Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | நூல் அறிமுகம் | குறுநாடகம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
இதுவும் வானப்பிரஸ்தம் தான்
மல்லிப்பூ மரகதம்
- அம்புஜவல்லி தேசிகாச்சாரி|ஜூலை 2019|
Share:
சுமனா பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரையில்தான். அப்பாவின் மாற்றல்கள் பிள்ளைகளின் படிப்பைப் பாதிக்காதவாறு குடும்பம் மதுரையிலேயே இருந்தது. மதுரையில் பள்ளி, கல்லூரித் தோழிகள், அண்டை அயலார் பெயர்களை மறந்தாலும் மதுரை என்றதுமே மரகதம் பெயர்தான் அவளுக்கு நினைவுக்கு வரும். அவள் பெயருடன் 'மல்லி ... யேப்'பும் சேர்ந்துதான். அந்தி மயங்கும் வேளை, தெருக்கோடியில் 'மல்லி..... யேப் ' என அவளது குரல் கேட்கும்போதே போட்டி போட்டுக்கொண்டு பொட்டுக்கூடையுடன் வாசலுக்கு வந்துவிடுவார்கள் சகோதரிகள் மூவரும். கோயில் வாசலில் கடை போட்டிருந்தாலும், வியாபாரத்தை முடித்துக்கொண்டு குறிப்பாகச் சிலருக்குப் பூவிற்பது வழக்கம். அவள் விற்கும் பூக்களைப் போலவே மலர்ந்த முகம். இவர்கள்தான் கடைசி வாடிக்கை என்பதால் அளந்ததற்கும் மேலாக ஒரு கை பூவுடன், நாலு ரோஜாவும் கொசுறாகப் போடுவாள். "சுமனாப் பொண்ணுக்கு முடி நல்ல அடர்த்தி, வெள்ளிக்கிழமை பூ தெச்சு விடுங்கம்மா" என்றபடி வாழைமட்டை, கனகாம்பரம், தவனமும் கொண்டுவந்து கொடுப்பாள்.

அந்தக்காலத்தில் மத்தியதரக் குடும்பப் பிள்ளைகள் பலரைப்போன்றே சுமனாவும் தங்கைகளும் அரசுப் பள்ளியில்தான் படித்தனர். அந்தப் பள்ளியில் சுமனாவின் தங்கையின் வகுப்புத் தோழி, மரகதத்தின் ஒரே மகள் ஜவந்தி. படிப்பிலும், விளையாட்டுகளிலும் முன்னணியில் நிற்பாள். அவளே உலகமென்று வாழ்ந்த மல்லிப்பூ மரகதத்தின் வாழ்க்கையில் பெரும்புயல் ஒன்று வீசி, அவள் குடும்பமே ஆட்டம் கண்டுவிட்டது.

ராப்பகலாய் உழைப்பதை வைத்துக் 'காடிக் கஞ்சியை மூடிக் குடித்துக்கொண்டு' வாழ நினைக்கும் வீடுகளிலும் சாபக்கேடாக வந்து அமர்ந்து ஆட்டிப் படைக்கும் மது அரக்கன் மரகதத்தின் வீட்டையும் விட்டு வைக்கவில்லை. அவள் புருஷன் மாசிலாமணியின் முகவரியே மதுக்கடைதான். வீட்டில் மறைத்து வைத்திருக்கும் ஐந்து பத்தையும் பீராய்ந்துகொண்டு போய்விடுவான். அவனு டைய வேட்டைக்குத் தப்ப சுமனாவின் வீடுதான் வங்கியாக இருந்தது. ஆயிரம் கவலைகளுக்கிடையிலும் சிரித்த முகம் மாறாமல் வளைய வந்துகொண்டிருந்த அவளது வாழ்க்கையையும் புரட்டிப்போட்டுவிட்டது அந்த நாள்...

*****


சுமனாவுக்குப்ளஸ் டூ தேர்வுகள் நடந்துகொண்டிருந்த சமயம். அன்று , தமிழோ, கணக்கோ ஏதொவொரு தேர்வை முடித்துவிட்டுச் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். மரகதத்தின் 'மல்லி ....... யேப்' கூவலுக்குப் பதிலாக உரத்த குர லில் "பாங்கி அம்மா (அப்பா வங்கி ஊழியரானதால் பாங்கி அம்மா!) தலையிலே கல் வுழுந்துட்டுதேம்மா" என்று கதறிக்கொண்டு வந்தாள். அவளது பதற்றம் தொற்றிக்கொள்ள "என்ன ஆச்சு மரகதம்? உன் புருஷன் ஏதாவது ஏடாகூடமா செஞ்சு மாட்டிக்கிட்டானா? வேறென்ன ?" என்று கேட்டாள் அம்மா.

"இந்த செவுந்திப் பொண்ணு கடதாசி எளுதி வச்சிட்டுப் போயிட்டுதும்மா. எங்க போச்சோ, நான் அலமந்து கெடக்கேன்; இந்த மனுஷனானா 'போட்டுட்டு' ஒளறிக்கிட்டுக் கெடக்காரு. ஒண்டிப் பொம்பள எங்க நான் போயி தேடுவம்மா?" என்று புலம்பினாள்.

அம்மாவுக்கு மட்டுமல்ல, சுமனாவுக்கும் சகோதரிகளுக்குமே திடுக்கென்றிருந்தது. மரகதத்தைப் போலவே அமைதியான, எதற்கும் பதறாத பெண் ஜவந்தி; அவளே இப்படி ஒரு முடிவு எடுக்கும்படி என்னதான் நடந்திருக்கும்? ஒரே புதிராக இருந்தது.

கடிதத்தை வாங்கிப் படித்தாள் அம்மா. 'இந்த அப்பாவின் குடியும் ரகளையும் அளவுமீறிப் போய்விட்டது. இனியும் இங்கிருந்தால் என் வாழ்க்கையே பாழாகிவிடும். பயப்படாதே, நான் 'ஏதாவது' செய்துகொண்டுவிட மாட்டேன். என்றாவது உன்னை மட்டுமே நிச்சயம் சந்திப்பேன்.' என்று தலையும் புரியாமல், வாலும் புரியாமல் ஒரு துண்டுக் கடிதம். அவள் எங்கு சென்றாளோ! அவளுக்கு யார் அடைக்கலம் கொடுப்பார்கள்? இரவு முழுதும் நாலைந்து பேராகத் தேடி அலைந்ததுதான் மிச்சம். மரகதத்தை இந்த அளவு இடிந்துபோய்ப் பார்க்க மனதை அள்ளிப் பிடுங்கியது. "அந்த ஆளு இன்னிக்குதான் புதுசாக் குடிக்கிறாரா? இவ பார்க்காத ஆர்ப்பாட்டமா? பின்னே இப்ப மட்டும் ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தாளோ?" என்று புலம்பியபடி இருந்தாள். விடியும்வரை யாருக்கும் பொட்டுத் தூக்கமில்லை.

காலையில் வந்த அப்பாவின் ஆலோசனைப்படி மகளிர் காவல்நிலையம் சென்றனர். பதினாலு வயதுப் பெண்ணைக் காணோம் என்று புகார் கொடுக்கச் சென்றால் அந்தக் காவல் ஆய்வாளர் பேசியதிலேயே சற்று நாகரிகமான வார்த்தை என்றால் "உங்க ஏரியாவுல யாராவது ஆம்பிள காணாமப் போயிருக்கானா என்று பார்த்தீங்களா?" என்பதுதான். "ஐயோ, அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையம்மா. ஸ்கூலு விட்டா வூடுன்னு உள்ள புள்ளைங்க அது" என்று கூனிக்குறுகி பதிலிறுத்தாள் மரகதம். "இதெல்லாம் பெத்தவங்களுக்கு கடைசியிலதான் தெரியும்" என்று ஏளனமாக நகைத்தவண்ணம் கேஸை எடுத்துக்கொண்டார் அவர்.

இதனிடையில் மகள் காணாமற்போனதை ஒருவாறு புரிந்துகொண்டு 'சுயநினைவுக்கு' வந்த மாசிலாமணி, "அந்தப்புள்ளை ஒரு ஏழெட்டு நோட்டுப் பொஸ்தகம் வச்சிருந்திச்சி. வருஷம்தான் முடிஞ்சு போச்சே, இனிமே தேவைப்படாதுன்னு மூலைக்கடையிலே போட்டேன். நாப்பது ரூவா தேறிச்சு. நீதான் காசையே கண்ணுல காட்டமாட்டேன்றியே; மனுஷன் 'செலவுக்கு 'என்ன செய்ய? அதான் அப்படி செஞ்சேன். ஸ்கூல் விட்டு வந்து பார்த்துட்டு என்னவோ ரெக்கார்டாமே, அதை ஸ்கூலிலே காட்டணுமாம். நோட்டைக் காணோமுன்னு வூடு பூரா தேடிச்சு. 'என்ன செஞ்சு தொலைச்சே என் நோட்டை?'ன்னு கத்திச்சு. நானும், சும்மா எதுக்காக கூவுற, நீ படிச்சி பெரிய ஆபீசர் ஆகப் போறியாக்கும்னு சத்தம் காட்டினேன். அதுக்கு ரோசப்பட்டு கெளம்பிப் போயிட்டாப்ல. கழுத தன்னாலே வந்துடும். அம்மாச்சி வூட்டுக்கோ, பெரியாத்தா வூட்டுக்கோ போயிருக்கும்" என்று அலட்டிக்கொள்ளாமல் கூறிவிட்டு 'எப்போதும் போகுமிடத்துக்கு' கிளம்பிவிட்டான். மரகதமும் மனம் உடைந்துபோய் ஒரு வாரத்திலேயே அவளது தாய் வீடிருந்த கிடாரிப்பட்டியோ எங்கோ போய்விட்டாள். மறு வருஷமே சுமனாவின் தந்தைக்கு சென்னைக்கு மாற்றல் கிடைக்கவே, குடும்பம் அங்கு சென்றுவிட்டது. மூவருக்கும் திருமணமாகி இன்று சுமனா பெங்களூரில் வசிக்கிறாள். ஹூம், மரகதம் எங்கே எப்படி இருக்கிறாளோ, ஜவந்தி என்ன ஆனாளோ, எத்தனை காலத்துத் தொடர்பு எப்படி விட்டுப்போய்விட்டது!

*****
அன்று சுமனாவின் வீட்டில் வேலைசெய்யும் செல்வி சமையல் எரிவாயு மானியத்திற்காக வங்கியில் கணக்குத் தொடங்க அவளது உதவியை நாடி வந்தாள். அவளுக்கும் அதே வங்கியில் கணக்கு இருந்ததால் அறிமுகப்படுத்த அவளுடன் சென்றாள். அங்கிருந்த அவளின் தோழி, புது அதிகாரி வந்திருப்பதாகவும், அவரை சந்தித்து சம்பிரதாயங்களை முடித்த பின் கணக்கு தொடங்கப்படும் எனவும் தெரிவித்தாள். சற்று நேரக் காத்திருப்புக்குப் பின் அதிகாரியின் அறைக்குச் சென்றனர்

அதிகாரியின் ஆசனத்தில் இருந்த பெண்மணியை உற்றுப் பார்த்தாள் சுமனா. தெரிந்த சாயல், சற்று ஆழ்ந்து யோசித்ததும் நினைவுக்கு வந்துவிட்டது. அட, நம்ம மல்லிப்பூ மரகதம் சாயலா இருக்கே! அப்ப இது? மேஜையில் இருந்த பெயர்ப்பலகை 'ஜவந்தி சண்முகம்' என்றது! வியப்பும், மகிழ்ச்சியும் ஒரு சேர "ஜவந்தி, நீயா? எத்தனை வருஷமாச்சு பார்த்து! மரகதம் எப்படி இருக்காங்க?" எனக் கேள்விகளாகவே மாறிப்போனாள் சுமனா.

இருபது வருஷத்தில் சுமனா மட்டும் மாறாமல் இருப்பாளா? சற்று யோசனையு டன் அவளை உற்றுப்பார்த்த ஜவந்தி "நீங்க… சாரி, சரியா நினைவுக்கு வரலை. ஆ னால் தெரிஞ்ச முகம்போலத்தான் இருக்கீங்க" என்று தயங்கவே, "ஜவந்தி, கோடிவீட்டு பாங்க் அம்மா மக சுமனா நான். என் தங்கை ரமா உன்னோட படிச்சாளே, நினைவிருக்கா?" என்று கேட்டதுமே, "அட, சுமனா அக்காவா? ஆள் அடையாளமே தெரிலையேக்கா?" என்றபடிக் காப்பி வரவழைத்து உபசரித்தாள். வந்த வேலை எளிதாக முடிந்துவிட்டது. பரபரப்பான அலுவல் நேரமாக இருந்ததால், "அக்கா, உங்களோட நிறையப் பேசணும். அம்மா என்னுடன்தான் இருக்காங்க. கிட்டத்தான் வீடு; சாயங்காலமா வாங்களேன். என் கதையைப் பூரா கேட்கலாம். ரொம்ப சுவாரசியமா இருக்கும்" என்று முகவரியைக் கொடுத்தாள்.

தலை வெடிக்கும் ஆர்வத்துடன் மாலை அவள் வீட்டுக்குச் சென்றாள் சுமனா. "நீயும் காணாமப் போய், உங்கம்மாவும் வெளியூருக்குப் போய்ட்டாங்களா, சுத்தமா தொடர்பே இல்லாம போயிட்டுது. உன் வாழ்க்கையில் என்ன மாயம் நிகழ்ந்து இன்று நீ இருக்கும் நிலைக்கு வந்தாய்? அம்மா எப்ப உன்னுடன் சேர்ந்தாங்க?" என்று சரமாரியாகக் கேள்விகளை வீசினாள்.

அதற்குள் உள்ளிருந்து வந்த மரகதம் "அட சுமனாப் பொண்ணா? எப்பிடி இருக்கீங்கம்மா? அம்மா அப்பா தங்கச்சிங்களெல்லாம் சொகமா?" என்று கேட்டபடி அமர்ந்தாள். வயதானதால் சற்றுத் தளர்வு இருந்ததைத் தவிர அதே புன்னகை முகமும் களையும் மாறவேயில்லை.

"அக்கா, நான் 'ஓடியெல்லாம்' போகவில்லை. நேராக என்மீது மிகவும் அக்கறை கொண்ட கல்யாணி டீச்சர் வீட்டுக்குச் சென்று நடந்ததைக் கூறி அழுதேன். இனி வீட்டுப்பக்கமே போகமாட்டேன், உங்க வீட்டிலேயே ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்கிறேன்" என்று அங்கேயே உட்கார்ந்துவிட்டேன். அவர் ரெக்கார்டு நோட்டுகள் வாங்கிக் கொடுத்து, உதவியும் செய்தார்; எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்து முடித்தேன்; அவற்றைப் பள்ளியில் சேர்க்கவும் உதவினார். நாலு நாள் 'அஞ்ஞாதவாசம்' முடிந்து விடுமுறை விட்டதும் டீச்சருடன் அவர் ஊரான சோழவந்தானுக்குப் போய்விட்டேன். என் அதிர்ஷ்டம், அவருக்கும் அந்த ஊருக்கே மாற்றல் கிடைத்துவிட்டது. அவரும், அவரது தந்தையும் என்னைக் குடும்பத்தில் ஒருத்தியாகவே வளர்த்து, நன்கு படிக்கவும் வைத்தார்கள். உதவித் தொகையிலேயே பட்டமேல்படிப்பு வரை முடித்தேன். வங்கி நுழைவுத் தேர்வில் வெற்றி பெறவே, வேலையும் கிடைத்தது; வேலை கிடைத்ததுமே அம்மா முன் போய் நின்று வியப்பும், மகிழ்ச்சியும் கொடுத்தேன். நாலைந்து பதவி உயர்வுகள், நாலைந்து மாற்றல்கள் என்று இதோ இங்கு வந்து இரண்டு மாதமாகிறது."

மரகதம் தொடர்ந்தாள். "சும்மா நாலு நாள்தான் இவங்கப்பா தைரியமெல்லாம்! பின்னாடி எங்கம்மாவோட ஊருக்கு வந்து, 'இந்தப் பாழாப்போன பழக்கத்தால் எம் புள்ளையே தொலச்சுட்டேனே'ன்னு அழுது புலம்பினாரு. அது மொதக்கொண்டு 'அந்தப் பக்கமே' போவல. எங்க ஊர் பக்கமே வெவசாயக் கூலியா காலந் தள்ளிக்கிட்டு இருந்தோம். ஒருநா இந்தப் பொண்ணு ஜம்முனு ஆபீசர் கணக்கா வந்து நிக்குது! பொறவென்ன, டீச்சரம்மா தன்னோட கொழுந்தனுக்கே இவளைக் கட்டி வச்சிட்டாங்க. மாப்பிள்ளையும் பெரிய கம்பெனியில நல்ல வேலை. பேரன் பேத்தி ரெண்டும் அவங்க தாத்தா வீட்டுக்குப் போயிருக்குதுங்க. ஆண்டவன் புண்ணியத்தில் எல்லாம் நல்லபடியா இருக்கோம்" என்று கதையை முடித்தாள்.

"ஒண்ணு தெரியுமா சுமனாக்கா, அம்மா மட்டும் பூக்கூடையை விடவேயில்லை; ஆனா ஒண்ணு, இப்பல்லாம் சாயங்காலம் மட்டும் கோயில் வாசலுக்கு விசிட் அடிப்பதோடு சரி" என்றாள் ஜவந்தி.

நிறைந்த மனத்துடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பினாள் சுமனா.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி,
சான் ஹோசே, கலிஃபோர்னியா
More

இதுவும் வானப்பிரஸ்தம் தான்
Share: 
© Copyright 2020 Tamilonline