Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நிதி அறிவோம் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிறுகதை
சம்பிரதாயங்கள்
கம்பளிப் பூச்சி
- அண்ணாமலை சி|ஜூலை 2007|
Share:
Click Here Enlargeஎன் கணவரும் நானும் டெட்ராய்ட்டுக்கு வந்து மூன்று வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இன்னும் ஒரு தடவை கூட இந்தியாவுக்குப் போகவில்லை. செப்டம்பரில் நிச்சயமாக என்னை அழைத்துச் செல்வேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். வாழ்வது டெட்ராய்ட்டில்தான் என்றாலும், மனம் கும்பகோணத்தையே முற்றுகையிட்டுக் கொண்டிருந்தது. வழக்கமாக, வாரத்துக்கு ஒரு தடவைதான் என் அம்மாவுடன் ·போனில் பேசிக்கொள்வேன்.

சென்றவாரம் அம்மா ஊர் செய்தி வரிசையில், சந்திரன் சம்பந்தமாய் ஒரு விஷயம் சொல்லியிருந்தாள். அந்த விஷயம் என்னை ஒரு வாரமாக வாட்டிக் கொண்டிருந்தது. சந்திரன் ஒரு பஸ் விபத்தில் அகப்பட்டுக் கொண்டாராம். இன்னும் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறாராம். பிழைப்பது கஷ்டம் என்பதுபோல் பேசிக் கொள்கிறார்களாம். இதைக் கேட்டவுடன் என் நெஞ்சம் வேகமாகத் துடித்தது. கை கால் உதறியது.

எனக்கும் சந்திரனுக்கும் சொந்தம் ஒன்று மில்லை. எங்கள் தந்தையர் இருவரும் நண்பர்கள். ஒரே தெருவில் வாழ்ந்ததால், நாங்கள் ஒன்றாகவே பள்ளிக்கூடம் சென்றோம். பழகினோம். நண்பர்களானோம். காதலர்களாகவும் இருந்தோம் - சொற்ப காலத்துக்காவது.

பழைய காலம் சுகமானது. அதிகாலையில் எழுந்திருப்பது ஒன்றுதான் எனக்குக் கஷ்டமான காரியம். ஒரு தங்கை. ஜெயந்தி ரொம்பச் சின்னவள். இப்போது ஒன்பது படித்துக் கொண்டிருக்கிறாள். அப்பா கவர்ன்மென்ட் வேலையிலிருக்கிறார். அம்மா எப்போதும் வீட்டில்தான். எங்களைவிடச் சந்திரனின் குடும்பம் வசதியானது. ஒற்றைப் பிள்ளை. நன்றாகப் படிப்பார். அவர் அப்பா தன் தொழிலைச் சந்திரனிடம் தந்துவிட அவரைத் தயார் செய்துவந்தார். பெற்றோர் விருப்பப்படியே அவரும் அருகிலுள்ள காலேஜ் ஒன்றில் சேர்ந்து பி.ஏ. தமிழ் இலக்கியம் படித்தார். நான் ஸ்கூல் முடித்துவிட்டு பி. எஸ்ஸி. படிக்கச் சென்னை சென்றேன்.

சென்னையில் வாழ்ந்த அந்த மூன்று வருஷங்களில்தான் சந்திரன் என் நெஞ்ச வானில் ஜொலிக்க ஆரம்பித்தார். அதுவரை 'வா, போ' என்று பேசிக் கொண்டிருந்தவள் அவருக்கு மரியாதை கொடுத்துப் பேச ஆரம்பித்தேன். ஒவ்வொரு தடவை ஊருக்கு வரும்போதும் எப்படியாவது அவரைப் பார்த்துவிடுவேன். என்னைப் பார்க்கும் போதெல்லாம் நன்றாகப் பேசுவார். நாங்கள் பேசுவதெல்லாம் சாதாரண விஷயங்கள்தான் என்றாலும் அவரிடம் பேசும்போது மட்டும் எனக்கு ரொம்பவும் சந்தோஷமாயிருக்கும். முதலில் நானும் அவரை ஓர் அண்ணன் போல்தான் நினைத்திருந்தேன். ஒரு பெண்ணாக வளர்ந்த பின்தான் எனக்குச் சந்திரன் ஒரு விசேஷமான மனுஷராகத் தெரிய ஆரம்பித்தார். நல்ல உயரம். நிறம். தமிழ் இலக்கியம் படித்ததாலோ என்னவோ எப்போதும் வேஷ்டியும் சட்டையுமாய் இருப்பார். திருநீறு அணிந்திருப்பார். ரொம்ப அழகாயிருப்பார். அவர் சின்னப் பிள்ளையாக இருக்கும்போதும் அழகாகத்தான் இருந்தார். இப்போது அழகோடு ஆண்மையும் சேர்ந்து கொண்டிருந்தது. அவரைப் பார்க்கும்போது மட்டும் என் உடம்பின் அத்தனை நாளங்களும் உணர்வு கொள்வதுபோல் இருக்கும். அவரும் என்னை ரகசியமாக ரசித்துக் கொண்டுதான் இருந்திருக்க வேண்டும். நான் பி.எஸ்ஸி. கடைசி வருஷத்தில் இருந்தபோது ஒரு நாள் 'வஸந்தி, உன்னிடம் ஒன்று கேட்கலாமா?' என்று ஆரம்பித்து அவருக்கு என்மேல் உள்ள விருப்பத்தைத் தெரிவித்தார். எனக்கு வானமே இறங்கி வந்து மாலை தந்தது போலிருந்தது. அவர் கண்களைச் சந்திக்கத் துணிவில்லாமல் குனிந்து கொண்டே அவர் கைகளை இழுத்து என் கண்களில் ஒற்றிக் கொண்டேன். அந்த ஸ்பரிஸத்தில் உடல் முழுவதும் நடுங்கிப் போனேன். அப்படியே சற்று நேரம் சென்றபின், அவர் கைகளை அவரிடமே தந்துவிட்டு மெதுவாய் அங்கிருந்து நகர்ந்தேன்.

சந்திரன் என் இதயத்தை இனம் கண்டு விட்ட களிப்பு என்னை வானலோகத்துக்கே அழைத்துச் சென்றது. என் விரல் நுனிகள் ராத்திரி முழுவதும் மென்மையாய் அதிர்ந்து கொண்டேயிருந்தன. தூக்கம் வரவில்லை. பழைய படங்களில் கதாநாயகி காதல் வேகத்தில் நிலாவையும் இரவையும் வர்ணித்துப் பாடுவது வெறும் கற்பனையல்ல என்பதை அன்று உணர்ந்து கொண்டேன். சந்திரனோடு ஒரே ராத்திரியில் ஒரு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்.

என் கனவும் கற்பனையும் அன்றிரவோடு தொலைந்தன. அடுத்த நாள் கொடூரமான நாள். சந்திரனின் அப்பா மாரடைப்பில் இறந்துவிட்டார். என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் என்னிடம் தன் காதலைத் தெரிவித்தவுடன் ஏன் இத்தனை பெரிய கஷ்டம் வரவேண்டும்? நான் ஓர் அதிர்ஷ்டக் கட்டையோ? எனக்கும் அவருக்கும் பொருத்தமில்லை என்பதுதான் இதன் அர்த்தமோ? இந்தக் கேள்விகளும் என் சந்திரன் பட்ட கஷ்டங்களும் என்னை சித்ரவதை செய்தன.

காலம் மெதுமெதுவாக எங்கள் துக்கத்தை இறக்கிவைத்தது. ஆனால், யதார்த்தம் எங்களுக்குள் அரும்பியிருந்த காதல் என்ற பந்தத்தை ஒரு கை பார்த்துவிட்டது. இப்போதும் சந்திரனுக்கு என் அடி மனதுக்குள் உன்னதமாய் ஓர் இடம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், நான் மோசமானவள். சந்திரன் காலைக் கழுவுவதற்கும் லாயக்கற்றவள். அமெரிக்காவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இவர் (சுரேஷ்) என்னைப் பெண்பார்க்க வந்து, என்னை விரும்பியதும் சந்திரனை ஒதுக்கிவிட்டு இவரைக் கைப்பிடித்து விட்டேன். பூர்வஜென்ம பந்தம் என்பார்களே அப்படித்தான். இவர் பார்வை பட்டவுடன் ஒரு புது மனுஷியாகிவிட்டேன். டெட்ராய்ட் வந்த பிறகு, அவர் நாள் முழுவதும் ஆபீஸ¤க்குச் சென்று விடுவார். தனிமையில் வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்த எனக்குச் சந்திரன் ஞாபகம் வர ஆரம்பித்தது. அதற்குப் பிறகுதான் கஷ்டப்பட ஆரம்பித்தேன்.

சந்திரன் நினைவில் சதா மனதிற்குள் ஒரு போராட்டம். நான் கல் நெஞ்சக்காரியோ? இரண்டு அப்பாவி மனுஷர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோனோ? ஆகவேதான் சந்திரன் ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என்ற செய்தி என்னை அவ்வளவு தாக்கிற்று. எண்ணக்கடலில் நான் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, சுரேஷின் கார் சத்தம் என்னை நிஜ உலகத்திற்குக் கொண்டுவந்தது. காரை நிறுத்திவிட்டு, 'வஸந்தி' என்று அழைத்தபடியே அவர் வீட்டுக்குள் வந்தார். 'வந்திட்டீங்களா' என்று சிரிப்பதற்கு முயற்சித்தேன். எப்போதும்போல் அவர் வேகமாய் பாத்ரூம் நுழைந்து கை கழுவச் செல்லவும், நான் என்னை ஒரு நிலைக்குக் கொண்டு வந்தேன். 'வஸந்தி, ஏதாவது விஷயமா?' என்றவரிடம், 'நீங்கதான் சொல்லணும்...' என்றேன்.

எங்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கு ஒரு குறைச்சலுமில்லை. அவர் என்மேல் உயிரையே வைத்திருக்கிறார். ஆனால், இன்னும் ஏனோ எங்களுக்குக் குழந்தை ஒன்று பிறக்கவில்லை. அவர் அதை நினைத்து வருத்தப்படுவார். நான் அவரைச் சமாதானப்படுத்துவதற்கு, 'இன்னும் கொஞ்ச நாள் இப்படியேயிருந்து உங்களையே ஒரு குழந்தையா வச்சுப் பாத்துக்கணும்னு நினைக்கிறேன். நீங்களும் கொஞ்சம் பெரியவரா ஆயிட்டா நல்லதில்லையா?' என்பேன். 'அடி ராட்சசி, நீதான் இப்படி ஏதோ கடவுளிடம் வரம் வாங்கி வைத்திருக்கிறாய் போலிருக்குது. எனக்கு சீக்கிரம் ஒரு குட்டி வஸந்தி வேண்டும்' என்று விளையாட்டுக்குக் கோபப்படுவார். உண்மையில் எனக்கும் இந்த விஷயத்தில் கவலைதான். அவர் கண்கள் இன்னும் என்னைவிட்டு அகலவில்லை. 'என்ன வஸந்தி கன்னமெல்லாம் உப்பிப் போய் இருக்கிற?' என்றார். 'ஒன்றுமில்லை. அடிக்கடி அம்மா அப்பா ஞாபகமாயிருக்கு...' என்று சொல்லி முடிக்குமுன்னே என் கண்களில் கண்ணீர் வந்தது. 'இன்னும் மூணு மாசம்தானே இருக்கு செப்டம்பர் வருவதற்கு. கவலைப்படாதே வஸந்தி' என்றார்.
சந்திரனை நினைத்து இரவெல்லாம் அழுதேன். மறுநாளும் அழுதேன்.

"வஸந்தி, நீ மட்டும் இப்பவே வேணா இந்தியாவுக்குப் போறியா? எனக்கு அடுத்த மூணு மாசத்தில் ரொம்ப வேலை இருக்குது. வேலை சம்பந்தமாய் அதிகமாய் ட்ராவல் பண்ண வேண்டியும் இருக்கலாம். நீ மட்டும் வீட்டிலிருந்தால் இன்னும் அதிகமாய்க் கவலைப்படுவ' என்றார். முதலில் மறுக்கத் தான் செய்தேன். கடைசியில் அந்த வாரமே புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்தேன்.

திருச்சிக்குச் சென்று என் கணவர் வீட்டில் ஓரிரவு தங்கியபின்தான் என் பெற்றோரிடம் செல்ல வேண்டும் என்பது என் கணவரின் அன்புக் கட்டளை. அவர் வராமல் நான் மட்டும் வந்து நின்றது கஷ்டமாய் இருந்தது. மாமியாரும் மாமனாரும் என்னை நன்றாக வைத்துக் கொண்டார்கள். நான்மட்டும் சந்திரனையே நினைத்து ரொம்பவும் தவித்துப்போனேன். மறுநாள் காலையில் அப்பா வந்து என்னைக் கும்பகோணம் அழைத்துச் சென்றார்.

ஜெயந்தியையும் அம்மாவையும் கட்டிப் பிடித்துக் கொண்டேன். ஆசைதீர அன்றிரவெல்லாம் பேசினோம். ஆனால், சந்திரனைப் பற்றி யாரும் ஒரு வார்த்தை சொல்லவில்லை. மறுநாள் சனிக்கிழமை. அம்மா பத்ரகாளி அம்மன் கோவிலுக்குப் போகும் தினம். அம்மாவுடன் நானும் சென்றேன். போகும் வழியில் அப்போதுதான் ஞாபகம் வந்தவள் போல் சந்திரனைப்பற்றி விசாரித்தேன்.

'இன்னும் ஆஸ்பத்திரியில்தான் இருக்கிறான். இப்பக் கொஞ்சம் பரவாயில்லை. இன்னும் கட்டுப் போட்டுத்தான் வச்சிருக் காங்க. அப்பா ரெண்டு நாளைக்கு முன்னால் பார்த்துட்டு வந்தார். உன்னைப்பற்றிக் கூட விசாரிச்சான்னு சொன்னார்.' அம்மா சொன்ன விஷயங்கள் நிம்மதியைத் தந்தன. ஆனாலும் சந்திரனை அப்போதே பார்த்துவிட மனம் துடித்தது. அன்று மாலையே அதற்கு வாய்ப்பும் கிடைத்தது. அப்பாவுடன் நானும் ஆஸ்பத்திரிக்குச் சென்றேன்.

'சந்திரனை அதிகமாப் பேச வச்சிராதம்மா. நான் அஞ்சு நிமிஷத்தில வந்திர்ரேன்...' என்னைச் சந்திரன் ரூமில் விட்டுவிட்டு அப்பா ரிஸப்ஷன் ஆ·பீஸ் நோக்கிச் சென்றார். சந்திரனைப் பார்க்கும் போது அழுகையாய் வந்தது. முகத்தில் கூட அடிபட்டிருந்தது. அவர் பேசுவதற்கே கஷ்டப்படுவதுபோல் தெரிந்தது. 'உங்களைப் பார்க்கத்தான் இவ்வளவு அவசரமாய் ஓடி வந்தேன் சந்திரன்,' மூன்று வருஷங்களாய் அடக்கிவைத்திருந்த என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தேன். அந்த வார்த்தைகளைச் சொன்னவுடன் என் கணவருக்கு துரோகம் செய்கிறேனோ என்ற பயம் என்னை ஆக்ரமித்துக் கொண்டது. அதற்குமேல் பேச முடியவில்லை. இருந்தாலும் என் அவலத்தைச் சந்திரன் நன்றாய்ப் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.

'வஸந்தி, நான் நிச்சயமாய்ப் பிழைத்துக் கொள்வேன். உன் மனதில் உள்ள வருத்தம் எனக்குத் தெரியாமலில்லை' என்றார் சன்னமான குரலில். “நமக்குள் கொஞ்சமாய் அரும்பிவிட்டிருந்த உணர்வுகள் இன்னும் உன்னை வாட்டிக் கொண்டிருப்பது போலவே என்னையும் வாட்டத்தான் செய்தன. திடீரென்று அப்பா இறந்துபோனவுடன் நான் நிலைகுலைந்து போனேன். அம்மா பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நான் உன்னிடம் வந்து என் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஆனால், அந்த சமயத்தில் எதையுமே என்னால் சரியாய்ப் புரிந்து கொள்ள முடியவில்லை. உன்னைப் பார்த்தால் என் கவலை குறைந்திருக்கும். நானோ உன்னைச் சந்திப்பது என் சுயநலம் என்று தவறாக எண்ணினேன்.

'உன்மேல் எவ்வளவோ அன்பு வைத்திருக்கிறேன் வஸந்தி. ஆனால் நீ சுரேஷ¤க்குத்தான் உரிமையானவள். இது நிஜம்.' நான் ஒன்றும் சொல்லாமல் சந்திரன் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தேன். 'நீ வெள்ளைக்காரர்கள் கலாசாரத்தைப் பக்கத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருக் கிறாய். பின்னும் இதை நீ உணர்ந்து கொள்ளாமலிருப்பது ஆச்சர்யம்தான்.' சந்திரன் சொல்வது எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை. இருந்தும் நான் ஒன்றும் கேட்கவில்லை. அவரே தொடர்ந்தார். 'மறக்க முடியாதவைகளில் ஒன்று முதல் முத்தம் என்பார்கள். நம் கலாசாரத்தில் கல்யாணத் திற்கு முன்னால் முத்தத்துக்கு இடமில்லை. ஆனால், நானும் நீயும் மானசீகமாய் நேசித்து விட்டோம். நம் இலக்கியங்கள் இந்த உணர்வுகளைப் பெரிதுபடுத்தியிருக்கின்றன.

'அதெல்லாம் கற்பனை. நாம் வாழும் வாழ்வு கடவுள் எழுதும் காவியம். நாம் நினைப்ப தெல்லாம் நடந்துவிடுவதில்லை. அதுவும் நிச்சயமாகத் திருமண விஷயத்தில் கடவுள் நமக்கு நியமித்திருப்பதுதான் நடக்கும். நீ ரொம்பவும் நல்லவள் வஸந்தி. என்னைப் போலவே இன்னும் எத்தனையோ பேர் உன்மேல் ஆசைப்பட்டிருக்கலாம். ஆனால் சுரேஷ் ஒருவர்தான் உனக்காகப் பிறந்தவர். நீ அவரோடு சந்தோஷமாய் இருப்பதுதான் சரி. எனக்கென்று ஒரு பெண் இருக்கிறாள் என்று நம்புகிறேன். நான் சொல்வது சரிதானா வஸந்தி?'

'நீங்கள் மட்டும்தானா என்னை விரும்பினீர்கள், நானும்தானே உங்கள் நினைவில் பரவசம் அடைந்தேன்' என்று சொல்லத் துடித்தேன். ஆனால் சொல்லவில்லை. இன்னும், சந்திரன் என்னை சமாதானப்படுத்தத்தான் அப்படிப் பேசுகிறார் என்று நினைத்தேன்.

'அம்மா எனக்கு ஒரு பெண் பார்த்திருக்கிறார்கள். அவளை எனக்குப் பிடித்திருக்கிறது. சீக்கிரமே திருமணம் நடக்கும்' என்று சந்திரன் சொன்னதும் அத்தனை காலமாய் மனதுக்குள் கிடந்து அரித்துக் கொண்டிருந்த கம்பளிப் பூச்சி ஒன்று காணாமல் போனது. அது சிறகுகள் முளைத்துப் பறந்து சென்றிருக்க வேண்டும். நெஞ்சில் புதிதாய் ஒரு சுகம். டெட்ராய்ட்டின் வஸந்தகாலக் குளிர்காற்று எங்கிருந்தோ வந்து என்னை தழுவிக்கொள்வது போல உணர்ந்தேன்.

சி. அண்ணாமலை
More

சம்பிரதாயங்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline