Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | சிரிக்க சிந்திக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
தயா லக்ஷ்மிநாராயணன் (www.dhayacomedy.com)
பம்பாய் சகோதரிகள் சி. சரோஜா - சி. லலிதா
- அரவிந்த் சுவாமிநாதன்|பிப்ரவரி 2011|
Share:
கேரளாவின் திருச்சூரில் பிறந்து, பம்பாயில் வளர்ந்து, இசை பயிலச் சென்னைக்கு வந்து, கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இசைப்பணி ஆற்றி வருபவர்கள் பாம்பே சிஸ்டர்ஸ் எனப்படும் சி. சரோஜாவும் சி. லலிதாவும். தமிழிசைச் சங்கம் வழங்கும் உயரிய விருதான 'இசைப்பேரறிஞர்', தமிழக அரசின் 'கலைமாமணி', இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, 'இசைக்கலைவாரிதி', 'இசைமாமணி', 'மதுரகான மனோரஞ்சனி', 'கந்தர்வ கான ஜோதி', 'சங்கீத கலாசாகரம்', நியூயார்க் தமிழ்ச் சங்கம் வழங்கிய 'தமிழ்க் கலைவாணி' உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கும் இவர்களுக்கு, சமீபத்தில் மகுடமாக 'சங்கீத கலாநிதி' விருதும் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் சீஸன் கச்சேரிகளில் பிஸியாக இருந்தபோதிலும், தென்றலுக்காக ஒரு மாலை நேரத்தை ஒதுக்கி உரையாடினர். அதிலிருந்து...

*****

கே: உங்களது இசைப் பயணத்தின் தொடக்கத்தை நினைவுகூர முடியுமா?
சரோஜா: இரண்டு பேரும் சேர்ந்தேதான் துவங்கினோம் என்று சொல்ல முடியாது. நான் அப்பா, அம்மாவுடன் பம்பாயில் இருந்தேன். லலிதா கேரளாவில் அத்தை வீட்டில் இருந்தாள். பின்னர் அப்பா அவளையும் பம்பாய்க்கே அழைத்து வந்து விட்டார். அப்பா, பெரியப்பா என்று நாங்கள் எல்லோரும் கூட்டுக் குடும்பமாக பம்பாயில் வசித்து வந்தோம். எங்கள் அக்காவும், பெரிய அக்காவும் (பெரியப்பா மகள்) சேர்ந்து சின்னச் சின்னக் கச்சேரிகள் செய்வார்கள். அவர்களோடு சேர்ந்து நாங்களும் ஓரிரண்டு கீர்த்தனைகள் பாடுவதுண்டு. முதலில் நான் 5, 6 வயது இருக்கும்போது பாட ஆரம்பித்தேன். 7, 8 வயதான பின்னர் லலிதாவும் என்னோடு சேர்ந்து பாட ஆரம்பித்தாள். நாங்கள் ஏழு குழந்தைகள். இருந்தாலும் அப்பாவிற்கு எங்கள் இருவர்மீதும் தனிப் பிரியம். நாங்கள் இருவரும் சிறுவயதிலேயே எப்போதும் ஒன்றாக இருப்போம். அப்பா எங்கள் இருவரையும் சங்கீத வகுப்பில் சேர்த்து விட்டார். அப்படி ஆரம்பித்ததுதான்.

லலிதா: ஆரம்பத்தில் எனக்குச் சங்கீதத்தில் அதிக ஆர்வம் இல்லை. சரோஜா அக்காதான் வற்புறுத்தி அன்பாகச் சொல்லிக் கொடுத்து, பயிற்சி எல்லாம் செய்யச் சொல்லி இசையில் ஆர்வம் உண்டாக்கினாள். அப்பா அதிகாரமாகச் சொல்வார். நாங்கள் சங்கீதத் துறைக்கு வந்ததற்கு அப்பா காரணம் என்றாலும், என்னை ஊக்கப்படுத்தி ஈடுபட வைத்தது அக்கா சரோஜாதான்.

கே: யாரிடம் இசை கற்றுக் கொண்டீர்கள்?
சரோஜா: முதலில் நாங்கள் ஸ, ப, ஸ கற்றுக் கொண்டது எங்கள் பெரிய அக்காவிடமிருந்தான். வர்ணம் வரை கற்றுக்கொண்டோம். பின்னர் H.A.S. மணி பாகவதரிடம் கற்றுக் கொண்டோம். அவர் திருவனந்தபுரம் மியூசிக் காலேஜில் செம்மங்குடியிடம் படித்தவர். ஒரு கச்சேரி செய்யுமளவுக்குச் சொல்லிக் கொடுத்தார். அப்போதுதான் பேப்பரில் இந்திய அரசு, இசை பயில ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கல்சுரல் ஸ்காலர்ஷிப் கொடுப்பதாக விளம்பரம் வந்தது. அதற்கு 18 வயது ஆகியிருக்க வேண்டும். லலிதாவுக்கு அப்போது 17 வயதுதான். அதனால் நான் அப்ளை செய்தேன். சென்னையில் குரல் தேர்வு நடந்தது. நான் செலக்ட் ஆகி விட்டேன்.

இசை படிக்கச் சென்னை வர வேண்டி இருந்தது. ஆனால் லலிதா வரவில்லையென்றால் நான் சென்னை செல்ல மாட்டேன், எனக்கு இந்த ஸ்காலர்ஷிப்பே வேண்டாம் என்று அப்பாவிடம் சொல்லி விட்டேன். அவரும் புரிந்து கொண்டார். எல்லோருமே குடும்பத்தோடு சென்னைக்கு வந்து விட்டோம். நாங்கள் மியூசிக் காலேஜில் சேர்ந்தோம். அப்போது முசிறி அங்கே பிரின்ஸ்பால். எங்களுக்கு சென்னை புதுசு. பெரிய வித்வான்கள் பரிச்சயமுமில்லை. அதனால் ஸ்காலர்ஷிப்பிற்கு 'கைட்' என்று யார் பெயரையும் கொடுக்க முடியவில்லை. அதனால் முசிறியே எங்கள் அப்பாவிடம், எங்களை தனது வீட்டிற்கு வந்து கற்றுக் கொள்ளும்படிக் கூறினார். மகிழ்ச்சியாகச் சம்மதித்தோம். இதில் முக்கியமான விஷயம், எனக்கு மட்டும்தான் ஸ்காலர்ஷிப் இருந்தது. லலிதாவுக்குக் கிடையாது. அதனால் 'ரூல்ஸ்'படி அவர், அவளுக்குச் சொல்லித் தர முடியாது. இருந்தாலும் முசிறி எங்கள் இருவருக்குமே கற்றுத்தரச் சம்மதித்தார். 'நான் உனக்குக் கற்றுத் தருகிறேன். லலிதா சும்மா கூட இருந்து கேட்டுக் கொள்ளட்டும்' என்று கூறினார். 1960ல் அந்த கோர்ஸை முடித்தோம். 'சங்கீத வித்வான்' பட்டம் பெற்றோம். பின்னர் பம்பாய் சென்றுவிட்டோம்.

கே: உங்கள் அரங்கேற்றம் எப்போது நடந்தது?
ப: 1962 என்று நினைக்கிறோம். மயிலாப்பூர் சாயிபாபா கோவிலில் வருடா வருடம் நவராத்திரி இசைவிழா நடக்கும். பெரிய ஜாம்பவான்கள் வந்து பாடுவார்கள். அதில் ஜூனியர் பிரிவில் பாடுவதற்காக பம்பாயில் இருந்து வந்தோம். அன்று மாலை மதுரை மணி ஐயர் கச்சேரி. ஆனால் காலையில் அவருக்கு திடீரென உடல் நலமில்லாமல் போய்விட்டது. அதனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் அவரை அணுகி என்ன செய்வதெனக் கேட்டார்கள். அவர், 'எனக்கு முன்னால் யார் போடப் போகிறார்கள்?' என்று கேட்டிருக்கிறார். அதற்கு 'பம்பாயிலிருந்து இரண்டு பெண்கள் வந்திருக்கிறார்கள். சிதம்பரம் ஐயரின் பெண்களாம்' என்று சொல்லியிருக்கிறார்கள். 'ஓ, அவர்கள் நன்றாகப் பாடுவார்களே, அவர்கள் கச்சேரியையே ஏற்பாடு செய்துவிடுங்கள்' என்று சொல்லி விட்டிருக்கிறார். அவருக்கு எங்களை எப்படித் தெரியும் என்றால், பெரிய பாடகர்கள் பம்பாய்க்குக் கச்சேரி செய்ய வந்தால், எங்களை அழைத்துக் கொண்டு போய் அப்பா அவர்கள் முன் பாட வைப்பார். ஒருமுறை மதுரை மணி ஐயர் முன்னால் பாடியிருக்கிறோம்.

அது தெய்வச் செயல். மதுரை மணி ஐயர் கச்சேரியைக் கேட்க மக்கள் கூட்டமாகத் திரண்டிருந்தனர். அங்கே நாங்கள் பாடினோம். அது ஒரு மிகப் பெரிய திருப்பு முனை. அதன் பிறகு எங்களைப் பற்றி வெளியே எலோருக்கும் தெரிய வந்தது. நிறையக் கச்சேரி வாய்ப்புகள் வரத் துவங்கின.

கே: உங்களது இசை முயற்சிகளுக்கு எந்த அளவிற்கு உங்கள் குடும்பத்தில் ஊக்குவிப்பு இருந்தது?
ப: எங்களைவிட அப்பாவுக்கு நாங்கள் பெரிய சங்கீத வித்வான்ள் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. அம்மாவுக்கு இசையார்வம் இருந்தாலும், எங்களை நல்லபடியாக சீக்கிரம் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கவலையும் இருந்தது. எங்களை அம்மா எந்த வேலையும் செய்ய விட மாட்டாள். முடியாவிட்டால் கூட எல்லா வேலையையும் தானேதான் செய்வாள். நீங்கள் பாடுங்கள், சாதகம் பண்ணுங்கள். இந்த வேலையெல்லாம் நீங்கள் செய்ய வேண்டாம் என்று கூறிவிடுவாள். மற்ற சகோதர, சகோதரிகளும் அப்படித்தான். அதேபோல, புகுந்த வீடுகளிலும் எங்களை ஊக்குவித்தார்கள்.

கே: அது குறித்துச் சொல்லுங்களேன்....
லலிதா: சரோஜாவின் புகுந்த வீடு ரொம்பப் பெரியது. அவள் மூத்த நாட்டுப் பெண் வேறு. நிறையப் பொறுப்புகள். அப்படி இருந்தும் அவர்கள் அரவணைத்துப் போனார்கள். எப்படி என்றால், சரோஜா குடும்பத்தோடு இருந்த குரோம்பேட்டை வீட்டை விட்டுவிட்டு நான் வசித்த வீட்டு மாடிக்கு அத்தனை பேரும் குடி வந்தார்கள். காரணம், நான் ஒரு மூலை அவள் ஒரு மூலை என்று இருந்தால் கச்சேரிகளுக்குச் செல்வது, பாடம் கேட்கச் செல்வது என எல்லாவற்றிலும் பிரச்சனைகள் வரும். தாமதமாகும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான். அந்த அளவுக்கு புகுந்த வீட்டினர் எங்களுக்கு சப்போர்ட் ஆக இருந்தனர்.

சரோஜாவின் கணவர் ராஜாராமனுக்கு லலித்கலா அகாடமியின் சீஃப் செகரட்டரியாக புரோமோஷன் கிடைத்து டெல்லிக்குப் போனார். கனாட் ப்ளேஸில் உள்ள பகல்பூர் அரண்மனையின் ஒரு பகுதியை தங்குவதற்கு ஒதுக்கியிருந்தனர். அரண்மனையே வீடு, கௌரவம், ராஜ போகமான வாழ்க்கை. யாருமே மனைவி, குழந்தையோடு அவற்றை அனுபவித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் சரோஜாவின் கணவர், “நீ இங்கு வந்தால் லலிதாவோடு இவ்வளவு காலம் கஷ்டப்பட்டு உழைத்தது வீணாய்ப் போய்விடும். ஆகவே நீ அங்கேயே இருந்து கச்சேரிகள் செய். நான் அவ்வப்போது வந்து பார்த்து விட்டுப் போகிறேன்” என்று கூறி விட்டார். சரோஜா, தனது குழந்தையையும் வைத்துக் கொண்டு இங்கேயே இருந்தாள். அது நாங்கள் வளர்ந்து வந்து கொண்டிருந்த தருணம். அப்போது மட்டும் ஏதாவது தடை வந்திருந்தால் நாங்கள் இந்த அளவிற்கு வந்திருக்க முடியாது. அவர் செய்தது பெரிய தியாகம்.

சரோஜா: அது போல லலிதாவின் கணவருக்கு (வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன்) ஓபன் ஹார்ட் சர்ஜரி நடக்க இருந்தது. அதுவும் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொல்லி விட்டார். அது டிசம்பர் மாதம் வேறு. லலிதாவின் கணவர் அவளைக் கூப்பிட்டு, “இதோ பார், எனக்கு ஆபரேஷன் என்பதற்காக நீ கச்சேரி எதையாவது கேன்சல் செய்வதானால் நான் ஆபரேஷனே செய்துகொள்ள மாட்டேன். நீ 18 கச்சேரிகளிலும் கண்டிப்பாகக் கலந்து கொண்டு பாடுவேன் என்று சொன்னால்தான் நான் ஆபரேஷனே செய்து கொள்வேன்” என்று கூறிவிட்டார். அந்த அளவுக்கு அவர் உணர்வுபூர்வமாக சங்கீதத்தை நேசித்தார். இப்படி எங்கள் பிறந்த வீடு மட்டுமல்லாமல், புகுந்த வீடு, கணவர் என்று எல்லோராது தியாகத்தினாலும் தான் நாங்கள் சங்கீதத்தில் சிறக்க முடிந்தது. சொல்லப் போனால் எங்கள் இருவரது கணவர்களும் சகோதரர்கள் போலவே பழகி வருகின்றனர்.

கே: அப்படியானால் உங்களிருவருக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் வந்ததே இல்லையா?
ப: அப்படி எப்படிச் சொல்ல முடியும்? வரும். ஆனால் நாங்கள் அதைப் பெரிதுபடுத்த மாட்டோம். யாராவது ஒருவர் தணிந்து விட்டுக்கொடுத்துப் போய் விடுவோம். எங்களுக்கு சங்கீதம் முக்கியம். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டிருப்பதால் எங்களுக்கு எந்த ஈகோவும் இல்லை.

கே: உங்கள் முன்னோடிகளாக யாரைக் கருதுகிறீர்கள்?
ப: எம்.எஸ். அம்மா, டி.கே. பட்டம்மாள், எம்.எல்.வி. ஆகியோரைச் சொல்லலாம். பெண்களாலும் இசைத் துறையில் சாதிக்க முடியும் என்பதைக் காட்டியவர்கள். அதிலும் ஸ்பெஷலாக எம்.எஸ். அம்மாவை ரொம்பப் பிடிக்கும். காரணம், அந்தக் குரலில் ஒரு மயக்கம். சிறு வயதில் சரோஜா எம்.எஸ்.ஸை இமிடேட் செய்தே பாடுவாள். எங்களுக்கு ரோல் மாடல், முன்னோடி எல்லாமே எம்.எஸ். அம்மாதான்.

கே: தமிழில் நிறையக் கீர்த்தனைகள் பாடியிருக்கிறீர்கள் அல்லவா, அது குறித்துச் சொல்லுங்கள்...
ப: ஆமாம். திருப்பாவை, திருவெம்பாவை, பாரதியார் பாடல்கள், ஊத்துக்காடு கீர்த்தனைகள், அருணாசலக் கவிராயர் பாடல்கள், திவ்ய பிரபந்தம், பாசுரங்கள், ஆழ்வார் பாடல்கள், திருமுருகாற்றுப் படை, திருப்புகழ், திருவருட்பா, கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள், தூரன் பாடல்கள் என்று நிறையப் பாடியிருக்கிறோம். அது மட்டுமல்லாமல் சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாமம் இவையெல்லாம் கூடத் தமிழில் பாடியிருக்கிறோம். எங்கள் பெரிய குரு முசிறியிடமிருந்தே நிறையக் கீர்த்தனைகள் கற்றுக் கொண்டிருக்கிறோம். அவர் அருணாசலக் கவிராயர், கோபால கிருஷ்ண பாரதியார் பாடல்களை எல்லாம் நிறையப் பாடியிருக்கிறார். திருப்புகழுக்கு, அம்புஜம் கிருஷ்ணாவின் பாடல்களுக்கெல்லாம் நிறைய மெட்டமைத்திருக்கிறார். கச்சேரியில் அவர் தமிழ்ப் பாடல் பாடாமல் இருக்க மாட்டார். நாங்கள் மியூசிக் காலேஜில் படிக்கும் போதே திருப்புகழ், திருவருட்பா எல்லாம் நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார். கோபாலகிருஷ்ண பாரதியின் காம்போஜியில் அமைந்த திருவடி சரணம் பாடலுக்கு ட்யூன் அமைத்தது முசிறிதான். அவர் நிறைய தமிழிசைக்காகச் செய்திருக்கிறார். பத்து கச்சேரி இருந்தால் இரண்டு கச்சேரிகளில் முழுக்க முழுக்க தமிழ்ப் பாடல்களைப் பாடுவார்.

அப்புறம் டி.கே. கோவிந்தராவ். அவரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். நாங்கள் கொடுத்திருக்கும் பெரும்பாலான கிளாசிக்கல் தமிழ் கேசட்டுகளுக்கு டியூனிங் அவர்தான். பெரியசாமித் தூரனின் பாடல்களை வர்ணத்திலிருந்து மங்களம் வரை முழுமையாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அது மாதிரி அம்புஜம் கிருஷ்ணாவும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். திருப்புகழுக்கு நிறைய ட்யூன் போட்டு எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். டிவோஷனல் பாடல்களுக்கு எல். கிருஷ்ணன். இப்படி எல்லோரது பக்க பலமும், ஒத்துழைப்பும் இருந்ததால் தான் நிறைய தமிழ்க் கீர்த்தனைகளை, பாடல்களை எங்களால் கொடுக்க முடிந்தது.
கே: திரைப்படங்களிலும் நீங்கள் பாடியிருக்கிறீர்கள் அல்லவா?
ப: அந்தக்காலத்தில் ஓரிரண்டு படங்களில் பாடியிருக்கிறோம். ராமமூர்த்திதான் (விஸ்வநாதன்- ராமமூர்த்தி) வாய்ஸ் டெஸ்ட் செய்தார். 'இருவர் குரலுமே நன்றாக இருக்கிறது. உங்களுக்குள் முடிவு செய்துகொண்டு யாராவது ஒருவர் மட்டும் பாட வாருங்கள்' என்றார். இருவருக்குமே வாய்ப்புத் தருவதாக இருந்தால்தான் வருவோம் என்று நாங்கள் சொன்னோம். எங்களுக்குள் ஒருவர் மட்டும் சினிமாவில் பாடிப் புகழ்பெற்று, மற்றவர் புகழ்பெறாமல் இருந்தால், அது எங்களுக்குள்ளே மனஸ்தாபங்களை ஏற்படுத்தலாம். கச்சேரிகள் செய்வது தடைப்படலாம். அதனால் நாங்களே திரைப்படங்களுக்குப் பாடும் வாய்ப்புகளைத் தவிர்த்து விட்டோம். எங்களுக்கு சங்கீதம்தான் முக்கியம். சினிமா செகண்டரிதான். டி.ஆர். பாப்பாவுக்கு அதில் மிகவும் வருத்தம். அவர் எங்கள் இசையின் ரசிகர்.

கே: சங்கீத ஜாம்பவான்களுடன் பழகிய அனுபவங்கள் குறித்து...
ப: ஒருமுறை எம்.எஸ். அம்மாவைச் சந்திக்கச் சென்றிருந்தோம். நிறையப் பேர் அங்கே இருந்தார்கள். எம்.எஸ். எங்களைப் பார்த்து, “எல்லாரும் சொல்றா. என்னை மாதிரியே பாடறேள் நீங்கன்னு. ரொம்ப சந்தோஷம். நான் சிரமப்படாமலேயே எனக்கு ரெண்டு சிஷ்யாள். வாரிசு வந்திருக்கு” என்றார் புன்னகையுடன். அதைக் கேட்ட எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ஒருமுறை கிருஷ்ண கான சபாவில் நடந்த சங்கீத சூடாமணி விருது நிகழ்ச்சிக்கு டி.கே. பட்டம்மாள் தலைமை தாங்கினார். அவர் பேசும் போது, “இவர்களுடைய சி.டி. கேசட்டுகளைப் போட்டு வைக்கவே வீட்டில் ஒரு தனி ரூம் கட்ட வேண்டும் போல இருக்கிறது” என்றார். எங்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது.

லால்குடி ஜெயராமன் ஒரு நிகழ்ச்சியில், ”இவாளுக்கு ஒரு குருநாதர் அமைந்திருக்கிறார். அவர் மணியை (காலம்) பத்தியும் கவலைப்படமாட்டார். Money-யைப் பத்தியும் கவலைப்பட மாட்டார். இவா இவ்வளவுதூரம் வந்திருக்கான்னா அதுக்கு நல்லதொரு குருநாதர் இவாளுக்கு அமைஞ்சிருக்கா. இவாளும் அந்த மாதிரி குருபக்தியோட இருக்கா. அதுதான் காரணம்” என்று சொன்னார். அது உண்மையும் கூட. நாங்கள் பாடல்களில் எந்தச் சந்தேகம் கேட்டாலும், அது ராத்திரியாக இருந்தாலும் கூட, நேரம் காலம் பார்க்காமல் சலிக்காமல் சொல்லிக் கொடுப்பார் எங்கள் குரு டி.கே. கோவிந்தராவ். ஒருமுறை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வந்து புரந்தரதாஸர் நாமா கீர்த்தனைகள் வேண்டும், தாஸா ப்ராஜெக்ட் நீங்கள் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள். ஒரே மாதத்தில் உட்கார்ந்து, எல்லாவற்றையும் பார்த்து, இசையமைத்து இரண்டாவது மாதம் எங்கள் கையில் கொடுத்து விட்டார். நாங்கள் ப்ராக்டிஸ் பண்ணி மூன்றாவது மாதத்தில் ரெகார்டிங் முடித்து விட்டோம். அப்படி அபார ஞானமும், உழைப்பும் கொண்டவர் அவர். அந்த மாதிரி ஒரு குரு அமைந்ததும் கூட நாங்கள் செய்த பாக்யம்தான், பூர்வ ஜென்மப் புண்ணியம் தான்.

கே: வெளிநாட்டுக் கச்சேரி அனுபவங்கள் பற்றிச் சொல்லுங்கள்...
ப: வெளிநாடுகளில் ரசிகர்கள் ஆர்வத்தோடு நிகழ்ச்சிக்கு வந்து, இறுதிவரை இருந்து கேட்பார்கள். கச்சேரி கேட்பதோடு, அதைப் பற்றிய தங்கள் சந்தேகங்களையும் கேள்விகளாகக் கேட்பார்கள். ஒருமுறை சியாட்டில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த 500 பேரில் 200 பேர் ஃபாரினர்ஸ். கச்சேரி முடிந்ததும் அவர்கள், ஏன் மூக்குத்தி போட்டுக் கொண்டிருக்கிறீர்கள், எதற்காகக் குங்குமம் வைக்கிறீர்கள், ஏன் வகிடெடுத்து குங்குமம் வைக்கிறீர்கள் என்றெல்லாம் சங்கீதம் தொடர்பாக மட்டுமல்லாமல் கலாசாரம் தொடர்பாகவும் பல கேள்விகள் கேட்டனர். அவர்களின் ஆர்வம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

அதேபோல 1997ல் ரட்கர்ஸ் யூனிவர்சிடியில் ஒரு தமிழிசைக் கச்சேரி. அரங்கம் நிரம்பி விட்டது. 'ஹவுஸ்ஃபுல்' என்று போர்டு போட்டு விட்டார்கள். ஆனாலும் கட்டுக்கடங்காத கூட்டம். சேர்களை நகர்த்தி, கீழே கார்பெட் விரித்து அதில் அமர்ந்து எல்லோரும் ரசித்தனர். தமிழிசைக்கு அவ்வளவு வரவேற்பு. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கச்சேரிக்கு வந்திருந்தனர். மறுநாள் 'சிமானா' என்பவர் நடத்தும் ஆங்கிலச் செய்தித் தாளில் ஒரு மைக்கேல் ஜாக்ஸன் நிகழ்ச்சியைக் கண்டு களிக்கத் திரண்டு வரும் ரசிகர்கள் அளவிற்கு தமிழ் இசையை ரசிக்கவும் மக்கள் திரண்டு வந்திருந்தனர் என்னும் பொருள் படியாக ரிவியூ வந்திருந்தது.

கே: காஞ்சிப் பெரியவர் உட்பட பல மகான்களைச் சந்தித்திருக்கிறீர்கள் அல்லவா?
ப: ஆம். பல தடவை. நாங்கள் சின்னவர்களாக இருக்கும் போது ஒருமுறை பெரியவர் மைலாப்பூர் சமஸ்கிருதக் கல்லூரியில் தங்கியிருந்தார். அப்போது எம்.எஸ். அம்மா வந்து பாடினார். எல்லோரும் பாராட்டினார்கள். எப்போது பெரியவர் முன்னால் நாம் பாடுவோம் என்று அந்தச் சிறுவயதில் அடிக்கடி நினைத்து ஏங்கித் தவித்திருக்கிறோம். பின்னால் பெரியவர் ஜயந்தியின் போதும், மற்ற பல நிகழ்ச்சிகளிலும் பாடியிருக்கிறோம். ஆனால் அதில் ஒரே ஒரு நிகழ்ச்சியை மட்டும் எங்களால் மறக்கவே முடியாது.

கே: என்ன அது?
ப: ஒருமுறை தரிசனத்திற்காக நாங்கள் காஞ்சிபுரம் சென்றிருந்தோம். ஜயேந்திரர் பூஜை செய்து கொண்டிருந்தார். பெரியவர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது நாங்கள் அவர் முன்னால் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதைச் சொன்னோம். ஆனால் அங்குள்ளவர்களில் ஒருவர் பூஜை நடந்து கொண்டிருப்பதால் பாடக் கூடாது என்று சொன்னார். உடனே அதைக் கேட்ட பெரியவர் தலையை அசைத்து, எங்களைப் பாடுமாறு பணித்தார். நாங்களும் சந்தோஷத்துடன் ஒரு பாடலைப் பாடினோம். நாங்கள் பாடி முடித்ததும், பெரியவர் அவர் கழுத்தில் போட்டிருந்த ஏலக்காய் மாலைகளைக் கழற்றி ஆளுக்கு ஒன்றாக எங்களுக்குத் தந்தார். அதை ஒரு மிகப் பெரிய பாக்யமாக நாங்கள் கருதுகிறோம். இப்போதும் அதை பூஜை அறையில் வைத்திருக்கிறோம். அதுமட்டுமல்ல. பின்னால் காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான விதூஷிகளாகவும் நாங்கள் நியமிக்கப்பட்டோம். அதுபோல புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள், தயானந்த சரஸ்வதி சுவாமிகள்போலப் பல மகான்களைச் சந்தித்திருக்கிறோம். பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவை, பம்பாய் சகோதரிகளாக அல்லாமல் பக்தைகளாகப் பலமுறை தரிசனம் செய்திருக்கிறோம். ஆனால் அவர் திருமுன் பாடும் சந்தர்ப்பம் இன்னும் வாய்க்கவில்லை.

கே: தற்காலத்துக் கச்சேரிகளில் தமிழ்க் கீர்த்தனைகள் அதிகம் பாடப்படுகிறதா?
ப: நிச்சயமாக. பல சபாக்கள் தமிழிசைக்கு நேரம் ஒதுக்குகிறார்கள். அதுபோல பல கச்சேரிகளிலும் தமிழ்க் கீர்த்தனைகள் பாடப்படவே செய்கின்றன. அங்கே தெலுங்கு, கன்னடம், மராத்தி அபங், ஹிந்தி என்று பல மொழிகளிலும் கலந்துதான் பாடுகிறார்கள். ஒரு இன்ஸ்ட்ருமெண்டலை ரசிக்கிறோம். மொழி புரிந்தா ரசிக்கிறோம்? இசையைத்தானே ரசிக்கிறோம்? அதுபோலத்தான். இசைக்கு மொழி கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளாத சிலர்தான், தமிழில் பாடப்படுவதில்லை என்று குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையில்லை. இப்போதுகூட நாங்கள் பாரதியார் இல்லத்தில் முழுக்க முழுக்க அவர் பாடல்களைப் பாடிக் கச்சேரி செய்து விட்டு வந்தோம்.

தங்களிடம் பயின்ற மாணவர்கள் இன்று கச்சேரி செய்து வருவதை மகிழ்ச்சியுடன் குறிப்பிடும் பாம்பே சகோதரிகள், குடும்பப் பொறுப்புக் காரணமாகச் சொல்லித் தர இயலவில்லை என்கின்றனர். தங்கள் எட்டு வயதுப் பேரன் இசை கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறான் என்பதில் ஒரே மகிழ்ச்சி. அவனுக்கு நல்ல ஞானமும் ஆர்வமும் இருக்கிறதாம். ஒருவேளை அவன் இசைத்துறையில் முன்னுக்கு வரக்கூடும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். 'அப்படியே ஆகுக!' என்று வாழ்த்தி, நமக்கு நேரம் ஒதுக்கியமைக்காக நன்றி கூறி விடை பெற்றோம்.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

பார்த்தால் தெரியாது பக்குவம்!

30, 35 வருடங்களுக்கு முன்னால் ஒருமுறை மைசூர் அருகே ஹாசன் என்ற ஊரில் கச்சேரி செய்யப் போயிருந்தோம். ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தார்கள். கிழிந்த ஆடை, கலைந்த தலையுடன் பார்த்தாலே பரம ஏழையாகத் தெரிந்த ஒருவர் வந்து பார்வையாளர்களிடையே அமர்ந்தார். “ஆடியன்ஸைப் பார்த்தியா! எல்லாம் தலைவிதி. இவங்களுக்கெல்லாம் சங்கீதம் எங்கே புரியப் போகிறது?” என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம். அது தவறு, ஒருவிதத்தில் திமிர் என்று கூடச் சொல்லலாம். எத்தனையோ பேர் இருக்க, அவரை மட்டும் பார்த்து அவ்வாறு சொல்ல வேண்டிய அவசியமில்லை.

பல கன்னடப் பாடல்களைப் பாடிய பின்னர் “ஹரி சித்த சத்திய மர சித்த கே லவலேச” என்ற தாஸர் நாமாவைப் பாடினோம். அதன் பொருள், 'மனிதன் நினைப்பது எதுவும் நடக்காது. எல்லாம் அந்த ஹரி என்ன நினைக்கிறானோ அதுதான் நடக்கும். அதுதான் ஸத்யம். ஆகவே உனக்குக் கஷ்டம் வந்தால் ஹரியை நினை. அவன் எல்லாவற்றையும் தீர்த்து வைத்து விடுவான். நீயாக ஒன்றும் தீர்மானம் பண்ணாதே' என்பது. நாங்கள் அதைப் பாடப்பாட அவரது கண்களில் கண்ணீர். அவர் அழுவதைப் பார்த்ததும் எங்களுக்கும் ஒருமாதிரி ஆகிவிட்டது.

நிகழ்ச்சி முடிந்ததும் ஓடோடி வந்த அவர் எங்களைக் கைகூப்பி வணங்கினார். கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. உடல், கை கால் எல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தன. நாங்கள் பதறிப்போய் ”என்ன இது. எங்களைவிட நீங்கள் வயதில் மூத்தவர். இப்படிச் செய்யலாமா?” என்று கடிந்து கொண்டோம். அதற்கு அவர், “அம்மா, நான் உங்களை நமஸ்காரம் செய்யவில்லை. உங்கள் ரூபத்தில் சாட்சாத் அந்த சரஸ்வதி தேவியைப் பார்க்கிறேன். அவளுக்குத்தான் நமஸ்காரம் செய்தேன். என்னமாகப் பாடி விட்டீர்கள்! புரந்தரதாஸரின் பாடல்களை சாமான்யர்களுக்கும் புரிய வைத்து விட்டீர்களே” என்று சொல்லிக் கண்கலங்கி விடைபெற்றார்.

நாங்கள் அவரை சங்கீத ஞானமில்லாதவர் என்று நினைத்தோம். ஆனால் அவர் ஞானம் என்றால் என்ன என்று எங்களுக்கு விளக்கிவிட்டுப் போய்விட்டார். இனிமேல் தோற்றத்தைப் பார்த்து யாரையும் எடைபோடக் கூடாது என்று முடிவு செய்தோம். அது பகவான் எங்களுக்குப் புகட்டிய பாடம்.

*****


இளைய கலைஞர்களை ஊக்குவிக்க ஒரு டிரஸ்ட்

முக்தாம்பரம் ட்ரஸ்ட் எங்கள் பெற்றோரின் நினைவாக உருவாக்கப்பட்டது. எங்கள் தாயின் பெயர் முக்தாம்பாள். தந்தை, சிதம்பரம் அய்யர். நாங்கள் முன்னுக்கு வர மிகவும் கஷ்டப்பட்டோம். ஊக்குவிக்க அக்காலத்தில் எந்த அமைப்புகளோ சபாக்களோ அதிகம் இல்லை. நாங்கள் ஓரளவு நல்ல நிலைமைக்கு வந்ததும் எங்கள் தந்தை எங்களைக் கூப்பிட்டு, வருங்காலத்தில் இதேபோல யாரும் சிரமப்படக் கூடாது. அதற்கு உதவ ஒரு ட்ரஸ்ட் அமையுங்கள் என்று சொன்னார். அதன்படி இந்த டிரஸ்ட்டை உருவாக்கினோம். இதற்கான நிதி முழுக்க முழுக்க எங்கள் சொந்த சம்பாத்தியம் தான். வெளியாரிடமிருந்து நிதி பெறுவதில்லை. திறமையான இளம் இசைக் கலைஞர்களைக் கண்டறிந்த்து ஊக்குவிக்கிறோம்.

டிரஸ்ட் கச்சேரி எல்லாம் நடத்தாது. டிசம்பர் சீஸனில் எல்லா சபாக்களிலும் நடக்கும் மதியநேரக் கச்சேரிகளுக்கு நாங்கள் நிறைய ஸ்பான்ஸர் செய்கிறோம். இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் பல இளைய இசைக் கலைஞர்கள் எங்கள் டிரஸ்ட் மூலம் அறிமுகமானவர்கள்தான். எங்களிடம் உதவி கேட்பவர்களுக்கு, முடிந்த அளவுக்கு உதவுகிறோம்.
More

தயா லக்ஷ்மிநாராயணன் (www.dhayacomedy.com)
Share: 




© Copyright 2020 Tamilonline