Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | எனக்குப் பிடிச்சது
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
நாகலட்சுமி சண்முகம்
- அரவிந்த்|அக்டோபர் 2019|
Share:
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்" என்ற பாரதியின் கனவை தனக்கான லட்சியமாய்க் கொண்டு இயங்கி வருபவர் நாகலட்சுமி சண்முகம். பாரதி பிற நாட்டினரின் "நல்லறிஞர் சாத்திரங்கள்" என்கிறான், அதைத்தான் தெரிந்தெடுத்துச் செய்து வருகிறார் நாகலட்சுமி. நெப்போலியன் ஹில், டாக்டர் ஜோஸப் மர்ஃபி, ஜேம்ஸ் ஜென்சன், ஜான் மேக்ஸ்வெல், டேவிட் ஷூவார்ட்ஸ், ராபின் ஷர்மா, ஸ்டீபன் ஆர். கவி , பாலோ கொயலோ, பிரையன் டிரேசி, யுவால் நோவா ஹராரி என இவர் மொழிபெயர்த்த, மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் பலரும் அறிஞர்கள். மேதைகள். பெரிதும் கற்றவர்கள்.

நாகலட்சுமி சண்முகம், மே 23, 1972-ல் பாளையங்கோட்டையில் பிறந்தார். பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் சென்னையில் கணினித் துறையில் வேலை கிடைத்தது. வங்கி அதிகாரி குமாரசாமியுடன் திருமணம் நிகழ்ந்தது. குமாராசாமிக்கு இயல்பிலேயே மொழிபெயர்ப்பில் ஆர்வம் இருந்தது. சிறு சிறு நூல்களை, கட்டுரைகளை மொழிபெயர்த்து வந்தார். பணி நிமித்தம் காரணமாகச் சில காலம் போட்ஸ்வானாவில் வசித்த பின், இந்தியா திரும்பினர். நாகலட்சுமிக்கு மும்பையில் பணி கிடைத்ததால் குடும்பம் அங்கு இடம்பெயர்ந்தது. குமாரசாமி வழக்கம் போல் தனது மொழிபெயர்ப்புப் பணிகளைத் தொடர்ந்தார். ரோண்டா பர்னின் 'த சீக்ரெட்' நூலை 'இரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். அந்நூலைப் பிரதி மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டார் நாகலட்சுமி சண்முகம். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவருக்கு இருந்த புலமை அதற்கு மிகவும் உதவியாக இருந்தது. அப்பணி அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. தானும் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. ஏற்கனவே வேலையைத் துறந்துவிட்டு மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்த கணவர் குமாரசாமியும் ஊக்குவித்தார்.

Click Here Enlargeவேலையைத் துறந்துவிட்டு மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டார் நாகலட்சுமி சண்முகம். டாக்டர் ஜோசப் மர்ஃபி எழுதிய 'The Power of your subconscious mind' என்ற நூலை 'ஆழ்மனத்தின் அற்புத சக்தி' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். 2011ம் ஆண்டில் மஞ்சுள் பதிப்பகம் அந்நூலை வெளியிட்டது. அதுதான் இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல். அதற்குக் கிடைத்த வரவேற்பு இவரை மேலும் மொழிபெயர்க்கத் தூண்டியது. மஞ்சுள் பதிப்பகம் அதுவரை தமிழில் நூல்கள் வெளியிட்டதில்லை என்பதால் நாகலட்சுமியைத் தொடர்ந்து மொழிபெயர்க்க ஊக்குவித்தது. மொழிபெயர்ப்புப் பணியைத் தீவிரமாகத் தொடர்ந்தார் நாகலட்சுமி.

நார்மன் வின்சென்ட் பீல், ஜான் கிரே, ரோண்டா பைர்ன், ஜாக் கேன்ஃபீல்ட், ராபர்ட் கியோஸாகி, ஆண்ட்ரூ மேத்யூஸ், ஜிக் ஜிக்லர், டேல் கார்னகி, ஆலன் பீஸ்-பார்பரா பீஸ் கேரி சேப்மேன், க்ரிஸ் ப்ரெண்டிஸ் போன்றோரின் நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் இவர். இவர்களில் பெரும்பாலோர் அமெரிக்க எழுத்தாளர்கள், மட்டுமல்ல; தன்னம்பிக்கைப் பயிற்சியாளர்களும் கூட. நாகலட்சுமிக்கும் தன்னம்பிக்கைப் பயிற்சிகளில் ஆர்வமுண்டு. உலகப் புகழ்பெற்ற 'Chicken Soup for the Soul' நூலின் இணை ஆசிரியர்களுள் ஒருவரான ஜாக் கேன்ஃபீல்டு அவர்களிடம் அமெரிக்காவில் நேரடிப் பயிற்சி பெற்றார். இந்தியாவின் முதல் Passion Test பயிற்சியாளரும் இவர்தான். ஜாக் கேன்ஃபீல்டின் "வெற்றிக் கொள்கை"களை மக்களுக்குக் கற்றுக் கொடுக்க உலகெங்கிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு பேரில் நாகலட்சுமியும் ஒருவர். இவர் இந்தியா முழுவதும் பயணித்துச் சுய மேம்பாட்டுப் பயிற்சியளித்து வருவதுடன் பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியும் வருகிறார்.

Click Here Enlargeஇதுவரை 85க்கும் மேற்பட்ட நூல்களைத் தமிழாக்கம் செய்திருக்கிறார். 'பழக்கங்கள்' (The 7 Habits of Highly Successful People), 'என் பாற்கட்டியை நகர்த்தியது யார்?' (Who Moved My Cheese?), 'நீங்கள் உண்மையிலேயே யார், நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்?' (Who Are You Really And What Do You Want?) போன்ற மொழியாக்க நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. பில்கேட்ஸின் மனைவி மெலின்டா கேட்ஸ் (Melinda Gates) எழுதிய 'The Moment of Life: How Empowering Women Changes the World' என்ற நூலை, 'பெண்களை உயர்த்துவோம்! சமுதாயத்தை உயர்த்துவோம்!' என்ற தலைப்பில் தமிழாக்கி இருக்கிறார். பாலோ கொயலோவின் 'தி அல்கெமிஸ்ட்' நாவலை 'ரசவாதி' என்ற பெயரில் மொழி பெயர்த்தமைக்காகப் பலராலும் பாராட்டப்பட்டார். ஆனந்த நீலகண்டன் எழுதிய அசுரன் (ராவணனின் சுய வரலாறு), கௌரவன் (துரியோதனின் கதை), யுவல் நோவா ஹராரியின் 'சேப்பியன்ஸ் – மனித குலத்தின் சுருக்கமான வரலாறு' (Sapiens) போன்றவை இவரது மொழிபெயர்ப்பு நூல்களில் முக்கியமானவையாகும். ரிஷிகேச மடத்தில் வாழ்ந்து வரும் பெண் துறவியும், எழுத்தாளரும், ஆன்மிகச் சொற்பொழிவாளருமான தேவி வனமாலியின் 'ஸ்ரீ ராம லீலா'வைத் தமிழில் 'ராமாயணம்' என்ற தலைப்பில் ரசித்து மொழிபெயர்த்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. அப்துல்கலாமின் 'My Journey' நூலை இவர் 'எனது பயணம்' என மொழி பெயர்த்திருந்தார். அதனைப் படித்த அப்துல்கலாம் இவரைத் தொலைபேசியில் அழைத்து, "நானே தமிழில் எழுதியிருந்தால் எப்படி இருக்குமோ அதைப் போலவே இருந்தது. நான் படிக்கும்போது, நானே பேசுவது போன்று உணர்ந்தேன். மிக்க மகிழ்ச்சி" என்று பாராட்டியதை தன் வாழ்வில் மறக்க முடியாத பாராட்டு என்கிறார் நாகலட்சுமி சண்முகம்.

Click Here Enlargeமொழிபெயர்ப்பாளராக மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் இவர் தனது முத்திரையைப் பதித்த நூல் 'The Forgotten Secrets of a Magical Marriage' என்பது. இது இவரது முதல் ஆங்கில நூல். தமிழிலும், 'மாயாஜாலமான மணவாழ்க்கை - மறந்து போன ரகசியங்கள்' என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. இந்நூலில் அவர் திருமண பந்தம் பற்றியும், கணவன்-மனைவிக்கிடையே எழும் ஈகோ மோதல்கள் பற்றியும், அவற்றிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்வைப் பெறும் வழிமுறைகள் பற்றியும் விளக்கியிருக்கிறார். திருமண வாழ்க்கை என்பது சொர்க்க பூமியாக இருக்க வேண்டுமா அல்லது போர்க்களமாக இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நாம்தான் என்கிறார்.

"ஒரு நூலைத் தமிழிலேயே நேரடியாக எழுதினால் எப்படி இருக்குமோ அதுபோல் மொழிபெயர்ப்பும் இருக்க வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். முடிந்த அளவுக்குத் தூய தமிழ்ச் சொற்களையே நான் பயன்படுத்துகிறேன்" என்கிறார் இவர் ஒரு நேர்காணலில். நாகலட்சுமி சண்முகத்தின் மொழிபெயர்ப்புப் பற்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர், முனைவர் ஔவை நடராசன், "அலை புரளக் கரை புரள, அருவி கொட்டும் நடையில் பளிங்குத் தமிழில் எவரும் படித்தால் இது மொழிபெயர்ப்பா என்று வியப்படையும் வகையில் தமிழ்க் கதையாகப் படைத்திருக்கிறார். மொழியாக்கப் பாதையிலேயே நடந்து நடந்து, அவரது எழுத்தும் மனமும் மொழிபெயர்ப்பிலேயே திளைத்துத் திளைத்துக் கலை பயின்ற தெளிவோடு கனிந்த தமிழில் மொழியாக்கக் கலையின் சிகரத்தை அடைந்திருக்கிறார்" என்று பாராட்டுகிறார், 'அசுரன்' நூலுக்கான முன்னுரையில்.

Click Here Enlargeநாகலட்சுமி சண்முகம் தம்முடைய மொழிபெயர்ப்பு நெறிமுறைகளைப் பற்றிக் கூறும்போது, "மொழிபெயர்ப்பில் ஆங்கிலச் சொற்கள் இருத்தல் கூடாது; வடமொழிச் சொற்கள் 99 விழுக்காடு தவிர்க்கப்படுதல் வேண்டும். இலக்கணத் தூய்மையாக வரிகள் அமைதல் வேண்டும். இவற்றைப் போன்று பல நெறிகளை நானும் என் கணவரும் அமைத்துக் கொண்டுள்ளோம். குறிப்பாக, மொழிபெயர்ப்பு என்பதில் மொழிபெயர்ப்பாளரின் சொந்தக் கருத்துகள் அமைதல் கூடாது; அதே சமயம், மூலமொழியின் சொற்களையோ சொற்றொடர்களையோ அப்படியே எழுதுதலும் கூடாது. தமிழின் இயல்பான நடையில் அமைதல் முதன்மையானது" என்கிறார். "மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை. படிப்பவர்கள் அதை மொழிபெயர்ப்பு என உணரா வண்ணம் எழுதுவதே அக்கலையின் உச்சம். சில நேரங்களில், நூல்களின் தலைப்பை மொழிபெயர்ப்பதே கடினமாக இருக்கும். எளிய மூலப்பொருளைக் கூட மெருகேற்றிக் கொடுப்பதே மொழிபெயர்ப்பின் அரும்பணி" என்கிறார். மொழிபெயர்ப்புக்கான ஊதியம் குறைவுதான் என்றாலும் ஆத்ம திருப்திக்காகவும், மனதுக்குப் பிடித்த வேலை என்பதாலும் தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் கணவன்-மனைவி இருவரும்.

நாகலட்சுமி சண்முகத்தின் ஒட்டுமொத்த மொழிபெயர்ப்புப் பணிக்காக திருப்பூர் தமிழ்ச்சங்கம், 2014ம் ஆண்டில் விருதளித்துக் கௌரவித்தது. அதே ஆண்டில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான நல்லி திசையெட்டும் விருது (இறுதிச் சொற்பொழிவு - The Last Lecture, Randy Pausch) இவருக்கு வழங்கப்பட்டது. 2017ம் ஆண்டில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான தமிழக அரசின் விருதை இவர் பெற்றிருக்கிறார். தமிழ் நாடகத்துறையின் முன்னோடி முதல்வர்களான டி.கே.எஸ். சகோதரர்களில் டி.கே. முத்துசாமி அவர்களின் பேத்திதான் நாகலட்சுமி சண்முகம். தற்போது கணவர், இரு குழந்தைகளுடன் மும்பையில் வசிக்கிறார். தன்னுடைய தாத்தாவின் 'எனது நாடக வாழ்க்கை' நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இவர் மிக விரும்புகிறார். இவர் எழுதிய குழந்தை வளர்ப்புப் பற்றிய நூல் விரைவில் வெளிவர இருக்கிறது. மேலும் பல நூல்கள் அச்சில் உள்ளன. தமிழின் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் நாகலட்சுமி சண்முகம்.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline