Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
எம்.ஆர். ரங்கஸ்வாமி
'அம்புலிமாமா' சங்கர்
- அரவிந்த் சுவாமிநாதன்|ஏப்ரல் 2013||(1 Comment)
Share:
"தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான்..." என்று தொடங்கும் அம்புலிமாமாவின் விக்கிரமாதித்தன் கதைகளைப் படித்திராத மூத்த தலைமுறையினர் இருக்க மாட்டார்கள். முறுக்கிய மீசை, தோளில் கிடத்திய வேதாளம், உயர்த்திப் பிடித்த வாள், வளைந்த காலணி என்று விக்கிரமாதித்தனை நம் கண்முன் ஓவியமாகக் கொண்டு வந்தவர் கே.சி. சிவசங்கரன் என்னும் சங்கர். ஜனவரி 1953ல் 'மனக்கணக்கு' என்ற கதைக்கு அம்புலிமாமாவில் வரையத் தொடங்கினார். 1964 மார்ச் முதல் வேதாளம் சொல்லும் கதைகளுக்கு வரைய ஆரம்பித்தார். 60 ஆண்டுகளாக இந்தச் சிறுவர் இதழுக்கு வரைந்து வரும் சங்கர் 'அம்புலிமாமா சங்கர்' ஆகிப் போனதில் ஆச்சரியமென்ன! இன்றைக்கு 89 வயதிலும் அம்புலிமாமா, ராமகிருஷ்ண விஜயம், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பிரசுரங்கள் என்று வரைந்து தள்ளிக் கொண்டிருக்கிறார். வெயில் அடர்ந்த ஒரு முற்பகல் வேளையில் அவரைச் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து....

*****


கே: உங்கள் பள்ளி நாட்களில் இருந்தே தொடங்குவோமா?
ப: எனக்குச் சொந்த ஊர் ஈரோடு. தாராபுரம் அருகே உள்ள காலத்தொழுவூர் கிராமம். ஜூலை 19, 1924ல் நான் பிறந்தேன். என் தந்தையார் சந்திரசேகர தீக்ஷித சிவா. நாங்கள் அப்பைய தீக்ஷிதர் பரம்பரையில் வந்தவர்கள். அப்பா பள்ளிக்கூட வாத்தியார். அங்கேதான் படித்துக் கொண்டிருந்தேன். 1934ல் சென்னையில் வசித்த நெருங்கிய உறவினர் ஒருவர் திடீரெனக் காலமாகவே, அவர்கள் குடும்பத்துக்குத் துணையாக இருக்க அப்பா, அம்மாவை அனுப்பி வைத்தார். கூடவே நானும் என் தம்பியும் சென்னைக்கு வந்தோம். அப்பா எங்களைச் சென்னையில் உள்ள ஏதாவது ஒரு பள்ளியில் சேர்த்துவிடச் சொன்னார். அப்போது கார்ப்பரேஷன் பள்ளிகளில் உடனடியாகச் சேர்த்துக் கொள்வார்கள். ஃபீஸ் கிடையாது. பிராட்வேயில் ஒரு பள்ளியில் எங்களுக்கு டெஸ்ட் வைத்தார்கள். 'George V is our King' என்று எழுதச் சொன்னார்கள். நான் அதைப் பிழையில்லாமல், மிக அழகாக எழுதவே என்னை ஐந்தாம் வகுப்பில் சேர்த்துக் கொண்டார்கள். என் அழகான கையெழுத்துக் காரணமாக போர்டில் பொன்மொழிகள், அறிவிப்புகள் போன்றவற்றை என்னைத்தான் எழுதச் சொல்வார்கள். என்னை வகுப்புத் தலைவனாகவும் போட்டார்கள். பின்னர் லிங்கிச் செட்டித் தெருவில் ஒரு பள்ளி, முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளி என்று படித்தேன்.

கே: உங்களுக்குள் இருந்த ஓவியர் முதலில் எப்போது வெளிப்பட்டார்?
ப: சிறுவயது முதலே புத்தகங்களில் இருக்கும் படங்களைப் பார்த்து அதே மாதிரி வரைவேன். முத்தியால்பேட்டை பள்ளியில் படிக்கும்போது அங்கு பாடத் திட்டத்தில் ஓவியமும் உண்டு. அங்கு ஓவிய ஆசிரியராக இருந்தவர் எனது திறமையைக் கண்டு கொண்டார். என்னை ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கு வரச் சொல்வார். "பூனையை வரையச் சொன்னால் எலி மாதிரி வரைந்திருக்கிறான் பார். நீ கொஞ்சம் என்கூட இருந்து இதையெல்லாம் சரி செய்" என்று பிற மாணவர்கள் வரைந்த ஓவியத் தாள்களை என்னிடம் கொடுத்து திருத்தச் சொல்வார். அவர்தான் நான் ஓர் ஓவியனாவேன் என்று முன்கூட்டியே கண்டுகொண்டவர். எனக்கு கலர் பென்சிகள், ரப்பர், புக்ஸ் எல்லாம் கொடுப்பார். "நீ தயவுசெய்து பி.ஏ., எம்.ஏ. என்று படிக்கப் போய்விடாதே! ஆர்ட்ஸ் ஸ்கூலில் சேர்ந்து படி. நல்லா வருவே!" என்று அறிவுரை சொன்னார். அவர் சொல்படி உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்து ஆர்ட்ஸ் ஸ்கூலில் சேரப் போனேன்.



கே: உடனடியாக அட்மிஷன் கிடைத்திருக்குமே!
ப: அதுதான் இல்லை. "காலேஜில் படிக்கத் தகுதி இருப்பதாக சர்டிஃபிகேட் கொடுத்திருக்கிறார்கள். இங்கு ஏன் படிக்க வருகிறாய்?" என்று கேட்டார்கள். மூன்று சோதனைகள் வைத்தார்கள். முதலில், அசையாப் பொருட்களை (still life) வரைவது. அடுத்தது மாடல்களைப் பார்த்து விதவிதமான கோணங்களில் வரைவது. மூன்றாவது களத்தில் சென்று வண்ணத்தில் தீட்டுவது. என் அண்ணாவுக்கு நான் இதிலெல்லாம் தேறுவேனா என்று சந்தேகம். அந்தக் காலத்தில் மும்பையில் டைரக்டர் சாந்தாராம் ஒரு பயிற்சி நிறுவனம் நடத்தி வந்தார். ஒலிப்பதிவு, கேமரா, கலை என்று அங்கே மூன்று வருடப் பயிற்சி கொடுத்து அவரே வேலைக்கு எடுத்துக் கொள்வார். அங்கே சென்று படித்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று என் அண்ணா சொன்னார். நான், "சரி. ஆனால் இந்த டெஸ்டில் நான் கலந்து கொள்கிறேன் என் தரம் என்ன என்று அப்போதுதான் தெரியும். பிறகு அங்கு சேருவது பற்றி யோசிக்கலாம்" என்றேன். அண்ணாவும் ஒப்புக் கொண்டார்.
கே: சோதனையின் முடிவு என்ன?
ப: முதல் டெஸ்ட்டில் ஒன்றும் பிரச்சனை இருக்கவில்லை. இரண்டாவது, ஆட்களை வரைவது ஒரு வாரம் நடந்தது. உடற்கூறியல் சரியாகத் தெரிகிறதா என்று பார்ப்பதற்காக இது. அதிலும் பிரச்சனை இல்லை. ஆனால் ஒருநாள் பக்கத்தில் ஒரு பையன் முகத்தை மட்டும் வரைந்திருந்தான். நானும் அதைப் பார்த்துவிட்டு, இப்படித்தான் செய்ய வேண்டுமோ என நினைத்துவிட்டேன். என் பேப்பரைப் பார்த்த தேர்வு கண்காணிப்பாளர் "ஏன் இப்படி வரைந்திருக்கிறாய்?" என்று கேட்டார். காரணம் சொன்னேன். "அவன் எப்படியோ செய்துவிட்டுப் போகட்டும். உனக்கு ஓவியம் நன்றாக வருகிறது. ஐந்தடி உருவத்தை, அரையடிப் பேப்பரில் எப்படி நீ வரைகிறாய், தலைக்கும் காலுக்கும் உள்ள விகிதம் சரியாக வருகிறதா என்று பார்ப்பதற்காகத்தான் இந்த டெஸ்ட். அதைப் புரிந்து கொண்டு வரை" என்றார். அதன்படியே செய்தேன்.

அடுத்த டெஸ்ட், பெயிண்டிங். அதை வண்ணங்களில் தீட்டவேண்டும். ஆனால் படம் ஒரிஜினலாக இருக்க வேண்டும். என்னிடம் இருந்த காசுக்கு ஓரணா பிரஷ்ஷும் சில கலர்களும் வாங்கிக்கொண்டு போனேன். எனக்கு அதுவரை கலரில் தீட்டிப் பழக்கம் கிடையாது. கிண்டி ஸ்டேஷன், அதன் பக்கத்தில் ஒரு கட்டட வேலை, அங்கே மக்கள் சாமான்களைத் தூக்கிக் கொண்டு உள்ளே, வெளியே போய்க் கொண்டிருக்கிறார்கள். அதை வரைந்தேன். என்ன பிரச்சனை என்றால் பிரஷ்ஷை வண்ணத்தில் தோய்த்தால் பட்டையாகத் தொடர்ந்து வராமல் விட்டு விட்டே வந்தது. ஓரணா பிரஷ் அப்படித்தான் இருக்கும் என்று எனக்குத் தெரியாது. எப்படியோ வரைந்து முடித்தேன். அந்தப் படம் அப்போது கலைக்கல்லூரி பிரின்ஸ்பாலாக இருந்த ராய் சௌத்ரியின் மேசைக்குப் போனது. அவர் என்னை அழைத்தார். போனதும் உட்காரச் சொன்னவர், என்னைக் கூர்ந்து பார்த்து, "Where did you learn this pen-and-knife treatment?" என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இதெல்லாம் யாருக்குத் தெரியும்! நான் மௌனமாக உட்கார்ந்திருந்தேன். அவர் என்னை நேரடியாக இரண்டாம் வருடம் ஓவிய வகுப்பில் சேர அனுமதி அளித்து விட்டார். உண்மையில் அது ஒரு பாணி. தைல வண்ணத்தைத் தீற்றி, சுரண்டி எடுத்தால் அந்த விளைவு வரும். எனக்கு பிரஷ் சரியில்லாததால் அப்படி ஆகிவிட்டது! அதனாலேயே எனக்கு இரண்டாவது வருடம் சேர்வதற்கு அட்மிஷன் கிடைத்தது. எல்லாம் கடவுள் செயல்தான்.

கே: அதன் பின்?
ப: கலைக் கல்லூரியில் ஆர்வத்துடன் நுணுக்கங்கள் எல்லாம் கற்றுக் கொண்டேன். ஐந்தாவது வருடத்தில், படித்து முடித்தபின் எங்கு சேர்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பயிற்சிக்காக ஒருமுறை கிருஷ்ணர், கோபிகைகள் சூழ இருக்கும் ஓவியம் ஒன்றை வரைந்திருந்தேன். என்னுடைய ஓவியத்தைக் கலைமகளில் வெளியிடத் தேர்ந்தெடுத்தார்கள். என்னுடைய ஓவியம், அதன் பாணி மிகவும் பிடித்துப் போனதால், அமுதசுரபியில் பணியாற்றிய ஓவியர் ஸூபா மூலம் என்னைக் கலைமகளில் வந்து சேருமாறு தகவல் சொல்லி அனுப்பினார்கள். நானும் போனேன். உடனே வேலை கொடுத்து விட்டார்கள். சம்பளம் 85 ரூபாய். கி.வா.ஜ., கு.ப.ரா., அகிலன் என்று பலரது கதை, கட்டுரைகளுக்கு வரைந்தேன். அகிலனின் 'பெண்ணின் பெருமை' தொடருக்கு அந்தக் காலத்திலேயே வண்ணப் பூச்சு ஓவியம் போட்டது மறக்க முடியாதது.

கே: அம்புலிமாமாவில் சேர்ந்தது எப்போது?
ப: அம்புலிமாமாவில் சேருவேன் என்று கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை. அம்புலிமாமாவுக்கு ஓவியர் தேடிக் கொண்டிருந்தார்கள். அவர்களது விளம்பர ஏஜென்ஸியைச் சேர்ந்த ஒருவர் கோபுலுவிடம் கேட்டிருக்கிறார். கோபுலு என்னைப்பற்றிச் சொல்லி, "நான் விகடனில் சேர்ந்தபோதே அவரும் கலைமகளில் சேர்ந்து விட்டார். அவரும் சீனியர் ஆர்டிஸ்ட்தான். அவரை முயற்சி பண்ணிப் பாருங்கள். ஆனால் நான் சொன்னேன் என்று சொல்ல வேண்டாம். அது எல்லோருக்கும் சங்கடம்" என்று சொல்லி விட்டிருக்கிறார். எனக்கு அழைப்பு வந்தது. நான் அம்புலிமாமா ஆஃபிசுக்குப் போனேன். நிர்வாகி ரெட்டியார், சக்ரபாணி எல்லோரும் இருந்தார்கள். அவர்களிடம், "நான் கலைமகளில் வேலை செய்து கொண்டிருக்கிறேன். 'பீஸ் வொர்க்' ஆக வேண்டுமானால் உங்களுக்குச் செய்து தருகிறேன். ஏற்கனவே குமுதம், கல்கண்டு, பேசும்படம், சில பதிப்பகங்களுக்கு அப்படிச் செய்து கொடுத்திருக்கிறேன். அதில் ஒன்றும் பிரச்னை வராது" என்று சொன்னேன். "இல்லை, எங்களுக்கு ஸ்டாஃப் ஆகத்தான் வேண்டும்" என்றார்கள். எனக்கு அப்போது கலைமகளில் 150 ரூபாய் சம்பளம்.

நான் விஷயத்தைக் கலைமகள் தலைமை ஓவியரிடம் சொன்னேன். அவர், "அது பெரிய கம்பெனி. நீ 350 ரூபாய் சம்பளம் கேள். கிடைத்தால் ஒப்புக்கொண்டு ஆர்டர் வாங்கிக் கொண்டு வந்துவிடு" என்றார். அவருக்கு என்னை அனுப்ப மனமில்லைதான். அதே சமயம் நல்ல வாய்ப்பு வரும்போது அதைத் தட்டிக் கழிக்கவும் மனம் ஒப்பவில்லை. ரெட்டியார், "நான் ஏற்கனவே ஆர்டிஸ்ட் சித்ராவுக்கு 350 ரூபாய் கொடுக்கிறேன். இருவருக்கும் ஒரே அனுபவம்தான். ஆனால் இந்தக் கம்பெனியில் அவர் சீனியர். அதனால் உங்களுக்கு 300 ரூபாய் தருகிறேன். சில மாதம் கழித்து நீங்கள் கேட்டதைத் தர ஏற்பாடு செய்கிறேன். அப்படி 350தான் வேண்டும் என்றால் அந்த 50 ரூபாயைத் தனியாக நான் தந்து விடுகிறேன்" என்றார். நான் ஒப்புக்கொண்டேன்.

கலைமகள் காரியாலயத்தில் முதலாளியைப் பார்த்து விஷயத்தைச் சொன்னபோது அவருக்கு ரொம்ப மன வருத்தம். அதேசமயம் நல்ல வாய்ப்பைத் தடுக்க முடியாது. வாழ்த்தி அனுப்பினார். கலைமகள் குழுவுக்குச் சொந்தமான சமஸ்கிருதக் கல்லூரிக் கட்டடத்தில் ஒரு தேனீர் விருந்து கொடுத்தனர். அதற்கு கி.வா.ஜ., கா.ஸ்ரீ.ஸ்ரீ., சீஃப் ஆர்டிஸ்ட் சாமி எல்லாம் வந்து ரொம்ப நெகிழ்ச்சியாகப் பேசி விடை கொடுத்தனர். ஆர்டிஸ்ட் சங்கர் என்று பரவலாக மக்களுக்குத் தெரியவந்தது நான் அம்புலிமாமாவில் வரையத் தொடங்கிய பிறகுதான்.

கே: விக்கிரமாதித்தன்-வேதாளம் கதைகளுக்கு வரைந்தது பற்றி...
ப: நான் அம்புலிமாமாவில் சேருவதற்கு முன்னாலேயே அது வந்து கொண்டிருந்தது. 'சித்ரா' அதற்கு வரைந்து கொண்டிருந்தார். எனக்கு அதை வரைய வாய்ப்பு வந்தபோது எனக்கு நல்ல பெயரை, அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது. மும்பை சென்றபோது, "ஓ விக்கிரமாதித்தனுக்கு வரைந்த ஆர்டிஸ்டா" என்று எனக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார்கள். விக்கிரமாதித்தன் பரம்பரையில் மொத்தம் ஆறு விக்கிரமாதித்தன்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவன்தான் இந்தக் கதையில் வரும் விக்கிரமாதித்தன். ஆரம்பத்தில் 'ஜெயமல்லன்' என்ற பெயரில் வந்து கொண்டிருந்த அது, தற்போது 'நவீன வேதாளக் கதை' என்ற பெயரில் வெளிவருகிறது.

கே: ராமகிருஷ்ண விஜயம் இதழுக்கும் நிறைய வரைகிறீர்கள் அல்லவா?
ப: ஆமாம். 1981ல் ராமகிருஷ்ண விஜயத்தின் எடிட்டராக கமலாத்மானாந்தர் இருந்தார். அம்புலிமாமா நிறுவனர் ரெட்டியாரின் இரண்டாவது சம்பந்தி ரமணா ரெட்டி ஆந்திராவில் பெரிய ஆள். கோவில் கட்டிக் கொடுப்பது, ஆலோசனை தருவது என்று ராமகிருஷ்ண மடத்துடன் நல்ல தொடர்பில் இருந்தார். அவரிடம் கமலாத்மானந்தர் "ராமகிருஷ்ண விஜயத்துக்கு உங்கள் சந்தமாமா ஆர்டிஸ்ட் யாரையாவது வரைந்து தர ஏற்பாடு செய்யுங்களேன்" என்று கேட்டிருக்கிறார். ரமணா ரெட்டி என்னிடம் கமலாத்மானந்தரைப் பார்க்கச் சொன்னார். நான் போனபோது அவர் ஆஃபிஸின் வெளியே உட்கார்ந்திருந்தார். நான் விவரம் சொன்னேன். "சித்ரா வரவில்லையா?" என்று கேட்டார். "சித்ரா தவறிப்போய் ஒரு வருடம் ஆகிறது" என்று சொன்னேன். "சரி, உள்ளே வாருங்கள்" என்று அழைத்துப் போய் 'கர்ணனின் கொடை' என்ற கதையைக் கொடுத்து, "இதற்கு வரைந்து கொடுங்கள்" என்றார். நான், "சார் கொஞ்சம் டைம் ஆகுமே" என்று சொன்னேன். "பரவாயில்லை, ஒரு மாதம் கழித்துக் கொடுங்கள்" என்று சொன்னார்.

அப்போது நிர்வாகியாக இருந்த விஸ்வநாத ரெட்டியாரிடம் சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டுதான் வரைய ஆரம்பித்தேன். அது இன்றும் தொடர்கிறது. இதெல்லாம் தெய்வச் செயல். 'தெய்வம் மனுஷ்ய ரூபேண' என்று சொல்வார்கள். கடவுள் மனித ரூபத்தில் வந்து எனக்கு வழிகாட்டினார்.

கே: உங்களுக்குப் பிடித்த ஓவியர்கள்...
ப: எனக்கு எல்லோரையுமே பிடிக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி, திறமை இருந்தாலும் அடிப்படை கலைத்திறன் தானே! கோபுலுவின் ஓவியம் ரொம்ப சிறப்பாக இருக்கும். மணியம் எனக்கு முன்னால் கலைக்கல்லூரியில் படித்தவர். கல்கி கூப்பிட்டதும் வந்துவிட்டார். அதனால்தான் அவரால் இந்தியா முழுக்கச் சுற்ற முடிந்தது. சிலோன் எல்லாம் போக முடிந்தது. நல்ல ஓவியங்களைத் தர முடிந்தது. மிக நல்ல கலைஞர். அதுபோல சில்பி. அவர் தெய்வீக உருவங்களை ரொம்ப நன்றாக வரைவார். குறிப்பாக, சிற்பங்களை நுணுக்கம் மாறாமல் துல்லியமாக வரைந்ததால் ஓவியர் மாலிதான் அவருக்கு சீனுவாசன் என்ற பெயரை மாற்றி 'சில்பி' என்று பெயர் சூட்டினார். இப்படி எல்லோருமே ஜாம்பவான்கள். 'சித்திரமும் கைப்பழக்கம்' என்றால் பழகப் பழகத்தான் நல்ல சித்திரம் போட முடியும் என்பது பொருள். நேரம் காலம் பார்க்காமல் உழைத்துத்தான் இவர்கள் எல்லாம் அந்தக் காலத்தில் ஆற்றல் வாய்ந்த கலைஞர்களாக இருந்தார்கள்.

கே: ஓவியத்தை நீங்கள் எப்படி வரையறை செய்கிறீர்கள்?
ப: என்னிடம் ஒருவர் கேட்டார், "இத்தனை நாளாக ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறீர்களே. உங்களுக்கு போரடிக்கவில்லையா?" என்று. எப்படி போரடிக்கும்? நம் வேலையைக் கடனே என்று செய்தால் போரடிக்கும். அதையே நேசித்துச் செய்தால் எப்படி போரடிக்கும்? ஓவியன் பணத்துக்காக மட்டுமா வேலை செய்கிறான்? நிறைய ரூபாய் கொடுத்தால் ஒரு மாதிரி, கொஞ்சம் ரூபாய் கொடுத்தால் ஒரு மாதிரி என்று வரைய முடியுமா என்ன? நான் அதுமாதிரி இதுவரை செய்ததில்லை. செய்யவும் முடியாது. சம்பளம் கொடுப்பவர்களின் திருப்தியோடு நமக்கும் திருப்தியாக இருக்க வேண்டியது அவசியம் இல்லையா?

இது கலை. இதெல்லாம் பூர்வ ஜன்ம புண்ணியம். பகவத் சங்கல்பம் இருக்க வேண்டும். கற்பனை வேண்டும். அதை ஓவியமாக்கும் திறமை வேண்டும். மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். ஓவியம் என்பது ரொம்ப கவனம் தேவைப்படுவது. நுணுக்கமாகச் செய்ய வேண்டியது. சமயத்தில் வரைந்து கொண்டிருக்கும் போது அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும். சரியாக இல்லாததுபோல் இருக்கும். ஆனால், திடீரென எப்படியோ மூட் வந்து அந்த ஓவியம் அழகாக வந்துவிடும். இதைத்தான் நான் தெய்வ சங்கல்பம் என்கிறேன். ராமகிருஷ்ணருடைய பரிபூரண அருள்தான் என்னை வழிநடத்துகிறது. ராமகிருஷ்ணர், சாரதா தேவி, விவேகானந்தர் எல்லாம்தான் என் குருநாதர்கள்.

கே: உங்கள் பயண அனுபவங்கள் குறித்துச் சொல்லுங்கள்...
ப: நான் பணியாற்றிய அம்புலி மாமாவின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு படம் வந்தே ஆகவேண்டும். எல்லா நாளும் தொடர்ந்து வேலை இருக்கும். அதனால் நான் அதிகம் விடுமுறை எடுத்ததில்லை. ஆனால் காசிக்கு ஒருமுறை நண்பர்களுடன் சென்று வந்தது மறக்க முடியாதது. ராமகிருஷ்ண மடத்தின் மூலம் கமலாத்மானந்தர் அதற்கு ஏற்பாடு பண்ணினார். நான் மணியம் செல்வன், அவர் சகோதரர் ரவி என்று எல்லோரும் சென்றோம். கங்கைக்குச் சென்று குளித்து, பூஜைகள் செய்து, செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செய்தேன். திருப்தியாக இருந்தது. திடீர்ப் பயணமாகப் புறப்பட்டதால் தேவையான பணம் எடுத்துப் போகவில்லை. மணியம் செல்வனிடம் பின்னர் கடன் வாங்கித்தான் காசிப்பட்டு, பூஜைப் பொருட்கள் எல்லாம் வாங்கி வந்தேன். பயணச் செலவை ராமகிருஷ்ண மடமே ஏற்றுக்கொள்ளும் என்றார் கமலாத்மானந்தர். ஆனால் எனக்கு மனம் ஒப்பவில்லை. அந்தத் தொகையை மாதாமாதம் என் சன்மானத்தில் கழித்துவிடுங்கள் என்று சொன்னேன். அவர் ஒப்புக் கொண்டார். அது ஒரு மறக்க முடியாத பயணம்.

கே: நீங்கள் வேலை பார்த்தது மிகப் பெரிய நிறுவனம். அவர்கள் பல வெற்றிப் படங்களைத் தந்தவர்கள். அவர்களது திரைப்படங்களுக்கு ஏதும் நீங்கள் பணியாற்றியிருக்கிறீர்களா?
ப: இல்லை. எனக்கு அந்த ஆர்வமே இருக்கவில்லை. ஒருமுறை தமிழ்வாணன், "நீங்கள் வேலை பார்ப்பது பெரிய நிறுவனம். நீங்கள் முயற்சி செய்தால் அவர்களது திரைப்படங்களுக்குக் கலை இயக்கம் செய்யலாமே, உங்கள் எதிர்காலம் இன்னமும் நன்றாக இருக்குமே" என்று சொன்னார். ஆனால் ஏனோ எனக்கு அதில் ஆர்வம் வரவில்லை. பின்னர் ஓவியர் சேகரைச் சந்தித்தேன். அவர் ஆனந்த விகடனுக்கு அந்தக் காலத்தில் வரைந்திருக்கிறார். நிறைய சினிமாவுக்கு ஆர்ட் டைரக்‌ஷன் செய்தவர். அவரிடம் தமிழ்வாணன் சொன்னதைச் சொன்னேன். உடனே அவர், "சங்கரன், அதெல்லாம் வேண்டவே வேண்டாம். சினிமாவுக்குப் போய் நீங்கள் என்னதான் செய்தாலும் உங்கள் பெயர்கூடப் படத்தில் வராது. செட் மாஸ்டர், ஆர்ட் டைரக்டர் என்று இருப்பார்கள். அவர்கள் பெயர்தான் வரும். உங்கள் உழைப்பு இப்போது வெளியே தெரிவதுபோல் தெரியவே தெரியாது. உங்களது புராணப் படங்களை மாடல்களாக வைத்து நிறைய ஆர்ட்வொர்க் பல படங்களில் செய்திருக்கிறார்கள். அதெல்லாம் உங்களுக்குத் தெரியாது. உங்களுக்கு இந்தத் துறை சரி வராது" என்று சொன்னார். எனக்கும் சினிமா ஆசை இல்லாததால் அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டேன்.

கே: உங்கள் வாரிசுகளுக்கு ஓவியத்தில் ஆர்வம் உண்டா?
ப: எனக்கு ஐந்து மகன்கள், ஒரு பெண். ஒரு மகன் தவறிவிட்டார். ஒரு மகன் கனடாவில் இருக்கிறார். மீதி மூன்று பேரும், மகளும் இங்கேதான் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே வரைவார்கள். மகள் ரொம்ப நன்றாகவே வரைவார். ஆனால் வேலை, குடும்பம் என்று சூழல்கள் மாறிப் போனதால் யாரும் இதைத் தொடரவில்லை. நானும் யாரையும் தயார் பண்ணவில்லை. ஏனென்றால் இதெல்லாம் தெய்வ சங்கல்பத்தால் தானாக வருவது. இன்னொருவர் ஊட்டிவிட்டு வருவதல்ல.



கே: ஓவியத்தின் இன்றைய நிலை எப்படி உள்ளது?
ப: இன்றைக்கு கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வந்துவிட்டது. அதற்கு மதிப்பும் அதிகமாக இருக்கிறது. சன்மானமும் அதிகமாகத் தருகிறார்கள். ஆனால் computer என்பது creator கிடையாது. அதை, இப்படி இப்படிச் செய் என்று சொன்னால் செய்கிறது. அவ்வளவுதான். ஆனால் பெருமை எல்லாம் அதை அப்படிச் செய்யச் சொன்னவனுக்கு போய்ச் சேருகிறது. என்னதான் 'புதுமைகளைச் செய்கிறது' என்று சொன்னாலும் மனதால் கற்பனை செய்து, மூளையால் பார்த்து, அதைக் கையால் வரைவதுதான் உண்மையான படைப்பாற்றல் என்று நான் நினைக்கிறேன். ஒருமுறை நான் முழுப்பக்கப் படம் ஒன்றை வரைந்திருந்தேன். அதை அரைப் பக்கமாக மாற்றித் தரச் சொன்னார்கள். நான், அது முடியாது, இது நீள்சதுரமாக இருக்கிறது. அரைப் பக்கம் என்றால் வேறு பரிமாணத்தில் இருக்க வேண்டும், அதற்கு வேறு ஒரு படம்தான் வரைய வேண்டும் என்றேன். அவர்கள் "வேண்டாம், கம்ப்யூட்டரில் செய்து கொள்கிறோம்" என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியவில்லை. நான்தான் திரும்ப வரைந்து தந்தேன். இன்றைக்கு வரையும் ஓவியர்கள் அவசர யுகத்திற்கு ஏற்றவாறு நன்றாக வரைகிறார்கள்.

ஓவியம், நுண்கலைகள் பற்றி மட்டுமல்ல; திருக்குறள், இலக்கியம், ஆன்மீகம், வேதம், சாஸ்திரம், சைவத் திருமுறைகள், புராணக் கதைகள் என்று பலவற்றிலிருந்தும் மேற்கோள்கள் காட்டிப் பேசுகிறார் சங்கர். கால் எலும்பு முறிவுச் சிகிச்சையினால் ஓய்வில் இருக்க வேண்டிய நிலை. ஆனாலும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார். "நான் எதையுமே செய்யவில்லை சார். இந்த 'நான்' என்பதுதான் நம் முதல் எதிரி. இந்த அகங்காரம் போக வேண்டும். அதைத்தான் பகவான் ரமண மகரிஷி போன்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எல்லாம் அவன் செயல். 'அவனருளாலே அவன் தாள் வணங்கி' என்று மாணிக்கவாசகர் சொல்லியிருப்பது இதைத்தான்" என்று அடக்கத்துடன் சொன்னவரை வியந்து, வணங்கி, கைகூப்பி விடைபெற்றோம்.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

சென்னை அன்றும், இன்றும்
சென்னையில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலத்திலேயே மாணவர்களுக்கு மதிய உணவு உண்டு. வெளியே சமைத்துச் சுடச்சுட ஒரு வேனில் வரும். மாணவர்கள் வரிசையாக நின்று அந்த உணவைத் தட்டில் வாங்கிச் சாப்பிடுவார்கள். சாதம், சாம்பார் மட்டும் போடுவார்கள். மோர், காய், கூட்டு எதுவும் கிடையாது. சாம்பாரில் உருளையும், கத்திரியும், வாழையும் பெரிய துண்டுகளாக மிதக்கும். தெருமுக்கில் வேன் வரும்போதே ஸ்கூலுக்குள் சாப்பாட்டு வாசனை வந்து சேர்ந்து விடும். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். சாப்பாட்டு நேரத்தில் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பெரிய பையன்களும் தட்டுடன் வந்து நிற்பார்கள். ஆனால் ஆசிரியர்கள் அவர்களைத் தடுக்க மாட்டார்கள். "சாப்பாடுதானே, சாப்பிட்டு விட்டுப் போகட்டும்" என்று பேசாமல் இருந்து விடுவார்கள். நான் அப்போது வகுப்பு மானிட்டராக இருந்தேன். அதனால் என்னிடம் அவர்கள் கொஞ்சம் வம்பு செய்வார்கள். "என்னைப் பற்றி வாத்தியாரிடம் புகார் செய்து விடுவாயா, வெளியே வா, பார்க்கலாம்!" என்பார்கள். ஒருவன் சண்டைக்கு வருவான். இரண்டு பேர் அவனைப் போக விடாமல் தடுத்துப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அவன் சும்மா அப்படிக் கத்தி உதார் விடுவான். உண்மையில் அவன் வந்தால் பிற மாணவர்களிடம் உதை வாங்கிக் கொண்டுதான் போவான். இப்போதுதான் என்பதில்லை அந்தக் காலத்திலேயே சென்னை அப்படித்தான் இருந்தது. மேலும் அந்தக் காலத்துச் சென்னை என்பது பாம்பே, கல்கத்தா மாதிரி கிடையாது. பல ஜாதி, பல இனம், பல மொழி, பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ்ந்த ஊர் சென்னை. எல்லா மொழி பேசுபவர்களும் ஒற்றுமையாக இங்கு வசித்தார்கள். மற்ற மாநிலங்களில் கொஞ்சம் கொஞ்சம்தான். இன்றைக்கும் சென்னையில் அந்த நிலைமை மாறவில்லை.

சங்கர்

*****


ஓவியப் பைத்தியம்
ஒரு பாடகன் மேடையில் பாடுகிறான். எல்லோரும் பாராட்டுகிறார்கள். ஆஹா, ஓஹோ என்கிறார்கள் ஆனால் அதற்கு அவன் எவ்வளவு சாதகம் செய்திருக்க வேண்டும்! ஓவியமும் அப்படித்தான். பல விதமாகவும் வரையத் தயார் செய்து கொள்ள வேண்டும். அப்படி இருந்தால்தான் இந்த ஃபீல்டில் நிலைத்து நிற்க முடியும். சமயத்தில் வீட்டில் டிபனோ, காஃபியோ அருகில் வைத்துவிட்டுப் போனால் அதுபாட்டுக்கு ஆறிக் கொண்டிருக்கும், நான்பாட்டுக்கு வரைந்து கொண்டிருப்பேன். அதை முடித்து விட்டுத்தான் இதற்கு வரமுடியும். ஏனென்றால் அந்த 'மூட்' டிஸ்டர்ப் ஆகாமல் இருப்பது மிக முக்கியம். நான் தற்போது வரைவதெல்லாம் புராண, இதிகாசப் படங்கள் என்பதால் அதிக சிரத்தை தேவைப்படும். ஒவ்வொரு முறையும் கடவுளைப் பிரார்த்தித்து விட்டுதான் வேலையைத் தொடங்குவேன். இதைச் சொன்னால் 'பைத்தியம்' என்பார்கள். இருந்து விட்டுப் போகிறேன். 'பைத்தியம்' என்றால் என்ன? தன்னிலை இழப்பது. ஒரு ஓவியனும் வரையும்போது தன்னிலை மறந்துதான் இருக்கிறான். இருப்பான். எதெதற்கோ பைத்தியமாக இருப்பதைவிட ஓவியப் பைத்தியமாக இருப்பதில் தப்பில்லை, இல்லையா?

சங்கர்

*****


சிவன் ஊட்டிய கொழுக்கட்டை
என் பேத்தி கோயமுத்தூரில் இருக்கிறாள். அவள் ஒருமுறை எனக்கு ஃபோன் செய்தாள். "தாத்தா நேற்று இரவு எனக்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில் சிவன் கைலாய மலை முன்னால் உட்கார்ந்திருக்கிறார். அவரருகே விநாயகர். எதிரே நந்தி. சிவலிங்கம் வடிவில் உள்ள மேடைமீது உட்கார்ந்து சிவன், தன் முன்னால் இருக்கும் கொழுக்கட்டையைப் பிள்ளையாருக்கு ஊட்டிவிடுவது மாதிரி கனவு கண்டேன். இதை நீ படமாக வரைந்து தா, தாத்தா!" என்றாள். அப்படியே நான் அதை வரைந்து அவள் திருமணத்திற்குப் பரிசாக அளித்தேன். அதுதான் இந்தப் படம்.

சங்கர்

*****


அம்புலிமாமா
சிறுவர்களுக்கிடையே நல்லுணர்வை ஊட்டவும், நமது தேசத்தின் பாரம்பரியம், பெருமை, நமது புராணங்களின் சிறப்பு, தர்மம், ஒழுக்கம் இவைபற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் சக்ரபாணி, பி. நாகிரெட்டி ஆகியோரால் ஜூலை 1947ல் ஆரம்பிக்கப்பட்டது 'சந்தமாமா'. தமிழில் அம்புலிமாமா. ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த இந்த இதழ், பின்னர் ஹிந்தி, சம்ஸ்கிருதம், கன்னடம், மலையாளம், குஜராத்தி, அஸ்ஸாமீஸ் என்று 14 மொழிகளில் வெளிவந்து பல லட்சம் பிரதிகள் விற்றது. சிறுவர் இதழ்களின் தலைமைப் பீடமானது. 1998 வரை கண்பார்வையற்றவர்களுக்கான அம்புலிமாமா பதிப்பு வெளிவந்தது. தற்போது அம்புலிமாமா மும்பையைச் சேர்ந்த Geodesic Limited பொறுப்பில் வெளியாகிறது. தமிழிலும், ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் அம்புலிமாமாவை இணையத்தில் வாசிக்க/கதைகளைக் கேட்க: chandamama.com

1947ன் அம்புலிமாமா இதழ் தொடங்கி 2006ம் ஆண்டு இதழ்கள் வரை கீழ்கண்ட இணையதளத்தில் படித்து வாசகர்கள் தங்கள் இளமை நாட்களுக்குத் திரும்பலாம்: chandamama.com
More

எம்.ஆர். ரங்கஸ்வாமி
Share: 




© Copyright 2020 Tamilonline