வாங்கிக் குவித்தவர். இவரது சாதனை மகுடத்தில் மற்றுமொரு இறகு, 'ராகமாலிகா' யூட்யூப் தொலைக்காட்சியில் இவர் ஒருங்கிணைத்து நடத்திவரும் Quarantine from Reality (QFR project) நிகழ்ச்சி. இருபது வருடங்களாக 'Maximum International INC.' என்ற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவரது சாதனை வாழ்க்கையை 'Unbound: Indian Women@Work' என்ற நூலில் ஆவணப்படுத்தியிருக்கிறார் கீதா ஆராவமுதன். 'மார்கழி மஹா உற்சவம்' நிகழ்ச்சியின் படப்பிடிப்பு, QFR நிகழ்ச்சிக்கான பணிகள் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சுபஸ்ரீ, தனது சாதனைப் பயணத்தை நமக்கு விவரிக்கிறார். கேட்போமா?

★★★★★


கே: பரதம் பயின்ற உங்களுக்கு இத்தனை இசையார்வம் எப்படி?
ப: இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில், இம்மாதிரியான ஆர்வங்கள் பாரம்பரியமாகப் பல குடும்பங்களில் உண்டு. ஒன்று பரதம் கற்கவேண்டும்; இல்லாவிட்டால் இசை. அல்லது இரண்டுமே கற்கவேண்டும். அப்படித்தான் நான் பரதம் கற்றேன். இசையார்வம் குடும்பத்திலேயே இருந்தது. அப்பாவுக்கு, அம்மாவுக்கு உண்டு. எனக்கும் வந்தது. சிறுவயது முதலே கேட்டுக் கேட்டு வளர்ந்ததுதான் இந்த ஆர்வம்.

கே: 'இசை சார்ந்ததுதான் என் வாழ்க்கை' என்று தீர்மானித்தது எப்போது, ஏன்?
ப: எனக்கு ஐந்து, ஆறு வயது இருக்கும்போது, அப்பா, அம்மா என்னை நிறைய 'லைட் மியூசிக்' நிகழ்ச்சிகளுக்குக் கூட்டிக்கொண்டு போவார்கள். அவர்கள் வர முடியாவிட்டால் அக்கா. 'லைட் மியூசிக்' கச்சேரிக்குப் போவது எனக்குப் பெரிய த்ரில். ஏதாவது ஒரு மேடைக்கச்சேரிக்குப் போவது, அங்கு ஒரு 'கேப்' கிடைத்தால், 'நானும் பாடுகிறேன்' என்று கையைத் தூக்கி மேடைக்குப் போய்ப் பாடுவது வழக்கமாகிப் போனது. வளர வளர இப்படி நிறையப் பாடியதால் கூடப் பாடியவர்கள் எல்லாம் பின்னணி பாட முயலுங்கள் என்று சொன்னார்கள். அதற்கெல்லாம் நிறையப் பயிற்சி வேண்டும். அந்தப் பயிற்சி நான் எடுக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், இசையோடு தொடர்பான ஏதாவது ஒன்றைத்தான் வாழ்க்கையில் செய்யவேண்டும் என்று பள்ளி நாட்களிலேயே தீர்மானித்துவிட்டேன். நான் படித்ததற்கும் தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், ஏதோ ஒரு வகையில் இசையுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதை அப்போதே உறுதி செய்துகொண்டேன். அப்படியே அது வாழ்க்கையில் அமைந்தது.

பள்ளி நாட்களில் பெற்ற டிரான்சிஸ்டர் பரிசுடன் (சிறந்த பேச்சாளர்)கே: இன்றைக்குத் திரையுலகில் பிரபலமான பின்னணிப் பாடகர்களாக இருப்பவர்களில் பலரை முதன்முதலில் அடையாளம் கண்டுகொண்டது நீங்கள்தான் அல்லவா?
ப: ஆம். தமிழ்நாட்டில் இசை தொடர்பான 'ரியாலிடி ஷோ' என்பதைத் தொலைக்காட்சிகளில் முதன்முதலில் ஆரம்பித்தது நான்தான். 'சன் தொலைக்காட்சி'யில் வெளியான 'சப்த ஸ்வரங்கள்' நிகழ்ச்சிதான் அது. 'சப்த ஸ்வரங்கள்' பல இசையமைப்பாளர்களுக்கு 'கேட்' மாதிரி. வாராவாரம் அதைப் பார்த்து, "இவர் நல்லாப் பாடினார், வாய்ஸ் டெஸ்ட்டுக்கு அனுப்புங்கள்" என்று எனக்கு அப்போது அழைப்புகள் வரும். இப்படி நிறையக் குழந்தைகள் 'சப்த ஸ்வரங்கள்', 'ராகமாலிகா' போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக வெளியுலகத்திற்கு வந்திருக்கிறார்கள். 'கர்நாடிக் மியூசிக் ஐடல்', 'ஹரியுடன் நான்' இன்னும் பலதரப்பட்ட எனது நிகழ்ச்சிகளிலிருந்து திரையுலகிற்குப் பலர் சென்றிருக்கிறார்கள். அதில் எனக்கு ரொம்ப சந்தோஷம், திருப்தி.

கே: 'சப்தஸ்வரங்கள்' தொடங்கி 'அபூர்வராகங்கள்', 'ஹரியுடன் நான்', 'பாரத் சங்கீத உற்சவம்', 'கிளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை விழா', 'மார்கழி மஹா உற்சவம்' என்று பலதரப்பட்டநிகழ்ச்சிகளைப் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறீர்கள். உங்களுக்கு மிகவும் சவாலாக அமைந்தது எது?
ப: நான் எந்த நிகழ்ச்சியைச் செய்தாலும் ஆசையாக, மிகுந்த ஈடுபாட்டுடன், விரும்பித்தான் செய்வேன். சவால், போட்டி என்று எதையும் நினைப்பதில்லை. ஆனால், ஸ்பான்சர்ஷிப் என்று பார்த்தால் பல நிகழ்ச்சிகளுக்கு நிறைய சவால்களை எதிர்கொண்டிருக்கிறேன். அதற்காக நிகழ்ச்சியை நடத்துவதே சவால் என்று நினைத்ததில்லை. 'சப்தஸ்வரங்கள்' ஆரம்பித்த காலத்தில் அது ஒரு சவாலாக இருந்தது. 'என்னத்துக்கு இப்போ ஒரு மியூசிக் ப்ரோக்ராம்?' என்று கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தில், நான் அதை ஆரம்பித்ததே ஒரு சவால் என்றுதான் சொல்லவேண்டும்.

அதுபோல 'மார்கழி மஹா உற்சவம்' ஆரம்பித்தபோது கர்நாடிக் மியூசிக்கை யார் பார்ப்பார்கள்? அதற்கெல்லாம் எப்படி 'ஸ்பான்சர்' வரும்? என்றெல்லாம் கேள்விகளை நான் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அவற்றை மீறித்தான் 'கர்நாடிக் மியூசிக் ஐடல்', 'மார்கழி மகா உற்சவம்' போன்ற நிகழ்ச்சிகளை நான் செய்தேன்.

கிளீவ்லேண்ட் விழாவைப் பொறுத்தவரை வெளிநாட்டுக்குப் போய், இரண்டு மூன்று பேரை வைத்துக்கொண்டு, அந்த நடுங்கும் குளிரில் வேலை செய்வது மிகப்பெரிய சவாலாக இருந்தது. சொல்லப் போனால் 'சவால்' என்பது ரொம்பச் சின்ன வார்த்தை. உண்மையில் அது ஒரு பெரிய சோதனை. 15 நாள், நாங்கள் இருக்கிற ஆட்களை வைத்து, என்னென்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்தோம். படம் பிடித்தோம். ஆனால், எல்லாவற்றையும் ஈடுபாட்டோடு, உற்சாகமாக, மகிழ்ச்சியாகத்தான் செய்தோம்.

குவாரன்டைன் ஃப்ரம் ரியாலிட்டி (QFR) - ஓர் அறிமுகம்.
முதல் நிகழ்ச்சி மார்ச் 25, 2020 அன்று ஆரம்பித்தது. முதல் பாடல் 'சங்கீதமே', படம் கோவில்புறா. இசை இளையராஜா. அதே பாடல் மீண்டும், முன்னிலும் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டு, செப்டம்பர் 10 அன்று வெளியான 175வது நிகழ்ச்சியில் வெளியானது. இரண்டையும் பாடியவர் : சைந்தவி. உடன் பங்கேற்றவர் விநயா.

'தென்றல் உறங்கியபோதும்' பாடலை, தனது மகன், மகளுடன் சேர்ந்து பாடுகிறார் உன்னிகிருஷ்ணன். பாரதியின் 'காற்று வெளியிடைக் கண்ணம்மா'விலும் அவர் குரல் மனதை மயக்குகிறது. 'சிக்கில் குருசரண், 'வேதம் நீ' பாடலைப் பாடி நம்மை எங்கோ கொண்டு போகிறார். 'இலக்கணம் மாறுதோ'வைக் குழைந்து குழைந்து பாடுகிறார் ஸ்ரீனிவாஸ். இன்னும் சைந்தவி, சுசித்ரா பாலசுப்பிரமணியன், கலிஃபோர்னியாவிலிருந்து நிரஞ்சன் கிருஷ்ணா, லண்டலினிலிருந்து பிரதீபா, விஸ்கான்சினிலிருந்து ஸ்ரீஜித் கிருஷ்ணன், டெக்சாஸிலிருந்து கிருதி பட், கனடாவிலிருந்து ஷ்ரத்தா கணேஷ், பாரிஸிலிருந்து ராகவ் கிருஷ்ணா, சிங்கப்பூரிலிருந்து லாவண்யா சம்பத், ஹரிசரண், ஸ்ரீ வர்தினி, ஸ்ரீநிதி, அனு ஆனந்த், நந்தினி, சரத் சந்தோஷ், ஷ்ரவண், ராகவ் கிருஷ்ணா, விஜய் கிருஷ்ணன், அஸ்வத் என்று உலகெங்கிலும் இருந்து 150க்கும் மேற்பட்ட பாடகர்களும், 60க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களும் பங்கேற்ற மிகப்பெரிய நிகழ்வாகப் பரிணமித்திருக்கிறது QFR. 250வது நிகழ்ச்சியை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த ப்ராஜெக்டின் இலக்கு 300. "அதற்கு மேலும் தொடர்வது ரசிகர்களின் கையில்தான் இருக்கிறது" என்கிறார் சுபஸ்ரீ. 'ராகமாலிகா' யூடியூப் தொலைக்காட்சியில் இந்த வீடியோக்களைக் காணலாம்.


கே: QFR ப்ராஜெக்டிற்கான விதை குறித்துச் சொல்லுங்கள். இவ்வளவு வரவேற்பு அதற்குக் கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?
ப: QFR தற்போது என்னுடைய பெட் ப்ராஜெக்ட் ஆகிவிட்டது. அது இந்தியாவில் லாக்-டவுன் ஆரம்பிக்கப்பட்ட சமயம். 21 நாள் என்றார்கள். அப்போது வாழ்வில் சில அடிகள் வாங்கி மனதளவில் மிகவும் துவண்டிருந்த சமயம். அப்போது பார்த்து லாக்டவுன் வந்துவிட்டது. எல்லாருக்கும் சந்தோஷம் கொடுக்கிற மாதிரி ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தேன். முதலில் நம் மனதுக்கு வடிகாலாக ஏதாவது செய்யவேண்டும். தினமும் ஏதாவது செய்து சுறுசுறுப்பாக இருக்கவேண்டும்; என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அப்படி ஆரம்பித்தது தான் QFR.

விளையாட்டாக, படுக்கையில் சாய்ந்துகொண்டு, சைந்தவிக்கு ஃபோன் செய்து, நான் இந்தமாதிரி ஒன்று பண்ணப் போகிறேன். நீ பாட்டுப் பாடி அனுப்பு என்று சொல்லி, அவர்களும் பாடி அனுப்பி, அப்படி ஆரம்பித்ததுதான் இந்த QFR. (முதல் நிகழ்ச்சி மார்ச் 25, 2020 அன்று வெளியானது) ஆனால், ஆரம்பிக்கும்போது நான் நிஜமாகவே இவ்வளவு வரவேற்பைப் பெறும் என்று நினைக்கவில்லை. இன்றைக்குக் கிட்டத்தட்ட இது ஓர் இயக்கம் மாதிரி நடந்து கொண்டிருக்கிறது. மக்களும் அப்படித்தான் பார்க்கிறார்கள்.இந்த அளவு வந்திருப்பது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.கே: உலகளாவிய பாடகர்கள் பலர் பங்கு கொள்ளும் நிகழ்ச்சியைச் சென்னையில் இருந்துகொண்டு எப்படி ஒருங்கிணைக்கிறீர்கள்?
ப: QFR ஆரம்பித்தவுடனேயே நான் தீர்மானித்தது என்னவென்றால் உலகம் முழுவதும் பரவியிருக்கும் திறமையாளர்களை ஒருங்கிணைப்போம் என்றுதான். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர்கள் பாடுவதை இன்றைய டிஜிடல் உலகில் நாம் அரங்கேற்ற முடியும். அதன்படி 25 வருடங்களாக எனது இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பலரையும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸப், ஈமெயில், ஃபோன் என்று தொடர்பு கொண்டேன். சிலர் லண்டனில் இருந்தார்கள், சிலர் ஆம்ஸ்டர்டாமில், ஹூஸ்டனில், கலிஃபோர்னியாவில், சான் ஃபிரான்சிஸ்கோவில் என்று உலகின் பல பகுதிகளில் இருந்தார்கள். சிலர் இன்னமும் பாடிக் கொண்டிருக்கிறார்கள்; சிலருக்கு டச் விட்டுப் போயிருந்தது. 'நீங்கள் எங்கே வேண்டுமானாலும் இருங்கள், நான் கேட்கும் பாடலைப் பாடி அனுப்புங்கள்' என்று சொல்லி ஒருங்கிணைத்தேன்.

இந்த ஒருங்கிணைப்பு சாதாரண விஷயமல்ல. ஒரு பாட்டை உருவாக்க குறைந்தபட்சம் எனக்கு 14, 15 மணி நேரம் ஆகும். முதலில் பாட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; மூன்று பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஒருவருக்கு அனுப்ப வேண்டும். அவர்களுக்கு எது சரிப்படுகிறது என்று நான் பார்க்க வேண்டும். அந்தப் பாடலை அவர் பாடி அனுப்புவார். அதைக் கேட்டுத் திருத்தங்கள் சொல்ல வேண்டும். திருத்தப்பட்டு, சரியாகப் பாடி எனக்குப் பாடல் வந்தபிறகு, நான் அதனைக் கேட்டு பின் ஷ்யாம் பெஞ்சமினுக்கு அனுப்பவோம். அவர் அதற்கு வாசிப்பார். அப்புறம் வெங்கட்டுக்கு அனுப்பி, அவர் வாசிப்பார். தேவைப்பட்டால் மற்ற இசைக் கலைஞர்களுக்கும் அனுப்பி, வாசிக்க வைக்க வேண்டும்.

பிறகு அது எடிட்டிங் டேபிளுக்கு வரும். சிவா எல்லாவற்றையும் சேர்த்து, ஒருங்கிணைத்து வீடியோ எடிட் செய்வார். அப்போதுதான் அதற்கு நாம் நினைத்த வடிவம் கிடைக்கும். ஆக, ஒரு பாட்டிற்குப் பின்னால் இப்படிப் பலரது உழைப்பு இருக்கிறது; அர்ப்பணிப்பு இருக்கிறது. இப்போது டிஜிடல் யுகம் என்பதால் இதெல்லாம் சாத்தியமாகிறது. டிஜிடலில் இப்படி எல்லாம் செய்ய முடியும் என்பதை உலகத்திற்கு நாங்கள் காட்டியிருக்கிறோம் என்பதில் எனக்கு மிகுந்த மனநிறைவுதான்.கே: உங்களது 'மாஸ்டர் க்ளாஸ்' பற்றிச் சில வார்த்தைகள்..
ப: QFRக்குப் புதுக் குரல்களைத் தேடிக் கொண்டிருந்தபோது நிறையப் பேர் அதற்கு விண்ணப்பித்தார்கள். அவர்களின் குரலைக் கேட்டபோது, அவர்களுக்குச் சரியாக வழிகாட்டல் வேண்டும் என்று தோன்றியது. அவர்களுக்குப் பாடும் ஆர்வம் இருக்கிறது, நல்ல திறமையும் இருக்கிறது. ஆனால், அதற்கு வழி தெரியாமல் இருக்கிறார்கள். சில நிகழ்ச்சிகளில் பார்த்தால் mentor' என்று சிலர் இருப்பார்கள். ஆனால், இத்தனை வருட என்னுடைய ஷோக்களில் mentor யாரும் கிடையாது. நான்தான் எல்லாமே. திரைக்குப் பின்னால் நான் என்ன சொல்லித் தருகிறேனோ, அதைத்தான் அவர்கள் பாடுவார்கள். ஆக, அதை ஆர்வமுள்ளவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கலாமே என்ற எண்ணத்தில் 'மாஸ்டர் க்ளாஸ்' ஆரம்பித்தேன்.

எங்கள் நோக்கம், ஒளிந்து கிடக்கும் சில விஷயங்களைச் சொல்வது. துறையில் அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டு, இதனை இன்னும் எப்படிச் சிறப்பாகச் செய்து தம்மை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொடுப்பது. பாட்டு எப்படிப் பாட வேண்டும், ஒரு பாடலை எப்படி அணுகுவது என்பதற்கு சைந்தவி; மேடையில் பாடும்போது என்ன செய்யலாம், செய்யக் கூடாது என்பதற்கு சுர்முகி, ஸ்ரீவர்தினி; கர்நாடிக் பின்புலமுள்ள பாடல்களைப் பாடும்போது என்ன செய்யவேண்டும் என்பதற்கு பரத் சுந்தர்; பாடுவதற்கு முன் அதனை எப்படிப் பயிற்சி செய்யவேண்டும் என்பது போன்ற பல விஷயங்களை மாஸ்டர் க்ளாஸ் மூலம் சொல்லிக் கொடுக்கிறோம். வீட்டில் இருந்தவாறே பாடி அனுப்புவது எப்படி, ஆடியோ எப்படி ரெகார்ட் செய்வது, வீடியோ எப்படி ரெகார்ட் செய்வது என்பதையெல்லாம் சொல்லிக் கொடுக்கிறோம். அடுத்து டிஜிடல் ப்ரொடக்‌ஷன் பற்றி சொல்லித் தர இருக்கிறோம். எப்படிச் செய்வது, என்னென்ன செய்யக்கூடாது என்பவற்றை இதில் சொல்லித் தருவோம்.

நிறையப் பேருக்கு ஆர்வம் இருக்கிறது; திறமை இருக்கிறது; நிறையத் தெரிந்து கொள்ள ஆசை இருக்கிறது. கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உத்வேகமும் இருக்கிறது. வயது வித்தியாசம் பார்க்காமல், தங்களைவிடச் சின்னவர்களிமும்கூடக் கற்றுக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. இதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. 'மாஸ்டர் க்ளாஸ்' ஒரு புது முயற்சி. இதை புதுப்புது சப்ஜெக்டுகளில் தொடர இருக்கிறோம். சேர விருப்பம் உள்ளவர்கள் info@maximuminc.org என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மறக்கமுடியாத பாராட்டுகள்
எஸ். ஜானகி அம்மா என்னைச் செல்லமாக 'ஹிட்லர்' என்று அழைப்பார். நினைத்ததை முடித்தே தீரவேண்டும் என்று நான் கடுமையாக இருப்பதால் எனக்கு அவர் சூட்டிய செல்லப்பெயர் இது. பாலமுரளிகிருஷ்ணா, "சுபமஸ்து ஸ்ரீரஸ்து. உன் புகழுக்கும் பொருளுக்கும் ஒருநாளும் குறையே இருக்காது" என்றார். அதை தெய்வ ஆசீர்வாதமாகவே நினைக்கிறேன். எஸ்.பி.பி. சார், "நீ பண்றது ஒரு யாகம். அதை நிறுத்திடாதே"ன்னு சொன்னார். அது பெரிய ஆசீர்வாதம்.

இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் சூர்யா, கார்த்தி போன்றவர்களே "நாங்கள் QFR-க்கு அடிமை" என்று புகழ்ந்துரைக்கும்போது, சிலிர்த்துப் போனேன். பி. சுசீலா அம்மா, தன் பேத்திக்கும் என் பெயர்தான் என்று சொல்லிவிட்டு, "அவளும் உன்னைப்போலவே புத்திசாலியா வரணும்"னு சொன்னார். அது மறக்கமுடியாது. ஹரிஹரன் சார் என்னைத் தன் மகள்போலவே நினைப்பார். எப்போதும் என்மீது அக்கறையோடு பேசுவார். நான் அவரிடம் பல வருடங்கள் பணி புரிந்திருக்கிறேன். பல பாடங்கள் கற்றிருக்கிறேன்.

சுபஸ்ரீ தணிகாசலம்


கே: உங்களுக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர், பாடகர் யார்?
ப: ஓர் இசையமைப்பாளரிடம் என் காது சென்று அது பல இசையமைப்பாளர்களை நோக்கித் திருப்பிவிடப்பட்டது என்றால் அது ராஜா சார். யாரையெல்லாம் ஆராதித்ததாக அவர் பேசினாரோ அவர்களையெல்லாம் நான் கேட்க ஆரம்பித்தேன். அவர் சலீல் சௌத்ரி பற்றிப் பேசினார், நௌஷத் பற்றிச் சொன்னார், சி.ஆர். சுப்பராமனைப் பற்றிச் சொன்னார். அவர்களது பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன். அப்படி நான் கேட்காதவர்களே இல்லை என்று ஆகிவிட்டது. மகா மகா மேதைகள் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொருவர் ராஜாவாக, சக்கரவர்த்தியாக இசையுலகை ஆண்டிருக்கிறார். இன்று வரைக்கும் ஒரு சமஸ்தானத்தை உருவாக்க வேண்டும்; அதில் ராஜா ஆகவேண்டும் என்ற முயற்சியில்தான் எல்லா இசையமைப்பாளர்களும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

என்னை அதிகம் பாதித்த இசையமைப்பாளர்கள் என்றால் இருவரைத்தான் சொல்வேன். ஒருவர் ஜி. ராமநாதன். மற்றொருவர் இளையராஜா. அதுபோல பாடகர்கள் என்று பார்த்தால் எல்லோரையுமே பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. ஒப்பிடவே முடியாது. டி.எம்.எஸ்., பி.பி. ஸ்ரீனிவாஸ், ஜேசுதாஸ், எஸ்.பி.பி., சுசீலாம்மா, ஜானகியம்மா எல்லாம் வேறு வேறு விதமான குரல்கள். இவர்களை ஒருவரோடு ஒருவர் ஒப்பிடவே முடியாது. எல்லோரையுமே எனக்குப் பிடிக்கும்.

ரஞ்சனி & அஞ்சனிகே: வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் நடந்த சுவாரஸ்யமான, மறக்க முடியாத நிகழ்வுகள், அனுபவங்கள் பற்றிச் சொல்லமுடியுமா?
ப: வெளிநாட்டு நிகழ்ச்சிகள் செய்ய ஆரம்பித்து 20 வருடம் ஆகிறது. முதல் நிகழ்ச்சி, 2000த்தில் சிங்கப்பூரில் நடந்தது. அது ஒரு பட்டிமன்றம். அதில் தொடங்கி வெளிநாடுகளில் பல நிகழ்ச்சிகளைச் செய்திருக்கிறோம். அதிகமான அன்பைக் காட்டி, பரிசுப் பொருள் கொடுத்து, பாசம் காட்டித் திணற அடித்தவர்களையும் சந்தித்திருக்கிறோம். முதல் நாள் வாழை இலை; அடுத்த நாள் தையல் இலை என்பார்களே, அம்மாதிரியான வரவேற்பையும் சந்தித்திருக்கிறோம். நம்மை என்றோ, எப்போதோ ஒரு முறைதான் பார்க்க, பழகச் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அப்போது, அவர்கள் காட்டும் அபரிதமான அன்பிற்கு ஈடே கிடையாது. "உங்களைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டோம். ஒரு தடவை உங்களைப் பார்க்கணும்னு ஆசை. உங்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசை" என்றெல்லாம் சொல்வார்கள். அதைக் கேட்கும்போது பரவசமாக இருக்கும்.

அமெரிக்காவில் ஒரு சம்பவம். நான் மேடையேறி நிகழ்ச்சிகள் செய்வேன் என்பது அங்கு பலருக்குத் தெரியாது. என்னைப் பின்னணியில் தான் அதிகம் பார்த்திருக்கிறார்கள். நான் முதன்முறையாக ஒரு நிகழ்ச்சி மேடையேறிச் செய்கிறேன். செய்து முடித்ததும் ஆடியன்ஸிலிருந்து அப்படியே எல்லாரும் கூட்டமாக வந்துவிட்டார்கள். "என்ன மேடம் நீங்கள் ஏதோ சுடிதாரைப் போட்டுக் கொண்டு பின்னால் சுற்றிக் கொண்டிருந்தீர்கள். திடீரென்று பார்த்தால், புடவை கட்டி, மேடையேறி, காம்பியரிங் செய்ய ஆரம்பித்து விட்டீர்கள். எங்களால் நம்பவே முடியவில்லை, ரொம்ப ஆச்சரியமா இருக்கு. எப்படி நீங்க இப்படிப் படபடன்னு இவ்ளோ அழகாப் பேசறீங்க?" என்று சொல்லி, என்னைக் கட்டிக்கொண்டு அன்பைக் காட்டினர்.

எளிமையாக இருந்தால் அங்கே இருப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. இங்கே இருப்பவர்களுக்கு அதெல்லாம் பழகிவிட்டது என்று நினைக்கிறேன். என் குழந்தைகளுக்கு - நான் பாடுவதற்காகக் கூட்டிப் போகும் இசைக் கலைஞர்களுக்கு - நடந்திருக்கிறது. குழந்தைகள் என்றால் சின்னக் குழந்தைகள் என்று நினைத்து விடாதீர்கள். என்னிடம் பாடுபவர்களுக்கு 40 வயது ஆனாலும், எனக்கு அவர்கள் குழந்தைகள்தான். அவர்களுக்கு இம்மாதிரி நிறைய நடந்திருக்கிறது. பரவசத்துடன் ஓடி வந்து அவர்களைக் கட்டிக்கொள்வது, பரிசுப்பொருள் தருவது என்று அன்பைப் பொழிந்து விடுகிறார்கள் நம் மக்கள்.

சிவகுமார், செல்வா & ரவி Gகே: உங்கள் குடும்பம் பற்றி..
ப: அழகான அடக்கமான குடும்பம். குழந்தைகளுக்கெல்லாம் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார்கள். ஒருவர் விஷயத்தில் மற்றவர் தலையிடமாட்டோம். QFR உருவானதற்கு, வளர்ந்ததற்கு எனது குழந்தைகளும் ஒரு காரணம். ஏனென்றால், நான் வீட்டில் திரைப்படப் பாடல்களைக் கேட்கும்போது பாடலைப் பற்றியும் அதன் பின்னணி பற்றியும் அவர்களிடம் சொல்லுவேன். அப்போது ஒருநாள் என் பையன் சொன்னான், "இப்படி நீ எங்களிடம் சொல்லிக் கொண்டிருப்பதை எங்காவது ரெகார்ட் செய்து வை. ஏனென்றால் இதெல்லாம் யாருக்கும் தெரியாது. அப்புறம் யாருக்கும் தெரியாமலேயே போய்விடும். இதைப் பதிவுசெய்ய வேண்டியது அவசியம்" என்றான். QFRக்கு அதுவும் ஒரு தூண்டுதல். 25 வருடமாகப் பல மேதைகளுடன் பழகி நான் கற்றுக்கொண்ட விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

அம்மா இருக்கிறார்கள். 90 வயது. எப்போதும் எனக்கு ஊக்கம். ஒரு குழந்தை மாதிரி. இந்த மாதிரியான ஓர் அழகான குடும்பத்தில் நான் இருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமை.

கே: நீங்கள் பெற்ற விருதுகள் குறித்து...
ப: பதினேழு வருடங்களுக்கு முன்னால் இந்தியா டுடேவில் 'தென்னிந்தியாவின் சாதனைப் பெண்கள்' என்று ஒரு பட்டியல் வெளியானது. அதில் என் பெயரும் இருந்தது. அதை ஒரு பெருமையான விஷயமாக நினைக்கிறேன். 'ராகா அவார்ட்ஸ்', 'ராகமாலிகா'விற்கு, சிறந்த இயக்குநருக்காகக் கிடைத்திருக்கிறது. சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான விருதை மைலாப்பூர் அகாடமியிடமிருந்து பலமுறை வாங்கியிருக்கிறேன். வெளியூர், வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன். டிசம்பர் சீசனில் புது மாதிரியாகப் பல நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக 'பாரத் கலாச்சார்', 'விபஞ்சி' உள்ளிட்ட அமைப்பினரிடமிருந்து பாராட்டுப் பத்திரங்கள், விருதுகள் கிடைத்திருக்கின்றன. இவற்றையெல்லாம் பெரிய ஆசிர்வாதமாகத்தான் நினைக்கிறேன்.

ஷ்யாம் பெஞ்சமின், வெங்கட் & விக்னேஷ்வர்கே: உங்கள் வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பவர்கள் குறித்து...
ப: முதலில் கடவுள். அவன் அருளில்லாமல் எதுவுமே நடக்காது என்பது என் ஆணித்தரமான நம்பிக்கை. அடுத்து என் குடும்பமும் குழந்தைகளும். 'இத்தனை மணிக்கு வா. அத்தனை மணிக்கு வா' என்ற கட்டுப்பாடு இல்லாமல், இந்த மீடியாவைச் சரியாகப் புரிந்துகொண்டு, நேரச் சிக்கல்களைப் புரிந்துகொண்டு அவர்கள் கொடுக்கும் ஒத்துழைப்பு நன்றிக்குரியது. நான் நினைத்தைச் செய்ய விட்ட என் குடும்பத்தினருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அதுபோல என்னிடம் பாடும் இசைக் கலைஞர்கள். அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் இத்தனை வெற்றிகள் சாத்தியமே இல்லை. நான் 1% தான். மீதி எல்லாம் அவர்கள்தான். அவர்களை எனது குழந்தைகளாக, குடும்பத்தினராகத்தான் நினைக்கிறேன், மதிக்கிறேன். நான் பாடல்களைத் தேர்ந்தெடுக்கிறேன். அதற்குரிய பின்னணியைப் பேசுகிறேன்; அவ்வளவுதான். ஆனால், அதற்காக என்னைப் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என் குழந்தைகளும், என் இசைக் குழுவினரும். அவர்களுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

இன்னொரு பெரிய உறுதுணை என் தன்னம்பிக்கை. எப்படியும் இதைச் செய்துவிடலாம், நிச்சயம் நல்லது நடக்கும் என்ற உறுதியுடன் நான் உழைக்கிறேன். அந்தத் தன்னம்பிக்கை இருக்கும்வரை நிச்சயம் பயம் என்பது வராது. என்னைச் சுற்றியிருப்பவர்களில் யாரும் எனக்கு இடைஞ்சல் கிடையாது. அதுபோல தொழில்முறையில், என்னுடைய மேக்ஸிமம் மீடியாவின் பார்ட்னர் திரு மணிமாறன், என்ன செய்கிறீர்கள், ஏன் செய்கிறீர்கள், இதனால் ஒரு வருமானமும் இல்லையே, அப்புறம் எதற்கு இதெல்லாம் என்றெல்லாம் எந்தக் கேள்வியும் கேட்காமல், QFR-ஐ நான், என்னுடைய தீவிர ஆர்வத்துக்காகத்தான் செய்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு துணையாக இருக்கிறார்.

"தென்றல் போன்று, அமெரிக்காவில் அனைவரும் விரும்பிப் படிக்கும் ஓர் இதழில், QFRஐ பற்றிப் பேச முடிந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பைக் கொடுத்த தென்றல் இதழுக்கும், அதன் குழுவினருக்கும், என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்கிறார் புன்னகையுடன்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

★★★★★
QFR - மிஷன் 300
QFRல் நான் சொல்லும் தகவல்கள் பல மேதைகளுடன் பேசிப் பழகி அறிந்து கொண்டவை. சில, புத்தகங்களில் படித்துத் தெரிந்து கொண்டவை. அப்படி நான் பகிர்ந்து கொள்ளும் தகவல்களே, ஒரு நிகழ்ச்சியாக மாறி, இவ்வளவு பெரிய மக்கள் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதை நான் ஒரு பெரிய பாக்யமாகக் கருதுகிறேன். இப்போதைக்கு 'மிஷன் 300' என்றுதான் QFRன் பயணம் தொடர்கிறது. இதற்கு ஸ்பான்சர்ஸ் யாரும் கிடையாது. கமர்ஷியல் சப்போர்ட் எதுவும் கிடையாது. ஆனாலும், மக்களை நம்பித்தான் இதில் இறங்கியிருக்கிறேன். இந்த நிகழ்ச்சி தொடர எனக்கு மக்களின் ஆதரவு வேண்டும். 'உங்கள் அன்பு, ஆதரவை நீங்கள் எனக்கு கொடுக்கவேண்டும்' என்று இந்தப் பேட்டியை வாசிக்கும் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஆசையாக இதனைச் செய்கிறேன். நீங்கள் விருப்பத்துடன் இதனைப் பார்க்கிறீர்கள். என்னுடைய இசைக் கலைஞர்களுக்கு நீங்கள் சன்மானம் தாருங்கள்; நான் உங்களுக்கு நிகழ்ச்சி செய்து தருகிறேன் என்று மக்களிடம் கேட்பதாக இது நடந்து கொண்டிருக்கிறது. இந்த Crowd Fund Support என்னுடைய கணிப்புப்படி 300 நிகழ்ச்சிகள் வரைதான் போகமுடியும். ஒருவேளை நாம் 300ஐத் தொடும்போது, மக்களின் ஆதரவு அதிகமாக இருந்தால், இன்னமும் மேலே எடுத்துச் செல்லலாம். என்னிடம் இருப்பது மொத்தம் 735 பாடல்கள். அதில் 300 பாடல்களையாவது மக்களுக்குக் கொடுக்க நினைத்துதான் இதைச் செய்துவருகிறேன். ஆனால், ஒன்று, கண்டிப்பாக நான் ஸ்பான்சரை நாடிப் போகமாட்டேன். இது என்றும், எப்போதும் மக்கள் ஆதரவுடன் மட்டுமே போய்க்கொண்டிருக்கும். மக்களே அலுத்துப் போய், 'போதும்' என்று நினைக்கும்போது நானும் நிறுத்திவிடத் தயாராகவே இருக்கிறேன்.

என்னுடைய QFR குழுவில் எல்லாருமே எனக்கு ஸ்பெஷல்தான். என்றாலும் முக்கியமான சிலரைப்பற்றி அவசியம் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அவர்கள்தான் இதில் நிரந்தரப் பங்கு வகிக்கிறார்கள். முதலில் ஷ்யாம் பெஞ்சமின். அடுத்தவர் வெங்கட். இவருக்கு இன்றைக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அடுத்தது ரவிஜி மற்றும் விக்னேஷ்வர். 75 பாடல்களுக்கு மேல் புல்லாங்குழல் இசைத்திருக்கும் செல்வாவுக்கும் நிறைய ரசிகர்கள் உண்டு. குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒருவர் சிவா, எடிட்டர். இவர்கள்தாம் QFRன் தூண்கள். இவர்கள் மட்டுமல்லாமல் QFRல் வாசித்த அத்தனை பேருக்கும் தலைவணங்கி இந்தத் தருணத்தில் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

சுபஸ்ரீ தணிகாசலம்
Share: 
© Copyright 2020 Tamilonline