Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
முதல் கல்
- உத்தமசோழன்|ஆகஸ்டு 2016|
Share:
ஐப்பசிமாத அந்திப் பொழுது, வண்ண ஜாலங்கள் காட்டவேண்டிய அந்திச் சூரியன் மழைமேகங்களின் சிறையில். அதனால் நிழல் வெளிச்சம் மட்டுமே மிச்சம் பூமிக்கு. வளவனாற்றின் வடகரையில் நின்று வடக்கே பார்த்த மருதனுக்கு திக்கென்றது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேல் என்று விரிந்துகிடந்த வயல்வெளிகள். அடர்பச்சையில் தீவுபோல ஊர்க்குடியிருப்பு. மரங்களுக்கிடையில், வயல்வெளியெங்கும் நடவுமுடிந்து ஒருவாரம் பத்து நாளான பச்சை பிடிக்கத் தொடங்கியிருந்த இளம்பயிர், வெளிர்ப்பச்சையில் இப்பொழுதோ சற்றுப்பொறுத்தோ நீருக்குள் மூழ்கிவிடும் ஆபத்தில். நான்குநாள் அடைமழையில் எல்லா வாய்க்கால்களும் பொங்கிவழிந்து வரப்பு எது, வயல் எது என்று அடையாளம் தெரியாமல் 'கெத்... கெத்' என்று அலையடித்துக் கொண்டிருந்து, ஒட வழி தெரியாமல்.

போதும் பத்தாதற்கு வானொலி வேறு அதிகாலையிலேயே அபாய அறிவிப்பு ஒன்றை வழங்கிவிட்டது. 'வங்கக்கடலில் உருவான தாழ்வழுத்த காற்றுமண்டலம் ஒன்று நாகப்பட்டினத்திற்குத் தென்கிழக்கே ஐநூறு கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்காக நகரக்கூடும். இதன் விளைவாக அடுத்த நாற்பத்தியெட்டு மணி நேரத்திற்கும் நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பலத்த அல்லது மிகப்பலத்த மழை பெய்யக்கூடும்.' ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கீழத் தஞ்சை மாவட்டக்காரர்களுக்கு இது வாடிக்கையான செய்திதான். ஆனால்... கர்நாடகத்தின் ஒற்றுமையான பிடிவாதத்தால், காவிரியின் கடைமடைக்காரர்கள் குறுவையை மறந்துவிட்டு, 'சம்பாவிற்காவது தண்ணீர் வராமலா போய்விடும்' என்று நாற்றை நட்டு, அது முற்றுகின்றவரை மேட்டுர் நிலவரத்தை அன்றாடம் பார்த்துப் பார்த்து பெருமூச்சு விட்டபோது, மனம் பொறுக்காத மேகங்கள் ஈட்டிய கருணைப் பொழிவினால், முற்றிய நாற்றைப் பிடுங்கி, அதன் பருவம் தப்பியதற்கு தாங்கும் வகையில் அதிக உரம்போட்டு நட்டு ஒருவாரமே ஆன குழந்தைப் பயிர்கள்தான் இப்போது வயல் முழுவதும்.

எந்த மழையின் உதவியில் நட்டார்களோ அதே மழையின் 'அபரிமித அன்பினால்' இப்போது பயிர் தெப்பலாடுகிறது. ஒருநாள் மூழ்கினால் போதும். முழுவதும் அழுகிவிடும். மறுபடி புதிதாக நாற்றுவிட்டு. புதிய சாகுபடிதான். அதற்கு யாரால் முடியும்...? இதற்கே அங்கே வாங்கி, இங்கே பிடுங்கி என்று ஏகப்பட்ட அல்லாடல்கள். மறுபடியும் என்றால் தரிசுதான். சோற்றுக்கு லாட்டரிதான். வேறு என்ன செய்ய. என்ன செய்யலாம் என்று மருதனுக்குள் ஆயிரம் யோசனைகள். கரைவழியே நடந்தான். உபரித் தண்ணீர் வடியவேண்டிய வடிகால் மதகை எட்டிப் பார்த்தான். மதகின் கீழ்க்குமிழி மட்டுமல்ல ஊரைச்சுற்றி வளைந்து ஓடிவரும் மூன்றுமைல் நீள வடிவாய்க்கால் முழுவதுமே சுவர்வைத்துத் தடுத்ததைப்போல் காடாய் மண்டிக் கிடந்த நெய்வேலி காட்டாமணக்குச் செடிகளின் அசுரத்தனமான ஆக்கிரமிப்பு. பயிர்கள் மூழ்காமல் மொத்தக் கிராமமும் தப்பித்துக்கொள்ள வழி கண்டுபிடித்துவிட்ட சந்தோஷம் மருதனுக்கு. 'இந்தப் பேய்ச் செடிகளை பிடுங்கி எறிந்தால் போதும். ஒரே நாளில் உபரி நீர் முழுதும் வடிந்துவிடும்.' 'சரி இவ்வளவு நீளம் மண்டிக்கிடக்கும் செடிகளை அரிந்து எறிவது லேசான காரியமா என்ன...!' இந்த மலைப்பிற்கும் ஒரு சில நிமிட யோசனைக்குப் பிறகு வழி தெரிந்தது. உற்சாகமாக நடக்கத் தொடங்கினான்.

நடந்தவனின் பார்வை; வடிவாய்க்கால் வளைவில் வலை போட்டபடி நின்று கொண்டிருந்த மாரிமுத்துவின் மீது பதிந்தது, நின்றான். "இந்தச் சனியன் பிடிச்ச காட்டாமணக்குச் செடியாலதான்டா தண்ணி வடியமாட்டேங்குது..."

மாரி இவனைத் திரும்பிப் பார்த்தான்.

"யாரு இல்லேன்னா..."

"அதிலும் நம்மூரு வடிமதகு இருக்கே... அது வெள்ளைக்காரன் காலத்துலே நம்மூருக்குன்னே ரொம்ப டெக்னிக்கா கட்டுனது. கடலே திரண்டுவந்து உள்ளே நுழைஞ்சாலும் அப்படியே முழுங்கிட்டு 'கம்'முன்னு இருக்கும், தெரியுமில்ல...!"

"யாரு இல்லேன்னா..."

"ஊர்க்காரங்க எல்லோரும் ஒண்ணு சேந்தோம்னு வச்சுக்க. ஆளுக்கொரு செடின்னாகூட ஒரே நாள்லே வாய்க்காலும் சுத்தமாயிடும். தண்ணியும் கடகடன்னு வடிஞ்சிடும்." இப்படிச் சொன்ன மருதனை ஏற இறங்கப் பார்த்தான். பார்த்ததோடு சரி. பிறகு வலையை வாய்க்காலுக்குள் இறக்குவதும் தடம்பார்த்து மேலே தூக்கி, துள்ளும்கெண்டை மீன்களை அள்ளி பக்கத்திலிருந்து மீன் கூடைக்குள் போடுவதுமாக காரியத்திலேயே கண்ணாயிருந்தான் மாரி.

பொறுமையிழந்து போனான் மருதன். "ஏண்டா மாரி. நான் சொன்னது உங்கிட்டதான். நீ சாஞ்சுகிட்டிருந்த பனைமரத்துக்கிட்டேயில்லை."

"தெரியுது... ஏதாவது நடக்கிற காரியமா இருந்தா பதில் சொல்லலாம். நீயோ போகாத ஊருக்கு வழி கேக்கிற... நானென்ன சொல்ல முடியும்."

"எதுடா நடக்காத காரியம்?"

"சரி சரி. எதுக்கு இப்படி கோபப்படறே. முதல்லே ஊரை ஒண்ணுகூட்டி காரியத்தை ஆரம்பி. மத்ததை நீயே தெரிஞ்சிக்குவே."

"ச்சே. நீயெல்லாம் ஒரு மனுஷன். முதமுத உங்கிட்ட வந்து கேட்டேன் பாரு... என்னைச் சொல்லணும்." கோபம் மாறாமல் கீழே இறங்கினான் மருதன்.

கணுக்கால் அளவு தண்ணீர் நிற்கும் நடைபாதை வரப்பு. இருபுறமும் முழுகவிருக்கும் பயிர்கள். ஒருவார மழையால் பருவப்பெண்ணைப் போல் இடையிடையே பசுமை பூரித்துப்போய் நிற்கும் கருவை மரங்கள். மடித்துக் கட்டியிருந்த பழைய கைலி, பனியன் மீதெல்லாம் சேறடிக்க, சளக் புளக்கென்று நடந்து கொண்டிருந்தான். வழியில் வீரன்கோவில் குளம். கரைநெடுகத் தண்ணீர்க் குளியலில் மினுக்கியபடி நிற்கும் தென்னைகள். இரவு வந்துவிட்டதாய் நினைத்து அவசரமாய்ப் பூத்துச் சிரித்தபடி குளம்முழுக்கப் பூத்திருக்கும் செவ்வல்லிகள். இவை எதுவும் மருதனின் மனதைத் தொடவில்லை.

குளக்கரை மேட்டில் புல்லறுத்துக் கொண்டிருந்த முல்லையம்மாக் கிழவிதான் கண்ணில்பட்டாள். "ஏ ஆத்தா. இந்த அடிச்சு ஊத்துற மழையிலேகூட புல்லறுக்க வந்துட்டியாக்கும். நீ ஆடு, மாடு வளத்தாதான் உன் வயத்துக்கு சோறு கிடைக்குமாக்கும்..."

கிழவி மருதனை பார்த்து நொடித்தாள். "போடா... போக்கத்தவனே! சோத்துக்கு வக்கில்லாம இல்லேடா. கையை காலை மடக்கிட்டு வீட்டுலே முடங்கிக்கிடந்தா சோறு எப்படிடா வயத்துக்குள்ளே இறங்கும்?"

"அடேங்கப்பா. கோபத்தைப் பாரேன். சரி சரி. உங்க வீட்டுக்காரரு எங்கேயாம்?"

"எதுக்கு. அதோ அந்த பூவரச மரத்தை அண்ணாந்து பாரு. ஆட்டுக்குத் தழை ஒடைச்சுக்கிட்டிருக்காரு..."

கிழவிக்கே எழுபது வயதிருக்கும். அதைவிட ஐந்து வயதாவது கூடுதலாக இருக்கும் கிழவனுக்கு. அவரோ நடுக்கும் சாரலில் பூவரச மரத்தின் உச்சாணிக் கொம்பில். மருதனின் மனத்திற்குள் ஆச்சரியம் பூத்தது. கிழவன் காளியப்பன்தான் ஊரிலேயே பெரிய மிராசு. ஏராள நிலம் நீச்சு, வீடு வாசல், ஆள்மாகாணம் என்று அமோக வாழ்க்கை. இதுவே இன்னொருவனாயிருந்தால் இந்நேரம் ஈசிச்சேரில் சாய்ந்தபடி வெற்றிலை குதப்பிக்கொண்டு ஊர் அக்கப்போர் பேசிக் கொண்டிருப்பான். கிழவனால் அப்படி முடியாது.

"பெரியப்பா...!"

குரல்கேட்டு, கோவணக்கட்டும், தலையில் முண்டாசுமாய் இருந்த கிழவர் முகத்தை மறைத்த பூவரசக் கிளைகளை ஒதுக்கிக் குனிந்து பார்த்தார்.

"யாரது..."

"நான்தான். மருதன்"

"என்னடா...""

"வடக்கேயிருக்கும் எட்டூருத் தண்ணியும் நம்மூரு வழியாத்தானே வடிஞ்சாகணும். மேற்கொண்டு மழை பேயணும்கூட அவசியமில்லே... ராத்திரிக்குள்ளெ எல்லாத் தண்ணியும் இங்கே வந்திறங்கிடுச்சின்னா. அவ்வளவுதான். இப்பவே எல்லாப் பயிரும் தோகையாடுது. எல்லாமே அப்புறம் தண்ணிக்குள்ளதான்."
"வாஸ்தவம்தான். அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றே. என்ன பாவம் செஞ்சோமோ இந்த ஊர்ல வந்து பொறந்து தொலைச்சிட்டோம். அனுபவிக்க வேண்டியதுதான்."

"பாவ புண்ணியமெல்லாம் அப்புறமா பேசிக்கலாம் பெரியப்பா. முதல் காரியமா இன்னைக்கு ராத்திரி நம்ம ஊர்க்காரர்களை ஒண்ணுகூட்டி ஒரு வார்த்தை சொன்னிங்கன்னா போதும்."

கிழவரின் புருவம் ஏறி இறங்கியது. "என்னன்னு...?"

"விடிஞ்சதும் வீட்டுக்கொரு ஆள் அரிவாள் மம்பட்டியோட வடிவாய்க்காக்கரைக்கு வந்துடனும். ஒரு செடி பூண்டு இல்லாம அரிச்சு எறிஞ்சுட்டா பொட்டுத் தண்ணியில்லாம வடிஞ்சிடும்னு சொல்லணும்..."

கிழவர் மெதுவாய் மரத்திலிருந்து கீழே இறங்கினார்.

"ஏண்டா மருதா... உனக்கு விவரம் தெரிஞ்சு நம்ப ஊரு பயலுவ எந்த நல்ல காரியத்துக்காகவாவது ஒண்ணுகூடியிருக்கானுவளா... மூலைக்கு ஒருத்தனா முறுக்கிக்கிட்டுல்லே போவானுங்க..."

"சொல்ற விதத்திலே சொன்னா எல்லாருமே கேப்பாங்க... அதிலும் உங்க சொல்லுக்கு மதிப்பு ஜாஸ்தி. யோசிக்காதீங்க பெரியப்பா... ஒருநாள் தாமதிச்சாலும் ஊரே பாழாப்போயிடும்."

மருதனின் கவலையும், பதைப்பும் கிழவரை என்னவோ செய்தது, இருந்தாலும் கண்மூடி யோசித்தார். 'இவன் சொல்றபடி ஊரானைக் கூப்பிட்டு சொன்னாக் கேப்பானுங்கதான். ஆனா நாம முன்னுக்கு நின்னு செய்றப்ப அது இதுன்னு ஆயிரம் ரெண்டாயிரம்னு செலவு வைப்பானுங்க... அப்படிச் செய்யணும்னு என்ன முடை நமக்கு. எல்லோருக்கும் ஆவறது நமக்கும் ஆயிட்டு போவட்டுமே. இவன் வெறும்பயல். எது வேணாலும் சொல்வான். . நாம ஏமாந்துவிடக்கூடாது...' மனதின் எண்ண ஓட்டத்தை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் தழைந்த குரலில் நெற்றியைத் தேய்த்தபடியே சொன்னார். "ஏண்டா மருதா... ஊர்லே எத்தனா பயலுவ இருக்கானுவ... ஆனா உனக்கு வந்த அக்கறை எவனுக்காவது வந்துச்சா... நீ சொல்றபடி செஞ்சாதான் பயிர் பொழைக்கும். சந்தேகமேயில்லை. ஆனா எனக்கொரு சங்கடம். நாளைக் காலையிலே பலபலன்னு விடியறப்ப வானமா தேவியிலே கட்டிக் கொடுத்திருக்கிற எம்மக வீட்லே இருந்தாகணும். குடும்பத்தோட வில்வண்டியிலே போறோம். அங்கே பேத்திக்கு தலை சுத்துறாங்க திரும்பி வர மூணு நாளாகும். அதாம் பாக்குறேன்..."

கிழவரின் சாதுரியம் மருதனுக்குப் புரிந்துவிட்டது. மனது கசந்து வந்தது. "பரவாயில்லே பெரியப்பா... நீங்க போயிட்டுவாங்க." திரும்பிப் பார்க்காமல் நடக்கத் தொடங்கினான். ஊர் எல்லையை மிதித்தபோது எதிரில் வந்துகொண்டிருந்த பிரேம்குமாரைப் பார்த்ததும் சரேலென்று உற்சாகம் கொப்பளித்தது மருதனுக்கு. பிரேம்குமார் கிராமத்தின் முதல் பட்டதாரி. நாகூர்பிச்சை என்று அப்பா, அம்மா வைத்த பெயரை 'பிரேம்குமார்' என்று மாற்றிவைத்துக் கொண்டு மன்றம் அது இதுவென்று என்னவென்னவோ சதாசர்வ காலமும் செய்து கொண்டிருப்பவன்.

"நாம நினைக்கிற காரியத்துக்கு இவன்தான் பொருத்தமானவன்." முகம் மலர பிரேம்குமாரை வழி மறைத்தான்.

"என்னண்ணே..." சிரித்தபடி பிரேம்குமார்.

கடகடவென்று எல்லாவற்றையும் சொல்லிமுடித்தான் மருதன். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி பிரேமிடமிருந்து சட்டென்று எந்த பதிலும் வரவில்லை. சிறிதுநேர யோசிப்புக்குப் பிறகு மருதனை ஏறிட்டான். "மருதண்ணே ... நீங்க சொல்ற வேலையை செய்றதுக்குன்னே பி.டபிள்யூ.டி.ன்னு கவர்மெண்ட்லே ஒரு டிபார்ட்மெண்ட் இருக்கு. நாளைக் காலையிலே அவங்களைப் பார்த்து ஒரு பெட்டிஷன் கொடுத்திங்கன்னா செஞ்சுட்டுப் போறாங்க."

மருதனின் முகம் சிறுத்துப் போய்விட்டது.

"நானேகூட நாளைக்கு என்ஜினியரைப் பாக்கலாம். ஆனா எனக்கு ஒரு ரெண்டு மூணு நாளைக்கு மூச்சு விடமுடியாத வேலை. எங்க தலைவருக்கு பிறந்தநாளு. அதுக்கு அன்னதானம், ரத்ததானம்னு நிறைய வேலை. உங்களுக்கே தெரியும் அவரோட ரசிகர் மன்றத்துக்கு நான்தான் தலைவருன்னு. பிறந்தநாள் விழா முடிஞ்சதும் நீங்க சொல்றமாதிரி ஏதாவது செய்வோம். வரட்டுமாண்ணே. எனக்காக எல்லாரும் காத்துக்கிட்டிருப்பாங்க."

மருதனின் பதிலை எதிர்பார்க்காமல் அவன் போய்க் கொண்டேயிருந்தான். இதற்குப் பிறகும் மருதனால் சும்மாயிருக்க முடியவில்லை. ஒருத்தர் பாக்கியில்லாமல் ஊர்க்காரர்களிடம் சொல்லிச்சொல்லி புலம்பினான். அத்தனை பேரும் அவன் சொன்னதை ஒப்புக் கொண்டார்கள். ஆனால் அதென்ன அதிசயமோ தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருந்தது. அதுவும் தள்ளிப்போட முடியாத அவசர வேலை. மனமும் உடம்பும் சோர்ந்து போய் வீடு திரும்பிய மருதனை அல்லி பதட்டமாய் எதிர்கொண்டாள்.

"என்னது. ஏன் என்னமோ மாதிரி இருக்கே மாமா. உடம்பு கிடம்பு சரியில்லையா..."

அவனது கழுத்து, முகமெல்லாம் தொட்டுப்பார்த்தாள். "ம்ஹூம்... உடம்புக்கு ஒன்றுமில்லே... மனசிலேதான் ஏதோ."

நொடிப்பொழுதில் புரிந்துகொண்ட அல்லி உள்ளே ஓடினாள். அப்போதுதான் வடித்த சுடுகஞ்சியில் இரண்டுகல் உப்பைப் போட்டுக் கலக்கி எடுத்து வந்தாள்.

"இதைக்குடி. . சூடா இருக்கு."

குடித்தான். இதமாக இருந்தது. பிறகு அவள் கேட்காமலேயே எல்லாவற்றையும் சொல்லிவிட்டு கன்னத்தில் கைவைத்தபடி உட்கார்ந்துவிட்டான்.

அவனைப் பார்த்து அவளுக்கு சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை. "ஏன் மாமா. . தெரியாமத்தான் கேக்குறேன். . நீ நட்டுப் போட்டுருக்கிற எந்த நிலம் பாழாப் போயிடப் போவுதுன்னு இப்படிக் கன்னத்திலே கை வச்சுக்கிட்டு உக்காந்துகிட்டே... இந்த ஊர்லே இருக்கிற மொத்தம் அறுபது வேலி நிலத்திலே நமக்குன்னு ஒரு சக்கரைக்குழி நிலம்கூட இல்லே. எந்த நிலம் எப்படிப் போனா நமக்கென்ன... நமக்குன்னு சொந்தம் கொண்டாட நம்ம கையும் காலும்தான். இந்த ஊரு இல்லேன்னா. ..இன்னொரு ஊரு. வேலையைப் பாப்பியா..." ஆவேசமாய்க் கொட்டி முழக்கிவிட்டு உள்ளே போனாள்.

விக்கித்துப்போய் உட்கார்ந்திருந்த மருதனின் முன்னே சோற்றுத்தட்டையும், தண்ணீரையும் வைத்தாள்.

தட்டிலிருந்து கிளம்பி சுடுசோற்றின் வாசம், காரமான மொச்சைக் கொட்டை குழம்பின் நெடி, அவித்த முட்டையின் மணம் எதுவும் அவன் உணரவில்லை. யந்திரமாய்ச் சாப்பிட்டான். ஊமையாய்ப் படுத்துவிட்டான். இரவு முழுக்க அவனால் தூங்க முடியவில்லை. நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நெல்பயிர் அத்தனையும் 'என்னைக் காப்பாத்து... என்னைக் காப்பாத்து' என்று அவனைப் பார்த்துக் கெஞ்சிக்கொண்டிருந்தன.

பொழுதுபுலரும் தருணம். புருஷனைத் தொடக் கைநீட்டியவள் அவன் இல்லாமல் திடுக்கிட்டு எழுந்தாள். "எங்கே போனாரு...?" யோசித்தவளுக்கு, ஒருவேளை அங்கே போயிருப்பாரோ: என்று பொறிதட்டியது. முடியை அள்ளிச் சொருகிக் கொண்டு வடிவாய்க்காலை நோக்கி வேகுவேகென்று நடக்கத் தொடங்கினாள். அல்லியின் கணக்குத் தப்பவில்லை. தளும்புகின்ற வடிவாய்க்காலில் ஜில்லென்ற இடுப்பளவு தண்ணிரில் தன்னந்தனியே நின்றபடி மண்டிக் கிடந்த காட்டாமணக்குச் செடிகளை 'சரக் சரக்'கென்று அறுத்து மேலே எறிந்து கொண்டிருந்தான் மருதன். அப்படியே திகைத்துப்போய் நின்றுவிட்டாள் அல்லி.

அவளையறியாமலேயே புடவையை வரிந்து கட்டிக்கொண்டு வாய்க்காலுக்குள் இறங்கிவிட்டாள்.

"நீ சொல்றது நிஜம்தான் மாமா. ஊரு நல்லா இருந்தாத்தான் நாமளும் நல்லாயிருக்கலாம். அதுக்காக இவ்ளோ நீளமான வாய்க்காலை நீயும், நானும் மட்டுமே சுத்தம் பண்ணிட முடியுமா..." ஆற்றாமையுடன் கேட்டவளை திரும்பிப் பார்க்காமலே பதில் தந்தான். "முதல்லே நம்மாலே முடிஞ்சதை நாம செய்வோம்...!"

அதற்குமேல் என்ன சொல்வது என்று தெரியாமல் அவன் அறுத்துப்போட்ட செடிகளை அள்ளிக் கரையில் கொண்டுபோய் போடத் தொடங்கினாள்.

அவர்களைப் பார்த்தபடியே சற்றுத்தள்ளி எப்போதும் போல் வலை போட்டுக் கொண்டிருந்த மாரிமுத்துவுக்கு என்ன தோன்றியதோ என்னவோ வலையை மடக்கிக் கரையில போட்டான். "நாசமாப் போற செடிங்க, தரையிலேயும் மண்டுது, தண்ணியிலேயும் மண்டுது. ... எங்கிருந்து வந்துச்சோ எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்க" என்று முணுமுணுத்தபடி வேட்டியை அவிழ்த்து முண்டாக கட்டியபடி வாய்க்காலுக்குள் இறங்கிவிட்டான், மருதனுக்கு ஜோடியாக.

நேற்று மருதனிடம் சொல்லிவிட்டதாலோ என்னவோ வடிவாய்க்கால் ரோட்டில் வில்வண்டியின் பின்புறம் உட்கார்ந்தபடி மகள் வீட்டிற்குப் போய்க்கொண்டிருந்த கிழவர் காளியப்பனின் பார்வை யதேச்சையாக வாய்க்காலுக்குள் சென்றபோது திடுக்கிட்டுப் போனார். மருதன்... அல்லி... மாரி... மூவரும் மும்முரமாய்ச் செடிகளை அறுத்தபடியிருந்தனர்.

அனிச்சையாய் வண்டியிலிருந்து குதித்துவிட்டார் பெரியவர். நொடிநேர யோசனைக்குப் பிறகு "வண்டியை வீட்டுக்குத் திருப்பிப் போடா... எனக்கு இங்கே கொஞ்சம் வேலையிருக்கு..." என்றபடி வேட்டி சட்டையை கரையில் அவிழ்த்துப் போட்டுவிட்டு துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு அவரும் வாய்க்காலுக்குள் இறங்கிவிட்டார்.

இந்தச் செய்தி வண்டிக்காரன் மூலம் ஊருக்குள் பரவியது. டீக்கடை, மாரியம்மன் கோவிலடி என்று வெட்டிக்கதை பேசுபவர்கள் காதில் விழுந்தன. உறுத்தல் தாங்காமல் ஊர்க்காரர்கள் ஒவ்வொருத்தராய்த் தயங்கித் தயங்கி முன்னும், பின்னுமாய் வடிவாய்க்கால் நோக்கி நடக்கத் தொடங்கினர்.

உத்தமசோழன்
Share: 
© Copyright 2020 Tamilonline