Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | எனக்குப் பிடித்தது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
'கர்மயோகி' மணிமாறன்
- அரவிந்த் சுவாமிநாதன்|ஜூலை 2018|
Share:
அந்த இளைஞர் பைக்கில் போய்க்கொண்டிருக்கிறார். கண்கள் இருபுறமும் கூர்ந்து பார்க்கின்றன. தெருவோரத்தில் ஒரு முதியவர் சுருண்டு படுத்திருக்கிறார். முதியவரின் காலில் பெரிய பேண்டேஜ், குறைபட்ட கைவிரல்களில் புண். அவர் ஒரு தொழுநோயாளி. இளைஞரின் பைக் சட்டென்று நிற்கிறது. அவரருகே போகிறார், ஆதரவாகப் பேசுகிறார். தண்ணீரும் உணவுப் பொட்டலமும் கொடுக்கிறார். கை, கால் புண்களை சுத்தம் செய்து, மருந்திட்டுக் கட்டுப் போடுகிறார். தனது பைக்கில் அமரவைத்துத் தொழுநோய் காப்பகத்திற்குக் கொண்டுபோய் அவரைச் சேர்க்கிறார். அந்த 32 வயது இளைஞரின் பெயர் மணிமாறன். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். இந்த இளவயதிலேயே சிறந்த சமூகசேவகர் என மாவட்டம், மாநிலம், நாடு, உலகம் என்கிற அளவுகளில் 50க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர். இவர் தொடங்கிய 'உலகசேவை மையம்' தொழுநோயாளிகள், ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற குழந்தைகள் எனப் பலருக்கும் சிறந்த சேவை செய்கிறது.

மணிமாறனைத் தூண்டி நடத்திச் செல்லும் சக்தி எது என்பது தொடங்கிப் பல விஷயங்களைப் பேசினோம். இதோ....

*****


சொந்த ஊர் திருவண்ணாமலை அருகே தலையாம்பள்ளம். அப்பா விவசாயி. அரசுப் பள்ளியில் படித்தேன். சிறுவயதில் இருந்தே எனக்குச் சேவையில் ஆர்வம் இருந்தது. பள்ளியில்கூட சாரணர், என்.எஸ்.எஸ். போன்றவற்றில் ஆர்வத்துடன் பங்கெடுப்பேன். பாடத்தில் அன்னை தெரசா பற்றி இருந்தது. ஆசிரியர் அவரது சேவைபற்றி விரிவாகச் சொல்லிக் கொடுத்தார். அது என்னுள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

எட்டாவதில் ஃபெயிலாகி விட்டேன். என் தந்தையிடம் "எனக்குப் படிப்பு வரவில்லை" என்று சொல்லி அழுதேன். அவர் "பரவாயில்லை. உனக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதைச் செய்" என்றார். "மதர் தெரசாபோலச் சேவை செய்ய ஆசைப்படுகிறேன்" என்று சொன்னேன். அப்பா சரி என்றார். பெற்றோர்களின் சம்மதத்துடன், கையில் சிறு தொகையுடன், தன்னந்தனி ஆளாகக் கொல்கத்தாவிற்குப் புறப்பட்டுச் சென்றேன்.பிச்சைக்காரர்களுடன் வாழ்க்கை
கல்கத்தா ரயில்வே ஸ்டேஷனில் எனது பை திருடு போய்விட்டது. கையில் காசு இல்லை. தனியாகச் சுற்றித்திரிந்த நான் சில பிச்சைக்காரர்களிடம் மாட்டிக்கொண்டேன். அவர்கள் என்னை அடித்து, உதைத்து என்னையும் பிச்சையெடுக்க வைத்தனர். பசி, பட்டினி! முதலில் கஷ்டமாக இருந்தது. ஆனால், 'இங்கே இவ்வளவு பேர் பசிக்காகத்தானே இதையெல்லாம் செய்கிறார்கள்' என்று யோசித்தேன். இவர்களை எல்லாம் இந்த அவலத்திலிருந்து மீட்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஒரு வாரம் இப்படியே கழிந்தது. பிறகு போஸ் என்ற ஆட்டோக்காரர் உதவியுடன் (அவர் தமிழர்) அங்கிருந்து மீண்டேன். அவர் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தேன். அவர்மூலம் அன்னை தெரசாவின் ஆச்ரமத்துக்குச் சென்றேன். அன்னை அப்போது காலமாகிவிட்டிருந்தார். சகோதரி நிர்மலா பொறுப்பேற்றிருந்தார். ஆனால், அவரும் நான் சென்றபோது இல்லை. நான் எனது சேவை ஆர்வத்தை அங்கு பொறுப்பில் இருந்தவர்களிடம் சொன்னேன். அவர்கள் என்னை அங்கே பயிற்சி பெற அனுதித்தனர். ஆனால், அங்கே பெண்களுக்கு மட்டுமே தங்க அனுமதி என்பதால் நான் வெளியிலே தங்கிக்கொண்டு பயிற்சி பெற்றேன். பொறுமை, சகிப்புத் தன்மை, கருணை எல்லாவற்றையும் அங்கேதான் நான் கற்றுக்கொண்டேன். தொழுநோயாளிகளுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற உந்துதல் வந்ததும், அந்த எண்ணம் உறுதிப்பட்டதும் அங்கேதான்.

திருப்பூரில் வேலை
அதன் பிறகு திரும்பிவந்தேன். எனது அண்ணன் திருப்பூர் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தார். நானும் அங்கு வேலைக்குச் சேர்ந்தேன். முதல் மாதச் சம்பளம் ரூபாய் ஆயிரத்தில் 500 ரூபாய்க்கு 50 சாப்பாடுப் பொட்டலங்களை வாங்கி (அப்போது ஒரு சாப்பாடுப் பொட்டலத்தின் விலை ரூபாய் பத்துதான்) திருவண்ணாமலையில் இருந்த ஆதரவற்றவர்களுக்கு விநியோகித்தேன். மீதிப் பணத்தை அப்பாவிடம் கொடுத்துவிட்டு நடந்ததைச் சொன்னேன். அவர், "எனக்கு உன் சம்பளப் பணம் வேண்டாம். முழுச் சம்பளத்தையும் சேவைக்குப் பயன்படுத்து" என்று சொல்லி உற்சாகமூட்டினார். அதுமுதல் எனக்குக் கிடைக்கும் பணத்தில் உணவு, உடை என்று சிறு சிறு உதவிகளை ஆதரவற்றவர்களுக்குச் செய்ய ஆரம்பித்தேன்.

இதையறிந்த எனது முதலாளியும் இதில் பங்கெடுத்துக் கொண்டார். பிஸ்கட், ஆடைகள் அளிக்க உதவினார். பின்னர் நான் செகண்ட் சேல்ஸில் பனியன்களை வாங்கி அவற்றை விற்பனை செய்தேன். அதில் கிடைத்த லாபத்தை சேவைப் பணிகளுக்குப் பயன்படுத்தினேன். இப்படிச் சில மாதங்கள் கடந்தன. அப்போதுதான் நான் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நடந்தது.குடிக்கத் தண்ணீர் கேட்டால் மேலே கொதிக்கும் வென்னீர்!
என் உறவினர் ஒருவர் இறந்து விட்டார். அதற்காக நான் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன். திடீரென வழியில் பஸ் பங்க்சராகி விட்டது. அங்கிருந்து பஸ் ஸ்டாண்ட் சிறிது தூரம்தான் என்பதால் நடந்தே போக நினைத்தபோதுதான் அந்தக் காட்சியைப் பார்த்தேன்.

அவர் ஒரு பெண். 70 வயது இருக்கும். தொழுநோயாளி. கையில் அடிபட்டு ரத்தமாக இருக்கிறது. காலில் கட்டுப் போட்டிருக்கிறார். அவர் ஒரு உணவகத்தின் வாசலில் நின்று, "தாகமா இருக்குது; தண்ணீ கொடுங்கய்யா, ஐயா... தண்ணீ" என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். அவரது விகாரமான தோற்றத்தையும், அவர் உடலில் இருந்து எழுந்த துர்வாடையையும் சகிக்காத ஹோட்டலில் உள்ள ஒருவர் சுடுதண்ணீரை எடுத்து அவர்மேல் ஊற்றினார். அந்தப் பெண்மணி வலி தாங்காமல் கதறியபடி அருகிலிருந்த சாக்கடைக் கழிவுநீரைக் குடிக்கப் போனார். அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான், எங்கே, அவர் அந்தத் தண்ணீரைக் குடித்துவிடுவாரோ என்று பதறி ஓடிப்போய் அவரைத் தடுத்தேன்.

"என்னம்மா ஆச்சு. ஏன் இப்படிப் பண்றீங்க. இதைப் போய்க் குடிப்பாங்களா?" என்றேன்.

"அதைக் கேக்க நீ யாரு?" என்றார் அவர் கோபமாக.

"அம்மா, இதே பாதிப்பு எனக்கு ஏற்பட்டால் நான் எப்படித் தவிப்பேன்என்பதை உணர்கிறேன். அதனால்தான் உங்களுக்கு உதவ ஓடி வந்தேன்" என்றேன்.

அதைக் கேட்டதும் அவர் என்னைக் கட்டிக்கொண்டு, "அப்பா... இந்த மனுஷக் கூட்டத்துடன் நான் 32 வருஷமா படாதபாடு பட்டுக்கிட்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் துன்பத்தை அனுபவிக்கிறேன். ரொம்பக் கஷ்டமாக இருக்கிறதப்பா..." என்று சொல்லி அழுதார்.

நான் உடனே ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி அவருக்குக் கொடுத்தேன். அவரது தாகத்தைத் தீர்த்து, முகத்தை நன்கு கழுவி ஆசுவாசப்படுத்தினேன். ஒரு நைட்டி வாங்கி வந்து அணிய வைத்தேன். உணவு வாங்கிக்கொடுத்து சாப்பிடச் சொன்னேன். பிறகு, "அம்மா. நான் ஒரு துக்க வீட்டுக்குப் போக வேண்டியிருக்கிறது. போய்விட்டு வந்து உங்களை எனக்குத் தெரிந்த இல்லம் ஒன்றில் சேர்த்துவிடுகிறேன். அதுவரை எங்கும் போகாமல் இங்கேயே இருங்கள்" என்று சொன்னேன். ஆனால் அவரோ, "என்னை விட்டுட்டுப் போகாதேப்பா" என்று அழுதார். எனக்கு வேறு வழியில்லை. நான் ஆறுதல் கூறிவிட்டு, "அவசியம் நாளை வருகிறேன். இங்கே இருங்கள்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். ஆனால், அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு.

என்னால் அடுத்த நாள் போக முடியவில்லை. அதற்கடுத்த நாள் போய்த் தேடினால் அவரைக் காணோம். யாருக்கும் அவர் எங்கே போனார் என்பதே தெரியவில்லை. இரவுவரை தேடிப் பார்த்தும் பலனில்லை. எனக்கு மிகுந்த மனக்கஷ்டமாகி விட்டது. அந்த அம்மா அப்படிச் சொல்லியும் நாம் விட்டுவிட்டுப் போனோமே என்று மனம் வருந்தினேன். சரி, இன்று இரவு இங்கே தங்குவோம். நாளைக் காலை விடிந்ததும் மீண்டும் ஒருமுறை தேடிப் பார்ப்போம் என்று நினைத்து அங்கேயே ஒரு பெஞ்சில் படுத்துவிட்டேன். ஆனால், அந்த இரவு என் வாழ்க்கையில் மறக்கமுடியாத இரவாகிவிட்டது.ஷூ கால் உதை
இரவு நான் அசந்து தூங்கும் போது என்னிடம் இருந்த செல்போன், பணம் எல்லாம் திருடு போய்விட்டது. அதுமட்டுமல்ல, அங்கு ரோந்து வந்த போலீஸ்காரர்களிடம் மாட்டிக்கொண்டேன். அன்று விடியற்காலைதான் அந்த ஊரில் ஏதோ திருட்டு நிகழ்ந்திருக்கும் போல. மழிக்கப்படாத தாடி, அலைந்ததால் அழுக்கான ஆடை என்றிருந்த என்னைப் பார்த்து, நான்தான் அந்தத் திருடன் என்று நினைத்து என்னை அடிக்கத் துவங்கிவிட்டனர். நான் எவ்வளவு சொல்லியும் கேட்கத் தயாராக இல்லை. ஒருவர் தலையில் அடிக்க, மற்றவர் ஷூ காலால் எட்டி உதைக்க என் முகமெல்லாம் ரத்தம். வலி தாங்காமல் அங்கிருந்து ஓட, அவர்கள் துரத்த ஆரம்பித்தார்கள். அருகில் இருந்த ஒரு டீக்கடையில் நான் ஒளிந்துகொள்ள, அந்தக் கடைக்காரரோ என்னைத் திருடன் என்று நினைத்து தண்ணீரை எடுத்து என்மேல் ஊற்ற ஆரம்பித்து விட்டார்.

அங்கிருந்தும் ஓடினேன். பைரவர் என்னைத் துரத்தத் தொடங்கினார். ஓடி, ஓடி வெகு தொலைவுக்குச் சென்று ஒரு மரத்தின் மீதேறி ஒளிந்து கொண்டேன். அப்போதுதான் யோசித்துப் பார்த்தேன். ஆணான, இளைஞனான நம்மால் ஓர் இரவைக்கூட இங்கே நிம்மதியாகக் கழிக்க முடியவில்லையே, அந்த அம்மா 32 வருடங்களாக மனிதர்களிடம் என்னென்ன பாடுபட்டிருக்கும், எத்தனை அடி, உதை, அவமானம் பட்டிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். என்னால் தாங்கமுடியவில்லை. பைத்தியம் பிடித்த மாதிரி ஆகிவிட்டது. விடியும்வரை தவித்து, விடிந்ததும் உடல், முகமெல்லாம் கழுவிக்கொண்டு, ஒரு காய்கறி வேனில் ஏறி ஊர் போய்ச் சேர்ந்தேன்.

அப்பா, அம்மா கஷ்டப்படுவார்கள் என்பதால் அவர்களிடம் சொல்லாமல் தவிர்க்க நினைத்தேன். கடைசியில் சொல்லிவிட்டேன். அப்போதுதான் முடிவு செய்தேன். நமக்கே இந்தக் கஷ்டம் என்றால் ஆதரவற்ற தொழுநோயாளிகள் என்னென்ன கஷ்டப்படுவார்கள், அவர்களுக்கே முழுக்க முழுக்கச் சேவை செய்வது என்று முடிவெடுத்துச் செயல்படத் துவங்கினேன். எனது தந்தையும், சகோதரரும் எனக்கு ஊக்கமளித்தனர். இப்படித்தான் ஆரம்பித்தது என் சேவைப் பணி.

வேலூரில் பயிற்சி
இதற்காக நான் தனிப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். ஏனென்றால் தொழுநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது என்பது சாதாரணமானதல்ல. அவர்களுக்கு அங்கம் குறைந்திருக்கும், அங்கங்கே புண்கள் இருக்கும். இரத்தம், சீழ் கலந்த அதில் புழுக்கள் இருக்கும். அவற்றை லாகவமாக எடுத்து சுத்தம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தமிழ்நாடு தொழுநோய் பிரிவின் டைரக்டராகத் திரு. ராமலிங்கம் இருந்தார். அவர் எனது ஆர்வத்தையும் சேவை நோக்கத்தையும் பார்த்துவிட்டு எனக்குப் பரிந்துரைக் கடிதம் அளித்தார். அவரது ஆதரவுடன் வேலூர் சி.எம்.சி.யைச் சார்ந்த கரிகிரி மருத்துவமனையில் சிறப்புப் பயிற்சி பெற்றேன். அந்த மருத்துவமனை மிகப் பழமையானது. மிகச் சிறப்பானது. அங்கு துறைத்தலைவராக இருந்த பாதிரியார் தொழுநோய் சிகிச்சைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

அங்கே, எப்படிப் புண்களை சுத்தம் செய்வது என்பதில் தொடங்கி கட்டுப் போடுவது வரை எல்லாமே கற்றுக் கொண்டேன். நான் நன்கு கற்றுத் தேர்ந்தவுடன் எனக்கு அவரே சான்றிதழ் கொடுத்தார். அதன்மூலம் எனது பணி விரிவடைந்தது. தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, வட இந்தியா என நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று சேவை செய்ய என்னால் முடிந்தது.

இதற்கு மிகுந்த சகிப்புத் தன்மை, பொறுமை தேவை. மேலும் சரணாகதி என்பது அவசியம். நான் அப்படித்தான் இந்தப் பணிகளைச் செய்கிறேன். அலுப்பு, சலிப்பு, அருவருப்பு, வேண்டா வெறுப்பு ஆகிய எதனுடனும் இதைச் செய்வதில்லை. இதனை நேசித்து, உளப்பூர்வமாகச் செய்கிறேன். எனது தந்தையார் "மலம் அள்ளும் வேலையைச் செய்தாலும் யார் அதனை விருப்பத்துடன், ஈடுபாட்டுடன், நேர்த்தியாகச் செய்கிறாரோ அவரே கர்மயோகி, அதுவே கர்மயோகம்" என்பார். நீங்கள் அன்புடன் இந்தப் பணிகளைச் செய்ய முன்வரும்போது ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தாலும் அடங்கிவிடும் என்பது எனது அனுபவம். எதிர்ப்புகளை நான் பொருட்படுத்துவதுமில்லை. அவர்கள் அறியாமையால்தானே செய்கிறார்கள்.கண்கலங்கினார் கலாம்
2008ல் நான் அப்துல்கலாம் ஐயாவைச் சந்தித்தேன். அவர் எனது பணிகளை வாழ்த்திவிட்டு "தனிமரம் தோப்பாகாது. நீ ஓர் அமைப்பைத் தொடங்கி நடத்து. பலர் இதில் இணைந்து பணிபுரிய வேண்டும். அப்போதுதான் பயனுள்ளதாக அமையும்" என்று அறிவுரை சொன்னார். அன்று அவர் சொன்னது பலித்தது. இன்று 450 தன்னார்வத் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவரவர் இருக்கும் இடத்தில் சேவைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். திரு. கலாம் அவர்களைச் சந்தித்தது என் வாழ்வில் மறக்க முடியாத ஓர் அனுபவம். அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். ஒருமுறை அவரைக் குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்தேன். அவர் கருணையே வடிவானவர். அவரே ஒரு மகான். யார் வந்தாலும் முதலில் சாப்பிடச் சொல்வார். அதன் பின்தான் நலம் விசாரிப்பார். அப்படிச் சாப்பிடாவிட்டால் டீ, பிஸ்கட்டாவது சாப்பிட்ட பின்புதான் அவருடன் பேசமுடியும். என்னை மிகவும் ஊக்குவித்தவர். எனது பணிகளையெல்லாம் கேட்டுவிட்டுக் கண்கலங்கினார். சொந்தப் பணத்திலிருந்து ரூபாய் ஆயிரத்தை எனது சேவை மையத்திற்காக அளித்து வாழ்த்தினார்.

"நான் மதர் தெரசாவைப் பார்க்கவில்லை. விவேகானந்தரைப் பார்த்ததில்லை. உங்களை அவர்கள் வழி வந்தவராக, உயர்ந்த துறவியாகப் பார்க்கிறேன். என்னை ஆசிர்வதியுங்கள்" என்று சொல்லி அவரை (அவர் ஜனாதிபதி என்பதால் பாதுகாவலர்களின் அனுமதி பெற்று) நமஸ்கரித்தேன். அவர் என்னிடம், "நீ வணங்கப்பட வேண்டியவன்; காலில் விழக்கூடாது" என்று சொன்னார். பின் அவரிடம் உபதேசம் வேண்டினேன். அவர், "நீ விதையாக இருக்க வேண்டும். பின் அது முளைவிட்டுச் செடியாகி, செடி மரமாகி, மரம் கனிகொடுக்கும் போது, அந்தப் பழத்தை ருசிக்கும்போதுதான் விதையின் அருமை எல்லாருக்கும் தெரியும். புரியும்" என்றார். அவர் சொன்னதற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. "சமுதாயத்திற்காக நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்துவிட்டுப் போய் விடுங்கள்" என்று சொன்னார். இப்படிப் பல விஷயங்களை எனக்குப் போதித்தார். அவரை ஒரு ஞானியாக, மிகப்பெரிய மகானாகத்தான் நான் பார்க்கிறேன். அவர் கண்களில் ஓர் ஒளி இருக்கும். அதைச் சிலரால் மட்டுமே உணர முடியும். அவருடன் பழகியதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

சேவைக்கு என்ன தேவை?
இந்தச் சேவைகளுக்கு நிறைய நிதி தேவைப்படுகிறதுதான். இந்தப் பணிகளை எனது கைப்பணம் மூலமே செய்து வருகிறேன். யாரிடமும் கேட்டுச் செய்வதில்லை. எனது சொத்துக்கள் பலவற்றை விற்றுவிட்டேன். இப்போது கடனே ஒரு 9 லட்சம் ரூபாய் உள்ளது. கஷ்டம்தான். ஆனால், என்னால் முடிந்த அளவுக்கு ஆத்மார்த்தமாக இப்பணிகளை எனது சரீரம் இவ்வுலகில் இருக்கும்வரை தடைப்பட்டுப் போகாமல் செய்யவேண்டும் என்பதுதான் என் ஆசை. கடன் வாங்கியாவது பணிகளைச் செய்வேன். கடனைச் சிறுகச் சிறுக அடைத்துவிடுவேன். அதற்காக எந்த வேலையும் செய்வேன். செப்டிக் டேங்க் க்ளீன் செய்வேன். போஸ்டர் ஒட்டுவேன். சின்னச் சின்ன கான்ட்ராக்ட் வேலைகள் எடுத்துச் செய்வேன். இதோ, இப்போதுகூட தேனிக்கு வந்திருக்கிறேன். என் நண்பர் காய்கறிச் சிற்பி. ஒரு திருமணம். அதில் காய்கறிகளைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும். அதற்கு உதவியாளாக என்னை அழைத்துச் சென்றார். 1500 ரூபாய் கொடுத்தார். எந்த வேலையும் செய்வேன்.

சமயத்தில் இடுகாட்டில் கையில் காசில்லாத சூழ்நிலையில் நானே குழி தோண்டி அடக்கம் செய்திருக்கிறேன். சில சமயம் சில உடல்களை ஆம்புலன்ஸில் சுமந்து செல்லக்கூட மறுத்து விடுவார்கள். அந்த அளவுக்கு உடல்கள் புழுத்து வாடை வீசிக் கொண்டிருக்கும். அப்போது நானே எனது டூவீலரில் பாடியைச் சுமந்து ஓட்டிக்கொண்டு போயிருக்கிறேன். நானே குழிவெட்டி அடக்கம் செய்திருக்கிறேன். வேலையில் நான் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை.

நானாகப் போய் யாரிடமும் நிதி கேட்டதில்லை. யாராவது உதவ விரும்பினால் அவர்களை அழைத்து அவர்கள் கையாலேயே அந்தப் பணியைச் செய்யச் சொல்லிவிடுவேன். பணம் ஓர் ஆட்கொல்லி என்பது எனது கருத்து. பணம் தேவைதான். ஆனால், பணமில்லை என்பதற்காக எந்தப் பணியும் நின்றுவிடாது என்றே நான் கருதுகிறேன். சேவை செய்வதற்குப் பணம் முக்கியமல்ல, மனம்தான் முக்கியம்.பெற்றோர்தான் சொத்து
எனக்கு மிகப்பெரிய சொத்து என் அப்பா, அம்மாதான். நான் எவ்வளவு செலவு செய்தாலும், சொத்துக்களை விற்றாலும் அதற்காகக் கோபிக்கமாட்டார்கள். "நீதான்பா எங்களுக்குச் சொத்து. உன்னைவிடவா இதெல்லாம் எங்களுக்குப் பெரிசு?" என்று சொல்வார்கள். எனக்கும் சொத்து என்றால் அவர்கள்தானே! உண்மையில் இந்தச் சொத்து சுகமெல்லாம் மாயை. உயிர் போகும்போது, கூட எதுவும் வரப்போவதில்லை. அரைஞாண் கயிறைக்கூட அறுத்துவிட்டுத்தான் தகனம் செய்வார்கள். இதுதான் உண்மை நிலை. இது எல்லாருக்கும் புரிவதில்லை.

நான் கடவுளாக வணங்கும் என் அப்பா, அம்மா எப்போதும் எனக்கு உறுதுணை. அதுபோல என் சகோதரர் லோகநாதன் எனது பணிகளுக்கு உறுதுணையாக இருக்கிறார். தன்னார்வலர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள் பிரபு வெங்கடேஷ். அதுபோலப் பலர் இருக்கிறார். எல்லோர் பெயரையும் சொல்ல இங்கே இடம் போதாது. என் அக்கா சிவகாமி சஞ்சீவ் பெங்களூரில் இருக்கிறார். நான் சோர்ந்து போகும்போதெல்லாம் உற்சாகமூட்டுபவை இவரது வார்த்தைகள். எனக்கு நிறைய உதவியிருக்கிறார்.

அருணாசலேஸ்வரர் M.D.
அடுத்ததாக நான் குறிப்பிட வேண்டிய முக்கியமான நபர், அருணாசலேஸ்வரர். அவர் கடவுள் என்பதைவிட எனக்கு எம்.டி., எனது நெருக்கமான நண்பர் என்று சொல்லலாம். அவர்தான் என்னை வழிநடத்துகிறார். எல்லாப் பணிகளையும் செய்விப்பவர் அவரே. நான் அவரது கருவிதான். குப்பைமேட்டில் கல்லாக இருந்தவனைச் சிலையாக மாற்றியிருப்பவர்; மணிமாறன் இன்று பலரும் அறியக் காரணமாக இருப்பவர் அந்த ஆதி அருணாசலேஸ்வரர் தான்.

கனவுத் திட்டங்கள்
தொட்டில் குழந்தைகளுக்காக இல்லம் ஒன்றை ஆரம்பித்து, அவர்களை நன்கு வளர்த்து, சிறுவயது முதலே வாழ்க்கையைப் புரியவைத்து, அவர்களையும் சேவை உள்ளம் கொண்டவர்களாக ஆக்கி, இந்தச் சமூகத்துக்கு அளிக்கவேண்டும். அதற்குப் பத்து ஏக்கர் நிலம் தேவை. அதில் குழந்தைகளுக்காக ஓர் இல்லம், தொழுநோயாளிகளுக்காக ஓர் இல்லம், மருத்துவமனை ஆகியவற்றை நடத்தவேண்டும். அதுபோக வீட்டைவிட்டுத் துரத்தப்பட்ட ஆதரவற்ற முதியோருக்காக ஓர் இல்லம் ஆரம்பித்து நடத்தவேண்டும். இவர்களில் திடமாக இருப்பவர்கள் சுற்றியிருக்கும் நிலத்தில் விவசாயம் செய்யலாம். அந்த வருமானத்தை அவர்களே எடுத்துக்கொள்ளலாம். அதைப்போல சேவை செய்வதற்குப் பயிற்சி அளிப்பதற்கென்றே ஒரு பள்ளி தொடங்கி நடத்தவேண்டும். அதில் பயிற்சி பெற்றால் எல்லாவிதமான சேவைகளையும், தொண்டுகளையும் செய்யுமளவுக்கு ஒருவர் தகுதி வாய்ந்தவராக ஆகிவிட வேண்டும். வெளிநாடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் சேவை முறைகளைக் கற்றுக்கொண்டு வந்து நம் நாட்டில் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறேன். தற்போது தொழுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் வாழ்க்கை நடத்த இரண்டு ஆடுகள் மற்றும் மாடு ஒன்றை வாங்கித் தந்திருக்கிறேன். ஆதரவற்ற பெண்களுக்குத் தையல் இந்திரங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டி என்று உதவி வருகிறேன். இன்னம் நிறையச் செய்ய ஆசை. ஆனால் பகவான் என்ன நினைத்திருக்கிறாரோ! எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தானே வேண்டும்!

மணிமாறன் பேசுகிறார். நம்மையுமறியாமல் சில கணங்களில் நம் கண்ணில் நீர் திரையிடுகின்றது. வயதில் இளையவர் என்றாலும் பரவாயில்லை கைகூப்பித் தொழலாம் என்று தோன்றுகிறது. இவருடைய தன்னலமற்ற ஆசைகளுக்குத் தெய்வங்கள் 'ததாஸ்து' என்று கூறும் என்பதில் நமக்கு ஐயமில்லை. வாழ்த்தி விடைபெறுகிறோம்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

*****
மறுபிறப்பு!
காசியில் தொழுநோயாளிகளுக்குச் சேவை செய்வதற்காகச் சென்றிருந்தேன். அங்கு கைவிடப்பட்ட பெண்மணி ஒருவர் இருந்தார். அவருக்குப் பத்து நாட்கள் சேவை செய்தேன். ஒருநாள் இரவு நான் மிகவும் களைப்புடன் இருந்தபோது என்னை அழைத்தார். ஏதோ சொல்ல முயற்சித்தார், முடியவில்லை. உரத்த குரலில், "நீதான் எனக்குக் கொள்ளி வைக்கவேண்டும்" என்றார். தொடர்ந்து, "இனி, எத்தனை பிறவிகளில் உன் முகத்தில் நான் விழிக்க, எங்கே போய்த் தேடுவேன் மகனே, உனக்குப்பட்ட கடனை நான் அடைக்க" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. "சரிம்மா, தூங்குங்கள். காலையில் பார்த்துக் கொள்ளலாம்" என்றேன். மறுநாள் காலையில் அவர் இறந்துவிட்டார்.

அவர் வேண்டுகோளின்படி அவரது உடலுக்கு நான் கொள்ளிவைக்க முயன்றேன். ஆனால், அங்கிருந்த சிலர் பிரச்சனை செய்தார்கள். அவர்கள் பிணத்தை வைத்துப் பிச்சை எடுப்பவர்கள். சதா கஞ்சா அடிப்பவர்கள். அவர்கள் அந்த அம்மாவின் உடம்பைக் கேட்டார்கள். கொடுத்தால் என்ன ஆகுமோ தெரியாது என்பதால், நான் ஹரிச்சந்திரா காட்டில் பணம் கட்டி என் கையால் தகனம் செய்தேன். அஸ்தியை வாங்கிக் கங்கையில் கரைத்துவிட்டு நான் மேலே ஏறி வரும்போது அந்தக் கும்பலில் ஒருவர் என்னைச் சவுக்குக் கட்டையால் மண்டையில் ஓங்கி அடித்தார். நான் மயங்கிச் சரிந்தேன். கிட்டத்தட்ட மரணத்தை நெருங்கிவிட்ட நிலை. மறுநாள் காலைவரை அப்படியே கிடந்த என்னை அகோரியான குருபாய் என்பவர் பார்த்திருக்கிறார். அறிமுகமில்லை என்றாலும் நான் செய்யும் சேவைகளைப் பார்த்திருக்கிறார். என்னைத் தூக்கிக் கொண்டுபோய் தனது குருவிடம் காண்பிக்க, அவர் பச்சிலை மருந்துகளால் என் மயக்கத்தைப் போக்கினார். சில நாட்கள் சிகிச்சை அளித்து என்னைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்தார்.

ஒருநாள் "உனக்கு ஏனப்பா இந்த வேலை?" என்று என்னிடம் கேட்டார். அவருக்கு இம்மாதிரி எனக்கு நேர இருப்பது தெரிந்திருக்கிறது. நான் ஊரில் இருந்து காசிக்குப் புறப்படும்போது பெற்றோரிடம் ஆசி வாங்கினேன். எப்போது எங்கு சென்றாலும் அப்பா, அம்மாவிடம் ஆசி பெற்றுத்தான் செல்வேன். அப்போது என்னையுமறியாமல் கண்ணீர்விட்டு அழுதேன். இனி திரும்ப வரமாட்டேன் என்று ஏனோ என் மனதுள் தோன்றியது. அதனால்தான் அழுகை. அதுதான் காசியில் நடந்தது. எனக்கு அங்கே நேர்ந்தது கிட்டத்தட்ட மரணம்தான்.

உண்மையில் குரு சுவாமிதான் என்னைக் காப்பாற்றினார். அவர் ஒரு மிகப்பெரிய சித்தர். அவர் குளிக்கமாட்டார். ஆனால், எப்போதும் அவரிடமிருந்து ஜவ்வாது, சந்தன வாசம் வீசிக்கொண்டிருக்கும். பேசினால் வெற்றிலை வாசம் வீசும். அவ்வப்போது இமயமலைக்குக் கிளம்பிச் சென்றுவிடுவார். பல நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் மிக்கவர். யாரிடமும் காசு வாங்கமாட்டார். தனது குடலை மலத்துவாரத்தின் வழியே எடுத்துச் சுத்தம் செய்து மீண்டும் உள்ளே தள்ளியதை நான் கண்ணால் கண்டிருக்கிறேன். இன்னும் நிறைய சித்துக்களைச் செய்திருக்கிறார். அவர் இன்னமும் காசியில் இருக்கிறார். வயது 107.

அவர் எனக்குக் 'கர்மயோகி' என்று பட்டம் கொடுத்தார். எனக்கு மந்திர தீக்ஷை அளித்து ஆசிர்வதித்தார். அது எனக்கு மறுபிறவி மாதிரி. இப்படி நான் பல சித்தர்களை, ஞானிகளைச் சந்தித்திருக்கிறேன். எனக்கு 25 குருமார்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் என்னை வழிநடத்துகிறார்கள். ஆதிகுரு அருணாசலேஸ்வரர் தான். மற்ற விஷயங்களை வெளிப்படையாகச் சொல்ல எனக்கு அனுமதி இல்லை.

- மணிமாறன்

*****


நான் ஒரு வேலைக்காரன்
அந்தக் காலத்தில் தொழுநோயைக் கன்ம நோய் என்று சொல்லியிருக்கிறார்கள். எல்லோராலும் இதற்குத் தொண்டு செய்யமுடியாது. சிலரால் மட்டுமே முடியும். அப்படிச் செய்பவர்களை 'கர்மயோகி' என்று அழைத்திருக்கிறார்கள். இதை எனக்கு 'கர்மயோகி' பட்டம் கொடுத்த சுவாமிஜிதான் விளக்கிச் சொன்னார். என்மீது அன்பு கொண்ட நண்பர் செல்லக்குப்பம் எம். சுப்பிரமணியன். அவர் பாடகர் மற்றும் இசையமைப்பாளர். அவர் என்னோடு சேவைகளில் ஈடுபட்டார். எனது சேவைகளை வியந்து டாக்டர் ம. சுசில் எழுதிய பாடல் ஒன்றை ஆல்பமாக வெளியிட்டிருக்கிறார். அதுதான் 'கர்மயோகி' என்ற இசை ஆல்பம். திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி அவர்கள் அதனை வெளியிட்டார். ஆனால், நான் இதையெல்லாம் தலையில் ஏற்றிக் கொள்வதில்லை. கர்வம் எப்படிப்பட்டது என்பது எனக்குத் தெரியும். நான் ஒரு வேலைக்காரன். இறைவனின் வேலையைச் செய்பவன். அவ்வளவுதான்.

- மணிமாறன்

*****


தெருவோரத்தில் மரணித்த கோடீசுவரி
நான் மைசூரில் இருந்தேன். எனக்கு ஒரு ஃபோன் வந்தது. "சார், திருப்பூர் தாராபுரத்தில் இருந்து பேசுகிறேன். இங்கே ஓர் அம்மா ரோட்டோரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார்கள். அவரைப் பார்த்ததும் உங்கள் நினைவு வந்தது" என்றார் ஓர் இளைஞர். பத்திரிகையில் என்னைப் பற்றிய கட்டுரையைப் படித்தபோது என் எண்ணைச் சேமித்து வைத்ததாகச் சொன்னார். அந்தப் பெண்மணியைப் படம் எடுத்து அனுப்பினார். மைசூரிலிருந்து இரவோடு இரவாகக் கிளம்பிச் சென்றேன். அந்த அம்மாவுக்குக் கண் தெரியாது, காது கேட்காது. இடுப்பெலும்பு உடைந்திருந்தது. தொழுநோய் வேறு.

"நீ வர்றதுக்கு இவ்வளவு நாளாப்பா?" என்று என்னைப் பார்த்துக் கேட்டார். பின், "எனக்குத் தூக்கம் வருதுப்பா" என்றார். அவர் உடலில் இருந்து துர்நாற்றம் வரவில்லை. உயர்ந்த தெய்வீகப் பெண்மணியாகத்தான் அவர் எனக்குத் தெரிந்தார். அவரது புண்களைத் துடைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தேன். சில நாட்களில் இறந்துவிட்டார். பின்னர்தான் அவர் 150 கோடி சொத்துக்கு அதிபதி என்பது தெரியவந்தது. அவர் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். தொழுநோயால் பாதிக்கப்பட்டதும் வாரிசுகள் அவரைக் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றுவிட்டனர்.

அவரது இறுதிக் காரியங்களை நானே செய்தேன். அவருக்காக இடுகாட்டில் குழி தோண்டும்போது அங்கே ஒரு அம்மன் சிலை கிடைத்தது. 3 3/4 அடி ஜக்கம்மா சிலை. அதை அரசிடம் ஒப்படைத்து விட்டேன். அந்த அம்மா அரைப்பவுன் நகை போட்டிருந்தார்கள். அதைப் பணமாக்கி முதலமைச்சர் நிவாரண நிதியில் சேர்க்க நினைத்தேன். அது பொதுச்சொத்து. அந்த நகைக்கு 6100 ரூபாய் பணம் கிடைத்தது. அந்த அம்மா இறந்த தேதி 06-21-2016. அந்தப் பணத்தை நானும் அரசாங்கத்திற்குக் கொடுக்கப் பல விதங்களில் முயன்றேன். ஏனோ தட்டிப் போய்க்கொண்டிருந்தது. மிகச்சரியாக ஒருவருடம் கழித்து அதாவது 06-21-2017 அன்று டி.டி. மூலம் அதனை அரசிடம் சேர்ப்பித்தேன். இதை ஓர் அதிசயமாகத்தான் நான் பார்க்கிறேன்.

- மணிமாறன்

*****


மணிமாறன் - சாதனையின் மறுபெயர்
இந்த இளவயதிலேயே இவர் 50க்கும் மேற்பட்ட அபூர்வமான விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். அவற்றில் சில

அமேசிங் இந்தியன்ஸ் விருது - டைம்ஸ் நியூஸ் (இந்தியாவின் சிறந்த பத்து சமூக சேவையாளர்களில் ஒருவர்).
டாக்டர் பட்டம் - ஹவாய் உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் கர்மயோகி பட்டம் - சர்வதேச தமிழ்ப்பல்கலைக்கழகம்
பள்ளி, கல்லூரிகளில் உடல் உறுப்புதானம், ரத்த தானம், கண் தானம் பற்றிய விழிப்புணர்வுச் சொற்பொழிவாற்றி வருகிறார்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் பதினெட்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்குச் சென்று ஆயிரக்கணக்கான தொழுநோயாளிகளுக்குச் சேவை செய்திருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட தொழுநோயாளிகளைத் தத்தெடுத்துப் பராமரித்து வருகிறார். 750க்கும் மேற்பட்டவர்களைத் தன் கையால் தகனம் செய்திருக்கிறார். குடும்பத்தை விட்டுப் பிரிந்து தெருவோரத்தில் வாழ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை மீட்டு உறவுகளுடன் சேர்த்து வைத்திருக்கிறார். மருத்துவமனை போன்ற இடங்களுக்குக் குழுவினருடன் சென்று தூய்மைப் பணி செய்கிறார். தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமல்லாது ஹிந்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னட, மலையாள இதழ்களிலும் இவரைப்பற்றிய சிறப்புக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

முகநூல் பக்கங்கள்:
மணிமாறன், உலகசேவை மையம்
Share: 
© Copyright 2020 Tamilonline