Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சமயம் | இலக்கியம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம்வாழ | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
பொது
டல்லஸ் தமிழர் திருவிழா 2005
பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு
- அலர்மேல் ரிஷி|ஆகஸ்டு 2005|
Share:
Click Here Enlargeபேராசிரியர்கள் ஜார்ஜ் ஹார்ட், வா. செ. குழந்தைசாமி, முருக ரத்னம், போன்ற பல உலகத் தமிழ் அறிஞர்கள் பங்கேற்ற பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் அருகே ஜுலை 8 முதல் ஜூலை 10 வரை சிறப்பாக நடந்தது. இந்த மாநாட்டுக்கு வித்திட்டவர்கள் "இலக்கிய வட்டம்" என்ற சிறு குழுவைச் சார்ந்த வாஷிங்டன் வட்டாரத் தமிழ் ஆர்வலர்கள். வார இறுதிகளில் இலக்கிய ஆய்வுக்கூட்டம் நடத்தி வரும் இந்த அமைப்பு, சில ஆண்டுகளாகத் திருக்குறளை எடுத்துக் கொண்டு ஆழமாக அலசி வருகிறது. தங்கள் பகுதிக்கு வரும் தமிழறிஞர்களோடு திருக்குறள் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்து வரும் இலக்கிய வட்டம், ஒரு பன்னாட்டுத் திருக்குறள் மாநாடு கூட்ட வேண்டும் என்று முடிவெடுத்தது.

மனிதகுலத்துக்குத் திருக்குறள் காட்டும் வழி, அமெரிக்காவில் - குறிப்பாக இளைய தலைமுறை இந்திய அமெரிக்கர்களிடம் - திருக்குறளைப் பரப்புதல், திருவள்ளுவரை உலகத் தத்துவ ஞானிகளுடன் ஒப்பிடல் என்ற மூன்று நோக்கங்களுடன் கூடியது இந்த மாநாடு. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம், பர்க்கெலிப் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்கா, இந்தியா, இலங்கை நாடுகளில் உள்ள பல தமிழ் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதல்நாள், வாஷிங்டன் முருகன் கோயிலில் திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு விழாவுடன் மாநாடு தொடங்கியது. வி.ஜி.பி. நிறுவன அதிபர் சந்தோஷம் அவர்கள் நன்கொடையாக அளித்த இரண்டரை அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை குறித்த நாளில் வந்து சேராததால் (கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட சிலை) தற்காலிகமாக வெண்கலத்தாலான வள்ளுவர் சிலையொன்று வைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு திருவள்ளுவர் சிலையை நன்கொடையாக அளித்துத் திருக்குறளை உலக மக்கள் அனைவரையும் அறியச் செய்யும் தங்கள் நோக்கத்தை திரு. விஜிபி சந்தோஷம் அவர்கள் எடுத்துக் கூறினார்.

மாநாட்டுத் தலைவர் பேரா. வா.செ. குழந்தை சாமி அவர்களும் குறளின் மாண்பினை மிக அழகாக கருத்துச் செறிவுடன் எடுத்துக் கூறினார். ஜார்ஜ் ஹார்ட் (பர்க்கலி பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்) மிகச் சுருக்கமாக தேமதுரத் தமிழில் பேசி அனைவரின் பாராட்டுதல்களைப் பெற்றார். தொடக்க விழாவில் தொடர்ந்து, வாஷிங்டன் பகுதி நாட்டியப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலைநிகழ்ச்சியும், வள்ளுவர் பற்றிய குறுநாடகமும் நடந்தது. திருக்குறள் பாடல்களுக்குப் பரதநாட்டியம் ஆடிய இளைஞர் ஜானத்தன் ராஜ்குமார் பார்வை யாளர் பாராட்டைப் பெற்றார்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி கொலம்பியா நகரில் ஹாவர்டு கம்யூனிட்டி கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. ஏறத்தாழ 200 பேருக்கும் மேலாக அறிஞர் பெருமக்கள் உலகெங்கிலும் இருந்து வந்து கலந்து கொண்டனர். காலையில் முதல் அமர்வு தொடங்குமுன் வா.செ. குழந்தைசாமி ஆய்வரங்கத் தலைமை உரைநிகழ்த்தினார். ஒரே நாளில் ஒரு மணிநேர அளவில் ஓர் அமர்வு என்று 7 அமர்வுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒவ்வொரு அமர்விலும் மூன்று கட்டுரையாளர்கள். ஒவ்வொரு அமர்வும் நேரங் கடந்து தொடங்கியதும் கட்டுரையாளர்களுக்கு அளிக்கப்பட்ட நேரம் 20 மணித்துளி என்பது 15 பிறகு 10 இறுதியில் 5 மணித்துளி என்று சுருக்கப் பட்டது வேதனைக்குரியது. வெளிநாடு களிலிருந்து மாநாட்டில் கட்டுரை படிக்க வந்தவர்களுக்கெல்லாம் நேரங்குறைந்து போனதால் குறிப்பாக டாக்டர் எம். அனந்த கிருஷ்ணன், மதுரை பேராசிரியர் டாக்டர் முருகரத்தினம், பாண்டிச்சேரி டாக்டர் மருத நாயகம் போன்றவர்களெல்லாம் சொல்ல வந்த கருத்துக்களை முழுவதுமாக சொல்ல முடியாமற் போனது பார்வையாளர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகியது. ஏற்பாட்டாளர் கள், தங்கள் கட்டுரை நேரங்களைச் சுருக்கிக் கொண்டு வெளிநாட்டு அறிஞர் களின் கருத்துகளுக்குக் கூடுதலாக நேரம் ஒதுக்கியிருந்திருக்கலாம்.

"திருக்குறளை அமெரிக்காவில் பரப்புவது எப்படி" என்ற தலைப்பில் தென்றல் ஆசிரியர் மணி மணிவண்ணன் தலைமை யில் நடந்த கலந்துரையாடலில் பல பார்வையாளர்கள் பங்கேற்றுப் பேசினர். ஒரு சிலர் தாம் கட்டுரை படிப்பது போல் நேரம் எடுத்துக் கொண்டது சற்று அலுப்புத் தட்டினாலும், மாநாட்டின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான இதில் மக்கள் காட்டிய ஆர்வம் மாநாட்டின் வெற்றிக்கு ஒரு அடையாளம்.

இன்னொரு நோக்கமான இளைய தலைமுறைத் தமிழர்களைத் திருக்குறள் சென்று அடைய வேண்டும் என்பதில் மாநாடு கண்ட வெற்றி கலந்துரையாடலில் கலந்து கொண்ட பல இளைஞர்களைப் பார்க்கும்போது தெரிந்தது. கலந்துரையாடல் முடிந்த பின்னர், மணிவண்ணனை அணுகித் திருக்குறளைப் பரப்ப ஒரு அற்புதமான ஆலோசனை கூறினார் 15 வயதுச் சிறுமி சிரோமினி ஜெயறாஜா. சீனர்களின் ·பார்ச்சூன் குக்கிகளைப் போல ஏன் தமிழ் உணவகங்களும் திருக்குறளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சடித்து ·பார்ச்சூன் குக்கிகளிலோ அல்லது வடையின் ஓட்டைக் குள்ளோ செருகி வைக்கலாமே என்றார் அவர். தன் மரபின் மாட்சி கண்டு மலைத்தது மட்டுமல்லாமல் அதைப் பரப்பவும் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறாள் தன் பெண் என்று பெருமிதம் கொண்டார் அவர் தந்தை இலையாஸ் ஜெயறாஜா.

'இல்லறமா? துறவறமா? எது நல்லறம்? என்ற தலைப்பில் நகைச்சுவையாகப் பேசிய பேரா. ஞானசம்பந்தன் அரங்கத்தை கலகலப்பாக்கினார். தொடர்ந்து கட்டுரை களைக் கேட்ட பார்வையாளர்களுக்கு இந்த சுவை மாற்றம் நகைச்சுவை துணுக்குகள் இனித்தன.

சென்னைத் தமிழ் மைய இயக்குநர் மறைத்திரு ஜகத் காஸ்பர் ராஜ் அவர்கள் திருவாசகப்பாடல்களை குறுந்தகட்டில் சிம்பொனியாக ஒரு கோடி ரூபாய் செலவில் வெளிக் கொணர்ந்திருப்பதைக் கூறி அதில் பாடப்பட்டுள்ள இரண்டொரு பாடல் களையும் (கோத்தும்பி பகுதி) அருமையாகப் பாடிக்காட்டி அனைவரது கரகோஷத்தைப் பெற்றார். அவரது பேச்சுக்கு பின் இடை வேளை நேரத்தில் குறுந்தகடு விற்பனை அமோகமாக உயர்ந்தது என்பதே அவரது பேச்சுக்கு கிடைத்த பாராட்டு.
இறுதியாக குறட்பாக்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து நடனக்கலைஞர் தனஞ் செயன் இயக்கத்தில் லாஸ் ஏஞ்சலஸ் மாணவிகள் கவிதா பத்மராஜா, மீரா பத்மராஜா, அஞ்சனா பத்மராஜா ஆகிய மூன்று சகோதரிகளும் ஒன்றரை மணிநேரம் ஆடிய பரதநாட்டிய நிகழ்ச்சி அருமையாக இருந்தது. நல்ல உழைப்பு. நல்ல முயற்சி. ஆயினும் பாடல்களின் பொருளுக்கு எடுத்துக்காட்டாக இயேசு கிறிஸ்துவையும், ஆதிசங்கரரையும் போல் வேடமிட்டு ஆடியது மதங்களைக் கடந்த பொதுமைக் கருத்துடன் பாடிய வள்ளுவர் கொள்கைக்குப் பொருந்தாத ஒன்றாகப் பலரும் கருதினர்.

விசா கிடைக்காததால் பங்குபெற வாய்ப்புக் கிடைத்த சில அறிஞர்கள் வரமுடியாமற் போனது வருந்தத்தக்கது. ஆனால், மேரிலாந்து மாநிலம் மாநாட்டைப் போற்றித் திருக்குறள் வாரம் என்று அறிவித்திருந்ததும். மேரிலாந்தின் முன்னணித் தலைவர்கள் பலர் மாநாட்டுக்கு வந்து சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது. மாநாட்டுக் கட்டுரைகளை அதன் வலைத்தளத்தில் (www.thirukkural 2005.org/call_for_papers.htm) ஏற்றி எல்லோருக்கும் கிடைக்குமாறு செய்திருப்பது வரவேற்கத் தக்கது.

கலைஞர் மு. கருணாநிதியின் வாழ்த்துச் செய்தி முதலாக 48 அறிஞர் அளித்திருக்கும் ஆய்வுக்கட்டுரைகளுடன் கூடிய மாநாட்டு மலர், வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் மாத இதழான தென்றல் முல்லையின் சிறப்பு வெளியீடாக வெளியிடப் பட்டுள்ளது. வள்ளுவர் உருவப் படத்தை முன் அட்டையில் தாங்கி, அவரது இடது கையில் வைத்திருக்கும் ஓலைச்சுவடியில் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தொடர் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ள மாநாட்டு மலர் அருமையாக அமைந் திருக்கிறது. காலத்திற்குப் பொருத்தமான கருத்தில் கொள்ள வேண்டிய தொடர் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'.

டாக்டர் அலர்மேலு ரிஷி, சான் ஓசே
மணி மு. மணிவண்ணன்

~~~~~~


கவிஞர் தமிழன்பன் வாழ்த்து - சென்னிமலை

இந்திய அரசின் "சாகித்ய அகாடமி" விருது பெற்றமைக்காக சென்னிமலை மண்ணின் மைந்தர் முனைவர் கவிஞர் தமிழன்பன் அவர்களுக்குச் சென்னிமலையில் பாராட்டு விழா நடந்தது. அந்தப் பாராட்டு விழாவில் நியூ யார்க்கில் வசிக்கும் வாசகர் சென்னிமலை சண்முகம் அவர்களின் வாழ்த்துப் பா வாசிக்கப்பட்டது.

சஷ்டிக் கவசத்தை சென்னி மலையில் அரங்கேற்றிய 'பாலன் தேவராயன்', விடுதலைப் போராட்டத்தில் தன்னுயிர் கொடுத்த தியாகி குமரன், நெசவுநூல் கூட்டுறவுத் தொழிலில் பெருமை சேர்த்த பத்மஸ்ரீ நாச்சிமுத்து என்ற வரிசையில் இன்று "வணக்கம் வள்ளுவம்" படைப்பால் சாகித்ய அகாடமி விருது பெற்று சென்னி மலைக்குப் பெருமை சேர்த்தவர் கவிஞர் தமிழன்பன் என்று இந்த வாழ்த்துப்பா பெருமிதம் கொள்கிறது. சென்னிமலை வாசிகளுடன் தென்றலும் இணைந்து கவிஞரின் தமிழ்ப்பணியை வாழ்த்துகிறது.
More

டல்லஸ் தமிழர் திருவிழா 2005
Share: 




© Copyright 2020 Tamilonline