Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நலம்வாழ | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | அஞ்சலி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதை பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
பிரபாகர் சுந்தர்ராஜன்
'சொல்வேந்தர்' சுகி சிவம்
- அரவிந்த்|ஜூன் 2010|
Share:
சுகிசிவம். இன்றைய தமிழகத்தின் சிறந்த ஆன்மீக, இலக்கியச் சொற்பொழிவாளர். கந்தபுராணம், கம்ப ராமாயணம் முதல் அபிராமி அந்தாதிவரை தமிழின் பல இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவும், தேர்ந்த பயிற்சியும், ஞானமும் மிக்கவர். தென்றலுக்காக அவருடன் உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து....

கே: பொருளாதாரமும் சட்டமும் படித்த உங்களுக்குச் சொற்பொழிவுக் கலையின் மீது நாட்டம் வந்தது எப்படி?

ப: நான் சென்னை சாந்தோம் பள்ளியில் படிக்கும் போதே அங்கு நடக்கும் பட்டிமன்றம், பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறேன். இயல்பாகவே எனக்கு இருந்த அந்த ஆர்வம் தமிழறிஞர் சிதம்பரம் சுவாமிநாதன், திருமுருக கிருபானந்த வாரியார், கி.வா. ஜகந்நாதன், குன்றக்குடி அடிகளார், அவ்வை நடராசன் போன்றோரது சமய, இலக்கியச் சொற்பொழிவுகளைக் கேட்டதன் மூலம் அதிகரித்தது. பல அறிஞர்களது சொற்பொழிவுகளைக் கேட்டதால் சிறுவயதிலேயே சமயம், இலக்கியம், சமூகம் சார்ந்த சிந்தனைப் போக்கு வளர்ந்தது. தொடர்ந்து விவேகானந்தா கல்லூரியில் படித்தபோதும், சட்டக் கல்லூரியில் படித்த போதும் இந்தச் சிந்தனைகள் மேலும் விரிவடைந்தன. சமய, இலக்கியச் சொற்பொழிவாளர் ஆனேன்.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajan



கே: உங்கள் தந்தை சுகி. சுப்ரமண்யம் ஒரு பிரபல எழுத்தாளர். அவருடனான மறக்க முடியாத அனுபவங்கள் குறித்துச் சொல்லுங்களேன்!

ப: என் தந்தை ஓர் எழுத்தாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். அகில இந்திய வானொலியில் சேர்ந்த பின்னர்தான் ஒரு சுமுகமான வாழ்வு அவருக்குக் கிடைத்தது. அதனால் முழுநேர இலக்கியவாதியாக இருப்பது மிகவும் கடினம் என்பார் அவர். அவ்வாறு இருந்த பலரும் அப்போது வறுமையில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதை அவர் சொல்லுவார். அதனால் நீ நிறையப் படி, சட்டம் படி என்று என்னை ஊக்குவித்தார்.

முதலில் என்னைச் சட்டம் படி என்று சொன்ன தந்தை, பின்னர் நான் முழுநேரப் பேச்சாளன் ஆகிறேன் என்று சொன்னபோது மறுக்கவில்லை. தந்தையின் நண்பர் ஒருவர் அவரிடம், “நீங்கள் பையனை இப்படியே விட்டு விட்டீர்கள். அவனும் மேடை மேடையாகச் சுற்றிக் கொண்டிருக்கிறான். நாளைக்கு அவன் எதிர்காலம் என்ன ஆவது? சாப்பாட்டுக்கு என்ன செய்வான்” என்று கேட்டார். அதற்கு என் தந்தை, “எனக்கு அவன் மீது நம்பிக்கை இருக்கிறது. அவன் பேசினால் வாரியார் மாதிரி பேசுவான். ஆனால் எழுதினால் ஜெயகாந்தன் மாதிரி எழுதுவான். அதனால் அவன்மீது பூரண நம்பிக்கை இருக்கிறது” என்று சொன்னார். அப்பா என்மீது வைத்திருந்த அந்த நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய moral support. நான் போக நினைத்த துறையில் எனக்கு எவ்வித இடைஞ்சலும் கொடுக்காதவர் என் தகப்பனார். இதை என்னால் மறக்க முடியாது.

கே: சமயச் சொற்பொழிவு அனுபவம் குறித்துச் சொல்லுங்களேன்!

மதம் வேறு; ஆன்மீகம் வேறு. இந்தத் தெளிவு மக்களுக்கு இல்லை. பல சமயத் தலைவர்களுக்கு இல்லை. பத்திரிகைகளுக்கும் இல்லை. ஜோதிடம், மதம் இவையெல்லாம் தனித்தனித் துறைகள். இவற்றையெல்லாம் பிழைப்புக்காக சில சந்தர்ப்பவாதிகள் ஒரே தலைப்பில் சேர்த்துக் குழப்பி விட்டார்கள்.
ப: சமயச் சொற்பொழிவுகளில் ஒரு அனுகூலம் என்னவென்றால் நாம் சொல்ல நினைக்கும் கருத்தை, செய்தியை ஏதாவது ஒரு பாத்திரத்தில் ஏற்றிச் சொல்லலாம். மக்களுக்கு நல்ல பல விஷயங்களை அறிவுறுத்தலாம். அதனால்தான் நான் சமயச் சொற்பொழிவுத் துறையைத் தேர்ந்தெடுத்தேன். வாரியார், கீரன் என்று பலர் அத்துறையில் இருந்தார்கள். நானும் பல ஆண்டுகள் அந்தப் பாதையில்தான் பயணித்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் சமயச் சொற்பொழிவிலும் எனக்குச் சலிப்பு வந்து விட்டது. ஏனென்றால் சில சமயங்களில் பொய்மையைக் கூட நாம் நியாயப்படுத்த வேண்டியிருக்கிறது. அறிவுக்கு ஒவ்வாத விஷயங்களைக் கூட நாம் மதத்தின் பெயரால் வற்புறுத்த வேண்டியிருக்கிறது. மேலும் சாதியம் என்ற நச்சு நோயைத் தாண்டி சமயத்தை எடுத்து வருவது என்பதும் இங்கே சுலபமானதல்ல. சரியான நீதி என்பது சமயத்தின் பெயரால் சமூகத்திற்குக் கிடைக்காது என்ற எண்ணம் தோன்றியது. அந்த மாதிரிக் காலகட்டத்தில் இதை விட்டுவிட்டு என்ன செய்வது என்று யோசித்தபொழுதுதான் சன் தொலைக்காட்சியில் 'இந்த நாள் இனிய நாள்' நிகழ்ச்சியில் உரையாற்றும் வாய்ப்பு வந்தது.

அது ஒரு நல்ல தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன்மூலம் பல்வேறு இலக்கிய அமைப்புகள், சமூக அமைப்புகள், சங்கங்களுடன் தொடர்பும், அவர்களுக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளும் வந்தன. மிலாடி நபி விழா போன்றவற்றில் கூட கலந்து கொண்டு பேச அழைத்தார்கள். சமயம் சாராத, சமூக நலன் சார்ந்த என்னுடைய நடுநிலைப் பார்வை பலருக்கும் பிடித்திருந்தது. சமூகப் பார்வை, மொழி வளம், இலக்கிய அனுபவம் போன்றவை இருந்ததால், நான் அனைவருக்கும் பொதுவான மனிதனாக வலம்வரும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்தச் சூழலில்தான் கல்கி ராஜேந்திரன் என்னை ஒரு தொடர் எழுதச் சொன்னார். அதற்கு நல்ல வரவேற்பிருந்தது. அடுத்து விகடனில் எழுத அழைத்தார்கள். அதுவும் பரவலான கவனத்தைப் பெற்றது. அதனால் சொற்பொழிவோடு கூட முழுநேர எழுத்தாளனாகும் வாய்ப்பு உருவானது. இப்பொழுது எனது பணி முழுவதையும் சமூகத்திற்கு நன்மையைச் செய்கிற, விழிப்புணர்வை ஊட்டுகிற வகையில் பேச்சு, எழுத்து எனச் செய்கிறேன்.

கே: ஆன்மீகம் என்பது குறித்து உங்கள் கருத்தென்ன?

ப: மதம் வேறு; ஆன்மீகம் வேறு. இந்தத் தெளிவு மக்களுக்கு இல்லை. பல சமயத் தலைவர்களுக்கு இல்லை. பத்திரிகைகளுக்கும் இல்லை. ஜோதிடம், மதம் இவையெல்லாம் தனித்தனித் துறைகள். இவற்றையெல்லாம் பிழைப்புக்காக சில சந்தர்ப்பவாதிகள் ஒரே தலைப்பில் சேர்த்துக் குழப்பி விட்டார்கள். ஜோதிடம் என்பது ஒருவிதமான கணித முறை. இந்தச் சுழற்சி இன்று இப்படி இருந்தால், நாளை அப்படி இருக்கும் என்று அவற்றைக் கணக்கிட்டுக் கூறுபவன் ஜோதிடன். ஜோதிடம் என்பது ஆன்மீகமே அல்ல.

அதுபோல மதம் என்பதும் ஆன்மீகத்திலிருந்து வேறானது. ஒரு கடவுளைப் பின்பற்றுதல்; அவர் புகழ் பாடுதல்; அவரை வணங்குதல் என்பது ஒரு கொள்கையாக, மதமாக மலர்கிறது. அதே சமயம் அந்தக் கடவுளை மறுத்தல், வேறு ஒரு கடவுளை முன்வைத்தலும் மதமாக மாறிவிடுகிறது. ஆனால் இந்த மதம் தாண்டிய ஆன்மீகம் என்பது கடவுளைப் பற்றிய தனது சிந்தனைப் போக்கைத் தொடங்குவதில்லை. அது கிட்டத்தட்ட நாத்திகத்திற்கு நெருக்கமானது. நான் யார், நான் ஏன் இங்கே பிறந்திருக்கிறேன், இந்த பிரபஞ்சத்துக்கும் எனக்கும் என்ன தொடர்பு, நான் சங்கிலித் தொடரின் ஒரு வளையம்தானா? 'நான்' என்பது என்ன, அது வெறும் அகங்காரம்தானா? - இப்படி தனக்குள் உள்நோக்கிய பயணம்தான் ஆன்மீகம். அது அகம் பற்றி பேசுவது, ஆராய்வது. Inner search, Inner journey. ஆனால் மதம் என்பது வெளிச்சுற்று. மிகவும் மேம்போக்கானது. வெளி நோக்கிய பயணம்.

ஆன்மீகத்துக்கும், மதத்துக்கும் இருக்கும் இந்தப் பெரிய முரண்பாட்டால்தான் மதத்தினுடைய சிறப்புத் தன்மையே இன்று படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகிறது. ஒரு மதம் கூறும் கடவுள்தான் உண்மை, மற்றவையெல்லாம் கடவுள் இல்லை என்று ஒரு மதம் கூறுமென்றால் மற்ற மதக் கடவுள்களை என்ன செய்வது? இதனால் தான் இன்று சண்டையும், பூசலும், போரும், கலவரமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கடவுளை உணர்வதற்கு மதம் தேவையில்லை. சொல்லப் போனால் கடவுளை உணர்வதற்கு மதம்தான் தடையாக இருக்கிறது என்று நான் உறுதியாகச் சொல்வேன். கடவுளை உணர்வதற்கு மதங்கள்தான் வழி என்று தொடங்கி இன்று கடவுளை உணர்வதற்கு மதங்கள்தான் தடை என்ற முடிவு நிலைக்கு நான் வந்திருக்கிறேன்.

கே: பாரதி கலைக்கழகம் போன்ற இலக்கிய அமைப்பினருடனான உங்கள் தொடர்புகள், அனுபவங்கள் குறித்து...

ப: எனக்குள் கவிஞனுக்குரிய சின்ன ஒரு மகரந்தத் தூளும் உண்டு. அந்தக் கவிஞனை எனக்கு அடையாளம் காட்டுவதற்கு மிகவும் உதவியது பாரதி கலைக்கழகம். முதலில் என் நண்பர்கள் க. ரவி, தேவநாராயணன் என பலர் அதில் பங்கு பெற்றனர். பின்னர் நானும் அதில் கலந்து கொண்டேன். அங்கு மாதம் ஒரு கவியரங்கம் நடத்துவார்கள். 30, 40 கவிஞர்கள் ஒன்றாகக் கூடி கவிதை படைப்பார்கள். எனக்கு மிகவும் வியப்பாக இருக்கும். கவிதையின் சுகானுபவத்தை அங்கே உணர்ந்தேன். அதே கால கட்டத்தில் பாரதி இளைஞர் சங்கம் மூலம் ராமமூர்த்தி, மணி போன்றவர்கள் ஆங்காங்கே இலக்கிய விழாக்களை நடத்துவார்கள். அவற்றில் கலந்து கொண்டிருக்கிறேன். இவையெல்லாம் எனது மேடைப் பேச்சுக்கான பயிற்சிப் பண்ணை என்றும் சொல்லலாம்.

கே: சொற்பொழிவைப் பொருத்தவரை புராணங்கள், சமய இலக்கியங்கள் மீதான உங்களது நினைவாற்றல் வியப்பைத் தருவது. அது எப்படிச் சாத்தியமானது?

ப: மனம் எதில் அதிகம் ஈடுபாடு கொள்கிறதோ அது அதிகம் நினைவில் இருக்கும். ஈடுபாடு இல்லாதவை மறந்து போய்விடும். இதுதான் அடிப்படை. என் மனதிற்கு மிகவும் ஈடுபாடு, விருப்பம் இருந்ததால் பல விஷயங்களை அது ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்கிறது. இது தேவையில்லை, வேண்டாம் என்று அறிவு சிலவற்றைத் தீர்மானிக்கும்போது, மனம் உடனடியாக அதையேற்றுத் தள்ளி வைத்து விடுகிறது. நாளடைவில் அது மறந்து போய் விடுகிறது. எல்லாம் மனத்தின் பயிற்சிதான். நான் எதையும் index செய்துதான் மனதில் பதிய வைப்பேன். சிறிய சிறிய உட்தலைப்பிட்டு அவற்றை மனதில் பதிய வைப்பேன். பின்னர் ஒன்று நினைவுக்கு வரும்போது, வரிசையாக, அதனோடு தொடர்புடைய பிற அனைத்துமே நினைவுக்கு வரும்.
கே: உங்கள் குரல் இனிமைக்காக ஏதேனும் சிறப்புப் பயிற்சி செய்து வருகிறீர்களா?

ப: இல்லை. ஒருமுறை நடுவில் எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, பேசுவதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுப் பேசவே முடியாமல் ஆனது. பின்னர் இயற்கை வைத்தியத்தினாலும், சில சிகிச்சை முறைகளினாலும், பயிற்சி மற்றும் கட்டுப்பாடுகளினாலும் நிலைமை சரியானது. பேச முடியாமல் போனதால் முதலில் இந்தத் துறையை விட்டே விலகி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் எனது பேச்சினால் பயன் பெற்றவர்கள் எழுதிய நன்றி அறிவிப்புக் கடிதங்களை எல்லாம் படிக்கும் போது, நம்மால் இத்தனை பேர் பயன்பெற்றிருக்கிறார்கள், ஆகவே இந்தத் துறையை விட்டுச் செல்லவே கூடாது, இத்தனை ஆயிரம் பேருக்கும் பயன்படும் மனிதனாக இருக்கும் இந்த வாழ்க்கையை இழக்கக் கூடாது என்று முடிவெடுத்து, சிகிச்சைகள் மேற்கொண்டு குணமானேன்.

தாங்கள் மலை போல நம்புகின்ற பெரிய மனிதர்கள் எல்லாம் கடைசியில் மனத்தளவில் மிக பலவீனமானவர்கள் என்று தெரிய வரும்போது மனத்தளவில் மக்கள் நொறுங்கிப் போய் விடுகிறார்கள். வழிகாட்டிகளின் நேர்மையின்மைதான் இன்றைய கலாசார, பண்பாட்டுச் சீரழிவிற்கு மிகப் பெரிய காரணம்.
கே: நாகரிகம், புதுமை என்ற பெயரில் பெருகி வரும் நமது பண்பாட்டுச் சீரழிவுக்கு என்ன காரணம், இதைப் போக்கத் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன?

ப: புதிய எதன்மீதும் மோகம் இருக்கும். ஆனால் எது சிறந்ததோ அது மட்டும்தான் நிலைத்திருக்கும். நமது பண்பாடும் கலாசாரமும் மிகவும் ஆழாமானவை. இந்த வேகயுகத்திலும் அதனால்தான் பல விழுமியங்கள் இன்னமும் நிலைத்திருக்கிறது. பிரச்சனை என்னவென்றால் இவற்றை அளிப்பவர்கள் சமூகத்திற்கு இன்னும் உண்மையாக, இன்னும் நேர்மையாக இருக்க வேண்டும். மக்கள் யாரையெல்லாம் நம்புகிறார்களோ அவர்கள் தவறானவர்கள் என்று ஆகிவிட்டால் அப்படியே இடிந்து போய் விடுகிறார்கள். தாங்கள் மலை போல நம்புகின்ற பெரிய மனிதர்கள் எல்லாம் கடைசியில் மனத்தளவில் மிக பலவீனமானவர்கள் என்று தெரிய வரும்போது மனத்தளவில் மக்கள் நொறுங்கிப் போய் விடுகிறார்கள். வழிகாட்டிகளின் நேர்மையின்மைதான் இன்றைய கலாசார, பண்பாட்டுச் சீரழிவிற்கு மிகப் பெரிய காரணம்.

கே: நீங்கள் நடத்தும் சுயமேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறைகள் பற்றிச் சொல்லுங்களேன்!

ப: மனிதன் என்பவன் பயிற்சி மூலமாகத் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் தன்மையுடையவன். என்னதான் உறுதி படைத்தவனாக இருந்தாலும் இயல்பு நிலை அவனைக் கீழே தள்ளும். அது போன்ற சமயங்களில் பயிற்சிகள் மூலமே அவன் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும். தொடர்ந்து ஒரு பத்து முறை, இருபது முறை சில பயிற்சிகளை சொல்லித் தரும்போது, எந்த நிலையில் இருப்பவனும், அந்த நிலையில் இருந்து முன்னேற வாய்ப்பு ஏற்படுகிறது. பயிற்சியின் மூலமாக சிந்தனைப் போக்கை மாற்றி அமைத்தலும், தரம் உயர்த்துதலும் சாத்தியம். ஆனால் உடனே அல்ல. சிலருக்குப் பத்து முறை, சிலருக்கு இருபது முறை. நான் எனது நிறுவனத்தின் மூலம் பள்ளி, கல்லூரி, தொழிற் கூடங்களுக்கு Health, mind, Body Awarness Program, யோகா, உடல் சக்தி, மன சக்தித் திறனை அதிகரித்தல் என்பது உட்பட பல பயிற்சி முறைகளை வழங்கி வருகிறேன்.

கே: உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர்கள் யார்?

ப: சிறுவயதில் நா. பார்த்தசாரதியின் நாவல்களை விரும்பிப் படிப்பேன். ஜெயகாந்தனின் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும். சுஜாதாவின் எழுதும் முறை என்னைக் கவர்ந்த ஒன்று. பேச்சாளர்கள் என்றால் சமூகம் சார்ந்து சிந்திக்கக்கூடிய, சமூக நலத்துக்கான சிந்தனைகளை முன்வைக்கும் தமிழருவி மணியன், வெ. இறையன்பு இவர்களது பேச்சுக்கள்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.

கே: இக்கால இளைஞர்களிடையே சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு இருக்கிறதா?

ப: இரு தரப்பான இளைஞர்கள் வருகிறார்கள். வெறுமனே பேச்சை ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வருபவர்கள் உள்ளனர். தங்கள் வாழ்க்கைக்கான உந்துசக்தியை, ஊக்கத்தைப் பெற வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் வருகிறார்கள். இப்போது நாங்கள் எங்களது நிகழ்ச்சிகளில் இரு தரப்பினரது விருப்பத்துக்கும் முக்கியத்துவம் இருக்குமாறு நிகழ்ச்சிகளை அமைக்கிறோம். முதலில் ஒரு சுற்று நகைச்சுவையாகப் பேசிவிடுவோம். இவர் போரடிக்க மாட்டார். இவர் நிகழ்ச்சியைக் கேட்பது நமக்கு கஷ்டத்தைத் தருவதாக இருக்காது என்ற நம்பிக்கையை முதலில் ஏற்படுத்தி விடுவோம். பின்னர் அவர்களுக்குத் தேவையானதை அவர்களுக்குக் கொடுக்க வேண்டியதுதான். வெறுமனே நகைச்சுவையை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் போதாது. அவர்களுக்குத் தேவையானது அவசியம் கொடுக்கப்பட வேண்டும். இதற்கு முதலில் பேச்சாளனுக்கு தைரியம் வேண்டும். நாம் நகைச்சுவை தவிர வேறு ஏதாவது பேசினால் கவனிப்பு இருக்காது, நம்மைக் கைகழுவி விடுவார்கள் என்ற எண்ணம் மாற வேண்டும். அதேசமயம் வெறும் சீரியஸாக மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் அதுவும் இளைஞர்களிடம் எடுபடாது. இது திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய ஒன்று.

கே: உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் யார், யார்?

ப: நான் ஒரு வட்டத்திற்கு உட்பட்டுத் தான் என்னை வைத்துக் கொள்வேன். எல்லாவற்றையுமே ஒரு அளவாகத் தான் - ஒருவரது ஆதரவையும், நட்பையும், புகழையும், உதவியையும் - ஒரு எல்லைக்கு மேல் வரவேற்க மாட்டேன். நானும் அதே போன்று அந்த வட்டத்தை மீறி ஒருவரது எல்லைக்குள் செல்ல மாட்டேன். இது எனக்கு இயல்பாகவே இருக்கும் குணம். எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்று தனிப்பட்ட முறையில் யாரையும் நான் சொல்ல இயலாது. அப்படிச் சொன்னால் நான் அவருக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுப்பது போலத்தான். சிலர் சில சமயங்களில் சில உதவிகள் செய்திருக்கிறார்கள். சிலர் சொல்லொணா துன்பத்தையும் தந்திருக்கிறார்கள். அதை சமமாக எடுத்துக் கொண்டு போகும் மனநிலை எனக்கு இருக்கிறது. எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதற்காக ஒருவர் செய்யும் பிழைகளைப் பொறுத்துப் போகும் குணம் எனக்குக் கிடையாது. நேரடியாகச் சொல்லி விடுவேன். இதனால் நீண்ட காலத்திற்கு அவர்கள் நட்பாகவோ, நமது ஆதரவாளர்களாகவோ இருக்க மாட்டார்கள் என்றாலும், நான் அதற்குத் தயங்கியது கிடையாது. அவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் நான் வளர்த்துக் கொள்ளவில்லை. எந்த நிலையிலும் யாருடன் கருத்து முரண்பாடு வந்தாலும், அதை அந்தக் கணத்திலேயே வெளிப்படுத்தி விடுவது எனது இயல்பு.

இந்தச் சமூகம் எனக்கு கௌரவமான ஒரு இடத்தையும், மிகச் சரியான பொருளாதார வளத்தையும் கொடுத்திருக்கிறது. இந்தச் சமூகத்திற்கு நான் நன்றியுடையவனாக இருக்க வேண்டும். ஏனென்றால் பாரதி காலத்தில் எல்லாம் அவரைப் போன்றவர்களை மிகவும் புண்படுத்தி விட்டது இந்த உலகம். ஆனால் இன்று அப்படி இல்லை. என்னுடைய புத்தகங்கள், சி.டி.க்கள் நன்கு விற்கின்றன. என்னை நிகழ்ச்சிக்கு அழைப்பவர்கள் கௌரவமாகவே நடத்துகிறார்கள். அந்த அளவில் நான் அனைவருக்கும் நன்றி உடையவனாக இருக்க வேண்டும்.

குடும்ப நிர்வாகத்தையும், எனது புத்தக, குறுந்தகடு விற்பனையின் ஒரு பகுதி நிர்வாகத்தையும் எனது துணைவியார் கவனித்துக் கொள்கிறார். எனது குழந்தைகள் எனது துறைக்கு வரவில்லை. நானும் அவர்களைக் கட்டாயப்படுத்தவில்லை. நான் யாரையும் ஆக்கிரமிக்க மாட்டேன். சுதந்திரம் என்பதில் எனக்கு அபரிதமான ஈடுபாடு உண்டு. ஒருவர், பிறரது சுதந்திரத்தில் தலையிடுவதை என்னால் ஏற்க முடியாது.

கே: புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ப: புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இருக்கும் பெரிய சிக்கல் என்னவென்றால் அவர்களால் அந்த நாட்டு மனிதர்களாகவும் வாழ இயலவில்லை. இந்த நாட்டு கலை, பண்பாடு, கலாசாரத்தையும் முழுமையாகப் பின்பற்ற முடியவில்லை. இரண்டிற்கும் இடைப்பட்ட அந்த 'டைலமா' அவர்களுக்கு இருக்கிறது என்பதை முதலில் அவர்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இங்கிருப்பதற்கு அங்கே இருந்திருக்கலாம், நன்றாக இருந்திருப்போம் என்றெல்லாம் சிந்திக்காமல், குழம்பிக் கொள்ளாமல் எதையும் உணர்ச்சிபூர்வமாகத் தடுமாறாமல், அறிவுபூர்வமாகச் சிந்தித்து அணுகினாலே போதும். குறிப்பாக அங்கேயே பிறந்து அந்த நாட்டுக் குழந்தைகளோடு பழகி வரும் தங்களது குழந்தைகளின் பிரச்சனைகளை, மனநிலையை சரிவரப் புரிந்து கொண்டு, அவர்கள் மீது எதையும் திணிக்காமல் அவர்களை நல்லமுறையில் வழிநடத்தினாலே போதும். பல பிரச்சனைகள் சரியாகி விடும்.

நான் ஒரு தனி மனிதன். என்னைவிட, என் அனுபவங்களை விட, இந்தச் சமூகம் முக்கியம். தனிமனிதக் கோபத்தைவிட எனக்கு சமூகக் கோபம் மிக அதிகம் என்று சொல்லி, எந்தக் கேள்வி கேட்டாலும் தயங்காமல் சரளமாக பதில் தந்து, வெளிநாட்டுக்குப் புறப்பட்ட ஆயத்தம் செய்து கொண்டிருந்த வேளையிலும், தென்றலுக்காக நேரம் ஒதுக்கியமைக்காக சுகி சிவம் அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

*****


அரசியலா, ஆன்மீகமா?

நான் சட்டம் படித்ததற்குக் காரணம், அரசியலில் புகுந்து, மிகப் பெரிய அளவில் இந்த சமூகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று அந்த இளம்பருவத்திற்கே உரிய வேகத்தில் நினைத்ததுதான். அதை கோமாளித்தனமான விருப்பம் என்றும் சொல்லலாம் அல்லது நியாயமான இலட்சியம் என்றும் சொல்லலாம். இரண்டுக்கும் இப்போது பெரிய வித்தியாசமில்லை. ஆனால் அப்போது மனதில் ஏற்பட்ட அந்தத் தாக்கத்தின் காரணமாகத்தான் பி.எல். படித்தேன். ஆனால் பி.எல். படித்தவுடனேயே, அரசியல் எனது மனோநிலைக்கு, மனோதர்மத்திற்கு ஏற்றதில்லை என்பது எனக்குத் தெரிந்து விட்டது. நாளடைவில் அந்த எண்ணம் உறுதிப்பட்டது.

தலைவன், தலைவியை வெற்றாகப் புகழ்வதோ, அவர்கள் செய்யும் அநியாயங்களைச் சகித்துக் கொண்டிருப்பதோ, அவர்களுக்காக வக்காலத்து வாங்கிப் பேசிக் கொண்டிருப்பதோ என்னால் சாத்தியமாகக் கூடியதில்லை. மேலும் புதிதாக ஒரு கட்சி துவங்கி நடத்துவதும் ந்டைமுறைச் சாத்தியமில்லாத விஷயம் என்பதும் அனுபவத்தில் தெரிய வந்தது. வலிமையான இரண்டு கட்சிகளுக்கு எதிராக Non Political Students Movement என்ற ஒன்றை ஆரம்பித்தோம். மாணவர்களிடம் வகுப்பறைக்குச் சென்று பேசி, கூட்டம் நடத்தி கிட்டத்தட்ட இரண்டாவது இடத்தை அடைந்துவிட்டோம். ஆனால் அதன்மூலம் அந்த இரண்டு கட்சிகளுக்குமே அப்போது எதிரிகளாகி விட்டோம். அதனால் தப்பிப் பிழைப்பது என்பதே பெரிய விஷயமாக ஆகி விட்டது. அவையெல்லாம் நடைமுறை சாத்தியமில்லாத விஷயங்கள் என்பதை முற்றிலுமாகத் தெரிந்து கொண்டேன். அதனால் சமயச் சொற்பொழிவாளராக என்னை நிலை நிறுத்திக் கொண்டேன்.

*****


மறக்க முடியாத சொற்பொழிவு

நான் ஒருமுறை சிங்கப்பூருக்குச் சொற்பொழிவுக்காகச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். டிக்கெட் வாங்கி இவ்வளவு பேர் இதனைப் பார்க்க வருகின்றார்களா என்ற வியப்பு எனக்கு. அந்தக் கூட்டமும் வேறு இரு புகழ்பெற்ற நபர்களுக்காகத் தான் வந்திருந்தது. என்னைச் சற்று ஓரம் கட்டித்தான் பேச வைத்தார்கள். ஆனால் நான் பேசிய பிறகு அந்த இரு நபர்களின் பேச்சும் எடுபடவில்லை. அது எனக்கு ஒரு மிகப்பெரிய நுழைவு. தன்னம்பிக்கை, சுய முன்னேற்றப் பேச்சாளர்களில் எனக்கு ஒரு தனித்த இடம் உண்டு என்பதை அந்த 'சவாலே சமாளி' என்கிற அந்தச் சொற்பொழிவு நிகழ்ச்சி நிரூபித்துக் காட்டியது. அது எனக்கு ஒரு திருப்பு முனை. ஏனென்றால் அந்த சி.டி.யே ஒரு லட்சத்திற்கும் மேல் விற்பனையானதாகச் சொன்னார்கள். அந்த அளவிற்கு அன்று அந்தப் பேச்சின் வீச்சு அமைந்தது. அதன்பிறகு சிங்கப்பூர் வானொலியில் இருந்து என்னைப் பேச அழைத்தார்கள். என்னை இங்கிருந்து பேச வைத்து, அதை ஒலிப்பதிவு செய்து, அங்கு ஒலிபரப்பினார்கள். அதற்கு நல்ல வரவேற்பு. அது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

*****


தமிழ்நாடு அறக்கட்டளை மாநாடு

இங்கிருக்கும் தமிழ் மக்களின் நன்மையை மனதிற் கொண்டும், இந்திய நாட்டின் மீது விசுவாசம் கொண்டும் தமிழ்நாடு அறக்கட்டளை அமைப்பு நல்ல திட்டங்களைத் தீட்டிச் செயலாற்றி வருவது குறித்து நான் பல ஆண்டுகளுக்கு முன்னமேயே அறிந்திருக்கிறேன். இம்முறை ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக டி.என்.எஃப். மேற்கொண்டிருக்கும் முயற்சி உண்மையிலேயே என்னை கவர்ந்தது. இப்படி வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்களுக்குப் பல பிரச்சனைகள் இருந்தாலும் கூட அவற்றின் ஊடே தங்கள் தாய்நாட்டைப் பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் சிந்திப்பது மிக அவசியமான ஒன்று. அப்படி இருந்தால்தான் அந்த நாடு வளர்ச்சி அடைய முடியும். இவ்வாறு அங்கிருப்பவர்கள் தன்னலம் கருதாது, ஒன்றிணைந்து இப்படியொரு நல்ல முயற்சியை மேற்கொண்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. நானும் என்னால் ஆன பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், என்னை அழைத்ததும் உடனடியாக ஒப்புக் கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியோடு இதில் கலந்து கொள்கிறேன்.

*****
மேலும் படங்களுக்கு
More

பிரபாகர் சுந்தர்ராஜன்
Share: 




© Copyright 2020 Tamilonline