Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அஞ்சலி | சமயம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
நேர்காணல்
கல் ராமன்
K.S. ராமமூர்த்தி
- மதுரபாரதி|ஆகஸ்டு 2015||(1 Comment)
Share:
அந்த எளிய கட்டடத்தினுள்ளே தேனீக்கள் போலச் சிறுவர் சிறுமியர். நகர்ப்புறங்களில் காண்பதுபோன்ற செழுமை இவர்களிடம் இல்லை என்பதுதான் நமக்கு முதலில் தோன்றும் எண்ணம். பெரும்பாலோருக்கு அரசு கொடுக்கும் பள்ளிச் சீருடைதான் உடை, மாற்றுடை கிடையாது. அந்தக் கட்டடத்தின் வெளியே வந்து பார்த்தால் பின்னால் படுத்திருக்கிறது ஏலகிரி. அதன் அடிவாரக் காடுகளின் நடுவே, கிராமம் என்றுகூடச் சொல்லமுடியாத சிற்றூரான ரெட்டியூரில் இருக்கும் அந்தக் கட்டடத்தின் முன்னே 'அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் SODEWS நிறுவனத்தினால் நடத்தப்படும் உண்டு உறைவிடப்பள்ளி' என்றொரு பெயர்ப்பலகை.

Society for Development of Economically Weaker Sections என்பதே மேலே கூறிய SODEWS. அடிப்படை வசதிகளே இல்லாத இந்தச் சிற்றூரில் இதை நிறுவி நடத்துவதன்மூலம், வறுமையின் அடித்தளத்தில் இருக்கும் குடும்பங்களுக்குக் கல்வி, சுகாதாரம், கைத்தொழில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று பல்முனை அறிவு, வசதி மற்றும் வாய்ப்புகளை ஏற்படுத்த உழைக்கிறார் திரு. K.S. ராமமூர்த்தி. இங்கே எப்படி வந்து இதைத் தொடங்கினார் என்று சற்றே வியப்போடு நாம் கேட்க நினைக்கும்போதே அவர் பேசத்தொடங்குகிறார்.

"அப்பா காந்தியவாதி; தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி, சங்கீதம் எனப் பலவகைப் புலமை கொண்டவர்; மகாத்மா காந்தியோடு நெருங்கிய தொடர்பிலிருந்தவர். நான் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறேன். வீட்டில் சர்க்காவில் நூல் நூற்றதுண்டு. ஆனால் மிகவும் வறுமை. அதனால் இண்டர்மீடியட் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டுச் சென்னை மண்ணடியில் ஒரு வேலைக்குப் போனேன். அது 1952ம் ஆண்டு. வேலை பார்த்தால்தான் சகோதர சகோதரிகளுக்கு ஒருவேளைச் சோறு என்கிற நிலைமை. ஆனாலும் எனக்குள் ஒரு நெருப்பு, வாய்ப்பையும் அறிவையும் தேடிக் கொழுந்து விட்டெரிந்தது."



"மூன்று வருடம் கழித்து டெல்லிக்குப் போனேன். அவர் அமெரிக்கத் தூதரகத்தின் ஒப்பந்தக்காரர்களில் ஒருவர். அவரிடம் வேலை பார்த்தபடியே M.A. எகனாமிக்ஸ் டெல்லி பல்கலையின் மாலைக்கல்லூரியில் படித்தேன். மேலே, கார்ப்பரேஷன் ஆஃப் செகரடரீஸ் (இன்றைய கம்பெனி செகரடரீஸ் போல) முடித்தேன். அமெரிக்கத் தூதரகத்திலேயே உயரதிகாரியாகப் பதவி கிடைத்தது. அவர்களே என்னை M.B.A. படிக்க அனுப்பினர்." தமிழிலும் ஆங்கிலத்திலும் வெள்ளமாகப் பிரவகிக்கின்றன வார்த்தைகள். அவர் பேசும்போது அதன் தெளிவில் நாம் அவருக்கு 82 வயது என்பதை மறந்துவிடுகிறோம். பிரமித்துப்போய்க் கேட்கிறோம். அவர் தொடர்கிறார். "அந்தப் பதவியில் எனக்கு இந்தியா முழுவதும் பயணித்து, அப்போது அமெரிக்கா இங்கே செய்துவந்த விவசாயம், போக்குவரத்து, கல்வி என்று பலதுறை வளர்ச்சிப் பணிகளிலும் பங்கேற்க முடிந்தது, கான்பூரில் IIT தொடங்கியது உட்பட."

1976ம் ஆண்டு ஜாம்பியா அரசின் நிதியமைச்சகத்தில் ஒரு நிதித்திட்ட அலுவலர் வேலை கிடைக்கவே அங்கு போனார் ராமமூர்த்தி. அங்கிருந்த 5 ஆண்டுகளில் அவர்களின் அஞ்சல் மற்றும் தந்தித் துறையின் முதுநிலைத் தணிக்கையாளராக உயர்வடைந்திருந்த நிலையில் போட்ஸ்வானா அரசு இவரை டெபுடி டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஃபினான்ஸ் அண்ட் அக்கவுண்ட்ஸ் ஆகத் தெரிவுசெய்தது. "எனக்கு ஒரே ஆச்சரியம். அப்போதுதான் அது ஆங்கிலப் ப்ரொடக்டரேட் நிலையிலிருந்து விடுபட்டிருந்தது. இன்னும் வெள்ளையர்கள்தாம் உயர்பதவிகளில் இருந்தனர். ஆனாலும் பிற்பட்டோருக்கு உதவும் என் குணம் அவர்களுக்குப் புரிந்ததால் தெரிவுசெய்தனர்" என்கிறார்.

நல்ல கிரிக்கெட் வீரரும், பாடகருமான ராமமூர்த்தியை எல்லோருக்கும் பிடித்துப்போனதில் ஆச்சரியமில்லை. இவருடைய எல்லா முயற்சிகளிலும் தோள்கொடுக்கும் மனைவி மாலதி பரதநாட்டியக் கலைஞர். "இந்தியாவிலிருந்து யாராவது வந்தால் அவர்களை ஜாம்பியன் தொலைக்காட்சியில் நேர்காண்பதற்கு என்னைத்தான் அழைப்பார்கள். ஜாம்பிய மந்திரிசபைக்கு மிகவும் நெருக்கமானவன் ஆகிவிட்டேன். தேசியத் திட்டக் கமிஷன், பொதுக் கணக்குக் கமிட்டி, பொதுத் தொழில்முனைவுக் கமிட்டி என்று பலவற்றில் உறுப்பினராக இருந்தேன்" என்று சொல்லி நிறுத்துகிறார். ஏதோ மிகவும் சீரியஸான விஷயம் சொல்லப்போவதை முகம் காட்டுகிறது. நாம் கூர்ந்து கவனிக்கிறோம்.



"அப்போது ஆப்பிரிக்காவில் இனஒதுக்கல் (apartheid) கொள்கைக்கு எதிராக ஆப்பிரிக்க நேஷனல் காங்கிரஸின் போராட்டம் மிகத் தீவிரமாக இருந்தது. நெல்சன் மண்டேலாவைத் தவிர மற்றவர்கள் வெளியேறி ஜிம்பாப்வே, ஜாம்பியா, போட்ஸ்வானா போன்ற நாடுகளில் இருந்தனர். ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறவன் என்கிற முறையில் நான் அவர்களுக்கு நெருக்கமானேன். எவ்வளவென்றால் ஒருநாள் என்னை கேபினட் செக்ரெடரி கூப்பிட்டு, 'ராமமூர்த்தி, அரசுப் பணியாளன் என்ற முறையில் நீ அரசியலில் ஈடுபடக்கூடாது. ஆனால் எமது ஆப்பிரிக்கக் கறுப்பினச் சகோதரருக்காக நீ மிகவுயர்ந்த தியாகத்தைச் செய்கிறாய் என்பது தெரியும். நாங்கள் கண்களை மூடிக்கொள்கிறோம். நீ கவனமாக இருந்துகொள்' என்றார். அப்போது எனக்குக் கொலைமிரட்டல் இருந்தது." வெகு சாதாரணமாக இதைச் சொல்கிறார் பெரியவர்.

ஒருமுறை கள்ளத்தனமாகக் தென்னாப்பிரிக்கா போய் அங்கிருந்த கொரில்லாக்களுக்கு இந்தியாவில் தொடர்பு ஏற்பட உதவியதையும் நினைவுகூர்கிறார். நெல்சன் மண்டேலாவின் மகளான ஸிண்ட்ஸி (Zindzi) மண்டேலாவை பிரிட்டோரியாவில் 'நேரு அமைதிப் பரிசு' தொடர்பாகப் பார்த்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் இனஒதுக்கல் கொள்கை ஒழிக்கப்பட்டவுடன் ஜோஹன்னஸ்பர்க் சென்று நெல்சன் மண்டேலாவை இவர் சந்தித்ததுண்டு.

இப்படி இருக்கையில் போட்ஸ்வானா அரசு இவரை சுவிட்ஸர்லாந்திலுள்ள 'யுனிவர்சல் போஸ்டல் யூனியன்' அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் சார்பாக அனுப்பியது. நியூ யார்க்கில் UN காங்கிரஸ், UNDPயின் ஆப்பிரிக்க நாடுகளுக்கான ஆலோசகர் என்று பதவிகள் வகித்தபின் 1995ல் இந்தியாவுக்குத் திரும்பினார். "எனக்குக் குடியுரிமை கொடுத்து, நல்ல பதவியும் தர தென்னாப்பிரிக்கா தயாராக இருந்தது. ஆனால் நான் எப்போதுமே இந்தியாவுக்குத் திரும்பிவந்து சமுதாயப்பணி செய்வதில் ஆர்வமாக இருந்தேன்" என்கிறார் ராமமூர்த்தி. "1967க்கும் 1995க்கும் நடுவில் உலகை இரண்டுமுறை சுற்றிவந்திருக்கிறேன்" என்று கூறியதும், "இவ்வளவு செய்த நீங்கள் ஏன் வெளியுலகத்தில் அறியப்படாமல் இருக்கிறீர்கள்?" என்று நம்மால் கேட்காமல் இருக்கமுடியவில்லை.

"நான் முக்கியமல்ல. நான் செய்வதுதான் முக்கியம் என்று எண்ணியதுதான் காரணம். ஆனால், இவற்றையெல்லாம் விவரமாகச் சொன்னால் ஒருவேளை சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக இருந்திருக்குமோ என்று இப்போது தோன்றுகிறது" என்று ஒப்புக்கொள்கிறார் அவர்.

ஊட்டியருகே குன்னூரில் ஒரு பெரிய பங்களா வாங்கிக்கொண்டு ஓய்வுக்காலத்தைக் கழிக்க எண்ணியவருக்கு அங்கே இருப்புக் கொள்ளவில்லை. "அந்தப் போலி வாழ்க்கை எனக்குச் சரிப்படவில்லை; கிளப், சீட்டாட்டம் இவையெல்லாம் எனக்கானவையல்ல என்று உணர்ந்தேன். அப்போதுதான் ஒருமுறை ஏலகிரிக்கு ட்ரெக்கிங் வந்தபோது, நாகரீகத்தின் காற்றே வந்து தொடாத இந்தக் கிராம மக்களைப் பார்த்தேன். என் வேலை இங்குதான் என்று தீர்மானித்தேன். குன்னூர் பங்களாவை விற்றுவிட்டு இங்கே வந்து சிறிது நிலம் வாங்கினேன். ஒரு வீடு கட்டிக்கொண்டேன்."



1998ல் அவர் வந்தபோது ஏலகிரி மலையடிவார கிராமங்களில் 2 தொடக்கப்பள்ளிகள், 2 சுமாரான கல்விதரும் தனியார் பள்ளிகள் மட்டுமே இருந்திருக்கின்றன. அரசு உயர்நிலைப்பள்ளி கிடையாது. சிறிது நிலம் இருந்தவர்களும் அதை ரியல் எஸ்டேட் கம்பெனிகளுக்கு விற்கத் தொடங்கியிருந்தனர். பாரம்பரிய விவசாயம் அழிகிற நிலை. ராமமூர்த்தி ஒரு சிறிய கணினி மையம் தொடங்கி, 10 குழந்தைகளுக்குப் பாடமும் கற்பிக்கத் தொடங்கினார். "அது இப்படி வளரும் என்று நான் அப்போது நினைக்கவில்லை".

2001ல் குஜராத்தில் பெரிய பூகம்பம் வந்தபோது, குன்னூரிலிருந்தவர்களோடு தொடர்புகொண்டு 7 டிரக்குகள் நிறைய உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் எடுத்துக்கொண்டு அஹமதாபாத் சென்றிருக்கிறார். அங்கே IIM மாணவர்கள் 60 பேரோடு பாதிக்கப்பட்ட 50 கிராமங்களில் பணி செய்திருக்கிறார். "அந்தப் பேரிடர் அழிவிலும் ஜாதி ஏற்றத்தாழ்வின் காரணமாக ஒருவர் மற்றொருவரைச் சமையலறைக்குள் விடாமலிருப்பதைப் பார்த்தேன். என்னால் அதை ஏற்கமுடியவில்லை. அப்போதுதான் நான் சுவாமி முக்தானந்தபாபு அவர்களைச் சந்தித்தேன். அவராலும் அந்தப் பாகுபாட்டை ஏற்கமுடியவில்லை. நானும் அவரும் சேர்ந்து வேறொரு நிவாரண முகாம் ஏற்படுத்தினோம்" என்கிறார் இந்த மனிதநேயர். "இத்தோடு நிறுத்தக்கூடாது. ஒரு பள்ளிக்கூடம் தொடங்கவேண்டும்" என்றார் முக்தானந்தா.

இவருடைய பணியின் சிறப்பைப் பார்த்து 'தி வீக்' பத்திரிகை இவரைப்பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டது. போட்ஸ்வானாவில் இவருடைய நண்பர்களான குஜராத்தி வணிகர்கள் இதைப் படித்துவிட்டு, நிவாரணப்பணிக்கென்று 3,500,000 ரூபாயை ராமமூர்த்திக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். சங்கராச்சாரியாரின் The Voluntary Health Education & Rural Development Society (VHERDS) அமைப்பு 2,000,000 ரூபாய் வழங்கியது. சுவாமி முக்தானந்தா 7,000,000 ரூபாய் திரட்டி, மொத்தம் 1.25 கோடி ரூபாய் செலவில் குஜராத்தின் அதோயி என்ற இடத்தில் ஒரு பள்ளிக்கூடம் தொடங்கியிருக்கிறார்கள். அது இன்றைக்கு 900 மாணவர்களுடன் சுவாமிஜியின் நிர்வாகத்தில் இயங்கிவருகிறது.

"கல்வி என்பது ஏதோவொரு இயற்கைப் பேரிடருக்காகக் காத்திருக்கக் கூடாது. அது தொடர்ந்து தரப்பட வேண்டிய ஒன்று' என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. அப்படித்தான் நான் ப்ரீ-பிரைமரி மற்றும் பிரைமரி சிறாருக்குக் கல்வி வாய்ப்பு ஏற்படுத்துவது என்று தீர்மானித்தேன். அதுதான் ஆதாரம். நகர்ப்புற மாணவர்களுக்கும் கிராமப்புற மாணவர்களுக்குமிடயே இருக்கும் பெருத்த இடைவெளி குறைய வேண்டுமென்றால் அங்கிருந்துதான் தொடங்கவேண்டும்."

மிகத்தெளிவான வார்த்தைகள். B.E., M.B.A. என்றெல்லாம் படித்துவிட்டு வந்தாலும் நகர்ப்புற மாணவர்களைப் போன்ற துறைசார்ந்த அறிவு, தன்னம்பிக்கை போன்றவை ஏன் கிராமப்புற மாணவர்களிடம் இல்லை என்ற கேள்வி ராமமூர்த்திக்கு எழுந்தது. 5ம் வகுப்பு மாணவனால் இரண்டாம் வகுப்புத் தமிழ் நூலைப் படிக்கமுடியவில்லை. "தாய்மொழி மிகவும் அவசியம். அதன்மூலம்தான் அவன் கணக்கு, அறிவியல், ஆங்கிலம், கணினி எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறான். எழுத்துக்கூட்டி வாசிக்க முடிந்தால்தான் புரியும். ஆகவே அடிப்படையில் தமிழைச் சரியாகக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தேன்."
இந்த நேர்காணலில் தொடக்கத்தில் நாம் பார்த்த மலையடிவாரக் கட்டடத்தில் உண்டு உறைவிடப் பள்ளி (Residential Specialized Training Center) ஒன்றை 6 முதல் 14 வயதுவரையிலான சிறுவர் சிறுமியருக்காக நடத்தி வருகிறார். இது கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நடத்தப்படுவது. பள்ளிக்கே போகாத அல்லது படிப்பைப் பாதியில் நிறுத்திய குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு உணவும் உறைவிடமும் தந்து, அருகிலிருக்கும் அரசுப் பள்ளிக்கு அனுப்பிப் படிக்கவைப்பது இதன் நோக்கம். இங்கே 113 குழந்தைகள் இருக்கிறார்கள். தவிர 43 சிறாருக்கு ஐந்தாம் வகுப்பு வரையிலான பாடங்களில் இங்கே பயிற்சி தரப்படுகிறது.

அருகிலிருக்கும் தேன்கனிக்கோட்டையில் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா என்ற அரசு நிதிபெறும் மாணவியர் விடுதியும் SODEWS அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. அங்கே உடல்நலம், கல்விப்பயிற்சி, நல்லொழுக்கம் இவற்றில் பயிற்சி தரப்படுகிறது.

இவர்களில் ஒரு குழுவினர் பொதுமக்களுக்குச் சுகாதாரம், கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பதின்ம வயதுச் சிறுமிகளுக்குப் பூப்படைதல் குறித்த விழிப்புணர்வு (இல்லாவிட்டால் பெற்றோர் இவர்களைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிடுகிறார்கள்) போன்ற பலவகை அறிவுகளை உள்ளூர் அரசு மருத்துவ நிலையங்கள் மூலம் புகட்டுகிறார்கள். சென்ற ஆண்டில் 2000 பதின்மவயதுச் சிறுமியருக்கு இவர்கள் மேற்கூறிய வகுப்புகளை நடத்தியுள்ளனர்.

"எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ஏன், சிலசமயம் கைப்பணத்தைச் செலவழித்து இங்கே வந்து இந்த ஹாஸ்டலை நிர்வகிக்கிறார் கிருஷ்ணமோகன். கணக்கு வழக்கு, நிர்வாகம் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறார் கிரி. பிரைமரி பள்ளிகளுக்குச் செல்லும் தொண்டரணியை நிர்வகிக்கிறார் லக்ஷ்மி. அங்கன்வாடி குழுவினரை நிர்வகிக்கிறார் அமுதா. சொற்ப ஊதியத்துக்கு இவர்கள் ஆற்றும் சேவை விலைமதிப்பற்றது" என்று கூறும்போது ராமமூர்த்தியின் குரலில் நன்றி தொனிக்கிறது. குடிகாரக் கணவன்மாரிடம் அவதிப்படுவோர், கணவரால் கைவிடப்பட்டோர் என்று தனி வாழ்க்கையில் பலவகைத் துன்பங்கள் இருப்பதை அங்கிருப்போரிடம் பேசும்போது அறியமுடிகிறது. ஆனாலும் 'என்னைச் சுற்றியுள்ளோரை நான் உயர்த்துகிறேன்' என்கிற பெருமிதவுணர்வு இவர்களது உற்சாகத்தைக் குன்றாமல் பார்த்துக்கொள்கிறது.



இதைத் தவிர கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பதின்மவயதுப் பெண்களுக்கு ஃபேஷன் ஜுவெல்ரி, ஆடை தயாரித்தல், ஆடையில் கண்ணாடி மற்றும் பிற கைவேலை செய்தல், மணி மாலைகள் கோத்தல் போன்ற கைத்தொழில்களையும் கற்றுத் தருகிறார்கள். "இவற்றைச் செய்யக் கற்றுத் தருகிறோம்; ஆனால் விற்பதற்கான வழியை நாங்கள் செய்யமுடிவதில்லை. காரணம் இப்போது எங்களிடம் அதற்கான ஆள்பலம் இல்லை"

"ஆள்பலமும் பணபலமும் அதிகரித்தால் இன்னும் அதிகம் செய்யலாம். இந்தப் பணியாளர்களுக்கே சற்றே நல்ல ஊதியம் தரலாம். ஆனால் இதைப் படிக்கும் நீங்கள் பணம்தான் தரவேண்டுமென்பதில்லை. இந்தியாவுக்கு வரும்போது வந்து எங்களோடு ஏலகிரியில் தங்குங்கள். இடமும் உணவும் நான் ஏற்பாடு செய்கிறேன். உங்களுக்குத் தெரிந்த ஆங்கிலம், கணிதம், கணினி, அறிவியல் என்று இவற்றைக் கற்பித்து இந்தப் பணியாளர்களை இன்னும் மேம்படுத்துங்கள்."

"இங்கிருக்கும் பள்ளிகளுக்குச் சென்று சயன்ஸ் குவிஸ் நடத்துங்கள். பொம்மலாட்டம், Ventriloquism போன்றவை மூலம் பலவற்றைச் சுவைபடச் சொல்லிக்கொடுங்கள். இவர்களை நகர்ப்புறக் குழந்தைகளுக்கு இணையாக உயர்த்த உதவுங்கள்" என்று ஒரு தந்தையின் ஆதங்கத்தோடு வேண்டுகோள் விடுக்கிறார் ராமமூர்த்தி. அதுமட்டுமல்ல, உங்கள் பகுதியில் நீங்கள் இப்படிப்பட்ட முயற்சி ஒன்றைச் செய்ய விரும்பினால், வழிகாட்டவும், பணியாளர்களுக்குப் பயிற்சி தரவும் தயாராக இருக்கிறார்.

SODEWS அமைப்புக்கென நிரந்தர நிதியாதாரம் இல்லாததால், கையிலிருந்த பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு நடந்தும், பஸ்ஸிலும் இந்த 82 வயது இளைஞர் சென்றதுண்டு என்கிறார். S.N. குமார். ராமமூர்த்தி என்னும் தனிநபர் முயற்சி 300 கிராமங்களில் செய்துவரும் மாயத்தால் ஈர்க்கப்பட்டு அவருக்குத் துணைநிற்கும் ஆர்வலர் இவர். "குறைந்தபட்சம் மாதாந்திர செலவுகளுக்காவது தட்டுப்பாடில்லாத அளவில் ஒரு வைப்புநிதி ஏற்படுத்தியாக வேண்டும்" என்கிறார் குமார்.

இந்தியாவின் ஜீவன் அதன் கிராமங்களில் இருக்கிறது என்று கிளிப்பிள்ளைபோலப் பேசிப் பயனில்லை. அரசுகளை விமர்சித்து ஆர்ப்பாட்டம் செய்வதாலும் அதிகம் மாறிவிடவில்லை. "நாம் இந்த நாட்டில் முன்னேற்றத்தில் பங்குதாரர். அரசோடு கையிணைத்து, அரசுப் பணியாளர்களையும் கையணைத்துச் செயல்பட வேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்ற பிரக்ஞைகூட எட்டிப் பார்க்காத அடிமட்டத்தவர்களைக் கல்வியும், சுகாதாரமும் பிற அத்தியாவசியத் தேவைகளும் அவர்களைச் சென்று சேரும். அது அங்கன்வாடிப் பிள்ளைகளிலிருந்தே தொடங்கவேண்டும்" என்கிற பாடத்தை ராமமூர்த்தியும் அவரது களப்பணியாளர்களும் சென்ற பத்து ஆண்டுகளில் செய்து காட்டியிருக்கிறார்கள்.



சற்றும் தாமதிக்காமல் இவர்களுக்கு நாம் தோள் கொடுக்கவேண்டும் என்ற உணர்வுதான் நமக்கு ஏற்படுகிறது. "நானோ என் மனைவியோ நோய்வாய்ப்பட்டால் எங்கள் மருத்துவத்துக்குச் செலவு செய்யக்கூடாது. உடல் உறுப்புகள் தானம் செய்யப்படவேண்டும். உடலை மருத்துவக் கல்லூரிக்குக் கொடுத்துவிட வேண்டும். எஞ்சிய என் சொத்து SODEWS அமைப்புக்குப் போகவேண்டும்" என்று அவர் கூறி முடிக்கையில் என் பார்வையைக் கண்ணீர் மறைத்தது, என் கைகள் தாமாக எழுந்து கூப்பின!

உரையாடல், படங்கள்: மதுரபாரதி

*****


SODEWS என்ன செய்கிறது?
இன்றைக்கு SODEWS களப்பணியாளர்கள் மட்டும் 45 பேர் இருக்கிறார்கள். கிராமம் கிராமமாகச் சென்று அங்கே அங்கன்வாடி மற்றும் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்களுடன் சேர்ந்து குழந்தைகளுக்குச் சுவைபடக் கற்பிக்கிறார்கள். "முதலில் எங்களை சந்தேகத்துடன் பார்த்தார்கள். நாங்கள் புகார் கூற வரவில்லை. ஆடியும் பாடியும் எளிய கருவிகளைக் கொண்டும் அங்கன்வாடிக் குழந்தைகளுக்கு நிறங்கள், எண்கள், அரிச்சுவடி, வடிவங்கள், மிருகங்கள் என்று பலவற்றைக் கற்பிக்கிறோம். நாங்கள் கல்வி தருவதில் அரசின் பங்குதாரர்கள் என்று புரியவைத்தோம். இப்போது அவர்களே எங்களை அழைக்கிறார்கள்" என்று சொல்லும் ராமமூர்த்தியின் கண்களில் பெருமிதம் சுடர்கிறது. இந்தப் பணியாளர்கள் 300 கிராமங்களில் சுமார் 140 அங்கன்வாடிகளுக்கும் 150 தொடக்கப்பள்ளிகளுக்கும் சென்று வாரம் இருமுறை கற்பிக்கிறார்கள்.

வாரம் இருமுறை போதுமா என்று நம் மனதில் கேள்வி எழும்போதே அவர் விடை கூறுகிறார், "அதிகமுறை போகவேண்டுமென்றால் நமக்கு அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் வேண்டும். அப்போது அதிக நிதி தேவைப்படும். உண்மையில் சொல்லப்போனால் இவர்கள் மிகக்குறைந்த ஊதியத்தில் பணி செய்கிறார்கள். ஒரு வாட்ச்மேன்கூடப் பத்துப் பன்னிரண்டாயிரம் சம்பளம் வாங்குவார். இவர்களுக்கு மாதம் சராசரியாக 3500 ரூபாய்தான் கொடுக்கிறோம். இவர்களில் B.A., M.A. படித்தவர்கள் இருக்கிறார்கள். மிகுந்த அர்ப்பணிப்போடு செய்து நல்ல ரிசல்ட் தருகிறார்கள். ஆனாலும் நம்மால் கொடுக்கமுடிந்தது இவ்வளவுதான்" என்கிறார் இந்தக் கல்விச் செம்மல்.

- K.S. ராமமூர்த்தி

*****


உத்தரகாசியில் ஒரு பள்ளி
உத்தராகாண்டில் உத்தரகாசியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது நெடாலா. இங்கே ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்திவந்த ஒரு சுவாமிகள் திடீரென்று மறைந்துவிட்டார். அதே பகுதியில் ஆசிரமம் வைத்திருந்த சுவாமி பிரமானந்தாவுக்கு இந்தத் தகவல் எட்டியது. சுவாமி தயானந்த சரஸ்வதியின் சிஷ்யை இவர். அப்போது அமெரிக்கா சென்றிருந்தார். அவருடைய அணுக்கச்சீடர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு, வாணி நிகேதன் பள்ளி என்ற இதை எடுத்து நடத்தமுடியுமா என்று கேட்டார். நான் போய்ப் பார்த்தேன். அழகான வளாகம். அருகில் பாகீரதி நதி. மிகப் பணிவுள்ள, ஆர்வமான மாணாக்கர்கள். நல்ல ஆசிரியைகள். தலைமை ஆசிரியை ராகமதி மிகவும் அர்ப்பணிப்புக் கொண்டவர். இப்படி ஒரு பள்ளியை எடுத்து நடத்தக் கொடுத்துவைத்திருக்க வேண்டும். நான் ஒப்புக்கொண்டேன்.

அப்போது 70 மாணவர்கள் இருந்தனர். நான் 3 மாதத்துக்கு ஒருமுறை அங்கே போய்ப் பார்த்துவிட்டு வருவேன். எனக்கு உதவியாக இருக்கும் தன்னார்வத் தொண்டர் பூர்ணிமா அங்கே போய் 3 மாதம் அந்த ஆசிரியைகளுக்கு ஆங்கிலம், தன்னம்பிக்கை, திறன்பயிற்சி எல்லாம் கற்றுக்கொடுத்தார். எல்லா அதிகாரிகளையும் சந்தித்து 8ம் வகுப்புவரை விரிவாக்கம் செய்ய அனுமதி வாங்கினார். பூர்ணிமா சென்னையில் ஒரு IT புரொஃபஷனல்.

உத்தராகண்டில் வெள்ளம் வந்தது உங்களுக்குத் தெரியும். அப்போது நெடாலாவும் பாதிக்கப்பட்டது. குஜராத்துக்கு உதவிய அதே ஆப்பிரிக்க நண்பர்கள் இதற்கும் பணம் சேகரித்து அனுப்பினார்கள். கிராமசபா கொடுத்த நிலத்தில் ஒரு சமுதாயக்கூடமும் அதன்மேலே 3 வகுப்பறைகளும் கட்டினோம் அதனால் இப்போது அங்கே 270 மாணவர்கள் படிக்கிறார்கள். மாதத்துக்கு 200 ரூபாய்தான் கட்டணம், அதையும் பலரால் கொடுக்க முடிவதில்லை.

"கொடுங்கள், நாங்கள் நடத்துகிறோம்" என்று பலர் கேட்கிறார்கள். ஆனால் அடிப்படையில் கல்வியை வணிகமாக்குவதில் எங்களுக்குச் சம்மதமில்லை. ஏழைக்குழந்தைகள் அங்கே தொடர்ந்து இலவசமாகப் படிக்கவேண்டும் என்பது எங்கள் ஆசை. நிதியைப் பொறுத்தவரை இதுவும் எங்களுக்கு பாரம்தான் என்றாலும் சமாளித்துக்கொண்டு வருகிறோம்.

இதை வாசிக்கும் நீங்கள் அந்த ரம்மியமான சூழலில் தனியாகவோ, குடும்பத்துடனோ சென்று தங்கியிருந்து உங்கள் துறைப் பாடங்களை ஆசிரியர்களுக்கோ, மாணவர்களுக்கோ புகட்ட விரும்பினால் அங்கே தங்கவும், உணவுக்கும் ஏற்பாடு செய்யமுடியும். விரும்பினால் நீங்கள் நிதியும் உதவலாம்.

- K.S. ராமமூர்த்தி

*****


தொடர்புகொள்ள:
தொலைபேசி: 91 04179 245218,
கைபேசி: 94424 11782
மின்னஞ்சல்: malathyramamurthy@yahoo.com
வலைமனை: www.sodews.org
More

கல் ராமன்
Share: 




© Copyright 2020 Tamilonline