Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | முன்னோடி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | பயணம்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
ரத்த சம்பந்தம் மட்டுமே உறவல்ல
- சித்ரா வைத்தீஸ்வரன்|ஆகஸ்டு 2018|
Share:
அன்புள்ள சிநேகிதியே,
ஆறு மாதமாக எதிர்பார்த்திருந்த உங்கள் ஆலோசனைப் பத்தியை மீண்டும் வரவேற்கிறேன். ஆனால் உறவுபற்றிய உங்கள் கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம் உறவு என்பதே அந்தஸ்து, பணவசதி இவற்றைப் பொறுத்துத்தான் என்பது என்னுடைய அனுபவம். வாழ்க்கையில் அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன்.

நல்ல குடும்பத்தில் நன்றாகத்தான் வளர்ந்தேன். என் அப்பா இந்தியாவிலிருந்து சென்று மலேசியாவில் வேலை செய்தார். உடலுழைப்புத் தொழிலாளி. மிகவும் கஷ்டப்பட்டு எங்களைப் படிக்க வைத்தார் நான் சின்ன வயதில் பாட்டி வீட்டில் இருந்துகொண்டு இந்தியாவில் பள்ளி, கல்லூரி எல்லாம் முடித்தேன். படிப்பை முடித்த உடனேயே கனடாவில் ஒரு மாப்பிள்ளை பார்த்து எனக்குத் திருமணம் செய்துவைத்தார். அப்போது எனக்கு 21 வயது. மிகவும் செல்லப் பெண், உலக அனுபவம் இல்லை. தன் நண்பரின் பிள்ளை, நன்றாக வைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில்தான் அந்த ஆளுக்கு என்னைக் கொடுத்தார். அப்புறம்தான் தெரிந்தது மோசம் போய்விட்டோம் என்று. அந்தக் கணவர் ஒரு அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தையும் இருந்தது என்பது. வாராவாரம் என்னை விட்டுவிட்டு வேலை என்று போய்விடுவார்.

வாரக் கடைசியிலும் இருக்கமாட்டார். நான் கர்ப்பம் ஆன விஷயத்தைச் சொன்னபோதுகூட அவர் சந்தோஷப் படவில்லை. மனசு ரொம்ப வருத்தமாக இருந்தது. ஏனென்று கேட்டதற்கு "இன்னும் நான் ஸ்டெபிலைஸ் ஆகவில்லை. அதற்குள் என்ன அவசரம்" என்று சொன்னார். என்னை அடிக்கடி விட்டுவிட்டுப் போகக்கூடாது என்று அக்கம்பக்கத்தினர் அவருக்கு அறிவுரை சொன்னார்கள். அவர் இல்லாதபோது ஒருமுறை எமர்ஜென்சியில் சேர்க்க வேண்டி ஆகிவிட்டது. அதனால் அவருக்கு ஏதோ பிரச்சினை ஆகி இருக்கிறது. எனக்கு என்னவென்று தெரியவில்லை.

திடீரென நாம் U.S. போய்விடலாம் என்று ஒரே நாளில் பேக் செய்யச் சொல்லி இங்கே கிளம்பி வந்துவிட்டோம். இங்கே வந்து நிலைமை மோசமாகிவிட்டது. இரவில் வரமாட்டார். நான் பயந்து நடுங்குவேன். என் சந்தேகம் அதிகமாகிவிட்டது. இங்கே என் அத்தைவழி, மாமாவழி சகோதரிகள் இருந்தார்கள். என் அப்பா அவர்களுக்கு நிறைய உதவியிருக்கிறார். நான் அவர்களைக் கூப்பிட்டுப் பேசுவேன். நான் தினம் அழுவது, ஃபோனில் அவர்களை கூப்பிடுவது எதுவும் இவருக்குப் பிடிக்கவில்லை. என்னை மிகவும் அசிங்கமாகத் திட்ட ஆரம்பித்தார். உனக்கு கிரீன் கார்டு வாங்கி கொடுத்தாகிவிட்டது. நீ உன் உறவினர்கள் வீட்டில் குழந்தை பெற்றுக்கொண்டு அங்கேயே இரு. நான் பணம் அனுப்புகிறேன் என்றார். கொஞ்சம் கொஞ்சமாக நான் இன்வெஸ்டிகேட் செய்தபோது, எனக்கு அப்படி ஒரு அதிர்ச்சி!!

சிடிஸன்ஷிப் கிடைக்கத்தான் அவளைத் திருமணம் செய்து கொண்டாராம். "இரண்டு வருஷம் பொறுமையாக இரு. அவளை டிவோர்ஸ் செய்துவிட்டு நாம் நிம்மதியாக இருக்கலாம்" என்றார். நான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. நான் மலேசியா திரும்பிப் போய்விடலாம் என்று நினைத்து மெள்ள என் பாஸ்போர்ட், கிரீன் கார்டு, கொஞ்சம் டாலர் எல்லாம் எடுத்து ரகசியமாக வைத்துக்கொண்டேன். அதற்குள் என் பையன் பிறந்தான். இந்த ஆளுடன் ஒத்துப்போவது போல இருந்தால்தான் காரியம் முடியும் என்று பாசமாக இருந்துகாட்ட முயற்சி செய்தேன். என் அப்பாவுக்கு ஒன்றும் தெரியாது. அவர் உயிரையே விட்டுவிடுவார். அதுவும் நான் தாயில்லாத பெண். ஆனால், என் அதிர்ஷ்டம், அப்பா ஒரு விபத்தில் இறந்துவிட்டார். பையன் பிறந்து பத்து நாள் கூட ஆகவில்லை. I felt like an orphan. அழுது அழுது ஓயவில்லை திடீரென்று சின்னக்குழந்தைக்கு ஜுரம் அதிகமாகிவிட்டது. வழக்கம்போல அவர் இல்லை.

ஃபோனில் இருந்த நம்பரை எல்லாம் கூப்பிட்டேன். திடீரென்று என் அழுகையைக் கேட்ட ஒருவரிடம் ஏதோ ஏதோ உளறி இருக்கிறேன். என் முகவரியைக் கேட்டுக்கொண்டு உடனே உதவிக்கு வருகிறேன் என்று, பத்தாவது நிமிடம் என் அபார்ட்மென்ட் வாசலுக்கு வந்து கதவைத் தட்டினார் அந்தப் பெண். உடனே குழந்தையை எடுத்துக்கொண்டு ஓடினோம் எமர்ஜென்சிக்கு. இரண்டு மணி நேரத்தில் சரியாகி விட்டான். அவள் பெயர் ....... என் வீட்டிற்கு வந்து பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டாள். கடைசியில் தன்னைப்பற்றிச் சொன்னாள். சினிமாவைப்போல் இருந்தது எனக்கு. யாரும் நம்பமாட்டார்கள். 10 நிமிட தூரத்தில் இருக்கிறாள், அதுவும் என் கணவனின் முதல் மனைவியாக. "மலேசியாவில் இருந்து ஒரு உறவினர் பெண் இங்கே படிக்க வந்திருக்கிறாள். அவர்களிடம் நிறையச் சொத்து இருக்கிறது. இந்தப் பெண்ணுக்கு உதவி செய்தால், பாதிச் சொத்து உனக்கு வரும்" என்று சொல்லி இருக்கிறான். கடைசியில், "நீ இவனை இனிமேல் நம்பாதே! இப்படியே ஓடிப்போய்விடு. உன் உறவினர்களிடம் குழந்தையை விட்டுவிட்டு நியூயார்க் போய் வேலை தேடிக்கொள். அவனை நான் ஒரு வழி பார்த்துவிடுகிறேன்" என்று எனக்கு அட்வைஸ் செய்தாள்.

மறுநாள் அவன் வருவதற்குள் என்னை ஒரு பஸ்ஸில் ஏற்றி, கையில் 20 டாலர் செலவுக்குக் கொடுத்து அனுப்பிவைத்தாள். நான் ஒரு அசட்டு தைரியத்தில் கிளம்பி வந்துவிட்டேன். கையில் 3 மாதக் குழந்தை. என்னுடைய கசினுக்கு ஃபோன் செய்தால் யாரும் எடுக்கவில்லை. பாஸ்டனுக்குப் போக Penn ஸ்டேஷன் வந்தேன். பணம் போதவில்லை. என்னுடைய இரண்டு கசின்களுக்கும் போன் செய்தேன். குழந்தையை வைத்துக்கொண்டு கதறினேன். உதவ யாரும் முன்வரவில்லை. அவர்கள் தன்னிடம் வரும்படியும் சொல்லவில்லை. ஏதோ விலாசத்தைக் கொடுத்து அங்கே போய் உதவிகேட்கச் சொன்னார்கள். எப்படியோ ஒரு கேப் டிரவரிடம் அட்ரஸ் கொடுத்துப் போய், ஷெல்டரில் இருந்துகொண்டு, ஒரு வேலையை வாங்கி, மேலே படித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்தேன்.

என் பையனே உலகமாக இருந்தேன். வேலை பார்க்கும் இடத்திலும் இந்த ஆண்கள் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்வார்கள். நான் யாரையும் நம்பவில்லை. வாழ்க்கையில் விரக்தி, வைராக்கியம். நல்ல முறையில் என் பையனைப் படிக்கவைத்து அவன் முன்னுக்கு வந்துவிட்டான். வீடு வாங்கி மகிழ்ச்சியாக இருக்கிறேன். இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு என் பையனை என் கஸின் ஒருத்தி தொடர்பு கொண்டிருக்கிறாள். அவனுடைய போட்டோ ஒரு பத்திரிகையில் வெளியாகி இருந்தது. அப்புறம் என்னிடம் தொடர்புகொண்டு ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தார்கள். நான் சாதாரணமாகப் பேசினேன். அவர்களை என் இடத்திற்குக் கூப்பிடவில்லை. அவர்கள் என்னைக் கூப்பிட்டபோதும் 'பார்க்கலாம்' என்று சொல்லிவிட்டேன்.

சமீபத்தில் அந்தச் சகோதரிகளில் ஒருத்தி கூப்பிட்டு தன் குறையைச் சொல்லி அழுதாள். திடீரென்று அவள் கணவருக்கு ஸ்ட்ரோக் வந்துவிட்டதாம். இவள் வேலைக்குப் போகவேண்டும். டீன் ஏஜ் மகளையும் பார்த்துக்கொண்டு கணவரையும் பார்த்துக்கொள்ள இரண்டு வாரம் வந்து போக முடியுமா என்று கேட்டாள். நான் இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன். உறவுகள் வந்து ஒட்டிக் கொள்கிறார்கள். கையில் குழந்தையுடன் அந்த இரவில் ஸ்டேஷனில் நான் கதறிய நாள் என்னுடைய Life Time Memory. என்னுடைய அந்த நிலைமை அவர்கள் யாருக்காவது புரிந்ததா? எதற்கு வேண்டும் இதுபோன்ற உறவுகள்? எனக்கு மறுபடியும் ஃபோன் செய்தபோது நான் நன்றாகக் கத்திவிட்டேன். அவ்வளவுதான் விஷயம்.

இப்படிக்கு
.........
அன்புள்ள சினேகிதியே
உங்கள் காயம் வடுவாகக்கூட மாறவில்லை. இன்னும் ஆறாமல் இருக்கிறது. உங்கள் கொந்தளிப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது. நான் உறவு என்று சொல்வது ரத்த சம்பந்தத்தால் ஏற்பட்ட உறவுகளை மட்டுமல்ல. பார்க்கும் மனிதர்களிடம் பலவித குணங்கள் இருந்தாலும் பக்குவம் அடைந்த மனத்திற்குப் பரவசம்தான் தோன்றும். ஆனால், அந்தப் பக்குவம் நம்மில் யாருக்கும் உடனே வராது. ஒரு சிலரிடம் ஒரு ஈர்ப்பு இருக்கும். ஒரு சிலருக்கு நம்மிடம் பாசம், மரியாதை அல்லது சினேகிதம் தோன்றும். அதை வளர்த்துக்கொண்டே போனால் நம் மனது இனிமையான எண்ணங்களை உருவாக்கும். பணம், செல்வாக்கு உறவுகளை உண்மையானது போலக் காண்பிக்கும்; உறவுகள் கண்டிப்பாகப் பெருகி இருக்கும். ஆனால், நான் சொல்வது - Relationship is not a number game; it is the quality that counts. Intensity increases when there is honesty and reciprocal awareness.

Reciprocal awareness என்று நான் சொல்வது யார், எது நமக்கு உதவி செய்தாலும் அந்த உணர்வை இருத்திக்கொள்ள வேண்டும். பொதுவாக நாம் நமக்குச் செய்தவர்களை மறந்துவிடுகிறோம். செய்யாதவர்களைத்தான் நினைவில் நிறுத்திக் கொள்கிறோம். உங்கள் விஷயத்தில் உங்கள் சகோதரிகள் உங்களுக்கு உதவி செய்யாமல் போயிருக்கலாம். ஆனால், நீங்கள் இந்த நல்ல நிலைமைக்கு வர யாரோ உதவியிருக்கிறார்கள். அந்தக் கணவனின் முதல்மனைவியில் ஆரம்பித்து யார், யார் உங்கள் வாழ்க்கையில் சின்னச்சின்ன உதவிகளைச் செய்திருக்கிறார்கள் என்று பட்டியலிட்டுப் பாருங்கள். உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும் இத்தனை நல்லவர்கள் இருக்கிறார்களா என்று. ஒரு கசப்பைச் சாப்பிட்ட பிறகு சர்க்கரை இல்லாமலே எதுவும் இனிக்கும். அதுபோலத்தான் உறவும். புன்னகை செய்யுங்கள். புதிய மனிதர்களைச் சந்தியுங்கள். நன்றாக இருக்கட்டும் உங்கள் எதிர்காலம்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்


*****


அன்புள்ள சிநேகிதியே - வாசகர் கடிதம்
அன்புள்ள சிநேகிதியே
நான் 74 வயதுள்ள பெண்மணி. 18 ஆண்டுகளுக்கு முன் சான் டியகோவில் இருக்கும் சின்னமகன் வீட்டுக்கு வந்தபோது 'தென்றல்' படித்தேன். இப்போது அதன் வயது 18. நான் என் கணவரைப் பிரிந்து தனிமரமாகி வருடம் 18 ஆகிறது. அதன்பின் அடிக்கடி அமெரிக்கா வந்துபோகிறேன்.

எனக்கு 2 மகன்கள், 1 மகள். என் மகன்கள் ஒரு அறை, 2 அறை, 3 அறை, தனிவீடு என இந்த 18 ஆண்டுகளில் எப்படி வசித்தாலும் அங்கே உடன் இருக்கிறேன். இங்கு இருக்கும் மகன்கள், மருமகள்கள் வேலையைப் பகிர்ந்துகொண்டு விட்டுக்கொடுத்து குழந்தைகளை வகுப்புகளுக்கும், விளையாட்டுக்கும், போட்டிகளுக்கும் கூட்டிச்சென்று, கல்லூரியில் விட்டுவந்து, அவர்களுக்குக் கார் ஓட்டக் கற்றுக்கொடுத்து எல்லாம் செய்வது பார்க்கப் பிரமிப்பாக உள்ளது.

இங்குள்ள மக்கள் அனாவசியமாக பேசாமல், தேவையான போது பேசி, தேவையான இடத்தில் வயதானவர்களுக்குக் கைகொடுத்து உதவும் முறை பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது. இதனால்தான் இது பல இளைஞர்களின் கனவுலகமாக இருக்கிறது.

தென்றலில் நீங்கள் உறவுகள்பற்றிச் சொல்லுவது அற்புதம். ஒருமுறை என்னைப்போன்று கணவனைப் பிரிந்து இங்கு வந்து தங்கியுள்ள ஒரு பெண்மணிக்கு அவர் எழுதிய மனக்குறைகளைக் கேட்டு, நீங்கள் கொடுத்த அறிவுரையைப் பார்த்து அதன்படி நானும் முயன்று நடப்பதால் இந்த 18 ஆண்டுகளில் மகன்கள், மகள் குடும்பத்துடன் மனநிம்மதியுடன் இருந்து வருகிறேன். 6 மாதமாக உங்கள் பகுதி இல்லை, இந்த மாதம் படித்த திருப்தியுடன் உங்கள் பணி தொடரக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன். நன்றி.

வேதா ரமணி
(மின்னஞ்சலில்)
Share: 
© Copyright 2020 Tamilonline