Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
நவயுகச் சிற்பி விவேகானந்தர்
அக்ஷயா ட்ரஸ்ட் கிருஷ்ணன்
- அரவிந்த்|ஜனவரி 2010|
Share:
Click Here Enlargeஅவருக்கு வயது 21. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் நிர்வாகத் துறை படித்து அதில் தங்கப்பதக்கமும் பெற்றவர். பிரபல தாஜ் ஹோட்டலின் பெங்களூர் கிளையில் செஃபாகப் பணி புரிந்து கொண்டிருந்தார். அவரது திறமையைக் கண்ட நிர்வாகம் அவரைத் தமது ஸ்விட்ஸர்லாந்துக் கிளையில் பணியாற்றுவதற்காகத் தேர்ந்தெடுத்திருந்தது. ஒருவாரத்தில் கிளம்ப வேண்டும். பெற்றோர்களிடமும், நண்பர்களிடமும் விடைபெற்றுக் கொள்வதற்காக மதுரைக்குச் சென்றார்.

அங்கே, அன்னை மீனாட்சியை தரிசிப்பதற்காக ஒருநாள் காலையில் தாய், தந்தை, சகோதரியுடன் காரில் புறப்பட்டார். மேம்பாலம் அருகே கார் செல்லும்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர வைத்தது. பாலத்தின் அடியில் ஒரு முதியவர், தனது கழிவைத் தானே சுண்டுவிரலால் எடுத்து வாயில் வைப்பதைப் பார்த்தார். பசியின் கொடுமை! பதைத்துப் போய் நடுச்சாலையில் அப்படியே காரை நிறுத்தியவர், அருகில் இருந்த கடைக்கு ஓடிச் சென்று பத்து இட்டலிகளை வாங்கி அவரிடம் கொடுத்தார். ஒரு நிமிடத்திற்குள் பத்தையும் விழுங்கிவிட்டு நிமிர்ந்த முதியவரின் கண்களில் கண்ணீர். தனது கையை வேஷ்டி நுனியில் துடைத்துக் கொண்டு விட்டு வானத்தை அண்ணாந்து பார்த்தார். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நன்றி என்றும் சொல்லவில்லை. சொல்லவும் தெரியாது. காரணம், அவர் ஒரு மனநோயாளி.

அவர் ஒரு மனநோயாளி என்றறிந்ததும் அந்த இளைஞருக்கு ஒரே அதிர்ச்சி. குடும்பத்தினருடன் ஆலயத்திற்குச் சென்று மீனாட்சியை வழிபட்ட போதும் அவரது மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அந்தப் பெரியவரையே சுற்றிச் சுற்றி வந்தது. மதியம் தனக்கான தயிர் சாதத்தைப் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு போய் அவருக்குக் கொடுத்தார். பெரியவர் எந்தவித உணர்ச்சியுமில்லாமல் அதையும் வாங்கி உண்டார்.

வாழ்க்கையின் இன்னொரு புறத்தைப் பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலே மதுரை மாநகரத்தைத் தனது மோட்டார் சைக்கிளில் சுற்றி வரும்போது ஆங்காங்கே இதுபோன்று இன்னும் பல மனநோயாளிகள் பசியோடு தெருக்களில் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். தான் படித்ததும், தங்கப் பதக்கம் பெற்றதும் வெளிநாட்டுக்குச் சென்று பணம் சம்பாதிப்பதற்காகத் தானா என்று சிந்தித்தார். நேரடியாக பெங்களூர் அலுவலகத்திற்குச் சென்றவர், ஒரே வாரத்தில் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு மதுரைக்குத் திரும்பி விட்டார்.

தனியொருவனுக்கு உணவில்லை எனில் அந்த உணவை நாம் அளித்திடுவோம்" என்ற முனைப்புடன் கடந்த 8 வருடங்களாக ஆதரவற்றோருக்கு அன்னம் அளிக்கும் நற்பணியைச் செய்துவருகிறார் இளைஞர் கிருஷ்ணன்
அவருக்கு நன்றாகச் சமைக்கத் தெரியும் என்பதால் இட்டலி, தயிர்சாதம் ஆகியவற்றைப் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு தினந்தோறும் தனது மோட்டார் சைக்கிளில், மனநோயாளிகளைத் தேடிச்சென்று கொடுக்க ஆரம்பித்தார். அப்படித் தொடங்கியதுதான் அக்ஷயா. அதே மதுரையில்தானே மணிமேகலை அள்ள அள்ளக் குறையாத தனது அக்ஷய பாத்திரத்திலிருந்து எடுத்து அழிபசி தீர்த்தாள்!

"தனியொருவனுக்கு உணவில்லை எனில் அந்த உணவை நாம் அளித்திடுவோம்" என்ற முனைப்புடன் கடந்த 8 வருடங்களாக ஆதரவற்றோருக்கு அன்னம் அளிக்கும் நற்பணியைச் செய்துவரும் அந்த இளைஞர் என். கிருஷ்ணன். ஜூன் 2002 அன்று 40பேருக்கு உணவளிப்பதாக ஆரம்பித்தது அந்தத் திட்டம்.

வெளிநாடு சென்று லட்சக்கணக்காகச் சம்பாதிக்க வேண்டிய மகன், இப்படிச் சுற்றிக் கொண்டிருக்கின்றானே என்று பெற்றோர் கவலைப்பட்டனர். "நான் செய்வது தவறாக இருந்தால் நீங்கள் சொன்னபடி கேட்கிறேன்" என்று சொன்ன கிருஷ்ணன் தனது தாய், தந்தையரை அழைத்துக் கொண்டு போய் தனது செய்வதைக் காட்டியிருக்கிறார். நெகிழ்ந்து போன கிருஷ்ணனின் தாய், "நீ இவர்களுக்குச் சாப்பாடு போடு. நான் இருக்கும்வரை உனக்கு மூன்று வேளையும் சாப்பாடு போடுகிறேன்" என்று கூறியிருக்கிறார். பெற்றோரின் ஆசியுடன் சேவையைத் தொடர்ந்தார் கிருஷ்ணன்.

இன்று தினம்தோறும் நூற்றுக்கணக்கான மைல் பயணம் செய்து, 400க்கும் மேற்பட்ட மனநோயாளிகளுக்கும், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் மூன்று வேளை பசிபோக்கி வருகிறார். "இந்தப் பணி ஆரம்பித்த நாள்முதல் இன்று வரை ஒருநாள், ஒருவேளை உணவுகூடத் தவறியதில்லை" என்கிறார் அவர்.
Click Here Enlargeமணி, கிருஷ்ணமூர்த்தி போன்ற நண்பர்கள் இந்தப்பணியில் கிருஷ்ணனுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். விடியற்காலை 4 மணிக்கே உணவு தயாரிக்க ஆரம்பிக்கின்றனர். காலை 7. மணிக்கெல்லாம் இரண்டு வேன்கள் உணவுப் பொட்டலங்களோடு கிளம்புகின்றன. 170 கி.மீ. தூரத்துக்கு மேல் உணவுப் பொட்டலங்களை வழங்கியபடி சுற்றி வருகின்றன. மதிய உணவு 11:30 மணிக்கும், இரவு உணவு 7 மணிக்கும் வினியோகத்துக்குச் செல்கின்றன. ஒவ்வொரு நாளைக்கும், ஒவ்வொரு வேளைக்கும் ஒவ்வொரு மெனு. "அவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் நம்மைப் போல வயிறாரச் சாப்பிட்டவர்கள். குடும்பத்தின் புறக்கணிப்பாலும், சமூகச் சூழ்நிலைகளாலும் இந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். நாம் சாப்பிடுவதைத்தானே அவர்களுக்கும் கொடுக்க வேண்டும். அதுதானே நியாயம்!" என்கிறார் கிருஷ்ணன்.

கிருஷ்ணனின் பணி உணவு கொடுப்பதோடு மட்டும் முடிந்து விடவில்லை. மனநோயாளிகளுக்கு நகம் வெட்டுவது, முடி திருத்துவது, குளிப்பாட்டுவது என்று அனைத்துப் பணிகளையும் அவர் சளைக்காமல் செய்கிறார். அதற்காக அவர் முடிதிருத்தும் பயிற்சியையும் பெற்றிருக்கிறார். இதுபோன்றவற்றிற்காக மனநோயாளிகளை நெருங்கும்போது சிலர் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். சிலரால் கிருஷ்ணனுக்குக் காயம் ஏற்பட்டதும் உண்டு. "இது என் சமூகக் கடமை. நம் வீட்டில் இப்படி ஒருவர் இருந்தால் நாம் அவர்களை கவனித்துக் கொள்ள மாட்டோமா? அதைப் போலத் தான் இதுவும்." என்கிறார்.

கிருஷ்ணனின் பணி உணவு கொடுப்பதோடு மட்டும் முடிந்து விடவில்லை. மனநோயாளிகளுக்கு நகம் வெட்டுவது, முடி திருத்துவது, குளிப்பாட்டுவது என்று அனைத்துப் பணிகளையும் அவர் சளைக்காமல் செய்கிறார்.
இதுமட்டுமல்ல. கேட்பாரற்று இருக்கும் அனாதைப் பிணங்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் பணியையும் கிருஷ்ணன் செய்து வருகிறார். மதுரை மாநகராட்சியில் இருந்தும், பொது மருத்துவமனையில் இருந்தும் இறுதிச் சடங்குகள் செய்யச்சொல்லி அவருக்கு அழைப்பு வருகிறது. உடலை அனுமதி பெற்று வாங்கி, குளிப்பாட்டி, தானே தன் கையால் கொள்ளி வைத்து உரிய முறையில் நல்லடக்கம் செய்கிறார். இவரது கையால் இதுவரை 300க்கும் மேற்பட்ட உடல்களுக்கு ஈமச் சடங்கு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வடமாநிலங்களிலிருந்து இங்கு வந்து சுற்றிக் கொண்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட மனநோயாளிகளைக் குணப்படுத்தி, அவர்களது முகவரியை விசாரித்து, குடும்பத்தாரிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். பனிரெண்டுக்கும் மேற்பட்ட மனநோயாளிகளைக் குணப்படுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திருக்கிறார்.

Reliance, CNN-IBN நிறுவனங்கள் இணைந்து இவரது சமூக சேவைப் பணியைப் போற்றி 'உண்மையான கதாநாயகன்' (Real Heros Award) என்ற விருது வழங்கிச் சிறப்பித்துள்ளன. அதுபோக லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், சேவா விருது, வாரியார் விருது என்று எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார் கிருஷ்ணன்.

"நான் பிச்சைக்காரர்களுக்கு உணவு கொடுப்பதில்லை. உறவுகளால் புறக்கணிக்கப்பட்ட மனநிலை குன்றியவர்களுக்கும்தான் உதவுகிறேன். அவர்களுக்கு பசித்தால் சொல்லத் தெரியாது. யாரிடமும் உணவோ, காசோ கேட்கத் தெரியாது. இதுபோல் ஒவ்வொருவரும் தாம் வாழும் பகுதியில் வசிக்கும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு ஒரு டீயும், பன்னுமாவது வாங்கிக் கொடுத்தால் அதுவே மிகப் பெரிய சேவை" என்கிறார் கிருஷ்ணன்.

ஆதரவற்ற மனநோயாளிகள், குறிப்பாகப் பெண்கள், சமூக விரோதிகளால் துன்புறுத்தப்படுவதுண்டு. பல சமயம் பாலியல் பலாத்காரத்திற்கும் ஆளாகிறார்கள். அதனால் கருத்தரிக்கும் இவர்கள் அதுபற்றிய உணர்வே இல்லாமல், சாலை ஓரத்திலேயே பிரசவிக்கிறார்கள். இத்தகைய பெண்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும், பிரசவத்திற்கான உதவிகளையும் தற்போது கிருஷ்ணன் செய்து வருகிறார். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை முறையாகத் தத்தெடுக்க ஏற்பாடு செய்கிறார். இப்பெண்களின் மற்றும் ஆதரவற்றோரைப் பராமரிக்க மதுரை சோழவந்தான் அருகே 2.6 ஏக்கர் நிலத்தில் 'அக்ஷயா ஹோம்' என்ற ஒரு மிகப் பெரிய சேவை இல்லத்தைக் கட்டி வருகிறார்.

பண வசதி கொண்ட ஒரு பெரிய நிறுவனம் அல்லது அரசாங்கம் செய்ய வேண்டிய பணியைத் தனி ஒருவராகக் கிருஷ்ணன் செய்து வருகிறார். இந்த நற்பணியில் நீங்களும் பங்குபெறலாம். நீங்கள் அளிக்கும் நன்கொடைக்கு இந்தியாவில் வருமான வரிவிலக்கு உண்டு.

தொடர்பு கொள்ள: +91 98433 19933 - என். கிருஷ்ணன்

Akshaya's Helping in HELP.Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai-625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
E mail: ramdost@sancharnet.in
Website: www.akshayatrust.org

அரவிந்த்
மேலும் படங்களுக்கு
More

நவயுகச் சிற்பி விவேகானந்தர்
Share: 




© Copyright 2020 Tamilonline