Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | முன்னோடி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | பயணம்
Tamil Unicode / English Search
சாதனையாளர்
குரு விஷால் ரமணி - 250
- அசோக் சுப்ரமணியம்|ஆகஸ்டு 2018|
Share:
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியை வாழ்விடமாக கொண்ட இந்திய வம்சாவளியினர் கடந்த 50 ஆண்டுகளில் காலூன்றி, அறிவியல், தொழில்நுட்பம் முதலிய துறைகளில் அளப்பரிய சாதனைகளைச் செய்து, அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும்பங்கு அளித்துள்ளனர். புலம்பெயர்ந்தவர்கள் தமது கலாசார விழுமங்களையும் தம்மோடு கொணர்ந்து, கோவில்கள், கலைகள் என்று பலவிதமாகவும் வளர்ப்பது, ஒரு சமூகமாக அவர்கள் மேம்படுவதன் ஓர் அம்சமாகும். அவர்களது தனிப்பட்ட வெற்றிக்கும், சமூகமாக மதிக்கப்படுவதற்கும் இந்த விழுமங்கள் துணையாக இருக்கின்றன.

விரிகுடாப் பகுதி கலாசார வளப்பத்துக்குப் பின்புலமாகப் பல முன்னோடிகளின் உழைப்பு இருக்கிறது. இன்றைய தலைமுறையினருக்குத் தங்களுடைய கலை, கலாசாரங்களைக் கற்பதையும், அதில் பெருமிதம் கொள்வதையும் இம்முன்னோடிகள் எளிதாக்கிக் கொடுத்துள்ளார்கள்.

மூத்த பரதநாட்டியக் கலைஞரும், மிகவும் மதிக்கப்படும் குருவுமான திருமதி. விஷால் ரமணியை அத்தகைய முன்னோடிகளின் முன்னோடி என்றே குறிப்பிடலாம். அவர்கள் 1977ல் தொடங்கிய நாட்டியப் பயணம், பள்ளி, இன்று வளர்ந்து, 41 ஆண்டுகளைக் கடந்து, நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியருக்குப் பரதநாட்டியத்தைக் கற்பித்து வருகிறது.

இந்த ஆண்டு ஜூலை 21ம் தேதி குரு விஷால் ரமணி ஒரு முக்கியமான மைல்கல்லை ஆரவாரமின்றிக் கடந்திருக்கிறார். 41 வருடங்களில் 250 அரங்கேற்றங்களைச் செய்துமுடித்த சாதனையே அது. இடைப்பட்ட மைல்கல்கள் இவை: முதல் அரங்கேற்றம் நடைபெற்றது 1983ல், 100வது அரங்கேற்றம் 2008ம் ஆண்டு.ஒரு தனிப்பட்ட குருவாக, இந்தச் சாதனையை இந்தியாவில்கூட யாரும் செய்ததாகத் தெரியவில்லை. ஒரு பாடகர் வாழ்நாளில் 1000 கச்சேரிகள் செய்யலாம், ஒரு நாட்டியக் கலைஞர் 500 நிகழ்ச்சிகளுக்கு மேல்கூடச் செய்யலாம்.. ஆனால் ஒரு குரு 250 மாணவ, மாணவியரைப் பயிற்றுவித்து அரங்கேற்றுவது, பிரமிக்க வைக்கும் சாதனை. அதிலும் பெரும்பாலோர் செய்வதுபோல, தங்கள் குருபரம்பரையில் சொல்லிக் கொடுக்கப்பட்ட உருப்படிகளின் எல்லைக்குள் நின்றுவிடாமல், எல்லா தென்னிந்திய மற்றும் மராத்தி, குஜராத்தி, பெங்காலி, இந்தி, போஜ்புரி என்று பல வட இந்திய மொழிகளிலும் உருப்படிகளைத் தேடிப்பிடித்துச் சொல்லிக்கொடுக்கும் மகா நிபுணர் இவர். இவரிடம் காஷ்மீர், பஞ்சாப், வங்காளம், அஸ்ஸாம், ஒடிஸா, உத்தரப்பிரதேசம், பிஹார், குஜராத், மஹாராஷ்டிரம் மற்றும் தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் மாணவ மாணவியர் படித்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

விஷால் ரமணியவர்களுக்கு ஒவ்வொரு அரங்கேற்றமுமே ஒருவகை சவால்தான். ஒவ்வொரு வருடமும் அவர் நடத்துவது நாட்டிய யாகம், ஒரு அரங்கேற்ற மாரத்தான். ஆனால் அதற்கான பயிற்சி சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே துவங்கி விடுகிறது. இந்தப் பயிற்சி வெறும் நடனத்துடன் மட்டும், அரங்கேற்ற நாளை நோக்கி நகரும் பயணமாக இல்லாமல், ஒவ்வொரு மாணவியையும், நம்பிக்கை, தெளிவு, கலையில் ஆர்வம், பார்க்க வருபவர்களை அலுக்கவைக்காத குறைந்தபட்சக் கலைநேர்த்தி என்கிற பல திசைகளில் நடக்கிறது..

கலைகளின் நோக்கமே கூர்மையான ஒருமுகத்தன்மையோடு கற்றல், ஆற்றலை வளர்த்துக்கொள்ளல், அதை அழகுற வெளிப்படுத்துதல் என்பவைதானே! இவை வெற்றிகரமான வாழ்க்கைக்கும் தேவையான அடிப்படைக் கூறுகள்தாமே. அவற்றைத்தாம் கலையோடு சேர்ந்து தமது மாணவியருக்குக் கற்பிக்கிறார் திருமதி. விஷால் ரமணி. இவரது மாணவியர் கலையில் மட்டுமல்லாமல், வாழ்க்கையிலும் - மேற்படிப்பு, வேலையிடங்களிலும் தன்னம்பிக்கை, உழைப்பில் உறுதி, இவற்றைக் கொண்டவர்களாக - வெற்றிபெறத் தயாராவதுதான் விஷாலின் சிறப்புப் பயிற்சி.ஸ்ரீக்ருபா மாணவி பவ்யா வெங்கடராகவன், 250வது அரங்கேற்றம் காணும் சிறப்பைப் பெற்ற பாக்கியசாலி. இவ்வரங்கத்தின் முதற்பாதியின் முடிவில், இந்த மைல்கல்லைக் கொண்டாடும் விதமாக, கூப்பர்டினோ நகர மேயர் டார்ஸி பால், சாரடோகா நகரக் கவுன்சில் உறுப்பினர் ரிஷிகுமார், அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பில், திருமதி. அழகு வைரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்து, விஷால் ரமணியைப் பாராட்டிப் பேசி, பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவித்தார்கள்.

ஸ்ரீக்ருபாவின் தலைவர் அசோக் சுப்ரமணியம் அவர்கள் பாராட்டுரையோடு, விஷால் ரமணியவர்களின் ஈடுபாடு, கருணை கலந்த கண்டிப்பு, தேடித்தேடி புதுப்புது உத்திகளில் நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுப்பது, பல “முதல்”களின் முன்னோடியாய் இருந்துவருவது போன்றவற்றை விவரித்துப் பேசினார். இந்தியாவிலிருந்து அரங்கேற்றங்களுக்கென்றே தொழில்முறைக் கலைஞர்களை 2/3 மாதங்களுக்கு தருவித்து, அரங்கேற்ற மாணவியருக்கு நேரடிப் பயிற்சியைத் தருகின்ற முயற்சியை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார். இதன்மூலம் அரங்கேற்றங்களை மெருகேறிய நடனமணிகள் தரும் நிகழ்ச்சிகளின் தரத்துக்கு உயர்த்தினார். இதை இப்போது பலரும் பின்பற்றத் தொடங்கிவிட்டனர் எனச் சுட்டிக்காட்டினார்.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பைத் திருமதி மாதுரியும், திரு ராஜா ரங்கநாதனும் முன்னிருந்து கவனித்துக்கொண்டார்கள்.

திருமதி விஷால் ரமணியவர்களின் இந்தச் சாதனை, இந்திய வம்சாவளியினரின் சாதனையே! அவர் மென்மேலும் பல மைல்களைக் கடக்க வாழ்த்துவோம்.

ஸ்ரீக்ருபாவின் இணையதளம் www.shrikrupa.org
அஷோக் சுப்ரமணியம்
Share: 


© Copyright 2020 Tamilonline