Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
தமயந்தி
- அரவிந்த்|மார்ச் 2018|
Share:
கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், ஊடகவியலாளர், திரைப்படப் பாடலாசிரியர், இயக்குநர் எனப் பன்முகங்கள் கொண்டவர் தமயந்தி. இவர் திருநெல்வேலியில், பாரம்பரியக் கிறித்துவக் குடும்பத்தில் பிறந்தார். தந்தை, தாய் இருவருமே ஆசிரியர்கள். அதனால் இல்லத்தில் எப்போதும் வாசிப்பின் சூழல் மிகுந்திருந்தது. தந்தை தாமஸ் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் பரிசாக அளித்த புத்தகங்கள் இவருள் வாசிப்பார்வத்தை விதைத்தன. தனிமை நிறைந்த குழந்தைப் பருவத்தில் வாசிப்பு நண்பனானது. தொடர் வாசிப்பு எழுதத் தூண்டியது. ஐந்தாம் வகுப்பிலேயே கவிதைகள் எழுதத் துவங்கினார். ஏழாம் வகுப்பு படிக்கும்போது இவர் எழுதிய கவிதை சக மாணவர்களின் பாராட்டுதலைப் பெற்றது. பதினோராம் வகுப்பில் முதல் சிறுகதையை எழுதினார். இளவயதுச் சூழல் பாடல்களுடனும் இசையுடனும் கழிந்தது. குறிப்பாக இலங்கை வானொலியில் ஒலிபரப்பான பாடல்கள் இவரது தனிமைத் துயரைப் போக்கியதுடன் உற்சாகத்தையும் தருவதாக அமைந்தன. இசையும் எழுத்தும் இவருக்கு மிகப் பிடித்தமானதாக ஆயின.

பள்ளிப்படிப்பை முடித்ததும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு அமைந்தபோதும் அதனை மறுத்து, இலக்கிய ஆர்வத்தால் ஆங்கில இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்தார். கல்லூரியில் படிக்கும்போதே நண்பர்களுடன் இணைந்து கையெழுத்துப் பிரதி ஒன்றை நடத்திய அனுபவமும் இவருக்கு உண்டு. இவருடைய முதல் சிறுகதை ஆனந்தவிகடனில் பிரசுரமாகி 'ஜாக்பாட்' பரிசுபெற்றது. இரண்டாவது கதைக்கும் ஜாக்பாட் பரிசு கிடைத்தது. இரண்டையுமே தேர்ந்தெடுத்தவர் எழுத்தாளர் பிபரஞ்சன். தொடர்ந்து கல்கி, சாவி போன்ற இதழ்களில் சிறுகதைகள் வெளியாகி பரவலான வாசக கவனம் பெற்றன. சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'தமயந்தியின் சிறுகதைகள்' என்ற முதல் தொகுதி வெளியானது. வெளியிட்டு ஊக்குவித்தவர் பிரபஞ்சன்.

சிறுகதைகள் மட்டுமல்லாமல் கவிதைகளும் நிறைய எழுதியிருக்கிறார் தமயந்தி.

போஸ்ட் மேன்
இப்போதெல்லாம் இரவு கனவில்
பள்ளிப்பருவத்து போஸ்ட் மேன் வருகிறார்
அவர் உருவம் சிறியது
ராலே சைக்கிளை உந்தியே நகர்த்துவார்
கையில் இருக்கும் கடிதக் கத்தையை
கத்திமேல் நடப்பது போல் பிடித்தபடி
இப்போதும் அவர் பழைய தெருவில் அலையக் கூடும்
அல்லது மாறுதலாகி வேறொரு தெருவில்
பைக்கில் போகக் கூடும்
முதல் கதை பிரசுரத்தை
முதல் காதல் கடிதத்தை
அவர் தானே கொடுத்தார்?
வகுப்பு தேர்ச்சிக் கடிதத்தை,
முதல் மணியாடரை கொடுத்த அவர்
முதல் காதலனன்றி
கனவில் வருவதே
சாலச்சிறந்ததன்றோ?


Click Here Enlargeஎன்ற இவரது கவிதை குறிப்பிடத்தகுந்தது. இவரது தேர்ந்தெடுத்த கவிதைகள் 'என் பாதங்களில் படரும் கடல்' என்ற தலைப்பில் நூலாகியுள்ளது. திருநெல்வேலியின் புகழ்பெற்ற பண்பலை வானொலி ஒன்றில் சில ஆண்டுகள் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வந்த தமயந்தி, திரையுலகில் பணியாற்றும் ஆர்வத்துடன் சென்னைக்கு வந்தார். இவரை ஊக்குவித்தவர்களில் இயக்குநர் கே. பாலசந்தரின் மகனான பாலகைலாசம் முக்கியமானவர். பிரபஞ்சன், மாலன், கவிஞர் குட்டிரேவதி ஆகியோரும் இவரை ஊக்குவிக்கின்றனர். இவரது மனம் கவர்ந்த எழுத்தாளர்களுள் பிரபஞ்சனும் ஒருவர். பிரபஞ்சனின் கதைகள் இவருள் பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அதுபற்றி ஒரு நேர்காணலில், "பிரபஞ்சன், 'சந்தியா' என்றொரு தொடர்கதையை, தாய் பத்திரிகையில் எழுதினார். அந்தக் கதையில் வரும் சந்தியா என்கிற பாத்திரம்தான், நான் என்னவாக உருவாக வேண்டும் என்கிற புரிதலை எனக்குள் உருவாக்கியது" என்கிறார்.

இவரது 'அனல்மின் மனங்கள்' என்ற சிறுகதை 'கழுவேற்றம்' என்ற பெயரில் குறும்படமாகி பரவலான வரவேற்பைப் பெற்றது. அனல்மின் நிலையக் கழிவுகளால் மீனவர்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை அச்சிறுகதையில் சொல்கிறார் தமயந்தி.

குறும்படத்தைப் பார்க்க


அடக்குமுறைச் சூழல் சிலவற்றை மீறி எழுதத் துவங்கிய தமயந்தி, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார். எமிலி டிக்கன்சனின் கவிதைகள் இவருக்கு மிகவும் பிடிக்கும். இவர் ஆங்கில இலக்கியத்தைத் தேர்ந்தெடுத்துப் படிக்க எமிலியும் ஒரு காரணம். தமயந்தியின் எழுத்துக்கள் பாசாங்கற்றவை. வர்ணனை மயக்கங்கள் இல்லாமல் நேரடியாக வாசகனுடன் பேசுபவை. இவரது மொழி மிகவும் வீரியமானது. பெண்களின் உணர்வு ரீதியான சிந்தனைகளை எழுத்தில் வடிப்பதில் மிகத் தேர்ந்தவர். குடும்ப வன்முறைக்கும் சமூக வன்முறைக்கும் சிக்கிப் பலியாகும் பெண்களின் வலி நிறைந்த வாழ்க்கையை இவரது படைப்புகள் அழுத்தமாகப் பேசுகின்றன. சமூக அவலங்களைத் தனது படைப்பில் காட்சிப்படுத்தி அதன் தாக்கத்தை உணர வைப்பது இவரது பாணி என்று சொல்லலாம். ஆவணப்படங்கள் எடுப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
"என்னுடைய எழுத்தில் பெண்களின் உலகத்தில் நிகழும் வலிகளைப் பதிவு செய்திருக்கிறேன். ஏனெனில், என்னுடைய எழுத்தும் நானும் வேறல்ல. என்னுடைய, என் தோழிகளின் வாழ்வில் நடந்தவற்றைத்தான் எழுத்தில் பிரதிபலிக்கிறேன். என்னுடைய எழுத்தில் எந்தவொரு வரியும் பொய்மை கலந்ததல்ல" என்கிறார் தமயந்தி. நவீன வாழ்க்கையின் சிக்கல்களைப் பற்றிப் பேசும்போது, "நிர்ப்பந்தங்களைத் துரத்தித் துரத்தி வாழும் வாழ்க்கையில் முழுமை இருக்க முடியாது. நமக்கு இன்று வாழ்வியல் சிக்கல்கள் அதிகரித்திருக்கின்றன. பழைய சட்டங்கள் இன்றைய புதிய வாழ்க்கைக்குப் பொருந்திப் போகாததே பல சிக்கல்களுக்குக் காரணம்" என்கிறார் ஒரு நேர்காணலில்.

தமயந்தியின் எழுத்து பற்றி பிரபஞ்சன், "கணவன், மனைவி, காதலன், காதலி, தந்தை, மகள், நண்பர், நண்பி என்கிற உறவுகளின் பிணைப்பு, எவ்வாறு நாளடைவில் வன்மம் கொள்கிறது, வன்முறை ஒரு வாழ்க்கை நிகழ்வேபோல் எப்படி உருமாற்றம் அடைந்து பெண்களைச் சிதைக்கிறது என்கிற புலத்தைத் தமயந்தி அளவுக்குக் காத்திரமாகச் சொன்னவர்கள் தமிழில் மிகக் குறைவானர்களே. அவருக்குக் கூடி வந்திருக்கிற கலைத் திரட்சியும் வடிவ நேர்த்தியும் மொழி ஆளுமையும் தனித்தன்மை பொருந்தியவை" என்று மதிப்பிடுகிறார்.

'அக்கா குருவிகள்', 'முற்பகல் ராஜ்ஜியம்,', 'சாம்பல் கிண்ணம்', 'வாக்குமூலம்', 'ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்', 'கொன்றோம் அரசியை' போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். 'நிழலிரவு' இவர் எழுதிய நாவல். 'இந்த நதி நனைவதில்லை' என்பது கட்டுரைத் தொகுப்பு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை முன்வைத்து எழுதப்பட்ட 'கொன்றோம் அரசியை' சிறுகதை முக்கியமானது. இவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகளைத் தொகுத்து ஒரு நூலாக எழுத்தாளர் திலகவதி வெளியிட்டுள்ளார். சில்வியா ப்ளாத்தின் தேர்ந்தெடுத்த கவிதைகளைத் தொகுத்து தமிழில் மொழிபெயர்த்திருக்கும் தமயந்தி, தற்போது நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார். "இசையும் புத்தகங்களும் இல்லை என்றால் நானில்லை" என்று சொல்லும் தமயந்தி, "என்னுடைய மௌனத்தின் மொழிபெயர்ப்பே என் எழுத்துக்கள்" என்கிறார். சிறந்த பெண் படைப்புக்குரலுக்கான பாரதி விருதை தமிழ் ஹிந்து இதழ் சமீபத்தில் இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

'விழித்திரு' படத்தில் இயக்குநர் மீரா கதிரவனோடு இணைந்து வசனங்கள் எழுதியிருக்கிறார். இவருடைய முதல் பாடல் இடம்பெற்ற படமும் அதுவே. "கண்ணாடி மழையில் உன்னைக் காணும் நேரம்" என்னும் இவரது பாடல் ஸ்ரேயா கோஷலுக்காக எழுதப்பட்டது. அந்தப் பாடல் ஆல்பம் ஒன்றில் இடம்பெற்று பரவலான கவனத்தை ஏற்படுத்தியது. 'ஒருநாள் கூத்து', சமீபத்தில் வெளியாக இருக்கும் 'கரிச்சான் குருவி' படம் உள்பட இதுவரை 11 பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கும் தமயந்தி, தற்போது திரையுலகில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். விகடனில் இவர் எழுதிய 'தடயம்' என்ற சிறுகதையை விரிவாக்கி கதை, திரைக்கதை, வசனம், எழுதி தமயந்தியே இயக்கிவருகிறார். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து கவிஞர் குட்டி ரேவதி இயக்கியுள்ள படமும் விரைவில் வெளியாக உள்ளது.

எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் பெண்களின் அக உலகை அக்கறையுடன் எழுத்தில் பதிவு செய்துவரும் குரல் தமயந்தியினுடையது.

அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline