Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | முன்னோடி | சிறுகதை | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
ஸ்ரீ சக்கரை அம்மாள்
- பா.சு. ரமணன்|மார்ச் 2019|
Share:
வானத்தில் பறந்தவர்
"சென்னை கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல்மாடியில் பறந்துவந்து நின்றனர். மானுடம் பறக்கிறதெனில் உலகம் அதை எப்படி வியக்குமென்று சொல்ல வேண்டுவதில்லை. அக்காலத்தில் சென்னையில் வதிந்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர். அப்பொழுது சென்னை மியூஸியத் தலைவராயிருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தைச் சேர்ந்தவரென்றும், அவரிடம் பறவைக்குரிய கருவி கரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தலறப்படி (evolution) அத்தகைய பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டன. அவர் விளக்கம் மற்றவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. யான் "தேசபக்தன்' ஆசிரியனாகியபோது டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. பறவையாரைப் பற்றி அவரை நான் விசாரித்தேன். அவர், "அம்மையார் சித்தரினத்தில் சேர்ந்தவர்' என்று கூறினர். பறவை நாயகியார் நிலை மனோதத்துவத்துக்கு எட்டுவதா? உன்னிப் பாருங்கள்."

- மேற்கண்டவாறு தனது "உள்ளொளி' என்ற நூலில் குறிப்பிட்டிருப்பவர் திரு.வி.க. மனிதராவது, பறப்பதாவது என்று தோன்றத்தான் செய்யும். ஆனால், அந்த அம்மையார் பறந்திருக்கிறார். அதை நேரில் பார்த்து பதிவு செய்துமிருக்கிறார் திரு.வி.க. சித்தாற்றல் பெற்றவர்களால் பறக்கமுடியும் என்கிறது நமது சித்தமரபு. "ககன சித்தர் வந்து வந்து காய சித்தி விளைப்பர்" என்கிறது குற்றாலக் குறவஞ்சி. அஷ்டமா சித்தி பெற்றவர்களால் இதுபோன்ற பல சித்துக்களைச் செய்யமுடியும் என்கின்றன சித்தர் வரலாற்று நூல்கள். தான் பெற்ற "இலகிமா' என்ற சித்தியின் மூலம், உடல் எடையைக் காற்றைவிடக் குறைந்ததாய் மாற்றிக்கொண்டு, வானத்தில் பறந்திருக்கிறார் அந்த அம்மையார். அது சரி, யார் இந்த அம்மையார், இந்தச் சித்து அவருக்கு எப்படிக் கைவந்தது, எதற்காகப் பறந்தார் என்றெல்லாம் பார்க்க வேண்டுமானால் நாம் தேவிகாபுரத்திற்குச் செல்லவேண்டும்.

தோற்றம்
Click Here Enlargeவட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு சிற்றூர் தேவிகாபுரம். அங்குள்ள சிவாலயத்தில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தார் சேஷ குருக்கள். ஸ்ரீவித்யா உபாசனையில் தேர்ந்தவர். அவரது மனைவி சுந்தராம்பாள். சிவபூஜை செய்யாது ஒரு வேளை உணவுகூட உட்கொள்ள மாட்டார்கள் இருவரும். இறையருளால் அந்தத் தம்பதிகளுக்கு, 1854ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு அனந்தாம்பாள் என்று பெயர்சூட்டி அன்போடு வளர்த்து வந்தனர். சிறுவயதிலேயே அனந்தாம்பாளுக்கு இறையனுபூதி வாய்த்திருந்தது. குழந்தை வளர்ந்துவரும் நிலையில் திடீரெனத் தாயார் காலமானார். சிறிதுகாலம் கழித்து சேஷ குருக்கள் அக்கால வழக்கப்படி மறுமணம் செய்து கொண்டார். சிற்றன்னையின் கவனிப்பில் வளர்ந்து வந்தாள் அனந்தாம்பாள் என்றாலும் தாயைப் பிரிந்த ஏக்கம் மனதுக்குள் இருந்தது.

அனந்தாம்பாள் எப்பொழுதும் தனிமை விரும்பி. வீட்டு வேலைகளை முடித்தபின், ஓய்வு நேரத்தில், தன் வயதொத்த குழந்தைகளோடு விளையாடப் போகாமல் தனித்து அமர்ந்து ஏதோ யோசித்தவாறு இருப்பாள். சமயங்களில் தந்தையோடு கோயிலுக்குச் செல்பவள், கோபுரத்தின் மேல்நிலைக்குச் சென்று, தனியாகக் கண்களை மூடி அமர்ந்திருப்பாள். சேஷ குருக்கள் அங்குமிங்கும் அலைந்து தேடி குழந்தையைக் கண்டுபிடித்து வீட்டுக்குக் கூட்டி வருவார். இது தினசரி வழக்கமானது. சிறுவயதிலேயே அனந்தாம்பாளுக்கு இறை நாட்டம் அதிகமாக இருந்தது. தந்தையிடமிருந்து லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீ ஸ்துதி, சௌந்தர்ய லஹரி, ஸ்ரீ சூக்தம் போன்றவற்றைக் கற்றுக்கொண்டு அம்பாள் சன்னதியில் அமர்ந்து பாராயணம் செய்வது வழக்கமாக இருந்தது.

திருமண வாழ்க்கை
வருடங்கள் கடந்தன. அனந்தாம்பாளுக்கு எட்டு வயதானபோது இருபத்து மூன்று வயதான சாம்பசிவன் என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது. அது சாம்பசிவனுக்கு இரண்டாவது திருமணமும் கூட. என்றாலும், பால்ய விவாகம் என்பது அக்காலத்தில் சகஜமான நிகழ்வாக இருந்ததால் எதிர்ப்புகள் ஏதும் வரவில்லை. சாம்பசிவன் சென்னை எழும்பூரில் இருந்த கோமளீஸ்வரர் மடத்தின் அதிபதியாக இருந்தார். மணமாகிச் சென்னைக்கு வந்தாள் அனந்தாம்பாள். பிறந்த உடனே தாயை இழந்து, வாழ்க்கையில் பல்வேறு துயரங்களை அனுபவித்து வந்த அவள், திருமண வாழ்க்கை நல்லபடியாக இருக்கும் என்று நம்பினாள். ஆனால், அந்த நம்பிக்கை வீண் போனது. கணவர் சாம்பசிவன் ஒழுங்கீனம் கொண்டவராகவும், ஆடல், பாடல் போன்ற கேளிக்கைகளில் ஆர்வம் உடையவராகவும் இருந்தார். சிறு பெண்ணான அனந்தாம்பாளை ஒரு பொருட்டாகவே அவர் மதிக்கவில்லை. தன்னைத் தட்டிக்கேட்க யாருமே இல்லை என்ற தைரியத்தில் மிகவும் ஒழுங்கீனமாக நடந்துகொண்டார். அனந்தாம்பாளோ இதுபற்றி எல்லாம் எதுவும் தெரியாத, கள்ளம் கபடம் இல்லாத சிறுபெண் என்பதால் அந்த வீட்டில் ஒரு குழந்தையைப்போல் வளைய வந்தாள். தன் பாட்டுக்கு விளையாடிக் கொண்டிருப்பாள். இல்லாவிட்டால் பூஜை, தியானம் என்று நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பாள்.

வருடங்கள் கடந்தன. அனந்தாம்பாள் வளர்ந்து பெரியவளானார். ஆனாலும் சாம்பசிவன் தன் தீய நடவடிக்கைகளைக் கைவிடவில்லை. அனந்தாம்பாளுக்கு மனரீதியாகப் பல சித்ரவதைகளைச் செய்ய ஆரம்பித்தார். தீய நடத்தை உள்ள கணவருடன் வாழ்வது சித்ரவதையாக இருந்தது. ஆனாலும், சகித்துக்கொண்டு தனது இல்லறக் கடமைகளைத் தொடர்ந்து வந்தார் அனந்தாம்பாள். ஆனாலும், சாம்பசிவன் தன் மனைவியின் அருமையைப் புரிந்து கொள்ளவில்லை. மனமிரங்கவில்லை. அடிக்கடி தீய நடத்தை உள்ள பெண்களின் வீட்டிற்குச் செல்வது, இரவில் அங்கேயே தங்குவது, இல்லாவிட்டால் அவர்களை தான் தங்கி இருக்கும் வீட்டிற்கே அழைத்து வருவது என்று நடந்து கொண்டார். அனந்தாம்பாள் கணவரிடம் இது சரியில்லை என்று அறிவுறுத்தினாலும் அவர் அதனை மதிக்கவில்லை.

Click Here Enlargeஉறவினர்கள் யாரேனும் இதுபற்றி அனந்தாம்பாளிடம் விசாரித்தால் கூட, "இறைவன் என்ன கொடுக்கிறானோ அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், இறைவன் கொடுத்தது இந்த வாழ்க்கை. அவன் சித்தப்படியே தான் எல்லாம் நடக்கும். அவன் கொடுத்ததை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும் நான்?" என்று பதில் சொல்வார். அனந்தாம்பாளின் இந்த ஞான வைராக்கிய நிலை கண்டு அவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். சிறுவயது முதலே தொடர்ந்து பல துன்பங்களை அனுபவித்து வந்ததால் அனந்தாம்பாளின் மனது அந்த அளவிற்குப் பக்குவப்பட்டிருந்தது. அதே சமயம் அவரது தனிமைத் தவமும், யோக சாதனையும் தொடர்ந்து கொண்டிருந்தன. அருகில் உள்ள கோமளீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று தியானம் செய்வதுடன், தான் தங்கியிருந்த வீட்டின் மேல்மாடியில் தன்னை மறந்த நிலையில் தியானத்தில் ஈடுபடுவதும் அவரது வழக்கமானது.

நாளடைவில் தீயசெயல்களின் விளைவால் படுத்த படுக்கையானார் சாம்பசிவன். அப்போதும் அவருக்கான கடமைகளைச் செய்து வந்ததுடன், தினம்தோறும் ஆலயம் சென்று கணவருக்காகப் பிரார்த்தித்து வந்தார் அனந்தாம்பாள்.

ஒருநாள் சாம்பசிவன் இறந்து போனார். அனந்தாம்பாளுக்கு மொட்டை அடிக்கப்பட்டது. வெள்ளை வஸ்திரமும் அணிவிக்கப்பட்டது. அதுமுதல் யாருடனும் எதுவும் பேசாமல், தன் வீட்டின் மொட்டை மாடியில் தனித்தமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார் அவர். அப்போது அவருக்கு வயது 20. பின்னர் தந்தையின் அழைப்பை ஏற்றுச் சொந்த ஊரான தேவிகாபுரத்திற்குச் சென்று சிலகாலம் வசித்தார். பின்னர் தன் சகோதரர் வாழ்ந்த போளூருக்குச் சென்றார். அங்கு மலை ஒன்றில் நட்சத்திர குணாம்பாள் என்ற பெண் சித்தர் வாழ்ந்து வந்தார். அவரைச் சென்று தரிசித்தார் அனந்தாம்பாள். அவர், இவருக்கு குருவாக அமைந்து வாழ்வியல் உண்மைகளைப் போதித்ததுடன், ஸ்ரீசக்ர வழிபாட்டையும் தொடர்ந்து செய்து வரும்படி அறிவுறுத்தினார். அனந்தாம்பாளும் அதனை ஏற்றுக் கொண்டார். பின் சென்னை திரும்பினார்.

ஒளி தரிசனம்
சென்னைக்கு வந்ததும் மேலும் தீவிரமாக அவரது தவ வாழ்வு தொடர்ந்தது. விடியற் காலையில் எழுந்து கொள்வார் அனந்தாம்பாள். காலைக் கடன்களை முடித்து விட்டுப் பூஜையைத் தொடங்குவார். ஸ்ரீசக்ரத்திற்கு வெகுநேரம் பூஜை செய்வார். பின் லலிதா சகஸ்ரநாம பாராயணம். அதன் பின் சூரியனை நோக்கிக் கண்ணிமைக்காமல் அமர்ந்து தியானம். பகல் ஒருவேளை மட்டும் சிறிதளவு உண்ணுவார். பின் மீண்டும் தியானத்தைத் தொடர்வார். இவ்வாறே ஆண்டுகள் பல கழிந்தன. ஒன்றல்ல, இரண்டல்ல... கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகள், அவரது முப்பதாவது வயது வரையில், அந்த மௌனத் தவம் தொடர்ந்தது. தவத்தின் முடிவில் ஒளிக்கெல்லாம் ஒளியான அந்தப் பேரொளியைக் கண்டார் அம்மா. ஒளி தரிசனம் பெற்ற அந்த நாள் முதல் சதா ஆனந்த நிலையில் இருப்பது அம்மாவின் வழக்கமானது. உணவும் உறக்கமும் குறைந்தது. அடிக்கடி தனியே இருப்பதை விரும்பிய "அம்மா' மாடியிலேயே தங்கி ஏகாந்தமாகப் பொழுதைக் கழிக்கலானார். "யான் எனதென்பது அறியேன், பகலிரவாவது அறியேன்' என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்ததுடன், பரிபூரண ஆனந்த பிரம்ம நிலையிலேயே திளைத்திருந்தார். பகல், இரவு என அனைத்தும் கடந்த, நிர்குணப் பரப்ரம்ம சொரூப நிலையிலேயே தான் எப்போதும் இருப்பதாக அவர் கூறியதைப் பலராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

சித்தயோகினி
ஒளி தரிசனம் பெற்ற அந்த நாள்முதல் ஞான சொரூபிணியாக, சித்த யோகினியாக வாழ்க்கை நடத்தி வந்தார். சதா ஆனந்த நிலையில் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பது அவர் வழக்கமானது. கோமளீசுவரன் ஆலய வாசலில் அமர்ந்திருப்பார். யாரைப் பார்த்தாலும் பெருங்குரலெடுத்துச் சிரிப்பார். சுமார் ஐந்து நிமிடம்வரை விடாது அந்தச் சிரிப்பு தொடரும். சிறிதுநேரம் சும்மா இருப்பார். பின்னர் மீண்டும் சிரிப்பு. அவரைக் கண்ட பலரும் ஆரம்பத்தில் பைத்தியம் என்று கருதி விலகிச் சென்றனர். பின்னரே அவர் "ஞான சொரூபிணி' என்பதும், 'சித்த யோகினி' என்பதும் தெரிய வந்தது. அம்மாவின் ஞானநிலையை உணர்ந்த சண்முக முதலியார் என்பவர் முதல் சீடரானார். தொடர்ந்து பலரும் அம்மாவை நாடி வந்து வணங்க ஆரம்பித்தனர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவராக விளங்கியவர் டாக்டர் நஞ்சுண்டராவ்.

டாக்டர் நஞ்சுண்டராவ்
Click Here Enlargeடக்டர் நஞ்சுண்டராவ், சென்ற நூற்றாண்டின் பிரபலமான மருத்துவர்களுள் ஒருவர். கர்னல் ஆல்காட், அன்னி பெசண்ட், கிருஷ்ணசுவாமி ஐயர் என பலருக்கும் அவர்தான் குடும்ப டாக்டர். மைசூரில் பிறந்து வளர்ந்த நஞ்சுண்டராவ் ஆங்கிலேய அரசாங்கத்தின் மிகப்பெரிய பதவியில் இருந்தவர். அவர்களின் சட்ட திட்டங்கள் நியாயத்திற்குப் புறம்பானவை என்று கருதித் தன் பதவியைத் துறந்தவர். தமிழ்மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தவர். மயிலையில் உள்ள வள்ளுவர்-வாசுகி கோயில் வளர்ச்சிக்கு வித்திட்டவர். அக்காலத்தின் பிரபலமான பல தமிழிலக்கிய வாதிகளோடும் சுதந்திரப் போராட்ட வீரர்களோடும், இசைக் கலைஞர்களோடும் அவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். விபின் சந்திர பால், வ.வே.சு. ஐயர், பட்டணம் சுப்ரமண்ய ஐயர் போன்ற சான்றோர்களின் அன்பிற்குப் பாத்திரமானவராக இருந்தார். மகாகவி பாரதிக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார். பாரதி ஆசிரியராகச் செயல்பட்ட ஆங்கில ஏடான "பால பாரதா' (யங் இந்தியா) அலுவலகம் நஞ்சுண்டராவிற்குச் சொந்தமான இடத்திலிருந்துதான் இயங்கி வந்தது. பாரதி கடைசியாகக் குடியிருந்த திருவல்லிக்கேணி வீடும் டாக்டர் நஞ்சுண்டராவுடையதுதான். பாரதி புதுச்சேரிக்குச் செல்ல உதவியவரும் இவரே! மட்டுமல்ல; விவேகானந்தரின் அன்பிற்கும் இவர் பாத்திரமானவராக இருந்தார். அமெரிக்காவிலிருந்தும் மற்ற வெளிநாடுகளிலிருந்தும் விவேகானந்தர் நஞ்சுண்டராவிற்கு எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ்பெற்றவை. "எனக்கு சென்னையைப் பற்றி மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. சென்னையிலிருந்து ஒரு மிகப்பெரிய ஆன்மீக அலை உருவாகப் போகிறது. அது இந்தியாவெங்கும் பரவி ஒளி வீசப் போகிறது. இதில் எனக்குப் பெருத்த நம்பிக்கை இருக்கிறது" என்று விவேகானந்தர் தெரிவித்திருந்தது, டாக்டர் நஞ்சுண்டராவுக்கு எழுதிய கடிதத்தில்தான். விவேகானந்தர் அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டு இந்தியா திரும்பி வருகையில், சென்னையில் அவருக்கு அளிக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான வரவேற்பில் மிக முக்கியப் பங்கு வகித்தவர் டாக்டர் நஞ்சுண்டராவ்.

ஆன்மீகத்தில் அளவற்ற நாட்டம் கொண்டிருந்த நஞ்சுண்டராவின் உள்ளம் ஒரு நல்ல குருவைத் தேடிக் கொண்டிருந்தது. அந்நிலையில் தான் அவருக்கு அம்மாவின் தரிசனம் கிடைத்தது. அம்மாவை ஆரம்பத்தில் ஒரு சாதாரணப் பெண்மணியாகவே டாக்டர் கருதினார். பின்னரே அவரது தவநிலையை உணர்ந்து கொண்டு அம்மாவின் சீடரானார். அது பற்றி நஞ்சுண்டராவ், "முக்தி என்றால் என்ன என்பதை எழுத்தறிவற்ற அந்த எளிய அந்தணப் பெண்மணியிடம் தான் தெரிந்து கொண்டேன். எப்போதும் பரிபூரணப் பேரானந்தப் பெருநிலையிலேயே அவர் இருந்தார். அவருடைய உடலின் ஒவ்வொரு அணுவும் அந்தப் பரிபூரணப் பேரானந்தத்தை வெளிப்படுத்தியது" என்று நினைவு கூர்கிறார். அம்மாவைத் தங்கள் குடும்பத்துள் ஒருவராகவே கருதியவர் அவருடன் காசி உட்பட பல இடங்களுக்கும் தல யாத்திரை சென்று வந்தார். பின் அம்மாவுடன் திருவண்ணாமலை சென்ற அவர், அப்போது விருபாக்ஷி குகையில் தங்கியிருந்த பகவான் ரமணரையும் தரிசித்து ஆசி பெற்று வந்தார்.

அம்மா அனுதினமும் சிவபூஜையும் ஸ்ரீசக்ர பூஜையும் செய்து வந்தார். அதனால் அவரது இயற்பெயரான அனந்தாம்பாள் என்பது மறைந்து 'அம்மா' என்றும் சக்கரத்தம்மாள் என்றும், சக்கரை அம்மா என்றும் அழைக்கப்படலானார். தம்மை நாடி வந்தவர்களுக்கு அன்பு, அடக்கம், கருணை, இரக்கம், பக்தி ஆகியவற்றை உபதேசித்தார். "பிரம்மம் ஒன்றே சத்தியம். அந்த பிரம்மத்தை உணர்வதே ஆனந்தம். எல்லாம் அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரபிரம்மத்தின் ஸ்வரூபமே. நமக்கு அந்நியமாய் எதுவுமே இல்லை. எல்லாம் இறைவனே! அவனே நம்மை ஆட்டுவிக்கிறான். பக்தியுடன் அவன் தாள் பணிவதே மனிதப் பிறவியின் பயன்பாடு" என்றெல்லாம் அவர் உபதேசித்ததைக் கேட்ட மக்கள் பலரும் அவரை நாடி வந்து பணிந்தனர்.
பரிபூரண ஞானநிலை அடைந்த அம்மா, அவ்வப்பொழுது நீடித்த யோக சமாதியில் ஆழ்ந்து விடுவதும் உண்டு. அன்பர்கள் காரணம் கேட்டால், தாம் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷிளோடு உரையாடி வந்ததாக, சேஷாத்ரி சுவாமிகளை தரிசனம் செய்து வந்ததாகக் கூறுவார். விட்டோபா சுவாமிகள், ஞானானந்த கிரி சுவாமிகள், பெண் சித்தர் போளூர் நட்சத்திர குணாம்பாள், திருவண்ணாமலை அடிமுடிச் சித்தர், செல்லக்கண்ணுப் பரதேசி போன்ற சித்தர்களோடும் அம்மா தொடர்பில் இருந்திருக்கிறார். சூட்சும ரீதியில் உரையாடியும் இருக்கிறார். அது தவிரப் பல்வேறு சித்துக்களும் கைவரப் பெற்றிருந்தார். அப்படிப்பட்ட சித்துக்களுள் ஒன்றான 'இலகிமா' மூலம்தான், தனது குருவான நட்சத்திர குணாம்பாளைச் சந்தித்து வர அவர் வானத்தில் பறந்தார். அதைக் கண்ட திரு.வி.க. அதனை ஆவணப்படுத்தினார்.

ஒரு சமயம் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்துக்கு நஞ்சுண்டராவ் உள்ளிட்ட தன் சீடர்களுடன் சென்று வந்த அம்மா, திரும்பி வரும்போது ஓர் இடத்தை நஞ்சுண்டராவிடம் சுட்டிக் காட்டினார். அந்த நிலத்தை வாங்கி விடுமாறும் தன் உடலை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நஞ்சுண்டராவ் கலங்கியபோது அவருக்கு அறிவுரை சொல்லி ஆற்றுப்படுத்தினார்.

தம்மை அண்டியோருகெல்லாம் அறிவுரை கூறி நல்வழிப்படுத்திய சித்த யோகினி ஸ்ரீ சக்கரை அம்மாள், முன்கூட்டியே தன் மறைவைப் பற்றி அன்பர்களுக்குத் தெரிவித்திருந்தபடி 1901ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 28ம் நாள், பிற்பகல் மணி 3.30க்கு இறைஜோதியில் ஐக்கியமானார். சீடர் நஞ்சுண்டராவால், அம்மா முன்பே குறிப்பிட்டிருந்த இடத்தில் (சென்னை திருவான்மியூரில், கலாக்ஷேத்ரா அருகே) ஓர் அழகிய சமாதி ஆலயம் எழுப்பப்பட்டது. அவரது வாழ்க்கை வரலாற்றைப் பிற்காலத்தில், பத்திரிகை ஒன்றில் தொடராக எழுத ஆரம்பித்தார் டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவ். அது முற்றுப்பெறவில்லை. சக்கரத்தம்மாள் பற்றி அவர் ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழிவு ஜி.ஏ. நடேசன் கம்பெனியாரால் நூலாக வெளியிடப்பட்டது.

ஸ்ரீ சக்கரை அம்மாளின் சமாதி ஆலயம், சென்னை திருவான்மியூரில், கலாக்ஷேத்திரா செல்லும் சாலையில், பாம்பன் சுவாமிகள் சமாதிக்குப் போகும் வழியில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.

ஆண்டாள், காரைக்காலம்மையார், மீரா, அன்னை சாரதாதேவி, ஸ்ரீ அன்னை போன்றோர் வரிசையில் பெண்களும் மெய்ஞ்ஞானம் பெறத் தகுதியானவர்களே என்று வாழ்ந்து காட்டிய மகா தபஸ்வினி, சித்த யோகினி ஸ்ரீ சக்கரத்தம்மாளின் தவ வாழ்க்கை புனிதமானது. போற்றத்தக்கது. ஓம் ஸ்ரீ அனந்தாம்பா நமஹ!

பா.சு. ரமணன்
Share: 
© Copyright 2020 Tamilonline