Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: ஆயுதம் பெறக் கிளம்பினான்
- ஹரி கிருஷ்ணன்|ஆகஸ்டு 2019|
Share:
பாண்டவர்கள் வனம்புகுந்து அதுவரையில் கழிந்திருந்த பதின்மூன்று மாதங்களையே பதின்மூன்று ஆண்டுகளாகக் கருதி, உடனடியாக நாடு திரும்பி, போரைத் தொடங்கவேண்டும் என்று விவாதித்த பீமனுக்கு, அப்படிச் செய்வதற்குத் தன் தர்மம் இடம் கொடுக்காததையும், காலச்சூழலும் பிற காரணங்களும் அதற்குச் சாதகமாய் இல்லாததையும் தருமர் விளக்கியதும் பீமன் தன்னுடைய வாதங்களை நிறுத்திக்கொண்டு அடங்கினான். சகோதரர்கள் இருவரும் இப்படிப் பேசிக்கொண்டு இருந்த சமயத்தில் வியாசர் அங்கு வந்தார். பாண்டவர்கள் அந்தச் சமயத்தில் த்வைத வனத்தில் வாசம் செய்துகொண்டிருந்தனர். அங்கே வந்தடைந்த வியாசர், "பாண்டவா! உன்னுடைய மனத்தில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை நான் அறிந்தேன். அந்தக் காரணத்தால் இங்கே விரைந்து வந்தேன். பீஷ்மரிடமிருந்தும் துரோணரிடமிருந்தும் கிருபரிடமிருந்தும் கர்ணனிடமிருந்தும் துச்சாஸனனிடமிருந்தும் எந்தப் பயம் உன்னுடைய மனத்தில் சுழலுகிறதோ உன்னுடைய அந்தப் பயத்தைச் சாஸ்திரத்தில் கண்ட காரணத்தால் போக்குகின்றேன். அதைக் கேட்டுத் தைரியத்தையடைந்து செய்கையால் நிறைவேற்று. ராஜேந்திர! நிறைவேற்றி, பிறகு சீக்கிரம் தாபத்தை விலக்கிக்கொள்' என்றார்." (வனபர்வம், அர்ஜுனாபிகமன பர்வம், அத். 36, பக். 133)

"உன்னுடைய மனத்தில் இந்தப் பெருவீரர்களைப் பற்றிய கவலை தோன்றியிருப்பதை அறிந்ததனால் விரைந்து வந்தேன். சாத்திரங்களின் துணையைக் கொண்டு அதைப் போக்குகிறேன்" என்று சொன்ன வியாசர் அதைத் தொடர்ந்து உருவம் எடுத்துவந்த வெற்றியைப் போன்றதான ப்ரதிஸ்மிருதி என்ற மந்திரத்தை உனக்கு உபதேசிக்கிறேன். இந்த மந்திரத்தை என்னிடமிருந்து பெற்றுக்கொண்டு நீ அர்ஜுனனுக்கு உபதேசம் செய்து வை. அந்த மந்திரத்தின் துணையுடன் அவன் அஸ்திரங்களைப் பெறுவதற்காக இந்திரனையும் ருத்ரரையும் வருணனையும் குபேரனையும் தர்மராஜனையும் (யமனையும்) சென்று காணட்டும். அவர்களிடமிருந்து பலவிதமான ஆயுதங்களைப் பெறட்டும்" என்று கூறினார். "அர்ஜுனன் நரன் என்ற ரிஷி ஆவான். அவனுக்கு நாராயணனின் துணையும் இருக்கிறது. ஆகவே அவனால் இத்தனை தேவர்களையும் நேரில் சென்று காணும் சக்தி இருக்கிறது. அதிக தேஜஸுள்ளவனும் நாராயண ரிஷியை ஸஹாயமாயுடையவனும் வெகுகாலமாய் உள்ளவனும் அழிவற்றவனும் அச்சுதனும் ஜயிக்க முடியாதவனும் தேவரிஷியும் பெரிய கையுள்ளவனுமான இந்த அர்ஜுனன், இந்திரனிடமிருந்தும் ருத்திரரிடமிருந்தும் லோகபாலர்களிடமிருந்தும் அஸ்திரங்களை அடைந்து பெரிய காரியத்தைச் செய்வான்." (மேற்படி இடம்) என்று அஸ்திரங்களைப் பெறுவதற்காக தேவர்களிடம் செல்ல அர்ஜுனன் ஏன் ஏற்றவன் என்பதற்கான விளக்கத்தைக் கொடுத்தார் வியாசர்.

இந்தக் கட்டத்தைப் பாடும்போது வில்லிபுத்தூரார்,

தோத்திரமான தெய்வச் சுருதிகள் யாவும் நான்காக்
கோத்தவன் பின்னும் சொல்வான் 'குன்றவில்லவன் பால் இன்று
பார்த்தனே சென்று பாசுபதக்கணை வாங்கின் அல்லால்
ஆர்த்த பைங்கழலாய்! எய்தாது அரும்பகை முடித்தல் என்றான்


என்கிறார். "வீரக் கழலை அணிந்த தர்மபுத்திரா! தோத்திர வடிவில் உள்ள தெய்வத்தன்மை கொண்ட வேதங்களை நான்காகத் தொகுத்தவராகிய வியாசர், 'மேருமலையை வில்லாக வளைத்தவரான சிவபெருமானிடம் பார்த்தன் சென்று, அவரிடமிருந்து பாசுபத அஸ்திரத்தை வாங்கிக்கொண்டு வந்தாலொழிய பகைவரை அழிக்க முடியாது' என்று கூறினார்". வில்லி இவ்வாறு சொன்னாலும், சிவனிடத்திலிருந்து பெற்ற (ஜயத்ரத வதத்துக்கு ஒருநாள் முன்னால் மீண்டும் ஒருமுறை கனவில் பெறப்போகும்) பாசுபதாஸ்திரத்தை அர்ஜுனன் கடைசிவரையில் உபயோகிக்கவே இல்லை என்பதும் கவனிக்கத் தக்கது.

தருமபுத்திரனுக்கு ப்ரதிஸ்மிருதி மந்திரத்தை உபதேசித்த வியாசர், அதைத் தொடர்ந்து 'நீ இந்த த்வைத வனத்திலே பலகாலம் தங்குவது விரும்பத்தக்கதன்று. பல அந்தணர்களும் பிறரும் இங்கே உன்னைச் சார்ந்து இருக்கின்றனர். விரைவிலேயே இந்த வனத்தில் மானுக்கும், கொடிக்கும் பச்சிலைக்கும் தட்டுப்பாடு ஏற்படும். ஆகவே நீ வேறொரு வனத்துக்குச் சென்று வசிக்க ஏற்பாடு செய்' என்று சொல்லிவிட்டு, மறைந்தார்.
இதன் காரணமாக தருமபுத்திரர் தன்னுடைய பரிவாரங்களுடன் மீண்டும் காம்யக வனத்துக்கே சென்று அங்கே வனவாசத்தைத் தொடரலானார். அங்கே இடம்மாறிய சிலநாள் கழித்து, அர்ஜுனனைத் தனியிடத்துக்கு அழைத்துச் சென்று, "அர்ஜுனா! துரியோதனனிடத்தில் அன்புள்ளவர்களாக இருக்கும் பீஷ்மர், துரோணர், கிருபர், அஸ்வத்தாமா, கர்ணன் போன்ற அனைவருமே பிரம்மாஸ்திரம் முதலான பலவிதமான திவ்யாஸ்திரங்களில் பயிற்சி உள்ளவர்கள். இவர்களை வெல்லவேண்டுமானால் நமக்கு இவற்றைக் காட்டிலும் சக்தி மிக்க அஸ்திரங்களும் வேறு பலவிதமான ஆயுதங்களும் தேவைப்படுகின்றன. இவற்றை நீதான் பெற்று வரவேண்டும். வியாசர் எனக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்திருக்கிறார். இதன் மூலமாக எல்லா தேவர்களின் அருளும் நமக்குக் கிடைக்கும். நீ இந்த மந்திரத்தை என்னிடமிருந்து பெற்றுக்கொண்டு, வடக்கு நோக்கிச் சென்று இந்திரனைச் சரணடைந்து அவனிடமிருந்து சிறந்த அஸ்திரங்களைப் பெற்று வா. இப்போதே கிளம்பு" என்று சொல்லி, வியாசரிடமிருந்து தான் கற்ற ப்ரதிஸ்ம்ருதி மந்திரத்தை அர்ஜுனனுக்கு உபதேசித்தார். அதன் பிறகு அர்ஜுனனை, "வில்லை எடுத்துக் கொண்டு, கவசமணிந்து, உடும்புத் தோலால் ஆகிய விரல் உறைகளை அணிந்து, போருக்குப் புறப்படுபவனைப் போலக் கத்தியையும் எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கி" கிளம்பச் சொன்னார். விருத்திராசுரனிடத்தில் பயந்த அனைத்து தேவர்களும் ஒருகாலத்தில் அனைத்து அஸ்திரங்களையும் இந்திரனிடத்தில் கொடுத்திருந்தார்கள். 'அவற்றைப் பெற்று வா' என்று யுதிஷ்டிரர் அர்ஜுனனுக்குச் சொன்னார். "ஓ! தனஞ்சய! இந்திரனிடத்தில் திவ்யமான எல்லா அஸ்திரங்களும் இருக்கின்றன அன்றோ? விருத்திரனிடமிருந்து பயந்த தேவர்களால் (எல்லா அஸ்திரங்களுமான) பலமானது அப்பொழுது இந்திரனிடத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த இந்திரனிடமிருந்து ஒரே இடத்தில் இருக்கின்ற அவை யாவற்றையும் நீ அடைவாய். அப்பா! அந்த மந்திரத்தினாலேயே யாவற்றையும் அடையப் போகிறாய். இந்திரனையே சரணம் அடைவாய். அவன் உனக்கு அஸ்திரங்களைக் கொடுப்பான். இப்பொழுதே தீக்ஷையடைந்து நீ தேவந்திரனைப் பார்ப்பதற்குப் போவாயாக" என்றார். அம்முறைப்படி தீக்ஷையடைந்தவனும் மன மொழி மெய்களை அடக்கியவனுமான அந்த அர்ஜுனனை நோக்கி இவ்விதம் சொல்லிப் பிரபுவான தர்மராஜர் உபதேசம் செய்தார்." (வனபர்வம், அர்ஜுனாபிகமன பர்வம், அத். 37, பக். 136) ("O Dhananjaya, all celestial weapons are with Indra. The celestials, from fear of Vritra, imparted at the time all their might to Sakra. Gathered together in one place, thou wilt obtain all weapons. Go thou unto Sakra, he will give thee all his weapons. Taking the bow set thou out this very day in order to behold Purandara." என்பது கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு.)

இங்கே ஒன்று சொல்லவேண்டும். அர்ஜுனன் என்றாலே பல மனைவியரை உடையவன், போகத்தில் திளைத்தவன் என்ற கருத்துதான் மிகப் பரவலாக வழங்கிவருகிறது. 'அர்ஜுன சன்யாசி' என்ற பிரயோகம் மிகவும் கேலியான தொனியிலேயே பயன்படுத்தப்படுகிறது. பாரதி, தன்னைச் சந்நியாசி வேடத்தில் சந்திக்க வந்த சி.ஐ.டி. அலுவலர், தன் காலில் விழும்போது, "துறவறம் மேற்கொண்டவன் இல்லறத்தான் காலில் விழுவதா! ஓய் அர்ஜுன சன்யாசி! உயரத்தில் புத்தி வையும்" என்று கிண்டலாகச் சொன்னதாக வ.ரா. எழுதியிருக்கிறார். ஆரம்ப காலத்தில் பன்னிரண்டு வருட தீர்த்தயாத்திரை சென்றிருந்த அர்ஜுனன், சுபத்திரையைத் திருமணம் செய்துகொள்வதற்காக சன்யாசிக் கோலம் தரித்துச் சென்று, அவளை மணமுடித்ததைக் குறிக்கும் கேலி மொழி இது. அர்ஜுனன் புலனடக்கம் உள்ளவன் என்பதைப் பல இடங்களில் வியாச பாரதம் விவரிக்கிறது. அப்படிப்பட்ட ஓர் இடம்தான் இது.

இது ஒருபுறமிருக்க, தர்மபுத்திரனிடம் விடைபெற்று, நகுல-சகதேவர்களிடமும் பீமனிடமும் பாஞ்சாலியிடமும் விடைபெற்று ஆயுதங்களைப் பெறுவதற்காக வடக்கு நோக்கி அர்ஜுனன் புறப்பட்டான். பாஞ்சாலி விடைகொடுத்து அனுப்பும் கட்டம் மிகவும் உருக்கமானதொன்று என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். அப்படிக் கிளம்பினவன் ஆறு பகலும் ஆறு இரவும் நடந்துபோய் இந்திரகீல மலையை அடைந்தான். அங்கே நடந்துகொண்டிருந்தபோது 'நில்' என்று ஒரு குரல் ஒலித்தது. சுற்றுமுற்றும் பார்த்தபோது வயதான ஒரு அந்தணத் தவசி தென்பட்டார். "அந்தணர்களின் ஆலயமான இந்த இடத்தில் வில், அம்பு, கத்தி முதலான ஆயுதங்களுக்கு வேலையே இல்லையே! எதற்காக இவற்றை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறாய்? நீ யார்? இங்கே ஆயுதங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. இவற்றை இங்கேயே விட்டுவிடு" என்று அந்தத் தவசி அர்ஜுனனிடத்தில் சொன்னார். புன்னகையோடு பலமுறை இவ்வாறு சொல்லியும் அர்ஜுனனை அவனுடைய உறுதியிலிருந்து அசைக்க முடியவில்லை. அர்ஜுனனை அசைக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டதும் அந்த தபசி, "ஓ! பகைவரைப் பிளப்பவனே! நான் இந்திரன். உனக்கு க்ஷேமம் உண்டாகுக. வரத்தைக் கேட்டுக்கொள்ளு" என்றான். (வனபர்வம் அத். 37, பக். 141) இந்திரனை வணங்கிய அர்ஜுனன், "ஓ, பகவானே!இப்பொழுது உம்மிடமிருந்து எல்லா அஸ்திரத்தையும் அறிய விரும்புகிறேன். இதுவே என்னால் விரும்பப்பட்ட விருப்பம். இந்த வரனை எனக்குக் கொடுப்பீராக என்று சொன்னான்." (மேற்படி இடம்)

இந்திரன் மீண்டும் சிரித்துக்கொண்டு, "தனஞ்சய! அஸ்திரங்களால் என்ன பிரயோஜனம். இஷ்டமான லோகங்களைக் கேட்டுக்கொள். நீ மேலான கதியை அடைந்திருக்கின்றாய்" என்று மறுமொழி சொன்னான். "ஓ தேவராஜரே! எனக்கு எந்த சுகத்திலும், செல்வத்திலும் விருப்பமில்லை. நானோ சகோதரர்களை விட்டுப் பிரிந்து இங்கே வந்திருக்கிறேன். பகையைத் தீர்த்துக்கொள்ள வேண்டிய கடப்பாடு உடையவனாக இருக்கிறேன். இப்படிப்பட்ட நிலையில் நான் வேறு எதையும் விரும்பவில்லை. அஸ்திரங்கள் மட்டுமே வேண்டும். அவற்றைத் தாரும்" என்று கேட்டுக்கொண்டான்.

இதைக் கேட்ட இந்திரன் சிரித்துக்கொண்டே, "ஓ! ஐயா! எப்பொழுது மூன்று கண்ணுள்ளவரும் சூலதாரியும் பூதேசருமான சிவபெருமானைப் பார்ப்பாயோ அப்பொழுது திவ்யாஸ்திரங்கள் எல்லாவற்றையும் உனக்குக் கொடுப்பேன். மேலான ஸ்தானத்திலிருக்கிற மகாதேவருடைய தரிசனத்தில் முயற்சியைச் செய். ஓ! கௌந்தேய! அந்தத் தேவருடைய தரிசனத்தினால் ஸித்தியை அடைந்தவனாகி ஸ்வர்க்கத்துக்கு வருவாய்" என்றான்.

இப்படித்தான் அர்ஜுனன் சிவபெருமானைக் குறித்துத் தவமியற்றி, அவருடைய காட்சி கிடைத்து, அவரிடத்திலிருந்து பாசுபதாஸ்திரத்தைப் பெறப்போகிறான். அதைத் தொடர்ந்து வருணன், குபேரன், யமன், இந்திரன் எல்லோரும் அர்ஜுனனிடத்தில் வரப்போகிறார்கள். "பீஷ்மர் முதலான அனைவரையும் நீ வெல்வாய்" என்று சொல்லி யமன் அவனுக்கு தண்டாயுதத்தைத் தரப் போகிறான்; வருணன் பாசங்களைத் தரப் போகிறான்; குபேரன் தன்னுடைய அஸ்திரத்தையும் அந்தர்தானாஸ்திரத்தையும் தரப் போகிறான். இந்திரன் அர்ஜுனனை ஸ்வர்கத்துக்கு வரச்சொல்கிறான். பாரதம் தேவலோகத்துக்கு சஞ்சரிக்கப் போகிறது.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 
© Copyright 2020 Tamilonline